ஆர்எஸ்எஸ்ஸின் ஆயிரம் முகங்கள்!


நண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் காலையில் உடற்பயிற்சிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்! அடுத்த சில நாட்களிலேயே இரு இளைஞர்கள் யோகா பயிற்சி அளிக்க வந்திருக்கிறார்கள். நண்பரின் பிள்ளைகள் அவரிடம் வந்து கேட்டபோது, “சரி, நீங்களும் யோகா வகுப்பில் சேர்ந்துகொள்ளுங்கள்!” என்று சொல்லியிருக்கிறார். சில வாரங்கள் கழித்து அந்த இளைஞர்கள் சொன்ன கருத்துகளைக் குழந்தைகள் சொன்னபோது, வந்திருப்பவர்கள் யார் என்பதை நண்பர் புரிந்துகொண்டார்.

என்ன சொல்வது! ஜனநாயகக் களம் என்பது எண்ணிக்கைப் பெரும்பான்மையால் தீர்மானிக்கப்படுவது. காலத்துக்கேற்ப மக்களின் தேவைகளையும் மனப்போக்கையும் சமூகத்தின் கலாச்சார மாறுபாடுகளையும் உள்வாங்கிக்கொள்ளும் அரசியல் அமைப்புகளே அதிகாரத்தை வசப்படுத்த முடியும். மக்கள் மத்தியில் பணியாற்றுவோருக்கு, முக்கியமாக, தன்னார்வப் பணியில் ஈடுபடுத்திக்கொள்வோருக்கு இந்திய அரசியல் அரங்கில் எப்போதுமே ஒரு செல்வாக்கு இருக்கிறது. பெரும்பான்மை மக்கள் இங்கே சித்தாந்தங்கள், நோக்கங்கள் வாயிலாக அரசியல் இயக்கங்களை அணுகுவதில்லை. மனிதர்களின் வெளிப்புறத் தோற்றங்கள், காரியங்கள் வாயிலாகவே இயக்கங்களைப் புரிந்துகொள்கிறார்கள். காந்தி ஆக்கபூர்வமான அரசியல் உத்தியாக அறப்பணிகளைக் கையாண்டார். ஆர்எஸ்எஸ் அபாயகரமான அரசியல் கணக்குகளோடுஅதே காய்களை நகர்த்துகிறது. ஏனைய இயக்கங்கள் எல்லாம் எந்த அளவுக்கு இதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கின்றன என்றே தெரியவில்லை.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிகப் பெரிய பலம், அது நாடு முழுக்க நடத்திக்கொண்டிருக்கும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட செயல்திட்டங்கள். அதன் அதிகாரபூர்வமற்ற ஷாகாக்கள் இவை. வெளியில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்த முடியாத அவற்றின் முகங்கள். அது பள்ளிக்கூடமாக இருக்கலாம், முதியோர் இல்லமாக இருக்கலாம், மடமாக இருக்கலாம், கோயில் வழிபாட்டு மன்றமாக இருக்கலாம், யோகா பயிற்சிக் கூடமாக இருக்கலாம், தொழிலாளர் சங்கமாக இருக்கலாம், மாணவர் பேரவையாக இருக்கலாம்… எல்லாமே நேரடி அரசியல் தொடர்புடையவையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், அவை உருவாக்கும் கலாச்சாரம் ஒரே தன்மையிலானது. அடிப்படையில் ஏதேனும் ஒரு புள்ளியிலேனும் இணைந்து பெரும்பான்மை மக்களை ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரே குடைக்குள் கொண்டுவருவது.

உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற நாட்களில், என்னுடைய வாராணசி பயணம் அமைந்தது இன்றைய போக்கைப் புரிந்துகொள்ள ஒருவகையில் கூடுதல் உதவியாக அமைந்தது என்று சொல்லலாம். யோகி ஆதித்யநாத் இன்று அடைந்திருக்கும் இடமும் அவருடைய கடந்த கால வரலாறும் எனக்குள் நிறையக் கேள்விகளை எழுப்பியிருந்தன. கோரக்நாத் மடாதிபதியாக ஆதித்யநாத் 22 வயதில் பொறுப்பேற்கிறார். 1998-ல் முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது அவருடைய வயது 26. இப்போது 44 வயதில் நாட்டிலேயே பெரிய மாநிலத்தின் முதல்வர். இடைப்பட்ட 18 ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றிகள். 5 முறை மக்களவை உறுப்பினர். எல்லாமே பெருவாரி வாக்குகள் வித்தியாசத்தில். அப்பட்டமான ஒரு வெறுப்பரசியல்வாதி எப்படி திரும்பத் திரும்ப ஜெயிக்கிறார்?

யோகி மட்டும் அல்ல; அவருடைய முன்னோடிகளும் இப்படித் தொடர்ந்து ஜெயித்திருக்கின்றனர். ஆதித்யநாத்தின் முன்னோடி மடாதிபதியான திக்விஜய்நாத் 1920-களில் அரசியல் செயல்பாடுகளில் அடியெடுத்துவைத்திருக்கிறார். முதலில் காங்கிரஸ். அங்கே காந்தியின் அஹிம்சை பாதை பிடிக்காமல் விலகி, பின்னர் இந்து மஹாசபையில் இணைந்திருக்கிறார். காந்தி கொல்லப்பட்ட சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களில் திக்விஜய்நாத்தும் ஒருவர். அயோத்தி விவகாரத்தில் ஆரம்ப நாட்களிலேயே பின்னிருந்தவர்களில் திக்விஜய்நாத்தும் ஒருவர். இவ்வளவையும் தாண்டி தொடர்ந்து தேர்தல்களில் ஜெயித்திருக்கிறார். அவருக்குப் பின் மடாதிபதியாக வந்த அவைத்யநாத்தும் அப்படியே ஜெயித்திருக்கிறார். ஆதித்யநாத் அடாவடிகளின் உச்சம். கொலை முயற்சி வழக்குகள்கூட அவர் மீது இருக்கின்றன. அவர் உருவாக்கிய இந்து யுவ வாஹினி அப்பட்டமான வன்முறைக் கும்பல் என்றே கூறுகிறார்கள். அவரும் தொடர்ந்து ஜெயிக்கிறார். வெறுப்பினாலும் வன்முறையாலும் குறுகிய கால வெற்றியைக் கைப்பற்ற முடியும். ஒரு நீண்ட காலம் அதைத் தக்கவைக்க முடியுமா?

இந்தப் பயணத்தின்போது பதில் கிடைத்தது. நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான கோரக்பூர் பகுதி மக்களின் வாழ்க்கையோடும் பொருளாதாரத்தோடும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது கோரக்நாத் கோயில். இந்த மாவட்டமே கோரக்நாதரின் பெயரில்தான் அமைந்திருக்கிறது. மடத்துக்கு பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், பல்லாயிரம் கோடி சொத்துகள் இருக்கின்றன. அறக்கட்டளை நிர்வாகத்தில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் என்று கிட்டத்திட்ட 50 நிறுவனங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். கட்டணம் குறைவு என்கிறார்கள். ஆதித்யநாத் 2003-ல் அமைத்த நவீன மருத்துவமனையில் வெளிநோயாளிக் கட்டணம் வெறும் ரூ.30. அடுத்த 15 நாட்களுக்குள் மருத்துவரைத் திரும்பப் பார்க்கச் சென்றால் அதுவும் கட்டத் தேவையில்லை என்கிறார்கள். ஒரு நாள் படுக்கைக் கட்டணம் ரூ.250. மருத்துவமனை சாப்பாட்டின் விலை ரூ.10 என்கிறார்கள். ஆக, ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், நோயாளிகளோடு நேரடியான தொடர்பில் இருக்கிறது மடம். ‘‘நீங்கள் இதனூடாகவும்தான் ஆதித்யநாத்தின் வெற்றியைப் பார்க்க வேண்டும்’’ என்றார்கள் உள்ளூர் ஊடக நண்பர்கள்.

மாநிலத்தில் அடுத்தடுத்து ஆட்சியிலிருந்த காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இங்கே பெரிய செல்வாக்கில்லை. இப்படி ஒரு தொகுதியை வறுமைப் பின்னணியிலேயே ஏனைய கட்சிகள் அத்தனையும் எந்த அடிப்படையில் கவனிக்காமல் விட்டுவைத்தன என்ற கேள்வி எனக்கு எழுந்தது.

ஆர்எஸ்எஸ் - பாஜக பலத்தைப் பற்றிப் பேசுகையில், அதன் நேரடிக் கணக்கில் இப்படியான அமைப்புகள் வருவதில்லை. ஆனால், இவற்றையும் உள்ளடக்கியதே அது. சரஸ்வதி சிசு மந்திர் பள்ளிகளை 1950-களில் சங்கப் பரிவாரத்தினர் தொடங்கினார்கள். இன்று வித்யா பாரதி பள்ளிகளில் மட்டும் 20 லட்சம் குழந்தைகள் படிக்கிறார்கள். கலாச்சார ரீதியில் உருமாற்றம் நடந்துவிட்டால், பின்னர் தேர்வு தானாக நடக்கும் என்பது கணக்கு. காசு வாங்காமல் இல்லை, வசதிகளை அனுபவிக்காமல் இல்லை. ஆனால், நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார்கள். காங்கிரஸ் காரர்களும் ஏனைய மாநிலக் கட்சியினரும்கூட கல்வி நிலையங்களை நடத்துகிறார்கள். அவை எந்த நோக்கத்தைப் பிரதானமாகக் கொண்டு நடத்தப்படுகின்றன? அங்கே அவர்களுடைய இயக்கக் கொள்கைகளுக்கு என்ன இடம் இருக்கிறது?

மனிதர்கள் இயல்பாகவே தாங்கள் பயிற்று விக்கப்படுவதைப் பெருமையாகக் கருதுபவர்கள். குழந்தைகளாக இருக்கும்போதே வாய்ப்பு கிடைத்தால் மேலும் சந்தோஷம் அடைபவர்கள். மோடி ஆர்எஸ்எஸ்ஸில் சேரும்போது அவருக்கு 8 வயது. ராஜ்நாத் சிங் 13 வயதில் ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தவர். ஒவ்வொரு நாளும் தனக்கேற்ற ஆட்களை ஆர்எஸ்எஸ் உற்பத்திசெய்துகொண்டே இருக்கிறது. உண்மையில் உலகில் இன்று ஆர்எஸ்எஸ்போல பல நூறு முகங்கள், பல்லாயிரம் கரங்களுடன் சமூகத்தில் கலந்திருக்கும் ஒரு இயக்கம் இல்லை. இன்றைக்கு உலகின் மிகப் பெரிய என்ஜிஓவும் ஆர்எஸ்எஸ் என்ற தகவல் பலருக்கு வியப்பளிக்கலாம். நாட்டின் மிகப் பெரிய தொழிற்சங்கம் அது நடத்தும் பாரதிய மஸ்தூர் சங்கம். நாட்டின் மிகப் பெரிய மாணவர் இயக்கம் அது நடத்தும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி). அதன் அரசியலை வெறும் ஒற்றைப் பரிமாணத்தில், ஒரு கையால் எதிர்த்துவிட முடியும் என்று நினைப்பதைப் போல மடத்தனம் ஒன்றுண்டா?

(மோடியின் காலத்தை உணர்தல்... 3)

ஏப்ரல், 2017,  ‘தி இந்து’

8 கருத்துகள்:

 1. Dear Samas,
  Can you also include an article on why we should be reject RSS and its ideas.
  thanks
  Sankar

  பதிலளிநீக்கு
 2. நீஙகள் இப்படி எழுதினால் உங்களை கருப்பு அம்பி என்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
 3. உங்களுடைய இந்த கருத்து நூறு சதவிகிதம் உண்மை இந்த கட்டுரையை படிக்கும்போது ஆச்சரியம் ஆக உள்ளது சார் எனக்கு, ஆனால் இவ்வளவு காலமும் அரசியல் செய்யும் ஒவ்வொரு காங்கிரஸ்காரர்களும் தனது சுய வருமானத்தில் மட்டுமே கருத்தாக இருந்துவிட்டனர் என்பது நான் ஒரு காங்கிரஸ்காரனாக உணர்கிறேன் வெட்கப்படுகிறேன், ஆனால் உணரவேண்டிய நபர்கள் உணர்வார்களா? கேள்விக்குறி மட்டுமே என்னுள் எழுகிறது,ஆனால் இவர்களது வளர்ச்சி மிகப்பெரிய ஆபத்தை மட்டுமே ஏற்ப்படுத்தும் நம் தேசத்திற்கு அடுத்து இவர்களது தாக்குதல் பள்ளி பாடங்களில் தொடங்கிவிட்டது துயரமே நாட்டிற்கு

  பதிலளிநீக்கு
 4. உங்களுடைய இந்த கருத்து நூறு சதவிகிதம் உண்மை இந்த கட்டுரையை படிக்கும்போது ஆச்சரியமாக உள்ளது சார் எனக்கு, ஆனால் இவ்வளவு காலமும் அரசியல் செய்யும் ஒவ்வொரு காங்கிரஸ்காரர்களும் தனது சுய வருமானத்தில் மட்டுமே கருத்தாக இருந்துவிட்டனர் என்பது நான் ஒரு காங்கிரஸ்காரனாக உணர்கிறேன் வெட்கப்படுகிறேன், ஆனால் உணரவேண்டிய நபர்கள் உணர்வார்களா? கேள்விக்குறி மட்டுமே என்னுள் எழுகிறது,ஆனால் இவர்களது வளர்ச்சி மிகப்பெரிய ஆபத்தை மட்டுமே ஏற்ப்படுத்தும் நம் தேசத்திற்கு அடுத்து இவர்களது தாக்குதல் பள்ளி பாடங்களில் தொடங்கிவிட்டது துயரமே நாட்டிற்கு

  பதிலளிநீக்கு
 5. Very unfortunate that we conveniently hide teething problems that hard hit the common man Everyday and talk about RSS and Hindi. I have listed few problems below that are much more dangerous and need serious immediate attention.

  Poor standard of education system (from Primary to Tertiary education). Crores to get MBBS seats in private colleges. Poor standard/infra of panchayat/Union /government schools.
  Status of farming, poor water management, farmers’ problems, and lack of awareness on water manage management.

  Land, real estate Mafia still very active with political back up

  Access to affordable quality health care to public

  Poor rural healthcare and civic infrastructure like drinking water, education and road connectivity

  Paid, rigged by-elections

  Large scale looting of states resources like sand, granite

  Brutal murders and daylight robbery, adamant not to provide CCTC cameras

  Political parties affiliation to liquor mafia

  Police excesses/atrocities and brutal barbaric beatings

  Largescale corruption across the board – Motor vehicles, licences, registration etc.

  Increasing Road accidents that kill thousands every year.

  Poor judiciary and lack of access to judiciary (common man)

  State ballooning with huge debts year after year while politicians wealth MULTIPLYING 3-10 fold. Councillors looting crores and crores.

  Fake schools, institutions run often with political back up

  Very poor emergency preparedness to face natural calamities

  Incompetent institutions including Judiciary that take decades to decide corruption cases.

  பதிலளிநீக்கு
 6. // இந்தப் பயணத்தின்போது பதில் கிடைத்தது. நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான கோரக்பூர் பகுதி மக்களின் வாழ்க்கையோடும் பொருளாதாரத்தோடும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது கோரக்நாத் கோயில். இந்த மாவட்டமே கோரக்நாதரின் பெயரில்தான் அமைந்திருக்கிறது. மடத்துக்கு பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், பல்லாயிரம் கோடி சொத்துகள் இருக்கின்றன. அறக்கட்டளை நிர்வாகத்தில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் என்று கிட்டத்திட்ட 50 நிறுவனங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். கட்டணம் குறைவு என்கிறார்கள். ஆதித்யநாத் 2003-ல் அமைத்த நவீன மருத்துவமனையில் வெளிநோயாளிக் கட்டணம் வெறும் ரூ.30. அடுத்த 15 நாட்களுக்குள் மருத்துவரைத் திரும்பப் பார்க்கச் சென்றால் அதுவும் கட்டத் தேவையில்லை என்கிறார்கள். ஒரு நாள் படுக்கைக் கட்டணம் ரூ.250. மருத்துவமனை சாப்பாட்டின் விலை ரூ.10 என்கிறார்கள். ஆக, ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், நோயாளிகளோடு நேரடியான தொடர்பில் இருக்கிறது மடம். ‘‘நீங்கள் இதனூடாகவும்தான் ஆதித்யநாத்தின் வெற்றியைப் பார்க்க வேண்டும்’’ என்றார்கள் உள்ளூர் ஊடக நண்பர்கள். // நல்ல தீர்க்க தரிசனம். கொடுத்தவனே பறித்துக் கொண்டானடி கதையாகிப் போனது கோரக்பூர் :(

  பதிலளிநீக்கு
 7. சக மனிதனை, சக சமூகத்தை அழிக்கும் நோக்கிலான பயணங்களின் வேகம் மிகவும் அசாத்தியமானதாக இருக்கும், ஆனால் அதே வேகத்தில் அதன் அழிவும் இருக்கும் என்பதே உண்மை, அது எந்த பிராந்திய எந்த மத அல்லது எந்த இனம் சார்ந்ததாக இருந்தாலும் சரியே....
  .
  பயமாகத்தான் இருக்கிறது சமஸ்ஸின் இந்த கட்டுரை சொல்லும் விஷயங்கள்...ஆனாலும் மனதில் என் தேசத்தின் மீதான அன்பும், ஆர்வமும், அது நிச்சயம் இதுபோன்ற அபாயங்களிலிருந்து காப்பாற்றப்படும் என்கின்ற நம்பிக்கையும் அதிகப்பட்டுக்கொண்டே போகிறது...
  .
  கபளீகரித்து சேர்த்து வைக்கும் சொத்துக்கள் போன்றது இதுவும், அதாவது மக்களுக்கே தெரியாமல் மக்கள் இதுதான் சரி என்ற நோக்கில் ஒன்று சேரும் அல்லது கட்டமைக்கும் நிலையும்....
  .
  மக்கள் பொது வெளியில் வரும்போது சிறிது சிறிதாக கற்றுக்கொள்ளவும், அறிந்துகொள்ளவும் செய்யும்போது அதிலிருந்து மீண்டு அவர்களுக்கு எதிராகவே திரும்பும் நிலைதான் ஏர்ப்படும்...
  .
  பரவாயில்லை....
  .
  கொலை செய்யப்படும் ஒவ்வொரு முஸ்லிமும் இன்றும் இந்த மண்ணிலேயேதான் புதைக்கப்படுகிறான் என்பதே மிகப்பெரிய வெற்றி....
  .
  முஸ்லிம் என்பதற்காக அரபு நாட்டுக்கா பிணத்தை அனுப்பவியலும்....
  .
  இந்த மண்ணை வணங்குகிறேன் என்று சொல்லும் ஒவ்வொருவரும் இந்த மண்ணில் புதைக்கப்படும் ஒவ்வொருவரையும் வணங்குவதாய் கொள்ளப்படுவார்கள்....
  .
  காலம் பதில் சொல்லும்....
  .

  பதிலளிநீக்கு
 8. உங்களின் இந்த கட்டுரை.....மத்த செக்கூலரிஸ்ட்களைப்போல் மனதில் வெறுப்பைக் குவித்து எழுதப்பட்ட கட்டுரையாகவே தெரிகிறது......ஒரு சுயநலக்கார காங்கிரஸ் அல்லது ஏமாற்றுக்கார கம்யூனிஸ்ட்டின் மனநிலையும் ஆர் எஸ்.எஸ், ஆதித்யநாத் மீதான பொறாமையும் அப்படியே தெரிகிறது...வாழ்த்துக்கள்.....

  பதிலளிநீக்கு