சென்னை, ராயபுரத்தில் நெரிசலான வீடுகளில் ஒன்றின் சின்ன அறை. சரக்கு மற்றும் கப்பல் போக்குவரத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஒன்றின் தலைவரின் அறை அது என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். “இதுதாம் நம்ம எழுத்துலகம், வர்றீயளா கடக்கரைக்குப் போய்ப் பேசலாம்?” - சிரிக்கிறார் ஜோ டி குரூஸ். ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ நாவல்களின் மூலம் தமிழ்க் கடலோடிகளின் பல்லாயிரமாண்டு வரலாற்றையும் வாழ்க்கையையும் ரத்தமும் சதையுமாகத் தந்தவர். கடலோடி, படைப்பாளி என்பதைத் தாண்டி, உலகெங்கும் தான் சார்ந்த தொழில் நிமித்தம் சுற்றியவர். கடலோடிகளின் நேற்று, இன்று, நாளைபற்றிப் பேசச் சரியான ஆள்.
எண்ணூர் கடற்கரை. “வசதி வரும் போவும்... மனுசம் பழச மறக்கக் கூடாது. அதாம் ராயபுரத்துல இருக்கம். இங்க வீட்டப் பூட்டற பழக்கமில்லய்யா. சுத்தி நம்ம சனம். எதுக்குப் பயம்? உவரியில எங்காத்தா கடல் பக்கம் புள்ளயள வுட மாட்டா. ஆனா, எத அவ செய்யக் கூடாதுன்னு சொன்னாளோ, அதத்தாம் செஞ்சம். விடியப் பொறுக்காம ஓடிப் போயி கடக்கரயில நிப்பம். வலயோட கட்டிக்கிட்டுக் கட்டுமரத்தக் கர வுடுவாறு தாத்தா தொம்மந்திரை. கோவண ஈரம் சொட்டச் சொட்ட நிக்கிற அவுரு காலக் கட்டிக்கிட்டு நிப்பம். காத்துக் காலமா இருந்தா, ஆழிமேல உருண்டு அடிபட்டு வருவாங்க. பருமல் முறிஞ்சி, பாய் கிழிஞ்சி, நெஞ்சில அடிபட்டு, பேச்சிமூச்சி இல்லாம, கை கால் ஒடிஞ்சி, பாக்க பரிதாவமா இருக்கும். காலம் எவ்வளவோ ஓடிட்டு. எஞ் சனத்தோட நெலம மாறலீயே?” - கடற்கரையில் கிடக்கும் கட்டுமரம் ஒன்றில் உட்காருகிறார்.
திடீரென்று எழுத்துலகில் நுழைந்தீர்கள். எடுத்த எடுப்பில் எழுதிய நாவலே தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றானது. அடுத்த நாவல் சாகித்ய அகாதெமி விருது பெற்றுத்தந்தது. பெரிய வாசிப்புப் பின்னணியும் உங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எது இதைச் சாத்தியமாக்கியது?
மொதல்ல, ஒரு கவிதைத் தொகுப்பக் கொண்டுவர்றதுக்காகத்தாம் ‘தமிழினி பதிப்பகம்’ போறம். அங்க ஒரு மேல்தட்டுக் கும்பல் கேலி பண்ணிச் சிரிக்கிது. அவமானம் தாங்க முடியல. அடிக்கணும்போல இருக்கு. தமிழினி வசந்தகுமார் அண்ணன் சொல்றார், ‘கன்னத்துல கையால அடிக்காத, அடிக்கிறத உன்னட எழுத்தால நெஞ்சுல அடி’ன்னு. பா. சிங்காரத்தோட ‘புயலிலே ஒரு தோணி’ நாவலைக் கொடுக்குறார். ரெண்டே நாள்ல படிச்சி முடிச்சிட்டு எழுதறம், எங்காத்தா குமரியே எனக்குள்ள வந்து புகுந்திற்றமாரி இருந்திச்சி. நிக்க, நடக்க, சாப்புட, தூங்க நேரமில்ல. எங்கெல்லாம் உக்கார்ந்து எழுதினம் தெரியுமா? வீடு, ரயிலடி, தொறைமுகம், கடக்கர... ஒலகம் முழுக்க எங்கெல்லாம் சுத்துறேனோ, அங்கெல்லாம். கங்காரு குட்டியத் தூக்கிக்கிட்டே திரியுமாமே அப்பிடி, எழுதுனத எந்நேரமும் சட்டைக்குள்ளயே வெச்சிக்கிட்டு அலைஞ்சம். என்னமோ ஒரு நெனப்பு, இது உன்னிது இல்லடா, பல்லாயிரம் வருஷமா பேசாத ஒரு சமூகத்தோடதுன்னு. இப்பவும் அதே நெனப்பாத்தாம் ஓடுறம்.
உங்கள் சமூகத்தில், உங்கள் எழுத்து எதிர்மறையான அதிர்வுகளைத்தான் உண்டாக்கியது, இல்லையா?
ஆமா, ரொம்ப அப்பாவிச் சனங்க… லேசுல உணர்ச்சிவசப்படறவங்க. அவங்ககிட்ட ஊருல அரைகுறையா படிச்சவம்லாம் சேந்து, நம்மளப் பத்தி அசிங்கமா எழுதிட்டாம்னு ஒண்ணுக்கு ரெண்டாப் பரப்பிவிட்டாம். போதாக்குறைக்குச் சில பாதிரிமாருங்க இந்தப் புஸ்தகத்தை எரிச்சா மோட்ச ராச்சியம் உடனே சமீபிக்கும்கிறாம். அவனவம் வீட்டுக்கு போன் அடிச்சி மெரட்டுறாம். ஊருக்குள்ள நொழஞ்சா ரெண்டு துண்டா வெட்டிக் கடல்ல வீசுவோம்னு மெரட்டுறாம். நான் அசடல. ஆனா, இப்ப எங்க சனத்துக்கு உண்ம புரியிது… எல்லாத்தயும் எல்லா நாளும் ஏமாத்த முடியாதுல்ல?
இந்த ஒதுக்கலைத் தாண்டி தமிழ் இலக்கிய உலகம் உங்களை ஆரத் தழுவியது; ஆனால், நீங்கள் அவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பதாகச் சொல்கிறார்கள்...
நெசத்தச் சொல்லட்டுமா? ஒரு இலக்கியவாதியா என்னய நானே இன்னும் ஏத்துக்கல. இங்க பல தகுதியான ஆளுங்களுக்கு இன்னும் சாகித்ய அகாதெமி விருதே கொடுக்கப்படல. எனக்குக் கெடைச்சது கூச்சமடைய வெக்கிது. ஒரு விழாவுல, பக்கத்துல உக்காந்திருந்தவர் பின்நவீனத்துவம்னு என்னென்னவோ பேசிட்டு, எங்கிட்ட கருத்து கேட்டார். நான் பின்நவீனத்துவம்னா என்னான்னே தெரியாதுன்னேன். எங்கிட்ட இருக்கிறதெல்லாம் அனுபவ ஞானமும், கத கேட்டு வளத்துக்கிட்ட கேள்வி ஞானமும்தாம். எஞ் சனத்துக்கு நாஞ் செய்ய வேண்டியது நெறய இருக்குய்யா. நமக்கு மேடயெல்லாம் வேணாம், எஞ் சனத்துக்கு உணர்வு வந்தாப் போதும்.
உங்களுடைய எழுத்துகளில் கிறிஸ்தவம் மீது கடுமையான விமர்சனம் வெளிப்படுகிறது...
இன்னிக்கும் திடீர்னு ஒரு தும்ம வந்தாக்கூட, ‘யேசுவே ரட்சியும்’ங்கிற வார்த்தயும் கூடவே வந்து விழற உண்மயான கிறிஸ்தவந்தாம் நா. ஆனா, எங்க இனத்தோட வரலாற்றயும் பண்பாட்டயும் தலமயையும் கிறிஸ்தவம்தாம் தீத்துக்கெட்டிட்டுன்னு புரிஞ்சுவெச்சிருக்கம். இதுவரைக்கிம் பாக் நீரிணையில மட்டும் பல நூறு கடலோடிங்க இலங்கைக் கடற்படையால சுட்டுக்கொல்லப்பட்டிருக்காங்க. வாட்டிகன்லேந்து ஒரு காக்கா, குருவி சத்தம்கூட வருல்லிய, ஏன்னு கேட்டா குத்தமா?
