உள்கட்சி விவகாரமா அதிமுக கூத்துகள்?


அதிமுகவில் ஜெயலலிதா அதன் நிரந்தரப் பொதுச்செயலாளர் மட்டுமே அல்ல; அங்குள்ள ஒரே நிரந்தர உறுப்பினரும் அவரே; அவருடைய அமைச்சரவையின் ஒரே நிரந்தர அமைச்சரும் அவரே என்று சொல்லப்படுவது உண்டு. அதனாலேயே அக்கட்சியினுள் நடக்கும் மாற்றங்கள் பொதுவெளியில் பெரிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயமாக, 5 ஆண்டுகளுக்குள் தன் அமைச்சரவையை 24 முறை மாற்றியவர் ஜெயலலலிதா. 2011-ல் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பதவியேற்ற அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே இப்போது பதவியில் நீடிக்கின்றனர்.

ஒரு முதல்வர் எத்தனை முறை வேண்டுமானாலும் அமைச்சரவையை மாற்றியமைத்துக்கொள்வது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்புரிமை. அரசின் நிர்வாகம் செழுமையாக மாற்றங்கள் உதவும் என்பதே இந்தச் சிறப்புரிமைக்கான அடிப்படை. தமிழகத்தில் அமைச்சர்கள் என்னென்ன காரணங்களுக்காக நீக்கப்படுகிறார்கள் அல்லது சேர்க்கப்படுகிறார்கள் என்பது வெளியே யாருக்கும் தெரியாத மர்மம்.

பொதுவாக, ஒரு அமைச்சர் நீக்கப்படுகிறார் என்றால், எப்படியும் அதற்குப் பின்வரும் மூன்றில் ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும். 1. விசுவாசமின்மை, 2. திறமையின்மை. 3. அதிகார துஷ்பிரயோகம். எப்படிப் பார்த்தாலும் இந்த மூன்றில் ஒரு காரணத்துக்காக நீக்கப்படுபவர் எப்படி மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் அமைச்சரவைக்குள் இடம்பெற முடியும்? கோகுல இந்திரா, உதயகுமார், வேலுமணி, ஆனந்தன், சண்முகநாதன் ஆகியோர் இப்படித்தான் நீக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்டார்கள். அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, ரமணா ஆகியோர் இப்படித்தான் இரு முறை சேர்க்கப்பட்டு, இரு முறை நீக்கப்பட்டார்கள்.

ஒவ்வொரு முறை அமைச்சர்கள் நீக்கத்தின்போதும் புலனாய்வுப் பத்திரிகைகள் வழி நம்மை வந்தடையும் செய்திகளில், பெயர்களில் வேறுபாட்டைக் காண்கிறோமே தவிர, காரணங்களில் வேறுபாட்டைக் கண்டதில்லை. இப்படியான ‘செய்திக் கசிவு’களில் உளவுத் துறையின் கைங்கர்யமும், ஆளுங்கட்சியின் அருளாசியும் எப்படிக் கலந்திருக்கும் என்பது ஊடக உலகை அறிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியாதது அல்ல. மொத்தத்தில், பொதுமக்களிடம் இச்செய்திகள் உருவாக்கும் பிம்பம்: ‘முதல்வருக்குத் தெரியாமல் பெரிய தவறுகளில் இந்த அமைச்சர் ஈடுபட்டிருக்கிறார்; இப்போதுதான் அது முதல்வர் கவனத்துக்கு வந்தது; உடனே கறாராக அவர் நடவடிக்கை எடுத்துவிட்டார்!’

இந்தக் கதைகள் உண்மை என்றால், திரும்பத் திரும்பத் தவறுகள் செய்யும் அமைச்சர்களைக் கொண்ட அரசியல் கட்சி அதிமுகவாகவும் திரும்பத் திரும்ப ஏமாற்றப்படுபவர் ஜெயலலிதாவாகவுமே இருக்க வேண்டும். ஜெயலலிதாவோ இப்படியான செய்திகள் மூலமாகவே தன்னை ஒரு தேர்ந்த நிர்வாகியாக நிறுவிக்கொண்டிருக்கிறார்.

2011-ல் திமுக அரசு கஜானாவைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டது என்று சொன்னபோது, திமுகவின் நிர்வாகச் சீர்கேட்டுக்கான உதாரணமாக ஜெயலலிதாவால் உதாரணப்படுத்தப்பட்டது, திமுக விட்டுச்சென்ற ரூ.1 லட்சம் கோடிக் கடன். 2016-ல் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்போது ஜெயலலிதா விட்டுச்செல்லும் கடன் ரூ.2.11 லட்சம் கோடி. திமுக விட்டுச்சென்ற கடனாவது காலங்காலமாகத் தொடர்ந்துவந்த அரசுகள் விட்டுச்சென்ற கடன்களின் நீட்சி. தன்னுடைய 5 ஆண்டு ஆட்சியில் மட்டும் அதைவிட அதிகமான கடனை உருவாக்கியிருக்கிறது அதிமுக அரசு. இது எந்த வகையான நிர்வாகத்துக்கான சான்று?

ஒரு ஆட்சியின் நிர்வாகச் செயல்பாடுகளுக்காக யாரையேனும் பொறுப்பாக்க முடியும் என்றால், அமைச்சரவையைத்தான் பொறுப்பாக்க முடியும். அந்த அமைச்சரவை கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எப்படிச் செயல்பட்டது? ஊருக்கே தெரியும்! பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் ஐந்து ஆண்டுகளுக்குள் 6 முறை அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். சராசரியாக ஓராண்டுக்கு மேல்கூட ஒரு துறையில் ஒரு அமைச்சர் நீடிக்கும் வாய்ப்பில்லை என்றால், அந்தத் துறையின் நிலை என்னவாக இருக்கும்?

நாம் எதையும் கேட்டதில்லை. தன்னை மட்டுமே ஜெயலலிதா முன்னிறுத்திக்கொள்வதாலும் அவருடைய அமைச்சர்களும் அதையே வழிமொழி வதாலும் அடிப்படையில் கூட்டுப்பொறுப்பாகப் பார்க்கப்படும் ஒரு அமைச்சரவையின் செயல்பாட்டை ஜெயலலிதா விஷயத்தில் அவருடைய தனிப் பொறுப்பாகவே பார்த்துவந்தோம். இப்போது இரண்டு வாரங்களாக அதிமுகவில் நடந்துவரும் மாற்றங்கள், அவற்றை முன்வைத்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகளையும் அப்படி எடுத்துக்கொள்ள முடியுமா?

முன்னாள் முதல்வரும் கட்சியில் ஜெயல லிதாவுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பேசப்பட்டவருமான பன்னீர்செல்வம், அவருக்கு அடுத்தடுத்த நிலைகளில் கட்சியில் கோலோச்சிய விஸ்வநாதன், வைத்தியலிங்கம், பழனியப்பன், பழனிச்சாமி ஆகிய ஐந்து பேர் தொடர்பாகவும் இரு வாரங்களுக்கு மேலாகக் ‘கசியும் செய்திகள்’ என்னவெல்லாம் சொல்கின்றன? பொதுவெளியில் இந்தச் செய்திகள் என்னவெல்லாம் பேச்சுகளை உருவாக்கியிருக்கின்றன?

இந்த ஐவரும் சேர்ந்து, வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் நிற்பதற்கான இடமளிப்பதாகக் கூறி, கட்சித் தலைமைக்குத் தெரியாமல், நூற்றுக்கு மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்ததாகப் பேசப்படுகிறது. கூடவே, எதிர்காலத்தில் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றுவதற்கான திட்டத்தில் இருந்தார்கள் என்று பேசப்படுகிறது. மேலும், பன்னீர்செல்வம், விஸ்வநாதன் இருவரும் ஊழல்/முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், ஏகப்பட்ட சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகவும் இவையெல்லாம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்போதுதான் தெரியவந்ததாகவும் பேசப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இவர்கள் தலைமையிடம் வரவழைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டதாகவும் அவர்கள் முறைகேடாகச் சேர்த்த சொத்துகள் யாவும் பறிமுதலாக்கப்படுவதாகவும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் பேசப்படுகிறது.

இன்னும் எவ்வளவோ கதைகள் ஊடகங்களில் வெளியான வண்ணம் இருக்கின்றன. இதைத் தாண்டி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதுகுறித்துப் பேசுகின்றனர். சிலர் இது ஒரு தேர்தல் நாடகம் என்றும் விமர்சிக்கின்றனர். நடக்கும் சம்பவங்களோ மக்களைக் குழப்புகின்றன. இந்த அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லப்படும் அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒரு அமைச்சர் பதவி நீக்கப்பட்ட பின், பண மோசடியில் அவர் ஈடுபட்டதாக வழக்குப் பதிவாகிறது. இன்னொரு அமைச்சரின் உதவியாளர் அரசு சார் நிறுவனங்களில் ஒப்பந்தங்கள் வாங்கித்தர பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாகக் கைதுசெய்யப்படுகிறார். உண்மையோ, பொய்யோ; எது எப்படியிருந்தாலும், 15 நாட்களுக்கு மேலாக மாநிலத்தில் ஒரு ஆளுங்கட்சியின் பிரதான அமைச்சர்களைச் சுற்றிப்புரளும் செய்திகளை அப்படியே அக்கட்சியின் தலைமை பார்த்துக்கொண்டிருப்பது வியப்பளிக்கிறது. ஆட்சியின் மீது சிறு விமர்சனங்கள் வந்தாலும், ஊடகங்கள் மீது அவதூறு வழக்குகளை ஏவும் ஒரு அரசாங்கம், இந்தச் செய்திகளை எதிர்கொள்ளும் விதம் மர்மமாக இருக்கிறது. இவை எல்லாவற்றையும்விட அதிர்ச்சியளிப்பது, இந்த விவகாரத்தை ஏதோ ஒரு அரசியல் கட்சியின் உள்விவகாரம்போல அணுகும் பொதுவெளியின் சூழல்.

அதிமுகவின் உள்கட்சி விவகாரம் மட்டும் அல்ல இது; மாறாக, அரசு சம்பந்தப்பட்டது, மாநிலத்தின் நலன்கள் சம்பந்தபட்டது, மக்கள் சம்பந்தப்பட்டது. ஏனென்றால், சம்பந்தப்பட்டிருப்பவர்கள் யாவரும் இம்மாநிலத்தின் அமைச்சர்கள். அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் பணம் மக்கள் பணம். அவர்கள் செய்த தவறுகளாகப் பேசப்படும் யாவும் பொருளாதாரக் குற்றங்கள், அரசு மீதான சதிகள். ஒருவேளை அமைச்சர்கள் அப்படியான குற்றங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீதான நடவடிக்கைகள் வெளிப்படையாக அல்லவா எடுக்கப்பட வேண்டும்! கைதோ, சொத்துப் பறிமுதலோ அரசு அமைப்புகள் அல்லவா வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும்?

முதல்வரே, அதிமுகவின் எந்த முடிவையும் நீங்கள் உங்கள் வீட்டுத் தோட்டத்துக்குள் எடுத்துக்கொள்ளலாம். அரசுசார் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. பேசுங்கள்!

மார்ச், 2016, ‘தி இந்து’

3 கருத்துகள்:

  1. இன்றைய பத்திரிகை சூழலில், தாங்கள் மட்டுமே அதிமுக அரசின் தலைமையை, நாளேட்டில் நடுநிலையோடு விமர்சிக்கிறீர்கள். மிகவும் அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. அனைவரின் சார்பாக உங்கள் கேள்விகள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. ஊடகங்களின் அறம் உங்களால் வெளிப்படுகிறது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு