காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?


இந்த வருஷம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நாளில் மேட்டூரில் இருந்தேன். அங்கிருந்து கரையோரமாக பூம்புகார் வரை போய் வரலாமா என்று தோன்றியது. ஆற்றுக்குப் புது வெள்ளம் வரும்போது அதை வரவேற்பதற்கு என்று ஒரு மரபு உண்டு. பேராசிரியர் தங்க.ஜெயராமன் அடிக்கடி அதை நினைவுகூர்வார். “அந்நாட்களில் ஆற்றில் இப்படித் தண்ணீர் வருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே காவிரிப் படுகையில், குடிமராமத்து நடக்கும். ஊர் கூடி ஆற்றைத் தூர்வாரி, இரு கரைகளையும் மேம்படுத்தி, கால்வாய்களையும் வாய்க்கால்களையும் சீரமைப்பார்கள். ஆற்றில் தண்ணீர் வரும் நாளில், காவிரிப் பெண்ணை ஆரத்தித் தட்டுடன் வரவேற்பார்கள். சூடம் கொளுத்திச் சுற்றுவார்கள். அப்படியே விழுந்து வணங்குவார்கள். புது வெள்ளம் நெருங்கியதும் அதன் மீது பூக்களைச் சொரிவார்கள். அவள் நம் வீட்டுப் பெண். அவள் வந்தால்தான் வயல் நிறையும். வீட்டில் அன்னம் நிறையும். செல்வம் பெருகும். ஆறா, அம்மா அவள். மகளாகப் பிறக்கும் தாய்.  அள்ளிக்கொடுக்கும் தாய். தெய்வம். வீட்டு தெய்வம்.” இதை ஜெயராமன் சொல்லி முடிக்கும்போதெல்லாம் அவருடைய கண்களில் நீர் கோத்திருக்கும்.

காவிரிக் கரையையொட்டிப் பயணிப்பது ஒரு பேரனுபவம். எழுத்தாளர்கள் தி.ஜானகிராமனும் சிட்டியும் குடகில் தொடங்கி  பூம்புகார் வரை பயணித்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவிரி..’ புத்தகம் ஒரு தனித்துவமான பதிவு. நான் கல்லணையையொட்டி மழை நாட்களில், தண்ணீர் பொங்கும் நாட்களில் கொஞ்சம் பயணித்ததுண்டு. காவிரியில் தண்ணீர் இல்லா நாட்களில், தண்ணீர் வரும் நாட்களில் பயணித்ததில்லை. அப்படிச் செல்ல நினைத்ததையும் அங்கு பார்க்க நேர்ந்ததையும் என்னவென்று சொல்வது? தீவினை. சபிக்கப்பட்ட ஒரு நாள் அது.

ஆறா? எங்குமே அது ஆறாக இல்லை. கரைகள் தளர்ந்திருந்தன. வழிநெடுகிலும் புதர் மண்டிக் கிடந்தது. இடையிடையே மணல் கொள்ளையர்களின் சூறையாடலைச் சொல்லும் பெரும் பள்ளங்கள். காய்ந்து கிடந்த ஆற்றில் தண்ணீர் தென்பட்ட இடங்கள் அத்தனையும் கழிவுகள் கலக்கும் முகவாய்கள். ஆலைக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள், ஊர்க் கழிவுகள். இவை அத்தனையோடும் புது வெள்ளம் ஒன்றிக் கலக்கிறது. ஆற்றுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான சேதத்தை மூடி நிறைக்கிறது. அடுத்தடுத்த வாரங்களில் வெவ்வேறு காரணங்களுக்காகக் காவிரிப் படுகைக்குச் செல்ல நேர்ந்தது. கல்லணையிலிருந்து இந்த முறை தண்ணீர் திறக்கப்பட்ட நாளில் தஞ்சாவூரில் இருந்தேன். அதே நாளில் கும்பகோணம் சென்றேன். மன்னார்குடி சென்றேன். திருவாரூர் சென்றேன். ஒரு இடத்திலும் தூர்வாரப்பட்டிருக்கவில்லை. எங்கும் புதர்கள், மணற்சூறை, கழிவுகள்... இரு மாநிலங்கள் தீப்பிடித்து எரிகின்றன; ஒவ்வொரு நாளும் இங்கு வந்தடையும் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடியே பெறுகிறோம். இந்தச் சூழலிலும் ஒரு நதியை இப்படித்தான் சீரழிப்போம் என்றால், எவ்வளவு கேவலமானவர்கள் நாம்!


சரியாகப் பத்து மாதங்களுக்கு முன் தாமிரபரணி பெரும் வெள்ளத்தைச் சந்தித்தது. தமிழகத்திலேயே பிறந்து தமிழகத்திலேயே கடலை அடையும் தமிழகத்தின் ஒரே ஜீவநதி. இன்றைக்கு வற்றிவிட்டது. பத்து மாதங்களுக்கு முன் நூற்றாண்டு காணாத வெள்ளத்தில் மிதந்த சென்னை இப்போது அடுத்த சில நாட்களுக்குள் மழை வர வேண்டும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது; சென்னையின் குடிநீர் ஆதாரங்கள் அத்தனையும் கடைசிக் கட்ட இருப்பில் இருக்கின்றன. நேற்று பத்திரிகையில் வெட்கக்கேடான ஒரு படத்தைப் பார்த்தேன். சென்னையின் தண்ணீர் நெருக்கடியை உணர்ந்து ஆந்திர அரசு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறது. அந்தத் தண்ணீர் வந்தடையும் சூழலில் கால்வாய் இல்லை. அவசர அவசரமாகத் தூர்வாரிக்கொண்டிருக்கிறது நம்முடைய பொதுப்பணித் துறை. தண்ணீர் பின்னே தெரிய அதற்குச் சில நூறு அடிகள் முன்னே பொக்லைன் இயந்திரம் தூர்வாரிக்கொண்டிருக்கும் படம். நம்முடைய அலட்சியத்துக்கான வரலாற்று சாட்சியம்.  தமிழ்நாட்டில் அரசு என்று ஒன்று இருக்கிறதா?

நாடு முழுவதும் சுற்றுகிறேன். இந்தியா முழுவதுமே நீர்நிலைகள் பராமரிப்பு மோசமாகிவருகிறது என்றாலும், தமிழ்நாட்டுச் சூழல் பெரும் அவலம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அசாம் சென்றிருந்தபோது பிரம்மபுத்திராவைக் காணச் சென்றிருந்தேன். சீனாவில் உருவெடுத்தாலும் அசாமில்தான் பிரம்மபுத்திரா எனும் பிரமாண்ட நதியாக அது உருவெடுக்கிறது. நாட்டிலேயே பெரியதான பிரம்மபுத்திராவின் முழுப் பிரம்மாண்டத்தைக் காண விரும்பினேன். கார் ஓட்டுநர் பிரம்மபுத்திராவின் கரையில் கொண்டுபோய் நிறுத்தியபோது, அதன் மறு கரை தெரியவில்லை. கடல்போலக் கண்ணுக்கு எட்டிய வரை தண்ணீர். இத்தனைக்கும் அது மழைக்காலம் இல்லை. “அக்கரை தெரியாது. 8 கிமீ. அகலம்” என்றார் ஓட்டுநர். நாம் அகண்ட காவிரி என்று சொல்லும் காவிரியின் அதிகபட்ச அகலம் குளித்தலையில் 1.5 கி.மீ. அதுவும் மிகக் குறுகிய தூரம். அசாமில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை. பத்தடி ஆழம் தோண்டினால் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் என்றார்கள். ஆனால், அசாமில் நான் சென்ற நகரங்கள், கிராமங்கள் அத்தனையிலும் நீர்நிலைகள் சிறப்பாகப் பராமரிக்கப்படுவதைப் பார்த்தேன். மக்கள் குளங்களில் குளிக்கிறார்கள். ஆற்றுத் தண்ணீரைக் குடிக்கிறார்கள். நம்மூர் நிலைமை என்ன?

சுமார் 800 கி.மீ. நீளத்துக்குப் பாயும் காவிரியின் கர்நாடகத் தடம் 320 கி.மீ. தமிழகத் தடம் 416 கி.மீ. தமிழக எல்லைக்குள்பட்ட ஒகேனக்கலில் தொடங்கி பூம்புகார் வரையுள்ள காவிரித் தடத்தில் கர்நாடகத்திலிருந்து வரும் காவிரியின் தண்ணீர் மட்டும் பாயவில்லை. பாலாறு, சென்னாறு, தொப்பாறு, பவானியாறு, நொய்யலாறு, அமராவதியாறு என்று சிறிதும் பெரிதுமாகப் பல ஆறுகள், கால்வாய்கள் அந்தத் தடத்தில் வந்து கலக்கின்றன. காவிரி நடுவர் மன்றம் காவிரியில் நமக்கு ஒதுக்கியிருக்கும் 419 டி.எம்.சி. தண்ணீரில் கர்நாடகத் தரப்பிலிருந்து நமக்கு வர வேண்டியது 192 டி.எம்.சி; மீதி 227 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திலுள்ள காவிரித் தடத்தில் கலக்கும் இந்த ஆறுகள், கால்வாய்கள் வாயிலாகவே பெறுகிறோம். இந்த நீர்நிலைகளின் நிலை என்ன? நம்முடைய உரிமைகளைப் பேசுபவர்கள் ஒருமுறை இந்த ஆறுகள், கால்வாய்களின் கரையையொட்டிப் பயணித்துப் பார்க்க வேண்டும்.

எந்தச் சமூகமாவது சாப்பாட்டுத் தட்டின் ஓரத்தில் கழிவுகளை வலிய எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடுமா? நாம் சாப்பிடுகிறோம்! தமிழகத்தின் உயிர்நாடியான மேட்டூர் அணை அது கட்டப்பட்ட நாட்களில் ஆசியாவின் பெரிய அணைகளில் ஒன்று. காவிரி, தமிழ்நாட்டின் உணவுத் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை நிறைவேற்றுவதோடு, இந்தப் பக்கம் சென்னையிலிருந்து அந்தப் பக்கம் ராமநாதபுரம் வரை 80% குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றவும் மேட்டூர் அணையே உதவுகிறது. அந்த அணையை ஒட்டி எத்தனை ஆலைகள்? எவ்வளவு கழிவுகள்! ஒரு நதியையே முழு விஷமாக்கி அணை கட்டித் தேக்கிவைத்திருக்கிறோம், ஒரத்துப்பாளையத்தில், நொய்யலாற்றை!

எனக்குத் தனிப்பட்ட வகையில் ஒரு கருத்து உண்டு; ரொம்பக் காலத்துக்கு இப்படி நீதிமன்றங்களில் வழக்காடி தண்ணீர் தேவையைத் தீர்த்துக்கொள்ளும் உத்தியை நாம் கையாள முடியாது - தமிழகத்துக்குள்ளான நீராதாரங்களைக் கொண்டே நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளும் வகையிலான கட்டமைப்புக்கு நாம் மாற வேண்டும் என்பதே அது. இன்றைக்கு வரலாற்று நியாயங்களின் அடிப்படையிலேயே நமக்கான தண்ணீரைத் தர வேண்டும் என்று பேசுகிறோம்.  அந்த வரலாற்றின் அடிப்படை என்ன? அந்த நியாயத்தின் அடிப்படை என்ன? ஒருவகையில் அது ஆதிக்க வரலாறு; ஆதிக்க நியாயம்!

ஈராயிரம் வருஷங்களுக்கு முன்பே, காவிரியில் நாம் கல்லணையைக் கட்டிவிட்டோம். கன்னடர்களோ முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு முதல் அணையைக் கட்டினார்கள். 1938-ல் அவர்கள் கிருஷ்ணராஜசாகர் அணையைத் திறந்தார்கள். 1924-ல் காவிரிப் படுகையில், தமிழகம் 16.22 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துகொண்டிருந்தபோது வெறும் 1.40 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்துகொண்டிருந்தது கர்நாடகம். இன்றைக்குக் கிட்டத்தட்ட பதினைந்து மடங்கு சாகுபடிப் பரப்பை அவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். மேலும் பல அணைகளைக் கட்டுகிறார்கள். மேலும் மேலும் சாகுபடி பரப்பைக் கூட்டுகிறார்கள். நாம் எதிர்க்கிறோம். பாரம்பரிய நதிநீர் உரிமை, சட்டங்களையெல்லாம் தாண்டி கொஞ்சம் நமக்குள் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். காலத்தே வளர்ச்சியில் பின்தங்கிய ஒரு மாநிலம் பின்னாளில் தன் வளர்ச்சியை நோக்கி அடுத்தடுத்த அடிகளை எடுத்துவைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? காலத்தே யார் முன்னேறியவர்களோ அவர்களுக்கான முன்னுரிமை என்றும் தொடர வேண்டும் என்ற நியாயத்தைத் தமிழகம் போன்ற ஒரு சமூகநீதி மாநிலம் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பேச முடியும்?

இன்றைக்கு சிந்து நதி உடன்பாட்டில், பாகிஸ்தானுடனான பகிர்வை ஏன் மாற்றிப் பரிசீலிக்கிறோம்? வளரும் காஷ்மீரின் தேவைகளுக்கு ஏற்ப நமக்கான நீரை அதிகம் எடுத்துக்கொண்டு, பாகிஸ்தானுக்கான பகிர்வைக் குறைக்க வேண்டும் என்று எந்த நியாயத்தின் அடிப்படையில் பேசுகிறோம்? இன்றைக்கு இல்லாவிட்டாலும், நாளைக்கு இந்த நியாயமே கோலோச்சும். உலகம் முழுக்க ஆயக்கட்டு உரிமைகளில் கடைமடைப் பகுதிக்கான நியாயம் தலைக்கட்டுப் பகுதிகளால் கேள்விக்குள்ளாக்கப்படும் நிலையில், புதிய சூழலுக்கேற்ப நதிநீர்ப் விவகாரங்களை அணுக நாம் பழக வேண்டும்.

காவிரிப் படுகையில் ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய நிபுணர் குழு “தமிழகத்தின் நீர் மேலாண்மை சரியில்லை; திறனற்ற பாசன முறையைக் கையாள்கிறார்கள்; மாற்றுப் பயிர்களையும் யோசிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறது. இதைப் பல பத்தாண்டுகளாகச் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறார் நீரியல் நிபுணர் ஜனகராஜன். “நம்முடைய நீராதாரங்களைச் சீரமைப்பதன் மூலமாகவே தமிழகத்தின் மூன்றில் ஒரு பகுதி நீர்த் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள முடியும்; காலத்துக்கேற்ற மாற்றுப் பயிர்கள், சிக்கனமான பாசன முறைகளுக்கு மாறுவதன் மூலம் தண்ணீர்த் தேவையையும் கணிசமாகக் குறைக்க முடியும்” என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறார் ஜனகராஜன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கிகூட இப்படி காவிரி நீர்த்தடத்தை மீட்டுருவாக்கும் ஒரு திட்டத்தை முன்வைத்தது. தமிழக அரசின் அலமாரிகள் ஏதேனும் ஒன்றில் அது தூங்கிக்கொண்டிருக்கலாம்.

தமிழக அரசியல் மணல் கொள்ளையில் புரளுகிறது. தமிழர்களின் அலட்சியம் நீர்நிலைகளில் கழிவுகளாக வெளிப்படுகிறது. அது காவிரியோ, கிருஷ்ணாவோ, முல்லைப்பெரியாறோ நதிநீர்ப் பகிர்வில் நமக்குள்ள உரிமைகள் தனி. அவற்றை நாம் பறிகொடுப்பதற்கில்லை. ஆனால், முஷ்டி முறுக்கி உரிமைகளைப் பேசுவதற்கான தார்மிகத் தகுதி என்று ஒன்று இருக்கிறது. அது நமக்கு இருக்கிறதா என்ற கேள்வியைத் தமிழினம் தன் மனசாட்சியின் நேர் நின்று கேட்டுக்கொள்ள வேண்டும்!


அக்டோபர், 2016,  ‘தி இந்து’

23 கருத்துகள்:

  1. சுடும் உண்மை. மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. படிக்கப் படிக்க நெஞ்சு கொதிக்கிறது. வயிறு எரிகிறது.

    பதிலளிநீக்கு
  3. படிக்கப் படிக்க நெஞ்சு கொதிக்கிறது. வயிறு எரிகிறது

    பதிலளிநீக்கு
  4. தங்கள் கருத்தோடு முழுவதும் உடன்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் கருத்தோடு முழுவதும் உடன்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வளர்ச்சி அடுத்தவன் வயிற்றில் அடித்து வர கூடாது ...காவேரி தமிழ் நாட்டில் ஓடும் பரப்பளவு தான் அதிகம், மேலும் நெல் விவசாயம் செய்ய ஏற்ற சூழல் தமிழ் நாட்டில் தான் உள்ளது. கன்னடர்கள் கரும்பு தான் அதிகம் பயிருடிகிறார்கள். அதை அவர்கள் அதிகம் செய்ய விரும்ப காரணம் கோகோ கோலா, பெப்சி மற்றும் சாராய நிறுவனங்களுக்கு தேவையான சக்கரை மற்றும் மொலைசிஸ் கொள்முதல். பெங்களூரில் இருந்த அணைத்து ஏரி குளத்திலும் அடுக்கு மாடி கட்டி விட்டு இப்போது குடிக்க தண்ணி என்று தமிழன் பங்கை திருடுவது தான் முன்னேறும் மாநிலமா? பெங்களூர் எந்த காவிரி கரையில் ஐயா இருக்கிறது?? இதை கூட புரிந்து கொள்ளாமல் கட்டுரை என்று எதையோ எழுதி தமிழர்களின் உரிமை போராட்டத்தை கொச்சை படுத்த வேண்டாம். தமிழர்களை நீங்கள் முட்டாளாக படுவதில் என்ன தப்பு என்று சொல்லி சொல்லியே எங்கள் உணர்ச்சிகளை மழுங்கடித்து விட்டீர்கள். ஆறு ஓடினாள் எவன் எப்படி மண் அள்ளுவான்

    பதிலளிநீக்கு
  7. "காலத்தே வளர்ச்சியில் பின்தங்கிய ஒரு மாநிலம் பின்னாளில் தன் வளர்ச்சியை நோக்கி அடுத்தடுத்த அடிகளை எடுத்துவைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? காலத்தே யார் முன்னேறியவர்களோ அவர்களுக்கான முன்னுரிமை என்றும் தொடர வேண்டும் என்ற நியாயத்தைத் தமிழகம் போன்ற ஒரு சமூகநீதி மாநிலம் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பேச முடியும்?"

    This is why Samas is 'The Samas'.

    பதிலளிநீக்கு
  8. இக்கட்டுரையில் உடன்பாடு இல்லை...
    அரசு எந்திரத்தையுயம், தனி நபர் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளையும் பார்த்து கேட்கப்பட வேண்டிய இந்த கேள்வியை மக்களை பார்த்து கேட்பதில் நியாயம் இல்லை. இதன் உள்நோக்கம்
    மக்களின் போராட்ட குனத்தை நீர்த்து போகச்செய்வதுதான். உங்களுக்கு பத்திரிக்கைக்கு தைரியமும், நேர்மையும் இருக்குமானால் நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும், சீரழிக்கும் தனி நபர்களை தினம்தோரும் வெளிச்சம் போட்டு காட்டுங்கள், அதை விடுத்து மக்களை குறைகூறும், மக்களின் போராட்ட குணங்களை மழுங்கடிக்கும் இதுபோன்ற நொண்டி கட்டுரைகளை வெளியிடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமஸ் மக்களிடம் போராடும் குணம் வரவேண்டும் என்றுதான் நம்மிடம் கேள்வி கேட்கிறார். நாம் தான் போராட வேண்டும் குரல் எழுப்ப வேண்டும் மணல் கொள்ளைக்கும் உரிமைக்கும்

      நீக்கு
  9. https://www.facebook.com/thirumurugan.gandhi/posts/10210825312452406

    பதிலளிநீக்கு
  10. ஒரு நாடுட்டு மக்கள் எப்படியோ அதேபோல்தான் அந்தநாடும் இருக்கும்
    இந்த நாட்டை சீரைத்தவர்கள் இந்நாட்டு மக்களெ
    இந்த நாட்டில் அறசாங்கம் சரி இல்லை என்றால் அந்த அரசாங்கத்தை தேர்ந்துடுத்த மக்கலையே சாறும்
    ஓட்டுக்கு பணம் வாங்கும் கேவலம் இந்த நாட்டில்தான் நடக்கிறது இது ஒன்றே போதும் நம்மை பற்றி அரிய.

    பதிலளிநீக்கு
  11. இதே content உடன், சமஸ் அவர்களின் முழு நடு பக்க (page 9) கட்டுரையை இன்றைய (21 Oct 2016) இந்து தமிழ் நாளிதழில் படித்தேன் மிகவும் அருமையான பதிவு.

    தமிழ் நாட்டில் எந்த தலைவருக்கும் சமூகத்தின் எதிர்கால நலனில் அக்கறை இல்லை, or உன்மையிலேயே அப்படி அக்கறை உள்ள நபர்களை நாம் அங்கீகரிக்க வில்லை.

    இங்கே தனியாக தலைவர்களை குறை சொல்ல முடியாது, நமக்கு தேவை எல்லாம் 3 மாசமே உழைக்கிற இலவச TV இலவச மிக்சி FAN... ப்ள ப்ள...

    நமது கூட்டு எண்ணத்தின் பிரதிபலிப்பே நாம் தேர்தெடுத்த தலைவர்கள்.

    இதில் வேறு மோடி ஏன் இன்னும் 3 லட்சம், எல்லா இந்தியர் கணக்கிலும் போட வில்லைனு பிரச்சாரம் ஒரு பக்கம், நாமும் வாயை பிளந்து அதையும் ரசிப்போம்.

    திருட்டுத்தனமாக வெளிநாடுகளில் பதுக்கபட்ட பணத்தின், அந்த ஊழல்களின் பிரமாண்டத்தை உணர்த்துவதற்காக சொல்லப்பட்டதை, திரித்து 3ம் தர அரசியல் செய்கிறார்கள் என்பதை கூட நாம் உணர்வதில்லை.

    நமக்கு எதுக்குங்க இந்த இலவசமும்
    ஊழலில் சேர்த்த அந்த பாவ பணமும். நாம் வாழ தேவையானதை கூட சம்பாதிக்கும் திறன் இல்லாத முடவர்களா நம் மொத்த சமுகமும்.

    OK back to Kavery issue....
    இந்த சமஸ் அவர்களின் கட்டுரையின் தலைப்பு
    "காவிரியில் நமக்கு உரிமை இருகிறது சரி, உரிமையை பேசும் தகுதி நமக்கு இருக்கிறதா..." realy, is a very brave topic as on today... because...
    இந்த திசையில் யோசித்தாலே நாம் தமிழின விரோதியாக முத்திரை இடப்படுகிறோம்.

    சரி, Social responsibility யை ஜப்பானிடம் கற்க வோண்டாம், அது நம்மால் முடியாது விடுங்க. இங்கே பக்கதிலேயே இருக்கும் கர்நாடகத்தில் இருந்து, ஒரு 10% ஆவது நம் கற்க முயற்சிக்க கூடாதா....

    கட்டுரை தகவல் படி 1924 ல் இருந்த சாகுபடி பரப்பை போல இன்றைக்கு கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகரித்திருகிறார்கள்.
    ஆனால் தமிழகத்தின் நெற்கலஞ்சியதிலேயோ மிக மிக விரைவிலேயே விவசாயம் என்பதே கேள்விகுறியாக போகிறது.

    இன்றைக்கும் அதிக மழை பெய்து காவிரியில் வெள்ளம் வந்தால் தமிழகத்தில் 90% தண்ணீரை கடலில்தான் கலக்க விட்டு வீனடிக்கிறோம்.

    இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நம் புவியியல் சாதகமின்னையை மட்டுமே சாக்கு சொல்லிக்கொண்டிருக்க போகிறோம்.

    முழு பாலைவன நாடான இஸ்ரேலேலால் கூட தண்ணீர் தன்நிறைவு அடைய முடியும் போது. நமது சாதகமான புவியியல் அமைப்பில் அதை விட மிக மிக எளிதாக அடைய முடியும்.

    ஆக தற்போதைய அத்தியாவசய தோவை எல்லாம் அக்கறையுள்ள தொலைநோக்குள்ள தலைவர்களை தேடி (!) அங்கீகரிப்பதுதான்.
    அதற்கு முதல் படி, நாம் முதலில் இந்த "இலவச" மற்றும் "விலைஇல்லா" மாயையில் இருந்து மீள்வதுதான்... நான் உட்பட..... நன்றி...

    பதிலளிநீக்கு
  12. இப்படி எழுத உனக்கென்ன மன்னிக்கவும் உங்களுக்கென்ன தகுதி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. வயல் வைத்திருக்கிறாய இல்லை வரப்பு வெட்டியிருக்கிறாயா வானம் பார்த்து விவசாயம் தான் செய்திருக்கிறாயா பேனாவை வைத்து எழுதி பிழைப்பை நடத்து சோற்றில் கைவைக்கும் போது உன் வயிறு குமட்டட்டும் போராடி பெறுவதால் உரிமையை விட்டுவிடலாம அப்படினா என் காஷ்மீருக்கா 365 நாளும் அடிச்சிக்கனும் விட்ரலாம்ல.அரசு இயந்திரம் தவறு என்றால் அதை சாடு அதை விட்டுட்டு ஒட்டு மொத்த தமிழனும் தப்பு இவங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு எழுதுன நடக்கறதே வேறு.நானும் விவசாயி மகன் அப்டினு இருந்தா எத்தனை வாய்க்காலை தூர்வார முயற்சி பண்ண சும்மா இந்து எவ்ளோ குடுத்தான் அவன் எவ்ளோ குடுத்தாலும் அத வச்சி அரிசி பருப்பு தானே வாங்குவ விவசாயிக்கு நல்லது பண்ணாட்டியும் கெட்டது பண்ணாத எப்பவும் போல நடிகைக்கு திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதரதோடு நிருத்திக்க.

    பதிலளிநீக்கு
  14. சமஸோட இந்த கட்டுரைக்கு நிறைய எதிர்வினைகள இணையதளத்துல பார்க்க முடியுது. நல்ல விஷயம். தப்பு சமூகத்து மேலன்னு சொன்னதால, சமூகத்தோட பிரதிநிதிகளா கொஞ்ச பேரு கொதிச்சதையும் பார்க்க முடியுது. சந்தோஷம். இந்த அளவுக்கு எதிர்வினையாற்றும் சிலருக்கு ஒன்னு சொல்லனும்... பத்திரிகையில, பேனா பிடிச்சு எழுதரவங்களுக்கு அது மட்டும்தான் தெரியும். அந்த பேனா மூலமாத்தான், சமூகத்துல நடக்கற அவலங்கள சுட்டிக்காட்ட முடியும். சமூகத்துல நடக்கற அவலங்கள சுட்டிக்காட்டும்போது, அந்த சமூகத்துல நாமும் ஒன்னுதான்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கனும். அப்போதான் நடக்கற அந்த தப்ப திருத்தவோ, திருத்துவதுக்கான முயற்சியோ எடுக்க முடியும். அத விட்டுட்டு, சமூகத்துல நடக்கற தப்ப எப்படி நீ சுட்டிக்காட்டலாம்.. நீ தமிழின துரோகின்னு சிலபேரு கிளம்பினா... அப்புறம் இந்த சமூகத்துல நடக்கற தப்புகள சுட்டிக்காட்ட எந்த பேனாக்காரனும் முன்வர மாட்டான். முதல்ல நம்ம வீட்ட சுத்தமா வச்சுக்கனும்... அப்புறமா வீதியையும், அதுக்கு அப்புறமா ஊரையும் சுத்தமா வச்சுக்க குரல் கொடுக்கலாம். ஆனா வீட்ட நாறடுச்சுட்டு, வீதிய மட்டும் சுத்தமாக்குன்னா என்ன அர்த்தம் அப்படீன்றதுதான் இந்த கட்டுரையோட சாராம்சம். அத புரிஞ்சுகிட்ட சிலபேருதான் அங்கங்க ஏரி, குளங்கள தூர்வாரக் கிளம்பியிருக்காங்க... புரியாத சிலபேரு இங்க சமஸுக்கு எதிரா விமர்சனம் செஞ்சிகிட்டு இருக்காங்க... உங்களால முடிஞ்சா நீர்நிலைகள பாதுகாக்கற, அத மீட்டெடுக்கற வேலையில இறங்குங்க. - ராசு.கந்தசாமி.

    பதிலளிநீக்கு
  15. Does your Hindu Karanataka Version had a story pointing out brutal attacks on innocent tamils and thier livelihood or atleast telling karantaka that they are doing harm to the integrity of this nation by going against Superme Court....:)
    I would bet that there wont be any article on those lines...The Hindu & Samas at last tamils now started realising your real intention.

    பதிலளிநீக்கு
  16. உங்களோட ஆழமானக் கருத்துக்கள் நம் தமிழக அரசை, அரசியல்வாதிகளை , மணற்கொள்ளையர்களை, ஆற்றைத் தூர்வாராமல் விட்ட பொறுப்பற்றவர்களை இன்னும் சிந்திக்க வைக்கலேன்னுதான் சார் வேதனையா இருக்கு......இவங்கள்ளாம் திருந்த சாத்தியமே இல்லன்னு ஒவ்வொரு நாளும் நமக்கு நிரூபிச்சிகிட்டுதான் இருக்காங்க..அதான் சார் இளைய தலைமுறையா இருக்குறவங்கதான் இனி நாட்டை எல்லாவிதமான சீரழிவுகளிருந்தும் நாட்டைக் காப்பாத்த போராடனும்...அவங்களால முடிஞ்சத செய்யனும்... அவங்க அவங்கப் பகுதியில இருக்குற நீர் நிலைகள பாதுக்காக்கனும்...ஆக்கிரமிப்புகளைத் தடுக்கனும்....நாங்க கண்டிப்பா செய்வோம்....ஒவ்வொருத்தரும் முன்வரணும்...மழை நீரைச் சேகரிக்கனும்..நீருக்காக அடுத்த மாநிலத்திடம் கையேந்துறதும், உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கே மரியாதை இல்லாமல் போறதையும் பார்த்துகிட்டு கைகட்டி நிக்குற நிலைமை இனியும் வரக்கூடாது.

    பதிலளிநீக்கு
  17. உங்களோட ஆழமானக் கருத்துக்கள் நம் தமிழக அரசை, அரசியல்வாதிகளை , மணற்கொள்ளையர்களை, ஆற்றைத் தூர்வாராமல் விட்ட பொறுப்பற்றவர்களை இன்னும் சிந்திக்க வைக்கலேன்னுதான் சார் வேதனையா இருக்கு......இவங்கள்ளாம் திருந்த சாத்தியமே இல்லன்னு ஒவ்வொரு நாளும் நமக்கு நிரூபிச்சிகிட்டுதான் இருக்காங்க..அதான் சார் இளைய தலைமுறையா இருக்குறவங்கதான் இனி நாட்டை எல்லாவிதமான சீரழிவுகளிருந்தும் நாட்டைக் காப்பாத்த போராடனும்...அவங்களால முடிஞ்சத செய்யனும்... அவங்க அவங்கப் பகுதியில இருக்குற நீர் நிலைகள பாதுக்காக்கனும்...ஆக்கிரமிப்புகளைத் தடுக்கனும்....நாங்க கண்டிப்பா செய்வோம்....ஒவ்வொருத்தரும் முன்வரணும்...மழை நீரைச் சேகரிக்கனும்..நீருக்காக அடுத்த மாநிலத்திடம் கையேந்துறதும், உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கே மரியாதை இல்லாமல் போறதையும் பார்த்துகிட்டு கைகட்டி நிக்குற நிலைமை இனியும் வரக்கூடாது.

    பதிலளிநீக்கு