ஆனால், உங்கள் விமர்சனங்கள் மதம் என்கிற ஒட்டுமொத்த அமைப்பையும் கேள்விக்குள்ளாக்குவதாக இல்லை. மாறாக, இந்து மதத்தின் பெருமைகளைத் தூக்கிப் பிடிக்கின்றன. பூர்வகுடிகளின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பேசும் நீங்கள், மத ஆதிக்கம்பற்றிப் பேசும்போது, ஒரு மதத்தைத் தகர்த்துவிட்டு, அந்த இடத்தில் இன்னொரு மதத்தை உட்காரவைக்க முனையக் காரணம் என்ன?
முப்பத்து முக்கோடி தேவர்கள்னு சொல்லிட்டு, எடயிலயே யாராச்சும் யேசுவயும் மாதாவயும் காட்டுனா அதயும் சேத்துக் கும்புட்டுகிட்டுப் போய்க்கிட்டே இருக்கிறது ஒரு மதத்தோட பாரம்பரியம் இல்ல. இந்த மண்ணோட பாரம்பரியம். தென்மொனயில இருக்குற குமரியாத்தா எங்க குலதெய்வம் மட்டுமில்ல, எங்க இனத்தோட அடயாளம். நான் யேசுவக் கும்பிடறதாலயே குமரியாத்தாள மறக்கணும்னு நீங்க நிர்ப்பந்திச்சிங்கன்னா, எங்க குலதெய்வத்த மட்டும் நீங்க ஒதுக்கல; கூடவே, எங்க இனத்தோட அடயாளத்தயும் பண்பாட்டயும் சேத்தே ஒதுக்குகிறீங்க. அதத்தாம், விமர்சிக்குறம். வேற எந்த மதத்தயும் நான் தூக்கிப்பிடிக்கல.
உங்களுடைய வழிபாட்டு முறை நாட்டார் வழிபாட்டு முறை அல்லவா? மதம் சார்ந்து கிறிஸ்தவம் உங்களைச் சுரண்டியது என்றால், மறுபக்கம் இந்து மதமும் உங்களுக்கு ஒன்றும் உயர் பீடத்தைக் கொடுத்துவிடவில்லையே? இந்து மதத்தின் சாதிய அதிகார அடுக்குகளின் விளிம்பில்தானே கடலோடிகள் சமூகம் இருக்கிறது?
இந்துன்னு ஒரு மதம் இருக்குறதாவே நான் நெனைக்கல. இது ஒரு வாழ்க்க மொற, கலாச்சாரம். இந்துன்னா, எல்லாத்தயும் ஏத்துக்குற அதி பக்குவம். இதுதாம் நான் பாக்குற இந்து. அதைத் தாண்டி மதம், அதுல உள்ள சாதிய அடுக்கு இது எதயும் நான் ஏத்துக்கல.
நீங்கள் இடதுசாரி இல்லை என்று அறிவித்தீர்கள்; அப்படியென்றால், வலதுசாரி என்று கொள்ளலாமா?
அய்யா சாமி, நான் வலதுசாரியுமில்ல, இடதுசாரியுமில்ல, மக்கள்சாரி.
தேசிய அளவில் பிரதமர் பதவிக்கு மோடியை ஆதரித்தவர்களில்நீங்களும் ஒருவர். இந்துத்துவ அமைப்புகளுடனான உறவின் தொடர்ச்சி என்று உங்கள் நிலைப்பாட்டைக் கொள்ளலாமா?
நா எல்லார்கிட்டயும் பேசுறவம். அதனாலயே, இவம் இப்பிடின்னு முத்திரைக் குத்திற முடியாது. மோடி மேல இருக்குற நம்பிக்கையும் மதிப்பும் அவரோட செயல்பாட்டால உருவானது. பெரிய குடும்பப் பின்னணி இல்லாத ஒரு தனிமனுஷன் தன்னோட அசாதாரண உழைப்புனால, ஒரு நாட்டோட பிரதமரா உயர்ந்துருக்காருன்னா, அது இந்திய ஜனநாயகத்தோட வெற்றி. என்னோட நம்பிக்கை வீணாகப் போறதில்ல. நீங்க பாப்பீங்க.
மோடி பிரதமரான பின் அரசப் பிரதிநிதிகளோடு தொடர்ந்து பேசுகிறீர்கள்; சில திட்டங்களை முன்மொழிந்தீர்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. என்ன திட்டம் அது?
இந்தியக் கடக்கரையோட நீளம் 8,118 கி.மீ. நமக்குக் கிடைச்சிருக்குற அரிய வளம் இவ்வளவு நீளக் கடக்கரையும் கடலும். ஆனா, கடல்ல என்ன நடக்குதுங்கிறது, கடத் தொழில்ல உள்ள பணக்கார முதலைங்களைத் தவிர வேற யாருக்குமே தெரியாது. ஒண்ணுமில்ல, பேக்வாட்டர்ம்பீங்களே… அந்தப் பின்நீரிணையை மட்டும் பயன்படுத்தி, எத்தன எடங்கள்ல உள்நாட்டுப் படகுப் போக்குவரத்தயும் பொழுதுபோக்கு அம்சங்களயும், மீன் உற்பத்தியையும் பெருக்கலாம் தெரியுமா? உழைச்சு உசுரக் கொடுக்குற கடலோடிச் சமூகமும் ஒண்ணுமில்லாம நிக்கிது. வருமானம் போய்ச்சேர வேண்டிய அரசாங்கமும் ஒண்ணுமில்லாம நிக்கிது. இந்த ரெண்டுக்கும் தீர்வு காணுறதுக்கான வழிங்களைச் சொல்லியிருக்கம். முக்கியமா, கடலோடிகளோட பங்கேற்பு இல்லாம கடலோரப் பாதுகாப்போ, கடல் மேலாண்மயோ சாத்தியமே இல்லன்னு சொல்லியிருக்கம்.
இந்திய அளவில் பேசுகிறீர்கள். தமிழகக் கடலோடிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை யோசித்திருக்கிறீர்களா?
மொதல்ல இங்க ஒத்தும வேணும்யா. சங்க இலக்கியத்துல, கடல் தொழில் செய்யிற அத்தன பேரயும் பரதவர்ங்கிற ஒத்த வார்த்ததாம் குறிக்கிது. அந்த ஒரு குழு இன்னக்கி, பரவர்,பர்வதராஜர், செம்படவர், ஓடக்காரர், முக்குவர், நுழையர், பட்டங்கட்டி, வலயர், வலைஞர், கடையர், அம்பலக்காரர், கரையர், முத்தரயர், செட்டி, நாட்டார், பட்டினவர், பள்ளி, மரைக்காயர், வருணகுல முதலின்னு எத்தன குழுவா செதைஞ்சி கெடக்கு? இதுக்குள்ள ஊருக்கு ஊரு, தெருவுக்குத் தெருன்னு எத்தனயெத்தன குழுக்கள்? மொதல்ல இந்தப் பிரிவின, ஏத்தத்தாழ்வு, வெட்டுக்குத்தெல்லாம் நீங்கணும்.
கடலோரக் கிராமங்களின் ஒற்றுமையின்மைக்கும் வன்முறைக் கலாச்சாரத்துக்கும் என்ன காரணம்?
அடிப்படையில வேட்டையாடிச் சமூகம்தானே? இங்கெ ஒவ்வொருத்தனும் அவம் மனசுல கடலுக்கே ராசா. முதலாளி - தொழிலாளி மொறயே கடக்கரயில கெடயாது கவனிச்சீங்களா? எல்லாம் பங்குமொறதாம். ஒரு ராசாவுக்கு இன்னொரு ராசாவப் புடிக்குமா? யாராவது ஒருத்தம் ஆதிக்கம் செய்யிறமாரி தெரிஞ்சா அடுத்தவம் சீறுவாம். இது கலாச்சாரம். ஆனா, காலம் மாறுறதுக்கேற்ப, நாமளும் மாறணுங்குறம். துரதிர்ஷ்டவசமா, நம்ம கல்வி மொற அதுக்கு உதவல. சமூக அக்கறையயும் அரசியல் விழிப்புணர்வயும் கொடுக்குறதுக்குப் பதிலா, சுயநலத்தயும் சுரண்டலுக்குத் தொணபோறதயும்தாம் சொல்லிக்கொடுக்குது.
கடல் சூழலைச் சீரழிக்கும் சுரண்டல்களில் கடலோடிகளின் கைகளும் இருக்கின்றன. எனில், சுரண்டல்களைத் தடுப்பது எப்படி?
கடலயும் கரயையும் பேணிக்காக்குறதுல எல்லாத்தயும்விட கடலோடிச் சமூகத்துக்குக் கூடுதலான அக்கற வேணும். சூறயாடல் நடக்குன்னா, எங்காளுங்களும் காரணம். இதுல ஒளிச்சு மறைக்க ஒண்ணுமில்ல. இத நிறுத்தணும். ஆபத்தான ரெட்டமடி, சுருக்குமடி,கொல்லிமடிங்கள கடக்கரயிலிருந்து மொத்தமா பறிமுதல் செஞ்சி வீசணும். கரைக்கடல்லயும், அண்மைக்கடல்லயும் நாட்டுப் படகுகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கணும். விசைப்படகு, டிராலரையெல்லாம் ஆழ்கடலுக்குத் தொரத்தணும். ஆழ்கடல் தூண்டில் தொழில் ஊக்குவிக்கப்படணும். அதேமாரி கடக்கரயையும் சூழல் பாதிப்பு ஏற்படாம நாம பேணிக் காக்கணும். நமக்குக் காசு கிடைக்கிதுன்னு மண்டையாட்டி நிக்காம, சூழலுக்கு எதிரான எது ஒண்ணுக்கும் எதிரா நின்னு காக்கணும். அரசியல் விழிப்புணர்வு வேணும். எங்க எதிர்காலத்த நாங்களே தீர்மானிக்க ஒரு அரசியல் தலைமய உருவாக்கணும்.
உங்களுக்கு அரசியல் கனவு உண்டா?
குளச்சல் சைமன், கொட்டில்பாடு துரைசாமி, தூத்துக்குடி குருஸ் பர்னாந்து, ஜே. எல். பி. ரோச், தியாகி.பெஞ்சமின், பொன்னுசாமி வில்லவராயர், ஜி. ஆர். எட்மண்ட், என். ஜீவரத்தினம், கே. சுப்ரமணியம், எடப்பாடி சின்னாண்டி பக்தர், மூக்கையூர் குழந்தைசாமி… இவங்கெல்லாம் யாருன்னு இன்னக்கி பொதுச் சமூகத்துல யாருக்காச்சும் தெரியுமா? கடலோடிகளுக்காக உசுரக் கொடுத்து ஒழைச்ச மகராசன்வ. பேருக்காக இல்ல; உணர்வால ஒழைச்சவங்க. நானும் அப்பிடித்தாம் ஒழைக்கணுமின்னு நெனைக்கிறம். அது அரசியல் வழியாத்தாம் ஆவும்னா நா ஒதுங்கி ஓட மாட்டம்!
ஆகஸ்ட், 2014, ‘தி இந்து’
"இந்துன்னு ஒரு மதம் இருக்குறதாவே நான் நெனைக்கல. இது ஒரு வாழ்க்க மொற, கலாச்சாரம். இந்துன்னா, எல்லாத்தயும் ஏத்துக்குற அதி பக்குவம். இதுதாம் நான் பாக்குற இந்து. அதைத் தாண்டி மதம், அதுல உள்ள சாதிய அடுக்கு இது எதயும் நான் ஏத்துக்கல." ஜோ டி குரூஸ்.
பதிலளிநீக்குஅனேக நமஸ்காரம் ஜோ டி க்ரூஸ் சார்.....
அனேக நமஸ்காரம் ஜோ டி க்ரூஸ் சார்...............
இவர் சொல்வதில் ஒரு முக்கியமான தவறு உள்ளது. கிறிஸ்தவம் வந்தபிறகுதான் இந்த மக்களுக்கு தீண்டாமைல இருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தது. அப்புறம் பெரியாருக்கப்புறம் கொஞ்சம் சுயமரியாதையா எழுந்து நின்ற சமூகம்தான் இது. பின்பு மண்டைக்காடு கலவரத்திலிருந்துதான் பரவருக்கும் முக்குவருக்கும் ஒற்றுமை துளிர்விட ஆரம்பித்து இன்று பெண் கொடுத்து பெண் எடுத்தல் எல்லாம் நடந்து கொண்டுதானிருக்கிறது
பதிலளிநீக்கு