பாக் நீரிணைக்கும் மன்னார் வளைகுடாவுக்கும் நடுவே...


ந்த நிலாவத்தான்... நான் கையில புடிச்சேன்...  என் ராசாவுக்காக...
டொடொடொட்டன் டொடொடொட்டன் டொடொடொட்டன் டொடொடொட்டய்ங்...
டொடொடொட்டன் டொடொடொட்டன் டோ டொடொட்டடொட்டடொட்டடொய்ங்...
- அப்படியே கிறக்கிப்போடுகிறார் இளையராஜா. இந்தக் கடலோரப் பயணத்தில், பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் உடன் வந்த கூட்டாளி. நான் கூட்டிக்கொண்டு போகவில்லை. போகும் இடமெல்லாம் அவர் இருந்தார். ரயில்களில் செல்பேசியில், படகுகளில் டேப் ரெக்கார்டரில், கார்களில் ரேடியோவில்... இந்தக் கடலோரப் பயணத்தில், பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் உடன் வந்த கூட்டாளி. நான் கூட்டிக்கொண்டு போகவில்லை. போகும் இடமெல்லாம் அவர் இருந்தார். ரயில்களில் செல்பேசியில், படகுகளில் டேப் ரெக்கார்டரில், கார்களில் ரேடியோவில்!

மக்களின் ராஜா

நம்மிடத்தில் வீடுகளில் ஒலிக்கும் இளையராஜா வேறு. உழைக்கும் மக்களிடத்தில், அவர்கள் புழங்குமிடத்தில் ஒலிக்கும் இளையராஜா வேறு. கடலில் பல மைல் தொலைவு வந்துவிட்டு, வலையை இறக்கிவிட்டுக் காத்திருக்கும் நேரத்தில், ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, அப்படியே வள்ளத்தின் ஓரத்தில் கை மீது தலை சாய்ந்து உட்கார்ந்துகொள்கிறார் சேசண்ணா. அதிகாலையில் எழுந்து மீன் கூடை சுமந்து, கிராமம் கிராமமாக, தெருத் தெருவாக அலைந்து மீன் விற்றுவிட்டு, வீடு திரும்பும்போது, இரு பக்கமும் பனை மரங்கள் மட்டுமே துணையாக இருக்கும் பாதையில், கூடையில் பாலிதீன் பையில் பத்திரமாகச் சுற்றிவைத்திருக்கும் ரேடியோவில் ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு நடக்கிறார் ரோஸக்கா. படகுத் துறையிலிருந்து நடு ராத்திரியில் குட்டி லாரியில் கூட்டம் கூட்டமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு போகும்போது தனக்கு மட்டுமல்லாமல், பின்புறம் உட்கார்ந்திருப்பவர் களுக்கும் சேர்த்து ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, வண்டியை விரட்டுகிறார் ராமலிங்கம். அந்தத் தருணங்களில், அந்தச் சூழல்களில், இளையராஜாவின் பாடல்கள் கொண்டுசெல்லும் உலகமே வேறு. அமைதியான தனி அறையில், நுண்ணிய அதிநவீன சாதனங்களின் துணையோடு கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போதுகூட இளையராஜா இத்தனை நெருக்கமாகவில்லை. இந்தப் பயணங்களின்போது, மக்களோடு மக்களாகச் செல்லும்போது அப்படி ஒன்றிவிட்டார். அதுவும் கடலோரக் கிராமங்களுக்குச் செல்லும் பஸ்ஸில், ஜன்னலோர இருக்கையில், வெயில் தணிந்த சாயங்கால வேளையில்... வாய்ப்பே இல்லை. அன்றைக்கு இறைவனின் பரிபூரண ஆசி வாய்த்திருந்தது என்று சொல்ல வேண்டும். சரியாக, பாம்பன் சாலைப் பாலத்தில் பஸ் ஏற ஆரம்பிக்கிறது. காற்றில் கரைந்து வருகிறார் மனிதர். ‘அந்த நிலாவத்தான்... நான் கையில புடிச்சேன்... என் ராசாவுக்காக...’

ஜன்னலோரத்தில் கீழே வானமும், மேலே கடலும்போல நீலம். மேலே சர்ரெனப் போகிறது ஒரு விமானம். கீழே வரிசையாகச் சென்றுகொண் டிருக்கின்றன படகுகள். பாம்பன் ரயில்வே பாலத்தில் ஊர்ந்துகொண்டிருக்கிறது ரயில். பாம்பன் சாலைப் பாலத்தில், பஸ்ஸில் காதுக்குள் நிலா பிடித்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. அடடா, அடடா... சாலைகள், பாலங்கள், தண்டவாளங்களுக்கெல்லாம் உயிர் இல்லை என்று யார் சொன்னது? பாம்பனில் வந்து பாருங்கள். எல்லாவற்றுக்கும் உயிர் இருக்கிறது. பாம்பன் அழகு, பேரழகு. அந்த அழகு அங்குள்ள எல்லோரையும் எல்லாவற்றையும் அழகாக்கிவிடுகிறது. இந்தியாவின் மிக ரம்மியமான இடங்களில் ஒன்றான பாம்பனைக் கடந்து பஸ் ராமேசுவரம் நோக்கிச் செல்கிறது.

ராமேசுவரம் தீவு - ஒரு குறிப்பு

இந்தத் தொடரில் அதிகமான அத்தியாயங்களை ராமேசுவரம் கடல் பகுதி பிடித்துக்கொள்ள நிறைய நியாயம் இருக்கிறது. முக்கியமாக மூன்று காரணங்கள். ஒன்று, தமிழகத்திலேயே நீளமான 236.8 கி.மீ. கடற்கரையைக் கொண்ட, அதிகமான கடல் உணவு அறுவடையைத் தரும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோடிகளின் மையம் மட்டும் அல்லாமல், தமிழகத்தின் முக்கியமான கடல் கேந்திரமும் ராமேசுவரம். இரண்டு, உலகிலேயே மிகச் செழிப்பான கடல் பகுதி, பாதுகாக்கப்பட வேண்டிய பல்லுயிர் உயிர்க்கோளம் ராமேசுவரத்திலிருந்துதான் தொடங்குகிறது. மூன்று, உலகிலேயே பிழைப்புக்காகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் அந்நிய நாட்டுப் படையினரால் கோரமாகத் தாக்கப்படும் அவலத்துக்கும் சுட்டுக் கொல்லப்படும் அக்கிரமத்துக்கும் முதல் பலி கொடுத்ததில் தொடங்கி அதிகமான பலிகளைக் கொடுத்தது ராமேசுவரம்.

