அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருந்தால்தான் என்ன பிரச்சினை?


தமிழ்நாடு சம்பந்தமான கோரிக்கைகளோடு, டெல்லியிலுள்ள அரசப் பிரதிநிதிகளை இங்குள்ளோர் சந்திக்கச் செல்கையில், எங்கள் டெல்லி செய்திப் பிரிவைத் தொடர்புகொண்டு “கொஞ்சம் விசேஷ கவனம் கொடுங்கள்” என்று கேட்டுக்கொள்வது வழக்கம். டெல்லி செய்தியாளர் ஷஃபி முன்னா, விவசாயிகளைப் பொறுத்தமட்டில் கூடுதலான அக்கறை எடுத்துக்கொண்டு உதவக் கூடியவர். அவர்களுடனான அனுபவங்களை அவர் சொல்லும்போது மிகுந்த வலி உண்டாகும்.  “டெல்லி நிலவரம் அரசியல் கட்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்ப சூதானமாக நடந்துகொள்வார்கள். விவசாயிகளின் நிலைமை அப்படி அல்ல. இவ்வளவு பெரிய நகரத்தில், பல்லாயிரக்கணக்கில் கூடாமல், தேசியக் கட்சிகள், ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது சுலபமல்ல. நாடாளுமன்ற வளாகம், பிரதமர் – அமைச்சர்கள் வீடுகள், காங்கிரஸ், பாஜக அலுவலகங்கள் அமைந்திருக்கும் ‘லூட்டியன்ஸ் டெல்லி’ பகுதியில் பலத்த பாதுகாப்பு இருக்கும். கையில் கொடியுடனோ, பதாகைகளுடனோ போராட்டக்காரர் தோரணையில் யாராவது தென்பட்டாலே, சாலையில் வரிசையாக நிற்கும் பாதுகாப்புப் படையினர் அவர்களைப் பிடித்து ஜந்தர் மந்தருக்கு அனுப்பிவிடுவார்கள். ஜந்தர் மந்தர் சூழல்தான் உங்களுக்குத் தெரியுமே, அங்கே போனால், அங்குள்ள சூழலைப் பார்த்து வெறுத்துப் போய் ஊருக்குத் திரும்பும் மனநிலை தானாக வந்துவிடும். பாவம் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில்தான் இங்கே வந்து போராடுகிறார்கள்” என்பார் ஷஃபி முன்னா.ஆர்ப்பாட்டக்காரர்களின் பிராந்தியம் ஜந்தர் மந்தர். கடும் வெயிலுக்கும் மழைக்கும் பனிக்கும் அஞ்சாமல், கூடாரம் போட்டு வருடக்கணக்கில் கோரிக்கைகளோடு உட்கார்ந்திருக்கும் போராட்டக் குழுக்கள் அங்கு உண்டு. யாரையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒருகட்டத்தில் போராட்டமே வாழ்க்கையாகி, மனம் பிறழ்ந்து, வாழ்க்கை தொலைத்து கசந்த கண்களோடு பத்து பதினைந்து வருடங்களாக உட்கார்ந்திருப்பவர்களையெல்லாம் நான் சந்தித்திருக்கிறேன். இந்திய ஜனநாயகம் தன்னுடைய போராடும் மக்களுக்கு அப்படியொரு இடத்தைத்தான் இன்று ஒதுக்கியிருக்கிறது. இது ஒருபுற சவால். இன்னொருபுற சவால் இப்படிப் போராட்டத்துக்கு என்று கூட்டிவரும் ஆட்களைப் பராமரிப்பது. ஒரு கூட்டத்தை அழைத்துச் சென்றால், அழைத்துச் செல்பவரே பெரும்பாலும் எல்லாச் செலவுகளையும் சமாளிக்க வேண்டும். “போராட்டம் முடிஞ்சு கடைசி நாள் டெல்லியைச் சுத்திப் பார்த்துட்டு வரலாம், அப்படியே ஆக்ரா போய்ட்டு வரலாம்... இப்படியெல்லாமும் சொல்லிதான் ஆளுங்களைத் திரட்ட வேண்டியிருக்கு. பத்து பதினைஞ்சு நாள், அதுவும் சிறையில பிடிச்சுப்போயிட்டாலும் அஞ்சாம டெல்லியில தாக்குப் பிடிக்கணும்கிற சூழல்ல துணிஞ்சு வர்றவங்க குறைச்சல். என்ன கஷ்ட நஷ்டம்னாலும் ஊருல போராடுறதோடு முடிச்சுக்குவோம்னு நெனைக்கிறவங்கதான் ஜாஸ்தி. ஆனா, ஊருல போராடிப் பெரிய பிரயோஜனம் இல்ல. எல்லா அதிகாரத்தையும் டெல்லில குவிச்சுட்டு, ஊருல போராடி என்ன பயன்? பெரிய கஷ்டங்களுக்கு மத்தியிலதான் இப்படிப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கு” என்று சொல்லாத விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் இல்லை.

வறட்சி நிவாரணம், வங்கிக் கடன் ரத்து என்றெல்லாம் மேலோட்டமாகக் கூறினாலும், விவசாயிகளின் உண்மையான உளக்கிடக்கை வேறு. ‘நாளுக்கு நாள் நொடித்துக்கொண்டிருக்கும் இந்தத் தொழிலை எப்படியாவது நிமிர்த்திவிட முடியாதா, அரசாங்கத்தை ஒரு பெரிய கொள்கை மாற்றத்துக்குத் திருப்பிவிட முடியாதா?’ எனும் பெரிய ஏக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அது. நான் கிராமப்புறங்களுக்குச் செல்லும்போதெல்லாம், விவசாயிகளிடம் பேசுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அவர்கள், பெரும் நிலவுடைமையாளர்கள் ஆகட்டும், சிறு, குறு விவசாயிகள் ஆகட்டும்; அவர்களுடைய  ஆதாரப் பிரச்சினை வெறுமனே இன்றைய சிக்கல்கள் மட்டும் அல்ல. இரவில் நீளும் விவசாயிகளுடனான பல உரையாடல்கள் அவர்களுடைய எதிர்காலம் குறித்த கேள்வியிலும் பயத்திலுமே போய் முடிந்திருக்கின்றன. பெருந்துயரம், மனச்சஞ்சலத்தினூடே படுக்கைக்குத் திரும்பும் சூழலுக்கே பல உரையாடல்கள் தள்ளியிருக்கின்றன. உங்களிடம் நிலம் இருக்கிறது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை. அதற்கென்று பொருளாதார மதிப்புகூட உண்டு. ஆனால், அது எத்தனை நாளுக்கு உங்கள் பிழைப்புக்குச் சாரமாக இருக்கும்? தெரியாது. உங்களுடைய பிள்ளைகளின் படிப்புக்கோ, தொழிலுக்கோ, திருமணத்துக்கோ அது நிச்சயமாக உதவுமா? தெரியாது. உங்களுடைய இறுதிக்காலம் எப்படியிருக்கும்? தெரியாது. நிலத்தை விற்றுவிடலாம். அடுத்து பிழைப்புக்கு என்ன செய்வது? தெரியாது. எந்த நகரத்துக்குச் செல்வது, திரும்பவும் எப்போது ஊர் திரும்புவது? தெரியாது. இப்படி நூற்றுக்கணக்கான பதிலற்ற கேள்விகளின் வெளிப்பாடு ஒரு விவசாயியின் போராட்டம். இதுதான் வாழ்க்கை என்று முடிவெடுத்து வந்துவிட்ட பின் பாதிப் பயணத்தின் நடுவில் பாதை மூடிக்கொள்கிறது. இருள் சூழ்ந்துகொள்கிறது. நடுத்தர வயதில் என்ன முடிவு எடுக்க முடியும்? சாமனிய மக்கள் மீது முடிவெடுக்கும் முடிவைத் திணிக்க முடியாது. அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும். தொலைநோக்கிலான திட்டங்களை யோசிக்க வேண்டும். ஆனால், இன்றைய அரசாங்கத்தில் விவசாயிகளைப் பற்றி யோசிக்க யார் இருக்கிறார்கள்?

டெல்லியிலிருந்து இந்த வாரம் வெளியாகியிருக்கும் எல்லாப் பிரதான செய்திப் பத்திரிகைகளிலும் தமிழக விவசாயிகளின் போராட்டம் வெளியாகியிருக்கிறது. மும்பையிலிருந்து செய்தியாளர்களை அனுப்பி காவிரிப் படுகை விவசாயிகளின் பிரச்சினையைப் பிரசுரித்திருக்கிறது ஒரு பத்திரிகை. டெல்லி தொலைக்காட்சிகள் ‘பெரிய மனதோடு’ ஆளுக்கு அரை மணி நேரம் தமிழக விவசாயிகள் பிரச்சினையை விவாதிக்க ஒதுக்கியிருக்கின்றன. போராட்டக் களத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வந்து சென்றிருக்கிறார். இவை எல்லாமே அய்யாக்கண்ணு தன் போராட்டத்தின் மூலமாகச் சாதித்திருப்பவை. இவையெல்லாம் இன்று எவ்வளவு பெரிய விஷயங்கள் என்பது போராட்டச் சூழலில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டவுடன் மது வியாபாரிகளின் அழுத்தத்தையடுத்து, அடுத்த சில மணி நேரங்களில் இந்த உத்தரவை எப்படி எதிர்கொள்ளலாம் என்று கூடி விவாதித்து முடிவெடுத்த பிரதமர் மோடி, இருபத்தைந்து நாட்களாகப் போராடிவரும் தமிழக விவசாயிகளை இதுநாள் வரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இப்போது அய்யாக்கண்ணு மீது கொடூரமான தனிநபர் தாக்குதல்கள் தொடங்கியிருக்கின்றன.

போராட்டத்துக்குத் தலைமை தாங்குபவரைத் தனிப்பட்ட வகையில் கேவலப்படுத்துவது என்பது போராட்டங்களைக் குலைக்க ஆளும் அரசமைப்பு காலங்காலமாகக் கையாளக்கூடிய ஆயுதங்களில் ஒன்று. அதிலும், மோடி அரசு இதை ஒரு தொடர் உத்தியாகவே கையாள்கிறது. ஆளும் பாஜகவின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா, “அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருக்கிறார், அவர் மணல் அள்ளுவோருக்கு வக்காலத்து வாங்கினார், அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி” என்றெல்லாம் பேசியிருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளில் தொடங்கி யாரெல்லாம் இந்த அரசின் விமர்சகர்களோ அவர்கள் குறித்த இழிவான கதையாடல்களை உருவாக்குவது, சமூக வலைதளங்களில் அதைப் பரப்பிவிடுவது என்பது அக்கட்சி கையாளும் தாக்குதல் முறைகளில் ஒன்று. ஆனால், சாமானியர்கள், முக்கியமாகப் படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் இதுகுறித்த செய்திகளில் மாய்ந்துபோவதும், அதே மாதிரியான கேள்விகளை உருவாக்குவதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் பார்த்தேன். அய்யாக்கண்ணுவின் வயிற்றுப் பகுதியை வட்டமிட்டு, “இப்படி தொப்பை வைத்திருப்பவர் எப்படி ஒரு ஏழை விவசாயியாக இருக்க முடியும்?” என்று கேள்வி கேட்டது அந்தப் பதிவு. பகிர்ந்திருந்தவர் ஒரு ஆசிரியர். நம் மனம் இன்று வந்தடைந்திருக்கும் சமூக வக்கிர நிலைக்கு ஒரு உதாரணமாக இதைச் சொல்லலாம். நேற்று காலை ஊடகத் துறை நண்பர்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “அய்யாக்கண்ணு வசதியானவர்னு சொல்றாங்களே சார்!” என்ற தொனியில் அவர்கள் பேச ஆரம்பித்தபோது, ‘பிரச்சினை பிரச்சாரம் அல்ல; சதிகளை நம்பக் காத்திருக்கும் நம் மனம்’ என்று தோன்றியது.

அய்யாக்கண்ணுவை நான் பார்த்ததில்லை. ஆனால், அவரைப் பற்றி எங்கள் திருச்சி செய்தியாளர் கல்யாணசுந்தரம் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். “மனிதர் நூதனமான போராட்டங்களுக்குப் பேர் போனவர். கவன ஈர்ப்பாளர். யாருமே கண்டுகொள்ளாத விவசாயிகளின் பிரச்சினைகளை நோக்கி ஊடகங்களின் கவனத்தைத் திருப்பிவிடுவார். அதேபோல, எந்த ஒரு விவசாயி அவரிடம் பிரச்சினை என்று போனாலும், உடனே கிளம்பிவிடுவார். வெவ்வேறு தருணங்களில் அவரால் உதவிகள் பெற்றவர்கள்தான் அவர் பின்னால் இப்போது அணிதிரண்டு நிற்கிறார்கள். கொஞ்சம் வசதி உண்டு. ஆனால் ‘ஆடி கார் வைத்திருக்கிறார்’ என்பதெல்லாம் புரட்டு” என்று சொன்னார் கல்யாணசுந்தரம். அய்யாக்கண்ணு ஆடி காரே வைத்திருந்தாலும், அதில் என்ன தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு விவசாயி – விவசாயத்தில் ஈடுபட்டதால், இந்நாட்டின் மோசமான விவசாயக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர் – அதன் நிமித்தம் அரசிடம் நிவாரணம் கேட்பதற்கும் அவருக்கு வசதி இருக்கிறதா, இல்லையா என்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ரூ. 6 லட்சம் கோடி வங்கிக் கடன்களை வாராக் கடன் என்று அறிவித்தது இந்த அரசு. பெரும்பாலான கடன்கள் பெருநிறுவன முதலாளிகள் வாங்கியவை. யாருடைய வசதி பற்றியாவது இங்கே கேள்வி வந்ததா? அமெரிக்காவில் முன்னாள் அதிபர் புஷ்ஷுக்குச் சொந்தமான விவசாயப் பண்ணையும் அரசு மானியத்தில்தான் இயங்குகிறது, கேள்வி கேட்பவர்களுக்குத் தெரியுமா? எது விவசாயிகளைப் பரதேசியாகவே நம்மைப் பார்க்கச் சொல்கிறது, அவர்கள் மீது பல் போட்டு பேசச் சொல்கிறது?

அய்யாக்கண்ணு எப்படிப்பட்டவர் என்பதல்ல, அவருடைய கோரிக்கைகளின் சாத்தியம் என்ன என்பதல்ல, இன்றைக்கு யாராலும் பொருட்படுத்தப்படாத இந்நாட்டின் விவசாயிகளை நோக்கி அவர் சிறு கவனத்தையேனும் திருப்ப முயற்சிக்கிறார் என்பதே முக்கியம். ஒரு முதியவர், நாம் ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டில் கை வைக்கக் காரணமான ஒட்டுமொத்த விவசாயிகளுக்காகவும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறார். கோவணம் கட்டிக்கொண்டு, கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு, கையில் மண்டை ஓடுகளை ஏந்திக்கொண்டு, வாயில் எலிகளைக் கவ்வியபடி வேகிற வெயிலில் ஒரு விவசாயி நின்றால்தான் நாம் அவரைத் திரும்பிப் பார்ப்போம் என்றால், இவ்வளவு மோசமான நிலைக்கு நம்முடைய விவசாயிகளைத் தள்ளியிருக்கும் இந்த அரசாங்கத்தைத்தான் கேள்வி கேட்க வேண்டும்; நாம்தான் வெட்கப்பட வேண்டும். நேற்றிரவு தொலைக்காட்சியில் போராட்டத்தைக் காட்டியபோது, “எப்படிப்பா வாயில எலியைச் சகிச்சு வெச்சிக்கிட்டிருக்காங்க?” என்று கேட்டான் மகன். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நெடுநேரம் தூக்கம் இல்லை. ஹெச்.ராஜாக்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. அவர்களிடம் எல்லாவற்றிற்கும் பதில் இருக்கும்!

ஏப்ரல், 2017, ‘தி இந்து’

5 கருத்துகள்:

  1. எல்லா போராட்டங்களும் வெற்றிபெறுவதில்லை ஆனால் இந்த போராட்டம் வெற்றிபெற்றால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்,, அதுசரி சார் தனிமனித தாக்குதல் இவ்வளவு குரூரமாக எப்பொழுதாவது இருந்துள்ளதா? விவசாயி ஆடி கார் வைத்திருந்தால் கொடுங்குற்றமா இந்திய திருநாட்டில், கட்டுரை எழுதியதோடு உங்கள் பனி இந்த விசயத்தில் நின்றுவிடக்கூடாது உங்களைப்போன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் இன்னமும் உரக்க குரல் கொடுக்கவேண்டும் விவசாயத்தில் மாற்று சிந்தனை வேண்டும் என நீங்கள் எழுதியது இருக்கட்டும் இருப்பதையாவது காப்பாற்ற வேண்டுமே நாம்

    பதிலளிநீக்கு
  2. சரியான நேரத்தில் சிறப்பான கட்டுரை

    பதிலளிநீக்கு
  3. It is quite disgusting when the likes of H.Raja target the leader of the protest. In my recent memory haven't come across any government / political party that is so much anti-people be it Demonetization,Farmer Protests, killing minorities/Dalites in the name of cows, yet people vote for the party election after election. Sometimes I wonder whether people are swept by the avalanche of issues that they vote for the parties on the issues prevailing at the time of elections and not based on the performance of 5 years. The current ruling dispensation led by an immoral thug would lead the country to anarchy unless they are reined in. But who would ?

    பதிலளிநீக்கு