சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?


இந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழா தடைபட்டு கிடக்கிறது. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்தில் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்.

ஆண்கள் என்றால், சட்டை வேஷ்டி / பேன்ட், பைஜாமா, பெண்கள் என்றால், தாவணி/சேலை/ மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் என்றால், முழுமையாக மூடப்பட்ட எதாவது ஒரு ஆடையும் அணிந்து வர வேண்டுமாம். அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் எதற்கும் கோயிலுக்குள் இனி அனுமதி கிடையாதாம்.

ஒரு கோயில் வெறும் வழிபாட்டுத்தலம் மட்டும் அல்ல; அடிப்படையில் அது ஒரு பொதுவெளி. பண்பாட்டு மையம். ஒன்றுகூடலின், சங்கமித்தலின் குவிப்புள்ளி. வெறுமனே அது கடவுள் இருக்கும் இடம்; பக்திக்கு மட்டும்தான் அங்கே இடம் என்றால், வெளியிலிருந்து விடுதலையாகி உள்ளுக்குள் உறைவதே பக்திக்கான பாலபாடம். சுயம் துறத்தலே தெய்வீகம். கடவுள் இருக்குமிடம் என்று நம்பும் இடத்துக்கு வரும் நேரத்தில்கூடப் புலனடக்கம் எனக்குள் இருக்காது; எனக்கு வெளியிலிருப்பவர்கள் ஒரு குழந்தையும்கூட இழுத்துப் போர்த்திக்கொண்டு என் முன்னே வர வேண்டும் என்பது யோக்கியமான அணுகுமுறை அல்ல. மேலும் எது வழிபாட்டுக்கு ஏற்ற உடை என்பதை யார் தீர்மானிக்க முடியும்?

திருச்சியில் ஒரு கோயில் உண்டு. ரொம்ப நாசூக்காக மனிதர்கள் மீது வன்முறையைச் செலுத்துவது எப்படி என்பதில் தமிழக அறநிலையத் துறைக்கே அவர்கள் முன்னோடி. “செல்பேசி பேசுவதைத் தவிர்க்கலாமே!”, “அமைதியாக வரிசையில் வரலாமே!” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே!” என்று எழுதி வைத்திருப்பார்கள். போதாக்குறைக்கு கோயிலுக்கு வரும் பெண்கள் மேலாடை அணிந்து வருகிறார்களா என்று பார்த்து, துப்பட்டாக்கள் வேறு கொடுப்பார்கள். இதற்காகவே இரண்டு பணியாளர்கள் வேறு. எவ்வளவு பெரிய வன்முறை!

என்னுடைய தோழி அடிக்கடி சொல்வார், “இந்தியாவுல மினி ஸ்கர்ட் போட்டுட்டு போறதைவிட ஆபத்தானது புடவை கட்டிட்டுப் போறது.” அப்படியென்றால், புடவையை எப்படிக் கட்ட வேண்டும், லோ-ஹிப் கட்டலாமா; கூடாதா; ரவிக்கை எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்; ஜன்னலுக்கு அனுமதி உண்டா, இல்லையா என்றெல்லாம்கூட வரையறைகள் வருமா? பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா!). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. யாரையும் அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. அப்படியென்றால், எது ஆபாசம்? கலாச்சாரக் காவலர்கள் சிந்திப்பதாக இல்லை.

இந்தக் கலாச்சார விவாதத்தின் மிக முக்கியமான புள்ளி உடை அல்ல; அதன் பின்னே உறைந்திருக்கும் மாயக்கருவியான `புனிதம்'.

எந்தப் புனிதத்தின் பெயரால், அதிகாரம் உடைகளைக் குறிவைக்கிறதோ, அதே புனிதத்தின் பெயரால்தான் ஆதிக்கம் மனிதர்களைக் குறிவைக்கிறது. கோயில்களிலிருந்து உடைகளை வெளியே தள்ளுகிறது அதிகாரம். கோயில்களிலிருந்து மனிதர்களை வெளியே தள்ளுகிறது ஆதிக்கம்.

எனக்குப் பக்தகோடிகளை நினைத்துக்கூட வருத்தம் இல்லை. சாமிகளை நினைத்துதான் பயமாய் இருக்கிறது. நம்மூர் கோயில்களில் பெரும்பாலான சிற்பங்கள் ஆடையின்றிதான் நிற்கின்றன. ஆடைகளின் பெயரால் சாமிகளையும் வெளியேற்றிவிட்டால், கோயிலுக்குள் என்னதான் இருக்கும்!

டிசம்பர், 2015, ‘தி இந்து’

21 கருத்துகள்:

 1. ஆண்களைச் சட்டையைக் கழற்றச் சொல்வதன் பின்னும் ஒரு பெரும் சூட்சுமம் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். தெளிவாகப் பேசினால் வெறுப்பு விதைக்கும் வேலையில் இறங்கி விட்ட பாவம் வந்து சூழும் என்பதால் சூட்சுமமாகச் சொல்லி விட்டு விடுகிறேன். நீங்களே விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். இதைக் கர்நாடகத்தில் உள்ள ஒரு சிலர் நன்கறிவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Even I have heard the same in Kerala, when I was talking to an elderly gentleman. But he could not explain it to me. Could you please write me regarding this?-- Chefbossbaskar@gmail.com

   நீக்கு
 2. It is not an offense as you said. It is just to make customery. practise. Kindly refute things which you disagree but not try tarnish entirely

  பதிலளிநீக்கு
 3. Even a news reader of a news channel has a dress code to be followed. Why? To ensure that the listeners do not get distracted on the reader rather focus on the news. As you has clearly mentioned, temple is not only a mere place of worship its a place of collaboration of various sectors of people. Hence, it becomes even more essential to maintain the decorum of such a location and ensure thoughts are streamlined. The problem with our society is a ban is needed for things which people should have actually realized on their own. A question being posted on the statues in the temple only depicts the narrow minded thoughts wavering around your mind.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. While continuing bans like this continue how long. where is end for this? what if somebody protest against the allowed dresses are creating obscenity like that going on reducing juvenile age if 15 year committed crime. instead of making learning people themselves how to project their self persona in dress banning will further feed those who are asking for such bans. Acts should change according to changing society. are you accepting that society is changing? Can original tamil culture can be brought now?

   நீக்கு
  2. வேர்களை தொலைத்து விட்டு மரங்களை தேடுகின்றோம். Yes the society is changing but does not mean we can breach certain context and claim ourself to be changing. Why do we need end a ban like this? Still slippers are left outside the temple. Hope another request would not be raised to allow them as well!!!

   நீக்கு
 4. ஒரு கதை நினைவுக்கு வருகிறது
  ஒரு முனிவரும் ஒரு இளந்துறவியும் ஒரு ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருந்தனர் அப்போது இளந்துறவி ஆற்றைக் கடக்கும் போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் எந்த சலனமும் இன்றி இளந்துறவியை கண்டும் காணாதது போல் இருந்தனர் ஆனால் அந்த முனிவர் ஆற்றைக்கடக்கும் போது ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் சலனமுற்று கரையேறினர் இதை கண்ட முனிவர் யார் உண்மையான துறவி என்பதை உணரந்தார்
  ரிஷிகள் ஏன் உடலை வருத்தி தவம் விரதம் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு காஞ்சி மகா பெரியவர் சொன்ன கதை

  கதையின் பொருள்யாதெனில் நாம் சலனப்படாமல் இருந்தால் மட்டும் போதாது நம்மால் மற்றவரும் சலனமோ ஆசையோ படுதல் கூடாது
  கோவிலுக்கு பல பிரிவின்ர் பல மனநிலைகளில் வருவர்

  ஆகவே கோவிலுக்கு எளிமையாக செல்லுதல் நல்லது
  அதிக நகை அணிந்து ஆடை இருக்கமாக அணிந்து மற்றவரை சலனப்படுத்த வேண்டாம்

  தெளிவற்ற மனம் எளிதில் சலனப்படும்

  பதிலளிநீக்கு
 5. இங்கே மாயக்கருவி புனிதம் என்றால் நட்சத்திர விடுதிகள், கல்லூரிகள், சில விழாக்கள் மற்றும் மற்ற சமயத்தின் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் காக்கப்படும் இந்த உடைக் கட்டுப்பாட்டின் மாயக்கருவியும் என்ன என்று சொல்லி விடுங்கள் சமஸ்.

  பதிலளிநீக்கு
 6. //ஆடைகளின் பெயரால் சாமிகளையும் வெளியேற்றிவிட்டால், கோயிலுக்குள் என்னதான் இருக்கும்!// - இந்துத்துவா இருக்கும்! கடவுளை விட முக்கியமானது இல்லையா அது?

  பதிலளிநீக்கு
 7. விதிகளை ஆண் பெண் அனைவருக்கும் பொதுவில் வைத்தால் ஞாயம். குருத்வாராவில் ஆண்,பெண் அனைவரும் தலையை மூடி கொள்ள வேண்டும் .சாதிக்கு ஒரு பழக்கம் கிடையாது. பூனூலை தவிர மற்ற அணைத்து ஆடைகளையும் அணிய கூடாது என்ற உடை கட்டுப்பாடு எதை உணர்த்துகிறது.

  சக்தி வாய்ந்த குழந்தையாக achilles உருவாக அவன் தாய் அவனை சக்தி தரும் நதியில் மூழ்க வைத்த போது அவள் பிடித்து இருந்த பகுதி சக்தி இல்லாத பகுதியாக இருந்து அவன் இறப்புக்கு காரணமாக அமைந்தது.மேலாடை தவிர்த்தால் கடவுள் அருள்,சக்தி முழுமையாக உடை இல்லாத இடத்தில படியும் என்ற கதைகளின் படி பார்த்தால் கூட அதனால் பாதிப்பு தானே

  கடவுளின் முன் ஏழை பணக்காரன்,மன்னன் ,குடியானவன் அனைவரும் ஒன்று என்பதை உணர்த்தும் பழக்கம் என்றால் பூணூல் அதற்கு எதிர் தானே.கோத்திரம் உள்ளவன் என்பதை காட்டும் ,திமிர் தரும் கயிறு தானே.உடையை மட்டும் துறக்க வேண்டும் எனபது எதனால் என்று சற்று யோசித்தால் இந்த வழக்கம் உள்ள ஹிந்து கோவில்கள் யாருக்காக எனபது விளங்கும்

  பதிலளிநீக்கு
 8. ஆண்களுக்கு மேலாடை இருக்க கூடாது என்பதை விட மோசமான உடை சார்ந்த தடை/நடைமுறை எதுவும் இருக்க முடியாது.உடை கட்டுப்பாடு ,பொதுவான உடை எனபது பல இடங்களுக்கு தொழில்களுக்கு உண்டு. ஆனால் ஆணுக்கு பாதி ஆடை ,பெண்ணுக்கு குறிப்பிட்ட ஆடை மட்டும் தான் என்பதன் பின் உள்ள காரணம் என்ன

  லுங்கியோ,ஜீன்சோ,டி ஷர்டோ குறிப்பிட்ட உடை தவறான உடை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்,எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள்.ஜீன்ஸ் ஏன் தவறான உடையாக பார்க்கபடுகிறது.

  பதிலளிநீக்கு
 9. அட! டிரஸ் கோட விடுங்க! பக்கத்து மாநிலத்து கோவில பாருங்க! மக்கள் சலுகையாக தங்க வசதி!
  கழிப்பிடவசதி! கோவில சுத்தம் பண்ண பணியாட்கள், தன்ஆர்வலர்கள்! இங்க சமயபுரம், பழனி இப்படி கோவில்களில் வர்ற வருமானதிற்கு உள்ள வசதிகள் இல்ல! இந்த நெலமை நீடிச்சா சாமியும் கெளம்பிரும் ஊரை விட்டு பாத்துகிடுங்க!?

  பதிலளிநீக்கு
 10. சாதிக்கு ஏற்றார் போல பூணூலில் பல வித்தியாசங்கள் உண்டு ஐயா. மேல் ஆடை கூடாது என்றால் பூணூல் மட்டும் எப்படி அனுமதி.அது சாதியை தெளிவாக காட்டும் உடை தானே. சாதி தெரிய வேண்டும் என்பதற்கான வழக்கத்தை ஆதரிக்கும் கூட்டம் ஜீன்ஸ் தப்பு,லுங்கி பெரும் பாவம்,ஸ்கிர்ட் தீட்டு என்கின்றது

  அண்ணல் அம்பேத்கர் போராடி கொண்டு வந்த ஹிந்து மத திருமண சட்ட மாற்றங்களுக்கு முன் கோத்திரம் இல்லாத சாதிகளுக்கு இடையே நடந்த திருமணங்களும் செல்லாது.

  கோத்திரம் இல்லாததால் பட்டம் சூடி கொள்ள கூடாது என்று சொல்லப்பட்ட சிவாஜி பல கோடி லஞ்சம் கொடுத்து கோத்திரம் வாங்கியது போல பல சூத்திர சாதிகளும் புதிது புதிதாக ரிஷி கோத்திரங்களை புது ரிஷிகளை உருவாக்கி கொள்ளும் நகைச்சுவைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன

  பூணூல் இல்லாதவன் சூத்திரன் ,பூணூல் செய்யப்படும் நூலே பிராமணனுக்கும் பூணூல் அணியும் க்ஷத்ரிய ,வைஸ்ய சாதிகளுக்கும் மாறுபடும்.அதில் போடப்படும் முடிச்சுகளும்,கயிற்றின் எண்ணிக்கையும் வர்ணத்திற்கு வர்ணம் மாறுபடும்

  பூணூலை வைத்து ஐயன்கார்,ஐயர்,வடகலை,தென்கலை வித்தியாசங்களும் கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கலாம்.கண்ட சாதியும் கோவிலுக்குள் நுழைந்து விட கூடாது ,நுழையும் சாதிகள் எங்கு அன்ன தானம் உண்ணலாம் என்பதற்காக தான் மேலாடை கூடாது என்ற வழக்கம்.இன்று எந்த காரணத்துக்காக உடை கட்டுபாடுகள் என்று விளங்கி கொள்ள முடியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைப் பாதித்தால் நீங்கள் கோவில் வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர் போல் தெரியவில்லை, நாத்திகர்களுக்கு ஆத்திகர்களான நாங்கள் கோட் / பெர்முடாஸ் / ஜீன்ஸ் போட்டுக்கொண்டு மூடநம்பிக்கைகளை கடைபிடித்தால் என்ன, வேட்டி, சேலையில் மூடராய் இருந்தால் என்ன ?
   கோயில்களில் ஆண்கள் மேலாடை இன்றி வழிபாடு செய்வது தான் காலம் காலமாக இருக்கும் நடைமுறை. இதை அறியாதவர்கள் அவர்களின் அறியாமையை போக்கிக்கொள்ள வேண்டுமே தவிர , உங்கள் அறியமைக்காகவும், சொம்பலுக்ககவும் வழிபாட்டு முறைகளை விமர்சிப்பது என்ன அறிவுடைமை?
   மிசனரிமாரின் ஏமாற்றுக்கதைகளின் அடிப்படையில் புனையப்பட்ட திராவிட ஏமாற்று அரசியல் இன்னும் எவ்வளவு காலம் செல்லுபடி ஆகும். "அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்றபடி பாரத தொல்சமூகத்தின் மெய்யியலை கொச்சைப்படுத்துவதையே குறிக்கோளாய் கொண்டுள்ளவர்களுக்கு எல்லாமே தவறாகத் தான் தெரியும்.
   பூணூல் போடுவது உங்கள் கண்களை உறுத்தினால், நீங்களும் ஒரு கயிற்றை அணிந்து செல்ல வேண்டியது தானே. சாதியைக் கண்டுபிடிக்க கடுக்கன்\குடுமி வைத்தால் என்ன செய்வீர்கள் ?

   நீக்கு
  2. கேட்ட கேள்விக்கு நேரிடையான தெளிவான பதிலை சொல்லுங்க. மேலாடை துறக்க வேண்டும் என்றால் பூணூலையும் தானே கழட்ட வேண்டும்.மேலாடை இல்லாமல் இருக்கலாம் ஆனால் டி ஷர்ட் போடா கூடாது எனபது சரி என்று உங்களுக்கு உண்மையிலேயே படுகின்றதா

   நீக்கு
  3. பூணூல் ஆடை அல்ல, கழுத்தில் அணியும் ருத்ராட்ச மாலையை யாரும் கழட்டச்சொல்லவில்லை. இது ஏற்கனவே உள்ள நடைமுறை தான். ஆனால் அது மனமாற்றத்தால் வழிமுறைக்கு வரவேண்டும், அரசு ஆலயங்களில் தலையிடக்கூடாது.

   நீக்கு
  4. பூணூல் ஆடை அல்ல, கழுத்தில் அணியும் ருத்ராட்ச மாலையை யாரும் கழட்டச்சொல்லவில்லை. இது ஏற்கனவே உள்ள நடைமுறை தான். ஆனால் அது மனமாற்றத்தால் வழிமுறைக்கு வரவேண்டும், அரசு ஆலயங்களில் தலையிடக்கூடாது.

   நீக்கு
  5. If a male can get the magnetic power of temple by going half nude in temple he acquires power and energy. why this power and energy denied to female. it is clear that this practice is part of technique to establish male domination. if you say this is to protect female from obscene. what happened during prehistoric days where both male and female not even wore any dress. during that time obscenity not in our mind. we felt both male and female body parts are natural and no damage as a result of this. it was used for only fulfilling biological need during reproduction time. why female are not allowed to go half nude in temple to grasp the magnetic power in temple? what a justice by allowing male to gain more power than female.

   நீக்கு
 11. தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இவர்கள் தற்போது வகுத்துள்ள dress code படியே உடையணிந்துதான் கோயிலுக்கு வருகின்றனர்.
  வெளிநாட்டினர் மற்றும் வெளி மாநில சுற்றுப்பயணிகள் மட்டுமே அவ்வாறு
  உடையணிகின்றனர்..
  சுற்றுலா வருவாயை இது பாதிக்கும் !

  பதிலளிநீக்கு
 12. ஆசிரியரின் உள்நோக்கம் ஹிந்துக்களை புத்தி சொல்வது போல் பொதுவெளியில் இழிவுபடுத்துவதா ?
  முரணியக்க மேதைகளுக்கு அவர்களின் முரண்பாடுகள் தெரியவில்லையா ? ஹிந்து மதச்சடங்குகளை மாற்றும் உரிமை ஹிந்து மதத்தின் பல்வேறு வகை வழிபாட்டு நெறியாளர்களுக்கே உள்ளது. அரசாங்கத்திற்கோ , நாத்திகர்களுக்கோ இல்லை. அப்படி இருந்தால் அது மதச் சுதந்திரம் இல்லை. அர்ச்சகர் தீர்ப்பும், ஆடை விதிமுறைகளும் நீதிமன்றத் தீர்ப்புகள் தான், ஒன்றோடு உடன்படும் நீங்கள், உங்களுக்கு வசதி இல்லை என்றால் மற்றொன்றை விமர்சிப்பது எந்த வகை ?
  ஹிந்து கோயில்களை நிர்வகிக்க அரசிற்கு என்ன உரிமை இருக்கிறது ? அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு பக்தர்கள் எவ்வாறு பொறுப்பாவார்கள் ? கேரளா கோயில் தமில்நாட்டுக் கோயில் என்று ஒன்றும் இல்லை. அனைத்து சிவன் கோவில்களிலும் ஆண் சிவ பக்தர்கள் மேலாடை இல்லாமல் தான் வழிபட வேண்டும். இது காலம் காலமாக உள்ள நடைமுறை. அடுத்த முறை சென்னை தாண்டி பிரதோஷ காலங்களில் சிவன் கோயில்களுக்கு சென்று அங்கு மேலாடை இல்லாமல் வழிபடும் ஆண்களிடம் ஏன் இப்படி என்று கேட்டு எழுதுங்களேன் ? அது தானே நேர்மையான ஊடக தர்மம், ஐரோப்பா காரன் சொல்லிக்கொடுத்த சமத்துவப்படி இந்தியாகாரன் இல்லை என்றால் அதுக்கு சாதி தான் காரணம் என்று சொல்வதற்கு எந்த ஆராய்ச்சி அறிவும் தேவை இல்லை, அடிமை மனநிலையே போதுமானது.
  // வெளியிலிருந்து விடுதலையாகி உள்ளுக்குள் உறைவதே பக்திக்கான பாலபாடம். சுயம் துறத்தலே தெய்வீகம்.
  எப்பா முடியல , இது பால பாடம் இல்லை, இது பல படிநிலைகள் தாண்டி வாய்க்கும் பக்குவம், அஹம் பிரம்மாஸ்மி என்ற ஒரு வரியின் பொருள் விளக்கத்தான் கேவலாத்வைதம், விஷிச்டாத்வைதம், த்வைதம், சைவ சித்தாந்தம் ஆகிய பெரும் பிரிவுகள் உள்ளன. முரணியக்கவாதிகளுக்கு இதன் பாடம், முரண்கள் ஒரு மெய்பொருளின் காரியமே, அதனால் முரண்கள் மீது வெறுப்புகொள்ளாமல் அவற்றைக்கடக்க வேண்டும். நான் கடவுள் என்று சொல்பவர்கள் முதலாளிகளும், பிரபுக்களும் அதே கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், அவ்வசனம் அகங்காரத்தின் வேறு ஒரு வெளிப்பாடே.

  பதிலளிநீக்கு
 13. சஞ்சலப்பட்டு மனம் இருக்கும்போது, நாம் செல்ல விரும்பும் இடம் கோவில். அங்கு செல்லும்போது மற்றவர்களின் உடையே நம்மை சளனப்படுத்தும் என்றால், அதில் கட்டுப்பாடுகள் விதிப்பததில் தவறு ஒன்றும் இல்லை. ஃபைவ் ஸ்டார் ஹோடெல் bar களுக்கே, ஆடை விதிமுறைகள் உள்ளப்போது, அதை கோவில்களில் நடைமுறைபபடுத்துவதில் என்ன தவறு? க்ரிகெட் சங்கத்தில் வேஷ்டி அணிந்து வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டதர்க்கு நாம் எவ்வளவு எதிர்ப்புகளை பதிவு செய்தோம். இரு நூறு வருட கிரிக்கெட் க்லப் இவ்வளவு கடுமையான விதிமுறைகளை வகுக்கும்போது, தொன்மையான கோவில்களுக்கு, விதிமுறைகள் தேவைதான் நண்பரே!!

  பதிலளிநீக்கு