ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?


யாரைச் சந்தித்தாலும், “ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்குப் பின் இருப்பது வெறும் பரபரப்பை நாடும் ஆர்வம் மட்டுமே இல்லை. நாம் உதட்டைப் பிதுக்குகையில், அவர்கள் தமக்குத் தெரிந்தவற்றை நீளமாகச் சொல்கிறார்கள். துண்டு துண்டான தகவல்கள். பல்வேறு வகையிலான யூகங்கள். முன்னுக்குப் பின் முரணான நம்பிக்கைகள். கவலைகள். அக்கறைகள். ஆற்றாமைகள். தம்மைக் காட்டிலும் ஊடகவியலாளர்களுக்குக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று பொதுஜனம் நம்புவதில் பிழையில்லை. இது பிறழ்காலம். ஊடகவியலாளர்களிடமிருந்து பொதுஜனம் செய்தி தெரிந்துகொண்ட காலம் போய், சமூக வலைதளங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி தெரிந்துகொள்ள நேரும் காலம். குழப்பங்களுக்கான மையம் தமிழக அரசின் செயல்பாடு.


சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 இரவு ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். மறுநாள் காலை அந்தச் சாலையை நெருங்கவே முடியவில்லை. எங்கும் போலீஸ்காரர்கள். பாதைகளை மறித்திருந்தார்கள். “சாதாரணக் காய்ச்சல். இன்றே முதல்வர் வீடு திரும்பிவிடுவார்” என்பதே அரசுத் தரப்பு சொல்ல முயன்ற செய்தி. அதற்கு ஏன் இவ்வளவு களேபரச் சூழலை உண்டாக்க வேண்டும்? அங்கிருந்த கடைக்கார முதியவர் சொன்னார், “முப்பத்திரண்டு வருஷம் முன்னால நகர்ந்த மாதிரி இருக்கு. யப்பா என்னா கூட்டம்? பட்டிதொட்டி ஜனம் அத்தனையும் அப்போ இங்கெ வந்து கெடந்துச்சு.”

1984-ல் இதே போன்ற ஒரு அக்டோபர் நாளின் நள்ளிரவில், ஜெயலலிதாவின் முன்னோடி யும் அன்றைய முதல்வருமான எம்ஜிஆர் அப் போலோ மருத்துவமனைக்குக் கொண்டுவரப் பட்டார். அவருடைய சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அடுத்த இரு நாட்களில் அவர் பக்கவாதத்துக்கு உள்ளானார். தமிழகம் முழுவதிலும் வழிபாட்டுத் தலங்கள் திமிலோகப்பட்டன. விரதம், அங்கப் பிரதட்சணம், பால் காவடி என்று தொடங்கிய வேண்டுதல்கள் யாகங்கள், கை விரல்கள் காணிக்கை, தீக்குளிப்பு என்று நீண்டன. தொடர்ந்து, அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் எம்ஜிஆர். உடல்நலம் தேறினார். தேர்தல் வந்தது. அவருடைய புகைப்படமும் காணொலியும் வெளியாயின. படுத்துக்கொண்டே ஜெயித்தார். நோயிலிருந்து மீண்டு வந்து மீண்டும் முதல்வர் பதவியேற்றார். இதற்குள், தீக்குளித்து மட்டும் 21 பேர் செத்திருந்தனர்.

இந்தியாவைப் பொறுத்த அளவில் தலைவர்களின் உயிர் ஓருயிர் அல்ல. தமிழகம் இன்னும் ஒரு படி மேலே எப்போதும் இருப்பது. அண்ணாவுக்கு இங்கே கூடிய கூட்டம் லெனின், காந்தி, மாவோ யாருடனும் வரலாற்றில் ஒப்பிட முடியாதது.

பொதுவெளியில் ஒருவர் தொடர்ந்து காணக் கிடைக்காதபோது வதந்திகள் முளைக்கின்றன. மருத்துவமனைகள் வதந்திகளுக்கு இறக்கைகளை ஒட்டுகின்றன. தமிழகத்தில் அண்ணா நோய் வாய்ப்பட்டபோது தகவல்கள் பொதுவெளியில் பகிரப்பட்டன. எம்ஜிஆர் விஷயத்தில் எல்லாத் தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டதாகச் சொல்ல முடியாது என்றாலும், நிலைமை இன்றளவுக்கு இல்லை. எம்ஜிஆருக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லப்பட்ட ஒரு வட்டம் அவரைத் தொடர்ந்து சந்திக்க முடிந்தது. அமைச்சரும் மருத்துவருமான ஹண்டே செய்தியாளர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.

ஜெயலலிதா விவகாரத்தில் மருத்துவமனை அறிக்கைகளுக்கும், அரசு மற்றும் கட்சி சார்பில்வெளியிடப்படும் தகவல்களுக்கும், வெளியே காணக் கிடைக்கும் சூழலுக்கும் இடையில் நிலவும் முரண்பாடே தேசிய அளவிலான விவாதமாக இதை வளர்த்தெடுத்தது. செப்.23, 25, 29, அக்.2,3 என்று இதுவரை ஐந்து அறிக்கைகளை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டிருக்கிறது. “காய்ச்சலுக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்; உடல் நலன் மேம்பட்டு வழக்கமான ஆகாரம் எடுத்துக்கொள்கிறார்; சிகிச்சை தொடர்கிறது; பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலேவுடன் ஆலோசனை கலக்கப்பட்டது, மேலதிக நாட்கள் முதல்வர் சிகிச்சையில் இருக்க வேண்டும்; முதல்வர் உடல்நிலை மேம்பட்டிருக்கிறது” என்பதே அந்த ஐந்து அறிக்கைகளும் அடுத்தடுத்து கொடுத்த தகவல்கள்.

இந்த 10 நாட்களுக்குள் குறைந்தது 10 அறிக்கைகள் மருத்துவமனையில் ஜெயலலிதா அன்றாடம் அலுவல்களைத் தொடர்வதாகச் சொல்லும் வகையில் அரசு/அதிமுக சார்பில் வெளியிடப்பட்டன. அவற்றில் முக்கியமானவை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய அதிமுகவின் மூன்று வேட்பாளர்கள் பட்டியல்கள்; தொழில்நுட்பத் துறை, அறங்காவல் துறை தொடர்பான அறிவிப்புகள்; பிரதமருக்கும் ஆளுநருக்கும் ஜெயலலிதா சார்பில் அனுப்பப்பட்ட கடிதங்கள். தவிர, காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தையும் அவர் நடத்தியதாகவும் சொன்னார்கள். ஆனால், “முதல்வரை நான் சந்தித்தேன், அவர் என்னுடன் பேசினார்” என்று இதுவரை ஒருவர் சொல்லவில்லை; அவரை வெளியிலிருந்து சந்திக்கச் சென்ற மத்திய அமைச்சர், ஆளுநர் உட்பட. எல்லோருடைய வார்த்தைகளுமே நுட்பமாகப் பின்னப்பட்டு வெளிவருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள்  “குழப்பங்களையும் வதந்திகளையும் தவிர்க்க ஒரு புகைப்படமோ, காணொலியோ வெளியிடலாமே” என்கின்றனர். இதில் தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை.

நேற்று முன்தினம், அப்போலோ மருத்துவமனை, “லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே முதல்வரின் சிகிச்சைக் குழுவோடு இணைந்து பணியாற்றுகிறார்” என்று அறிவித்த உடனே, சமூக வலைதளங்களில் பலர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்கள். “ரிச்சர்ட் ஜான் பீலே தீவிரமான கிருமித்தொற்று, நுரையீரல் பாதிப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளின் செயலிழப்பு, அபாய கட்ட தீவிர சிகிச்சைக்குப் பேர் போனவர். சாதாரண காய்ச்சல், முதல்வர் நலமுடன் இருக்கிறார் என்றால், ஏன் இவரை வரவழைக்க வேண்டும்?” இதுபோன்ற கேள்விகள் அர்த்தமற்றவை அல்ல.

உலகில் எல்லா மனிதர்களும் நோய் பாதிப்புக்குள்ளாவது இயல்பானது. சொல்லப் போனால், மக்களால் கொண்டாடப்படும் அரசியல் தலைவர்கள் தம்முடைய உடல் உபாதைகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது, சமூகத்தில் ஏனையோர் மத்தியில் அன்பையும் நல்லெண்ணத்தையும் அதே நோய் பாதிப்புக்குள்ளாகும் ஏனையோரிடத்தில் தன்னம்பிக்கையையும் விதைக்கும். அரசியல் தலைவர்களின் உடல்நிலையைப் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியம் இன்று உலகம் முழுக்க ஜனநாயக நாடுகளில் விவாதிக்கப்படும் விஷயம். நாம் இங்கு ஜெயலலிதாவை முன்வைத்து நடத்தும் இதே விவாதம் அமெரிக்காவில் ஹிலாரியை முன்வைத்து நடந்துகொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் உட்ரோ வில்சன், ரூஸ்வெல்ட், கென்னடி என்று பல அதிபர்கள் தங்கள் உடல் உபாதைகளை மக்களிடம் மறைத்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அது ஒரு காலம். 1985-ல் அதிபர் ரொனால்டு ரீகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். அறுவைச் சிகிச்சைக்காக அதிபர் மயக்கநிலையில் ஆழும் முன், மரபுப்படி உதவி அதிபரிடம் அதிபர் பொறுப்பை அளித்தார்; வெற்றிகரமாக சிகிச்சை முடித்து வந்து மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்். அதற்குப் பின் 19 ஆண்டுகள் - 93 வயது வரை உயிரோடு இருந்தார். பின்னாளில் அல்ஸைமர் தாக்குதலுக்குள்ளாகாவிடில் இன்னும் கொஞ்ச காலம்கூட ரீகன் வாழ்ந்திருப்பார் என்று சொல்வோர் உண்டு. பிற்காலத்தில் சூழல் மேலும் மேம்பட்டது. இன்று அமெரிக்க அதிபர் தன் உடல் பரிசோதனை அறிக்கையை மக்களிடம் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை அதிபர் ஒபாமாவின் சீரான உடல்நிலையை மக்களுக்குச் சொன்னது. “அரசியல் தலைவர்களின் உடல்நல அறிக்கையில் ஓரளவுக்கு மேல் அந்தரங்கம் என்று ஏதும் இல்லை; மாறாக தேசத்தின் அன்றாட செயல்பாட்டுடன் சம்பந்தப்பட்டது அது. மக்களின் பிரதிநிதிகள் மக்களிடம் மறைக்க ஏதும் இல்லை” என்று ஒலிக்கும் ஜனநாயகக் குரல்கள், அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்கள் மருத்துவப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டங்களையும் இப்போது கோருகின்றன.

இந்தியாவில் “அந்தரங்க உரிமை குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று கிடையாது” என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு வாதிடும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அரசியல் தலைவர்களின் அந்தரங்க உரிமைகள் தொடர்பாகவும் குடிமக்கள் விவாதிக்கவும் நிறையவே இருக்கிறது. ஒரு ஆட்சியாளரின் உடல்நலன் தொடர்பான செய்திகள் மக்களிடம் மறைக்கப்படும்போது, அதன் பின்விளைவுகளை அந்த நாடும் மக்களும் எவ்வளவு காலத்துக்கு அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதையே ஜின்னாவின் பாகிஸ்தானிடம் இன்றளவும் பார்க்கிறோம்.

இந்திய அரசியல் சூழலில், ஒரு தலைவரின் உடல் நல விவகாரம் மக்களின் உரிமையின்பாற்பட்டது மட்டும் அல்ல; மாறாக, அவர்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்தது. இது ஒருவகையில் வரம்; ஒருவகையில் சாபம். தொண்டர்களை உயிரினும் மேலானவர்களாக, உடன்பிறப்புகளாக, ரத்தத்தின் ரத்தங்களாகச் சித்திரித்து உறவை வளர்க்கும் அரசியல் தலைவர்கள், தம்முடைய அந்தரங்க உரிமையைத் தாமாகவே சமூகத்திடம் கையளித்துவிடுகிறார்கள். தனிமனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. மக்கள் நலனோ எல்லா நியாயங்களிலும் மேம்பட்டது!


அக். 2016, ‘தி இந்து’

5 கருத்துகள்:

  1. // ஒரு ஆட்சியாளரின் உடல்நலன் தொடர்பான செய்திகள் மக்களிடம் மறைக்கப்படும்போது, அதன் பின்விளைவுகளை அந்த நாடும் மக்களும் எவ்வளவு காலத்துக்கு அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதையே ஜின்னாவின் பாகிஸ்தானிடம் இன்றளவும் பார்க்கிறோம்.// Can you please give link or name of any material which talks on this. Just to refer. Thank you

    பதிலளிநீக்கு


  2. 'பிறழ்காலம்'- அருமை!

    "இந்தியாவில் “அந்தரங்க உரிமை குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று கிடையாது” என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு வாதிடும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அரசியல் தலைவர்களின் அந்தரங்க உரிமைகள் தொடர்பாகவும் குடிமக்கள் விவாதிக்கவும் நிறையவே இருக்கிறது. "

    பதிலளிநீக்கு
  3. மக்களிடம் நிருவாக செயல்பாடுகல் மட்டும்தான் சொல்லவில்லை என்றுப்பாற்தால். மக்கள் தேர்ந்தெடுத்த ப்ரதிநிதியின் நிலைக்கூட அப்படிதானா? இங்கு மக்கள் என்பவர்கள், வாக்களிக்கும் மணிதமந்தை போளும்.

    பதிலளிநீக்கு