முதலில் அவர் களம் இறங்கட்டும்... கொஞ்சம் ஒப்பாரியை நிறுத்துங்களேன்!


னநாயகம் என்பது நம்முடைய எண்ணங்களுக்கு ஏனையோர் இடம் அளிப்பது மட்டும் அல்ல; ஏனையோரின் எண்ணங்களுக்கு நாம் இடம் அளிப்பதும்தான். தேர்தலுக்கு முன் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விருப்பங்களை முன்வைக்கலாம். தேர்தல் நாள் என்பது அவற்றின் மீதான தீர்ப்பு நாள். ஓட்டுகள் வெறுமனே மக்களுடைய விருப்பங்கள் மட்டும் அல்ல; இந்த நாட்டின் மீது, இந்த ஜனநாயகத்தின் மீது, இந்த அரசியல் மீது, கடந்த கால அரசாங்கத்தின் மீது, எதிர்கால அரசாங்கத்தின் மீது, நம்முடைய வாதப்பிரதிவாதங்கள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுகள்.

தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியைப் பற்றி, அவர் முன்னிறுத்திய குஜராத் முன்மாதிரியைப் பற்றி, அவருடைய கடந்த கால வன்முறை வரலாற்றைப் பற்றி, அவரை முன்னிறுத்திய பெருநிறுவனங்களைப் பற்றி எல்லோருமே பேசினோம், எழுதினோம், விவாதித்தோம். மக்கள் இப்போது தீர்ப்பு அளித்திருக்கிறார்கள் (நாம் பேசி, எழுதி, விவாதித்தவற்றின் மீதும்தான்). வடக்கே ஜம்முவிலிருந்து தெற்கே குமரி வரை கிழக்கே அருணாசலப்பிரதேசத்திலிருந்து மேற்கே கட்ச் வரை இது தெளிவான தீர்ப்பு. காங்கிரஸ் வரக் கூடாது என்று மட்டும் மக்கள் நினைக்கவில்லை; பா.ஜ.க-தான் வர வேண்டும் என்றும் நினைத்திருக்கிறார்கள். மோடிதான் வர வேண்டும் என்றும் நினைத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு கட்சியின், வேட்பாளரின் வெற்றி, தோல்விக்குப் பின்னணியிலும் மக்களின் வலுவான செய்திகள் அடங்கியிருக்கின்றன. நமக்கு உண்மையாகவே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றால், மக்களின் அந்தச் செய்திகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான் நேர்மையான, ஆக்கபூர்வமான வழிமுறையாக இருக்க முடியும். ஆனால், எங்காவது சுய விமர்சனக் குரல்கள் கேட்கின்றனவா என்று சுற்றிலும் நிரம்பி வழியும் குரல்களைக் கேளுங்கள்...  ஒரே புலம்பலும் வசவுகளும் ஒப்பாரியும் ஊளைச்சத்தமும்தான் சூழ்ந்திருக்கின்றன.

தேர்தலுக்குப் பின் மக்களிடையே பயணித்தபோது, அவர்களிடம் எதிர்கொண்ட சின்னச்சின்ன நியாயங்கள் இவை.

"நீங்கள் ஏன் மோடிக்கு ஓட்டு போட்டீர்கள்?"

"பின்னே, இவ்வளவு கொடுமைகளுக்கும் பின்னால், சிங்குக்கே ஓட்டுபோடச் சொல்கிறீர்களா? "

"நீங்கள் ஏன் அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டீர்கள்?"

"தி.மு.க-வுக்கு ஓட்டு போட என்ன நியாயம் இருக்கிறது?"

ஒரு கட்சிக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: "காசையும் வாங்கிக்கொண்டு மாற்றிக் குத்திவிட்டார்கள்... வரவர நியாயம் செத்துக்கொண்டிருக்கிறது."

ஒரு வாக்காளர் சொன்னார்: "அவர்களுக்கு என்ன காசுக்கா பஞ்சம்? ஆனால், இந்தத் தேர்தலில் காசையே கண்ணில் காட்டவில்லையே... "

- எல்லாமும் கலந்ததுதான் ஜனநாயகம்; எண்ணற்ற விசித்திரங்களையும்தான்.

சமூக வலைத்தளங்கள் முழுக்க ஆற்றாமையாலும் சப்பைக்கட்டுகளாலும் சாபங்களாலும் நிரம்பி வழிகின்றன.  ஒரு நண்பர் எழுதியிருக்கிறார்: "இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் எப்படி வெற்றி பெற்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதைப் பற்றி மூச்சுக் கூட விடாத பலர் தி.மு.க என்ன தவறு செய்தது, அறிவுஜீவிகள் என்ன தவறு செய்தார்கள் என்றெல்லாம் இஷ்டத்துக்கு சவடால் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்..."

அது சரி, காங்கிரஸும் தி.மு.க-வும் மட்டும் என்ன காந்திய வழியிலா ஓட்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள்?

இன்னொரு நண்பர் எழுதியிருந்தார்: "மொத்தம் 31% ஓட்டுகளைத்தான் பா.ஜ.க. வாங்கியிருக்கிறது. 69% வாக்குகள் மோடிக்கு விழவில்லை..."

முதல் பொதுத்தேர்தலில் நேருவின் காங்கிரஸே 45% வாக்குகளைத்தான் பெற்றிருந்தது. இந்திய தேர்தல் வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ராஜீவின் காங்கிரஸ் 1984-ல் 414 இடங்களை வென்றபோது பெற்ற வாக்குவீதம் 48.1%. புள்ளிவிவரங்களை எப்படியும் வளைக்கலாம்.

பந்தயத்தில் ஒரு விளையாட்டுக்காரர் ஜெயிக்க வேண்டும் என்றால், முதலில் எதிர் போட்டியாளரைப் பற்றி சரியாக மதிப்பிடத் தெரிந்திருக்க வேண்டும். வெற்றிக்கு நிறைய உத்திகளோடு உழைக்கவும் வேண்டும். எதிர்ப் போட்டியாளர் ஜெயிக்கும்போது அங்கீகரிக்கத் தெரிய வேண்டும். தன்னுடைய குறைகளைப் பற்றி யோசிக்கவும் வேண்டும்.

மணி ரத்னத்தின் ‘குரு' படத்தில், அதன் கதாநாயகன் குருநாத் பேசும் ஒரு வசனம் ஞாபகத்துக்கு வருகிறது: "குருநாத்தின் இந்த வெற்றி கடுமையான உழைப்பால் வந்தது... நீ என்னை எதிர்க்க வேண்டுமானால், கடுமையாக உழைக்க வேண்டும்..."

மோடி இந்திய ஜனநாயகத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதிவிடுவார்; அவர் வென்ற நாள் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள் என்று பலரும் எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்; நம்புகிறார்கள். இது எல்லையற்ற அச்சத்தின் அதீதமான வெளிப்பாடு. இந்திய ஜனநாயகம் எனும் பேரலையின் முன் நாமெல்லாமே தூசு. அட...மோடியும்தான்!

மே, 2014, ‘தி இந்து’

5 கருத்துகள்:

 1. திரு பற்றி ..., அவர்களே..., ஒவ்வொரு முறை மோடியின் பிம்பம் தோன்றும் பொழுதும்..., உயிருடன் கொழுத்தப்பட்டு மடிந்த...., உயிர்களின் மரண ஓலம்..., கேட்டுக்கொண்டே இருக்கிறதே...,! மரணத்தின்..., உயிர் போகும் வலியில்...., ஓலம் தான் கேட்கும்...., டிசம்பர் மாத ஆலாபனையா கேட்கும்.

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் எல்லாம் திருந்த மாட்டீர்கள்.அடுத்த தேர்தல் வரை உங்களுக்கு கஷ்ட காலம் தான்

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. திரு சமஸ் அவர்களே,

  நான் சமீபகாலமாக தமிழ் ஹிந்துவில் வரும் உங்கள் கட்டுரைகளை பின்பற்றியும், படித்தும், பாராட்டியும் வருகிறேன்.

  ஆனால் இந்தக் கட்டுரையில் நான் முரண்படுகிறேன்.

  நீங்கள் இலங்கையில் வாழும் ஒரு இலங்கைத் தமிழராக இருந்தால் அந்த நாட்டின் அதிபராக ராஜபக்க்ஷே பதவி ஏற்பதைக் கண்டு ஒப்பாரி வைப்பீரா அல்லது ஆனந்த்தக் கூத்தாடுவீரா..?

  நீங்கள் ஜெர்மனியில் வாழ்ந்த யூதராக இருந்திருந்தால் ஹிட்லர் பதவி ஏற்கும்போது ஒப்ப்பாரி வைப்பீரா..? அல்லது அவர் என்ன வளர்ச்சி திட்டம் கொண்டு வருகிறாரென்று பார்க்கலாம் என்று பழையதை மறந்துவிட்டு கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருப்பீரா..?

  ஆனால் நான் அப்படியில்லை..

  நான் இலங்கயில் வாழும் ஒரு சிங்களவனாக இருந்திருந்தாலும் சரி, ஜெர்மனியில் வாழும் ஒரு ஜெர்மனியனாக இருந்திருந்தாலயும் சரி.. ஒரு இனப்படுகொலைகாரன் அவன் என் இனந்தவனாக இருந்தாலும்.. அவன் என் நாட்டின் அதிபராக பதவி ஏற்பதை கண்டிப்பேன், அதைக் கண்டு ஒப்பாரி வைப்பேன்.


  கண்டிப்பதர்க்கும், ஒப்பாரி வைப்பதற்கும் நான் அவனால் பாதிக்கப்பட்ட இனத்தவனாக இருக்க வேண்டாம். மனிதனாக இருந்தால் போதும்.

  பதிலளிநீக்கு