அரசியல் பழகு!

மிக அரிதான ஒரு வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. தேர்தல் சமயத்தில் ஊர் ஊராகச் சென்று மாணவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பு. முதலில், தமிழகத்தின் நான்கு முக்கிய நகரங்களில் ‘தி இந்து’வே நேரடியாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது; அடுத்த, எட்டு நிகழ்ச்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தது அந்நகரைச் சுற்றியுள்ள ஐந்தாறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், மருத்துவ மாணவர்கள், பொறியியல் மாணவர்கள், வேளாண் மாணவர்கள், வரலாற்று மாணவர்கள், கலை இலக்கிய மாணவர்கள், நுண்கலை மாணவர்கள், அறிவியல் மாணவர்கள் என்று எல்லாத் தரப்புகளையும் சேர்ந்த கிட்டத்தட்ட 25,000 மாணவர்களுடன் இணைந்து நடத்திய கலந்துரையாடல் இது.


இந்தத் தமிழகத் தேர்தல், வரலாற்றுரீதியாகவும் அகில இந்திய அளவிலும் ஒரு சிறப்பைப் பெறுகிறது. வாக்காளர்களில் நான்கில் ஒருவர் புதிய தலைமுறை. இவர்களுடைய மனவோட்டம் எப்படி இருக்கிறது? இன்றைய அரசியலைப் பற்றி, அரசியல் கட்சிகளைப் பற்றி, அரசியல் தலைவர்களைப் பற்றி இவர்கள் நினைப்பதென்ன? இந்தக் கூட்டங்களில் கிடைத்த பதில்கள் ஆச்சரியமும் அவமானமும் தருபவை.


பெரும்பான்மையான மாணவர்கள் சொன்னது, “இன்றைய அரசியல் ஒரு சாக்கடை. இன்றைய அரசியல்வாதிகள் குப்பைகள். அரசியலுக்கும் யோக்கியர்களுக்கும் சம்பந்தமில்லை.” இன்றைய அரசியல்வாதிகளின் ஆடம்பரம், ஆணவம், படாடோபம் யாவும் அவர்கள் மத்தியில் அருவருப்பை உண்டாக்கியிருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன மாற்று என்று கேட்டால், “இளைஞர்களே மாற்று” என்று ஒட்டுமொத்தக் குரலில் சொல்கிறார்கள். “சரி, உங்களில் எத்தனை பேர் அரசியல் ஈடுபாட்டோடு இருக்கிறீர்கள்?” என்று கேட்டால், கனத்த மௌனம் நிலவுகிறது. கூட்டத்தில், காமராஜர் பெயரை யாராவது உச்சரித்தால், கைத்தட்டல் பறக்கிறது. ஒரு நல்ல முதல்வருக்கான முன்னுதாரணமாக காமராஜரைப் பலரும் குறிப்பிடுகிறார்கள். அதேசமயம், காமரஜரைப் பற்றி மேலோட்டமாகக்கூடத் தகவல்கள் தெரியவில்லை.


அரசியல் மீது ஒரு சமூகத்தின் இளைய தலைமுறையிடம் இத்தனை கசப்பையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியதற்காக அத்தனை அரசியல் கட்சிகளுமே வெட்கித் தலைகுனிய வேண்டும்.  மாணவர்களை நொந்துகொள்ள ஏதுமில்லை. ஒருபுறம், அரசியல் மீதான அவர்களுடைய அவநம்பிக்கைக்கான எல்லா நியாயங்களையும் இன்றைய அரசியல் தலைவர்கள் இடைவிடாது கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் நம்முடைய வீட்டுச் சூழலும், கல்விச் சூழலும் அரசியலைத் தீண்டக்கூடாத பொருளாக அவர்களிடம் நிறுவியிருக்கின்றன. ஒவ்வொரு இளைஞரையும் சுற்றுச்சுவர் இடப்பட்ட தனித்தனி உலகமாக இன்றைய நம் சமூகச் சூழல் மாற்றியிருக்கிறது. முழுக்க சுயநலமும், குடும்ப நலமும் குழைத்துக் கட்டப்பட்ட சுற்றுச்சுவர். அந்தச் சுற்றுச்சுவரின் அடித்தளமே அரசியல் வெறுப்பின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.


