காவி எப்படி அதிகாரத்தின் நிறமானது?


டெல்லி கரோல்பாக் ரயில் நிலையத்தைவிட்டு கொஞ்ச தூரம் வெளியே வந்தால், பாலிகா பஜாரை ஒட்டி ஒரு நல்ல பஞ்சாபி உணவகம் உண்டு. பெயர் மறந்துவிட்டதா அல்லது பெயர்ப் பலகை இல்லாத உணவகமா என்று இப்போது ஞாபகம் இல்லை. ஒரு சர்தார்ஜி தாத்தாவின் கடை. சாலையை ஒட்டினார்போல முகப்பிலேயே சமையல் கட்டு. பிரமாதமான பனீர் டிக்கா போட்டுக்கொடுத்தார். மேலே கொஞ்சம் தீய்ந்ததுபோல முறுகி, உள்ளே கொஞ்சம் வேகாமல் சதக் சதக் என்று, இடையிலேயே உடன் சேர்ந்துகொண்ட மிளகாய் துண்டின் மெல்லிய காரமும், புதினாவின் மெல்லிய வாசனை கலந்த கொஞ்சம் புளிப்பும் சேர்த்து, ஆகக் கூடிவந்த ஒரு பனீர் டிக்கா அது! அப்படி ஒரு அற்புதத்தை அனாயசமாக அவர் போட்டுத்தள்ளிக்கொண்டே இருந்தது பனீர் டிக்காவைக் காட்டிலும் பெரும் அற்புதமாகத் தெரிந்தது. “சாதா பனீர் டிக்கா இல்லை; பஞ்சாபி பனீர் டிக்கா” என்றார். அவருக்கு ஒரு கும்பிடு போட்டேன். பதிலுக்கு அவர் ஒரு சலாம் போட்டார். “இன்னொன்று இதேபோலக் கிடைக்குமா?” என்றேன். காதருகே குனிந்தவர், “இன்று வேண்டாம். இந்த நினைவு இப்படியே இருக்கட்டும்!” என்றார்.

ஆண்டுகள் ஓடுகின்றன; நினைவுகள் விடாமல் துரத்துகின்றன. ‘அமுல்’ விளம்பரத்தைகூட அந்த சர்தார்ஜி பெரியவர் நினைவு வராமல் தனித்துப் பார்க்க முடிந்ததில்லை. எவ்வளவு சூட்சமமான மனிதர் என்றுகூட சில சமயங்களில் தோன்றும். இன்னொரு பன்னீர் டிக்கா கொடுத்திருந்தால், மேலும் ஒரு நூறு ரூபாயை அவர் சம்பாதித்திருக்கக் கூடும்; மாறாக, அந்த மனிதர் நினைவைச் சம்பாதித்துவிட்டார். அவர் கையில் ஒரு முத்தமிட்டு இருக்கலாம் என்றுகூட இன்று தோன்றுகிறது. கரோல்பாக், பாலிகா பஜார், இடையில் குறுக்கிட்டுப்போன ஒரு சந்து, பெயரற்ற அல்லது பெயர் மறந்துவிட்ட அந்தக் கடை, சர்தார்ஜி பெரியவரின் முகம்... ஒரு பனீர் டிக்கா எவ்வளவு நினைவுகளை அள்ளி வருகிறது!

ஒரு அற்புதமான மனிதரை, ஆதாய அரசியல்வாதி களோடு ஒப்பிடுவதற்காக வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். யோசித்துப்பார்த்தால், நம் நினைவுகள்தான் நாம்; நினைவுகள் போனால் எல்லாம் காலி என்று தோன்றுகிறது! அதனால்தான் அதிகாரத்தைக் கட்டியாள நினைப்பவர்கள் முதலில் சகஜீவிகளின் நினைவுகளைக் கையாளத் தொடங்குகிறார்கள் என்றும் தோன்றுகிறது. நினைவுகளைக் கட்டியாள வரலாற்றைக் கையில் எடுக்கிறார்கள். வரலாற்றைத் தமதாக்கிக்கொள்வதன் மூலம் மக்களின் கற்பனைகளையும் அவர்கள் அபகரித்துவிடுகிறார்கள்.உலகில் அதிகாரத்தைப் பேணும் எந்த ஒரு அமைப்பின், எந்த ஒரு அரசாங்கத்தின் அடிப்படைச் செயல்திட்டங்களிலும் ஒன்றாகிறது இது. மக்களுடைய நினைவுகளைக் கையாளுதல் - அவர்களுடைய நினைவுகளில் புதுப்புதுச் சரடுகளை உருவாக்குதல் - மக்களுடைய நினைவுகளைப் பராமரித்தல். வசதிக்கேற்ற வரலாற்றின் மூலமாக ஒரு சமூகத்தின் கற்பனைகளை அபகரித்தல்! ஏன் ஒவ்வொரு இயக்கமும் அவர்களுக்கு ஏற்ப வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்றால், மக்களின் நினைவுக்குள் சென்றடையவும் மக்களுடைய கற்பனைகளைத் திருத்தி அமைக்கவுமான தோதான அரசியல் வாகனமாக வரலாறு அமைகிறது. ஆனால், அன்றாட வாழ்க்கை அலைக்கழிக்கும் சாமானிய மக்களின் வாழ்வில் வரலாறு என்பது கலங்கலாக, மங்கலான ஒரு குறியீடாகவோ, சொல்லாகவோ மட்டுமே எஞ்சி நிற்கிறது. திட்டவட்டமாக சமகாலத்தை அது பலி கேட்டாலும், நிச்சயமற்றதுதான் என்றாலும், எதிர்காலத்துக்கான கனவுகளை உற்பத்திசெய்யும் வசதியை அது அளிக்கிறது.

அரசியல்வாதிகள் இந்த இடத்திலிருந்தே தங்கள் ஆட்டத்தைத் தொடங்குகிறார்கள். குறியீடுகளையும் சொற்களையும் அவர்கள் பூமாரங்போல ஒரு ஆயுதமாக்கிக்கொள்கிறார்கள். எந்தக் கட்சியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எவ்வளவோ மாறிவிட்டாலும், காங்கிரஸ்காரர்கள் ஏன் இன்னமும் கதர் உடுத்துகிறார்கள்? ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான காங்கிரஸின் அரசியல் வரலாற்றை நினைவூட்டும் குறியீடு அது. எவ்வளவோ மாறிவிட்டாலும் திராவிட இயக்கத்தினர் ஏன் இன்னமும் துண்டு போடுகிறார்கள்? பிராமணர்களுக்கும் ஆண்டைகளுக்கும் சமமாக சாமானியனும் துண்டு போடலாம் என்ற சாதிய எதிர்ப்புக்கான திராவிட அரசியல் வரலாற்றை நினைவூட்டும் குறியீடு அது.

இங்கே - அதாவது நினைவுகளைக் கையாளும் தளத்தில் - ஏனைய இயக்கங்களுடன் ஒப்பிடுகையில் பாஜக எங்கே மாறுபடுகிறது என்றால், வரலாற்றை அது எப்படிக் கையாள்கிறது; மக்களுடைய நினைவில் எந்த வகையில் வரலாற்றைப் பொதித்து, அவர்கள் கற்பனைகளை எப்படியானதாக அது தீர்மானிக்க முற்படுகிறது என்ற இடத்தில்தான் மாறுபடுகிறது. பாஜக அரசியலின் மிக நுட்பமான, அபாயகரமான பகுதிகளில் ஒன்று இது.

ஒரு வரலாற்றின் பழைய பெயரின் மீதே தன்னுடைய புதிய கதையைப் பொருத்தி, காலப்போக்கில் அதையே பழைய வரலாறாக மாற்றிவிடுகிறது பாஜக. சாதி, மத, இன எல்லைகளைக் கடந்து கடையனுக்கும் கடைத்தேற்றம் அளிப்பதைக் கடவுளின் ஆட்சி என்று பொருள்பட காந்தி பயன்படுத்திய சொல்லாடலான ‘ராம ராஜ்ஜியம்’ கருத்தாக்கத்தைத் தன்னுடைய இந்துத்வ ராம ராஜ்ஜியத்துடன் ஒப்பிட்டுப் பேசும் பாஜக தலைவர்களின் உத்தியை இங்கு குறிப்பிடலாம். ‘வந்தே மாதரம்’, ‘பாரத் மாதா கீ ஜே!’ ஆகியவை யாருடைய முழக்கங்கள்? சுதந்திரப் போராட்டத்தில் சங்கப் பரிவாரத்தின் பங்களிப்பு என்ன? காங்கிரஸை விஞ்சிய தேச பக்தர்களாக அவர்கள் இன்று எப்படி உருவெடுத்திருக்கிறார்கள் என்பதையும் இங்கு குறிப்பிடலாம்.

ஆக, வரலாற்றுக் குறியீடுகளைக் கைப்பற்றுகிறது பாஜக. பின்னர் அந்தக் குறியீடுகளின் உள்ளடக்கத்தில் தன்னுடைய கதைகளைப் பொருத்துகிறது. பின்னர், இப்படிப் புதிதாக அது உருவாக்கும் வரலாற்றின் அடிப்படையில் சமூகத்தின் நினைவுகளையும் கற்பனைகளையும் அது இயக்க முற்படுகிறது. சமீபத்தில் அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். எங்கு பார்த்தாலும் காந்தி படங்கள். கிட்டே நெருங்கிப் பார்த்தால், எல்லாப் படங்களிலும் காந்தி ஒரே செய்தியைத்தான் சொல்கிறார்: “தூய்மையாக இருங்கள்!” ஆக, பாஜகவின் வரலாற்றிலும் காந்தி குறியீடாக நீடிப்பார். ஆனால், இந்தியாவின் நல்லிணக்கத்துக்காகத் தன் உயிரையும் கொடுத்த தேசப் பிதா இனி பாஜக வரலாற்றில் ‘ஸ்வச் பாரத்’தின் முகவராகவும் சுத்தத்தை வலியுறுத்தும் பிரதிநிதியாகவும் மட்டும் நீடிப்பார். அம்பேத்கரை எப்படி வரித்துக்கொண்டிருக்கிறது பாஜக? காலமெல்லாம் சாதிக்கு எதிராகப் போராடிய அம்பேத்கர் இனி வெறும் அரசியலமைப்புச் சட்ட சிற்பியாக மட்டும் நீடிப்பார். இதிலும் நுட்பமான ஒரு அரசியல் உண்டு - மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தில் மாற்றம் கோரி கீழ்நிலைச் சமூகங்கள் கிளர்ந்தெழாமல் இருக்க அம்பேத்கரை அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர் ஆக்கிவிடும் அரசியல்!

காங்கிரஸோடு பாஜகவை ஒப்பிட்டுப் பேசுவதென்றால், தன்னுடைய கொடியின் நிற வடிவமைப்பை ஒத்ததாக தேசியக் கொடியை காங்கிரஸ் உருவாக்கியதையும் இந்த மண்ணோடு கலந்து கிடந்த காவியைத் தன் கட்சிக் கொடியின் நிறமாக பாஜக அபகரித்துக்கொண்டதையும் இரு கட்சிகளும் வரலாற்றை அணுகும் போக்குக்கான மிகச் சிறந்த குறியீடாகச் சொல்லலாம். கன்னியாகுமரி கடற்கரையில் இன்று பெரிய காவிக் கொடி பறந்துகொண்டிருக்கிறது. அது பாஜக கொடி கிடையாது. ஆனால், பாஜக கொடி ஆகிவிடுகிறது. காவி இன்று துறவின் நிறம் அல்ல; அதிகாரத்தின் நிறம்! வரலாறு ஒரு நூற்றாண்டுக்குள் ஒரு நிறத்தின் தன்மையையும், நிறத்தின் நினைவையும் எவ்வளவு வேகமாக மாற்றிவிட்டிருக்கிறது!

ஜூன் 2017, ‘தி இந்து’

மோடியின் காலத்தை உணர்தல்... 16

14 கருத்துகள்:

 1. உதாரணத்திற்காக அந்த அற்புதமான கடைக்காரரோடு அரசியல்வாதிகளை ஒப்பிடவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 2. சாமானிய மனிதர்களோடு அரசியல் அதிகாரத்தை இணைத்து,நேர்மை தன்மைகளை விளக்கிறுப்பது, சமஸ் சார் போன்ற எழுத்தாளுமைகளால் மட்டுமே முடியும். நன்றி

  பதிலளிநீக்கு
 3. கண்முன்னே நடந்த வரலாறுகளை அச்சமி ன்றி அநாயாசமாக திரித்துச்சொல்வது... அரசின் மாபெரும் அதிகாரவர்க்க பிரதிநிதி களை நமக்கு துணைக்கோடுவது( ராணுவத் தலைவர்,தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர்,கேபினட் செயலாளர், தலைமைக் கணக்காளர்கள்) இவர்களை கச்சிதமாக பயன் படுத்தி சமகால படித்த இந்தியர் அனைவரையும் செம்மறியாடு களமாக மாற்ற முடிந்திருக்கிறது இவர்களால். சமூகத்தில் சிறு சிந்தனைக்கும் கூட வாய்ப்பளிக்காமல் கும்பலில் மூச்சுமுட்ட வைத்துக்கொண்டே இருப்பது இவர்களின் கைவந்த முக்கியமாக இருக்கிறது.அண்ணலையும் அரும்பெரும் தலைவர்களையும் சகட்டுமேனிக்கு சாடுவது, நாலாந்தர தலைவர் களை தலையில் தூக்கி வைத்து ஆடுவது என சதிராட்டம் களை கட்டுகிறது.எத்தனைகாலந்தான் ஏமாற்றுவார் என்று பாடிக்கொள்ளலாம். மற்றபடி ஜனநாய த்தினால் இவர்களை வென்றெடுப்பது சரியான சவாலாகவே தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 4. Surprise to see still such writer (so called ) are writing against BJP and it's patriotic, I believe they are getting funding to write against truth so pity on them. Hindu it's time to rethinking of your writer

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள மாதிரி ஆள ஆயிரம் பெரியார் இல்ல ஆயிரம் சமஸ் வந்தாலும் திருத்த முடியாது

   நீக்கு
  2. உங்கள மாதிரி ஆள ஆயிரம் பெரியார் இல்ல ஆயிரம் சமஸ் வந்தாலும் திருத்த முடியாது

   நீக்கு
 5. மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணக் கருத்துக்கள் போல தோன்றக்கூடிய, ஆனால் ஆழமான கருத்துக்களைக் கொண்ட கட்டுரையிது. இதனை எல்லோரும் எளிதாக புரிந்துக் கொள்ள வேண்மென்றால் பல விரிவுரைகள் தேவைப்படும்.

  மதவாதிகள் அதிகாரத்துக்கு வந்தால் அந்த சமூகம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியில் பின்தங்கும், சமூகத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்பதனை கிறித்தவ இஸ்லாமிய மதங்களையும், சமூகங்களையும் ஆழ்ந்து பார்க்கும் நடுநிலையாளர்களுகளால் புரிந்துக் கொள்ள முடியும்.

  ஐரோப்பிய நாடுகள் அறிவியலிலும் அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அந்நாடுகளில் கிறித்தவ மதத்தின் அரசியலாதிக்கம் கிறிஸ்தவ மதத்தை நேசிக்கும் மக்களாலும் முதலாளிகளாலும் அகற்றப் பட்டதுதான்.

  வெள்ளையர்களுக்கு முந்தைய இந்திய சமூகத்தில் வேகமான வளர்ச்சி ஏற்படாமைக்கான காரணங்களில் முக்கியமானதும், மதங்களின் ஆதிக்கம் அரசியலதிகாரத்தில் இருந்ததுதான். குறிப்பாக மிகவும்.பிற்போக்கான வர்ணாசிரமத்தை ஆதரித்த சனாதன மதவாதிகளின் ஆதிக்கம் அதிகாரத்தில் இருந்ததுதான்.

  வெள்ளையர்களின் அதிகாரத்தில் சனாதன மதவாதிகளின் ஆதிக்கம் அரசியலில் பெருமளவுக்கு அகன்றது. ் மதவாதிகளிடம் அரசியல் அதிகாரம் இல்லாததால் சனாதன மதவாதிகள் மீது மக்களுக்கு வெறுப்பும் குறைந்தது. இந்நிலையில் இந்திய மக்களின் பலவீனங்களைப் புரிந்துக் கொண்ட சனாதன மதவாதிகள் இந்தியர்களின் தூய்மையான துறவறத்தின் அடையாளமான காவி நிறத்தை சுவீகரித்துக் கொண்டதோடு, வெள்ளையர்கள் இந்தியர்களை பொதுமைப் படுத்தி உருவாக்கிக் கொடுத்த இந்து என்ற கருத்தாக்கத்தையும் இணைத்துக் கொண்டு இந்து ராஷ்டிரம் என்ற கொள்கையோடு அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற களத்தில் இறங்கினார்கள். எனினும் 2014 வரை பெரிய வெற்றியை பெற முடியவில்லை.

  இந்திய தேசிய இனங்களை பொதுவாக இணைக்கக் கூடிய இணைப்பு சக்தி இல்லாமல் போனதாலும், இந்திய அரசியலில் ஊழல் உச்சமடைந்ததாலும் மதவாதிகள் தற்காலிக மாற்றாய் மக்களாலும் முதலாளிகளாலும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அதனால் மதம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளது

  அடுத்து என்ன நடக்கும்?, அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி குறையும். காவியில் கறைபடியும். மக்களிடம் அதிருப்தி தானாக பெருகும். ஐரோப்பியர்கள் அரசியலில் இருந்து கிறித்தவ மதவாதிகளை அப்புறப் படுத்தி வளர்ச்சியடைந்தது போல இந்திய மக்களும், முதலாளிகளும் அப்புறப் படுத்துவார்கள், வளர்ச்சி அடைவார்கள். இடைக்கால பின்னடைவை, இந்தியர்களுக்கு இயற்கையன்னை கொடுக்கும் தண்டனையாகவே கருதமுடியும்.

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. Do you really believe all the non-brahmin ancestors were dumb to accept brahmin rule? Why did the (both ancient and later) cholas, Pallavas, Pandyas & Cheras and all the non-brahmin kings across India patronize brahmins?

   நீக்கு
 7. ஒரு விசயத்தை ஒருவரின் மனதில் ஆழமாக பதிய வைத்து, அதனை தொடர்ந்து நினைவில் இருக்க வைப்பது பற்றிய பஞ்சாப் பெரியவரின் அனுபவப் புரிதல் அவரது வியாபாரத்துக்கு பயன் படுவது மட்டுமல்ல. அது ஒவ்வொருவரின் வாழ்விலும் பயன் படும் சிறந்த உளவியல் உண்மையாகும். குறிப்பாக காதலிலும் காமத்திலும் இன்னும் பல முக்கிய விசயங்களிலும் பலருக்கு ஏற்படும் வெற்றித் தோல்விகளுக்கு இந்த உளவியல் உண்மையின் புரிதலும் புரியாமையுமே முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

  இந்தியர்களின் உன்னத ஆன்மீகத்தின், துறவறத்தின் அடையாளமான காவி நிறத்தை, துறவறத்துக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் இல்லாத, உடல் சார்ந்த நுகர்வுகள் மீதும், அதிகாரத்தின் மீதும் அதிக பற்றுக் கொண்ட, அரசியல் வாதிகள் அபகரித்துக் கொண்டார்களா? அல்லது தந்திரமாக சுவீகரித்துக் கொண்டார்களா? என்பது ஆய்வுக்குரிய விசயம். இது இன்றைய இந்திய அரசியலின் அடிப்படைகளை அறிய விரும்புபவர்களுக்கு நன்கு உதவும்.


  உன்னதமான ஆன்மீகவாதிகளோடும், துறவிகளோடும் ஒட்டி உறவாடி, அவர்களின் வாரிசுகள் போன்ற மாயத் தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தி, காவி நிறத்தை தந்திரமாக சுவீகரித்தோ/அபகரித்தோ கொண்டார்கள் என்பது கசப்பான உண்மையே. காவி நிறத்தை எவ்வாறு எடுத்துக் கொண்டாலும் அதனைப் பயன் படுத்தி, அப்பாவி மக்களிடம் மத வெறுப்புகளையும் வெறியையும் ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார்கள் என்பதே உண்மை.

  தேசியக் கொடியைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட மூவர்ணக் கொடியை காங்கிரசார் அதிகாரத்தை கைப்பற்றப் பயன் படுத்தியதும் உண்மை. அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜகவினர் காவியை பயன் படுத்திக் கொண்டதும் உண்மை. இவை இரண்டையும் அனுமதித்திருக்கக் கூடாது. இதனை வெளிப்படுத்தினால் விவாதங்களும் வெறுப்புகளும் தவிர்க்க முடியாதது. எனினும் காவியின் மூலம் மதத்தை அரசியலோடு கலக்க விட்டது பெருந்தவறு. இதனால் காவி நிறம் தனது உண்மையான குணத்தையும் மதிப்பையும் இழந்து வருகிறது. இது இந்தியாவின் உயர்வகை ஆன்மீகத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்? கலப்புகளை உருவாக்கும்?, அதனால் யாருக்கு பாதிப்பு? யாருக்கு பயன்? என்பது பற்றி ஆராய வேண்டியது உண்மையான துறவிகளின், ஆன்மீகவாதிகளின் கடமை.

  அறிவுத்தாகமும், ஆய்வுமனமும், விவாதங்களில் ஆர்வமும் கொண்ட தமிழை நேசிக்கும் தரமான வாசகர்களும், இளைஞர்களும் தமிழ் இந்துவை விரும்பி படிக்க வேண்டும் என்றால், இது போன்ற விவாதத்துக்குரிய சிறந்த கட்டுரைகள் அதிகமாக இடம் பெற வேண்டும்.
  சமூகவியல் அறிவியல் சம்பந்தமான எல்லா பிரிவினரின் தரமான விவாதத்துக்குரிய கருத்துக்களும் அதிகமாக வெளிவர வேண்டும்.

  தமிழ் இந்து இதனை விரும்பவில்லை என்றால் புராண புழுகுகளையும், பலமதங்களின் கற்பனைக் கதைகளையும் எழுதித் தள்ளுங்கள் பழமையாளர்களும், பக்திமான்களும் படித்துப் பயன் பெறட்டும்.

  பதிலளிநீக்கு