தமிழர்கள் ஜல்லிக்கட்டு நடத்த சரியான இடம் எது?


முதன்முதலில் ஜல்லிக்கட்டை நேரில் காணச் சென்றபோது, எனக்கு ஏமாற்றமாக இருந்தது. கிட்டத்தட்ட நீதிமன்றத்துக்குப் போன முதல் அனுபவத்துக்கு இணையானது அது. ஊரே கூடி நிற்க, யாரையும் நெருங்க விடாத ஒரு காளையையும், அதன் முன் குதித்து, தன் பார்வையாலேயே அதை மிரட்டி, தனியொருவனாக அடக்கி, மண்டியிடவைக்கும் இளைஞரையும் எதிர்பார்த்துச் சென்றிருந்தேன். ஒரு ஊர் கூட்டம் அல்ல; பத்து ஊர்க் கூட்டம் கூடி நின்றது. வெவ்வேறு சீருடைகளில் அணிஅணியாக வீரர்கள் நின்றனர். எல்லோர் கவனமும் வாடிவாசல் நோக்கி இருந்தது. ஏகப்பட்ட முஸ்தீபுகளுக்குப் பின், வாடிவாசல் திறக்கப்பட்டபோது காளை சீறி வந்தது. வீரர்கள் கூட்டம் கூட்டமாகத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். பலர் காளை திரும்பிப் பார்த்த மாத்திரத்திலேயே ஓடி ஒதுங்கினார்கள். சிலர் பதுங்கினார்கள். சிலர் மட்டும் விடாது துரத்தினார்கள். காளையின் திமிலைப் பிடித்தவாறே இறுதி வரை ஓடியவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். “சரிண்ணே.. ஜல்லிக்கட்டு எப்போ ஆரம்பிக்கும்?” என்று அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டு அண்ணனிடம் கேட்டபோது அவர் என் தலையில் தட்டினார். “சினிமா பார்த்து எல்லாமே நிஜம்னு நம்புறவனாடா நீ!”

கொஞ்சம் வளர்ந்த பின்னர், ஜல்லிக்கட்டை மொட்டைமாடியில் நின்று பார்த்த காலம் போய், திடலுக்குப் பக்கத்தில் நின்று பார்க்கும் காலமும் வந்தது. சினிமாவில் காட்டுவதுபோல, காளையை எதிர்த்து நின்று கொம்புகளைப் பிடித்து அடக்குவது அல்ல; அந்தத் திடலில் சீறிவரும் காளைக்கு முன் நிற்பதே ஒரு சாகசம் என்பது புரியவந்தது. அது வேறு ஒரு கணம். வேறு ஒரு மனம்.

ஒரு பத்திரிகையாளனாக என்னுடைய அனுபவத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் எத்தனையோ ஜல்லிக்கட்டுகளைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் பெரும் தொகையில் காயமடைவது மனிதர்களாகத்தான் இருந்திருக்கிறார்களே அன்றி, மாடுகள் அல்ல. எனக்கு சாகசங்களில் நம்பிக்கை கிடையாது. அதன் பொருட்டு சாகசமே கூடாது என்று சொல்ல நான் யார்? தவிர, எது சாகசம் என்பதை யார், எந்த அடிப்படையில் தீர்மானிப்பது? விமானப் பயணம் என்றால், எனக்கு உதறல். ஏனைய எந்தப் போக்குவரத்தைக் காட்டிலும் விமானப் போக்குவரத்தே குறைந்த விபத்துகள் நடப்பதும் பாதுகாப்பானதுமாகும் என்று புள்ளிவிவரத்தோடு சொல்லும் நண்பர்கள் உண்டு. ஒரு பாதசாரியாக சென்னை சாலைகளைக் கடப்பது விமானப் பயணத்தைக் காட்டிலும் அபாயகரமானது.

மனிதர்கள், மாடுகள் இரு தரப்பினருக்குமே ஆபத்து விளைவிப்பதாக ஜல்லிக்கட்டு நடந்த காலகட்டம் ஒன்று இருந்தது. அரசு தலையீட்டின்பேரில் ஏராளமான விதிகள், கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்ட பின்னர் சூழல் மேம்பட்டது. இன்னும்கூட ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஒருவேளை தமிழர்கள் `எதற்கு இந்த முரட்டு விளையாட்டு?` என்று யோசித்து ஜல்லிக்கட்டுக்குத் தாமாகவே விடை கொடுத்தாலோ, காலப்போக்கில் அதுவாகவே வழக்கொழிந்தாலோ நான் சந்தோஷப்படுவேன். ஆனால், மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்கிற பெயரில் ஜல்லிக்கட்டு  முடக்கப்படுவது அபத்தம்.

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட பிந்தைய சில ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை நெருங்கும்போது, கிராமப்புறத் தமிழகம் கொந்தளிப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தக் கொந்தளிப்பு இயல்பானது. விவசாயிகளுக்கு மாடுகளுடனான பிணைப்பைக் கிராமப்புறங்களைத் தாண்டி இருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாது. மனிதர்களுக்கு இணையாக, மாடுகளுக்கும் பிரத்யேகமாக ஒருநாள் மாட்டுப் பொங்கல் நிர்ணயித்துக் கொண்டாடும் சமூகம் இது. இன்றளவும் கிராமப்புறத் தமிழகத்தில் இரண்டாம் நாள் பொங்கலே முதல் நாள் பொங்கலைக் காட்டிலும் விசேஷமானது. நவீன உழவில் காளைகளுக்கான தேவை அழிக்கப்படலாம்; பால் தேவையும் உற்பத்தியும் விசுவரூபம் எடுத்திருக்கிறது. மாடுகள் இன்றி கிராமப்புறப் பொருளாதாரம் இல்லை.

ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்று கேட்டுத் தெரிந்துகொண்டு, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “இந்த நவீன யுகத்தில் ஜல்லிக்கட்டை ஏன் கணினியில் விளையாடக் கூடாது? காளைகளுக்குப் பதில் சிங்கங்களைத் தருகிறோம், அடக்குகிறீர்களா?” என்று கேட்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகர்ப்புற மேட்டிமைப் பார்வையின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்கத் தோன்றுகிறது.

இப்போதெல்லாம், ‘விலங்குகள் நல ஆர்வலர்’என்ற பெயரில் உலவுபவர்களைக் கண்டாலே எனக்குப் பயந்துபோகிறது. உலகத்தில் வெறிவிலங்குக்கடியால் (ரேபிஸ்) உயிரிழப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள். ஆண்டுக்கு இங்கு 20,000 பேர் சாகிறார்கள். பெரும் பகுதி ஏழைக் குழந்தைகள்; நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்கள். யாரிடம் நியாயம் கேட்பது? நாய் நலவிரும்பிகள் என்ற பெயரில் சுற்றுபவர்கள் நாடு முழுக்கச் சுற்றும் மூன்று கோடித் தெரு நாய்களையும் தத்தெடுத்துக்கொள்வார்களா? குதிரை வண்டிகள் வழக்கொழிந்த பின்னர், பெருநகரங்களில் சாரட் வண்டிகளை வைத்துச் சில குடும்பங்கள் பிழைத்துவந்தன. மும்பையில் குதிரை நலவிரும்பிகள் வழக்குத் தொடர்ந்து நீதிமன்றத் தடை வாங்கினார்கள். எழுநூறு குடும்பங்கள் பிழைப்பற்றுப்போயின. இன்றைக்கு அந்தக் குதிரைகள் இருக்கின்றனவா, செத்தனவா என்றுகூட யாருக்கும் தெரியாது. இப்போது மாடுகள் சிக்கிச் சீரழிகின்றன. இன்றைக்கு மாட்டினம் எதிர்கொள்ளும் பெரிய துயரம், ஜல்லிக்கட்டு அல்ல. மாடுகளை இணை சேரவிடாமல் தடுத்து, ஊசி மூலம் செயற்கைக் கருவூட்டி, வெறும் பால் உற்பத்தி இயந்திரங்களாக அவற்றை உருமாற்றிக்கொண்டிருக்கும் சந்தைக் கலாச்சாரமே அவை எதிர்கொள்ளும் பெரும் கொடுமை. காளைகளுக்கான தேவையையே இது அழித்தொழிக்கிறது.

முதல் முறை காட்டுக்கு அழைத்துச்சென்றபோது அங்கு மான்களைக் கண்ட என்னுடைய மகள் சொன்னாள், “அய்யோ.. மான்கள் எவ்ளோ அழகு! புலிகள் மட்டும் இல்லாமல் இருந்தால் இந்த மான்கள் இன்னும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!” உடன் வந்த வனத் துறை நண்பர் சொன்னார், “பாப்பா நீ நினைப்பது தவறு. புலிகள் இல்லாவிட்டால் இந்த மான்கள் பெருகும். விளைவாக, இங்குள்ள புற்கள், தாவரங்கள் சீக்கிரமே அருகிப்போகும். பின்னர், தீனியின்றி மானினமும் அழிந்துபோகும். புலிகள் மான்களை வேட்டையாடுவதால், மானினம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதுவே அதற்கான தீனியையும் பாதுகாப்பில் வைத்திருக்கிறது. ஆக, புலிகளால் மானினமும் வனமும் பாதுகாக்கப்படுகிறதே அன்றி அழியவில்லை.”

இதுதான் இந்த உலகம் உயிர்த்திருப்பதற்கான மையப்புள்ளி. மாடுகள் பயன்படுவதாலேயே மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. மனிதர்கள் காளைகளை வயல்களிலும் சாலைகளிலும் இறக்குகிறார்கள். பசுக்களிடமிருந்து பாலைக் கறக்கிறார்கள். மாட்டை வணங்குகிறார்கள். மாட்டை உண்ணவும் செய்கிறார்கள். ஒரு வகையில் இது சுரண்டல். ஆனால், மறுவகையில் இதுவே மாட்டினம் உயிர்த்திருப்பதற்குமான அடிப்படை. தேவைதான் இருத்தலைத் தீர்மானிக்கிறது. மாட்டைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், மாட்டிறைச்சிக்கு எதிராகவும் ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் கூக்குரலிடுவது வெவ்வேறு குழுக்களாக இருக்கலாம். அடிப்படையில் பன்மைத்துவத்தை மறுக்கும், அறியாமையும் மேட்டிமைவாதமும் நிரம்பிய அடிப்படைவாதத்தின் இருவேறு குரல்களே இவை.

இந்த நாட்டைப் பன்மைத்துவத்திலிருந்தும் அதிகாரப் பரவலாக்கத்திலிருந்தும் விடுவித்து, டெல்லியில் சகல அதிகாரங்களையும் குவிப்பதில் மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல உச்ச நீதிமன்றம் என்பதையே இதுவரையிலான வரலாறு நமக்குச் சொல்கிறது. தமிழகத்தின் முன்னோடியான சமூக நீதிக் கொள்கைகளில் தொடங்கி, நம்முடன் நீதிமன்றம் மல்லுக்கு நிற்கும் எவ்வளவோ விஷயங்களைப் பட்டியலிடலாம். நாம் நீதிமன்றத்துடன் போராடுவது வீண் வேலை. அவை சட்டப்படிதான் செயல்பட முடியும். எந்தச் சட்டங்கள் நம்முடைய உரிமைகளைப் பறிக்கின்றனவோ அந்தச் சட்டங்களுக்கு எதிராக, சட்டமியற்றும் மன்றங்களில் நம் கைகளை நாம் உயர்த்த வேண்டும். தமிழர்கள் இப்போது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டிய இடம், திடல்கள் அல்ல; உச்ச நீதிமன்றமும் அல்ல; அது நாடாளுமன்றம்!

ஜனவரி, 2017, `தி இந்து`

8 கருத்துகள்:

  1. சமஸ் உங்கள் கட்டுரை அருமை கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு ஜல்லிக்கட்டு குறித்த தெளிவான பார்வை இல்லை.ஆனால் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் எதிர்பார்கிறேன் .தற்போது ஜல்லிக்கட்டுக்காக சென்னை கடற்கரையிலும் தமிழகத்தின் பிற இடங்களிலும் தன்னிச்சையாக கூடிய இளைஞர்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?உண்மையில் ஜல்லிக்கட்டு குறித்த முழு பார்வையுடன் தான் அவர்கள் போரடுகிறார்களா இல்லை போராட்டத்தில் கலந்து கொண்டோம் என படம் எடுத்து பேஸ்புக்கில்,வாட்ஸ்அப்பில் போடும் செல்பி கலாச்சாரமா?

    பதிலளிநீக்கு
  2. சமஸ் உங்கள் கட்டுரை அருமை கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு ஜல்லிக்கட்டு குறித்த தெளிவான பார்வை இல்லை.ஆனால் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் எதிர்பார்கிறேன் .தற்போது ஜல்லிக்கட்டுக்காக சென்னை கடற்கரையிலும் தமிழகத்தின் பிற இடங்களிலும் தன்னிச்சையாக கூடிய இளைஞர்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?உண்மையில் ஜல்லிக்கட்டு குறித்த முழு பார்வையுடன் தான் அவர்கள் போரடுகிறார்களா இல்லை போராட்டத்தில் கலந்து கொண்டோம் என படம் எடுத்து பேஸ்புக்கில்,வாட்ஸ்அப்பில் போடும் செல்பி கலாச்சாரமா?

    பதிலளிநீக்கு
  3. நிஜம்தான், ஒரு பொருளின் அதீத பயன்பாடுதான் அது நிலைத்திருப்பதற்கும் காரணமாய் அமைகிறது.


    காய்ச்சலுக்கு மருந்து அருந்துவதை விடுத்து அதன் மூலத்தை சரி செய்ய வேண்டியதுதான் அவசியம் என்பது போல நாம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டிய இடம் நாடாளுமன்றமே.

    அருமை, வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. அருமையான கட்டுரை. மனிதன் என்றுமே பிற விலங்குகளைத் தன் தேவைக்காகவே வளர்க்கிறான், பயன்படுத்துகிறான், அழிக்கிறான். மாட்டின் தேவை இருக்கும் வரை அது அழியாது. ஆனால், ஏறு தழுவுதல் மட்டும் தானா மாட்டின் தேவை?

    பதிலளிநீக்கு
  5. அருமையான கட்டுரை. மனிதன் என்றுமே பிற விலங்குகளைத் தன் தேவைக்காகவே வளர்க்கிறான், பயன்படுத்துகிறான், அழிக்கிறான். மாட்டின் தேவை இருக்கும் வரை அது அழியாது. ஆனால், ஏறு தழுவுதல் மட்டும் தானா மாட்டின் தேவை?

    பதிலளிநீக்கு
  6. ஆம். தமிழர்கள் தற்பொழுது போராடவேண்டிய இடம் பாராளுமன்றம் மட்டுமே. பெருந்தலைவர் காமராஜர் தனது ஆட்சியில் மனிதர்களுக்காகத்தான் சட்டமே தவிற சட்டத்திற்காக மனிதர்கள் அல்ல என கூறி பொதுமக்களுக்கு இடையூரான ஒவ்வாத சட்டங்களை மாற்றி அமைக்க அரசு அதிகாரிகளுக்கு பலமுறை உத்தரவு இட்டுள்ளார்.எனவே தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் விதத்தில் காளைகளை காட்சிப் படுத்தக்கூடாத பட்டியலில் சேர்த்து இயற்றப்பட்ட சட்டத்தை மாற்ற பாராளுமன்றத்தில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேரந்து போராட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான கட்டுரை.ஆனால் ஜல்லிக்கட்டு உள்ளே சாதியை அமைப்பு மற்றும் மத்திய மாநில அரசுகளின் நிலைபாடு பற்றி எதுவும் இடம்பெறவில்லையே...

    பதிலளிநீக்கு
  8. கட்டுரை மிக்க அருமை.....உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள்....

    பதிலளிநீக்கு