கல்யாணப் பத்திரிகை வைக்க வருபவர்களிடம் என் தாத்தா நடத்தும் உரையாடல் ஞாபகத்துக்கு வருகிறது. பெண், மாப்பிள்ளையைப் பற்றி அவர் விசாரிப்பார். “மாப்ள எந்த வம்புதும்புக்கும் போகாதவர். வீடு விட்டா வேலை, வேலை விட்டா வீடுன்னு இருக்கார். பொண்ணு குனிஞ்ச தலை நிமிர மாட்டா” என்பன மாதிரி வார்த்தைகளை எவரேனும் சொன்னார்கள், அவர்கள் தொலைந்தார்கள்! “ஏன்யா, வீட்டுலேர்ந்து வீதியில காலடி எடுத்துவெச்சா, ஊருல நடக்குற ஒவ்வொண்ணும் இந்த வயசுல என்னைக் கொந்தளிக்கவைக்குது. நீ புடிச்சுருக்குற புள்ளைக்கு இருவத்தியஞ்சு வயசாகுது. பள்ளிக்கூடம், காலேஜு எல்லாம் போயி படிச்ச ஒரு புள்ளைய ஊருல நடக்குற எதுவுமே நாளது தேதி வரை உலுக்கலை, ஒரு அநீதியைக் கண்டு அது மனம் பதைபதைக்கல, ஒரு தப்பைத் தட்டிக்கேட்க போராட்டம் பண்ணதில்லைன்னா, அது புள்ளையா, பிண்டமா? மிருகம்கூட அப்பிடி இருக்காதேய்யா! அதை எப்புடிப் பெருமையாச் சொல்லிக்குற?” என்பார்.


இன்றைக்கு நம் வீடுகளிலும் பள்ளிக்கூடங்களிலும் யாரை நல்ல பிள்ளைகள் என்று கொண்டாடுகிறோம் என்பது நமக்குத் தெரியாதது அல்ல. பிழைப்பது ஒன்றையே வாழ்வின் ஒரே இலக்காக்கிவிட்டோம். ஒரு சமூகத்தின் மதிப்பீடுகளும், விழுமியங்களும் எவ்வளவு சீக்கிரம் கீழே சரிந்துவிட்டன!
பதிப்பாளர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணனிடம் சின்ன வயதில் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது அவர் இப்படிக் கேட்டார். “அரசியல் என்பது அடிப்படையில், எனக்கும் சக மனிதருக்கும் இடையேயான உறவு. அதிலிருந்து எப்படி ஒருவர் விலகியிருக்க முடியும்?”


இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, என் கையில் இரு அறிக்கைகள் இருக்கின்றன. ஒன்று, ‘ஆக்ஸ்ஃபோம்’, ‘குளோபல் ரிச்’நிறுவனங்களின் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை. மற்றொன்று, ‘ஜர்னல் ஆஃப் குளோபல் ஆன்காலஜி’ மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஒரு மருத்துவ ஆய்வறிக்கை. முதல் அறிக்கை, “உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் 85 பேரின்
செல்வமும் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஏழைகள் பாதிப் பேரின் செல்வமும் சமம்” என்கிறது. “இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் 111 பேரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 2.02 லட்சம் கோடி” என்கிறது. இரண்டாவது அறிக்கை, “இந்தியாவில் புற்றுநோய்க்கு ஒவ்வொரு நாளும் 50 குழந்தைகள் பலியாகின்றனர். இந்த எண்ணிக்கை 2025 வாக்கில் ஐந்து மடங்காக அதிகரிக்கும்” என்கிறது. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அதிகமான அளவில் இறப்பதற்கு மிக முக்கியமான காரணம் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுவது, ஒரு சராசரி இந்தியக் குடும்பம் தன் ஆண்டு வருமானத்தைவிட, இருபது மடங்கு அதிகமாகச் செலவிட வேண்டியிருப்பதாலேயே பலரால் சிகிச்சைக்குச் செல்ல முடியவில்லை என்பது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கை எந்தப் புள்ளியில் வந்து நிற்கிறது என்பதைச் சுட்டும் இரு செய்திகள் இவை.


இந்த இரு செய்திகளுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை; இந்த இரு செய்திகளுக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை; இந்த இரு செய்திகளாலும் நாம் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பில்லை என்று நம்பும் ஒருவரே அரசியலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சொல்ல முடியும். நம்மால் அப்படிச் சொல்ல முடியுமா?


மே 2016, ‘தி இந்து’

8 கருத்துகள்:

 1. மிகச்சிறந்த முயற்சி. அரசியல் என்பது ஏதோ ஒரு தனி துறை என்பதுபோலல்லாமல் ஒவ்வொருவரும் அதில் பங்கெடுக்க வழிகாட்டுவதாக, செயலூக்கம் அளிப்பதாக இத்தொடர் அமையும் என நம்புகிறேன்.
  வாழ்த்துகள் சமஸ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த நிலை மாற மக்கள் தங்கள் வார்டு/பஞ்சாயத்து அளவிலான ஜனநாயகத்தில் ஈடுபட வேண்டும் இந்த சிறுவர்கள் போல!
   https://www.youtube.com/watch?v=JTUOCR__FK4
   அடிப்படையில் மக்கள் இன்னும் குடியரசு முறையை புரிந்து கொள்ள வில்லை.
   தாங்கள் கட்டிய வரிப் பணத்தை தங்கள் வார்டு அளவில் பஞ்சாயத்து அளவில் எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்று கவனிப்பது இல்லை. அரசியல் வாதிகள் அந்த பணத்தை அபகரித்துக் கொண்டு பெரும் பணக்காரர்கள் ஆகிறார்கள் நாம் நடுத்தெருவில் இறக்கிறோம்.

   நீக்கு
 2. வாழ்த்துகள் அய்யா! பெரியாரிய, பொதுவுடைமை, நடப்பு அரசியல் தேவைகள் தங்கள் கட்டுரைகளில் பிரதிபலிக்கின்றன. நாட்டின் தேவை, இளைஞர்களின் மனவோட்டங்களைச் சமூகப் போக்கைத் தோலுரிக்கும் உங்கள் எழுத்து வளரட்டும்! தொடரட்டும்! மாற்றத்திற்கான விதைகளைத் தூவட்டும்! விளையட்டும் புதுமலர்ச்சி!

  பதிலளிநீக்கு
 3. “ஏன்யா, வீட்டுலேர்ந்து வீதியில காலடி எடுத்துவெச்சா, ஊருல நடக்குற ஒவ்வொண்ணும் இந்த வயசுல என்னைக் கொந்தளிக்கவைக்குது. நீ புடிச்சுருக்குற புள்ளைக்கு இருவத்தியஞ்சு வயசாகுது. பள்ளிக்கூடம், காலேஜு எல்லாம் போயி படிச்ச ஒரு புள்ளைய ஊருல நடக்குற எதுவுமே நாளது தேதி வரை உலுக்கலை, ஒரு அநீதியைக் கண்டு அது மனம் பதைபதைக்கல, ஒரு தப்பைத் தட்டிக்கேட்க போராட்டம் பண்ணதில்லைன்னா, அது புள்ளையா, பிண்டமா? மிருகம்கூட அப்பிடி இருக்காதேய்யா! அதை எப்புடிப் பெருமையாச் சொல்லிக்குற?” Arumai.it is true.

  பதிலளிநீக்கு
 4. இந்த நிலை மாற மக்கள் தங்கள் வார்டு/பஞ்சாயத்து அளவிலான ஜனநாயகத்தில் ஈடுபட வேண்டும் இந்த சிறுவர்கள் போல!
  https://www.youtube.com/watch?v=JTUOCR__FK4
  அடிப்படையில் மக்கள் இன்னும் குடியரசு முறையை புரிந்து கொள்ள வில்லை.
  தாங்கள் கட்டிய வரிப் பணத்தை தங்கள் வார்டு அளவில் பஞ்சாயத்து அளவில் எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்று கவனிப்பது இல்லை. அரசியல் வாதிகள் அந்த பணத்தை அபகரித்துக் கொண்டு பெரும் பணக்காரர்கள் ஆகிறார்கள் நாம் நடுத்தெருவில் இறக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. இன்றைய இளைஞர்கள் அரசியல் களத்தில் தடம் பதிக்க யோசிக்கின்றார்கள் என்பது உண்மையே. இருந்தாலும் நாட்டு நடப்பினை அவர்கள் துல்லியமாக மதிப்பிடும் அளவு உள்ளார்கள் என்பதை மறுக்கமுடியாது.

  பதிலளிநீக்கு