இன்றைக்கு இந்திய நிலப்பரப்புக்கு வெளியே இருக்கும் கடல்சூழ் தீவு ராமேசுவரம். அதாவது, நாம் சென்னையிலிருந்து புறப்பட்டால், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் என்று மண்டபத்தோடு முடிந்துபோகிறது நம் நாட்டின் நிலப்பரப்பு. நடுவே, ஒரு ஆறுபோலக் குறுக்கிடுகிறது கடல். அதைப் பாலம் வழியே கடந்தால், பாம்பனில் தொடங்கி ராமேசுவரம் - தனுஷ்கோடி - அரிச்சல்முனை வரை ராமேசுவரம் தீவு. ஒருகாலத்தில் ராமேசுவரம் இப்படித் தீவாக இல்லை என்றும் ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்றும் சொல்கிறார்கள். தொடர் பெரும் புயல்கள் - குறிப்பாக, கி.பி.1480-ல் ஏற்பட்ட புயல் - நிலத்தை உடைத்துக்கொண்டு கடல் உள்ளே வர வழிவகுத்தது என்கிறார்கள்.

பாக் நீரிணை, மன்னார் வளைகுடா - ஓர் அறிமுகம்
எளிமையாக எப்படிச் சொல்வது? இப்படிப் புரிந்துகொள்ளலாம். கோடியக்கரை முதல் பாம்பன் வரை நீண்டிருக்கும் கடல் பகுதி பாக் நீரிணை. பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை நீண்டிருக்கும் கடல் பகுதி மன்னார் வளைகுடா. ராமேசுவரம் தீவின் முன்வாசல் பாம்பன். அதாவது, ராமேசுவரம் தீவை ஒரு மாலைபோலச் சூழ்ந்திருக்கிறது கடல். இந்தப் பக்கக் கடல் பாக் நீரிணை. அந்தப் பக்கக் கடல் மன்னார் வளைகுடா.

பொதுவாக, பாக் நீரிணை, மன்னார் வளைகுடா பகுதி முழுவதுமே உயிர்வளம் மிக்கது என்றாலும், ராமேசுவரம் தொடங்கி தூத்துக்குடி வரையிலான பகுதி இதில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இவை இரண்டுக்கும் உட்பட்ட வான் தீவு, கசுவார் தீவு, கரைச்சல்லி தீவு, விலாங்குச் சல்லித் தீவு, உப்புத்தண்ணித் தீவு, புலுவினிசல்லித் தீவு, நல்லதண்ணித் தீவு, ஆனைப்பார் தீவு, வாலிமுனைத் தீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டித் தீவு, தலை யாரித் தீவு, வாலைத் தீவு, முள்ளித் தீவு, முயல் தீவு, மணோலி தீவு, மணோலி புட்டித் தீவு, பூமறிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடைத் தீவு, சிங்களத் தீவு ஆகிய 21 தீவுகளும் அவற்றை ஒட்டிய பகுதிகளும் உலகிலேயே மிகச் செழிப்பான பகுதியாக இனம் காணப்பட்டு, இந்திய அரசால் கடல்சார் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ராமேசுவரத்தையொட்டியுள்ள பகுதி உயிர்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சின்னப் பகுதியில் மட்டும் 96 வகை பவளப்பாறை இனங்கள், 79 வகை நத்தை இனங்கள், 108 வகை கடல் பஞ்சு இனங்கள், 260 வகை கிளிஞ்சல் இனங்கள், 125 வகை பாசி இனங்கள் உள்ளிட்ட 3,600 வகை இனங்கள் கண்டறிப்பட்டுள்ளன. இந்தியக் கடல்பரப்பில் காணப்படும் 2,200 மீன் இனங்களில் 450 இனங்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன.

ராமேசுவரத்து விசேஷங்கள்
ராமேசுவரம் தீவுக்கென்று சில விசேஷங்கள் இருக்கின்றன. தீவுக்குள் கலப்பை கொண்டு உழக் கூடாது, லிங்கம் முளைக்கும் என்கிற நம்பிக்கை பல தலைமுறைகளாக நிலவுவதால், நெல் சாகுபடி கிடையாது. பூச்செடிகளைப் பயிரிடுவதே அதிகபட்ச விவசாயம். தீவு முழுக்கத் தென்னை, பனை, முருங்கை, மா, புளிய மரங்கள்தான். பொந்தம்புளி மரம் என்று விசேஷமாக ஒரு மரம் இருக்கிறது. தீவுக்குள் விளையும் புளிக்கும் முருங்கைக்கும் தனி ருசி என்கிறார்கள். பல சாதியினர், இனத்தினர் இருந்தாலும் - சாதிய அதிகார அடுக்குகள் அப்படியே நீடித்தாலும் - தீவுக்குள் அரிதான ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. முக்கியமாக, இந்துக்கள், முஸ்லிம்களிடையே அபாரமான ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. ஓர் உதாரணம், வேறெங்கும்போல அல்லாமல், முஸ்லிம்களின் உடை அடையாளமே இங்கு மாறுபட்டிருப்பது. முஸ்லிம்களின் பொது அடையாளமான குல்லா, கைலிக்கட்டு இங்கு இல்லை. இந்துக்களைப் போலவே வேட்டி-சட்டையில் காணக் கிடைக்கிறார்கள். பெரும்பாலான இந்துக்கள் - முஸ்லிம்கள் அப்பா, மாமா, மச்சான் என்றே அழைத்துக்கொள்கின்றனர். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் பல தலைமுறைகளாகக் கடை வைத்திருக்கும் முஸ்லிம்களைச் சந்திக்க முடிந்தது. “ஒரே சாமியை வேற வேற பேருல கும்பிடுறோம், வேற என்ன இருக்கு நமக்குள்ள வேறுபட்டுக் கெடக்க?” என்கிறார்கள்.

படகுத் துறைக்குப் போனபோது, எல்லாப் படகுகளும் கட்டிக்கிடந்தன. ஆங்காங்கே மூன்று நான்கு பேர் உட்கார்ந்து பேர் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கின்றனர். சிலர் வெறுமனே உட்கார்ந்திருக்கின்றனர் கடலைப் பார்த்துக்கொண்டு. “ராமேசுவரம் தீவைப் பொறுத்தமட்டுல, அன்னிக்குத் தொடங்கி இன்னிக்கு வரைக்கும் ரெண்டே பொழப்புதான். ஒண்ணு, கோயிலை வெச்சுப் பொழப்பு. இன்னொண்ணு, கடலை வெச்சுப் பொழப்பு. கோயிலை வெச்சு நடக்குற பொழப்பு நல்லாவே போவுது. கடலை வெச்சு நடக்குற பொழப்புதான் நாளுக்கு நாள் நாறுது” - கடலைப் பார்த்தபடியே பேச ஆரம்பிக்கிறார் சம்மாட்டி அருளானந்தம்.

உழைப்புக்கு அஞ்சாத உடல். துடுப்புப் போட்டு விரிந்த கைகள் குத்திட்டிருக்கும் கால்கள் மீது கோத்திருக்கின்றன. முகத்தைப் பார்க்காமல், கடலைப் பார்த்தவாறே பேசுகிறார். “நீங்க கடக்கர ஊருக்கு வந்திருக்கீங்கள்ல, எங்கேயாச்சும் நல்ல மீன் சாப்பாடு கெடைக்குதான்னு விசாரிச்சுட்டு வாங்களேன். ராமேசுவரம் தீவு முழுக்கச் சுத்தினாலும் கெடைக்காது. மீனு கெடைக்கிற எடத்துல மீனு வெலயான வெல குதர வெலயா இருக்கும். உள்ளூர்க்காரங்களே வெளிக் கடக்கர மீனத்தான் வாங்க வேண்டியிருக்கு. கடல்ல மீனு அத்துப்போய்க்கிட்டிருக்கு. ஒருகாலத்துல ராமேசுவரம் மீனு ருசி ராசபோக ருசிம்பாங்க. இங்கெ கிடைக்கிற மீனுங்க வேற எங்கெயும் கெடைக்காது. அப்படிக் கெடைச்சாலும் இங்கெ கெடைக்கிற மீனுக்குள்ள ருசி தங்காது. தேரகம்னு ஒரு மீனு. அவியக் கொழம்பு வைப்பாங்க. அள்ளும் பாருங்க ருசி. கொழம்பு மீனு, வருவ மீனு கேள்விப்பட்டிருப்பீங்க. சுட்டுத் திங்கிறதுக்குன்னே சில மீனுங்க உண்டு. குட்டுலு மீனு அந்த ரகம் பாத்துக்குங்க. செங்கனி, உலுவ, வேலா இப்பிடி அடுக்கிக்கிட்டே போவலாம். இப்போம் இந்த மீனயெல்லாம் கண்ணால பாத்தவங்களத் தேடணும். நாஞ் சொல்றது சாதாரண விசயமில்ல. நீங்க எழுத வந்திருக்குற எல்லா சேதிக்கும் அடிப்பட விசயம் இதான். தீவு முழுக்கப் போங்க… நீங்களே புரிஞ்சுக்குவீங்க” - அருளானந்தம் பிரச்சினையைச் சொன்னார். அதற்கு மேல் பேசவில்லை.

தீவையும் தீவைச் சுற்றியும் சுற்ற ஆரம்பித்த அடுத்த சில நாட்களில் எல்லாக் கதைகளும் புரிபட ஆரம்பித்தன.


பெரியவர் வேலாயுதம் புட்டுப்புட்டுவைத்தார். “தம்பி, காலங்காலமா கடலுக்குப் போவணும்னா, கடலோடி மட்டும்தான் போவ முடியும்னு இருந்துச்சு. சுதந்திரத்துக்கு அப்புறம் மீன்பிடியை அதிகரிக்கணும்னுட்டு அரசாங்கம் நினச்சிது பாருங்க, விசைப்படகு, இழுவ மடின்னு அடுத்தடுத்து கொண்டாந்துட்டுச்சு பாருங்க, யாரு வேணா கடலுக்குப் போவலாம்னுட்டு ஆயிட்டு. இது என்னாயிட்டுன்னா, கடலுக்குள்ள முதலீட்டைக் கொண்டாந்துட்டு. ரெண்டு வர்க்கம் உருவாவுது. ஒண்ணு, பாரம்பரியக் கடலோடிங்க வர்க்கம்; இன்னொண்ணு, தொழில்மொற கடலோடிங்க வர்க்கம். மொத வர்க்கம், காலங்காலமா கடலை நம்பிப் பொழச்சது. ரெண்டாவது வர்க்கம், பண மூட்டையோட கடக்கரைக்கு வந்தது. இந்த ரெண்டாவது வர்க்கம் என்னா பண்ணுச்சுன்னா, காச வெச்சி அடிச்சு மொத வர்க்கத்துல தொழில் தெரிஞ்ச ஆளுங்களத் தன் கைக்குள்ள போட்டுக்கிட்டு. மொத வர்க்கம், தன்னோட அன்னாட பொழப்புக்குக் கடலுக்குப் போவுது. ரெண்டாவது வர்க்கம், தன்னோட மொதலீட்ட ரெண்ட நாலாக்கி, நால எட்டாக்கப் போவுது. பணம் மனுசனை வுடுமா? தொரத்துது. எட்ட பதினாறாக்கவும், பதினாற நூறாக்கவும் தொரத்துது. மனுசன் கடல அரிக்க ஆரம்பிச்சுட்டான்” என்கிற பெரியவர், கரையோரமாகப் போடப்பட்டிருக்கும் ஒரு வலையைக் கையில் எடுக்கிறார்.

“நார்வேக்காரன் கொண்டாந்து வுட்ட தொழில்நுட்பம் இது. இழுவ மடின்னு பேரு. இந்தக் கண்ணிய பாத்தீங்களா? சனியன். எல்லாத்தையும் சல்லீசா அரிச்சு அழிச்சுரும். இதாம்பி நம்ம கடலுக்கு மொத எமன். இத இப்பம் ரெட்ட மடியாக்கி வேற போடுதாம். கூடவே, டிராலரை வேற கொண்டாந்து ஓட்டுதாம். எல்லாம் எமனுவோ. கடலு எப்பிடித் தம்பிக் கடலா இருக்கும்?” என்றவரை மறித்தேன்.

“ஐயா, எனக்குப் புரியல...”

“வெளக்கமாச் சொல்லுறன். சுதந்திரத்துக்கு முன்னாடி வரைக்கும் கடக்கரையில ஐஸ் கட்டியே கெடையாது தம்பி. அப்போம்லாம் புடிக்கிற மீன சுத்துப்பட்ட ஊருகள்ல கொண்டுபோய் விப்பம். மிச்சப்பட்ட மீனுக கருவாடாகும். மீனு கொண்டுபோவ முடியாத ஊருக்கெல்லாம் கருவாடு போவும். இப்பிடித்தான் போச்சு. இந்த ஐஸு வந்துச்சு பாத்துக்கங்க, கடலோடிங்க வாழ்க்கையில பெரிய மாத்தம் வந்துடுச்சு. கடக்கரைக்கு லாரிக வந்துச்சு. யாவாரிங்க வந்தாங்க. மீனு வெளிய போவ ஆரம்பிச்சிச்சு. வசதி பெருகினப்போ, தேவையும் பெருகுமில்ல? அரசாங்கம் விசைப்படகைக் கொண்டாந்து வுட்டுச்சு. கூடவே, இந்த இழுவ மடியையும் கொண்டாந்துட்டுச்சு.

இந்த விசைப்படகுல ரெண்டு ‘வசதி’. படகையும் எந்திரம் இழுக்கும், வலையையும் எந்திரம் இழுக்கும். இந்த இழுவ மடி ரெண்டாம் ஒலகப் போருல, கடலுக்கு அடியில எதிரிங்க பொதச்ச கண்ணிவெடிங்கள அரிச்சு அள்ள கண்டுபுடிச்ச மடி. அதாவது, சின்னச் சின்ன மீனுக் குஞ்சுவோ வரைக்கும் இதுல சிக்கிப்புடுங்க. பாரம்பரியக் கடலோடிங்க தினுசு தினுசா மீனுங்களுக்கு ஏத்த மாரி வல வெச்சிருப்பம். இப்பம் சீலா மாரி பெருவட்டான மீனு புடிக்கப் போறவன் அதுக்கேத்த மாரி வலய வெச்சிருப்பாம். வலயோட வாயி பெருசா இருக்கும். சின்ன மீனுங்க சிக்குனா தானா வெளியே ஓடியாந்துருங்க. இந்த விசைப்படகுகள்ள கணக்கே வேற. அதுவும் எறாலுக்குன்னு வெளிநாட்டு பவுசு கெடைச்சு ஏத்துமதி ஆவ ஆரம்பிச்சுப் பாருங்க, அவனவன் எறாலுக்காவ எதையும் அழிக்கலாமுன்னு துணிஞ்சுட்டாம். விசைப்படகெல்லாம் தாண்டி இன்னிக்கு டிராலர் வந்துடுச்சு. பெருஞ்சனியன். சின்ன கப்பல் அது. அதே மாரி இழுவ மடியைத் தாண்டி ரெட்ட மடி வந்துட்டு. ரெண்டு படகுங்க நடுவுல மடியைக் கட்டி, அப்பிடியே கடலை அடியோட அரிக்கிறது. பவளப்பாறை, செடி கொடிங்க, இண்டு இடுக்கு எல்லாம் அழிஞ்சுபோவுது. மீனுங்க கூடிப் பெருக்கம் பண்ண எடம் கெடையாது இன்னிக்கு. மீனுக் குஞ்சு, முட்டை சகலத்தையும் மடிங்க அரிச்சு அழிச்சுடுது. அப்புறம் எப்பிடிக் கடல்ல மீன் கெடைக்கும்? கடலையே அழிச்சுக்கிட்டிருக்காங்க தம்பி...”

“ஐயா, அப்போ விசைப்படகு, டிராலர் எல்லாமே வீண்ணு சொல்றீங்களா? இன்னிக்கு மீனவக் குப்பங்கள்ல கொஞ்ச நஞ்சம் இருக்குற மச்சு வீடுங்களுக்கெல்லாம் நவீன மாற்றம்தானே காரணம்? தப்பா நெனைக்காதீங்க. நீங்க எல்லாத்தையும் சேர்த்து ஒதுக்கிறீங்களோன்னு தோணுது...”

“தம்பி. நீங்க சொல்லுறதுல நியாயம் இருக்கு. ஒத்துக்கிடுதேன். நவீன வசதிங்க எங்காளுங்கள மேம்படுத்தி இருக்கு. நெசம்தான். இன்னிக்கும் சொந்தக் கட்டுமரம் வெச்சிருக்கவனுக்கு ஒரு நாளைக்கு நூறு ரூவா உத்தரவாதமில்ல. விசைப்படகுல பங்குக்குப் போறவன் எப்பிடியும் ஆயிரம் ஐந்நூறு பாத்துடுதாம். நெசந்தாம். விசைப்படகு, டிராலரு எல்லாமே எங்க வசதிக்குத்தான். ஏத்துக்கிடுதேன். ஆனா, இந்த விசைப்படகை எங்க ஓட்டணும்? டிராலரை எங்க ஓட்டணும்? இதெல்லாம் ஆழ்கடல்ல ஓட்ட வேண்டிய படகுங்க தம்பி. கடல்ல நூறு பாவம் ஆழம் இருக்குற எடத்துல ஓட்ட வேண்டிய படகை அஞ்சு பாவம் ஆழத்துல ஓட்டுனா என்னாவும்? எல்லாரும் தப்பு பண்ணலை. ஆனா, சிலரு இல்ல; பலரு தப்புப் பண்ணுதாம். குறிப்பா, இந்தப் பக்கக் கடல்ல. இதுல ஒளிச்சுப் பேச ஒண்ணுமில்ல. ஊர் அறிஞ்ச உண்ம. தம்பி, நாளக்கி பகப் பொழுதுல வாங்க. நேருல ஒரு விசயத்தக் காட்டுறேன். உங்களுக்கே எல்லாம் புரியும்...”

மறுநாள் காலை அவர் காட்டிய காட்சி மனதை உடைத்து, சிதைத்துப் போட்டது.

அடுத்த நாள் அதிகாலையிலேயே ராமேஸ்வரத்திலிருந்து வண்டியைக் கிளப்பியாயிற்று. சுற்றுப்புற ஊர்களுக்குப் பயணமானோம். கடலுக்குச் சென்று விசைப் படகுகள் திரும்பும் நேரத்தில் படகுத் துறையில் இருந்தோம். படகுகளில் இறால்கள் தனியே, மீன்கள் தனியே எனத் தரம் பிரித்து, கூடை கூடையாக இறக்கப்படுகின்றன. அளவில் பெரிய இறால்களைக் கரையிலேயே தராசு வைத்து நிறுத்து, சில ஆட்கள் எடுத்துக்கொண்டிருக்க, மீன்களைத் தனியே கொண்டுபோய் வைக்கிறார்கள். “கரையிலயே நின்னு எல்லாத்தையும் பாத்துட முடியுமா, படகுல ஏறுங்க” என்று என்னைப் பார்த்துச் சொல்லியவாறே, “ஏ... யப்பா, அந்தக் கயித்த கொஞ்சம் இப்பிடிப் போடுப்பா... தம்பி வெளியூர்லேந்து வந்திருக்காரு...” என்று படகில் உள்ளவர்களிடம் கயிற்றை இழுத்துவிடச் சொல்கிறார் வேலாயுதம்.

படகின் கூரையிலிருந்து தொங்கிய கயிற்றைப் பிடித்துக்கொண்டு, படகைச் சுற்றிலும் தொங்க விட்டி ருக்கும் டயர்களில் ஒன்றில் கால்வைத்து ஏறினேன்.

“ஏ... யப்பா... சங்காயம் இவ்ளோதானா?” என்கிறார் அவர்களிடம்.

“அங்கெ வேற ஒதுக்கிக் கெடக்கு, பாருங்க... தேர்றது ஒரு பங்குன்னா, தேறாதது மூணு பங்கு. இதுக்கு மேலயும் வேற நட்டப்படணுமா?” என்கிறார்கள்.

படகின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் குவிக்கப்பட்டி ருக்கின்றன, இன்னவென்று பிரித்துச் சொல்ல முடியாத பல வகை மீன்கள். எல்லாம் சிறுசிறு பொடிகள். “இதாம் சங்காயம், பாத்துக்குங்க” என்று காதோரம் மெல்லக் கிசுகிசுக்கிறார்.

“ஏ... யப்பா... பாடு ரொம்பக் கம்மியாட்டு இருக்கே?” என்கிறார் அவர்களை நோக்கி.

“ஏம்டா கடலுக்குப் போறோம்னு இருக்கு… கஷ்டம்” என்றவாறே வேலையைக் கவனிக்கிறார்கள்.

“சரி, வாங்க, நாம அந்தப் படகுக்குப் போவலாம்...” என்று அந்தப் படகையொட்டி நிற்கும் அடுத்த படகுக்குத் தாவுகிறார். அங்கும் அதே கதை… அதே பேச்சு… அதே சங்காயம். படகுத் துறையிலிருந்து வெளியே வருகிறோம்.

மெல்லக் கரையையொட்டி நடக்கிறோம். தூரத்தில் மீன்கள் காயவைக்கப்பட்டிருக்கும் தளத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்.

“அந்தோ காயுதே என்னான்னு தெரியிதா?”

“கருவாடு...”

“ஆங்... கருவாடு இல்ல. சங்காயம். ஒங்களுக்குப் புரியிற மாரிச் சொல்லணும்னா, நீங்க கடல் வளம், மீனு வளம்னெல்லாம் சொல்லுறீங்களே அதாம் இந்தச் சங்காயம்” என்றவாறே அந்தப் பகுதியை நெருங்குபவர், காயவைக்கப்பட்டிருக்கும் சங்காயத்தில் ஒரு பிடி அள்ளு கிறார். என் கையில் கொடுக்கிறார். அப்படியே இடி இறங்கியதுபோல இருக்கிறது.

“பாருங்க... கடலு வளம் படுற பாட்டை... யய்யா, பாருங்க... என் குலமே எங்க ஆத்தாளைச் சீரழிக்கிறதை. சூறையாடுறானுவோய்யா கடலை, சூறையாடுறானுவோ. நாளைக்கு என் புள்ளைக்கும், பேரப்புள்ளைக்கும், அவம் புள்ளைக்கும் தொழில் கொடுக்க வேண்டிய உசுருய்யா இதெல்லாம். உங்க புள்ளைக்கும், பேரப்புள்ளைக்கும், அவம் புள்ளைக்கும் வயித்தை நெரப்ப வேண்டிய உசுருய்யா இதெல்லாம். ஆளா பெருக்க வேண்டிய உசுரையெல்லாம் இப்பிடிக் குஞ்சா இருக்கையிலேயே புடிச்சு அழிச்சா கடலு எப்படிச் செழிக்கும்? இதுல என்னெல்லாம் இருக்கு தெரியுமா? காரப்பொடி, மீனு, நண்டு, எறா, கணவா, கடக்குச்சி, முச்சங்கு எல்லாம்… எல்லாம். நீங்க பேப்பர்ல அரிய உயிரினம்னு எதை யெல்லாம் எழுதுவீங்களோ அதையெல்லாம் இதுல தேடிக் கண்டெடுக்கலாம். ஆனா, படகுக்காரங்களுக்கு இது என்னா தெரியுமா? குப்ப. எதுக்கும் தேவப்படாத குப்ப. எறா புடிக்கப் போகையில மடி அரிச்சிக்கிட்டு வர்றது இதெல்லாம். பெரும்புடி எறா, மீனுங்களைப் பொறுக்கிட்டு இதக் குப்பையாக் கொண்டாந்து கொட்டுதாம். கோழித் தீவனக் கம்பெனிங்களுக்கு இது போவும். என்னா வெல தெரியுமா? கிலோ ஏழு ரூவா தேறாது. வயிறு எரியுதய்யா… வயிறு எரியுது.

கடக்கரையில ஆலைங்களைக் கொண்டாந்து வைக்கிறவங்க கடப் பொழக்கம் இல்லாதவங்க. இந்தக் கடலுக்கு உசுரு இருக்கு, இதுதான் நம்ம உசுர வளக்குதுங்கிறது அவங்களுக்குத் தெரியாது. ஆனா, இது அப்பிடியா? காலங்காலமா உசுரு வளக்குற ஆத்தாள இப்பிடிப் புண்ணாக்கலாமா? பவளப்பாற, கடக்கோர எல்லாம் உடச்சிக்கிட்டுப் போவுதய்யா.”

“தெரிஞ்சேதான் இதையெல்லாம் செய்யுறாங்களாய்யா?”

“தெரியாமலா பண்ணுதாம்? இதெல்லாம் எறாலுக்கான வேட்டையில சிக்குறதுங்க. கடத்தல் எவ்ளோ தெரியுமா? கீழக்கரைக்குப் போங்க. கப்ப கப்பலா கதை வரும். உண்டியக் கதையிலேந்து வஸ்துங்க கத வரைக்கும். தீவுல திரியுற குதுரக் குட்டியைக்கூடக் கடத்துதாம் தம்பி. ஆமைங்க, கடக் குதுர, ஆவுளியாவெல்லாம் எந்த மூல? எல்லாம் குறிவெச்சு வேட்டையாடுதாம். எல்லாத்துக்கும் வெளியில விக்க ஒரு கத வெச்சிக்கிதாம். கடக் குதுரயோட உடம்பு மருந்து, ஆவுளியாவோட பல்லு மருந்துன்னு கத. கம்பெனிக்காரங்ககிட்ட இவங்க தள்ளிவுடுறது. அவனுவோ டப்பியில வெச்சு வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுறது.”

அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சம்மட்டி அடிபோல் விழுகிறது.

“அரசாங்கம் இதுக்கெல்லாம் தடை விதிச்சிருக்கு, இல்லையா?”

“ஆமா, அரசாங்கம்... அட, ஏன் தம்பி? எவ்வளவோ உசுருங்களைக் கடல்ல புடிக்கக் கூடாதுன்னு தட இருக்கு. அதெல்லாம் சட்டப் புத்தகத்துலதான தம்பி இருக்குது? எல்லாம் தூங்குது. அதிகாரிங்கதான் நெதம் கப்பத்துக்குக் கைநீட்டுறாங்களே? இங்கெ எல்லாம் நடக்கும். பல கதைங்க அரசாங்கத்துக்கே தெரியாது.”

“சரி, உங்க ஆளுங்களுக்கு இதனால ஏற்படுற பாதிப்புங்க தெரியும்ல, எல்லாம் தெரிஞ்சும் எப்பிடி இதையெல்லாம் செய்றாங்க?”

“அதாம் நேத்து சொன்னேனே தம்பி, ரெண்டு வர்க்கம். மொத வர்க்கம், அன்னாடப் பொழப்புக்கு ஓடுது. ரெண்டாவது வர்க்கம், பணத்தப் பெருக்க அலையிது. கடக்கரைக்கு மொதலீட்டோட வந்த இந்த ரெண்டாவது வர்க்கம், கடலுக்குள்ள போவாமலே சம்பாதிக்குது தம்பி. அதுக்குக் கைக்கூலிங்க இந்த மொத வர்க்கத்துலேந்து, எங்க வர்க்கத்துலேர்ந்து வெல போனவங்ங. பாரம்பரியக் கடலோடி அன்னியில எவனும் கடலுக்குள்ள நொழய முடியாது தம்பி. வெல போயிட்டாம். ஆனா, அப்படிப் போனவம் எண்ணிக்கை கம்மி.

இன்னிக்கும் மொத்தக் கடலோடிங்கள்ல விசைப்படகு, டிராலர எண்ணிக்க எவ்வளவு, கட்டுமரம் - நாட்டுப்படகுங்க எண்ணிக்கை எவ்வளவுன்னு நெனைக்கிறீங்க? பத்துல ஒரு பங்கு. அவ்ளோதாம். அதுல தர்மத்துக்குக் கட்டுப்பட்டு ஆழ்கடலுக்குப் போயித் தொழில் செய்யிறவன் தானும் உசந்து, தான் தலமொறயயும் உசத்துதாம். காசுக்கும் குடிக்கும் ஆசப்பட்டு, ரெட்ட மடி இழுவ மடி போட்டுதவம் கடலையும் நாசம் பண்ணி, தான் தலமொறையயும் நாசம் பண்ணுதாம். இதுல நீங்க இன்னொரு கணக்கையும் பாக்கணும். ஓடுற படகுல பத்துல ஒண்ணுதாம் விசைப்படகுன்னேல்ல, ஆனா, புடி படுற மீனுல பெரும் பகுதி விசைப்படகு, டிராலருதாம். இந்த அக்கிரமத்த எதுத்து எவ்வளோ போராட்டம்கிறீங்க? ஒருகட்டத்துல விசைப்படகுங்களை அங்கைக்கு அங்க வச்சி எரிச்சதெல்லாம் கடக்கரையில நடந்தது. இப்பம் நீ மூணு நாளைக்குத் தொழிலுக்குப் போ, நான் மூணு நாளைக்குத் தொழிலுக்குப் போன்னு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு, வாரத்துக்கு ஒரு நா படகைக் கரையில கட்டிப்போட்டு கடல பாத்துக்கிட்டிருக்கம். இழுவ மடி, ரெட்ட மடிக்கு அரசாங்கம் தட விதிச்சுப் பல வருசம் ஆவுது தம்பி. ஆனா, யாரும் தடுக்க இல்ல. ஏன்னா, கடலைச் சூறயாடுற கையி கடக்கரையில இல்ல. அது வெளியில இருக்கு. வெவ்வேற கம்பனி பேருல. கம்பனிக்குப் பின்னாடி இருக்குற வெள்ளைச் சட்ட சோக்கு மனுசங்க பேருல. நம்ம நாட்டுக் கடலேந்து எவ்வளவு ஏத்துமதி ஆவுது, எறா ஏத்துமதியில மட்டும் வருசத்துக்கு எவ்வளவு பொழங்குதுன்னு நீங்க விசாரிங்க. யாரு யாரு பினாமி பேருல கப்பலுங்க ஓடுது, கம்பனிங்க நடக்குதுன்னு, அந்தக் கப்பலுங்க, கம்பனிங்க பின்னாடி இருக்குற கைங்க எத்தன நீளம்னு உங்களுக்குப் புரியும்” என்றவாறு என் கையிலிருந்த சங்காயத்தை வாங்கிக் கீழே வைக்கிறார்.

“கடலம்மா, மன்னிச்சுக்க. தடுக்க முடியாத இந்தப் பாவிய... சூறையாடுதானுவோளேம்மா, அந்தப் பாவிய” - முணுமுணுத்தவாறே சங்காயத்தைப் பார்த்து நிற்கிறார் வேலாயுதம்.

இறால் வேட்டை
பெரியவர் சொன்னது சத்தியம்! இந்திய ஏற்றுமதி உலகத்தில் விசாரித்தால், கொட்டுகின்றன உண்மைகள். 2013 -14 நிதியாண்டில், இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி எவ்வளவு தெரியுமா? 5.1 பில்லியன் டாலர். அதாவது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 60% அதிகம். கடந்த ஆண்டு 9.83 லட்சம் டன் கடல் உணவை ஏற்றுமதிசெய்திருக்கிறது இந்தியா. இந்த நிதியாண்டின் இலக்கு 6 பில்லியன் டாலர். "இந்த இலக்கை அடைவது பெரிய கஷ்டம் இல்லை" என்கிறார் கடல் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் (எம்பெடா) தலைவர் லீனா நாயர். இலக்கை அடைவதற்கு அவர் முக்கியமான வழியாகக் குறிப்பிடுவதும் நம்புவதும் இறால் ஏற்றுமதியை.

அமெரிக்காவும் இறாலும்
இந்தியக் கடல் உணவு ஏற்றுமதியில் தெற்காசியச் சந்தைக்கே முதலிடம் (26.38%). அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை நோக்கி நகர்கிறது (25.68%). அடுத்தடுத்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் (20.24%), ஜப்பான் (8.21%), சீனா (5.85%), மேற்கு ஆசியா (5.45%) சந்தைகள் வருகின்றன. இந்தியக் கடல்சார் ஏற்றுமதி நிறுவனங்களின் கண் அமெரிக்காவை நோக்கியே இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவுக்கான இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 19% அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கான இந்த ஏற்று மதியில் முக்கிய இடம் இறாலுக்கானது. அமெரிக்காவுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் கடல் உணவில் 64.12% இறால். கடந்த ஆண்டு மட்டும் இந்தியா 95,927 டன் இறாலை அனுப்பியிருக்கிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய இறால் ஏற்றுமதியாளர் இன்றைக்கு இந்தியாதான். இந்தியா தனது இறாலில் அமெரிக்காவுக்கு 51%; தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 16%; ஐரோப்பிய நாடுகளுக்கு 16%; ஜப்பானுக்கு 5% அனுப்புகிறது.

தாய்லாந்தைத் தாண்டும் இலக்கு
"தாய்லாந்து பிடித்துவைத்திருந்த இடம் இது. அவர்கள்தான் இறால் ஏற்றுமதியில் முன்னே நின்றார்கள். இப்போது தாய்லாந்து கடலில் வளம் குறைந்து விட்டதால், இந்தியா அந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. நாம் பிடித்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள இதுதான் தருணம். அதனால், இறால் அறுவடையை அதிகரிக்க முடிந்த முயற்சிகளையெல்லாம் எடுத்துக்கொண்டிருக்கிறோம்" என்கிறார்கள் ஏற்றுமதியாளர்கள். ஒருகாலத்தில் தாய்லாந்திலிருந்து மட்டும் ஆண்டுக்கு 5 லட்சம் டன் இறால் ஏற்றுமதி ஆகும். அதேபோல, வியட்நாம், மலேசியா, தாய்வானிலிருந்தும் பெரிய அளவில் இறால் ஏற்றுமதியாகும். இப்போது அங்கு கடல் வளம் காலி. வெறித்தனமான மீன்பிடி முறைகள், நோய்த் தாக்குதல் காரணமாக அங்குள்ள கடல் உணவுப் பதனீட்டு ஆலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

இதனிடையே, ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒப்பந்தப்படி இறாலை ஏற்றுமதிசெய்ய கிழக்காசிய நாடுகளின் கடல் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங் களும் இந்தியாவிடம் இறாலை எதிர்பார்க்கின்றன. சீனா, வியட்நாம், தாய்வானைச் சேர்ந்த பல நிறுவனங்கள் கடந்த ஆண்டு இந்தியாவிடமிருந்து இறாலை வாங்கி, அமெரிக்காவுக்கு மறு ஏற்றுமதி செய்திருக்கின்றன. இறால்பாடின் வீழ்ச்சி அதன் விலையையும் உயர்த்தியிருக்கிறது. இந்தச் சூழலை இந்தத் தொழிலில் உள்ள இந்தியப் பெருநிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கின்றன. ஆக, ஏற்றுமதி உலகம் ஒவ்வோர் ஆண்டும் கடல் உணவின், இறாலின் ஏற்றுமதி இலக்கை அதிகரிக்கிறது.

தமிழ்நாட்டின் பங்களிப்பு
இந்த அழுத்தம் தமிழகக் கடலோடிகள் மீதும் விழுகிறது. நாட்டின் 13% கடற்கரையையும் 9.4% பிரத்யேகப் பொருளாதார மண்டல கடல் பகுதியையும் பெற்றிருக்கும் தமிழகம், நாட்டின் மொத்தக் கடல் உணவுக்கு 12.62% பங்களிக்கிறது. ஓர் ஆண்டுக்கு இப்போது தமிழகக் கடலிலிருந்து நடக்கும் கடல் உணவு அறுவடை 4.32 லட்சம் டன். இதில் பாதி 50 மீட்டர் ஆழத்துக்கு உள்பட்ட கடல் பகுதி யிலும் மீதி 50 மீட்டர் ஆழத்துக்கு மேற்பட்ட பகுதியிலும் பிடிக்கப்படுகின்றன. தமிழகக் கடல் பகுதியில் 7 லட்சம் டன் அளவுக்கு ஆண்டுக்கு அறுவடை செய்யலாம் என்று மதிப்பிடுபவர்கள் அதற்கேற்பக் கணக்குப் போடுகிறார்கள்.

பொதுவாக, கடலில் இப்படி அறுவடையை அதிகரிக்கத் திட்டமிடும்போது எல்லோரும் பரிந்துரைக்கும் இடம் ஆழ்கடல். அரசும் ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே நவீன மீன்பிடிக் கொள்கைகளை வகுத்தது; டிராலர்களுக்கு அனுமதி அளித்தது. ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளையும் போல, இங்கும் பெரும்பாலான டிராலர்கள் ஆழம் குறைந்த பகுதியிலேயே ஓடி, முறையற்ற மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இன்னொரு முக்கியமான பிரச்சினை, இந்த ஏற்றுமதி இலக்கு கடலில் கிடைக்கும் ஒட்டுமொத்த வளத்துக்கானது அல்ல; இறாலைக் குறிவைத்தது. இந்த இறால் வேட்டையில் கடலடியை நொறுக்கிப் பிடிக்கப்படும் இறாலின் மொத்த எடையைக் காட்டிலும், குறைந்தது இரண்டு மடங்கு தங்களுக்குத் தேவைப்படாத இனங்களையும் பிடித்து அழிக்கிறார்கள்.

ஏற்றுமதியின் இன்னொரு முகம்
"ஆரம்பத்துல தன்னோட சொந்த மக்கள் வலுவா இருக்கணும்னு அரசாங்கம் நெனைச்சுச்சு. புரதச் சத்துக்குக் கடல் உணவு முக்கியம்னு நெனைச்சுதான் மீன்பிடித் தொழில்ல, நவீன முறைகளை அரசாங்கம் கொண்டாந்துச்சு. ஆனா, ஏத்துமதி கொடுத்த அந்நியச் செலாவணி நம்ம ஆட்சியாளருங்களோட நோக்கத்தை மாத்த ஆரம்பிச்சுடுச்சு. ஒலகம் முழுக்க இந்த மாரி டிராலருங்கள வெச்சி, கடல அரிக்கிற வேல நடக்குது. பல நாடுகள்ல கடல் வளத்தையே இன்னிக்கு இழந்துட்டு உட்கார்ந் திருக்குங்க. நாளைக்கு இங்கேயும் அப்பிடி நடக்கும். ஒவ்வொரு வருசமும் ஏத்துமதியை ஏத்துறோம், அந்நியச் செலாவணியை ஏத்துறோம்னு பேசி, சாதனை போலச் சித்திரிக்கிறாங்க. நடப்புல, இங்கெ உள்ளூர்க்காரனுக்குக் கெடைக்க வேண்டிய நல்ல மீனு எறாலைப் பறிச்சுதாம் வெளிய அனுப்புறாங்க. கேட்டா, கடல் தொழிலுக்குப் போறவங்களுக்கும்தானே வருமானம்னு பேசுவாங்க. கடலோடிங்களுக்குத் தேவை சரியான வருமானம். அதை வெளிநாட்டுக்காரன் கிட்டதான் வாங்கிக் கொடுக்கணும்னு யாரு கேக்குறா? உள்நாட்டுலயே நல்ல வெல கெடைக்க வழி பண்ணலாமே?

உண்மையான பின்னணி என்னான்னா, உள்நாட்டுல இதை வித்தா கெடைக்குற காசுல பெரும் பகுதி எங்களுக்கு நேரடியா வந்துரும். அதே ஏத்துமதின்னா, கடலோடிங்களுக்குச் சொற்பம். இத வாங்கி ஏத்துமதி செய்யிற ஆளுங்க கோடிக் கோடியா அள்ளுறாங்க. அந்த வெறிதான் மேல மேல வாரிக்குவிக்கணும்னு கடலைச் சூறையாடச் சொல்லுது. தடை செஞ்ச உயிரைக்கூட வெட்டி டப்பியில அடைச்சி அனுப்பச் சொல்லுது. கரைக் கடலுல ஓடும்போது, டிராலரோட அடிக் கதவு பவளப் பாறைங்கள அடிச்சு நொறுக்கும், தரையையே உழுதுறும்னு ஊருக்கே தெரியும். இந்திய அரசாங்கத்துக்குத் தெரியாதா? ஆனா, ஒண்ணும் நடக்காது. கட்சி வேறுபாடுங்களைக் கடந்து, பல அரசியல்வாதிகளோட மொதலீடு இந்த டிராலருங்கள்ல இருக்குது. நம்மூரு அரசியல்வாதிங்க எத்தன பேருக்கு, இந்தியா முழுக்க டிராலரு, கப்பலு ஓடுதுன்னு தெரியுமா? எல்லாம் பினாமி ராஜ்ஜியம்."

- கடலோடிகளுக்கு எதுவும் தெரியாமல் இல்லை.

ஆழ்கடலில் அந்நியக் கைகள்
இந்தத் தொடர் உரையாடலின் தொடர்ச்சியாக டிராலர் முதலாளிகளிடம் பேசினேன். அவர்கள் தரப்பு நியாயங்களை அடுக்கினார்கள். போகிற போக்கில் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் இந்தப் பிரச்சினையின் எல்லையின் நீளத்தைக் காட்டக் கூடியது.  "நம்மளோட கடல் எல்லையில தாய்வான்காரனும் வியட்நாம்காரனும் கப்பல்ல வந்து வேட்டையாடுறான். எல்லாம் பெரிய அளவுள்ள, எல்லா வசதியும் கொண்ட நவீனக் கப்பலுங்க. சுறாவைப் புடிக்கிறான். கப்பலுக்குள்ளேயே வெட்டுறான், தூவிய எடுத்துக்கிட்டு, ஒடம்பத் தூக்கி வீசுறான். எறாலைப் புடிக்கிறான். கண வாயைப் புடிக்கிறான். எல்லாத்தையும் கப்பலுக்குள்ளேயே சுத்தம் பண்ணி, பதப்படுத்தி, டப்பாவாக்கிட்டு, கழிவெல்லாம் கடல்லயே வுட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கான். யாரும் அவனை ஒண்ணும் பண்ண முடியலை."

"அதெப்படி அந்நியக் கப்பல்கள் நம்முடைய எல்லைக்குள் அத்துமீறி வந்து மீன்பிடிக்க முடியும்?"

"ம்... கப்பல் அவன் பேருல இருந்தாத்தானே? கப்பலோட உரிமம் நம்மாளுங்க பேருலல இருக்கும்? டெல்லி ராஜ்ஜியத்துல செல்வாக்குள்ள ஆளுங்க கையும் அதுல இருக்குதே? இத யார் கேக்க?"

இங்கே என்ன நடந்தாலும் கடைசியில் அது அரசியலைப் போய் அடைகிறது. அரசியல்வாதிகளோ தங்கள் தொழில் போட்டிக்கான எல்லையை விரித்துக் கொண்டே போகிறார்கள். ஆழ்கடலுக்குள்ளேயும்.

ஆகஸ்ட், ‘தி இந்து’ 2014

5 கருத்துகள்:

  1. 25வருடத்துக்கு முன்னாடியே நடிகைKR விஜயாவுக்கு 5 விசைப்படகுகள் கொச்சின் துறைமுகத்துல உண்டு. எங்க ஊர்க்காரங்களே அதுல தொழிலுக்கு போயிருக்காங்க. அப்படீன்னா இப்போ இருக்குற பெரிய பெரிய விசைப்படகுகள்லாம் எத்தனை பெரிய கார்ப்பரேட்டுகளின் வசம் இருக்கும்னு எண்ணிப்பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. பொன்முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் அறுக்கும் கதை.....

    பதிலளிநீக்கு
  3. ஏற்றுமதிக்கு பின் உள்ள அரசியலை எளிய உரையாடல் வழியாக காட்டியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு