இந்தியாவின் வெற்றி!


ஒரு மாநிலத் தேர்தல் முடிவை ஒரு பிரதமரின் தோல்வியாக எழுத மனம் ஒப்ப மறுக்கிறது. ஆனால், நரேந்திர மோடி பிரதமர் பதவியில் அமர்வதற்கு முன்பே இவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நினைவில் கொண்டுவருவது முக்கியமானது. 2013 செப்டம்பர் 13-க்குப் பிறகான ஆறு சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகளுக்கும் மோடியையே காரணமாகக் காட்டினார்கள் பாஜகவினர். கொஞ்சம் யோசித்தால், அப்போது தொடங்கி சமீபத்திய டெல்லி தேர்தல் வரை அவர்கள் மக்களிடம் உருவாக்கிய ஒரு மாயை ஞாபகத்துக்கு வந்துவிடும். ஆம், மோடி அலை! மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகானும் சத்தீஸ்கரில் ரமன் சிங்கும் மூன்றாவது முறையாக ஜெயித்ததற்கும்கூடக் காரணம் மோடி அலை என்றால், இப்போது பிஹாரில் அடிக்கும் அனலிலிருந்து மட்டும் மோடியை எப்படி விடுவிக்க முடியும்?

எப்படியும் இந்தச் சூழலை வலிய உருவாக்கிக்கொண்டவர் மோடி. பாட்னாவில் இருந்தவர்களுக்குத் தெரியும், மத்திய மந்திரிசபை மூன்று மாதங்களாக உண்மையில் எங்கே செயல்பட்டது என்று. குறைந்தது 10 அமைச்சர்கள் எந்நேரமும் பிஹாரில் சுற்றிக்கொண்டிருந்தார்கள். பாஜக அகில இந்தியத் தலைவர் அமித் ஷா தன் ஜாகையையே தற்காலிகமாக அங்கே மாற்றிக்கொண்டிருந்தார். நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பிரச்சாரத்துக்கு வந்த மக்கள் பிரதிநிதிகளை அவர் ஒருங்கிணைத்தார். பிரதமர் மோடியோ டெல்லிக்கும் பாட்னாவுக்கும் இடையில் இடைவிடாமல் பறந்துகொண்டிருந்தார். 31 கூட்டங்களில் அவர் பங்கேற்றார். தன்னை முன்னிறுத்துவதாகக் களத்தை மாற்றினார். பிஹார் தேர்தலை வெறும் சட்டப்பேரவைத் தேர்தலாக மட்டும் பார்க்கவில்லை அவர்; தன் தலைமையை ஏற்க மறுத்து, பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷைக் கணக்குத் தீர்க்க இதை ஒரு வாய்ப்பாகப் பார்த்தார். வரப்போகும் உத்தரப் பிரதேச, மேற்கு வங்கத் தேர்தல்களுக்கு முன்னோட்டமாகப் பார்த்தார். பிஹார் தேர்தல் பாணியை ஒரு தேர்தல் பரிசோதனை முயற்சியாகவே பார்த்தார். எவ்வளவோ காரியங்கள் செய்வதற்கேற்ற பெரும்பான்மையும் அதிகாரமும் ஏற்கெனவே மக்களவையிலும் கூட்டவைகளிலும் மோடியிடம் இருக்கிறது. ஆனால், அவருக்கோ அதிகாரத்தில் மட்டுமே கவனம் இருக்கிறது. அதிகாரம் வேண்டும் மேலும், மேலும், மேலும்…

தேர்தல் வெற்றிகள் முக்கியமானவை. ஆனால், அதிகார வேட்கை மட்டுமே அரசியல் பயணமாக ஆகிவிடுவது ஆபத்து. ஒருகட்டத்தில் அந்த அதிகார வேட்கைக்குப் பிரதமர் இலக்கானார்; பாஜக இலக்கானது. ஆளும் கட்சி, அமைச்சர் பதவி, பிரதமர் பொறுப்பு என்கிற வரையறைகள் எல்லாம்கூட அவர்களுக்கு மறந்துபோயின. பதவிக்குரிய மாண்புகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. “நேருவும் அம்பேத்கரும் நிராகரித்த மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நிதிஷ் குமாரும் லாலு பிரசாத் யாதவும் கேட்டார்கள். அழுத்தப்பட்ட இந்துக்களுக்கான இடஒதுக்கீட்டைப் பறித்து, இன்னொரு இனத்துக்குத் தரத் திட்டமிட்டார்கள்” என்று மோடியும் “பாஜக தோற்றால் பக்கத்து நாட்டில் வெடி வெடித்துக் கொண்டாடுவார்கள்” என்று அவருடைய தளபதி அமித் ஷா பேசியதும் ஓட்டுக்காக அவர்கள் எந்த எல்லை வரை சென்று மக்களைத் துண்டாடுவார்கள் என்பதை நாட்டுக்குக் காட்டின.

மக்கள் மோடி பேசியதை மட்டும் கவனிக்கவில்லை; அவர் பேசாமல் மவுனம் சாதித்த விஷயங்களையும் கவனித்தார்கள். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த கதைகளையெல்லாம் கூறி, “லாலுவின் காட்டாட்சி மீண்டும் வர வேண்டுமா?” என்று போகிற இடமெல்லாம் கேட்ட பிரதமர், அவருடைய சகா ஆளும் மத்தியப் பிரதேசத்தில் ‘வியாபம் ஊழ’லின் தொடர்ச்சியாக 50 பேர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக இதுவரை ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே? ஹமீர்பூரில் கோயிலில் நுழைய முற்பட்டார் என்ற குற்றத்துக்காக 92 வயதுப் பெரியவர் உயிரோடு கொளுத்தப்பட்டபோது பேசவில்லையே? ஃபரிதாபாதில் இரு தலித் குழந்தைகள் உயிரோடு எரிக்கப்பட்டபோது பேசவில்லையே? கடைசிக் கட்ட வாக்குப்பதிவுக்குச் சில நாட்கள் முன்புகூட கெய்ரோமாக்திங்கில் மாட்டுக்கறியின் பெயரால் ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் அடித்துக் கொல்லப்பட்டார்; பேசவில்லையே? இந்த ஆட்சியில் நிலவும் வகுப்புவாதச் சூழலைக் கண்டித்து நாடு முழுக்க 75-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள் அரசு சார்பில் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பிக்கொடுத்தார்கள்; பேசவில்லையே? இவற்றையெல்லாம் பற்றி கொடூரமாகவும் திமிராகவும் அலட்சியமாகவும் வர்ணித்த அவருடைய சகாக்களைக் கண்டித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே? மக்கள் கவனித்தார்கள். கூடவே சிறப்பாகத் தேர்தல் பணியாற்றியோருக்கு பாஜக பசுக்களைப் பரிசாகத் தந்ததையும் கவனித்தார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 127 கோடி மக்களின் பிரதிநிதி என்ற பெயரில் மாற்றம் மாற்றம் என்று முழங்கியவர் இவரா? ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இவர் சொன்ன மாற்றங்கள் இவையா?

சங்கப் பரிவாரங்கள் ஒரு எளிமையான விஷயத்தை, உக்கிரமான ஒரு உண்மையை இன்னும் புரிந்துகொள்ள வில்லை அல்லது அழிக்க முடியாத அந்தப் பேருண்மையைக் குழி தோண்டிப் புதைத்துவிடத் துடிக்கின்றன. இந்தியா எனும் இந்த நாடு எல்லைக் கோடுகளால் ஒன்றிணைக்கப்பட்டு, கேவலம் 67 ஆண்டுகள்தான் ஆகின்றன. எனில், பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த எல்லைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, இந்த நாட்டையும் மக்களையும் இணைத்திருந்தது எது? அதுதான் இந்த தேசத்தின் ஆன்மா. பன்மைத்துவம். அதில் யார் கை வைக்க முயன்றாலும் மவுனத்தீ மூளும். எரித்தழிக்கும்.

எப்போதுமே டெல்லி தர்பார்காரர்களுக்கு பிஹாரிகள் துச்சம். அவர்கள் படிப்பறிவற்றவர்கள். ஏழைகள். அன்றாடங்காய்ச்சிகள். பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் செல்லும் நாடோடிகள். அடிப்பொடிகள். அந்த எளிய மனிதர்கள்தான் அமைதியாக டெல்லிக்கும் ராஜாக்களுக்கும் இன்றைக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். மோடிக்கும் சங்கப் பரிவாரங்களுக்கும் அது புரியாமல் இருக்கலாம். நாடு முழுவதும் உள்ள மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நண்பர் விஜயசங்கர் எழுதியிருந்ததைப் போல, பாகிஸ்தான் அல்ல; இந்தியா இதைக் கொண்டாடும்!

நவ. 2015, ‘தி இந்து’

10 கருத்துகள்:

 1. பன்முகத்தன்மையை சிதைப்பவர்களை மௌனத் தீயால் மக்கள் அழிப்பர்.நல்ல சிந்தனை சமஸ்!

  பதிலளிநீக்கு
 2. //இந்த தேசத்தின் ஆன்மா. பன்மைத்துவம். அதில் யார் கை வைக்க முயன்றாலும் மவுனத்தீ மூளும்.//
  அருமையான வரிகள் சமஸ்!

  பதிலளிநீக்கு
 3. I re_read your 'Sarva balamikka edhirali ', 'Modi Vs Modi', 'Modi tholvikalin imalaya aarambam' and 'Indiavin vetri' in this order. Great documentation!!!!.

  பதிலளிநீக்கு
 4. 'அமைதியாக இருந்தால் காரியத்தை சாதிக்கலாம்' னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் மோடிஜியின் அமைதி எதைச் சாதிப்பதற்காக?

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. Sir I' ve given u a message in aniccam.blogspot.in on 10th Nov...the day of DiwalI.Kindly go thro' it.Love& Godbless....

  பதிலளிநீக்கு