51=100, 49=0: இது சரியா?


ந்தக் கணக்கைப் பாருங்கள்: அகில இந்திய அளவில் இந்தத் தேர்தலில் பா.ஜ.க. வாங்கியிருக்கும் ஓட்டு விகிதம் 31%; அது பெற்றிருக்கும் இடங்கள் 282. காங்கிரஸ் வாங்கியிருக்கும் ஓட்டு விகிதம் 19.3%; ஆனால், அது பெற்றிருக்கும் இடங்கள் 44. தேசிய அளவில் அ.தி.மு.க. வாங்கியிருக்கும் அதே 3.3% ஓட்டு விகிதத்தைத்தான் மார்க்ஸிஸ்ட் கட்சியும் வாங்கியிருக்கிறது; ஆனால், அ.தி.மு.க. பெற்றிருக்கும் இடங்கள் 37; மார்க்ஸிஸ்ட்டுகள் பெற்றிருக்கும் இடங்கள் 9. இதைவிடவும் விசித்திரம் பகுஜன் சமாஜ் கட்சி வாங்கியிருக்கும் ஓட்டு விகிதம் 4.1%. ஆனால், ஒரு இடத்தைக்கூட அந்தக் கட்சி பெறவில்லை.
தமிழக அளவில் இந்தக் கணக்கை இப்படிப் போடலாம்: அ.தி.மு.க. வாங்கியிருக்கும் ஓட்டுகள் 43.3%; பெற்றிருக்கும் இடங்கள் 37; தி.மு.க. வாங்கியிருக்கும் ஓட்டு விகிதம் 23.6%; ஒரு இடத்தைக்கூடப் பெறவில்லை.
ஏன்?
ஏனென்றால், இப்போதுள்ள நம்முடைய தேர்தல் அமைப் பின்படி, 100 பேர் உள்ள ஓர் ஊரில், 51 ஓட்டுகளை வாங்குபவர் முழு வெற்றி பெற்றவர்; 49 ஓட்டுகளை வாங்குபவர் முழு தோல்வி அடைந்தவர். அதாவது, 51=100. 49=0.
இது வெறுமனே கட்சிகளுக்கான இழப்பு மட்டும் அல்ல; இந்தக் கட்சிகளுக்காக வாக்களித்த கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கான இழப்பு. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், வீணான ஓட்டுகள்.

பழைய விவாதத்தின் இன்றைய தேவை
இந்த விஷயம் புதிதாக விவாதத்துக்கு வரவில்லை. இந்தியாவின் முதல் தேர்தல் முதல் விவாதித்துக் கொண்டிருக்கும் விஷயம் இது. உலகில் பிரிட்டிஷ் காலனி யாதிக்க நாடுகள் நீங்கலாக ஏனைய நாடுகள் பலவும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையையே பின்பற்றுகின்றன. அதாவது, தேர்தலில் தேசிய அளவில் கட்சிகள் போட்டியிடும். நாடு முழுவதும் உள்ளவர்கள் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்கு வீதத்துக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் அவற்றுக்கு இடங்கள் கிடைக்கும். அந்த இடங்களுக்கான உறுப்பினர்களைக் கட்சிகள் தேர்ந்தெடுத்து அனுப்பும். நாம் இப்போது பின்பற்றும் ‘முதலில் வருவோருக்கே முழு வெற்றியைத் தரும் முறை'க்கு மாற்று கோருபவர்கள் இப்படிப்பட்ட விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையையே கோருகிறார்கள். ஆனால், இடதுசாரிகள் நீங்கலாக இந்தத் தீர்வை ஏனைய கட்சிகள் ஏற்க விரும்பவில்லை. முக்கியமாக, பல்லாண்டு காலமாக தேசத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி இதை விரும்பவில்லை. அதனால், எப்போதும் ஒரு சிறு குழுவின் குரலாக மட்டுமே இந்தத் தேர்தல் சீர்திருத்தக் கோரிக்கை இருந்துவந்திருக்கிறது.

ஜனநாயகத்தின் அடிநாதமே பன்மைத்துவம்தான். நல்லாட்சிக்கு ஆளுங்கட்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு எதிர்க் கட்சிகளும் முக்கியம். அவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருப்பது அவசியம். ஆனால், நம்முடைய தேர்தல் முறை எதிர்க் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கவே வழிவகுக்கிறது.

விகிதாச்சார முறை எதிர்கொள்ளும் தடை

இதற்கு மாற்றாக, மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் விகிதாச்சார முறையைக் கொண்டுவர வேண்டும் என்ற குரல் எதிர்கொள்ளும் பெரும் தடை, அந்த முறை நம்முடைய அரசியல் கட்சித் தலைவர்களை முழுச் சர்வாதிகாரிகளாக மாற்றிவிடும் என்பது. ஏற்கெனவே, நம்முடைய அரசியல் கட்சிகளில் ஆகப் பெரும்பாலானவை குடும்ப அரசியலாலும் வாரிசு அரசியலாலும் சூழப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், மக்களவைக்கோ, சட்டப்பேரவைக்கோ ஒரு கட்சி அனுப்பும் பிரதிநிதி தேர்தலுக்குப் பின்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றால், முழுக்க முழுக்க கட்சித் தலைவர் வைத்ததே சட்டம் என்றாகிவிடும். மேலும், மக்களோடு தொடர்பில்லாதவர்கள் ஆளுகையின் கீழ் மக்கள் மன்றங்கள் சென்றுவிடும் என்பது விகிதாச்சார முறைக்கு எதிராகப் பேசுவோரின் நிலைப்பாடு.

நாம் இப்படிச் செய்தால் என்ன?
இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு தீர்வை இந்தியா யோசிக்கலாம் என்று நினைக்கிறேன். ஏன், நம்முடைய மாநிலங்கள் அவையை, பிரதிநிதிகள் அவையாக நாம் மாற்றக் கூடாது? அதேபோன்ற பிரதிநிதிகள் அவைகளைச் சட்டப்பேரவைகளிலும் கொண்டுவரக் கூடாது? அதாவது, இப்போதுள்ள முறைப்படியே ஒரு சட்டப்பேரவைத் தேர்தலிலோ, மக்களவைத் தேர்தலிலோ அதிக வாக்கு களைப் பெற்று ஜெயிக்கும் வேட்பாளர்களைக் கீழ் அவை களுக்கு அனுப்புவது; மறுபுறம் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குவீதத்துக்கு ஏற்ப அவை தம் பிரதிநிதிகளை மேல் அவையான பிரதிநிதிகள் அவைக்கு அனுப்புவது.

நம்முடைய நாடாளுமன்றத்தில், இப்போதுள்ள மாநிலங்கள் அவையின் நோக்கங்களாகப் பல சொல்லப்பட்டாலும், அவற்றில் எஞ்சியிருக்கும் ஒரே நியாயம் - தேர்தல் களத்தைச் சந்திக்க முடியாத ஆளுமைகளின் குரல்களும் நம் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும் என்பதுதான். இதே நோக்கத்தைக் கொண்டவைதான் மாநிலங்களின் மேலவைகளும். அந்த நோக்கம் இந்தப் புதிய முறையில் சிதையப்போவதில்லை. கட்சிகள் கையில்தான் இந்தப் பிரதிநிகள் அவைகளும் இருக்கப்போகின்றன. ஆனால், மக்கள் போடும் ஓட்டு வீணாவதில்லை.

இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போதுள்ள மாநிலங்களவைக்கான உறுப்பினர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைப்படித்தான் தேர்ந் தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், அது ஒரு கட்சி சட்டப் பேரவைத் தேர்தலில் பெறும் இடங்களை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. நாம் இதை மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சி பெறும் வாக்குவீதங்களின் அடிப்படையில் மாற்ற லாம். அதேபோல, எல்லா மாநிலங்களிலும் மேலவை அமைப்பைக் கட்டாயமாக்கி, சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு கட்சி பெறும் வாக்குவீதங்களின் அடிப்படையில் அதற்கான பிரதிநிதித்துவத்தை மாற்றலாம். இந்தப் பிரதிநிதித்துவச் சபைகளுக்கான ஆட்சிக் காலமும் அதிகபட்சம் ஐந்தே ஆண்டுகள். அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவைகளுக்கு இணையான ஆயுள்.

என்ன மாற்றம் நடந்துவிடும்?

1. வெவ்வேறு கொள்கைகளைப் பிரதிபலிக்கும் வெவ்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அதிகாரத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் பங்கேற்பதுதான் பல கட்சி முறை ஜனநாயகத்தின் பேரழகு. சட்டப்பேரவைத் தேர்தல்களோ, மக்களவைத் தேர்தலோ... குறைந்தபட்சம் குறிப்பிட்ட சதவீதத்தைத் தாண்டும் கட்சிகளுக்கு ஓட்டுபோட்ட எல்லா வாக்காளர்களின் பிரதிநிதிகளின் குரல்களும் மக்கள் சபைகளில் எதிரொலிக்கும். அதாவது, வீணாகும் ஓட்டுகளின் வீதம் அதிகளவில் குறையும்.

2. நாம் பொதுவாக, மாநிலத்தில் யார் ஆள வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும்போதும் மத்தியில் யார் வர வேண்டும் / வரக் கூடாது என்பதிலும் தனித்தனி முடிவுகளை எடுக்கிறோம். இத்தகைய நிலையில், நாம் மாநிலத் தேர்தலில் அளிக்கும் ஓட்டுகள் வாயிலாக ஏன் அரசியல்வாதிகள் மத்திய ஆட்சியைத் தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும்? மாறாக, நாம் சட்டப்பேரவைத் தேர்தலில் அளிக்கும் ஓட்டுகள் சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத் தேர்தலில் அளிக்கும் ஓட்டுகள் நாடாளு மன்றத்திலும் எதிரொலிக்கும்.

3. இப்போதைய மாநிலங்களவையின் ஆயுள் ஆறு ஆண்டுகள். ஐந்தாண்டுகள் ஆயுளைக் கொண்ட மக்களவை இடையில் கலைந்தாலும் மாநிலங்களவை கலைக்கப்படுவதில்லை. இதன் விளைவு, பல சமயங்களில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிரெதிர் கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. மக்களின் பேராதர வுடன் மக்களவையில் வலுவான இடத்தை ஒரு கட்சி பெற்றிருக்கும் சூழலிலும்கூட, மாநிலங்களவையின் எதிர்ப்பால், அமைப்புரீதியிலான மாற்றங்களை மேற் கொள்ள முடிவதில்லை. தவிர, வெற்று எதிர்ப்பு அரசியலால் தேவையில்லாமல் அவைகள் முடக்கப்படும் கலாச்சாரத்துக்கு இது முடிவுகட்டும்.

இது தொடக்கப்புள்ளிதான்!

மக்கள்தொகை குறைவான மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையிலும் அதிகபட்ச கட்சிகளின் பங்கேற்பைச் சாத்தியமாக்கும் வகையிலும் இதை யோசிக்க லாம். இந்த யோசனை ஒரு தொடக்கப்புள்ளிதான். முற்றிலு மாக இதை நிராகரித்துவிட்டு வேறு வழிகளையும் நாம் பேசலாம். ஆனால், இந்த விஷயம்பற்றி நாம் அவசியம் பேசியாக வேண்டும்!
மே, 2014, 'தி இந்து'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக