மோடியின் பொருளாதாரத் தோல்விகளை ஏன் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் பேசுவதில்லை?


சத்தியமங்கலம் வனத்தில் பிரபுவைச் சந்தித்தேன். பள்ளி செல்லும் சிறுவன். ஒடிசலான உருவம். கருத்த தேகம். துடியாகப் பேசுபவன். பள்ளிக்கூடப் பாடங்களோ, வெளி விவகாரங்களோ அவனிடத்தில் பெரிய ஆர்வத்தை உண்டு பண்ணியிருக்கவில்லை. ஆனால், வனம் அவன் உடம்புக்குள் இறங்கியிருந்தது. புலிகளைப் பற்றி நிறைய சுவாரஸ்யமாகப் பேசினான். அவன் படிக்கும் அரசாங்கப் பள்ளிக்கூடம் அவனுடைய வீட்டிலிருந்து சுமார் பத்து கி.மீ. தொலைவில் இருக்கிறது. மலைப் பாதை. புலி நடமாட்டம் மிகுந்த பகுதி. புலி தண்ணீர் குடிக்க வந்து செல்லும் ஓடையைத் தாண்டிதான் அன்றாடம் அவன் பள்ளிக்கூடம் போக வேண்டும். “காட்டில் நடக்கும்போது புலி பயம் இருக்காதா?” என்று கேட்டேன். “காட்டில் எப்பவும் புலி உலாத்துதோ, உலாத்தலையோ; நெனப்பில் எப்பவும் புலி உலாத்தும்” என்றான். “பயந்து ஆவப்போவது என்ன? காட்டிலே புலி மட்டும் இல்ல. காட்டு நாய் இருக்கு. காட்டெருமை இருக்கு. கருநாகம் இருக்கு. புலி மட்டும் இல்ல; இதுகளும் மேல பாய்ஞ்சா ஆளைத் தூக்கிரும். புலி கண்ணுல நாம சிக்காம இருக்கணும்னா, புலியைத் தவிர காட்டுல தட்டுபடறதையெல்லாம் புலியாப் பார்த்துக் குழப்பிக்காம இருக்கணும்; புலியை மட்டும் நெனைச்சுக் கெடந்தா கண்ணு மறைச்சுடும். எதுவும் கண்ணில் படாது. மரம் செடி கொடியெல்லாம் புலியா தெரிஞ்சா பாம்பும் ஓநாயும் காட்டெருமையும் கண்ணுல படாது; கடைசில புலியே கண்ணு முன்ன வந்து நின்னாலும் அது புலியா தெரியாது!” என்றான். பிரமிக்க வைத்த விழிப்புநிலை அது. கண் மட்டும் கண் அல்ல என்பதை உணர்த்தியவன் அவன்!

சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.120 விற்கிறது. அதன் வழக்கமான விலையைப் போல இது மூன்று மடங்கு. ஏன் இதுகுறித்து எந்த அரசியல் கட்சியும் பேசவில்லை; ஊடகங்கள் எழுதவில்லை? மன்மோகன் சிங் ஆட்சிக் காலம் நெடுகிலும் விலைவாசி உயர்வில் தொடங்கி, பொருளாதார நெருக்கடிகள் வரை இடைவிடாது பேசிக்கொண்டிருந்த ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் இப்போது அதுபற்றியெல்லாம் ஏன் வலுக்கப் பேசுவதில்லை அல்லது அவர்கள் பேசுவது ஏன் நம் காதுகளுக்கு வந்து விழுவதில்லை? மோடி அரசையும் பாஜகவையும் யாரும் விமர்சிக்காமல் இல்லை; ஆனால், எது தொடர்பில் அவர்கள் பெருமளவில் விமர்சிக்கப்படுகிறார்கள் - மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பிலா; அடையாள அரசியல் பிரச்சினைகள் தொடர்பிலா? இந்த நுட்பமான வேறுபாட்டை நாம் விவாதிக்க வேண்டும்!



ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எப்படி மதிப்பிடுவது என்பதற்கு என்னுடைய தாத்தா ஒரு எளிய அளவீட்டு முறையைச் சொல்வார். “ஆட்சியாளர் பொறுப்பேற்ற காலகட்டத்தில் ஒரு குடியானவரின் மாத வருமானம் - செலவினம்; நாம் கணக்கிடும் காலகட்டத்தில் ஒரு குடியானவரின் மாத வருமானம் - செலவினம்… இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தைப் பார்! நாட்டின் பொருளாதாரம் உண்மையாகவே வளர்ந்திருக்கிறதா, தேய்ந்திருக்கிறதா என்பது புரியவரும்!”

அமைப்பின் பார்வையிலிருந்து ஒரு நாட்டின் வளர்ச்சியை அணுகுவற்கும் மக்களின் பார்வையிலிருந்து ஒரு நாட்டின் வளர்ச்சியை அணுகுவதற்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு. நாட்டின் பொருளாதாரம் அச்சமூட்டும் பாதையில் செல்வதை இன்று இந்த இரு வழிப் பார்வைகளுமே உறுதிப்படுத்துகின்றன.

விவசாயத்தோடும், விலைவாசியோடும் மிக நெருக்கமான தொடர்புடைய பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயம் தொடர்பில் மிக முக்கியமான முடிவை எடுத்திருக்கிறது மோடி அரசு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2013-2014 காலகட்டத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் சர்வதேச விலை 112 டாலர்; பின்பு படிப்படியாகக் குறைந்து ஒருகட்டத்தில் 30 டாலர் வரை இறங்கி இன்று 45 டாலருக்கு விற்கிறது. ஆனால், மன்மோகன் சிங் ஆட்சிக் காலகட்டத்தில் பெட்ரோல் - டீசலுக்கு என்ன விலையைக் கொடுத்தோமோ, அந்த விலையைக் காட்டிலும் அதிக விலையை மோடியின் ஆட்சிக் காலகட்டத்தில் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோலை விற்கும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. பெட்ரோலியப் பொருட்களிலிருந்து அரசு வசூலித்த வரி 2013-14-ல் ரூ.88,000 கோடி. 2015-16-ல் ரூ.1.99 லட்சம் கோடி. பெட்ரோலியப் பொருட்கள் மூலம் வரி வருவாயை அரசு உயர்த்திக்கொள்வது தவறல்ல. ஆனால், கோடிக்கணக்கான மக்களை அன்றாடம் ஏற்றிச் செல்லும் அரசுப் போக்குவரத்துக்கழக பஸ்கள், ரயில்கள், விவசாயிகளின் விளைபொருட்களைச் சந்தைக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கும் இருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய பல கோடி ரூபாய் ஆடம்பர கார்களுக்கும் ஒரே விலையில், ஒரே வரியில் எரிபொருள் விற்பது அநீதி. பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும், தனியார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் ‘புதிய போக்குவரத்துக் கொள்கை - புதிய எரிபொருள் கொள்கை வேண்டும்’ என்று வெகுநாட்களாகப் பேசிக்கொண்டிருந்தோம். இன்று பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையை அன்றாடம் சந்தை நிலவரத்துக்கேற்ப நிர்ணயிக்கும் முடிவை எடுத்திருப்பதன் மூலம் வரி விதிப்புக்கு அப்பால், எண்ணெய் விநியோகத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டது மோடி அரசு. இதுபற்றி ஏன் யாரும் பேசவே இல்லை?

நாட்டிலேயே அதிகமானோருக்கு வேலை அளிக்கும் களமான விவசாயத் துறையின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த மோடி அரசிடம் எந்த வியூகமும் இருப்பதாகத் தெரியவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார் மோடி. விவசாயிகளின் வருமானம் உயரவில்லை; மாறாக, செலவினம் இரட்டிப்பாக உயர்ந்திருக்கிறது. பொருளாதார நிபுணர்களின் வார்த்தைகளில் சொல்வது என்றால், இந்த மூன்றாண்டுகளில் 1.7% வளர்ச்சியையே வேளாண் துறை அடைந்திருக்கிறது. நாம் பெரிதும் ஆவேசப்பட்ட மன்மோகன் சிங் ஆட்சிக் காலகட்டத்தின் கடைசி மூன்று ஆண்டுகளோடு ஒப்பிட்டால் அன்றைய 3.6% வளர்ச்சியில் கிட்டத்தட்ட பாதி அளவு இது. எவ்வளவோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் விவசாயிகள் உற்பத்திசெய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதைக்கூட இந்த அரசாங்கத்தால் உறுதிசெய்ய முடியவில்லை. தங்கள் கோரிக்கைகளோடும் மாற்றுத் திட்டங்களோடும் ஆட்சியாளர்களை நோக்கிப் பேச வரும் விவசாயிகளிடம் பேசவும் இந்த அரசு தயாராக இல்லை. மாறாக, நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் தொடங்கி இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கான தடை வரை மரபார்ந்த விவசாயத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலேயே மோடி அரசு மும்முரமாக இருக்கிறது.

விவசாயத்தின் வீழ்ச்சி நாட்டின் பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலிருந்தும் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான இளைஞர்களை நகரங்களை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை என்று பெருநகரங்களின் ரயில் நிலையங்கள் மூச்சுத்திணறுகின்றன. கிராமங்களோ ஆளரவமற்ற பேய்களின் ஊர்கள் ஆகின்றன.

பயணங்களுக்கு மேல் பயணங்கள் என்று வெளிநாடுகள் சென்றாலும், மோடியால் பெரிய அளவில் முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை. சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகள் சூழலைக் கடுமையாக்கிக்கொண்டிருக்கும் நிலையில், கண்ணில் தெரியும் வாய்ப்புகளையும் எப்படிக் கையாள்வது என்று மோடிக்குத் தெரியவில்லை. கிட்டத்தட்ட 130 நாடுகளை இணைத்து சீனா தொடங்கியிருக்கும் ‘ஒரே பாதை - ஒரே பிராந்தியம் திட்டம்’ ஒரு வரலாற்றுப் போக்கு. பூடான் நீங்கலாக இந்தியாவுக்கு அருகிலுள்ள எல்லா நாடுகளும் இணைந்துள்ள இத்திட்டத்தின் தொடக்க விழாவையே புறக்கணிப்பது என்று மோடி அரசு எடுத்த முடிவை சமீபத்திய உதாரணமாகச் சொல்லலாம். எந்த அமெரிக்காவுக்குச் சவாலாக வல்லரசுக் கனவோடு இத்திட்டத்தை சீனா முன்னெடுக்கிறதோ அந்த அமெரிக்காவேகூட தன்னுடைய உயர்நிலைக் குழுவைத் தொடக்க விழாவுக்கு அனுப்பியிருந்தது. எடுத்த எடுப்பில் இந்தியாவை அந்நியப்படுத்திக்கொண்டிருக்கும் மோடியின் முடிவைத் தொலைநோக்குள்ள எவரும் ராஜதந்திரம் என்று சொல்ல முடியாது.

வருஷத்துக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடியால், பெரிய அளவில் வெளிநாடுகளிலிருந்தும் வேலைவாய்ப்புகளைக் கொண்டுவர முடியவில்லை; உள்நாட்டிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. தவிர, ஏற்கெனவே உருவாகிவந்த வேலைவாய்ப்புகளையும்கூட இந்த அரசால் தக்கவைக்க முடியவில்லை என்பதை அரசாங்கம் தரும் புள்ளிவிவரங்களிலிருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது.

ஒவ்வோர் ஆண்டும் அமைப்பு சார்ந்த துறைகளில் மட்டும் 9.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவான சூழல் போய் கடந்த நிதியாண்டில் புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. முக்கியமாக, ஜவுளி, உலோகம்,தோல், விலையுயர்ந்த கற்கள் மற்றும் நகைகள், தகவல்தொழில்நுட்பம், போக்குவரத்து, வாகனம் மற்றும் கைத்தறி ஆகிய எட்டு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது குறைந்துள்ளது. 2015-ல் இத்துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 லட்சமாக ஆகியிருக்கிறது. தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கும் (ஜிடிபி) வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் இடையேயான இடைவெளி மிக மோசமான விளைவுகளுக்குக் கட்டியம் கூறுகிறது. திட்டவட்டமாக இந்தியா ஒரு பொருளாதார மந்தநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இப்படியே போனால், பெரும் பொருளாதார நெருக்கடியோடு, வேலையில்லாத் திண்டாட்டம் உருவாக்கும் சமூகச் சிக்கல்களையும் நாடு எதிர்கொள்ளும்.

இவை எல்லாம் ஏன் பேசப்படவில்லை அல்லது மக்களிடத்தில் வலுவாகச் சென்றடையவில்லை என்றால், பாகிஸ்தானையோ, மாட்டையோ, ராமனையோ, யோகி ஆதித்யநாத்தையோ காட்டி இவை அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் கவனத்தை பாஜகவால் திசை திருப்ப முடிகிறது. பாகிஸ்தானையும் மாட்டையும் ராமனையும் யோகி ஆதித்யநாத்தையும் காட்டி மக்களின் கண்கள் - காதுகளை அவர்களால் ஆக்கிரமிக்க முடிகிறது.

இது வெறும் கவனத் திசைத் திருப்பல் அல்ல; ஆடுகளத்தையே மாற்ற முற்படும் திசைத் திருப்பல்; எதிர்க்கட்சிகளின் அரசியல் பாதையையே மாற்ற முற்படும் திசைத் திருப்பல்; வாழ்வாதார அரசியல் பாதையிலிருந்து அடையாள அரசியல் பாதையை நோக்கி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் பாதையையும் திருப்பிவிடும் திசைத் திருப்பல்! காட்டில் பயணிக்கையில் புலி கவனம் மட்டும் அல்ல; காட்டு நாய், காட்டெருமை, கருநாகம் கவனமும் வேண்டும். நாடு இன்று இந்த விழிப்புநிலையை இழந்துகொண்டிருக்கிறது!

ஜூன், 2017, ‘தி இந்து’

மோடியின் காலத்தை உணர்தல்... 15 

11 கருத்துகள்:

  1. உங்கள், கட்டுரை அருமை, பண நீக்கத்திட்டத்தில் பிரதமரின் நேர்மையான அனுகுமுறை தோல்வியுறது அதுமட்டுமல்ல , அதைப்பற்றி எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை இனி எக்காலத்திலும் அவரிடம் நேர்மையை எதிர்பார்கமுடியாது இதே நிலமை நீடித்தால் அடுத்த தேர்தலில் ப.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் , அப்படி நடந்தால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதனால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது

    பதிலளிநீக்கு
  2. பெட்ரோல் மூலமாக மட்டும், மக்களிடம் இருந்து சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மோடியரசு சுரண்டி சம்பாதித்துள்ளது என்பது தங்கள் கட்டுரையிலிருந்து தெளிவாக தெரிய வருகிறது. இது போல் பல துறைகளில் இருந்து அரசுக்கு ஏராளமான வருமானம் வருகிறது. இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது?.

    வளர்ச்சி திட்டங்களின் பெயரில் அம்பானி அதானிகளுக்கும், அதோடு ஊதாரித்தனமான செலவுகளுக்கும் தான் அதிகம் போய் சேரும்.

    அப்பாவி விவசாயிகளுக்கும், அமைப்பு சாரா பிற பின் தங்கிய பிரிவினருக்கும் மிகக் குறைந்த அளவே செலவளிக்கப் படும். அரசின், நாட்டின் மொத்த வருவாயில் எந்தெந்தப் பிரிவினர் எத்தனை சதவீதம் பங்கு பெறுகின்றனர்?. எந்தெந்த திட்டங்களுக்கு அதிகம் செலவிடப் படுகிறது. அத்திட்டங்களால் அதிக பயன் படுவோர் யார்?. அடித்தட்டு மக்களை விரைவாக முன்னேற்ற என்னென்ன திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்று தீவிரமாக ஆராயும் அறிஞர்களும் இல்லை, போராடும் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இல்லை. ஆதரவளிக்கும் ஊடகங்களும் இல்லை.

    தற்போது. வருவாயில் பெரும் பகுதி, சமூகத்தில் தற்போது கணிசமாக உள்ள முன்னேறிய, நடுத்தர பிரிவினருக்காக செலவிடப் படுகிறது. அவர்களின் ஆதரவில்தான் ஆற்றல் மிக்க அமைப்புகளும், ஊடகங்களும் இயங்குகின்றன. எனவே இவர்கள் ஆட்சியில் இருப்போருக்கு எதிராக தீவிரமான போராட்டங்களுக்கு முன்வர மாட்டார்கள். இதனால்தான் தாங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல் பாஜகவின் பொருளாதார தோல்விகள் பெரிதாகப் பேசப்படவில்லை

    உற்பத்தியும், உபரிமதிப்பும் படிப் படியாக உயர்ந்து வரும் ஒரு சமூக அமைப்பில், சாதாரணமான பொருளாதார தோல்விகளால் மக்களின் அன்றாட வாழ்வில் பெரிய பாதிப்புகள் வராது, மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மையும் உடனேயோ, திடீரெனவோ ஏற்பட்டு விடாது. இவையே பாஜக வின் தற்போதைய பலங்கள், சாதகமான சூழ்நிலைகள்.
    மேலும், பொருளாதாரம், அறிவியல், மக்கள் நல திட்டங்கள் தவிர, பிற விசயங்களில், பிற அரசியல் வாதிகளை விட, பாஜகவினரும், ஆர் எஸ் சினரும் பாரம்பரீய ரீதியாக அதிக அறிவும் திறமையும் அனுபவங்களும் கொண்டவர்கள். எனவே பிரச்சினைகளை திசை திருப்பி விடுவதில் வல்லவர்கள். எனவே அவர்களை இவ்விசயத்தில் யாரும் எளிதில் வெல்ல முடியாது. எனினும் அவர்களின் பொருளாதார தோல்விகள் படிப் படியாக விரைவில் அரசியலிலும் எதிரொலிக்கும்.அதற்கு இத்தகைய கட்டுரைகள் துணை புரியும்.

    பதிலளிநீக்கு
  3. வழக்கம் போலவே மிக மிக அருமையான கட்டுரையை வழங்கியிருக்கிறீர்கள்! மிகச் சிறந்த, தகவல் செறிந்த அலசல்!

    நாடு மிகப் பெரிய பொருளியல் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பது முற்றிலும் உண்மை. உங்கள் அளவுக்கு இவ்வளவு புள்ளிவிவரங்கள் எனக்குத் தெரியாவிட்டாலும், விலைவாசியில் முதன்மையான தாக்கம் செலுத்தும் பெட்ரோல் - டீசல் விலை தீர்மானிப்பு உரிமையை மோடி அரசு தனியார் கையிலேயே தூக்கிக் கொடுத்திருப்பது ஏறக்குறைய நாடு மொத்தத்தையும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு விற்று விட்டதற்குச் சமம் என்பது புரியாமலில்லை.

    நாளுக்கு நாள் மோசமாகி வரும் வேளாண்துறையின் கண்ணெதிர் பேரழிவு இன்னும் சில ஆண்டுகளில் தின்னச் சோறு கிடைக்குமா என்கிற பீதியை ஏற்படுத்துகிறது.

    ஆனால் இவ்வளவும் இருப்பினும், வரிக்கு வரி ’மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில்’, ‘மன்மோகன் சிங் ஆட்சியின்போது’ என்று நீங்கள் ஒப்பிடுவது ஏன் என்பதுதான் உறுத்துகிறது. இதை விட மன்மோகன் ஆட்சி தேவலை என்கிறீர்களா? ’இவர்களுக்கு அவர்களே தேவலாம்’ என்கிற இந்த ஓர் அடிப்படையில்தானே மீண்டும் மீண்டும் இந்த இரு கட்சிகளும் ஆட்சிக்கு வந்து நாட்டையும் மக்களையும் உயிரோடு விழுங்கி ஏப்பம் விடுகின்றன? இன்று அதே பார்வையையே இதழாளரான நீங்களும் முன்வைப்பது எந்த வகையில் நியாயம்?

    பதிலளிநீக்கு
  4. whatever the matters read are quite true. but how to bell the cat.

    பதிலளிநீக்கு
  5. வழக்கம் போல ஒருதலைப்பட்சமான விமர்சனம். சின்ன வெங்காயம் விலை Rs120 என்று வருந்தும் சமஸ், பெரிய வெங்காயம் Rs. 15 க்கு விற்கப்படுவதை ஏன் குறிப்பிடவில்லை? முன்னது மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவு என்றால் பின்னதற்கு யார் காரணம் ?

    உண்மை என்னவென்றால், ஒரு சில காய்கறிகளின் விலையில் ஏற்படும் தாற்காலிக மாற்றம் என்பது seasonal. அதிக பட்சம் ஒரு சில மாதங்களில் இது சரியாகி விடும்.

    ஒட்டு மொத காய்கறி விலைவாசி , பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது என்பதே!.

    மோடி ஆட்சிக்கு வந்த பொது இருந்த விலைவாசி மற்றும் தற்போதைய விலையை பார்க்கவும். தமிழகத்தின் பெரிய சந்தையான ஒட்டன் சத்திரம் காய்கறி சந்தையின் (ஆதார பூர்வமான) விலைப் பட்டியல் அதிக விற்பனையாகும் ஒரு சில காய்கறிகளின் விலை கீழே -..

    Commodity 15.6.2017 (15.6.2014)
    Beans 35 to 55(43)
    Beetroot 28/ (17)
    Bellary (Big Onion) 12 to 14 (24)
    Katharikai Pachai 30 (10)
    Pudalangai/Snake gourd 2nd Quality 15 (16)
    Tomato/Thakkali 2nd Quality 10 (19)
    Vendai Kai/Lady Finger 24 (18)


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'வழக்கம் போல ஒருதலைப்பட்சமான விமர்சனம்.' - உண்மை

      நீக்கு
  6. காலங்காலமாக இவ்வாறான அரசியல்தானே நடைபெற்றுவருகிறது. நபர்கள்தான் மாறுகின்றரே தவிர ஆட்டம் ஒரேமாதிரி தான் நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. இது மோடியின் பொருளாதார கொள்கைகள் அல்ல... இந்தியாவில் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வரும் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகள்... இந்த கொள்கைகள் முதலாளிகளுக்கு சாதகமாக இருக்குமே தவிர சாமானியர்களை சுரண்டும்... சமஸ் இதை கருத்தில் கொண்டு தலைவர்களுக்கு எதிரான கருத்தியல் யுத்தத்தை தொடுப்பதை விட சித்தாந்த கொள்கை முடிவுகளினால் ஏர்படும் பிரச்சினைகளை குறித்து விழிப்புணர்வு பதிவு இட்டால் எதிர்கால சந்ததிகள் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் கொள்கை அடிப்படையை வைத்தே அவர்களுடைய ஆட்சி திறனை எடைபோடும் திறமை பெற்றவர்களாகவும், அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக ஆக வாய்ப்புண்டு...

    பதிலளிநீக்கு

  8. நாடு மிகப் பெரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பது முற்றிலும் உண்மை. இதைப் பற்றி ஊடகமும் மக்களிடம் பேசவில்லை

    பதிலளிநீக்கு