கடல்புறத்தில் ஒரு ஷூட்டிங்!



பிலோமினாக்கா கேரளப் புகழ் பழரோஸை ஒரு கையிலும் (பழரோஸ் அறியாதவர்கள் கேரளத்து வாழைப்பழ பஜ்ஜி என்று அறிக!) இஞ்சி டீயை ஒரு கையிலும் திணித்தபோது, செல்பேசியில் மணி இரவு மணி 12-ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. கூடவே சுடச்சுட இஞ்சி டீ. இடம்: கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம்.

“யக்கா, எத்தனை மணிக்குக்கா இங்கெ வருவீங்க?”

“சாயங்காலம் நாலஞ்சு மணி வாக்குல வருவன் தம்பி. ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் வியாவாரம். ஆனா, பலகாரம் போட்டு எடுத்தாற நேரத்தையும் சேர்த்துக்கணுமில்ல? பக சாப்பாடு முஞ்சதுமே வேலையைத் தொடங்கணும். எப்படியும் பன்னெண்டு மணி நேர வேலையின்னு வெச்சிக்கயேன்...”

“எவ்ளோவுக்குக்கா ஓடும்?”

“அது ஓடும், நாளைப் பார்த்தாப்புல... அஞ்சாயிரம் வரைக்கும் ஓடும் தம்பி. ஆயரூபா மிஞ்சும்னு வெச்சிக்கோயேன்...”

பிலோமினாக்காவை அடுத்து வரிசையாக உட்கார்ந்திருப்பவர்களில் பாப்பாக்கா வெற்றிலை, பாக்கு விற்கிறார். செஸ்மியக்கா பீடி, சுருட்டு விற்கிறார். ஒரு நாளைக்கு ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையாகும் என்கிறார்கள். கிட்டத்தட்ட நூறு பேர் இப்படிச் சில்லறை வியாபாரிகள் மட்டும் இருக்கிறார்கள்.

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் அப்படியொன்றும் பெரிதல்ல. படகுகள் நிறுத்த போதிய இடம் இல்லாததால், கொஞ்சம் தூரத்தில் உள்ள தூத்தூர்காரர்களே கொச்சியில்தான் படகுகளை நிறுத்துகிறார்கள். சின்னத் துறைமுகம். 200 படகுகள் இங்கிருந்து மீன்பிடிக்கச் செல்கின்றன. ஆனால், இந்தப் படகுகளை வைத்து வெளியே பிழைப்பவர்களின் எண்ணிக்கையே சில ஆயிரங்களைத் தாண்டுகிறது. ஒரு நாளைக்கு துறைமுகத்துக்கு ஏற்ற இறக்க மட்டும் நூற்றுக் கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன.

துறைமுகத்துக்கு வெளியே வரிசையாக இருக்கும் டீசல் பெட்ரோல் நிலையங்கள் பெயருக்குதான் பெட்ரோல் நிலையங்கள். எல்லாம் டீசல் நிலையங்கள். ஒரு படகுக்குச் சராசரியாக 2,000 லிட்டர் டீசல் வாங்குகிறார்கள். ஆழ்கடல் தொழிலுக்கு நீண்ட நாட்களுக்குச் செல்லும் படகுகள் என்றால், ஒரு படகுக்கு 15,000 லிட்டர் வரை டீசல் வாங்குகிறார்கள். சென்னை, அண்ணா சாலையில் பரபரப்பான இடத்தில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் நாள் முழுவதும் விற்கப்படும் டீசலுக்குச் சமம் இது. எவ்வளவு பெரிய வியாபாரம்? வெளியே உள்ள டீசல் நிலையங்களிலிருந்து கேன்களில் டீசல் வாங்கி, ஆட்டோக்களின் பின்புறம் ஏற்றி வந்து படகுகளில் நிரப்புகிறார்கள் படகுக்காரர்கள். துறைமுக வளாகத்தில் இருக்கும் அரசுத் துறை நிறுவனம் நேரடியாக நிறுவிய டீசல் நிலையமோ சீரழிந்து, மூடப்பட்டு நாய்களின் புகலிடமாகக் கிடக்கிறது.

தமிழ்நாட்டில் குறைந்தது 100 இடங்களில் இப்படியான படகுத் துறைகளை அமைக்கலாம்.

முட்டம் ஞாபகத்தில் இருக்கிறதா? ‘கடலோரக் கவிதைகள்’ முதல் ‘கடல்’ படம் வரைக்கும் படப்பிடிப்பு நடந்த தளம். அற்புதமான கடற்கரை. சுற்றுலாப் பயணிகள் பார்த்தால் விட மாட்டார்கள். இந்திய அரசாங்கத்துக்கு எப்போதோ, திடீர் ஞானோதயம் வந்து விடுதிகளைக் கட்டிவிட்டிருக்கிறது. அந்தோ, பாவம்... கன்னியாகுமரியிலிருந்து செல்ல நேரடி பஸ்கூட இல்லாத ஊருக்கு எப்படிப் போவார்கள்? ஒரு சாப்பாட்டுக் கடைகூட இல்லாத கடற்கரையில் யார் தங்குவார்கள்? விளைவு, கட்டுமானங்கள் சிதைந்து கிடக்கின்றன. மணப்பாடுக்குச் செல்பவர்கள் கோவா நினைவுகளில் ஆழ்வார்கள். அப்படியொரு அழகு. அங்கும் அதே கதைதான். கடற்கரையில் குளிக்கவும் குடிக்கவும் கிணற்றில்தான் தண்ணீர் இறைக்க வேண்டும். எழில் அள்ளும் தனுஷ்கோடிக்குச் செல்ல சாலைகளே கிடையாது... அடுக்கிக்கொண்டே போகலாம்.

உலகெங்கும் சுற்றுலாத் துறையில் ஓராண்டில் புழங்கும் தொகை ஒரு டிரில்லியன் டாலர்கள். நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றான கோவாவின் பொருளாதாரம் அதன் கடற்கரைகளில்தான் மையம் கொண்டிருக்கிறது. வருஷத்துக்கு 20 லட்சம் பேர் கோவா வந்து போகிறார்கள். கடலூரில் சுற்றுலாத் துறையை வளர்த்தெடுத்தால், அங்குள்ள அபாய ஆலைகள் அத்தனையையும் மூடிவிடலாம். அதைக் காட்டிலும் பெரிய வருவாயைத் தரக் கூடும்.

நம் கண்ணுக்கு எது மட்டும் பொருளாதாரமாகத் தெரிகிறது, சூழலை நாசமாக்காமல் உள்ளூர் மக்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் உயர்த்தலாம் என்பதற்கான உதாரணங்கள் மட்டும் அல்ல இவை. தமிழகத்துக்குக் கிடைத்த கொடைகள் இவையெல்லாம். ஆனால், எத்தனை பேருக்குப் பார்க்கக் கிடைத்திருக்கும்? கடல் சூழல் நாசமாகிறது; யாருக்கும் கவலையில்லை என்றால், எப்படிக் கவலைப்படுவார்கள்? அறியாத ஒரு விஷயத்துக்காக யார் கவலைப்படுவார்கள்?

தமிழகக் கடலோரத்தில் எடுக்கப்பட்ட எந்தவொரு திரைப்படமும் அங்குள்ள மக்கள் வாழ்வை துல்லியமாகப் படம் பிடித்ததில்லை என்ற குற்றச்சாட்டு கடலோடிகள் சமூகத்தில் உண்டு. தனுஷ்கோடி சென்றிருந்தபோது, அங்கே ஒரு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. படத்தின் பெயர் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ என்றார்கள். “வாட் எ ரொமான்டிக் பிளேஸ்யா?” என்று நம்முடைய சினிமாக்காரர்கள் பேசிக்கொண்டிருந்த இடம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் புயலில் சின்னாபின்னாமான தேவாலயம். பல நூறு பேர் புயலுக்கு அடைக்கலம் புகுந்து கடலில் ஜலசமாதியான இடத்தில் குத்தாட்ட உடையில் ப்ரியா ஆனந்த் உட்கார்ந்திருக்கிறார்.

புரியவில்லையா? இந்த அத்தியாயத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒன்றுக்குள் ஒன்று பிணைந்தவை!

‘தி இந்து’, ஆகஸ்ட் 2014



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக