எது நவயுக புரட்சி - அரசியல் பழகு!வெயில் கொளுத்தும் நண்பகல் வேளை. ஒரு இளைஞர் சந்திக்க வந்திருக்கிறார் என்று தகவல் வருகிறது. அலுவலக வரவேற்பறையில் அமரவைக்கச் சொல்லிவிட்டு, கீழே சென்று பார்க்கிறேன். ஒடிந்துவிடக் கூடிய தேகம், கருத்துப்போன முகம், குடம் நீரைக் கவிழ்த்ததுபோல வடியும் வியர்வை.. கையில் நான்கு புத்தகங்களுடன் உட்கார்ந்திருந்தார் அந்த இளைஞர். எல்லாம் ஒரு இயக்கத்தால் பதிப்பிக்கப்பட்டவை. “நீங்கள் இந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டு இதுபற்றி எழுத வேண்டும்” என்கிறார். புத்தகங்களைப் புரட்டினால், ஒரே புரட்சி புரட்சியாக உதிர்ந்து கொட்டுகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்று அந்த இளைஞரின் சொந்த ஊர். சென்னைக்குப் படிக்க வந்தவரை, புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் பேச்சு ஈர்த்திருக்கிறது. முதலில் விடுமுறை நாட்களில் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். இப்போது இயக்கத்தின் பகுதிநேர ஊழியர். அன்றைக்குக் கல்லூரி வேளை நாள். “இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்களே, கல்லூரிக்கு இன்று போகவில்லையா?” என்று கேட்டேன். பல நாட்கள் இயக்கச் செயல்பாடுகள் அவருடைய கல்லூரி நாட்களை எடுத்துக்கொண்டிருப்பதை அவருடைய பதில்கள் உணர்த்தின. கல்லூரி மாணவர் எனும் அடையாளத்தோடு வெவ்வேறு கல்லூரிகளில் ஆள் சேர்க்கும் வேலைக்கு இயக்கம் அவரை இப்போது பயன்படுத்திக்கொண்டிருப்பதையும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

நிறையக் கோபம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. “இந்த நாடு பெருமுதலாளிகளின் நாடு. இந்து பெரும்பான்மைவாதத்தின் நாடு. ஆதிக்கச் சாதிகளின் நாடு. எந்தக் கட்சி இங்கே ஆட்சிக்கு வந்தாலும் அவை பார்ப்பனிய - பனியா, ஏகாதிபத்திய, தரகு முதலாளிய அரசாங்கங்களையே அமைக்கின்றன” என்று வரிசையாகக் குற்றஞ்சாட்டினார். “இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகம். புரட்சிதான் ஒரே தீர்வு” என்றார். புரட்சி என்று அவர் குறிப்பிட்டது, ஆயுதக் கிளர்ச்சியை. அப்புறம் நாங்கள் டீ சாப்பிடச் சென்றோம். அவர் கொடுத்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு, “தயவுசெய்து இந்தப் புரட்சியில் ஈடுபடும் முன், படிப்பை நீங்கள் முழுமையாக முடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.

சென்னை வந்ததிலிருந்து இப்படியான இளைஞர்களை அனேகமாக மாதத்துக்கு ஒருவரையாவது சந்திக்கிறேன். பெரும்பாலும் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்ட, கிராமப்புறப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள். இளைஞர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களிலும் இப்படியான மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. ஒருபுறம் அரசியல் உணர்வே இல்லாத உள்ளீடற்ற மாணவர்களை நம் கல்வி நிலையங்கள் உருவாக்குகின்றன என்றால், மறுபுறம் ஆழமான ஆர்வம் கொண்ட இப்படியான மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான இடமளிக்காமல் கல்வி நிலையங்கள் வெளியே தள்ளுகின்றன. இதற்கெனவே காத்திருக்கும் கசப்பு சக்திகள் அவர்களை வாரிச் சுருட்டிக்கொள்கின்றன.

நம் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு, உலுத்துப்போன வார்த்தை புரட்சியாகத்தான் இருக்கும். ஒரு ஜனநாயக யுகத்தில், ஆயுதவழிக் கிளர்ச்சியை அடிமனதில் வைத்துக்கொண்டு, புரட்சி எனும் வார்த்தையைப் பயன் படுத்துபவர்களை எப்படிக் குறிப்பது? இன்னும் பழமைவாத மனநிலையிலிருந்து விடுபடாதவர்களாலேயே இப்படிப் பேச முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதக் கிளர்ச்சியைத் தன் அந்தரங்கக் கனவாகக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம், தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தனக்குக் கீழே இருப்பவர்களையும் ஏமாற்றிக்கொள்ளப் பழக்குவதாகவே இருக்க முடியும்.


ஒருகாலத்தில், இந்த உலகின் பெரும் பகுதி மன்னர்கள் கையில் இருந்தது. அவர்களுடைய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. மக்களுக்கு அதிகாரத்தோடு பேச எந்த வழியும் இல்லை. தங்கள் மீது திணிக்கப்படும் எதேச்சாதிகாரத்தையும் அநீதிகளையும் எதிர்த்துப் போரிட அந்நாட்களில் வேறு வழிகள் ஏதும் இல்லை. ஆயுதபாணி எதேச்சாதிகாரத்திடம் பேச ஆயுதபாணி மொழியையே மக்கள் இயக்கங்களும் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி இப்படி நாமறிந்த எல்லா கிளர்ச்சிகளும் ஆயுதவழிப் போராட்டங்களாக நடக்க அதுவே காரணமாக இருந்தது. அன்றைக்கு அதற்கான நியாயமும் இருந்தது. இந்த ஜனநாயக யுகத்தில் அரசியல்வழி அறப்போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளுமே மிகப் பெரிய ஆயுதங்கள். சண்டை அல்ல; சமத்துவத்துக்கான உரையாடலே மிகப் பெரிய சவால்.

இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு, 2001 நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல். கடந்த நூற்றாண்டின் இறுதியில் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துப்போன ஆயுதக் கிளர்ச்சி என்னும் போராட்ட வடிவம், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் பேரழிவைச் சந்தித்தது. இன்றைய உலகில், ஆயுதக் கிளர்ச்சி எதிர்கொள்ளும் மிகப் பெரிய எதிரி உலகமயமாக்கப் புவியரசியல். 2001-க்குப் பிறகு, இந்த உலகில் தனித்த ஒரு நாடு என்று ஒன்று எதுவுமே கிடையாது. எல்லா அரசாங்கங்களும் பொருளாதார, ராணுவ, ராஜ்ஜிய வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டவை. உலகின் ஏதோ ஒரு சின்ன தீவில் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு குழு ஆயுதத்தைத் தூக்கினால், அது அந்த அரசாங்கத்தை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த அமைப்பையும் எதிரியாக்கிக்கொள்ளத் தயாராகிவிட்டது என்பதே பொருள். இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நம் கண் முன்னே நடந்த விடுதலைப் புலிகளின் அழிவும், தமிழ் இனப் படுகொலையும்!

பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை விலையாகக் கொடுத்து, எல்லாப் பெரிய எதிரிகளையும் கடந்து ஒரு ஆயுதபாணி இயக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், இறுதியில் அது நிறுவும் ஆட்சி எப்படிப்பட்டதாக அமைகிறது? எந்த ஜனங்களின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அதே ஜனங்களையும் ஜனநாயகத்தையும் கடைசியில் காலில் போட்டு நசுக்குவதே இதுவரை நாம் கண்ட வரலாறு.

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போரில், “அங்கே பாருங்கள், இங்கே பாருங்கள்” என்றெல்லாம் இன்றும் உதாரணம் காட்டுபவர்கள் அடிப்படையில் இன்னமும் இந்தியாவில் நிகழ்ந்த பெரும் புரட்சியை உள்வாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். உண்மையில், புதிய நூற்றாண்டுக்கான ஜனநாயகப் புரட்சியை உலகுக்கே அறிமுகப்படுத்தியது இந்த மண். உலகத்தின் பெரும் பகுதியைத் தன் வசம் வைத்திருந்த ஒரு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, உலகின் மிக வலிய ராணுவத்தை வைத்திருந்த ஒரு பேரரசை எதிர்த்து, சாதிய - நிலவுடைமை ஆதிக்கக் கட்டமைப்பில் குறைந்தது 2,500 வருடங்கள் உழன்ற ஒரு அடிமைக் கூட்டம் - அவர்களில் பெரும்பான்மையோர் ஏழைகள், எழுத்தறிவற்றவர்கள், விவசாயிகள் - நடத்திய அகிம்சை வழியிலான இந்தியச் சுதந்திரப் போராட்டமே உண்மையான ஜனநாயகப் புரட்சி. அது காந்தி இந்த உலகுக்குக் கொடுத்த பெருங்கொடை!

மே 2016, ‘தி இந்து’

11 கருத்துகள்:

 1. நல்ல கட்டுரை. இந்திய சுதந்திர போராட்டம் ஒரு மிக சிறந்த ஜனநாயக புரட்சியாக கொண்டாலும் அதே அடிப்படையில் மீண்டும் ஒரு புரட்சியை நடத்துவதற்கு வலிமையான ஒரு கட்டுப்பாடான புரட்சிகர அமைப்புதான் தேவைப்படும். மதவாதம், இனவாதம், ஜாதிய ஆதிக்கம் போன்றவைகளால் பிளவு பட்டிருக்கும் இந்நாட்டில் உலகமயமாதல் மற்றும் தனியார்மயமாதல் ஆகியவை சமுதாயத்தை மேலும் துண்டு துண்டாக பிரிக்கவே முயற்சிக்கிறது. மக்களை ஒன்று திரட்டி போராட இப்போது உள்ள எந்த கட்சிகளாலும் முடியாது. நமது ஜனநாயக சட்டங்களை எதிர்க்காமல் அதை அவ்வாறே ஏற்றுக்கொண்டு புரட்சி என்பது சாத்தியமானது அல்லவே. இப்போது உள்ள போலி ஜனநாயக கூறுகளை எதிர்த்து மக்களை ஒன்று சேர்க்க ஒரு புரட்சிகர அமைப்பு தேவைப்படுகிறது.

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் கூறுவது மீண்டும் மிதவாதமா அல்லது தீவிரவாதமா என்ற பட்டிமன்றத்திற்கு என்னை ஆழ்த்துகிறது. காந்திய, நேதாஜிய என்றால் அது காலத்தை பொருத்தது அல்ல என்றே எனக்கு படுகிறது. எனக்கு தெரிந்து 2012இல் நமது தலைநகர் டெல்ஹியில் நடைபெற்ற இரண்டு விஷயங்கள் ஒன்று அண்ணா கசாரே நடத்திய உழல் ஒழிப்பு மற்றொன்று நிர்பய போராட்டம் எது எப்படி நடந்து என்பதும், எதற்கு ஒரு மிக விரைவான தீர்வு கிடைத்தது என்பது நாடறிந்த விஷயம். புரட்சியை வேண்டாம் என்று ஒதுக்கும் சமுகம் துருப்பிடிக்க தொடங்கும். புரட்சி மட்டுமே முடிவும் அல்ல. ஆடுற மாட்ட ஆடித்தான் கரக்கனுமுன்னு ஊர் பக்கம் ஒரு பழமொழி உண்டு.

  பதிலளிநீக்கு
 3. இந்த கானொளியில் கோயமுத்தூரில் எட்டாவது படிக்கும் மாணவர்கள் காந்தி சத்தியாக்ரஹம் மூலம் பெற்றுத் தந்த சுதந்திரத்தை ஜனாக்ரகாம் (http://www.janaagraha.org) மூலம் இயக்குவிக்கிறார்கள் என்பதை காணுங்கள்.
  https://www.youtube.com/watch?v=JTUOCR__FK4

  இதை நமது சமஸ் போன்ற நாட்டுப்பற்று மிக்க எழுத்தாளர்கள் கொதித்துப் போய் இருக்கும் இளைஞர்கள் கையில் சென்று சேர்க்கலாமே? தங்கள் முயற்ச்சிகள் மூலம் ஜனநாயகம் தங்கள் வார்டு அளவில் இயங்குவது கண்டு மகிழ்வார்களே?

  பதிலளிநீக்கு
 4. நன்று.
  காந்தியைத்தவிர்த்துவிட்டு அரசியல் பழகுவதென்பது சாத்தியமில்லாத ஒன்று!

  பதிலளிநீக்கு
 5. புரட்சி என்ற சொல்லுக்கான பொருள் பல பரிமாணங்களைப் பெற்று தற்போது எதுவுமின்றி ஆகிவிட்டது என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
 6. இது மிகப் பெரிய ஏமாற்றுக்கட்டுரை.சமஸ் நீங்கள், சமூக அவலங்களை மிக அழகாக சொல்பவர்.தீர்வு என்று வரும்போது காந்தியம்,தேசப்பற்று,இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு, என்று 70 ஆண்டு உளுத்துப் போன (ஆம் உங்கள் வார்த்தயில் இதுவும் புரட்சி போன்று உளுத்துப் போன வார்த்தை வார்த்தை தான்) ஆளும் வர்க்க சித்தாந்தத்தை தூக்கிக் கொன்டு வருகிறீர்கள்.மார்க்ஸ் பிறந்த நாளில் அவரை பின்பற்றுபவர்களின் சில அறியாமையை பயன்படுத்தி,அம்மேதையை இழிவு படுத்தி அத்ில்ஒரு அற்ப மகிழ்ச்சி வேறு.

  பதிலளிநீக்கு
 7. அந்த புரட்சி புத்தகங்ளின் பெயர்களை பகிர்ந்தால் இங்குள்ள அரசியல் அறிவுள்ள/அறிவற்ற எனது நண்பர்களுக்கு பகிர உதவும்.
  இந்த சமூகத்தை புரிந்து கொள்ள உதவும் என நம்பகிறேன்.

  //“நீங்கள் இந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டு இதுபற்றி எழுத வேண்டும்” என்கிறார். புத்தகங்களைப் புரட்டினால், ஒரே புரட்சி புரட்சியாக உதிர்ந்து கொட்டுகின்றன.

  பதிலளிநீக்கு
 8. எது நவயுகபுரட்சி என்ற இந்துதமிழ் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் கட்டுரையாளர் சமஸூக்கு புரட்சியாளர்களின் மறுமொழி்
  சமஸ் அவர்களே!
  விதையை உடைத்துக் கொண்டு வரும் புதுத்தளிரின் பிரவேசம் வன்முறையோ? அறுவைச் சிகிச்சை கத்தியின் முனையில் குழந்தையின் பிரசவம் தீவிரவாதமோ? களையை வேரோடு பிடுங்கும் அரிவாள் நெற்பயிருக்கு தோழனா? கசப்புச்சக்தியா? விஷச்செடியின் கிளையோடு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விவசாயமா? புற்றுநோய் கட்டிக்கு மருத்துவம் களிம்பு மேற்பூச்சா? அறுவை சிகி்ச்சையா? அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மக்களுக்கு கசப்பு சக்திகளாக என்றுமே தெரிந்ததில்லை. முற்றிய நோய் குணமாக வலி தவிர்க்க முடியாது என்று அறிந்தவர்களே மக்கள்! மருத்துவர்கள் மக்களுக்கு என்றுமே இனியவர்களே! (கார்ப்பரேட் மருத்துவர்கள் அல்ல.) ஒருவேளை மாயமந்திரம் ஓதி நோயை குணப்படுத்துவேன் என்ற ஏமாற்று மந்திரவாதிகளுக்கோ அல்லது போலி லேகியவாதிகளுக்கோ மருத்துவர்கள் கசப்பு சக்திகளாக தோன்றலாம்.
  அமேரிக்காவின் தலைமையில் ஈராக் தொடங்கி சிரியா வரை மத்திய ஆசியா மற்றும் வட அமெரிக்கா, கிழக்காசிய நாடுகளிலும் மற்றும் மூன்றாம் உலக நாடுகளிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்காக எண்ணெய் மற்றும் மூலவளங்களுக்காகவும் போர் செய்தும் பொம்மை அரசுகளை நிறுவியும் நாடுகளை சுரண்டி எண்ணற்ற மக்களை கொன்றும் , மக்களை உடமை உரிமை இழந்து நாடற்றவர்களாக்கி ஐரோப்பிய கடல்களில் அகதிகளாக திரிய வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சில பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டு ஏகாதிபத்திய அமைப்பிற்காக உலக மக்கள் மீது தொடுக்கப்படும் அதி நவீன ஆயுதங்களுடனான யுத்தத்தில், அதற்கெதிராக நடக்கும் தேச விடுதலை யுத்தங்களில் மக்கள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று கூறுகிறீர்களா? வீதிகளில் வீசப்பட்ட சொந்த தேசத்து மக்கள் இரத்த ஆறுகளில் நனைந்துக் கொண்டே சமாதான பேச்சு வார்த்தை நடத்த ஆளும் வர்க்க தரப்பில் நின்று வியாக்கியானம் செய்கிறீரே! .... இந்த சுரண்டல் முதலாளித்துவ உற்பத்தி முறையும் அரசமைப்பு முறையும் ஜனநாயக யுகம் என்று கூறும் உங்களைப் பார்த்து துருக்கி கடற்கரையில் வீசப்பட்ட அய்லானின் சடலம் வெட்கித் தலைகுனிகிறது.
  ஒரு நாட்டில் ஆயுதமேந்திய குழு ஒட்டுமொத்த அமைப்பையும் எதிரியாக்கிக் கொள்ளும் என மிரட்டுகிறீர்கள்! நீங்கள் சொல்லும் ஒட்டுமொத்த அமைப்பு ஒரு ஏகாதிபத்திய அமைப்பு என்று அவர்களால் வீதியில் வீசப்பட்ட பெரும்பான்மை மக்கள் சமூகம் அறிந்தே வைத்துள்ளது. இறப்பை கொண்டு அவர்களை அச்சுறுத்தவே வேண்டாம், ஏனேன்றால் அவர்கள் பல்வேறு வகையில் சுரண்டலால் வாழ்வை இழந்த அனாதைகளாய் சொந்த நிலங்களிலே கொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் தோல்வியும் கூட வெறும் ஏகாதிபத்திய அமைப்பின் வெற்றி அல்ல, அவர்கள் எதிரிகள் பற்றியும், ஏகாதிபத்தியம் பற்றிய எச்சரிக்கையில் செய்த தவறினாலும் ஒடுக்கப்பட்ட தேசங்களின் மக்கள் இயக்கங்களை நண்பர்களாக அடித்தளத்தை உருவாக்காததாலும், எதிரியை நண்பன் என்ற மதிப்பீட்டால் ஏற்பட்ட தோல்வி. வியட்நாமில் சாதாரண கிராம விவசாயிகளின் முன்பு நவீன ஆயுதங்களுடன் அமேரிக்கா படுதோல்வி அடைந்து ஓட்டமெடுத்த வரலாற்றை மறந்து விட்டீரா? முதலாளித்துவ பொருளுற்பத்தி படும் தோல்வி அடைந்து வாழ முடியாமல் சுரண்டலில் மீள நினைக்கிறது, அதனால் போரை மேற்கொள்ளக்கூட நிதிப்பற்றாக்குறையில் உள்ளது, அமேரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட சமூகநலத்திட்டங்களுக்கு செலவு செய்ய நிதியில்லாமல் இராணுவத்திற்கு செலவிடுவதற்காக மக்களின் கடும் எதிர்ப்பலைகளில் தத்தளிக்கிறது. அப்படியாவது போர் மூலமும் சுரண்டல் மூலமும் மீள முயன்று தோல்வியை சந்தித்துக் கொண்டே இருக்கிறது ஏகாதிபத்திய அமைப்பு. அழிக்கப்பட்ட தேசங்கள், வளங்கள், வாங்கும் சக்தியற்ற மக்கள் கூட்டம் ஸ்தம்பித்து விட்ட இந்த சுரண்டல் பொருளுற்பத்தி முறை மரணத்தின் அந்திம காலத்தில் உள்ளது. தேவை சுரண்டலை நிறுத்தும் சுதேசிய பொருளுற்பத்தி முறைகள், சுதந்திர அரசுகள். ஆதிகால சமூகத்திலிருந்தே மேம்படைந்த ஆயுதமேந்திய இனக்குழுக்களே வெற்றியடைந்தன. ஆதலால் நவீன அணுஆயுதங்களோடு உள்ள பகைவனுக்கு மக்கள் தங்களுக்கான ஆயுதப்படையை உருவாக்குவது ஏகாதிபத்தியம் மக்கள் மீது திணித்த தேவை.

  பதிலளிநீக்கு
 9. “கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு , உலுத்துப்போன வார்த்தை புரட்சி” என்கிறீர். உலுத்துப்போன வார்த்தையா? ஆளும் வர்க்கத்தை உலுக்கும் வார்த்தையா? உலுக்காமலா இன்றும் ஜனநாயக போராட்டங்களுக்காகவே, புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் நிரப்பப்பட்டு உள்ளனர்? போலி மோதலில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.....உலுத்துப்போன “புரட்சி” வார்த்தை ஏன் இன்றும் ஆளும்வர்க்க ஊடகங்களில், பத்திரிக்கையில் (“எடிட்”) வெட்டப்படுகிறது? புரட்சிகர இயக்கங்களின் துண்டுதாள்கள் கூட பறிமுதல் செய்யப்பட்டு மறைக்கப்படுகிறது? புரட்சிகர இயக்கங்களின் பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்படுகிறது, ஊடகங்களால் மறைக்கப்படுகிறது? ஆளும்வர்க்கம் “புரட்சி” என்ற கருத்தாக்கத்தை மண்ணில் மூடி பார்க்கிறது......“கங்குகள்” எரிமலைகளாக வெடிக்கும் என்று தெரியாமல்.....இன்றைய புரட்சிகர தத்துவங்களின் அமைதி ஏகாதிபத்திய கலைப்புவாத அடையாள அரசியலின் தற்காலிக வெற்றியாக இருக்கலாம். ஆனால் “புரட்சி” வார்த்தையை உலுத்துப்போக வைக்க உலகம் முழுவதும் தினம்தினம் படையெடுக்கும் எத்தனை எத்தனை லட்சக்கணக்கான தொண்டுநிறுவன, ஆளும் வர்க்க ஏவலாளர்கள்......எண்ணிக்கையே அதன் வலிமையை உணர்த்திவிடும். ஆனால் உலகின் அழுகல் உற்பத்திமுறையை வேரோடு
  வெட்டாமல் வளர்ச்சி அல்ல என்ற உண்மையின் முகமே புரட்சி. அழுகல் துர்நாற்றத்திற்கு வாசனைதிரவியம் அடிக்கும் எத்தர்களை மக்கள் அப்புறப்படுத்திவிட்டு துப்புறவு வேலையில் இறங்கும் நாள் வெகுதொலைவு இல்லை.
  அகிம்சை காந்திய புரட்சியே தீர்வு என்று சொல்லும் நீங்கள் காந்தியபோராட்டத்தின் வரலாற்று உண்மையை மறைத்தால் அது யாருக்கான எழுத்துப்பணி? சுபாஷ்சந்திரபோஸின் இந்திய இராணுவப்படையினரின் வீரத்தால் கவரப்பட்ட கப்பல்படை மாலுமிகள், ஐஎன்ஏ வீரர்கள் பிரிட்டீஷாரால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிப்ரவரி 1946ல் மும்பையில் ராயல் கப்பற்படையில் கப்பல்களை பறிமுதல் செய்து எதிர்த்தனர். அவர்களை தாக்க உத்தரவிடப்பட்ட பிரிட்டீஷ்படையில் உள்ள இந்தியர்கள், அதை மறுத்து பிரிட்டீஷாரை நோக்கி தாக்கத்தொடங்கினர். இக்கலகம் விமானப்படை ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என்ற பெரும் மக்கள் எழுச்சியாக மாறி பிரிட்டீஷ் அரசு ஸ்தம்பிக்க வைக்கப்பட்டது. இக்கட்டில் இருந்த பிரிட்டீசுக்கு உதவிக்கரம் கொடுத்தவர்கள் யார் தெரியுமா? காங்கிரசின் தன்னார்வ தொண்டர்கள். இந்த சேவைக்காக கொடுக்கப்பட்ட செப்டம்பர் 1946 இடைக்கால அரசில் ஐஎன்ஏ வீரர்கள், கப்பல்படை போராளிகள், கம்யூனிஸ்டுகள், விடுதலைப்போராளிகள் அனைவரையும் சிறைப்படுத்தி தங்கள் விசுவாசத்தை காட்டினர். நம்பிக்கை பெற்ற பிரிட்டீஷ் அரசு காங்கிரசிடன் ஆட்சியை ஒப்படைத்த 1947 ஆகஸ்ட் ஆட்சி மாற்றத்தைதான் சுதந்திரம் என்கிறீர்களா? பிரிட்டீஷ் கொடி இறங்காமல் இந்தியக்கொடி ஏறியதைத்தான் சுதந்திரம் என்கிறீரா? பிரிட்டீஷின் அன்னிய மூலதனமும், பிரிடடீஷ் கம்பெனிகளின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படாமல் பாதுகாத்த ஆட்சி மாற்றத்தைத்தான் ஜனநாயகப்புரட்சி என்கிறீரா? இப்படிப்பட்ட காந்தியின் ஜனநாயகப்புரட்சி செய்து நீங்கள் ஆளும்வர்க்கத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள், ஆனால் புவிக்கோளத்தை முதலாளித்துவ புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் மருத்துவத்தையும் மருத்துவர்களையும் மக்கள் தங்களுக்காக உருவாக்கிக் கொள்வார்கள்...........

  பதிலளிநீக்கு
 10. சமஸின் சனநாயக முகமூடி:

  மே 5 2016 அன்று தமிழ் ஹிந்துவில் வெளியான எது நவயுகபுரட்சி எனும் கட்டுரையின் மூலம் தனது முகமூடியை தானே கிழித்துக் கொண்டார் சமஸ். ஏற்கனவே தனது ஆசான் காந்தியை சுட்டுகொன்ற ஆர் எஸ் எஸ் . சாதி ஒழிப்பில் பங்காற்ற வேண்டும் என்று கூறி சமூக அக்கறையை காட்டினார் . சாதி அமைப்பு இந்துமதத்தின் ஆத்மா என நினைத்த மகாத்மாவின் சீடர் சமஸ் சாதி ஒழிப்பு குறித்து கவலைபடுகிறார். அதுவும் சாதியை ஆதாராமாககொண்ட ஆர் எஸ் எஸ் சாதிஒழிப்பில் பங்காற்றவேண்டும் என்கிறார். சமஸ் , காந்தியம் பாதி ஆர் எஸ் எஸ் பாதி என இரண்டும் சேர்ந்த கலவையாக மிளிர்கிறார் .அதை தொடர்ந்து தற்போது இந்த கட்டுரையின் மூலம் தான் ஒரு ஆளும் வர்கக்கத்தின் பாசமிகு நபர் என அம்பலப்பட்டு நிற்கிறார். முதலில் இந்திய நாடு சுதந்திரம் பெற்றுவிட்டதா எனில் இல்லை என்பதே யதார்த்தம்.இதை ஒரு மாபெரும் சனநாயக நாடு என்று பெருமை பொங்க பீற்றுகிறார். இன்னொரு கட்டுரையில் சாதி அவலங்கள் குறித்து அங்கலாய்க்கிறார்.

  இந்தியநாடு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கட்டுபாட்டில் இருந்து , இந்திய தரகு முதலாளிகளுக்கும் மற்றும் அமெரிக்க ஏகபோகத்திற்கு அதிகார மாற்றம் செய்யப்பட்டது என்பது நம்மை போன்ற சனநாயக விரும்பிகளுக்கு தெரியும்.அதாவது காலனி , அரை காலனி ஆனது. அதை தொடர்ந்து பிரெட்டன் வுட்ஸ் அமைப்பு, ஐ நா அமைப்பு மூலம் அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்தின் முக்கிய சந்தையாக இந்தியா மாறியது. கல்வி, மருத்துவம், இராணுவம், அணுசக்தி, விவசாயம் , தொழிற்துறை என அனைத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கம்.மூன்று இலட்சம் விவசாயிகள் தற்கொலையும் , தினமும் 500 குழந்தைகளின் மரணமும் , தொழிலாளர்கள் 16ம் நூற்றாண்டு சுரண்டலுக்கு ஆளாதலும் சமஸின் இந்த சனநாயக் நாட்டில்தான் நடந்துகொண்டு வருகிறது. சாதி ஆணவ படுகொலைகளும் , மத மோதல்களும் மாஹாத்மா வாங்கித்தந்த சுதந்திர நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. நம் நாடு இன்னும் சனநாயகப் புரட்சி கட்டத்தை தாண்டவில்லை என்பதே இதன் பொருள். காந்திகள் என்பது இந்திய தரகு முதலாளித்துவ ( காந்தி வசித்தது பிர்லாவின் குடிசையில்தான் ) பிரதிநிதிகள் என்பது சமசுக்கு தெரியும். ஏனெனில் அவரும் அந்த வர்க்கத்து பிரதிநிதியே.

  பதிலளிநீக்கு
 11. அரை நிலவுடமை உற்பத்தி உறவுகளும் புதிய காலனி ஆதிக்கமும் இந்தியாவை சூறையாடி வருகிறது. ஏகாதிபத்தியங்களுக்குள் போர் இல்லை என்பதாலேயே ஆதிக்கம் -- சுரண்டல் இல்லை என்று ஆகிவிடுமா என்ன ?? காலனி ஆதிக்கத்திற்கு சேவை செய்த காந்தியின் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கிய இந்திய இடதுசாரிகளின் இன்னொரு எதிர்புரட்சிக் குரலாக சமஸ் இருப்பது வியப்பில்லைதான். அரசு என்பது ஒரு வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி என்பது இவர் போன்ற குட்டி முதலாளித்துவ மூளைக்குள் ஏறுவதும் மிக கடினம்தான்.இந்த அரசு என்பது ஆயுதம் தாங்கிய மிக கொடூரமான பாசிச பிசாசாக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த முதலாளித்துவ அரசு எந்திரத்தை அமைதி புறா கொண்டு வீழ்த்தஇயலாது என்பது சமஸின் காந்திய மூளைக்கு எட்டாது. எதிரி நம் தாய் நாட்டை --தாயை சீரழித்தாலும் உண்ணாவிரதம் இருக்க சொல்கிறார் சமஸ்.ஈழத்தில் புலிகள் ஆயுத போராட்டம் நடத்தியதே தோல்விக்கு காரணம் என இந்திய அரசின் மனசாட்சியாக இருக்கிறார் இந்த சமஸ்.அமைதி போராட்டம் நடத்திய புலிகளை ஆயுதம் தூக்க வைத்தது சிங்கள பேரினவாதம் என்பது உலகமே அறியும். அமெரிக்க --ரசிய--சீன --இந்திய ஆளும் வர்க்க கும்பலின் துரோகம் குறித்து மூச்சுகூட விடவில்லை சமஸ்.

