கொல்லும் அமைதி


தொலைக்காட்சியில் அந்தச் செய்தி ஓடியபோது, பக்கத்தில் பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். என்ன நினைத்தானோ சின்னவன் அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து ஓடிவந்தான். அப்படியே காலில் சாய்ந்தவன் முகத்தை மடியில் புதைந்துகொண்டான். வீடு அப்படியே உறைந்துபோன மாதிரி இருந்தது. மனம் பதைபதைத்துக்கொண்டே இருந்தது. யாராலும் பேச முடியவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருஷங்களில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள். பெண்களை உடைமைகளாகப் பார்க்கும் மனோபாவம் கற்காலத்திலிருந்தே தொடர்வது என்றாலும், சாதியை மீறித் திருமணம் செய்துகொள்ளும் அத்தனை பேர் மீதும் சாதிய திமிர் பாய்ந்துவிடவில்லை; இடம் பார்த்தே பாய்கிறது. பொதுவில் சாதி ஆணவக் கொலைகள் என்று உச்சரிக்கப்பட்டாலும், இப்படிக் கொல்லப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்.

ஒவ்வொரு கொலையும் கொடூரமானது என்றாலும் உடுமலைச் சம்பவம் இவ்வளவு உக்கிரமாக நம்மைத் தாக்கக் காரணம் அந்த வீடியோ. அது ரத்தமும் சதையுமாக வெளிப்படுத்தும் உண்மை. நம்மில் பலர் வெறும் சொல்லாக அல்லது பெருமிதமாக மட்டுமே பயன்படுத்தும் சாதியின் அசலான குரூர முகம்.

நகரத்தில், ஊர்க் கடைவீதியில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் அந்தக் கொலை சாவதானமாக நடக்கிறது. கடைக்குச் செல்லும் இளம் தம்பதியை மூன்று பேர் கொண்ட ஒரு குழு பின்தொடர்ந்து நடக்கிறது. இரு மோட்டார் சைக்கிள்களில் வந்து சேரும் இருவர் அவர்கள் அருகே வண்டியை நிறுத்துகின்றனர். தம்பதியை நோக்கி கும்பல் நகர்கிறது. கணவன் - மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டுகின்றனர். பின், சாவதானமாக மோட்டார் சைக்கிளை எடுக்கிறார்கள். சாவதானமாகச் செல்கிறார்கள்.

கொலை நடந்த இடத்தில் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்த மக்களின் கையறு நிலை, நடந்துகொண்டிருந்த கொலை, துடித்துக் கொண்டிருந்த உயிர்கள்… இவை எல்லாவற்றையும் விட, பயங்கரமானது கொலையாளிகளின் சாவதானம். அவர்களுடைய திமிர். அவர்களுடைய அமைதி… எங்கிருந்து கிடைக்கிறது கொலையாளிகளுக்கு இவ்வளவு துணிச்சல்? சம்பவம் நடந்து இரு நாட்களாகியும் இன்னும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு வார்த்தையைக்கூட உதிர்க்காத முதல்வர், பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து வெளிப்படும் அசாத்தியமான அமைதியையும் கொலையாளிகளிடமிருந்து வெளிப்பட்ட அமைதியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.


வேலூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராமதாஸிடம் நேற்று இந்தக் கொலை தொடர்பாகக் கருத்துக் கேட்டிருக்கிறார்கள் செய்தியாளர்கள். தமிழகத்தில் தொட்டது தொண்ணூறுக்கும் கருத்துச் சொல்வதற்குப் பேர் போன ராமதாஸுக்கு இதில் கருத்துச் சொல்ல ஏதுமில்லை. செய்தியாளரைத் தீர்க்கமான ஒரு பார்வை பார்த்துவிட்டு, இருக்கையிலிருந்து எழுந்திருக்கிறார். “இதுவரைக்கும் நிறைய முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன். மொதல்ல அதையெல்லாம் போடுங்க” என்றவாறே புறப்படுகிறார். ராமதாஸ் பதில் சொல்லாவிட்டாலும் இந்த விவகாரத்தில் அவருடைய நிலைப்பாடு என்னவென்று தமிழகத்துக்குத் தெரியும். ஆனால், கருணாநிதியின் நிலைப்பாடு என்ன? ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன? இப்போது மட்டும் அல்ல; தமிழகத்தில் சாதிய சக்திகள் தலைதூக்கும்போதெல்லாம் இதே அமைதியைத்தான் இருவரும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

தமிழகத்தில் பாமகவின் சாதிய அரசியல் வெளிப்படையாகத் தெரியக் கூடியது. அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத ஆபத்தையும் அபாயத்தையும் கொண்டது திமுக, அதிமுகவின் உள்ளார்ந்த சாதிய அரசியல். தமிழகத்தில் இன்றைக்கு இத்தனை சாதிய கட்சிகள் தோன்ற ஒருவகையில் திமுக, அதிமுகவின் இந்த உள்ளார்த்த சாதிய அரசியலும் முக்கியமான காரணம்.

உடுமலைச் சம்பவம் நடந்த அதே நாளில் அதிமுக, திமுக இரண்டும் பல சாதியக் கட்சிகளிடம் தேர்தல் கூட்டணிப் பேரம் நடத்திக்கொண்டிருந்தன. மறுநாளும் வழக்கம்போல் பேச்சுவார்த்தை தொடர்ந்தது, தொடர்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, சாதிய சக்திகளுக்குத் தேர்தலில் கிடைக்கும் இடங்களைவிடவும் முக்கியமானது அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம். குறைந்தது அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் நிழல் அதிகாரம். இந்த நிழல் அதிகாரத்தைத்தான் யுவராஜ்களின் முகங்களில் சிரிப்பாகப் பார்க்கிறோம்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் ஒரு பெருந்திரள் கூட்டம் சூழ குதூகலமாக சரணடைந்த ‘வாட்ஸப் வீடியோ’ படங்களை வெளியிட்டு, ‘தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?’ என்று கேட்டு எழுதியிருந்தன டெல்லி ஊடகங்கள். உத்தரப் பிரதேசத்தில், பிஹாரில், ராஜஸ்தானில், ஹரியாணாவில் நடப்பதற்குக் குறைவில்லாத வெட்கக்கேடுகளோடுதான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கல்வி, சுகாதார, பொருளாதார முனைகளில் எல்லாம் நாம் எவ்வளவு மேலே ஏறிக்கொண்டிருந் தாலும், சாதி விவகாரத்தில் நாளுக்கு நாள் மோசமாகக் கீழே இறங்கிக்கொண்டிருக்கிறோம். திருநெல்வேலியில் பள்ளிக் குழந்தைகள் சாதிய அடிப்படையில் கயிறு கட்டிக்கொண்டிருக்கின்றன. பெண் பிள்ளைகள் எந்த நிறப் பொட்டு வைப்பது வரை சாதி ஊடுருவியிருக்கிறது. விருத்தாசலத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருக்கும் சாதிச் சங்கப் பதாகைகளில் பள்ளிச் சிறுவர்கள் படங்களில் சிரிக்கிறார்கள். ராமநாதபுரத்தில் ‘செல்போனில் சாதிப் பாடல்களை ஒலிக்க விடக் கூடாது’ என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டு அரசு பஸ்கள் ஓடுகின்றன. உடுமலை கொலை நடந்த அடுத்த சில நிமிடங்களில், “எங்க பொண்ண கட்டினா, கட்டினவனை இப்படித்தான் வெட்டுவோம்” என்று சமூக வலைதளங்களில் பகிரங்கமாகப் பரவுகிறது விஷம். இவை அத்தனையும் அரசின், உளவுத் துறையின், காவல் துறையின் கண்களுக்கு அப்பாற்பட்டு நடப்பதாக எவராலும் நம்ப முடியாது.

சாதிய வன்முறைகளுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், பிரதானக் காரணம் அரசின் அமைப்புகள் வெளிப்படுத்தும் அலட்சியம். டிராக்டர் கடனுக்கு ஒரு தவணை செலுத்தத் தவறும் விவசாயியை அடித்து தரதரவென இழுத்துச் செல்லும் காவல் துறை, யுவராஜ்கள் விஷயத்தில் எப்படிப் பம்மி பதவிசாக நடந்துகொள்கிறது என்பது இங்கே நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டியது.

இந்தியச் சமூக அமைப்பியலில் சாதிய விடுதலையை அடையாமல் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை நம்மால் கனவிலும் கற்பனை செய்ய முடியாது. ஆனால், சாதிய வன்முறைகளை மைய நீரோட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து அலட்சியப்படுத்துகின்றன அல்லது பத்தோடு பதினொன்றாக வகைப்படுத்தி ஏமாற்றுகின்றன. நம்மைப் படுகுழியில் தள்ளுகின்றன.
 

மருத்துவமனைப் பிணவறையில் கிடக்கிறது சங்கரின் பிணம். உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிரச் சிகிச்சைப் பிரிவில் போராடிக் கொண்டிருக்கும் கௌசல்யாவிடமிருந்து வெளிப்படும் அலறலும் குமுறலும் நான்கு சுவர்களுக்குள் அடைத்துவைத்துவிடக் கூடியவையா? அப்படி நினைத்தால் நம்மைவிடவும் முட்டாள்கள் யாரும் கிடையாது. பாவங்கள் துரத்தும். பகடைக்காய்களின் நிகழ்தகவுகள் மாறும். மடியில் முகம் புதைத்து, கண்களை மூடிக்கொண்டிருக்கும் நம் பிள்ளைகளுக்காகவேனும் சாதிக்கு எதிராக நாம் பேச வேண்டும். நம்மை ஆளும், ஆளத் துடிக்கும் அரசியல்வாதிகளைப் பேசவைக்க வேண்டும்!

மார்ச், 2016, ‘தி இந்து’

8 கருத்துகள்:

  1. இது போன்ற ஆணவ கொலைகள் வாடிக்கை ஆகிவிட்டது.

    இந்த சம்பவத்திற்கு வரும் எதிர்வினைகள் என்னை மேலும் பயம் கொள்ளச் செய்துள்ளது பலர் இட ஒதுக்கிட்டுக்கு எதிரான கருத்தை சொல்ல இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறரர்கள்.

    Bigger chunk of the society is completely oblivious to these kind of incidents.

    Few even go to the extent of morally backing these incidents using the நாடக காதல் concept invented by DR.ராமதாஸ்

    இது அத்தனைக்கும் காரணம் தலித் வெறுப்பு சமுகத்தின் மைய நீரோட்டத்துடன் கலந்திருப்பது தான்.

    பயமாக இருக்கிறது !!!!!

    பதிலளிநீக்கு
  2. சாதி ஒழிப்புக்கான மென்மைப் போக்கைக் கை விட்டு, சாதிக்கு எதிராக மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு இருக்கிறது என்பதைத்தான் இத்தகைய நிகழ்வுகள் நம் முகத்தில் அறைந்து சொல்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    சாதியின் குரூர முகத்தை இப்படி யாரும் படம் பிடிக்க முடியாது வார்த்தைகளால்

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. Unless the State acts resolutely against the perpetrators of this heinous act and the ruling AIADMK and the opposition - DMK break their silence such acts can not be stopped.

    பதிலளிநீக்கு
  5. Unless the State acts resolutely against the perpetrators of this heinous act and the ruling AIADMK and the opposition - DMK break their silence such acts can not be stopped.

    பதிலளிநீக்கு
  6. இந்தியச் சமூக அமைப்பியலில் சாதிய விடுதலையை அடையாமல் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை நம்மால் கனவிலும் கற்பனை செய்ய முடியாது.

    பதிலளிநீக்கு
  7. சாதிய அடக்கு முறைக்கு எதிரான கருத்துக்களும் போராட்டங்களும்,நம்மிலிருந்து வரவேண்டும் தலித்துக்கள் இடம் இருந்து அல்ல...

    பதிலளிநீக்கு
  8. Politicians approach will be relied on votes only for winning the elections to capture the power and retain it for ever.They may not be in a position to put forth and advocate the reformation that is required.Expecting reformation through them may not be upto the level what the social reformers expect. But the support of the rulers is very essential to implement it.
    Religion & Casteism have rooted into this soil for many generations. To bring oneness we have to pass many more steps towards it.
    Every one should accept they have been chiristened as Hindu Muslim Christian and specified castes within them.Our reformations should start from this root.secondly we should inculcate we all are Brothers &Sisters.We should follow the footsteps of Swami Vivekananda. Let us have look at the yesteryears . The differences in moving ,speaking and other activities among different castes have changed towards positive aspects.certain amount of years or few generation to go to have Marital Relations among different castes.Social acceptance can be had in the long run . Such brutal activities may not erupt then.let us hopefully wait for the good days.

    பதிலளிநீக்கு