இன்றோடு முடிகிறது இந்தியாவின் வண்ணங்கள் தொடர். ஒருவிதத்தில் ஆச்சரியமாக இருக்கிறது 33 அத்தியாயங்களை இந்தத் தொடர் தொட்டது. பெரிய முன்யோசனைகளோ, முன்தயாரிப்புகளோ ஏதும் இல்லை. இந்தியாவின் நான்கு மூலைகளையும் தொடும், ஒரு குறுக்கு நெடுக்குச் சுற்றுப்பயணம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நிகழ்வான இந்தியத் தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில், அரசியல்ரீதியாக இந்தியாவைப் புரிந்துகொள்ள முனையும் ஒரு பயணம். இந்திய வரைபடத்தை மேஜையில் வைத்துக்கொண்டு, யோசிக்கும்போது இவ்வளவுதான் திட்டமாக இருந்தது. பயணத்தைத் தொடங்கிய பின்தான் தெரிந்தது... எவ்வளவு பெரிய நாடு இது... எவ்வளவு பெரிய மக்கள் திரள்... எத்தனை எத்தனை வகையான மனிதர்கள்... எத்தனை எத்தனை கலாச்சாரங்கள்... இப்படி ஒரு பயணத்தை மேற்கொள் பவரை நோக்கி சகஜமாக எல்லோரும் எழுப்பப்படும் இரு கேள்விகளுக்கு இந்த இறுதி அத்தியாயத்தில் பதிலளிப்பதோடு தொடரை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
என்னா சாப்பாடுப்பா?
இப்படி ஒரு பயணம் மேற்கொள்வது என்று முடிவெடுத்து விட்ட பிறகு, நம் நாக்கை எல்லா ஊர் உணவு வகைகளுக்கும் தயார்ப்படுத்திக்கொள்வதே சிறந்த வழி. இந்தியப் பண்பாட்டைக் கலைகள் வாயிலாகப் பார்ப்பது எவ்வளவு பிரமிப்பும் உவகையும் ஊட்டுவதோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத சுவாரஸ்யம் அளிப்பது உணவுகள் வழியாக இந்தியப் பண்பாட்டைப் பார்ப்பது. நிமிடத்தில் தயாராகும் உணவிலிருந்து நாள் கணக்கில் தயாராகும் உணவு வரை எண்ணற்ற உணவு வகைகளை நாம் ஒரு கை பார்க்கலாம்; கொஞ்சம் மனதைச் சுதந்திரமாக வைத்திருந்தால். முடியாது... எனக்கு இட்லியும் தோசையும்தான் வேண்டும் என்றால், எல்லாப் பெருநகரங்களிலும் தாராளமாக அவை கிடைக்கக் கூடும். சின்ன ஊர்களில் இது சாத்தியம் இல்லை. என்ன செய்வது? ரொட்டிக்குப் பழகிக்கொள்வதுதான் எளிய வழி. நாட்டின் எல்லா மூலைகளிலும் ரொட்டி கிடைக்கும். விதவிதமாக. இதெல்லாம் சரிப்படாது என்று நினைத்தால், பிரட், பட்டர், ஜாம். அதற்கும் வாய்ப்பில்லாத சமயங்களில் பழங்கள்.
உணவு விஷயத்தில் இந்தியா எதிர்கொள்ளும் பேரபாயம் மைதா. நாடெங்கும் மைதா ஆக்கிரமித்திருக்கிறது. பல பகுதிகளில் மைதா விளைவிக்கும் கேடுகளைப் பற்றி சாப்பிடுபவர்களுக்கும் தெரியவில்லை; சமைப்பவர்களுக்கும் தெரியவில்லை. ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், தமிழகத்தைத் தாண்டிவிட்டால், பெரும்பாலான உணவகங் களில் ரொட்டி கேட்கும்போது கோதுமை ரொட்டிதான் வேண்டும் என்று சொல்லிவிட்டால், கோதுமையில் ரொட்டி தயாரித்துத் தருவார்கள். மைதா ரொட்டி பசப்பு இதில் இருக்காது என்றாலும் உடம்புக்குக் கேடு கிடையாது.
பொதுவில் சாப்பாடு ஒரு பெரிய பிரச்சினை கிடையாது.
ஓர் உணவு: சன்னா
ஒரேயோர் உணவைப் பற்றி இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் - சன்னா.
தென்னிந்தியாவுக்கு மேல் எந்த மாநிலம் சென்றாலும் சன்னாவைக் காண முடியும். ஏனைய பிரதேசங்களில் சன்னா நொறுக்குத்தீனி என்றால், கிழக்கு இந்தியாவில் எளிய மக்களுக்கு அதுவே பல வேளைகளில் உணவும்கூட. ஆகையால், ஏனோ தானோ என்று செய்யாமல் ரொம்பவும் கரிசனத்துடன் செய்கிறார்கள்.
இரு கை அளவு நன்கு முளைவிட்ட கொண்டைக் கடலை, அதில் சில துண்டுகள் தக்காளி, வெங்காயம், மல்லித் தழை, பச்சை மிளகாய் சீவல், இவற்றின் மீது அரை மூடி எலுமிச்சைச் சாறு. இந்தக் கலவைதான் சன்னா. நல்ல சத்து. பசிக்கும் ஈடுகொடுக்கிறது. காடு, மலை என்று தேர்தலுக்குச் சுற்ற வேண்டியிருக்கும் சூழலில், வேட்பாளர்கள் வண்டிகளில் சன்னாவும் பயணிக்கிறது!
பாஷை எப்டிப்பா?
இது கொஞ்சம் சிக்கலான பிரச்சினைதான். தமிழர்கள் ரொம்ப புத்திசாலித்தனமாக தமிழையும் ஆங்கிலத்தையும் மட்டும் வைத்துத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்தால், சென்னையைத் தாண்டியதும் ததிங்கிணத்தோம் போட வேண்டியதுதான். உடனே, இந்தி தெரிந்தால் மட்டும்தான், ஒட்டுமொத்த இந்தியாவையும் சுற்றிவரலாம் என்றும் நினைக்க வேண்டாம். இந்தி தெரிந்த மக்களுக்கு இணையாக இந்தி தெரியாத மக்களையும் கொண்டது இந்தியா என்பது நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது. அப்படியென்றால், எந்த பாஷைதான் நமக்கு உதவும்? ஹிங்கிலீஷ் உதவும்!
உண்மையில் இந்தியா முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் வெவ்வேறு பகுதி மக்களை இன்றைக்கு இயக்குவது ஹிங்கிலீஷ்தான். நம்முடைய தங்கிலீஷானது ஏராளமான தமிழ்ச் சொற்களுடன் நடுநடுவே இங்கிலீஷ் சொற்களைக் கலந்து பேசுவது. ஹிங்கிலீஷ் அப்படி அல்ல. மிகக் குறைந்த ஹிந்தி சொற்களும் மிகக் குறைந்த இங்கிலீஷ் சொற்களுமான, இலக்கணம் தேவையில்லாத கலவை. உதாரணமாக, அலகாபாத்தில் நீங்கள் ஒரு சாலையோர உணவகத்திற்குச் செல்கிறீர்கள். தோசை இருக்கிறதா என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். “தோசா மிலேகா?” என்றுதான் இந்தியில் கேட்க வேண்டும் என்று இல்லை. “தோசா” என்று நீங்கள் கொஞ்சம் அழுத்திக் கேட்டாலே போதும். அந்த உத்தரப் பிரதேசக்காரர் உங்கள் துர்ப்பாக்கியமான நிலையைப் புரிந்துகொண்டு இப்படிப் பதில் அளிப்பார்: “நோ தோசா!” அப்புறம் அவரே இப்படிச் சொல்வார்: “சப்பாத்தி யெஸ் சாப்...”
இவ்வளவுதான் ஹிங்கிலீஷ். யெஸ், நோ இரு வார்த்தைகளை வைத்துக்கொண்டே பெரும்பாலான உரை யாடல்களைச் சமாளித்துவிடுகிறார்கள்.
என்னைக் கேட்டால், இந்தியாவின் எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஹிங்கிலீஷ் சொல்லிக்கொடுக்கலாம் என்று சொல்வேன். அதாவது, இந்தி, ஆங்கிலம் எழுதப் படிக்கக் கற்றுத்தருவதோடு, அன்றாட பயன்பாட்டுக்கு உரிய ஒரு நூறு வாக்கியங்களைச் சொல்லிக்கொடுப்பது. ஏனென்றால், தமிழ்நாட்டு அரசியல் தமிழர்களுக்கு இந்தி தெரிந்துவிடக் கூடாது என்பதில் எவ்வளவு நுட்பமாகச் செயல்படுகிறதோ, அதேபோல் இந்தி மாநிலங்களில் இந்தியைத் தாண்டி அவர்களுக்கு ஒரு மொழியும் தேவை இல்லை என்கிற மாயையை மிக வெற்றிகரமாக அங்குள்ள அரசியல் நிறுவியிருக்கிறது. சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகைகள், மைல் கற்களில்கூட இந்தி மட்டும்தான். வடக்கைச் சுற்றியுள்ள, இந்தியைப் பிரதான மொழியாகக் கொண்டிராத மாநிலங்களிலும் பெரும்பான்மைப் பள்ளிகளில் தங்கள் தாய்மொழி, இந்தி தவிர வேறு எதுவும் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. நாம் எப்படி வடக்கே செல்லும்போது முழிக்குறோமோ, அதேபோல் அவர்கள் தெற்கே வரும்போது முழிக்கிறார்கள். ஹிங்கிலீஷ் நம்மை இணைக்கும் பாலமாக அமையக் கூடும்.
ஒரு பிடி இந்தியா
முன்மாதிரி இல்லாத புது மாதிரிப் பயணத் தொடர் இது. இந்தப் பயணத்தில் நான் புரிந்துகொண்ட எளிய உண்மை: இந்திய ஜனநாயகத்தில் எவ்வளவோ குறைகள் இருந்தாலும், அது தன்னைத்தானே சீரமைத்துக்கொள்ள முடியும் என்பதுதான். சகல பலவீனங்களுக்கு மத்தியிலும் இந்நாட்டின் மக்களுக்கு நம் ஜனநாயகத்தின் மீது இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை அதை நிகழ்த்திக்காட்டும் என்று நம்புகிறேன்.
இந்தியாவைப் புரிந்துகொள்வது என்பது கடலைக் கையால் அளக்கும் முயற்சி. அதேசமயம், இந்தப் பயணத் தொடர், குறைந்தது உங்கள் கைகளில் ஒரு பிடி கடல் நீரைச் சேர்த்திருக்கும் என்று நம்புகிறேன். ஒரு பிடி கடல் நீர் ஒருவகையில் ஒரு பிடி கடல்!
மே, 2014, ‘தி இந்து’
தமிழ் நாட்டிலிருந்து வடக்கே பயணிக்கும் ஒரு சாதாரண மனிதனின் உள்ளத்தை மிகச்சரியாக பிரதிபலிக்கும் முடிவுரை ! வாழ்த்துக்கள் ---காஸ்யபன்.
பதிலளிநீக்கு