  ஆயுத போராட்டம் என்பதும் பயங்கரவாத போராட்டம் என்பதும்வேறு என்ற மிக எளிமையான உண்மை கூட புரியவில்லை இந்த ஆளும் வர்க்கத்து சேவகருக்கு . பலம் பொருந்திய ஆயுதம் தாங்கிய அரசு அதிகாரத்தை , மக்கள் பெருந்திரளின் ஆயுத போராட்டம் இல்லாமல் வீழ்த்த முடியாது என்பது பாமரனுக்கும் தெரியும்.ஆயுத போராட்டம் என்பது காலவாதி ஆகிவிட்டது என்கிறார். இது நவயுக புரட்சி கால காந்திய சகாப்தம் என்று பீற்றுகிறார். அதாவது இந்திய தரகு முதலாளித்துவ--நிலவுடமை கும்பலின் அமெரிக்க விசுவாசத்திற்கு பக்க வாத்தியம் வாசிக்கிறார். பகத்சிங்க் பால் காந்தி வெறுப்பை உமிழிந்தது போல , புரட்சிகர இயக்கங்கள் மீது தனது வெறுப்பை உமிழ்கிறார். அவை கல்லூரிகளில் ஆள் பிடித்து மூளை சலவை செய்கின்றன என்கிறார்.காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உலக போருக்கு இந்திய இளைஞர்களை அழைத்தது எந்த வகை அகிம்சை என்று அவர்தான் விளக்கவேண்டும். இந்திய விடுதலை போராட்டம் அகிம்சை போராட்டம் மட்டும்தான் என நீங்கள் சொல்வது எவ்வளவு பெரிய புரட்டு தெரியுமா சமஸ் ?? இந்திய விடுதலை போராட்டத்தின் சிவப்பு பக்கங்கள் மீது வெள்ளை சாயம் அடிக்க பார்க்கும் சமஸ் அவர்களுக்கு நாம் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கவேண்டும். பகத்சிங் , வவுசி , சிவம் , பாரதி , வாஞ்சி என நிஜ விடுதலை வரலாற்றுக்கு துரோகம் இழிக்கிறது சமஸின் காந்தியம்.உலகமயத்தின் தாராளமய --தனியார்மயத்தின் கோரபிடியில் இந்தியா அடிமை நாடாக சிக்குண்டுகிடக்கும் இந்த நேரத்தில் --ஆயுத புரட்சி மூலம் இந்தியாவை விடுவிக்கவேண்டிய இந்த நேரத்தில் , வெள்ளைக்கொடி ஏந்த சொல்வது படுபிற்போக்கான ஆளும் வர்க்கத்து கருத்தியல். அதுசரி...காந்தியின் சீடராக இருந்தால்தானே நீங்கள் ஹிந்து பத்திரிகையில் ஒரு பிற்போக்கான இந்துவாக வாழ இயலும் ..பகத்சிங்கின் பேரை சொன்னால் இப்படி நடுபக்க கட்டுரையெல்லாம் எழுத முடியாது என்பது எமக்கு புரிகிறது சமஸ். அதற்காக புரட்சியை கொச்சை படுத்தாதீர்கள். ஏனெனில் புரட்சி என்பது சிவப்பு நட்சத்திரம்.அதன் மீது வெறுப்பை உமிழ்ந்தால் அது உங்கள் மீதுதான் வந்து விழும்.அள்ளிக் கொள்ளுங்கள்.கத்தியின்றி இரத்தமின்றி குழந்தை கூட ஜனிக்காது. பிறகெப்படி சமூகம் ஜனிக்கும் ?? எதிர் புரட்சிகர யுத்தத்தை புரட்சிகர யுத்தத்தால் மட்டுமே வீழ்த்த முடியும். நஞ்சை எதிர் நஞ்சே முறிக்கும்.புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யாவிடில் நோயாளி இறந்து போவான்.ஆனால் நீங்கள் களிம்பு பூச சொல்கிறீர்கள்.நீங்கள் வேண்டுமானால் பூசிகொல்லுங்கள். அதை சமூகத்தின் மீது திணிக்காதீர்கள். ஏற்கனவே உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட( நீக்கியதற்கு நன்றி ) --உங்கள் பாஷையில் சொல்வதெனில் படிக்காமல வேலைக்கு செல்லாமல் பிழைக்க தெரியாதவன் --சமூக புரட்சிக்காக சாக விரும்பும் பகத்சிங்கின் மாணவன்.. பகத்சிங் பாரதி

  பதிலளிநீக்கு