இந்தியா முழுவதும் எல்லாத் தொலைக்காட்சிகளும் வெவ்வேறு மொழிகளில், தங்களுக்கு வசதியான தொனியில் ஒரே விஷயத்தைத்தான் சொல்லிக்கொண்டிருந்தன. “இந்திய வரலாற்றில் முதல்முறையாக முதல்வர் பதவியில் இருக்கும்போதே நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, பதவியைப் பறிகொடுத்தார் ஜெயலலிதா. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை. தவிர, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தண்டனையைத் தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை தொடரும் என்பதால், 10 ஆண்டுகள் அவர் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார்.”
சிரிப்புதான் வருகிறது. போன வருஷம் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், பிஹாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் தண்டனையோடு சிறைக்குச் சென்றார். ஞாபகம் இருக்கிறதா? 17 ஆண்டுகள் எப்படியெல்லாம் இழுக்க முடியுமோ அப்படியெல்லாம் வழக்கை இழுத்தடித்தார். இடையிலேயே மனைவி ராப்ரி தேவியை முதல்வர் ஆக்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ரயில்வே அமைச்சர் ஆனார். சிறைக்குப் போனார். இப்போது என்ன செய்கிறார்? வழக்கு மேல் விசாரணையில் இருக்கிறது. பிணையில் வெளியே வந்த லாலு, பாட்னாவில் தன் வீட்டுக் கொல்லையில், ரம்மியமான சூழலில், எதிரே கிடக்கும் மேஜையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, அப்போதைக்கு அப்போது கறந்த எருமைப் பாலில் மலாய் தூத் குடித்துக்கொண்டு பிஹார் அரசியலைத் தீர்மானிக்கிறார். சமீபத்திய தேர்தலில் மக்கள் லாலுவின் கரத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறார்கள்.
பிஹார் கதை போகட்டும், நம்மூருக்கு வருவோம். ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என்று அறிவித்ததன் மூலம், 1991-1996 அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்தது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது, சரி. 1996 - 2001 திமுக ஆட்சியின் கதை என்ன? 2001-2006 அதிமுக ஆட்சியின் கதை என்ன? 2006-2011 திமுக ஆட்சியின் கதை என்ன? இப்போது 2011-2014 ஆட்சியின் கதை என்ன? நம் எல்லோருக்கும் தெரியும்!
கட்சிக்காரர்களுக்கு ஊழல் தெரியாதா?
ஒரு சகா கேட்டார்: “ஆட்சியில் உள்ள ஒரு முதல்வரை ஊழலில் ஈடுபட்டார் என்று சொல்லி நீதிமன்றம் தண்டிக்கிறது. அவருடைய கட்சியினர் குற்றம்பற்றி துளி யோசிக்கவில்லை. தீர்ப்பை எதிர்த்து வன்முறையில் ஈடுபடு கிறார்கள். அதிமுகவினருக்கு யோசிக்கவே தெரியாதா?”
ஆ. ராசா அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுப் பிறகு பிணையில் வெளியே வந்தபோது பிரம்மாண்டமான வரவேற்பு அளித்ததே திமுக; அப்படியென்றால், திமுகவினருக்கு யோசிக்கவே தெரியாது என்று தீர்மானிக்க முடியுமா?
கட்சி வரையறைகளையெல்லாம் தாண்டி யோசிக்க வேண்டிய விவகாரம் இது. தமிழ்நாட்டில் திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை எத்தனை என்று கேளுங்கள். ஒரு கோடிக்குப் பக்கமாகச் சொல்வார்கள். அதிமுகவினர் எண்ணிக்கை கோடியைத் தாண்டிச் சொல்வார்கள். மிகை அல்ல. ஒட்டுமொத்தத் தமிழகத்தில் ஏழில் மூவர் அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் என்றால், அவர்களில் இருவர் திமுக அல்லது அதிமுக அபிமானிகள். மிச்சமுள்ள ஒருவர் தேமுதிகவையோ, காங்கிரஸையோ, பாமகவையோ, மதிமுகவையோ, கம்யூனிஸ்ட் கட்சியையோ, ஏனைய கட்சிகளையோ சேர்ந்தவராக இருக்கலாம். இவர்களை ஒதுக்கிவிட்டு அரசியல் பேசுவதில் அர்த்தமில்லை.
தங்களுடைய கட்சித் தலைமை ஊழலுக்கு அப்பாற்பட்டது என்று இவர்கள் எவரும் நம்பவில்லை. இதில் ஒளித்து மறைக்க ஒன்றும் இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் கட்சி நடத்த தங்கள் உறுப்பினர்களின் வருமானத்திலிருந்து குறிப்பிட்ட பகுதியைப் பெறுகிறார்கள்; மாநாடுகள், தேர்தல்களை எதிர்கொள்ள உண்டியல் குலுக்குகிறார்கள். எல்லோருக்கும் தெரியும். ஏனைய கட்சிகள் கோடி கோடியாக இறைக்க எங்கிருந்து வருகிறது பணம்? ‘மக்கள் சேவை’யை மட்டுமே முழு நேர வேலையாகக் கொண்டிருக்கும் நம்முடைய அரசியல் தலைவர்கள் குடும்பம் நடத்த எங்கிருந்து வருகிறது பணம்? இந்தப் ‘பணப்புழக்கப் பாதை’ வெளியில் உள்ளவர்களைவிடவும் கட்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், ஊழலையெல்லாம் தாண்டியும் இவர்களுக்குக் கட்சித் தலைவர்களே முக்கியமானவர்கள். ஏன்? ஊழல் நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கம் ஆகிவிட்டது. ஆம், இங்கே அதிமுகவினர், திமுகவினர், மக்கள் என்கிற வார்த்தைகள் எல்லாம்கூட பூடகமானவை. அடிப்படையில் இவர்கள் எல்லாம் யார்? உடைத்துப்பார்த்தால் எல்லாம் நாம்தான்!
திருமங்கலம், புதுக்கோட்டைச் சூத்திரங்கள்
போன ஆட்சியில் நடந்த திருமங்கலம் தேர்தல் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. வீட்டுக்கு வீடு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயும், மூக்குத்தி, மோதிரமும் போனதை உலகமே பார்த்தது. தேர்தல் முடிவு என்ன? திமுக அபார வெற்றி! திருமங்கலம் சூத்திரம் என்றே தேர்தலில் ஒரு உத்தி உருவானது. தேர்தலில் பாய்ந்தது ஊழல் பணம் என்பது மக்களுக்குத் தெரியாதா? மக்கள் உணர்த்திய பாடம் என்ன? இதோ, இந்த ஆட்சியில் புதுக்கோட்டை சூத்திரம் உருவாகியிருக்கிறது. “ஆளுங்கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் மிரட்டப்படுகிறார்கள் அல்லது விலைக்கு வாங்கப்படுகிறார்கள்; ஜனநாயகப் படுகொலை நடக்கிறது” என்று எதிர்க்கட்சிகள் அத்தனையும் கூக்குரலிட்டன. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். தேர்தல் முடிவு என்ன? அதிமுகவுக்கு அமோக வெற்றி! மக்கள் உணர்த்தும் பாடம் என்ன?
காலாவதியாகும் நேர்மை
நேர்மையான ஆட்சிக்கு உதாரணமாக காமராஜர் ஆட்சியைப் பற்றியும் எளிமையான அரசியல்வாதிக்கு உதாரணமாகக் கக்கனைப் பற்றியும் பேசிக்கொண்டிருக் கிறோம் இன்னமும். இடைப்பட்ட இந்த 50 ஆண்டுகளில் நேர்மையான, எளிமையான ஒரு அரசியல்வாதிகூட நமக்குக் கிடைக்கவில்லையா? கண்ணெதிரே உள்ள சாட்சியம் நல்லகண்ணு. இந்திய அளவில் கொண்டாடத்தக்க அப்பழுக்கற்ற அரசியல்வாதிகளில் ஒருவர். இன்றைக்கும் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஆட்டோவில் வந்திறங்கும் மனிதர். வாழ்நாள் பணியைப் பாராட்டி அளிக்கப்பட்ட நிதியைக்கூட “மனைவிக்கு ஓய்வூதியம் வருகிறது, எனக்கு என்ன செலவு?” என்று கேட்டு கட்சியிடம் நிதியை ஒப்படைத்தவர். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் பரப்பில் ஒரு நல்லகண்ணுவுக்கான இடம் என்ன?
எதற்கெடுத்தாலும் அமைப்பு மோசம் என்று கூப்பாடு போடுவதில் அர்த்தம் இல்லை. இதே அமைப்பில்தான் ஒரு காமராஜரும் கக்கனும் நல்லகண்ணுவும் உழன்றிருக் கிறார்கள். அன்றைக்கு காமராஜர்களும் கக்கன்களும் எடுபட்டார்கள்; இன்றைக்கு நல்லகண்ணுகள் தேவையற்றவர் களாகிவிட்டார்கள் என்றால், தவறு அரசியல்வாதிகளிடம் மட்டும்தான் இருக்கிறதா?
அரசியலில் காலடி எடுத்துவைத்த நாளில், இப்படியெல்லாம் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமக்கும் ஒரு கட்சியை நடத்துவோம் என்று கருணாநிதிதான் நினைத்திருப்பாரா, ஊழல் குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்படுவோம் என்று ஜெயலலிதாதான் நினைத்திருப்பாரா? அவர்கள் நம்மையும் நாம் அவர்களையுமாகச் சீரழித்துக்கொண்டோம். அவர்களுடைய பிழைகள், தவறுகளாகி, குற்றங்களாக உருவெடுத்து அவர்களையும் அழித்து, நாட்டையும் சிதைக்க நாம்தான் வழிவகுத்தோம்.
நாம் எந்த அளவுக்கு நேர்மையாளர்கள்?
நேர்மை வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. வாழ்வின் ஒவ்வொரு நடவடிக்கையோடும் பிணைந்தது. நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்த நாளின் இரவு. எங்கும் கலவரச் சூழல். அரைகுறை வெளிச்சத்தில் அழுது வடியும் தெருக்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக கால்வாசி கதவைத் திறந்துவைத்து வியாபாரம் நடத்தும் கடைக்காரர் வழக்கமாக ரூ. 14-க்கு விற்கும் பால் பாக்கெட்டை ரூ. 20-க்கு விற்கிறார், பசியால் அழும் குழந்தைக்கு பால் வாங்க நிற்கும் பெண்ணிடம். மருத்துவமனை வாசலிலேயே வெகு நேரம் காத்திருந்து, அரிதாக வரும் ஒரு ஆட்டோவில் ஏற முற்படும் மூதாட்டியிடம் ரூ. 30-க்குச் செல்லும் சவாரிக்கு ரூ. 100 கேட்கிறார் ஆட்டோக்காரர். மூன்று வீடுகளின் உரிமையாளர் தன் வீட்டில் இருக்கும் - ஏழைகளுக்கு அரசாங்கம் கொடுத்த இலவச - தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்துவிட்டு, “இந்த அரசியல்வாதிகளெல்லாம் மோசம்பா” என்கிறார்...
நீதிபதி குன்ஹா அவர்களே... உங்களைப் போன்றவர்கள் அறத்தை உரக்கப் பேசும்போதுதான் எங்களுக்குள் இருக்கும் மனசாட்சிக்குக் கொஞ்சமேனும் உறைக்கிறது. அறம் கொன்ற குற்றத்தில் எங்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. எங்களுக்கு என்ன தண்டனை அளிக்கப்போகிறீர்கள்?
செப்டம்பர், 2014
அரசியல்வாதிகளை சீரழித்ததில் நமக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. மிக அருமையான கட்டுரை.
பதிலளிநீக்குBest Article.... Thanks
பதிலளிநீக்குShiv, Chennai
சமூகத்தின் அடியாழம் வரையில் ஊழல் புரையோடி இருக்கிறது... மணல் கொள்ளையை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிற பல கிராமங்களில் அவர்கள் மணல் அள்ளுவதை உண்மையிலேயே தடுப்பதற்காகப் போராடுவதில்லை; மாறாக தங்கள் கிராமத்திற்கு -கவுன்சிலர்களுக்கும் இதர முக்கியப் புள்ளிகளுக்கும்- வந்து சேரவேண்டிய பங்கு வரவில்லை என்பதற்குத்தான் போராட்டம் நடத்துகிறார்கள். பங்கு வந்ததும் அமைதியாகி விடுகிறது. இப்படியாக பல விவகாரங்களில் கிராமங்களீன் கடைசி குடிமக்கள் வரையிலும் ஊழல். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டப் பணி என்று ஒரு மூன்று மணி நேரம் களை பறித்துவிட்டு நாள் முழுவதுக்குமான கூலியைப் பெற நினைக்கிற கிராமத்தான்களிடம் என்ன நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியும்?
பதிலளிநீக்குநாம் எந்த அளவிற்கு நேர்மையானவர்கள் என்று நீங்கள் கேட்டிருப்பது 100 க்கு 100 சரியே! மக்களும் திருந்தினார்கள் இல்லை....அரசியல்வாதிகளும் திருந்தினார்கள் இல்லை! மக்களும் குற்றவாளிகளே!
பதிலளிநீக்குஅற்புதமான கட்டுரை!
அவர்களை மறுமுறை தேர்வு செய்வதும் அறம் கொன்றதின் தண்டனை தானே.
பதிலளிநீக்குIT IS TRUE
பதிலளிநீக்குPEOPLE ARE THE SINNERS OF OUR NATION
THINK AND ACT BEFORE VOTING
https://marubadiyumpookkum.wordpress.com/2015/02/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF/
பதிலளிநீக்கு