அரசியலதிகாரமே வலிய ஆயுதம் - திருமாவளவன்



தமிழக அரசியல் களம் தேர்தல் வெப்பத்தில் தகிக்கும் சூழலில், திருமாவளவன் ஓடிக்கொண்டிருக்கிறார். இது கிட்டத்தட்ட ஓடிக்கொண்டே எடுத்த நேர்காணல். ஆறு வெவ்வேறு நாட்களில் மணிக் கணக்கில் நீண்ட நேர்காணல். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு காத்திரமான தலித் அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும் திருமாவளவன் எல்லாக் கேள்விகளையும் நிதானமாக எதிர்கொண்டார். கூடுமானவரை உண்மைக்கு முகம் கொடுத்தார். எதிர்த்தரப்பு நியாயங்களுக்கும் மதிப்பளித்தார். தவறுகளை யோசிப்பவராகவும் மறுபரிசீலனை செய்பவராகவும் தெரிந்தார். சமகால அரசியல் தலைவர்கள் மத்தியில் இவையெல்லாம் அரிதாகிவருவதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆரம்ப காலக் கதைகளிலிருந்து நாங்கள் பேசினோம்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் உருவாக்கத்துக்குப் பிந்தைய இந்தக் கால் நூற்றாண்டில், என்ன மாற்றங்களை உருவாக்கியிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? 


விசிக உருவான பிறகு, தமிழக அரசியல் களத்தில் தலித்துகள் ஒரு சக்தியாகத் திரளத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு முன்பு அரசியலுக்கும் தமக்கும் தொடர்பில்லை, அதிகாரத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று வேடிக்கை பார்க்கக் கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள். குடிசைகளைக் கொளுத்துகிறவர்கள், பெண்களை மானபங்கப்படுத்துகிறவர்கள், கோயிலில் நுழையாதே, குளத்தினில் இறங்காதே, செருப்பு அணியாதே, சைக்கிளில் போகாதே என்று கொடுமைப் படுத்தியவர்களையெல்லாம் சகித்துக்கொண்டிருந்த நிலை மாறி, தமக்கென்று ஒரு அமைப்பு, தமக்கென்று ஒரு கொள்கை, தமக்கென்று ஒரு களம் என்ற நிலையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள். அடக்கு முறைக்கு எதிரான பயணம் இப்போது அதிகாரத்தை நோக்கி நகர்கிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் காங்கிரஸ் அளவுக்குப் பங்களித்த கட்சி ஏதும் இல்லை. காங்கிரஸ் இன்றைக்குத் தமிழகத்தில் வலிமையாக இருந்திருந்தால், ஒரு தலித் முதல்வர் வந்திருப்பார் என்று நீங்களேகூடச் சமீபத்தில் கூறியிருந்தீர்கள். தமிழகத்தில் யாரும் கேள்விப்படாத, மகாராஷ்டிரத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு தலித் இயக்கம் உங்களை ஈர்த்தபோது, காங்கிரஸ் ஏன் உங்கள் பார்வையில் படவில்லை?


நான் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் தலித்துகள் வசிக்கிற பகுதியில், காங்கிரஸ் கொடியும் காமராஜர் படமும்தான் பெரும்பாலும் இருக்கும். தலித் அல்லாதவர்களின் தெருக்களில் திமுக கொடி பறக்கும். நானே காங்கிரஸுக்கு ஓட்டுக் கேட்டு கோஷம் போட்டுச் சென்றிருக்கிறேன். ஆக, காங்கிரஸ் என்பது தலித் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரண் என்று நம்பக்கூடிய அளவுக்கு ஒரு தோற்றம் இருந்தது. புரட்சியாளர் அம்பேத்கரைப் படிக்கத் தொடங்கிய பிறகு எல்லாம் மாறியது. காந்தியின் காலத்தில் தொடங்கி, காங்கிரஸ் நடத்திய ஆலயப் பிரவேசப் போராட்டங்கள், ‘அரிஜன்’ பத்திரிகை, அரிஜன சேவா சங்கம், சுதந்திரத்துக்குப் பிந்தைய காங்கிரஸின் செயல்பாடுகள் எதையும் நான் குறையாகக் கூறவில்லை. ஆனால் காந்தி, காங்கிரஸ், இந்து மதம் மூன்றும் தலித்துகளின் விடுதலைக்கு அடிகோலாது என்பது புரியத் தொடங்கியது. ஒப்பீட்டளவில் காங்கிரஸ் ஏனைய கட்சிகளைவிடவும் தலித்துகளுக்கு நிறையச் செய்திருக்கிறது என்றாலும், வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாகக்கொண்ட சீர்திருத்தங்களாகவே அவையெல்லாம் எனக்குப்பட்டன. சாதி ஒழிப்பையும் இந்துத்துவ எதிர்ப்பையும் முக்கிய இலக்காகக் கொண்ட இயக்கமே தலித்துகளின் விடுதலைக்கு வழிவகுக்க முடியும் என்று நினைத்தேன்.

கம்யூனிஸ்ட்டுகள் கவனம் ஈர்க்கவில்லையா?


ஆரம்பத்திலிருந்தே கம்யூனிஸக் கொள்கையை நான் உளமாற நேசித்தேன். சொல்லப்போனால், ‘கம்யூனிஸம்தான் பௌத்தம், பௌத்தம்தான் கம்யூனிஸம்’ என்று நம்பக் கூடிய அளவுக்கு. நிறைய கம்யூனிசத் தோழர்களோடு பழகியிருக்கிறேன். ஆனால், அந்தக் கட்சியில் சேர வேண்டும் என்கிற உணர்வு எப்போதும் எழுந்ததில்லை. எனக்குத் தெரிந்து, எங்கள் ஊர்ப் பக்கம் அன்றைக்கெல்லாம் எந்தத் தலித் குடியிருப்புப் பகுதியிலும் நான் கம்யூனிஸ்ட் கொடிகளைப் பார்த்ததில்லை. சின்ன வயதிலேயே இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் கொண்ட அக்கறையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின்பால் கொண்ட ஈர்ப்பும்கூட இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். தனித் தமிழ் இயக்கம், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம் இப்படித்தான் என் ஆரம்ப கால அரசியல் நகர்ந்தது. ஒருபுறம் விடுதலைப் புலிகளின் தாக்கங்கள், இன்னொரு புறம் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் இவை இரண்டும் எனக்குள் ஒரு வேதிமாற்றத்தை உருவாக்கின. தலித் மக்களுக்கு இழைக்கப்படக் கூடிய சாதியக் கொடுமையிலிருந்து அவர்களை மீட்க இந்த அரசியல் இயக்கங்கள் எதுவும் பயன்படாது என்று நான் கருதினேன். சொல்லப்போனால், 1980 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் நான் தேர்தல் அரசியல் மீது நம்பிக்கை இல்லாதவனாக இருந்தேன்.

அம்பேத்கரை எந்த வயதில் படிக்க ஆரம்பித்தீர்கள்?


எட்டாம் வகுப்பு படிக்கும்போது. என் அப்பாதான் அம்பேத்கரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்பா எட்டாம் வகுப்பு வரை படித்தவர். வாசிப்பு அதிகம்.விவசாயக் கூலி.ஒரு வரலாற்று ஆசிரியர் மாதிரி எனக்கு வரலாற்றைச் சொல்லிக் கொடுத்தவர். நான் நன்றாகப் படிக்க வேண்டும்என்பதற்காக அப்பா அடிக்கடி அம்பேத்கரைப் பற்றிச் சொல்வார். ‘நம்மை மாதிரி அவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர், நிறையப் படித்தவர். அவரது படிப்பை எழுதினால் இவ்வளவு நீளத்துக்கு வரும்’என்று தன் இரண்டு கைகளையும் விரித்துக் காட்டுவார் அப்பா. பின்னாளில் சென்னைக்கு வந்த பிறகு, ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர் அம்பேத்கர்’புத்தகம் கிடைத்தது. சின்ன புத்தகம். அதுதான் அம்பேத்கரைப் பற்றி நான் படித்த முதல் புத்தகம். அம்பேத்கரைப் பற்றிப் படிக்கப் படிக்க  எனக்குள் ஒரு பெரும் உந்துதல் உருவானது.

வறுமையான சூழலில் பிறந்து படிப்பவர்கள் எல்லோரும் இயல்பாகத் தன் வேலை, தன் வாழ்க்கை என்று நகரத்தான் பார்ப்பார்கள். நீங்கள் எப்படி அரசியலை நோக்கி நகர்ந்தீர்கள்? சின்ன வயதிலேயே எங்கள் மக்கள் அனுபவித்த கொடுமைகள் கடுமையான பாதிப்புகளை மனதில் உருவாக்கிவிட்டன. அரசியலுக்காகத் திட்டமிட்டு என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை என்றாலும், காலம் அதை நோக்கித்தான் என்னைத் தள்ளியது.

கொஞ்சம் விரிவாகப் பேசலாமா? நீங்கள் அரசுப் பணியில் கணிசமான காலம் இருந்தீர்கள். ஆனால், திருமணம் செய்துகொள்ளவில்லை. காதல்கூட எட்டிப் பார்க்கவில்லையா?


1982-ல் நான் பட்டப் படிப்பை முடித்தபோது என் வயது 20. எங்கள் ஊரில் பதினெட்டைத் தாண்டிவிட்டாலே கல்யாணப் பேச்சு வந்துவிடும். என் அம்மா பெண் பார்க்கிறேன் என்று வந்து நின்றார். நான் ‘இந்தப் படிப்புக்கெல்லாம் வேலை கிடைக்காதம்மா; சட்டம் படிக்கப்போறேன். வேலை கிடைக்காட்டிலும் வக்கீல் வேலை பார்த்தாவது பொழைச்சுக்கலாம்’ என்றேன். அப்பா என் பக்கம் நின்றார். மேலே படிக்கப்போனபோது, விடுதலைப் புலிகள் இயக்கம்சார் மாணவர்கள் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. 1983-க்குப் பிந்தைய காலகட்டம் கொந்தளிப்பானது இல்லையா? ‘விடுதலைப்புலி’என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். கண்ணதாசன் பேரவை சார்பில் 1984 மார்ச்சில் ஈழ விடுதலை மாநாடு நடத்தினேன். இப்படிப் போக ஆரம்பித்துவிட்டது.

அந்தக் காலகட்டத்தில் நான் ரொம்ப கூச்ச சுபாவி. ஆண் நண்பர்களே குறைவு. பெண்களுடனான உறவு, காதலையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவனாகத்தான் இருந்தேன். வெகுவிரைவில் அரசுப் பணி கிடைத்தது. தடய அறிவியல் துறையில் வேலை. மதுரைக்குப் போனேன். அதன் பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது. மலைச்சாமி அண்ணனின் அறிமுகம் கிடைத்தது. ‘தலித் பேந்தர்ஸ்’ இயக்கம் அறிமுகமானது. சில மாதங்களுக்குள் அந்தப் பகுதியில் நடந்த கொடூரமான சம்பவங்கள் எனக்குள் பெரிய மாற்றங்களை உருவாக்கிவிட்டன. மேலூர் அருகேயுள்ள சென்னகரம்பட்டியில் 1992-ல் நடந்த இரட்டைப் படுகொலை, 1997-ல் மேலவளவில் நடந்த எழுவர் படுகொலை போன்ற சம்பவங்கள் கடுமையான அதிர்வை உருவாக்கின. அதுவரை ஈழப் போராட்டம், அது தொடர்பான தோழர்களுடனான தொடர்பு என்றிருந்த நான், தலித் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பது மிக முக்கியமான பணி என்ற மனநிலைக்கு வந்தேன். அரிவாள் வெட்டுப்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட நள்ளிரவு 2 மணிக்கு ஓடி வருவார்கள். குடிசையைக் கொளுத்திவிட்டார்கள் என்று ஓடிவந்து அழுவார்கள். ஓடுவேன். இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால், அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் முடியாது என்று புரிந்தது. எப்படியாவதுஒரு இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்று தோன்றியது. இரவெல்லாம் கிராமம் கிராமமாகப் போய் கூட்டம் போட்டுப் பேசுவோம். பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் போவது, மாவட்ட ஆட்சியரைப் போய்ப் பார்ப்பது என்று ஒரே அலைச்சல். ஓய்விருக்காது.

எங்காவது ஓரிடத்தில் தலித்துகளுக்கு எதிராகத் தாக்குதல் நடந்தது என்றால், உடனே ஒரு சுவரொட்டியைத் தயார் செய்வோம். அந்தச் சுவரொட்டியில் எங்கள் அரசியலைப் பேசுவோம். நானே சுவரொட்டி எழுதுவேன். துண்டறிக்கை தயாரிப்பேன். ரயில் நிலையம், பஸ் நிறுத்தங்கள், கடைவீதி என்று தெருத் தெருவாக அலைந்து, நானே அவற்றை ஒட்டுவேன். பல நேரங்களில் பசைக் கையை அலுவலகம் போய்க் கழுவியிருக்கிறேன். இரவு நேரங்களில் சுவர்களில் விளம்பரம் எழுதுவேன். மதுரையில் சுவர்களுக்கு வெள்ளையடித்து பெரிது பெரிதாக அம்பேத்கர் பெயரை முதலில் எழுதியது நாங்கள்தான். எவ்வளவோ நாள் அப்படி எழுதிவிட்டு தூக்கக் கலக்கத்தில் அந்தச் சுவரோரங்களிலேயே படுத்துத் தூங்கியிருக்கிறேன். ‘தலித் பேந்தர்ஸ்’ அமைப்பு சித்தாந்தரீதியாக நிறைய முரண்பாடாகத் தெரிந்தபோது, தமிழ்ச் சூழலுக்கேற்ற ‘விடுதலைச் சிறுத்தைகள்’அமைப்பைத் தொடங்கினோம்.

அப்போதெல்லாம் அரசியல் வாழ்க்கை ஒருகட்டத்தில் தலைமறைவு வாழ்க்கையை உருவாக்கிவிடும் என்றே நினைத்திருந்தேன். வெவ்வேறு அரசியல் தொடர்புகள் காரணமாக உளவுத் துறையினர் என்னைப் பின்தொடர்ந்துகொண்டே இருப்பார்கள். திருமணம் என்கிற ஒரு விஷயத்தைக் கற்பனையே செய்ய முடியாத காலம்.1999-ல் தேர்தல் அரசியலுக்கு வந்தோம்.அரசு வேலையை விட்டேன். நாளெல்லாம் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என்று ஊர் ஊராகப் பயணப்பட வேலைச் சுமைமேலும் பல மடங்கானது.பின்னாளில் அதற்கான காலம் கடந்துவிட்டது. அம்மா மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நான் போக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறேன்.

தலித் சமூக விடுதலை, போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?


போராட்டம் என்பது மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு யுக்தி. அதுவே தீர்வு காணும் வழியல்ல. மக்களை ஒரு அரசியல் சக்தியாக்குவதற்காக அணி திரட்டுகிறோம். எந்த அடிப்படையில் அவர்களிடம் நாளை உனக்கு விடுதலை கிடைக்கும் என்று சொல்வது? எது விடுதலை, எப்படி விடுதலை என்று புரியவைப்பது? தலித்துகள் இரட்டைப் போராட்டத்தை இயல்பாகவே எதிர்கொள்கிறார்கள். ஒன்று.. உணவு, உடை, உறைவிடம் தேடி.. வறுமையை எதிர்கொள்ளும் போராட்டம். மற்றொன்று.. சாதிய அடக்குமுறையை எதிர்கொள்ளும் போராட்டம். ஒரு ஆர்ப்பாட்டத்திலோ, பேரணியிலோ, பொதுக்கூட்டத்திலோ ஒரு எளியவன் பங்கேற்கிறான் என்றால், அவனுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. ‘நீ தனியாள் அல்ல; இவ்வளவு பெரிய சக்தி; உன்னால் ஒடுக்குமுறையை எதிர்க்க முடியும்’ என்பதே அந்தச் செய்தி. ஏதோ ஒரு கிராமத்தில் தனியாளாக ஒடுக்குமுறைக்கு அஞ்சி அஞ்சி வாழ்பவன் லட்சம்பேர் திரளக்கூடிய இடத்தில் நாமெல்லாம் ஒரே அமைப்பு, ஒரேகட்சி என்று நினைக்கும்போது அவனுக்குள் ஏற்படும் தன்னம்பிக்கையே அரசியல்ரீதியான தலைநிமிர்வைக் கொடுக்கும். அமைப்பையும் அரசியலையும் பயன்படுத்தி பிரச்சினையை எதிர்கொள்ளலாம் என்ற துணிவைக் கொடுக்கும்.

அரசிடம் சாதாரணமாக ‘எங்களுக்குப் பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுங்கள், வேலைவாய்ப்பு கொடுங்கள், கடனுதவி கொடுங்கள்’ என்று கோரிக்கை வைப்பதையே எடுத்துக்கொள்ளுங்கள். பலருக்குப் பஞ்சமி நிலம் என்றாலே என்னவென்று தெரியாது. ஒரு போராட்டத்தில் அவனை ஈடுபடுத்தும்போது, எதற்காக இங்கே வந்துள்ளோம் என்ற கேள்வி எழும். பஞ்சமி நிலம் என்றால் என்னவென்று தெரியவரும். நிலவரலாறு, அரசியல் அமைப்பு, அரசு இயங்கும் முறை, அரசை யாரெல்லாம் நடத்துவது எல்லாம் தெரியவரும். மக்களை அரசியல்படுத்துவது, போராட்ட வழிதான். போராட்டம் என்பது விடுதலைக்கான தீர்வு அல்ல.. தீர்வை நோக்கிய வழி.

போராட்டங்களே கள அரசியலைச் சொல்லித்தரும் கல்வி என்பது சரி. எனினும், வெறும் மேடைப் பேச்சுகள் வாயிலாக மட்டும் எல்லாவற்றையும் சொல்லித் தந்துவிட முடியுமா?  ஒரு சமூகத்தின் விடுதலைக்கான மிக முக்கியமான சாவி கல்வி. திராவிட இயக்கம் வளர்ந்தபோது கிராமத்துக்குக் கிராமம் படிப்பகங்கள் திறக்கப்பட்டன. சாமானிய மக்களிடம் அது ஒரு அறிவு எழுச்சியை உருவாக்கியது. அப்படியான பள்ளிக்கூடங்களுக்கு அப்பாற்பட்ட கல்வியைத் தருவதில் நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் அக்கறை என்ன?
 

அம்பேத்கர், ‘கற்பி, போராடு, ஒன்றுசேர்’ என்கிறார். சமூக விடுதலைக்கான அடிப்படையே கல்வியில் தொடங் குகிறது என்பதை முழுமையாகவே உணர்ந்திருக்கிறோம். நேரடியாக, முழுவீச்சில் இப்பணியை எங்களால் மேற்கொள்ள முடியாமல் போனாலும் விசிகவில் கல்வி, பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் என்ற ஒரு துணை அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். இதனுடைய அடிப்படையான பணி, எல்லாக் கிராமங்களிலும் அம்பேத்கர் படிப்பகங்களை உருவாக்குவது. அங்கு நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்ளும் வகையில் நாளேடு கள், வார ஏடுகள், புத்தகங்களை வாங்கிப் போடுவது, ஏழை எளிய பிள்ளைகளுக்கு டியூஷன் கொடுப்பது, உயர் கல்விக்கு உதவுவது. நிறைய செய்ய நினைக்கிறோம். பொருளாதாரம் பெரிய தடையாக இருக்கிறது.

பொருளாதாரம் தொடர்பாகப் பேசும்போது ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை நாடார் சமூகம் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட தலித் சமூகம்போலக் கீழ்நிலையில் இருந்தது. இன்றைக்கு அந்தச் சமூகம் தலையெடுத்து நிற்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் முன்னெடுத்த சுயஉதவி மகமை முறை. சமூகத்தில் முன்னேறியவர்களும் முன்னேறுபவர்களும் தமக்குள் ஒரு வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தி, அப்படித் திரட்டும் நிதியைக் கொண்டு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என்று சமூக முன்னேற்றக் கட்டமைப்புகளை உருவாக்கும் வழக்கம் நாடார் சமூகத்திடம் இன்றைக்கும் இருக்கிறது. சாதிய அடுக்குத்தட்டில் இரு சமூகங்களையும் ஒன்றாக வைத்தோ, அரசிடம் கோரும் உரிமைகளை மறுதலித்தோ இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்கான பல்வேறு வழிகளில் இதுவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா? தலித் சமூகத்தில் இப்படியான விஷயங்கள் நடப்பதாகத் தெரியவில்லை. காந்தியின் ‘அரிஜன சேவா சங்கம்’ தலித்துகளின் பொருளாதார மேம்பாட்டுக்குச் சில ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுத்த வரலாறு உண்டு. அம்பேத்கரிய இயக்கங்கள் எதுவும் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. விசிகவும் இதை யோசிக்கவில்லை என்றே தோன்றுகிறது… 


நீங்கள் சொல்லக்கூடிய இந்தப் பணி மிகமிக முக்கியமானது. ஆனால், ஒரு அரசியல் இயக்கம் இவற்றைச் செய்ய முடியாது. சமூக அமைப்புகள் செய்ய வேண்டும். இந்தச் சமூகத்தின் சமூக இயக்கங்களுக்கோ அப்படியான ஒரு புரிதலே இன்னும் உருவாகவில்லை என்பதுதான் துயரம். இன்னொரு சிக்கலும் இருக்கிறது. காலங்காலமாக இந்தச் சாதிய ஒடுக்குமுறைச் சமூகம் ஒரு தலித் மீது திணித்திருக்கும் அடக்குமுறைகள் கிட்டத்தட்ட ஒரு தண்டனைக் கைதி மனநிலையை அவனுக்குள்ளே உண்டாக்கிவிடுகிறது. இந்தச் சமூக அடையாளமே வேண்டாம் என்று தப்பி ஓடும் மனநிலையையே அவர்களுக்கு இந்தச் சமூகம் பரிசளித்திருக்கிறது.

நாடார் சமூகமும் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டது என்றாலும், தலித்துகளைப் போல முற்றிலுமாக அவர்களை இந்து மத வளையத்துக்குள்ளிருந்து சாதியம் தள்ளிவைக்கவில்லை. மேலும், அவர்கள் சமூக விடுதலையைக் கையில் எடுத்தபோது, இந்து மதத்துக்குள்ளான மாற்றமாக அது இருந்ததால் இந்துத்துவவாதிகளின், ஏனைய ஆதிக்கச் சாதிகளின் எதிர்ப்பு வேலைகள் அங்கே இல்லை. ஆனால், நாங்கள் சாதியத்தை எதிர்க்கிறோம், சாதி ஒழிப்பை முன்னிறுத்துகிறோம் என்று வருகிறபோது, இந்து மதம் இதனால் பாதிப்புக்குள்ளாகும்போது தலித்துகளை எல்லோருமே குறிவைக்கிறார்கள்.

ஒரு ஊரில் பலசரக்குக் கடை, சாப்பாட்டுக் கடை, மருந்துக் கடை என்று ஒரு நூறு கடைகளை எடுத்துக்கொள்ளுங்களேன். எங்காவது தலித்துகள் கடை உரிமையாளராக உட்கார்ந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறதா? அரிது. மிகக் குறைந்த முதலீட்டில் ஒரு டீக்கடையையோ, பெட்டிக் கடை யையோகூட தலித்துகளால் தொடங்க முடியாது. சேரிக்காரன் கடை என்பார்கள். ஒதுக்குவார்கள். வாய்ப்புக் கிடைக்கும்போது அடித்து நொறுக்குவார்கள். அப்படி மீறி வைப்பவன் தலித் அடையாளத்துடன் கடை வைத்து எங்கே மகமை அமைப்பது?

அந்நியமாக்குதல் என்ற நீண்ட கால ஒடுக்குமுறையே இதற்குக் காரணம். 2,000 ஆண்டுகளுக்கு முன் எப்படி ஒரு தலித்தை ஆதிக்கச் சாதிகள் பார்த்தனவோ அப்படித்தானே இன்றைக்கும் பார்க்கின்றன? இவன் யாருடனும் பண்பாட்டுரீதியிலோ, பொருளாதாரரீதியிலோ, அரசியல்ரீதியிலோ இணைய முடியாது. ஒரு ஆண்டான் அடிமையாக, வேலையாளாகத்தான் உறவில் இருக்க முடியும். இதற்காக இன்றிருக்கக் கூடிய யாரையும் நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. இந்த அமைப்பு காலங்காலமாக அப்படி நுட்பமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அம்பேத்கர் வந்த பிறகு, இடஒதுக்கீடு வந்தது. சமூக நீதிக் கோட்பாடு வலுப்பெற்ற பிறகு ஓரளவுக்குக் கல்வி, ஓரளவுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. இன்னும் 10% கூடத் தன்னிறைவு பெறாத ஒரு சமூகம் தனக்குள் உதவிக்கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், அப்படியான உதவிக்கொள்ளும் முறை கட்டாயம் வர வேண்டும். இந்தச் சமூகத்தின் கடைசி ஏழையும் மேலே ஏறிவர ஒவ்வொருவரும் ஏனையோரைக் கைதூக்கிவிட வேண்டும். ஒரு அரசியல் இயக்கம் இதற்கான துணிச்சலையும் சூழலையும் உருவாக்க முடியும் என்று நினைக்கிறேன். அந்தப் பணியை இங்கே விசிக செய்யும்.

இன்றைய சூழலில் ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து காந்தியை எப்படிப் பார்க்கிறீர்கள்?


நான் பள்ளியில் படித்தபோது காந்தியை மிகவும் நேசித்தேன். அவருடைய சுயசரிதையைப் படித்திருக்கிறேன். அம்பேத்கரைப் படிக்கத் தொடங்கிய பிறகு காந்தியை ஒரு தியாகசீலராகப் பார்த்தாலும்கூட, பெரும் சிந்தனையாளராகப் பார்த்தாலும்கூட அவர் இந்துத்துவத்தின் பாதுகாவலராக இருந்திருக்கிறார் என்று உணர்ந்தேன். தலித்துகளுக்கு அவர் எதிரி என்று சொல்ல மாட்டேன். அதேசமயம், தலித் விடுதலை தொடர்பான அவருடைய அக்கறைகள் இந்து மதப் பாதுகாப்பையும் நல்லெண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்டவை என்றே நினைக்கிறேன்.

சாதிய விடுதலை தலித் மக்கள் ஒருங்கிணைவால் மட்டுமே சாத்தியமாகிவிடும் என்று நம்புகிறீர்களா? 


அப்படி எப்படி நினைக்க முடியும்? சாதிய விடுதலைக்காகப் பேசும், போராடும் ஒவ்வொருவரையுமே ஜனநாயகச் சக்தியாகத்தான் நாம் பார்க்க வேண்டும். தலித் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதும் சாதிக்கு எதிராகப் பேசுவதும் வெறும் இரக்க சிந்தனை அல்லது நல்லிணக்க எண்ணங்களால் மட்டுமே கைகூடுவது அல்ல. வரலாற்றுப் பின்னணியில் சமகாலப் பிரச்சினைகளை அணுகும் பார்வையும் புரிதலும் அதற்குத் தேவைப்படுகிறது.

ஒரு சம்பவம் நடக்கிறது என்றால், இதிலே யார் மீது தவறு? தலித் மீது தவறா; தலித் அல்லாதவர் மீது தவறா; தலித் தவறு செய்திருக்கிறான் என்றால் அவன் மீது நடவடிக்கை எடு என்று அணுகுவது சாதியத்தை வெறுமனே சட்டம், ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கும் பார்வை. தலித்துகளிடமிருந்து சத்தம் வந்தால், அதைச் சமூக அமைதிக்கு எதிராகப் பார்ப்பவர்கள் அந்த அமைதி எத்தகைய அடக்குமுறை மற்றும் அநீதியின் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் போலித்தனமான அமைதி என்பதை யோசிப்பதில்லை. இந்தச் சமூகம் இந்த நிலையிலிருக்க இன்றைக்கு யார் காரணம் என்கிற கேள்வியினூடேதான் தலித் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியும். அதனூடேதான் சமத்துவத்தையும் அதற்கு அடிப்படையான சாதி ஒழிப்பையும் நோக்கி நகர முடியும். இப்படிச் சாதி ஒழிப்புக் குரலோடு வரும் ஒவ்வொருவருக்காகவும் கை கோக்கநாங்கள் காத்திருக்கிறோம். அவர்களும்இணைந்துதான்சாதிக்கு எதிரான பெரும் போரை வென்றெடுக்க முடியும்.

தமிழகத்தில் இதுவரை வேறெந்த தலித் தலைவருக்கும் கிடைக்காத அரசியல் செல்வாக்கு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், விசிக இன்றைக்கும் பறையர் சமூகத்தின் பிரதிநிதியாகத்தான் இருக்கிறது. தேவேந்திரர்களோ, அருந்ததியர்களோ உங்களை முழுமையாக ஏற்கவில்லை. அருந்ததியர்கள் உங்களை மேலாதிக்கச் சாதியாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். தமிழகத்தில் பட்டியலினத்தில் மட்டும் 76 சாதிகள் இருக்கின்றன. அவர்களை ஏன் ஒருங்கிணைக்க முடியவில்லை? சாதிய அடுக்குமுறையைத் தலித்துகளாலும் மீற முடியாத சூழல் இருக்கிறதே ஏன்?


தலித் என்பது அரசியல் அடையாளத்துக்கான ஒரு சொல்லாடல். அது ஒரு தனி சாதியின் பெயரல்ல. நான் தலித் என்று சொல்லக்கூடிய சமூகப் பிரிவுகள் ஒவ்வொன்றும் தனித் தனிச் சமூக அடையாளங்களுடன் நீண்ட நெடுங்கால மாக வாழ்ந்து வரக் கூடிய சமூகக் குழுக்கள். எல்லா இனக் குழுக்ககளுக்குமான எல்லா இயல்புகள், பிரச்சினைகள் இந்தக் குழுக்களுக்கும் உண்டு. ஆக, இந்தக் குழுக்கள் எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்று கைகோத்துக் கொண்டுவரவும் சாதியத்துக்கு எதிராக முழுக்க அணிதிரட்டவும் வெறும் அரசியல் தளத்தில் மட்டும் அல்லாது பண்பாட்டுத் தளம் உள்ளிட்ட எல்லாத் தளங்களிலும் பணியாற்ற வேண்டியுள்ளது. அது ஒரு நீண்ட பணி.

ஒரு அமைப்பை ஒருவர் தொடங்கும்போது இயல்பாகவே அவருடைய தொடர்பு வளையங்களின் முதல் வளையமாக எது இருக்கிறதோ அந்த வளையத்துக்குள் இருப்பவர்களே முதல் கட்டத்தில் அந்த அமைப்பில் வெகு வேகமாக இணைத்துக்கொள்வார்கள். இது எனக்கும் விசிகவுக்கும் மட்டும் அல்ல; யாருக்கும் எந்த அமைப்புக்கும் பொருந்தும். இதைத் தவிர்க்க முடியாது என்றாலும் ஒருகட்டத்தில் இந்த வளையத்தை உடைத்தெறியவும் வேண்டும். இன்றைக்கு விசிகவில் அதுநடக்கிறது.

வெளிப்படையாகவும் ஆத்மார்த்தமாகவும் சொல்கிறேன், விசிகவை நான் பறையர் அரசியல் களமாக அணிதிரட்டவில்லை. வெறும் தலித் இயக்கமாக மட்டுமேகூட அணிதிரட்டவில்லை. ஆரம்பத்திலிருந்தே சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம், பெண் விடுதலை, பாட்டாளி மக்கள் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்த ஐந்தையும் மைய நோக்கமாகக் கொண்டே இயக்கத்தைக் கட்டமைத்தேன். இந்தக் கொள்கைகளை வைத்தே கொடியையும் வடிவமைத்தேன். இந்தக் கொள்கைகளை ஏற்கும் எவரும் கைகோக்கலாம் என்றேன். எப்போது முதல் முறை இப்படியான விமர்சனத்தை எதிர்கொண்டேனோ, அமைப்பின் பெரும்பான்மைப் பொறுப்புகளில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேனோ அப்போதே, 2008-ல் ஒரே நாளில் ஒட்டுமொத்த அமைப்பையும் கலைத்தேன். எல்லோரும் புதிதாய் விண்ணப்பம் கொடுங்கள் என்றேன். கட்சியின் மறுசீரமைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி தலித் அல்லாதவர்கள், சிறுபான்மையினர், பெண்கள் மூன்று பிரிவினர்களையும் பெருமளவில் கட்சிப் பதவிகளில் கொண்டுவந்தோம். இன்றைக்கு இந்த இயக்கத்தில் தேவர்கள், கவுண்டர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என எல்லாத் தரப்பினரும் இருக்கிறார்கள். இந்த இயக்கத்தை ஒரு பொது நீரோட்ட அரசியலில் இணைக்கவே விரும்புகிறேன். என் கனவும் அது.

நீங்கள் எல்லோருக்குமான பொது இயக்கமாக விசிகவை முன்னிறுத்துகிறீர்கள். சமூக நல்லிணக்கம் பேசுகிறீர்கள்.எவ்வளவோ இடங்களில் உங்கள் கட்சியினரின் சுவர் விளம்பரங்களில், ‘அடங்க மறுப்போம், அத்துமீறுவோம்; திமிறி எழுவோம், திருப்பி அடிப்போம்’ போன்ற வாசகங்களை அரிவாள் படத்துடன் சகஜமாகப் பார்க்க முடிந்திருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்ளச் சொல்கிறீர்கள்?


இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அந்த வாசகங்களை எழுதியவனே நான்தான். ‘அடங்கமறு… அத்துமீறு’ என்கிற முழக்கங்களை எழுதியபோது ஒரு சாதிய விடுதலை முழக்கமாக நினைத்தே எழுதினேன். அடிப்படையில் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான முழக்கங்களே அவை. அதை எழுதியவன் ஒரு தலித் என்பதாலேயே இன்று அவை தலித் அல்லாதோருக்கு எதிரான முழக்கங்களாகப் பார்க்கப்படுகிறது என்றால், அதில் என்ன நியாயம் இருக்கிறது? அதேசமயம், இப்படி அரிவாள் படங்களோடு அவற்றை சுவர் விளம்பரங்களில் வரைவார்கள் என்பது நாங்கள் எதிர்பார்க்காதது. நீங்கள் குறிப்பிடுவது உண்மை. கடந்த காலத்தில் தன்னியல்பாகப் பல இளைஞர்களிடம் இப்படியான வெளிப்பாடு வந்தபோது எனக்கே அது அதிர்ச்சியாக இருந்தது. அதை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. அவ்வாறு விளம்பரங்கள் எழுதுவதோ, துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் அச்சிடுவதோ கூடாது என்பதைத் திரும்பத் திரும்ப கட்சி நிர்வாகிகள் கூட்டங்களில் அறிவுறுத்தியிருக்கிறோம். இன்றைக்கு எங்கள் இயக்கத்தில் அப்படியான தொனியில் யாரும் எழுதுவதில்லை.

சாதி ஆணவக் கொலைகளின்போது பரப்பப்படும் பல விஷயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. உதாரணமாக, உடுமலை சங்கர் கொலைக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் சிலர், ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிப்பிட்டு ‘இனி எங்கள் சாதியைச் சேர்ந்த ஆண்களை வெட்டுவோம், பெண்களைக் கட்டுவோம் என்று பேசினால், இப்படித்தான் வெட்டப்படுவீர்கள்’ என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். இப்படியான சொல்லாடல்கள் தலித்துகள் மத்தியில் இருக்கின்றனவா? இதற்குப் பின்னால் விசிக இருக்கிறதா?


மிக அபத்தமான, ஆபத்தான, அபாண்டமான அவதூறு இது. எந்தவொரு குறிப்பிட்ட சாதியையும் இழிவுபடுத்தும் வகையிலோ, ஆத்திரமூட்டும் வகையிலோ நானோ விசிகவோ பேசியதில்லை. தலித்துகள் அப்படிப் பேசும் இயல்பினரும் இல்லை. விசிகவை தலித் அல்லாதோர் மத்தியில் ஒரு பொது எதிரியாகக் கட்டமைக்கும் வேலையைப் பலர் இன்றைக்கும் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படியான பேச்சுகளுக்கும் அவதூறுகளுக்கும் பின்னே நிறைய அரசியல் சதிகள் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியே இது. சக சமூகங்களின் இணக்கத்தை எதிர்பார்ப்பவர்கள் நாங்கள்; வெறுப்பைப் பரப்பும் காரியத்தில் எப்படி ஈடுபடுவோம்?

சமூகங்களிடையேயான இணக்கம் தொடர்பாகத் தொடர்ந்து பேசுகிறீர்கள். சாதி ஒழிப்புப் போராட்டங்களைத் தாண்டி ஏனைய சமூகங்களுடனான நல்லிணக்கத்துக்காக எடுக்கக் கூடிய முயற்சிகளில் தலித் இயக்கங்கள் எந்த அளவுக்குக் கவனம் செலுத்துகின்றன? நீங்கள் இதைக் கவனத்தில் கொண்டிருக்கிறீர்களா?



ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். தலித்து களால் பிற சமூகத்துக்கு எதிரான வெறுப்பு அரசியலைக் கையாள முடியாது. இயல்பிலேயே அதற்கு வாய்ப்பில்லை. பிற சமூகத்துக்கு எதிராகப் பேசுவது, செயல்படுவது என்பது இந்தக் கட்டமைப்பில் இயலாத ஒன்று. இங்கே நடப்பது என்ன வென்றால், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதே நல்லிணக்கத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது. தலித் வெறுப்பு கூடாது, தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை கூடாது என்று பேசுவதும், செயல்படுவதுமே நல்லிணக்கத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு அரசியல் கட்சியானது ஏனைய அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்படுவது என்கிற அடிப்படையில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியும், பேண முடியும். விசிகவைப் பொறுத்தவரையில், எந்த ஒரு சமூகத்துக்கும் எதிரான வெறுப்பு அரசியலை ஒருபோதும் முன்வைத்ததில்லை. சமூக நல்லிணக்கத்துக்காக எந்த நிலைக்கும் நாங்கள் செல்லத் தயாராக இருக்கிறோம். கடந்த காலத்தில் பாமகவுடன் நாங்கள் முயற்சித்த உறவுகூட ஒரு உதாரணம். உண்மையில், பலராலும் நாங்கள் கட்டம் கட்டப்பட்டிருக்கிறோம் என்பதே யதார்த்தம்.

சாதியப் பிரச்சினைகளில் பெரும்பாலும் தலித்துகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும், சில இடங்களில் தலித்துகள் தரப்பிலும் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அப்படியான தருணங்களில் ஏனைய சமூகங்கள் ஒரு தலித்தின் தவறை வரலாற்றுப் புரிதலின் அடிப்படையில் அணுக வேண்டும் என்பது சரி. நீங்கள் உள்ளுக்குள் அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறீர்களா? இதுபோன்ற சூழல்களில் உங்கள் தோழர்களிடம் நல்லிணக்கம் சார்ந்து எப்படிப் பேசுகிறீர்கள்?


ஒரு தலித் தவறிழைக்கும்போது, அதைக் கண்டிக்காமல் நாங்கள் கடந்து போகவே முடியாது. இது தவிர்க்க முடியாத ஒரு கடமை. எதற்கும் கட்டுப்படாமல் எப்படியும் நடந்துகொள்ளலாம் என்றிருந்தால், மிக மோசமான ஒடுக்குமுறை இந்தச் சமூகத்தின் மீது விழும். ஒரு தலித் இளைஞன் தவறு செய்தால், அவன் மீது காவல் துறையில் புகார் கொடுக்கலாம். சட்ட நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்கலாம். ஆதிக்க சாதிகளைப் பொறுத்தவரையில் தலித் பிரச்சினைகளில் அவர்கள் காவல் துறையை நாடுவதே இல்லை. எடுத்த எடுப்பிலேயே அவர்களாகவே தண்டனையைத் தீர்மானித்துவிடுவார்கள். அவ்வளவு மோசமான சாதிய சமூக இறுக்கம் இங்குள்ளது. இந்தச் சூழலில் தலித்துகள் ஒரு அத்துமீறலில் ஈடுபட்டால், நாங்கள் எப்படி அதை வேடிக்கை பார்த்திருக்க முடியும்? தன்னியல்பாகவே அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டிய, கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. நாங்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்திருக்கிறோம்; உணர்த்துகிறோம்.

விசிக கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுகிறதா? கட்சிக்கு நிதி திரட்டுவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டும்கூடச் சொல்லப்படுகிறது…


இங்கே கட்டப் பஞ்சாயத்து செய்வதற்குக்கூட ஒரு சமூகப் பின்னணி தேவை என்பதுதான் யதார்த்தம். அரசியல் செல்வாக்கும், அதிகாரிகளின் ஆதரவும் அதற்குத் தேவை. சமூகப் பின்னணி இல்லாமல், அரசியல் செல்வாக்கு இல்லாமல், அதிகாரிகளின் துணை இல்லாமல் இப்படிப்பட்ட கட்டப் பஞ்சாயத்துகளில் எவராலும் ஈடுபட முடியாது. இயல்பாகவே தலித்துகளுக்கு இந்தப் பின்னணி எதுவும் கிடையாது. உழைத்துச் சம்பாதித்து வாழ வேண்டும் என்று கருதுகிற ஒரு பொது ஒழுக்கத்தை நீங்கள் தலித் மக்களிடம் பார்க்க முடியும். குறுக்குவழியில் சம்பாதிக்க இயல்பிலேயே இவர்கள் அறிந்திருக்கவில்லை. விசிக தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் பொருளாதாரரீதியாகக் கடுமையான அழுத்தத்தைச் சுமந்தே அரசியலில் நீந்திவருகிறோம். உண்மையில், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்கள் பெரிய பெரிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பெரிய சாதிப் பின்னணியைக் கொண்டவர்கள், அரசிலும் அதிகாரத்திலும் செல்வாக்குப் பெற்றவர்கள். இது ஊரறிந்த உண்மை. நாங்கள் செய்வதெல்லாம் தலித்துகள் எங்கே ஒடுக்கப்படுகிறார்களோ அங்கே அவர்களுக்குத் துணையாகக் கேள்வி கேட்பது. விசிக மீது திட்டமிட்டுப் பரப்பப்படும் அபாண்டமான பழிகளில் இதுவும் ஒன்று. கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்களே இதன் பின்னணியில் இருக்கிறார்கள்.

ஒருபுறம் அம்பேத்கர், ஒருபுறம் பிரபாகரன். உங்களிடம் சித்தாந்தக் குழப்பம் இருக்கிறதோ? எதற்காகக் கேட்கிறேன் என்றால், ஒரு இயக்கம் முன்னிறுத்தும் வரலாற்றுப் பிம்பங்கள் அந்த இயக்கத்தின் அணுகுமுறையோடு மறைமுகத் தொடர்புடையது. காந்தியுடன் எவ்வளவோ முரண்பட்டாலும்கூட அம்பேத்கர் சத்தியாகிரக வழியையே போராட்ட வழியாகக் கொண்டிருந்தார். பிரபாகரனோ ஆயுதத்தின் மூலமாகவே எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்று நம்பியவர்…


குழப்பம் எல்லாம் ஒன்றுமில்லை. அம்பேத்கர் ஒரு போராளி. பிரபாகரன் ஒரு போராளி. இருவரின் வழிமுறைகளும் வெவ்வேறாக இருக்கலாம். அடிப்படையில் ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் மூன்றையும் எதிர்த்துப் போராடியவர்கள் என்பதே வரலாறு.

அம்பேத்கர் வாழ்ந்த காலத்தைவிடவும் இப்போது நாளுக்கு நாள் அவர் விரிந்து பரவ முக்கியமான காரணம், ஜனநாயக அரசியல்மயப்படுத்தப்பட்ட போராட்டப் பாதையை அவர் தேர்ந்தெடுத்தது. கையில் ஆயுதம் வைத்திருக்கிறோமா காகிதம் வைத்திருக்கிறோமா என்பதல்ல; நெகிழ்வுத்தன்மையற்ற அணுகுமுறை சமாதானத்தை அடைய உதவுவதில்லை என்பதையே வரலாறு நமக்குச் சொல்கிறது. உங்களுடைய அம்பேத்கர்-பிரபாகரன் முரண்பாட்டை சாதாரணமாகக் கடக்க முடியவில்லையே…


பிரபாகரனின் கால் நூற்றாண்டுப் போராட்டமே உள்நாட்டைத் தாண்டி விவாதிக்கப்படாத ஈழத் தமிழர் பிரச்சினையைச் சர்வதேசக் கவனத்துக்கு எடுத்துச் சென்றது. அனைத்துலக நாடுகளும் விவாதிக்கும் பிரச்சினையாக அதை உருமாற்றியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒடுக்கப்படும் ஒவ்வொரு சமூகமும், தனக்கேற்ற போராட்டப் பாதையை இயல்பாகத் தேர்ந்தெடுக்கும். இந்தியாவில் அப்படித்தான் தலித் சமூகம் அம்பேத்கரியப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. நான் முன்னரே சொன்னதுபோல, போராட்டம் என்பது தீர்வை நோக்கிச் செல்லும் வழிதானே தவிர, போராட்டமே தீர்வாகிவிடாது. எந்த வடிவப் போராட்டத்துக்கும் இது பொருந்தும். நெகிழ்வுத்தன்மையும் சமூகங்களிடையேயான இணக்கமான சூழலுமே சமாதானத் தீர்வை உருவாக்கும் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன்.

ஒருகாலத்தில் சாதி ஒழிப்புக் குரலின் மையமாக தமிழ்நாடு இருந்தது. பெரியார் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்திருந்தால், இன்னும் எவ்வளவோ தூரம் நாம் பயணித்திருக்க முடியும். பெரியாருக்குப் பிந்தைய இந்த நான்கு தசாப்தங்களில் மீண்டும் நாம் பின்னோக்கி நகர்வதாகவே தெரிகிறது. அரை நூற்றாண்டாக ஆட்சியிலிருக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும் வீழ்ச்சியும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாமா?


சாதி என்பது நீண்ட காலமாக நிறுவப்பட்டிருக்கிற, ஒரு தகர்க்க முடியாத கட்டமைப்பு. கட்டித்தட்டிப் போயிருக்கிற, எளிதில் தகர்க்கவே முடியாத வலுவான அமைப்பாக மாறியிருக்கிறது. இடையில் சில நூறாண்டுகள் சாதிக்கு எதிரான கருத்துகள் இங்கே அரும்பியுள்ளன. வள்ளுவர் சாதி இல்லை என்கிறார். அவ்வையார் சாதி இல்லை என்கிறார். சித்தர்கள் சாதியை எதிர்த்திருக்கிறார்கள். இப்படித் தொடர்ச்சியாக சாதி அமைப்புக்கு எதிரான கருத்துகள் பேசப்பட்டிருக்கின்றன. எனினும், சாதியை ஒழிக்க முடியவில்லை. அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் இந்த நூற்றாண்டில் சாதி அமைப்புக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள். ஆனாலும், சாதி அமைப்பின் செதில்களைப் பெயர்க்க முடிந்திருக்கிறதே தவிர, சாதியைக் கொல்ல முடியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரியார் இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தால் பார்ப்பனிய எதிர்ப்பு வலுப்பெற்றது. திமுக அதை எதிரொலித்தது. அவ்வளவுதான். தமிழகத்தின் சாதிய மறுஎழுச்சிக்கு திமுக, அதிமுகவின் மீது மட்டும் பழி சுமத்த முடியாது. மாறாக, இப்போது அடைந்திருக்கும் சமூகநீதி வெற்றிகளில் திராவிடக் கட்சிகளின் பங்கும் இருக்கிறது.

நீங்கள் திராவிட இயக்கச் செயல்பாடுகளை ஆக்கபூர்வமாக அணுகுவதால் கேட்கிறேன்.. சாதி ஒழிப்பில் திராவிடக் கட்சிகள் தீவிரம் காட்டியிருந்தால், விசிகவுக்கு இங்கே வேலையிருந்திருக்காது என்று எடுத்துக்கொள்ளலாமா? அதாவது, தேர்தல் அரசியலில் ஈடுபட்ட திமுகவும் பெரியாரின் திராவிடர் கழகம் அளவுக்குச் சாதி ஒழிப்பில் அக்கறை காட்டியிருந்தால் திருமாவளவன் இருக்கும் இடம் இன்றைக்கு வேறாக இருந்திருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா?
 

இந்தியாவில் தோன்றியுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் தலித் அல்லாத சமூகங்களைச் சார்ந்தவர்களால் உருவாக்கப்பட்டவை. எனவே, தலித் அல்லாத சமூகங்களின் நலன்க ளையே அவை முதன்மையாக்குகின்றன. வாக்குவங்கி அரசியலுக்காகவே தலித் சமூகத்தின் நலன்கள் அவ்வப்போது பேசப்படுகின்றன. தலித் அல்லாத சமூகங்களைச் சேர்ந்தவர்களே அக்கட்சிகளில் பெரும்பான்மையாகவும், அடிப்படையான சக்திகளாகவும் இருக்கின்றனர். தலித் அல்லாத சமூகங்களாலேயே அவை வழிநடத்தப்படுகின்றன. கட்டிக் காப்பாற்றப்படுகின்றன. எனவே, அவர்கள் தங்களுடைய நலன்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தலித்துகளின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்க முடியும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆகவே, விசிக போன்ற இயக்கங்கள் தோன்றுவது ஒரு வரலாற்றுத் தேவை.

ஆரம்ப காலத்தில் 'தேர்தல் பாதை திருடர் பாதை' என்று சொன்னவர் நீங்கள். தேர்தல் பாதைக்கு உங்களைத் திருப்பியது எது?
 

அதிகாரத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத இந்த மக்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்துவதற்கு இது முக்கியம் என்று நினைத்தோம். அதிகாரத்தில் பல வகை இருக்கிறது. நிர்வாக அதிகாரம் இருக்கிறது, பொருளாதார அதிகாரம் இருக்கிறது, கட்சி அதிகாரம் இருக்கிறது, ஆட்சி அதிகாரம் இருக்கிறது. கட்சியில் பல வகைகளில் அதிகாரம் இருக்கிறது. ஒன்றியச் செயலாளர்; அது ஒரு அதிகாரம், மாவட்டச் செயலாளர்; அது ஒரு அதிகாரம், கிளைச் செயலாளர்; அது ஒரு அதிகாரம். ஆட்சி அதிகாரத்தை விடுங்கள், கட்சி அதிகாரமே விளிம்புநிலை மக்களுக்கு எவ்வளவு எட்டாக்கனியாக இருக்கிறது! இன்றைக்கெல்லாம் பெரிய கட்சிகளில் எத்தனை தலித்துகள் ஒன்றியச் செயலாளர் பதவிகளில் இருக்கிறார்கள்? எத்தனை முஸ்லிம்கள் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கிறார்கள்? கணக்கெடுத்துப் பாருங்கள்.

கட்சி அதிகாரம் ஒருவனுக்குப் பொருளாதார அதிகாரத்தைத் தருகிறது. நான் தவறான முறையில் குறிப்பிடவில்லை. அரசியல் பின்னணியில் உள்ளவர்களே அரசு ஒப்பந்தங்களை எடுக்கிறார்கள். ஒருவர் நேர்மையான ஒப்பந்ததாரராக இருந்தும் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், எத்தனை தலித்துகளுக்கு ஒப்பந்த வாய்ப்புக் கிடைக்கிறது? கழிப்பறையைக் கழுவுகின்றவன் தலித்தாக இருக்கிறான், அந்தக் கழிப்பறையின் கல்லாப் பெட்டியில் காசு வாங்கிப் போடுகிறவன் எவனாகவோ இருக்கிறான். அந்த ஒப்பந்தத்தைக்கூட ஒரு தலித்தால் எடுக்க முடியவில்லை என்பதுதானே நிதர்சனம்?

ஒரு சிறிய குழுவில் நான் இயங்கியபோது, நான் முன்வைத்தது தேர்தல் புறக்கணிப்பு அரசியல். தேர்தலில் பங்கெடுக்காமல் ஒரு புரட்சிகரப் பாதையில் இயங்க வேண்டும் என்கிற அரசியலாகவே என் ஆரம்ப கால அரசியல் நோக்கம் இருந்தது. மக்களோடு நெருங்க நெருங்க என்னுடைய நிலைப்பாடும், செயல்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையில் மாறியது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறை இல்லாத அமைதியான ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்கள். அதற்கு நாடாளுமன்ற ஜனநாயகப் பாதை சிக்கல் இல்லாததாக அவர்களுக்குத் தோன்றுகிறது. இதை உணர்ந்தே, தேர்தல் அரசியலில் பங்கெடுப்பது என்ற முடிவை எடுத்தோம். எனவே, நான் மாறிவிட்டேன் என்பதைவிட, மக்கள் என் நிலைப்பாட்டை மாற்றிவிட்டார்கள் என்பதே சரி. அது சரியான முடிவு என்றே நினைக்கிறேன்.

இந்த 18 ஆண்டு காலத் தேர்தல் அரசியலில் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் பாடம் என்ன? அன்றைக்கு நீங்கள் யூகித்த அளவுக்குத்தான் இன்றைய அரசியல் இருக்கிறதா இல்லை அதைவிட மோசமாக அல்லது எளிதாக இருக்கிறதா? நீங்கள் எதை நினைத்து இங்கே வந்தீர்களோ, அந்த இலக்கை நோக்கி நகர முடிந்திருக்கிறதா?

மிகவும் கடினமானதொரு வாழ்க்கையாகத்தான் அரசியலை நான் பார்க்கிறேன். எந்தத் தளத்துக்குச் சென்றாலும், சாதி என்பது பெரிய இடர்ப்பாடாக இருக்கிறது. மைய நீரோட்டத்தில் இணைவதற்கான போராட்டம் பெரும் போராட்டமாக இருக்கிறது. ஆக, இது அவ்வளவு லகுவான பாதையாக இல்லை. இதையும் தாண்டி பொதுத்தளத்தில் நின்றாலும்கூட, தேர்தல் அரசியல் மிகவும் கடுமையானதுதான். எவ்வளவு நேர்மையாக உழைத்தாலும் அரசியல் களத்தில் நல்ல பெயர் சம்பாதிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இரு கூட்டணிகளிலும் இருந்திருக்கிறீர்கள். நெருங்கிப் பழகுவதில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் எப்படி? சாதிய மேலாதிக்கத்தை அங்கு உணர்ந்திருக்கிறீர்களா? இருவருக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடுகள் என்ன?
 

நாங்கள் தேர்தல் அரசியலில் 1999-ல் அடியெடுத்து வைத்தோம். மூப்பனாருடன் முதல் கூட்டணி. 2001-ல் அவர் அதிமுக அணிக்குச் சென்றபோது, நாங்கள் திமுகவுடன் வந்துவிட்டோம். 2001 முதல் 2004 வரை திமுக அணியில் இருந்தோம். 2006 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உருவானது. ஆறு மாதம் அவர்களுடன் இருந்தோம். ஜெயலலிதாவை அடிக்கடி சந்திக்கவோ, நீண்ட நேரம் உரையாடவோ வாய்ப்பே கிடைத்ததில்லை. ஓரிரு முறைதான் அவரைச் சந்தித்திருக்கிறேன். எனவே, அவரது பரிமாணத்தை நான் மதிப்பிட முடியாது. ஆனால், 2006-க்குப் பிறகு 2014 வரை திமுகவுடன் இருந்திருக்கிறோம். மொத்தம் 11 ஆண்டுகள். இந்தக் காலகட்டத்தில் பல முறை கருணாநிதியைச் சந்திக்கவும், நெடுநேரம் அவருடன் உரையாடவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

அரசியலைத் தாண்டியும் தனிப்பட்ட முறையில் ஒரு நெருக்கத்தை அவர் என்னிடத்தில் காட்டினார். என் உடல் நலம், எதிர்கால வாழ்க்கை தொடர்பாகவெல்லாம் அக்கறையோடு பேசியிருக்கிறார். கருணாநிதியைப் பொறுத்தவரை வெறும் அரசியல் ஆதாயம் என்றில்லாமல், எங்கள் மீது உண்மையாகவே ஒரு அக்கறையை வெளிப்படுத்துபவராக உணர்ந்திருக்கிறேன்.

இருவர் ஆட்சிக் காலகட்டங்களிலுமே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் அவற்றைத் தீர்ப்பதற்கான ஒரு கோரிக்கையோடு உங்களால் அவர்களை அணுக முடிந்திருக்கிறதா? பலன்கள் ஏதும் இருந்திருக்கின்றவா?
 

தலித்துகளுக்கு எதிரான வன்முறை இரு ஆட்சிகளிலுமே கடுமையாக நடந்திருக்கிறது. திமுகவுடன் நான் நெருக்கமாக இருந்த காலத்தில், தலித் மக்களின் பிரச்சினைகளை கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறேன். இயன்றவரை தலையிட்டு குறிப்பிடத் தக்க சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். குறிப்பாக பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடக்கவேயில்லை என்பதை மிகுந்த வேதனையோடு சொன்னபோது, அதற்காக சிறப்புக் கவனம் எடுத்து, தேர்தலை நடத்திக்காட்டினார். ஒருமுறை வன்முறை நடந்தபோது, திமுக சார்பில் ஒரு குழுவை அனுப்பி நடந்ததை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டபோது, ஒரு குழுவை அனுப்பி ஒரு விரிவான அறிக்கையை திமுக சார்பில் வெளியிட்டார். அதிமுகவோடு ஒப்பிடும்போது, திமுக ஆட்சியில் எங்கள் குறைகளைச் செவிமடுக்கிற நிலை இருந்தது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். ஆனால், தலித்துகளின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்குக்கூட சட்டசபையில் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. பொதுவாக, தலித் பிரச்சினைகளில் ஜெயலலிதா வெளிப்படையாக எந்தக் கருத்தையும் சொல்வதில்லை; கொடுமைகளைக் கண்டிப்பதில்லை; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதுமில்லை. முற்றிலும் அவர் விலகி நிற்பவராகவே இருந்திருக்கிறார், இருக்கிறார்.

இன்றைக்கு தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளுமே திட்டமிட்டு விசிகவிடமிருந்து விலகி நிற்பதை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. இதில் கருணாநிதியுடன் ஒரு நெருக்கமான உறவைப் பராமரித்தும்கூட உங்களால் திமுகவுடன் இணைந்திருக்க முடியவில்லை. எது உங்களைப் பெரிய கட்சிகளிடமிருந்து வெளியேற்றுகிறது?


வெளிப்படையாக எந்தக் கருத்து மோதலும், கசப்பான சம்பவங்களும் நடந்தேறவில்லை. தர்மபுரி வன்முறை வெறியாட்டத்துக்குப் பிறகு, ராமதாஸ் தலித்துகளையும் தலித் அல்லாதோரையும் எதிரெதிர் தரப்புகளாக நிறுத்துவதற்கான காய்களை நகர்த்தினார். தலித் வெறுப்பைத் தமிழகம் முழுமைக்கும் ராமதாஸ் தூவினார். தலித் வெறுப்புக்கான இலக்காக விசிகவைக் கட்டமைத்தார். திமுகவுக்கும் இயல்பிலேயே அச்சம் இருந்தது. எங்களை உடன் வைத்திருந்தால் அவர்களின் அரசியல் எதிர்காலம் பாழாகிவிடும் என்று அவர்கள் உணர்வதை அவர்களுடைய புறக்கணிப்புகள் வெளிக்காட்டியபோது நாங்கள் வெளியேறினோம்.

தேர்தல் அரசியலில் நாங்கள் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம் - நாம் எவ்வளவு நெருக்கமான ஒரு உறவைப் பராமரித்தாலும், பெரிய கட்சிகள் அதிகாரம் என்று வரும்போது விளிம்புநிலை மக்கள் அரசியலைத் தூக்கியெறிந்துவிட்டு போகத் தயங்காது என்பது! இந்தப் பாடத்துக்குப் பின்தான் விளிம்புநிலை அரசியலைப் பேசும் கட்சிகளை ஒருங்கிணைத்து, குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தின் கீழ் கூட்டணி அமைத்து, ஒரு கூட்டாட்சிக்கான முயற்சிகளைத் தொடங்குவது எனும் முடிவுக்கு வந்தோம்.

தனிக் கட்சி ஆட்சிமுறையைவிடக் கூட்டாட்சியே சிறப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

 

ஆமாம். இந்தியா போன்ற பல்வேறு இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில், எல்லாத் தரப்பினருக்குமான அரசியல் அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால், அதுதான் இருப்பதிலேயே நல்ல வழி. மத்தியில் கூட்டாட்சி இருந்தபோது, தனிக் கட்சி ஆட்சியைக் காட்டிலும் அது மேம்பட்டதாகத்தானே இருந்தது?

ஒரு கட்சி ஆட்சி முறையில் பல கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பில்லை. அரசின் கொள்கைகளை, ஆட்சியின் கொள்கைகளைத் தீர்மானிக்கிற இடத்தில் அமர்ந்து விவாதிக்கக் கூடிய வாய்ப்பு பிற கட்சிகளுக்கு வழங்கப்படுவதில்லை. கூட்டாட்சி என்றால், ஒவ்வொரு முறையும் அரசு தொடர்பான கொள்கை முடிவை எடுக்கிறபோது, ஆட்சி தொடர்பான கொள்கை முடிவை எடுக்கிறபோது அமைச்சரவைக் கூட்டத்தில் பேச வேண்டும். அமைச்சரவையில் பேசுகின்றபோது மாற்றுக் கருத்து உள்ளவர்களும் அங்கே இருப்பார்கள். உதாரணமாக, கம்யூனிஸ்ட்டுகள் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரவையில் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் விரோதச் சட்டங்களை அத்தனை எளிதாக நிறைவேற்ற முடியுமா?

செல்வம் ஓரிடத்தில் குவிந்தால் அது முதலாளித்துவம். அதிகாரம் ஓரிடத்தில் குவிந்தால் அது எதேச்சாதிகாரம். இந்த அதிகாரம் ஒரே இடத்தில் குவிகிறபோது எல்லோருமே ஹிட்லர்களாகத்தான் மாறுவார்கள். நாளை திருமாவளவனிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்தாலும் அவனும் அப்படி மாறக்கூடும். அது நடக்கக் கூடாது. அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அதற்குக் கூட்டாட்சி முறை உதவும். இது பன்மைத்துவத்தையும் பிரதிபலிக்கும்.

நீங்கள் யோசித்துப்பாருங்கள்.. இன்றைக்கு திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம், அடுத்து எங்கள் கைகளில் ஆட்சியைக் கொடுங்கள் என்று சொல்லும் தனிக் கட்சிகள் யார்? யாருடைய தரப்பு அவர்கள்? இதைக் கடலோடிகள் தரப்பு சொல்ல முடியுமா? இருளர்தரப்பு என சொல்ல முடியுமா? குறவர்களால் சொல்ல முடியுமா? இவர்களுக்கெல்லாம் எப்போது அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது? வலிமையானவர்களும் பெரும்பான்மையினரும் மட்டுமே போட்டி போட்டுக்கொண்டி ருந்தால், வலிமையற்றவர்கள், சிறுபான்மையினர் எப்போது போட்டியில் பங்கேற்பது? எப்போது அதிகாரத்துக்கு வருவது?

ஒரு சமூகத்தின் பல்வேறு தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு கூட்டமைப்பும் ஜனநாயகத்தைக் கட்டாயம் மேம்படுத்தும். ஆனால், இந்தியாவை பொறுத்தளவில் நம்மை சாதிரீதியாகப் பிரித்துவிட்டால் இன்றைக்குப் பெரும்பான்மை இனமாகத் தம்மைக் கருதிக்கொள்கிறவர்கள் கூட சிறுபான்மையினங்களின் தொகுப்பாகவே இருப்பார்கள். சிறுபான்மைச் சமூகங்களின் கூட்டாட்சி அரசியலுக்கு எதிர்வினையாக, பெரும்பான்மையினமாக நாம் குறிப்பிடும் சமூகங்களும் கூட்டமைப்பு அமைத்தால் இப்போதிருக்கும் நிலைமையைவிடவும் மோசமான சூழலை அது உருவாக்கி விடாதா? அப்படி ஒரு அபாயமும் இருக்கத்தானே செய்கிறது?
 

இது ஒரு நல்ல கேள்வி. அப்படியான அபாயம் நிச்சயம் இருக்கிறது. சிறுபான்மைச் சமூகங்கள் அமைக்கும் இந்த கூட்டாட்சி அரசியலின் மிகப்பெரிய சவாலும் பொறுப்பும் இது என்று சொல்வேன். நம்முடைய நோக்கம் இருதரப்புகளாகக் கொம்பு சீவி நிற்பதல்ல. அடிப்படையில் நாமும் அவர்களும் ஒன்றுகலப்பது. சிறுபான்மை இனங்களின் குரல்களும் எதிரொலிக்கும் ஒரு அரசாங்கம் ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்துவதில் முக்கிய கவனம் எடுத்துக்கொள்ளும். அதன் பொறுப்புகளிலேயே முக்கியமானது மாற்றுத்தரப்பிலும் இந்த ஜனநாயக விழுமியங்களை வளர்த்தெடுப்பதுதான். சுருக்கமாக சொல்வதானால் நீங்கள் ஒரு சாதி,மதம். நான் ஒரு சாதி, மதம் என்று பிரிந்து நிற்கப்போவதில்லை. நமக்குள் இருக்கும் இந்த அடையாளங்களை மீறி நமக்குள் ஒன்றுகலப்பதுதான். சமத்துவம்தான் நோக்கமே தவிர, ஆதிக்கம் அல்ல.

உன்னதமானது என்றாலும் இது அவ்வளவு சீக்கிரம் நடக்கிற காரியமா?
 

ஓராண்டுக்கு முன் இதை நான் சொன்னபோது, "எப்போதோ வெற்றி பெறப்போகும் ஒரு தத்துவத்துக்காக இப்போது தோற்பதற்குத் தயாராகிவிட்டார் திருமாவளவன்" என்று சொன்னார் பீட்டர் அல்போன்ஸ். உண்மைதான். இது எளிதில் ஜெயிக்கக் கூடிய விஷயம் அல்ல. ஆனால், இது ஒரு வரலாற்று நிர்ப்பந்தம். ஒடுக்கப்பட்டவர்களுக்காக விளிம்புநிலைச் சமூகத்தினருக்காகப் பாடுபடுகின்ற யாரும் இந்தக் கோணத்தில்தான் சிந்திக்க முடியும்.

இன்றைக்கு இருக்கிற இந்த அரசியலில், இன்றைக்கு இருக்கிற இந்தத் தேர்தல் முறையில் விளிம்புநிலைச் சமூகம் எந்தக் காலத்திலும் அதிகார வலிமையைப் பெற முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. இன்றைய முறையில் தனிப்பட்ட வகையில் ஒரு ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமர் நாற்காலி வரை உட்கார்ந்து பார்க்கலாம். ஆனால், சேரிகள் சேரிகளாகவேதான் இருக்கும். குறைந்தது ஆயிரம் தலைமுறைகள் அதிகாரத்தோடு தொடர்பில்லாமல் கிடந்திருக்கிறோம். நாளைக்கே அதிகாரத்தைக் கைப்பற்றித்தான் ஆக வேண்டும் என்று என்ன அவசரம் இருக்கிறது?

பெரிய கட்சிகளோடு சேர்ந்து நின்று நானும் இரண்டரை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக் கிறேன். ஐந்தாண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். என்ன சாதிக்க முடிந்தது? என் உணர்வுகளை அங்கே வெளிப்படுத்த முடிந்ததா? நான் விரும்பிய திட்டங்கள் எதையேனும் கொண்டுவர முடிந்ததா? பள்ளிக்கூடப் பிள்ளையைப் போல் மேஜையைத் தட்டிவிட்டு வர முடிந்ததே தவிர, எதையும் அங்கே சாதிக்க முடியவில்லை. பெரும்பான்மையின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதைவிட சிறுபான்மைகளின் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இருப்பது நிச்சயம் பலன் அளிக்கக் கூடியது.

தேர்தலில் அம்பேத்கர் அன்று தலித்துகளுக்கு முன்மொழிந்த தனித்தொகுதி ஒதுக்கீட்டு முறை, இன்றைக்கு நடைமுறையில் உள்ள தனித்தொகுதி ஒதுக்கீட்டு முறை இரண்டையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
 

இப்போது நடைமுறையில் உள்ள தனித்தொகுதி முறை என்பது எந்த வகையிலும் தலித் மக்களுக்கான பாதுகாப்பை வழங்கக் கூடியதாகவோ, அவர்களின் பிரச்சினைகளைச் சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பேசக்கூடியதாகவோ அமையவில்லை. தலித்துகளுக்கு இத்தனை இடங்கள் தனித்தொகுதிகளாக அளிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், ஒரு கட்சி ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, ஒரு தலித் பிரதிநிதி அங்கு சாதிக்க முடிவது என்ன? அவர்களால் சுதந்திரமாக தலித் மக்களின் பிரச்சினைகளையே பேச முடியாத நிலைதான் யதார்த்தம். உதாரணத்துக்குச் சொல்கிறேன். சிதம்பரம் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தனித் தொகுதி. நான் அங்கு மக்களவைத் தேர்தலில் 2.57 லட்சம் ஓட்டுகள் வாங்கினேன். தலித் மக்களுடைய 95% ஓட்டு எனக்கு விழுகிறது. ஆனால், பெரும்பான்மை தலித் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் ஆதிக்கச் சாதி ஓட்டுகளை வாங்கி அங்கு ஜெயிக்கிறார். கோளாறு இங்கேயே ஆரம்பமாகிவிடுகிறது.

இப்படியெல்லாம் ஜெயிப்பவர்கள் நாடாளுமன்றத்துக்குச் சென்றாலும் அவர்களுடைய கட்சிக்குக் கட்டுப்பட வேண்டிய நிலையில் எதுவுமே மக்களுக்காகப் பேச முடிவதில்லை. இந்த ஆட்சியில் எத்தனை ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன? அதிமுகவில் 28 தலித் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருவராலாவது இந்த விஷயத்தைச் சட்டமன்றத்திலோ, கட்சிக்குள்ளோ விவாதிக்க முடிந்திருக்கிறதா? இப்படியான பிரதிநிதித்துவ முறை எந்த வகையில் தலித்துகள் வாழ்க்கையை மேம்படுத்தும்?

அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் அன்றைக்கு வலியுறுத்திய இரட்டை வாக்கு முறை - அதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதியை ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டும் பொதுவான பிரதிநிதியை எல்லோருடனும் சேர்ந்து தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டும் அளிக்கும் முறை - இருந்திருந்தால் இன்றைய நிலை வேறாக இருந்திருக்கும்.
 

இதை இன்னொரு வகையிலும் அதாவது தலித்துகள் அல்லாதோருடனும் தலித்துகள் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் இரு தரப்புக்குமான நிர்ப்பந்தமாகவும்கூட இப்போதைய தேர்தல் முறையைப் பார்க்கலாம் அல்லவா?
 

அப்படி நடக்கவில்லையே? சாதியத்துக்கு எதிராகப் பேசும் ஒரு தலித்தை ஒட்டுமொத்த தலித் அல்லாதோருக்கும் எதிரியாகக் கட்டமைக்கும், பார்க்கும் அணுகுமுறைதானே இங்கு இருக்கிறது?

நிச்சயம் இது மிகச் சிக்கலான அதேசமயம், கடந்தே தீர வேண்டிய தடை. இந்தச் சவாலை எதிர்கொள்ள உங்களுடைய வியூகம் என்ன?
 

ஆரம்பக் காலத்தில் இரட்டை வாக்குரிமை உள்ள தனித்தொகுதி வேண்டும் என்று வலியுறுத்தி நாங்களே மதுரையில் இரட்டை வாக்குரிமை மாநாடெல்லாம் நடத்தினோம். அது இன்றைய சூழலின் அவலத்தைக் கொண்டுசெல்வதற்காக எடுத்த ஒரு முயற்சி. இன்றைய சூழலில், அதைப் பற்றிப் பேசுவதில் பலனில்லை. தலித்துகளைப் பெருமளவில் அரசியல் சக்தியாகத் திரட்ட வேண்டும்; அதோடு சாதிய விடுதலை இல்லாமல் இங்கு சமூக விடுதலை சாத்தியம் இல்லை என்று நம்பும் தலித் அல்லாத ஜனநாயகச் சக்திகளையும் ஒரு குடைக்குள் திரட்ட வேண்டும். அவற்றின் மூலமே இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறோம்.

தமிழகத்தில் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை எல்லாம் கூட்டினால், எப்படியும் 40% வரும். ஆனால், விளிம்புநிலைச் சமூகங்களுக்காகப் பேசுபவர்களால் தனியே 2% வாக்குகளைக்கூட இதுவரை வாங்க முடிந்ததில்லை. இதற்கான காரணம் என்ன?


அவர்களுடைய சமூக நிலையே காரணம். உதாரணமாக, தலித்துகளையே எடுத்துக்கொள்வோம். தமிழகமெங்கும் பரந்துபட்டு இருந்தாலும், அவர்களுக்குள் மண உறவைத் தாண்டிய உறவுகளோ உரையாடல்களோ இல்லை. தனித் தனித் தீவுகளாகவே அவர்கள் இருக்கிறார்கள். அரசியல்ரீதியாக அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். இதை ஒரு கட்சி செய்ய வேண்டும் என்றால், அதற்குக் கொள்கையும் கோட்பாடுகளும் மட்டும் போதாது. அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கப் பொருளாதாரம் வேண்டும். அப்படியான பொருளாதார சக்தியைக் கொண்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பேசும் கட்சிகளில் இயல்பாகவே கிடையாது. ஆக, பொருளாதாரம் பெரிய குறை.

நாங்கள் பெற்றிருக்கும் இந்த வாக்கு வீதம் தமிழகம் முழுவதும் நாங்கள் தேர்தலில் நின்று வாங்கியது அல்ல. எங்களுக்குப் பெரிய கட்சிகள் வழங்கும் குறைந்த இடங்களில் போட்டியிட்டுக் கிடைத்ததை அடிப்படையாகக் கொண்ட கணக்கு இது. இங்கே ஒரு கட்சியைப் பெரியதாக எது தீர்மானிக்கிறது? பொருளாதாரம். இந்தத் தேர்தல் முறையே ஒரு முதலாளித்துவச் சமூக அமைப்பு முறை எப்படியிருக்கிறதோ அப்படித்தான் இருக்கிறது. ஆக, தேர்தல் அரசியலிலும் ஒடுக்கப்பட்டவர்கள் அரசியலைப் பேசும் இயக்கங்களை அது கீழே தள்ளுகிறது.

முக்கியமான புள்ளியை நோக்கி நாம் நகர்கிறோம் என்று நினைக்கிறேன். இந்தத் தேர்தல் அரசியல் முறை முதலாளிகளுக்குச் சாதகமானதாக இருப்பது உண்மை. விளிம்புநிலைச் சமூகங்களின் அரசியல் பேசுபவர்கள் முதலாளித்துவத்தோடு நெருக்கமாக இருக்கும் பெரிய கட்சிகளோடு போட்டி போட முடியாது என்பதும் உண்மை. அப்படியென்றால், இதை எப்படி எதிர்கொள்வீர்கள்?


அதற்காகத்தான் தேர்தல் முறையில் சீர்திருத்தம் கோருகிறோம். எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்பதையும், வேட்பாளர்களுக்கெனச்
சில வரையறைகளையும் உருவாக்க வேண்டும். அவர்களுடைய செலவை அரசே ஏற்றுக்கொள்வதுடன், அதற்கு மேல் ஒரு தம்படி பைசா செலவு செய்தால்கூட அந்த வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும். இந்த மாற்றம் நடந்தால் மட்டுமே பணமுள்ளவர்கள் கைகளிலிருந்து எளிய மக்களின் கைகளை நோக்கியும் அரசியலதிகாரம் நகரும்.

தேர்தல் முறையில் மாற்றம் தேவை என்பது சரி. என் கேள்வி என்னவென்றால், முன்னதாக அமைப்புரீதியாக எதிர்கொள்ள மாற்று அரசியல் பேசும் நீங்கள் என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள் என்பதுதான். இந்தத் தேர்தல் முறையில் ஏனைய கட்சிகள் செல்லும் இதே பாதையில் போனால், எவரையும் ஊழல் இயல்பாக வந்து ஒட்டிக்கொள்ளத்தானே செய்யும்? இதற்கு மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்றால், முதலில் கட்சி அமைப்பில் கம்யூனிஸ்ட்களைப் போல ஒரு மாற்றம் வேண்டும் இல்லையா? நன்கொடைகள், கட்சி உறுப்பினர்களிடம் லெவி போன்ற நிதித் திரட்டு முறை; கட்சி ஊழியர்களுக்கு ஊதியம், அவர்களுடைய செலவுகளைக் கட்சியே ஏற்பது போன்ற ஒரு அமைப்பு முறை. இன்றைக்கு நீங்கள் கிட்டத்தட்ட பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக மாதிரியில்தான் பயணிக்கிறீர்கள். எளிய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு கட்சி இப்படியான செலவாளிப் பாதையில் எப்படி நேர்மையாகப் பயணிக்க முடியும்?

 

அப்படி ஒரு முறையை நோக்கி நகர்ந்துதான் ஆக வேண்டும். இப்போது நாங்கள் கம்யூனிஸ்ட்களைப் போல, முறையாகக் கட்டமைக்கப்பட்ட நிதியாதார முறையைக் கையாளவில்லை என்றாலும், கிட்டத்தட்ட அப்படியான முறையையே கையாள்கிறோம். அரசுப் பணிகளில் உள்ளவர்கள் மாதந்தோறும் ஆயிரம், இரண்டாயிரம் என்று தருபவர்கள் இருக்கிறார்கள். சிறு சிறு தொழில்களில் இருப்பவர்கள் ஒரு கட்சி நிகழ்ச்சி நடக்கிறது என்றால், சாப்பாட்டுச் செலவைச் சிலர் பகிர்ந்துகொள்வது, மேடைச் செலவுகளைச் சிலர் பகிர்ந்துகொள்வது, வாகனச் செலவுகளைச் சிலர் பகிர்ந்துகொள்வது இப்படித்தான் கட்சி நகர்கிறது. இயக்கத்துக்கு என்று ஒரு காட்சி ஊடகம் வேண்டும் என்று முடிவெடுத்தபோது என்னுடைய 50-வது பிறந்த நாள் விழா சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன். ஒவ்வொரு கிளையிலிருந்தும் குறைந்தது ஒரு கிராம் தங்கமேனும் தாருங்கள் என்று கேட்டேன். மாவட்டம் மாவட்டமாகச் சென்று திரட்டினோம். ஒரு சவரன் தங்கத்தை ஒருவராகக் கொடுத்தவர்களும் உண்டு; ஒரு கிராம் தங்கத்தைப் பத்துப் பேராகச் சேர்ந்து கொடுத்தவர்களும் உண்டு. இயக்கம் பெரிய அளவில் வளரும்போது இத்தகைய மாற்றங்களும் இயல்பாக வரும்.

விளிம்புநிலை மக்களின் சமூக, பொருளாதார மாற்றங்களைப் பிரதானமாகப் பேசும் ஒரு இயக்கம் அமைப்புரீதியாக அதன் ஆரம்ப நிலையிலிருந்து தன் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய தேவையிருக்கிறது. இதை உணர்ந்திருக்கிறீர்களா?


அடிமட்டத்திலிருந்து தொண்டர்களுக்குப் பயிற்சி அளித்து அரசியல்மயப்படுத்தாவிட்டால், நாம் என்ன உழைத்தும் பயனில்லை என்பதை முழுமையாக உணர்ந்திருக்கிறேன். விளிம்புநிலைச் சமூகங்களைக் கொண்டு எழும் ஒரு அரசியல் இயக்கத்தில் இந்தப் பரிணாம வளர்ச்சி காலப்போக்கில்தான் உருமாறும். அதனால்தான் ஏனையக் கட்சிகளைப் போல வெறும் இளைஞர் அணி, பெண்கள் அணி போன்ற வழக்கமான துணைநிலை அமைப்புகளை மட்டும் நிறுவாமல், கல்விப் பொருளாதார விழிப்புணர்வு இயக்கம், நிலவுரிமை விழிப்புணர்வு இயக்கம் போன்ற பல துணை நிலை அமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம். தனிநபர்கள் ஒரு அமைப்பாகத் திரளும்போது நம்மை எப்படியெல்லாம் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைக் கட்சிப் பத்திரிகையில் தொடர்ந்து நான் எழுதிவருகிறேன்.

ஏனைய அரசியல் தலைவர்களைக் காட்டிலும் பெண்கள் அரசியல் மீதான கரிசனம் உங்களிடம் இருப்பதை உணர முடிகிறது. விசிகவில் பெண்களுக்கு எந்த அளவுக்குப் பிரநிதித்துவம் கொடுக்கிறீர்கள். ஏனென்றால், 25 ஆண்டுகளாகியும் ஒரு திருமாவளவன் மட்டுமே விசிகவில் தெரிகிறார்…


நான் 25 ஆண்டுகளாக எப்படிப் பேசிக்கொண்டிருக்கிறேனோ அப்படித்தான் இன்றைக்கு உங்களிடமும் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தத் திருமாவளவன் ஒரு பொருட்டாகத் தெரியவே இந்தச் சமூகத்துக்கு 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே! இன்றைக்கு நீங்கள் ‘தி இந்து’வில் மட்டும்தானே இவ்வளவு விரிவான ஒரு நேர்காணலை எடுக்கிறீர்கள்! எங்களை யார் கண்டுகொண்டார்கள்! லட்சக் கணக்கானோர் கூடும் எங்கள் மாநாடுகளை எந்த அளவுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன! ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் மாநாடுகளில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானங்களை எத்தனை பேர் விவாதித்திருக்கிறார்கள்? சமூக விடுதலையிலும் சரி; சமூக அவலங்களிலும் சரி.. ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது தோழர். நான் குறை கூறவில்லை; மிகுந்த மன வலியோடு பேசுகிறேன்.

சாதி ஒழிப்பைப் பேசும் இயக்கத்துக்கும் சாதியத்தைப் பேசும் ஒரு இயக்கத்துக்கும்கூட வித்தியாசம் தெரியாமல் அணுகும் ஊடகர்கள் இருக்கிறார்கள். எனக்கு இணையான ஆளுமைகள் எங்கள் இயக்கத்தில் பொதுச்செயலர்களாக இருக்கிறார்கள். பல ஊடகர்களுக்கு அவர்கள் பெயரே தெரியாது. அவர்கள் பெயர் மட்டும் அல்ல; தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளின் நிர்வாகிகளின் பெயர்களைத் தவிர, வேறு எந்த இயக்கத்தைச் சார்ந்த எவருமே ஒரு பொருட்டு அல்ல என்பதே இங்குள்ள சூழல்.

ஆரம்பக் காலம் தொட்டே, எங்கள் கட்சியில் உயர்ந்தபட்ச ஜனநாயக மாண்புகளைக் கடைப்பிடிக்கிறோம். எந்த முடிவையும் தனித்து எடுப்பதில்லை. கட்சியின் அனைத்து அமைப்புகளிலும் ஆண்களுக்கு இணையாகப் பெண்களையும் பதவியில் வைத்திருக்கும் ஒரே இயக்கம் இது. ஒரு அணி, அது இளைஞரணியோ, தொழிலாளர் அணியோ எதுவானாலும் அதற்கு இரு அமைப்பாளர்கள் - ஒருவர் ஆண்; ஒருவர் பெண். எல்லாக் கூட்டங்களிலும் எல்லா முடிவுகளையும் யாரையும் யாரும் விமர்சித்துப் பேச முடியும். பெண்களை அதிக அளவில் முன்னிறுத்த முயற்சிக்கும் அமைப்பு இது. இதையெல்லாம் தாண்டியும் இன்னொரு விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன். இந்த இயக்கத்தின் ஆரம்ப வரலாற்றில் தனிநபர் ஈர்ப்பு ஒரு முக்கிய புள்ளியாக இருந்திருக்கலாம்; எதிர்காலம் அப்படி இருக்காது!

எந்தவொரு பெரும் தலைவரின் வெற்றியும் தோல்வியும் அடுத்து வருபவர்களுக்குப் பாடம் ஆகிறது. அந்த வகையில், அம்பேத்கர் வாழ்க்கையிலிருந்து நீங்கள் அதிகம் தாக்கம் பெற்ற வெற்றி, தோல்வி எது? 


அவருடைய மிகப் பெரிய வெற்றியாகக் கருதுவது, நம்முடைய தலையெழுத்து தீர்மானிக்கப்பட்டது என்றிருந்த சமூகச் சூழலை உடைத்தெறிந்து இந்தச் சுதந்திர இந்தியாவின் தலையெழுத்தான அரசியல் சட்ட சாசனத்தை எழுதுபவராகத் தன்னை உருவாக்கிக்கொண்ட ஆளுமை. அவருடைய தோல்வி, பின்னாளில் அவரே அது தான் செய்த தவறு என்று வருந்தியது. புணே ஒப்பந்தம். அம்பேத்கரின் ஒவ்வொரு நகர்விலும் பாடம் கற்கிறேன்.

கடைசிக் கேள்வி. சாதிய விடுதலைக்கான பாதைகளில் இரு பார்வைகள் இருக்கின்றன. இந்து மதத்துக்குள்ளான சாதிய விடுதலை, இந்து மதத்தை உடைத்தெறியும் சாதிய விடுதலை. அம்பேத்கருக்குப் பிந்தைய இந்த அறுபதாண்டு வரலாறு நமக்குச் சுட்டும் அனுபவம், சாதியத்தைக் கடக்கும் அளவுக்கு இந்து மதத்தைக் கடந்து வெளியே வருவது எளிதானதாக இல்லை என்பது. அன்றைக்கிருந்த சூழல் மாறி இந்து மதம் குறிப்பிடத்தக்க அளவில் தலித்துகளை இன்றைக்கு உள்வாங்கியிருக்கிறது. பல இடங்களில் தீவிரமான அம்பேத்கரியர்களால்கூட தங்கள் வீட்டளவில்கூட இந்துப் பண்பாட்டை மாற்ற முடியவில்லை. அம்பேத்கரியம் எவ்வளவு விரிந்தாலும் பௌத்தம் விரியவில்லை. இந்து மதம் வெறும் பெயரளவிலான அடையாளமாக அல்ல; பண்பாடாக தலித்துகள் வாழ்வில் கலந்திருக்கிறது. இது தொடர்பான உங்கள் பார்வை என்ன?
 

மிக சிக்கலான, நுட்பமான கேள்வியும் பிரச்சினையும் இது. அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேற நினைத்தது, மதம் எனும் அமைப்புக்கு எதிராக அல்ல. அதில் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியத்தை எதிர்த்தே அம்பேத்கர் வெளியேறினார். சாதியம் நீடிக்கும்வரை இந்து மதம் மீதான நம்முடைய பார்வையில் மாற்றம் இல்லை. அதேசமயம், அம்பேத்கருக்குப் பிந்தைய இந்த அறுபதாண்டு வரலாற்றையும் கணக்கிலெடுத்துக்கொண்டே இந்தப் பிரச்சினையை நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் மதமாற்றம் தலித்துகள் மீதான சாதிய வேறுபாட்டைப் பெரிய அளவில் மாற்றவில்லை; அப்படி மதமாற்றம் மூலம் சாதிய அடையாளங்களை ஒருவன் மீறி வந்தாலும் இந்துத்வம் அங்கே மத அடிப்படையிலான அடக்குமுறையை அவன் மீது திணித்துவிடுகிறது. ஒரு கிராமத்தில் 100 தலித் குடும்பங்கள் இருக்கின்றன; அவற்றில் 20 குடும்பங்கள் கிறிஸ்தவத்துக்கும் 10 குடும்பங்கள் இஸ்லாமுக்கும் மாறிவிட்டன என்றால், 70 குடும்பங்கள் இந்து தலித் குடும்பங்களாக மிஞ்சுகின்றன. இந்துத்வத்தின் அடக்குமுறையை மூன்று தரப்பும் வெவ்வேறு பெயர்களால் எதிர்கொள்கிறார்கள். அதாவது, ஏற்கெனவே சிறுபான்மையினராக இருக்கும் ஒரு சமூகம் மேலும் சிறுபான்மையாகச் சிதற அங்கே ஆதிக்கமும் அடக்குமுறையும் மேலும் கிளர்ந்தெழவே வழிவகுக்கிறது. இதற்கு அர்த்தம் மதமாற்றத்தை நான் மறுதலிக்கிறேன் என்பது அல்ல. மதமாற்றம் என்பது ஒரு தப்பித்தலாக அல்ல; முழு விடுதலையாக இருக்க வேண்டும். வெறுமனே அது அரசியல் சார்ந்த அடையாள மாற்றமாக அல்லாமல், பண்பாட்டு மாற்றமாக இருக்க வேண்டும்.

இன்றைய சூழலில், எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் அரசியல் ஆதிக்கத்தினூடாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அரசியல் அதிகாரமே எல்லாவிதமான விடுதலைக்குமான முதல்நிலைக் கருவியாக இருக்கும் என்பதை மாறும் காலமும் களச் சூழலும் சொல்கிறது. நாம் விளிம்புநிலை மக்கள் என்று பேசிக்கொண்டிருக்கும் இனச் சிறுபான்மையினர், மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளையும் ஒரே களத்தில் திரட்டுவதை அரசியல் களமே சாத்தியப்படுத்தும். இந்த வட்டத்துக்கு வெளியே பெரும்பான்மையினராக நிற்கிறது நாம் சமத்துவத்துக்காகப் பேச வேண்டிய தரப்பு. ஜனநாயக சக்தியாக நாம் மாற்ற வேண்டிய தரப்பு. அதோடான உரையாடலுக்கும் அரசியல் களமே வழிவகுக்கும்.
சமூக விடுதலைக்கு ஒரே சமயத்தில் ஏராளமான பாதைகளில் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஒரு அரசியல் இயக்கமாக அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான பாதையில் பயணிப்பதே விசிகவின் பிரதான பணியாக இருக்கும்!

ஏப்ரல், 2016, ‘தி இந்து’

12 கருத்துகள்:

  1. மிகவும் சிறப்பான , ஆழமான பேட்டி

    பதிலளிநீக்கு
  2. மிகவும் சிறப்பான , ஆழமான பேட்டி

    பதிலளிநீக்கு
  3. in depth analysis of caste society and its politics only a leader of the oppressed people can do it. hail unity of oppressed and revolution comradely sethu

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அருமையான பேட்டி வாழ்த்துக்கள் சமஸ்
    தோழர் திருமாவளவன் பதில்கள் மிகவும் அருமை. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. இந்துவிற்கும் சமசிற்கும் மிக்க நன்றி
    தலித்துகள் இனி தவறாமல் தமிழ் இந்துவை வாசிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  6. தன் பாதை குறித்த தெளிவு நிறைந்த தலைவரின் பதில்களும் அதை வெளிக்கொணரும் வகையிலான புரிதல் மிக்க ஒரு பத்திரிக்கையாளரின் கேள்விகளுமாக நிறைந்து மிளிர்கிறது பேட்டி.
    நன்றி!
    இருவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. தற்கால அரசியல் சூழலில் திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களுக்கு தளம் அமைத்துத் தரவேண்டியது சமுகச் சமனியத்தை வளர்ச்சியை விரும்பும் நாட்டுப் பற்றாளர்களின் கடமையாக வேண்டும். விளிம்பு நிலை மக்களுக்கு மட்டுமல்ல; மனித நேய விருப்பாளர்களும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகள் இந்தப் பேட்டியில் காணக்கிடைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  8. திருமாவின் மீதான மரியாதையைக் கூட்டும் நேர்காணல்..
    ஒரு சந்தேகம்..
    'ஒரு பெண் எந்த சாதியாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் அவள் வயிற்றில் பிறப்பது தலித் குழந்தையாகத் தான் இருக்க வேண்டும்' என்றெல்லாம் பேசும் தனது கட்சிக்காரர்களையோ, அல்லது காதல் கடிதங்களையும், போட்டோவையும் பெண்ணின் தகப்பனிடம் காண்பித்து, 'பொண்ணு உங்களுது, நீங்களே ரேட்டு சொல்லுங்க' எனும் வக்கீல் அணியையும், அவர் என்றாவது கண்டித்தது உண்டா?

    பதிலளிநீக்கு
  9. எனக்கு தெரிந்து ஒரு பிரபலமான தினசரியில் ஒரு தலித் தலைவருக்கு இவ்வளவு இடமளித்திருப்பது இந்தியவிலேயே இதுவே முதல் முறையாக இருக்கும். அரசியல்வாதிகள் எவ்வளவு நேர்மையாக இருக்க வேண்டுமென்று நாம் எதிபார்கிறோமோ அதைவிடப் பலமடங்கு நேர்மை ஒரு பத்திரிகையாளனுக்கு தேவைப்படுகிறது. அந்த வகையில் சமஸின் நேர்மையை பாராட்டுகிறேன். இங்கே பத்திரிக்கைகள் மத்தியில் இருக்கும் நடுநிலையெல்லாம் திருமாவளவனுக்கு இன்று ஒரு செய்தி வெளியிட்டால் அதை 'சமநிலைப்படுத்த' மறுநாள் அன்புமணியின் பேட்டியை போடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  10. இந் நேர்காணல் தமிழகத்தை மையமாக வைத்தே நகர்கிறத; ஆகவே அதையொட்டியே எனது பின்னூட்டமும் அமைகிறது. வர்ண வேறுபாட்டை ஒழிப்பதற்கான போராட்டத்தைப் பரப்புரை வழியாக மட்டுமே நடத்திய பெரியார் பிற பிற்படுத்தப்பட்ட சாதியரை அணிதிரட்டித் தமிழகத்தில் பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு-அரசியல்,சமூகம், பொருளாதாரம் என்ற மூன்று முக்கியமான அரங்குகளிலும்- முடிவு கட்டினார். அதற்கு அவருக்குக் கை கொடுத்தது யாதெனில் ஏற்கெனவே அச் சாதியர் நிலவுடைமையாளராயிருந்தமையும்,அவர்களின் வாரிசுகள் அப்போதுதான் மேலைக் கல்வி பெற்றிருந்தமையும்!தங்களின் கல்வி உரிமை, அரசுப் பணிகளில் உரிய இடம் ஆகியனவற்றைக் கோரும் தமது முயற்சியில் தங்களின் வர்க்கச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ள ஒடுக்கப்பட்ட சாதியருக்கு அவர்கள் கொஞ்சமும் வாய்ப்பளிக்கவில்லை; பெயரளவுக்கே அதற்கு ஆதரவாகப் பேசினார்கள்-அதுவுங்கூடப் பார்ப்பன எதிர்ப்பணியில் பயன் கருதா இளைய பங்காளிகளாக இருக்க மட்டுமே அவர்களை அனுமதித்தார்கள்! தங்களின் நோக்கத்தில் வெற்றி கண்டதும் அவர்களைச் சுத்தமாகக் கைகழுவிவிட்டார்கள்!அம்பேத்கரின் முயற்சியால், கல்வி,அரசு--பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஆகியனவற்றில் கிடைத்த இட ஒதுக்கீட்டால், ஓரளவு பயன்பெற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தவரும் முன்பு பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த படிப்பாளிகளைப் போன்றே பார்ப்பனர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஆதிக்கத்திலிருந்து திமிறி வெளியேற முயல்கிறார்கள்; ஆயின், இவர்களுக்கு அவர்களைப் போன்று ஏற்கெனவே மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சமூக அமைப்பு வாய்க்கப் பெறாததால்தான் இவர்கள் இன்று எழுப்பும் உரிமைக் குரலை ஒடுக்க அவர்களால் முடிகிறது! இதற்கான அடிப்படைக் காரணி யாதெனில் அது கிராமப் புறங்களில் நிலவும் உடைமை முறையே! இது வெறும் கதையன்று! முற்றிலும் உண்மை என்பது இடதுசாரிகள் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருந்த கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் மேற்கொண்ட அடிப்படையான நிலச் சீர்திருத்தம் அங்கு சாதி ஒடுக்குமுறையைப் பெருமளவு குறைத்துள்ளமை மூலம் தெளிவாகிறது!அதைச் செய்வதற்கு எந்த தலித் தலைமையின் கீழும் இல்லாத-"பூணூல் போடாத கம்யூனிஸ்டுகளால்"-மட்டுமே முடிந்திருக்கிறதே ஏன்? எனவே ஆட்சியதிகாரத்தில் எந்த சாதியர் இருக்கிறார் என்பதன்று இங்கே பொருத்தமான கேள்வி; எத்தகைய சமூகப் பார்வை கொண்ட அரசியல் கட்சிகள் அரசதிகாரத்தில் இருக்கின்றன என்பதுதான்; இந்த இடத்தில்தான் காந்தியின் 'அரிசன சேவையும்',அம்பேத்கரின் இந்து மத வெளியேற்றமும், பெரியாரின் பரப்புரையும் முழுமையானவையாக இல்லை என்பது தெளிவாகிறது--பண்பாட்டுத் தளத்தில் அவை மிகவும் முக்கியமானவையே என்றாலும்! இந்த நேர்காணலில் பங்குபெற்றுள்ள இருவரும் தேர்தல் அரசியலைச் சுற்றியே வலம் வருகிறார்கள்; அதையும் தாண்டி அடிப்படையான சமூகப் புரட்சிக்கு வித்திடும் இடதுசாரிகளின் மாற்றுத் திட்டம் இவர்கள் கண்ணில் படவேயில்லையே ஏன்?
    மற்றபடி, இந் நேர்காணல் மூலம் திருமிகு. திருமாவளவன் அவர்கள் தனது அகன்ற பார்வையை அனைவரின் நியாயமான ஆய்வுக்காகவும் முன்வைத்துள்ளார்; அவரின் ஆளுமை பெற்றிருக்கும் வளர்ச்சியும், முன்னேற்றமும் நம்பிக்கையூட்டுகிறது; தமிழகத்திலும், இந்திய ஒன்றிய அளவிலும் சமூகப் பாங்கில் ஒடுக்கப்பட்டவர்களின் இயற்கையான கூட்டாளிகளாம் இடதுசாரிகளுடன் இணைந்ததாக அவரின் அரசியல் பயணம் தொடரும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது! இந்த மக்கள் நலக் கூட்டணியில் யார் இருப்பார்களோ இருக்கமாட்டார்களோ இவர் தொடர வேண்டும்-- இவரின் இலக்கு தேர்தல் அரசியலையும் தாண்டியது எனில்!

    பதிலளிநீக்கு
  11. 25 ஆண்டுகளுக்குபிறகும் ஏன் ஒரு திருமாவளவன் மட்டுமே வி சி க வில் என்ற கேள்விக்கு, ஊடகங்களை குறை கூறுகிறாரே தவிர, நேரடியான பதில் இல்லை.

    எல்லாருமே திருடங்க தான் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I vividly remember to have read it at the time of publication. Yet, the subject of discussion is still relevant even today. An exemplary discussion between two great minds! Thought provoking questions and sensible and convincing replies. No parallel in the recent years or even ever, of such an elaborate discussion in a leading newspaper.

      நீக்கு