நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்?


சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படும் விஷயங்களில் ஒன்று இது. நேரு நாட்டின் முதல் பிரதமரானது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற படேல் பிறந்த நாள் விழாவில் அந்தக் கேள்வி இன்னொரு முறை உயிர் பெற்றது. சரிதான், தன்னைச் சுற்றிலும் எவ்வளவோ பேர் இருந்தபோது, நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்? உள்நோக்கத்தோடு எழுப்பப்பட்டாலும்கூட சுவாரஸ்யமான கேள்வி இது. கூடவே, காந்தி, நேரு எனும் இரு ஆளுமைகளையும் இந்திய வரலாற்றையும் நாம் இன்றைய தலைமுறைக்குச் சொல்ல மேலும் ஒரு வாய்ப்பு!

இன்றைக்கு அரசியல் எதிரிகள் பலரும் குறிப்பிடுவதுபோல, ஜாடிக்கேற்ற மூடியாக இருந்தது அல்ல காந்தி - நேரு உறவு. வெறும் விசுவாசம் மட்டுமே கருதி தன்னுடைய வாரிசாக நேருவை அறிவித்தவர் அல்ல காந்தி. மாறாக, காந்தியைப் போல நேருவும் மகத்தான ஓர் ஆளுமை. பெரும் சிந்தனையாளர். ஜனநாயகவாதி. மாபெரும் மக்கள் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் காலமெல்லாம் காந்தியுடன் கருத்து யுத்தம் நடத்தியவர். இந்தியர்களின் ஆன்மிக வழி அரசியல் வாழ்வியலுக்கான வழிகாட்டி காந்தி என்றால், அரசுத் தலைமைக்கான முன்னுதாரணம் நேரு.

ஆடம்பரமான சூழலில் பிறந்தவர் நேரு. அலகாபாத் 'ஆனந்த பவன்' மாளிகையில் பெரிய குதிரை லாயம், இரு நீச்சல் குளங்கள் என்று ஏகப்பட்ட வசதிகள் உண்டு. புகழ்பெற்ற ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து நேருவுக்குப் பாடம் எடுத்தார்கள். உயர்கல்விக்கு ஹாரோ, கேம்பிரிட்ஜ் சென்றார். ராஜ தடபுடலுடன் நடந்தது திருமணம். சுதந்திரப் போராட்டம் அவருடைய குடும்பப் பொருளாதாரத்தைச் செல்லரித்தது. ஒருகட்டத்தில் கையில் சல்லிக்காசுகூட இல்லாத காலம் வந்துவிடுமோ என்று யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். மனைவியின் நகைகள், வெள்ளிச் சாமான்கள், ஏனைய தட்டுமுட்டுப் பொருட்களை விற்க தீர்மானிக்கிறார். காலமெல்லாம் காசநோயோடு போராடிய கமலா நேரு 36 வயதிலேயே இறந்தார். நேருவின் 20 வருட தாம்பத்ய வாழ்வின் பெரும் பகுதி போராட்டங்களில் கழிந்தது. மொத்தம் 9 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார். நேருவின் கால் நூற்றாண்டு களப் பணிகளையும் தியாகங்களையும் நேரடியாகப் பார்த்தவர் காந்தி.

காந்தி 1869-ல் பிறந்தவர். நேரு 1889-ல் பிறந்தவர். 20 வயது வித்தியாசம். உண்மையில் காந்தியும் நேருவின் தந்தை மோதிலாலும் ஒரே தலைமுறை. காந்தியின் மூத்த மகனான ஹரிலாலைவிட ஒரு வயது சிறியவர் நேரு. மேலும், தன் இளமைப் பருவத்தின் கணிசமான பகுதியை ஐரோப்பாவில் கழித்த நேரு, கிழக்கு-மேற்குலகுகளின் சரிவிகிதக் கலவை. காந்தியை ஏற்றுக்கொண்ட அவருடைய கடுமையான விமர்சகர்களில் ஒருவர் என்று நேருவைச் சொல்லலாம். தன்னை பாபு என்று அழைத்த நேருவை ஒரு மகனாக, அடுத்த தலைமுறையின் பிரதிநிதியாக, அவர்களுடைய குரலாகவே காந்தி பாவித்தார். வரலாற்றுணர்வும் உலகளாவிய பார்வையும் கொண்ட காந்தி - நேருவுக்கு இடையேயான கருத்து மோதல்களின் விளைவே ஒரு வகையில் நவீன இந்தியா எனும் கருத்தாக்கத்தின் மையப்புள்ளி.


நேருவின் பார்வைக்கு அறிவியலே அளவீடு: “அரசியல் என்னைப் பொருளாதாரம் நோக்கித் தள்ளியது, அது என்னை அறிவியலையும் அறிவியல் அணுகுமுறையையும் நோக்கித் தள்ளியது; நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளும் அறிவியல் அணுகுமுறையில்தான் உள்ளன.”

1930-களில் எழுதிய தன்னுடைய சுயசரிதையில் நேரு குறிப்பிடுகிறார், “என்றைக்கு நான் காந்திஜியின் அரசியல் தொடர்பைப் பெற்றேனோ, அன்றைக்கே அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்: ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் என்னுடைய கருத்துகளை அடக்கிக்கொள்ளக் கூடாது.” நேருவின் சுயசரிதை பசி, பஞ்சத்தில் தொடங்கி காமம், காங்கிரஸ், பொருளாதாரம் வரை ஒவ்வொரு விஷயத்திலும் அவருக்கு இருந்த தனித்துவமான பார்வைகளைத் தெளிவாக முன்வைப்பது. முக்கியமாக, பல இடங்களில் காந்திய வழிமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குவது.

“சீனம், இந்தியா, பர்மா, இலங்கை, ஆப்கன் முடிந்தால் ஏனைய நாடுகளும் இணைந்த ஒரு கூட்டரசே எனது எண்ணத்தில் நிறைந்த ஓவியமாகும். ஒருவேளை உலகக் கூட்டாட்சி வந்தால், அதையும் வரவேற்பேன்.” 

“காந்திஜி தமது ஆசிரமவாசிகளை எப்படி நடத்தவும் பூரண உரிமை பெற்றிருக்கிறார். அவர்கள் அவரிடம் எல்லா விதமான சத்தியங்களும் செய்துகொடுத்திருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸோ, நானோ அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை. ஆக, என்னையும் காங்கிரஸையும் ஏன் அங்கேயும் இங்கேயும் போட்டு இழுக்க வேண்டும்?”

“காந்திஜி எதைத்தான் குறியாகக் கொண்டிருக்கிறார்? அவரோடு பல ஆண்டுகள் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். எனினும், அவருடைய குறி இதுதான் என்று என் அறிவில் தெளிவாகப் படவேயில்லை. அவருக்கே இதைப் பற்றித் தெளிவு இருக்குமோ என்று ஐயுறுகிறேன். ஓரடி முன்னால் எடுத்து வைத்தால் போதும் என்று அவர் நினைக்கிறார். அவர் எதிர்காலத்தில் நுழைந்துப் பார்க்க முயற்சிப்பதே இல்லை… ‘வழிமுறைகளைச் சரியாகக் கவனித்துக்கொள்ளுங்கள்; முடிவு தானாகவே வரும்’ என்று அலுக்காமல் அவர் சொல்கிறார். இது அரசியலும் அறிவியல் நூல்களும் ஒப்புக்கொள்ளக் கூடிய மனப்போக்கு அல்ல.”

“ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான இயற்கையான ஒட்டுதலை காந்திஜி ஏற்கவில்லை. ‘காமப் பற்றுதான் இயற்கையான பற்று என்று என்னால் நம்ப முடியாது. அதுதான் உண்மையாயின் நம் மத்தியில் வெகுவிரைவில் பிரளயம் வந்துவிடும்’ என்று காந்திஜி எழுதுகிறார். உடற்கூறு ஆராய்ச்சி பரவிவரும் இக்காலத்தில் இவ்வளவு அழுத்தமான நம்பிக்கையை அவர் வெளியிடுவது எனக்கு வினோதமாக இருக்கிறது... அவருடைய நோக்கு துறவியின் நோக்கு. வாழ்க்கையைத் தீமையாகப் பார்க்கும் நோக்கு. உலகையும் அதன் போக்குகளையும் விட்டுவிட்டு வேறு பாதையில் செல்வது. துறவிக்கு அது பொருத்தம்தான். ஆனால், உலகின் சாதாரண மக்களுக்கு அந்த நோக்கைப் பிரயோகிப்பது தவறாக அமையும்.”

“எளிமையான குடியானவனுடைய வாழ்க்கையை ஆகாயத்தில் தூக்கி வைத்துப் பாராட்டுவதில் எனக்குப் பிடித்தம் இல்லை. அந்த வாழ்க்கையைக் கண்டால் எனக்குப் பயங்கரமாக இருக்கிறது. அந்த வாழ்க்கைக்குள் நான் புகுந்துகொள்வதைக் காட்டிலும் விவசாயிகளை அதிலிருந்து வெளியே கொண்டுவருவதையே விரும்புகிறேன். அவர்களை நகரவாசிகளாக ஆக்குவதற்காக அல்ல. நகர நாகரிக வசதிகள் யாவையும் கிராமத்தவர்களுக்கும் பரவச் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை… ஏர் உழும் மனிதனை வானில் வைத்துப் பாராட்டுவதற்கு என்ன இருக்கிறது? எண்ணற்ற தலைமுறைகளாக அவன் நசுக்கப்பட்டிருக்கிறான். பல காலமாக அவனைச் சுரண்டிக்கொண்டே வந்திருக்கிறார்கள். அவனுக்கும் அவனோடு வாழும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது!”

“எளிமை, சமத்துவம், தன்னடக்கம் ஆகியவை எனக்கு அர்த்தம் ஆகின்றன. ஆனால், உடலை வதைத்துக்கொள்வதை நான் ஏற்க மாட்டேன்.”

முசபர்பூர் பூகம்பத்தை “தீண்டாமைப் பாவத்துக்கான தண்டனை” என்கிறார் காந்தி. இதைக் கண்டு நொந்துபோகிறார் நேரு. “விஞ்ஞான ஆராய்சிக்கு இதைக் காட்டிலும் எதிரான கருத்தைக் கற்பனைசெய்வது கடினம்” என்று எழுதும் நேரு, “தாகூர் ‘இந்தக் கருத்து அபத்தமானது’ என்று காந்திக்கு மறுமொழி எழுதியதில் எனக்கு மிகுதியும் மகிழ்ச்சி” என்கிறார். இந்தப் பாவ-புண்ணிய நம்பிக்கைகள் எல்லாம் ஐரோப்பில் தண்டனை என்கிற பெயரில் மனிதர்களை அப்படியே உயிரோடு எரித்துக் கொன்ற மத்தியக் காலச் சிந்தனை என்பது நேருவின் எண்ணம்.

நாத்திகரான நேரு, ஒரு காலகட்டத்தில் இந்து நாகரிகம், முஸ்லிம் நாகரிகம் என்பன போன்ற மதம்சார் பேச்சுகள் எல்லாம் ஒழிந்துபோய் ஒட்டுமொத்த உலகமும் நவீன நாகரிகத்தைச் சுவிகரித்துக்கொள்ளும் என்று நம்புகிறார். “இந்துக்களும் முஸ்லிம்களும் நவீன விஞ்ஞான தொழில் நாகரிகத்தை எதிர்க்க எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை யாவும் பலனற்றுப்போகும் என்பதில் எனக்குத் துளிக்கூடச் சந்தேகம் இல்லை. இந்த முயற்சிகள் தோல்வியடைவதை வருத்தமின்றி நான் பார்த்துக்கொண்டிருப்பேன்… நம்முடைய பண்டைய வாழ்வில் எவ்வளவோ சிறப்புகள் இருக்கின்றன. அவை நிலைத்து நீடிக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், இவர்கள் பிடித்துக்கொள்ள நினைப்பது அவற்றை அல்ல; தூசுகூடப் பெறாதவை!”

“காந்திஜிக்கு மகா கூர்மையான அறிவு இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துவதில் அவருக்குப் பெரும் உந்துதல் இருக்கிறது. அப்படியிருக்கத் துன்பத்திற்குத் துணை நிற்கக்கூடியதும், தானே நசித்து வருவதுமான ஒரு திட்டத்தை ஏன் அவர் ஆதரிக்க வேண்டும்? அவர் ஒரு வழி காண விரும்புகிறார் என்பது உண்மை. ஆனால், பண்டைக் காலத்திற்குக் கொண்டுபோகக் கூடிய வழியா அடைக்கப்பட்டதல்லவா? இதனிடையே, முற்போக்குத் தடைகளாக நிற்கும் பழைய திட்டத்துக்கு நினைவுச்சின்னங்களாக இருப்பவை யாவற்றையும் அவர் ஆசிர்வதிக்கிறார். சமஸ்தானங்கள், பெரிய ஜமீன்தாரிகள், தாலுக்தாரிகள், தற்போதைய முதலாளித் திட்டம் இவையெல்லாம் அவருடைய பாராட்டின் கீழ் இருக்கின்றன. தர்மகர்த்தர் என்ற கொள்கையிலே நம்பிக்கை வைக்கலாமா? ஒரு பேர்வழியிடம் அதிகாரத்தையும் செல்வத்தையும் கட்டுப்பாடின்றிக் கொடுத்துவிடடு அவற்றை அவன் முழுவதும் பொது நன்மைக்காக உபயோகிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தகுமா? நம்மில் பூரண பக்குவமடைந்தவர்களைக்கூட அந்த வகையில் நம்பலாமா? பிளேடோ கற்பனை செய்திருக்கும் தத்துவ சாஸ்திர மனிதர்கூட இந்தச் சுமையைத் தகுதியோடு ஏற்றுக்கொண்டிருக்க முடியாது.”

“எந்த நாடும் இப்போது உண்மையாகவே சுயாதீனத்துடன் தனித்திருக்க முடியாது. ஒரு நாடு தொழிலில் சிறப்படைந்து இருந்தால் ஒழிய அந்நியர்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்க அதனால் முடியாது. ஒரு தாய்த் தொழிலுக்கு இன்னொரு தாய்த் தொழில் துணையாய் இருக்க வேண்டியிருக்கிறது. கடைசியாக இயந்திரங்களையே செய்யும்படியான தொழிலையே நாம் கை கொள்ள வேண்டும்.”

ஆனால், எல்லாவற்றையும் தாண்டி காந்தியைக் கச்சிதமாக மதிப்பிட்டவர் அவர். “காந்திஜியை நெருங்கிப் பழகாமல் அவருடைய எழுத்துகளை மட்டும் படிக்கிறவர்கள் அவரைப் பற்றி தவறாக நினைக்கக் கூடும். அவர் உபதேசர் என்றும் கொடுமையான வைதீகர் என்றும் உலகச் சுமையேயற்ற சிடுமூஞ்சி என்றும் நினைக்கலாம்… ஆனால், அவருடைய எழுத்துகள் அவரை வெளிக்காட்டவில்லை. அவர் அவருடைய எழுத்துகளைத் தாண்டிய மகா பெரியவர்… அற்புதமான மனிதர். பெரியவர்கள் எல்லோருமே ஓரளவில் இப்படித்தான் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் இந்தப் பிரச்சினைகளால் நான் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறேன்.

காந்திஜி ஒருவித மோப்பத்தால் செயலாற்றுகிறார். உள் ஒளி அல்லது பிரார்த்தனைக்கான பதில் என்றெல்லாம் சொல்லுவதைக் காட்டிலும் மோப்பம் என்று குறிப்பிடவே நான் விரும்புகிறேன். அந்த மோப்பம் அநேகமாகச் சரியாகவே இருக்கிறது. பொதுமக்களின் மனப்பான்மையை அறியவும், தக்க தருணத்தில் செயலாற்றவும் தம்மிடத்தில் ஆச்சரியப்படத்தக்க திறமை இருப்பதை அவர் விடாமல் நிரூபித்துவந்திருக்கிறார். தான் செய்த காரியத்துக்கு ஆதாரமாக அவர் பின்னர் சொல்லும் காரணங்கள் அநேகமாகப் பின் யோசனைகள். அவற்றால், யாருக்கும் சமாதானம் ஏற்படுவதில்லை. ஒரு தலைவர் அல்லது ஒரு கர்ம வீரர் நெருக்கடியில் எப்போதும் மோப்பத்தைக் கொண்டுதான் வேலை செய்கிறார். பிறகுதான் தாம் செய்த காரியத்துக்குக் காரணங்களை யோசித்துப் பார்க்கிறார்.”

“வியக்கத்தக்க அளவில் அவர் இந்தியாவின் பிரதிநிதி. பழமை கொண்டதும், வதை செய்யப்படுவதுமான இந்த நாட்டின் மூர்ச்சையை வெளிப்படுத்தியவர் அவரே. அவர்தான் இந்தியா. அவருடைய குறைகள் எல்லாம் இந்தியாவின் குறைகள். அவரை அவமதிப்பது தனித்த சங்கதியல்ல. அது இந்தியாவையே அவமதித்ததாகும்!”
நேரு மீதும் அப்படியான மதிப்பீடு காந்திக்கு இருந்தது: “ஸ்படிகம் போன்றவர் நேரு. சந்தேகத்துக்கப்பாற்பட்டவர்!”
இந்த உரையாடல்கள் கடைசி வரை நீடித்தன.

1945 அக்.5 அன்று நேருவுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி குறிப்பிடுகிறார். “இந்தியா உண்மையான விடுதலை பெற வேண்டுமாயின், இந்தியாவின் வாயிலாக உலகம் மெய்யான சுதந்திரம் காண வேண்டுமாயின், விரைவாகவோ அல்லது பின்னரோ கிராமங்களிலேதான் வாழ வேண்டி வரும்; நகரங்களில் அல்ல. குடிசைகளில்தான் வாழ முடியும்; மாட மாளிகைகளில் அல்ல; நகரங்களிலும், மாளிகைகளிலும் கோடிக்கணக்கான மக்கள் பரஸ்பரம் அமைதியாக வாழ்வது ஒருகாலத்திலும் இயலாத காரியம்… எளிமையான கிராம வாழ்க்கையில் மாத்திரம்தான் சத்தியத்தையும் அஹிம்சையையும் நாம் நடைமுறையில் கொண்டுவர முடியும். இந்த எளிமையை ராட்டையிலும் ராட்டையின் உட்பொருளிலும்தான் சிறந்த முறையில் காண முடியும். ஒருவேளை ரயில்களும், தபால் - தந்தி அலுவலகங்களும் அவசியப்படலாம். மேலும் என்னென்ன வசதிகள் வேண்டும் அல்லது வேண்டாம் என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது; அவற்றைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. அடிப்படையானவை அமைவதற்கு வழிவகுத்துவிட்டால், பின்னர் போகப் போக மற்றவையும் தொடரும். ஆனால் அடிப்படையையே விட்டுக் கொடுத்துவிடுவேனாகில், அனைத்துமே அனர்த்தமாகிவிடும்.”

இந்தக் கடிதத்தின் முக்கியமான பகுதி இது, இந்தக் கட்டுரைக்கும் முக்கியமானது: “நம்மைப் பிணைத்துள்ள தொடர்புக்குக் காரணம் அரசியல் அலுவல்கள் மாத்திரமல்ல; அத்தொடர்பு மிகவும் ஆழ்ந்தது, சிறிதும் தகர்க்க முடியாதது. ஆகையால், அரசியல் துறையில்கூட நாம் ஒருவரையொருவர் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது மனப்பூர்வமான ஆர்வம். இரண்டாவதாக, நம்மில் எவரும் தம்மை உபயோகமற்றவர் என்று கருதவில்லை. நாம் இருவரும் இந்தியாவின் சுதந்திர லட்சியத்திற்காகவே உயிர் வாழ்கிறோம். அதற்காகவே நாம் இருவரும் மகிழ்ச்சியுடன் உயிர் துறப்போம். உலகத்தின் புகழுரை நமக்குத் தேவையில்லை. உலகம் நம்மைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும், நாம் அதைப் பொருட்படுத்தப்போவதில்லை. தொண்டுபுரிவதற்காக நான் 125 வயது வரையில் உயிர் வாழ விரும்புகிறேன். இருந்தாலும் இப்போது நான் கிழவனாகிவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். என்னைக் காட்டிலும் நீங்கள் மிகவும் இளைஞர். அதனாலேயே உங்களை எனது வாரிசு என்று குறிப்பிட்டிருக்கிறேன். இருந்தாலும் நான் என்னுடைய வாரிசை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்; என்னுடைய வாரிசும் என்னை நன்குப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் எனக்கு மனத் திருப்தி ஏற்படும்.”

இந்தக் கடிதத்துக்கு 1945 அக்.9 அன்று வழக்கம்போல தொழில்மயமாக்கல் நியாயங்களைப் பட்டியலிட்டு ஒரு கடிதம் அனுப்பினார் நேரு. ஆனால், ஆத்மார்த்தமான பதில் 1947, ஆகஸ்ட் 14 அன்று ஆற்றிய சுதந்திர தின உரையில் இருந்தது. “இந்தியாவுக்கு சேவைசெய்வது என்பது துயரத்தில் வாடும் கோடிக் கணக்கான மக்களுக்கு சேவைசெய்வதுதான். அந்த சேவை என்பது வறுமையை ஒழிப்பது, அறியாமை இருளை அகற்றுவது, நோயற்ற வாழ்வை அளிப்பது, ஏற்றத்தாழ்வுகளை நீக்கி நாட்டின் வளங்களில் ஒவ்வொருவருக்கும் சமவாய்ப்பை அளிப்பது. இந்த நன்னாளில் நம்முடைய சிந்தனையெல்லாம், இந்த சுதந்திரத்தை நமக்கு வாங்கித்தந்த தேசப்பிதாவை நோக்கித்தான் முதலில் செல்கிறது. இந்தியாவின் தொன்மையான உணர்வுகளுக்கு இலக்கணம் அவர். சுதந்திர தீபம் ஏற்றி நம்மைச் சுற்றியிருந்த அடிமை இருளைப் போக்கினார். அவருடைய போதனைகளுக்கு ஏற்ப நடக்கும் அருகதையற்ற சீடர்களாக, அவர் போதித்த உண்மைகளிலிருந்து நாம் விலகிச் சென்றோம். ஆனால், நாம் மட்டும் அல்ல; இனி வரும் தலைமுறைகளும் இந்தியாவின் அரும்புதல்வரான அவருடைய போதனைகளைத் தங்களுடைய இதயங்களிலே பொறித்துவைத்துக்கொள்வார்கள். நம்முடைய தலைமுறையைச் சேர்ந்த மிகப் பெரிய மகானின் லட்சியமே ஒவ்வொரு கண்ணிலிருந்தும் வழியும் நீர் துடைக்கப்பட வேண்டும் என்பதுதான். அது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம் - கண்ணீர் இருக்கும்வரை, துயரங்கள் தொடரும்வரை நம்முடைய பணிகள் முற்றுப்பெறாது...”

உலகளாவிய பார்வையில், பன்முகத்தன்மையைக் கொண்டாடும் அணுகுமுறையில், எல்லாச் சமூகங்களுக்கும் சமமான பிரதிநிதிகளாகச் செயலாற்றுவதில், முக்கியமாகக்  கடையனுக்கும் கடைத்தேற்றம் எனும் பிரதான இலக்கில் கடைசி வரை இருவரும் ஒன்றாகவே இருந்தார்கள். முதல் பிரதமராக நேரு நிறையத் தவறுகள் இழைத்திருக்கிறார். ஆனால், காந்தியின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கவில்லை. மேலும், காந்தியின் தவறுகள் இந்தியாவின் தவறுகள் என்றால், நேருவின் தவறுகளும் இந்தியாவின் தவறுகள்தானே!

2 கருத்துகள்:

  1. நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்? = ஆழ்ந்து எழுதப்பட்ட கட்டுரை. அரசியல், வரலாற்று ஆர்வலர்கள், இளைஞர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டிய கட்டுரை. நான் திரு சமஸ் அவர்களின் எழுத்தை 'தி இந்து' நாளிதழில் தொடர்ந்து படித்து வைக்கிறேன். முக்கியமான கட்டுரைகளை வெட்டி கோப்பில் சேகரித்து வருகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு சமஸ்

    பதிலளிநீக்கு
  2. A great array of Gandhiji and Nehruji's thoughts.
    ஒரே லட்சியத்திற்காக இரு வேறு வழிமுறைகளின் மூலம் போராடிய இரு பெரும் ஆளூமைகள் தங்களிடையே கொண்டிருந்த கருத்து சமரசமற்ற அன்பையும் நம்பிக்கையையும் தெளிவாக உரைக்கும் கட்டுரை. காந்தியைப்பற்றிப்படிப்பதில் இருக்கும் ஆர்வம் போல் நேருவைப்பற்றிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் என்னுள் தூண்டியுள்ளது இக்கட்டுரை.நன்றி சமஸ்.
    வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு