தனிநபர் அந்தரங்கத்துக்கும் அரசின் வெளிப்படைத்தன்மைக்குமான எல்லை எது?


என்னுடைய செல்பேசியிலிருந்து தனிப்பட்ட வகையில் என் மனைவியிடம் எதையும் நான் பேச முடிவதில்லை. ஒவ்வொரு வார்த்தையும் ஒட்டுக்கேட்கப்படுவதாகச் சந்தேகிக்கிறேன். ஒரு ஊடகவியலாளனாக இந்தச் சமூகத்தில் நான் இழக்கும் அந்தரங்க உரிமை இது. சமூகத்தை நொந்துகொள்ள ஏதும் இல்லை. இந்த வாழ்க்கை நான் தேர்ந்தெடுத்தது. நாம் இரண்டு வாழ்க்கை வாழ்கிறோம். பொது வாழ்க்கையில் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு சமூகத்தின் உள்ளே நுழைகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சமூகம் உள்ளே நுழைகிறது. பொது வாழ்வின் பங்கேற்பால், தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவு அந்தரங்க உரிமைகளை இழக்கிறோம் என்று ஆதங்கப்படுபவர்கள், மறுபுறம் சமூகத்தில் எவ்வளவு உரிமைகளை எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் யோசிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி அளித்த பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனென்றால், இந்தியாவில் ஆட்சியாளர்கள் தம் உடல்நிலை தொடர்பாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய சட்டரீதியிலான கட்டாயம் அவர்களுக்கு இல்லை. இதுகுறித்து சட்டரீதியாகக் கேள்வி கேட்கும் உரிமை குடிமக்களுக்கோ, உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கோ இன்றுவரை இல்லை. ஆனால், நாளை அதை நோக்கியே நாம் நகர வேண்டும். ராமசாமியின் மனுவை நிராகரிக்கும்போது, ‘‘இது சுயவிளம்பர நோக்கில் போடப்பட்டிருக்கும் மனு” என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். ஏனென்றால், கடந்த 70 ஆண்டுகளில் ஜனநாயகத்தை மேம்படுத்தும் வகையில் உருவாகிவந்திருக்கும் சட்ட உரிமைகள் பலவற்றையும் இப்படி நீதிமன்றங்களிலும் பொதுவெளியிலும் தொடர்ந்து விவாதித்ததன் தொடர்ச்சியாகவே அரசியல் அரங்கின் மூலம் இன்று நாம் அடைந்திருக்கிறோம்.

ஜனநாயகம் தொடர் பயணம். காலத்துக்கேற்ப அது செழுமைப்படுத்தப்பட வேண்டும். 2005-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதமர் ஏரியல் ஷெரோன். ஆட்சியாளர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அது தொடர்பாகப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் உரிமையைச் சட்டமாக்கும் முயற்சிகள் அதற்குப் பின்னரே, இஸ்ரேலில் தொடங்கின.

மிகவும் நுட்பமான, சிக்கலான விவகாரம் இது. ஆட்சியாளரின் இயக்கம் நாட்டின் இயக்கத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பக்கம் ஆட்சியாளரின் அந்தரங்கம். அது ரகசியம் காக்கப்பப்பட வேண்டும். அந்தப் பக்கம் நாட்டின் நிர்வாகம். அதில் வெளிப்படைத்தன்மை வேண்டும். இரண்டுக்குமான எல்லை எது? நாம் விவாதிக்க வேண்டும். உதாரணமாக, நோய்வாய்ப்பட்ட ஒரு ஆட்சியாளரின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஆட்சியாளர் விரும்பாத நிலையில், அவருடைய அந்தரங்க உரிமையின் கீழ் நிராகரிக்கலாம். ஆனால், ஆட்சியாளர் ஒரு விஷயம் குறித்து யோசித்து முடிவெடுக்கும் பிரக்ஞையோடு இருக்கிறாரா என்ற கேள்விக்கான பதிலை அப்படி நிராகரிக்க முடியுமா?

ஜெயலலிதா செப்டம்பர் 22 அன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தக் கட்டுரை எழுதப்படும் அக்டோபர் 11 வரையிலான 19 நாட்களில் அப்போலோ நிர்வாகம் 11 அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது. அறிக்கை இன்றைக்கு வரும், வராது என்பதை மருத்துவமனை நிர்வாகமே தீர்மானிக்கிறது. அன்றாடம் வெளியிட வேண்டும் என்று ஒரு தனியார் மருத்துவமனையை ஒரு குடிமகனால் நிர்ப்பந்திக்க முடியுமா? ஆரம்ப நாள் அறிக்கைகள் முதல்வர் வழக்கமான ஆகாரம் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்றன. கடைசியாக வந்திருக்கும் அறிக்கைகள் செயற்கை சுவாசத்தில் இருப்பதாகச் சொல்கின்றன. அத்தனை அறிக்கைகளும் தொடர்ந்து முதல்வரின் உடல்நிலை மேம்பட்டு வருவதாகவும் கூறுகின்றன. வழக்கமான ஆகாரம் எடுத்துக்கொள்ளும் நிலையிலிருந்தவர் செயற்கை சுவாச நிலையைச் சென்றடைவது மேம்பாடா? மருத்துவமனைக்கு அன்றாடம் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரேனும் வரவழைக்கப்படுகின்றனர். அவர்களை மூன்று அமைச்சர்கள் சந்திப்பதாகவும் “முதல்வர் நன்றாக இருக்கிறார். அவருக்கு இப்படியான பிரச்சினைகள்... இப்படியான சிகிச்சைகள்... விரைவில் அவர் நலம் அடைவார் என்று மக்களிடம் தெரிவியுங்கள்” என்று சொல்லி அனுப்புவதாகவும் சொல்கிறார்கள். இந்தத் தகவலை அந்த மூன்று பேர் மருத்துவமனைக்கு வெளியே வந்து, அரசு சார்பில் ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் தெரிவிப்பதில் என்ன சிக்கல்? எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜெயலலிதாவின் மீது உயிரையே வைத்திருக்கும் அக்கட்சியின் கடைசித் தொண்டனுக்கும் ஒரு எளிய கேள்வி இருக்கிறது. ஜெயலலிதா சுயநினைவோடு இருக்கிறாரா?

அரசாங்கமானது பல நூறு நிறுவனங்கள், பல்லாயிரம் அலுவலகங்கள், பல லட்சம் ஊழியர்களைக் கொண்டு இயங்கும் ஒரு ராட்சத நிறுவனம். தவிர, அதன் ஆளுகைக்கு உட்பட்ட பிராந்திய நிர்வாகம் எனும் பெறும் பொறுப்பு இருக்கிறது. ஒரு மாநிலத்தில் இது சார்ந்த முக்கியமான கொள்கை முடிவுகள் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கும் இடத்தில் முதல்வர் இருக்கிறார். அதிலும் தமிழகத்தில் சமகால முதல்வரானவர் முதலமைச்சர் மட்டுமல்ல, அவரே முடிவெடுக்கும் ஒரே அமைச்சர். அப்படியான காட்சிகளே நமக்கு இதுவரை கிடைத்திருக்கின்றன. இந்த 20 நாட்களில் பல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன அல்லது தள்ளிப்போடப்பட்டிருக்கின்றன; ஜெயலலிதா பொறுப்பு வகித்த இலாகாக்களை இனி பன்னீர்செல்வம் கவனிப்பார்; ஜெயலலிதா தொடர்ந்து இலாகா இல்லாத முதல்வராக நீடிப்பார்  எனும் முடிவு உள்பட. முதல்வர் செயற்கை சுவாசத்தில் இருக்கும் நிலையில், இந்த முடிவுகளை எல்லாம் யார் எடுக்கிறார்கள் அல்லது தள்ளிப்போடுகிறார்கள்? கடந்த 20 நாட்களாக அப்போலோ ஒரு மருத்துவமனை என்பதைத் தாண்டி, தலைமைச் செயலகமாகவும் மாறிவிட்ட அவலத்தைக் காண்கிறோம். அங்கு வேலை நடக்கிறது என்றால், அதிரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அரசின் வேலைகள் ஒரு தனியார் இடத்தில் எப்படி நடக்க முடியும்? வேலை நடக்கவில்லை என்றால், 20 நாட்களாக அரசு முற்றிலுமாக முடங்கியிருக்கிறதா? ஏனென்றால், 20 நாட்களாக அமைச்சர்கள் அன்றாடம் ஓரிடத்தில் கூடிக் கிடப்பதைக் காண்கிறோம். ஆனால், அமைச்சரவைக் கூட்டம் என்று ஒன்று நடந்ததாக நமக்குத் தகவல்கள் ஏதுமில்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த 20 நாட்களில்கூட செய்தியாளர்களை ஒரு அமைச்சர் சந்திக்கவில்லை. மாநிலத்தின் எந்தப் பிரச்சினை தொடர்பாகப் பேசவும் ஒரு அதிகாரி வாய் திறப்பதில்லை. மாநில நிர்வாகம் ஊமையாக்கப்பட்டிருக்கிறது. காவிரி வழக்கில், “காவிரி ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்று மத்திய அரசு தெரிவித்தது ஒரு பெரிய முடிவு. அது தொடர்பில்கூட சின்ன கண்டன வார்த்தைகள் அமைச்சர்களிடமிருந்து வரவில்லை. ‘‘தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. குடியரசுத்தலைவர் ஆட்சியை அமலாக்க வேண்டும். ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமலாக்க வேண்டும்’’ என்கிற வார்த்தைகளை ஜெயலலிதா நல்ல நிலையில் இருக்கும் சூழலில், சுப்ரமணியன் சுவாமியால் கூறிவிட முடியுமா? அதிமுகவினர் அதைப் பார்த்துக்கொண்டு இப்போதுபோல வாளாவிருப்பார்களா? நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் எப்படி இதுகுறித்தெல்லாம் கவலைக்குள்ளாகாமல், கேள்வி எழுப்பாமல் இருக்க முடியும்? இவற்றில் எந்தக் கேள்வி அந்தரங்கத்தின் பெயரால் நிராகரிக்கக் கூடியது?

தமிழகத்தில் ‘முதல்வரின் உடல்நிலை நிலவரம் தொடர்பாக தமிழக அரசு அன்றாடம் அறிவிக்க வேண்டும்’ என்ற பேச்சுகள் காதில் பட்டாலே பாவம் என்கிற பாவனை ஆளும் வர்க்கத்திடமிருந்து வெளிப்படுகிறது. தமிழகம் போன்ற முற்போக்கான, வளர்ந்ததாகக் கருதப்படும் ஒரு மாநிலத்திலேயே காணப்படும் இந்தச் சூழல், ஒரு பெரும் ஜனநாயக இழுக்கை அம்பலப்படுத்துகிறது. சுதந்திரத்துக்கு 70 ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட, இன்னமும் ஜனநாயகம் என்கிற அமைப்பை அணுக இந்தியர்களாகிய நாம் எந்த அளவுக்குத் திராணியற்றவர்களாக இருக்கிறோம் என்பதே அது. ஏழு கோடி மக்கள் பயணிக்கும் ஒரு வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் பொறுப்பில் இருப்பவர் உடல்நலம் குன்றியிருக்கும் சூழலில், அந்த வாகனத்தின் பாதுகாப்பு தொடர்பாகக் கவலைப்படுவதை ஒரு தனிமனித விஷயம் என்று கண்மூடித்தனமாகப் புறந்தள்ளுபவர்களை எப்படி ஜனநாயகச் சமூகத்தின் ஒரு அங்கமாகக் கருத முடியும்?

மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு விளக்கம் அளிக்கும் கட்டாயம் சட்டரீதியாக இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால், தார்மிகரீதியில் அவர்களைக் கேள்வி கேட்கவும், அவர்களை விளக்கம் அளிக்க வைக்கவுமான உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கவே செய்கிறது. இந்த விவாதத்தின் மையம் தனிப்பட்ட ஒருவரின் அந்தரங்கம் அல்ல; மாறாக ஒரு அரசின் வெளிப்படைத்தன்மை. இந்தப் புரிதலே ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கும்!


அக்டோபர் 2016, ‘தி இந்து’

4 கருத்துகள்:

 1. பொது வாழ்வு என்று வந்து விட்டபின்னர் உடல் நலம் பற்றி அனைவருக்கும் பகிரங்கமாகத்தெரிவிப்பதில் என்ன தயக்கம்.அதுவும் ஒரு முதல்வர் என்ன நிலையிலே இருக்கிறார் என்பது பரம் ரகசியமாக வைப்பதினால்தான் வதந்திகள் வலம் வருகின்றன.உண்மைகள் உறங்கும் போது வதந்திகள் ஊரவலம் ஆரம்பிக்கிரது என்பது தெரிந்ததுதானே.
  வதந்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட அது பரவ காரணமான உண்மை நிலையை கூறாமல் மூடு மந்திரமாக வைத்திருந்த மருத்துவர்கள்,அமைச்சர்கள்,அரசு நிர்வாகம் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  8நாட்களுக்கு பிறகு செயறகை சுவாசத்தில் ஜெயலலிதா உடல் நலம் தேறி வருகிரது என்று கூறிய அப்பொலோ மருத்துவர்கள் ஜெயலலிதா சிகிச்சைக்காக சேர்ந்த இரண்டாம் நாள் என்ன தெரிவித்தார்கள்?
  சாதாரண காய்ச்சல்,நாளை வீடு திரும்பி விடுவார்.
  இது எந்தவகையில் சேரும்.இதுதான் ஒரு முதல்வரை,கட்சித்தலைவியை பற்றி பரப்பப்பட்ட முதல் வதந்தி.ஆனாலும் ஜெ வீடு திரும்ப காலதாமதமாகத்தானே ஆளாளுக்கு தங்களுக்கு கிடைத்த தகவல்களை பரப்ப ஆரம்பித்தனர்.வத்ந்தியின் ஊற்றுக்கண்ணே அப்போலோவௌம்,அரசும்தான்.

  பதிலளிநீக்கு
 2. "சுதந்திரத்துக்கு 70 ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட, இன்னமும் ஜனநாயகம் என்கிற அமைப்பை அணுக இந்தியர்களாகிய நாம் எந்த அளவுக்குத் திராணியற்றவர்களாக இருக்கிறோம் என்பதே அது."

  பதிலளிநீக்கு
 3. அரசின் வேலைகள் ஏன் அதிரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் ?
  அரசாங்கத்தை ஏழு கோடி மக்கள் பயணிக்கும் ஒரு வாகனத்தோடு ஒப்பிட்டுது அருமை!!!

  பதிலளிநீக்கு