பொங்கல் சமயத்தில் - சட்டப்பேரவை கூடாத சமயங்களில்கூட - ஊரைவிட்டு விலகி, சென்னையில் டேரா போடும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கதையை நண்பர் உறங்காப்புலி எனக்குச் சொன்னார். சுவாரசியமான, பொதுவெளியில் அதிகம் பேசப்படாத கதை அது. “ஊருல இருந்தா நன்கொடை கேட்டு வார கூட்டத்துக்கு அஞ்சியே இங்கெ ஓடியாந்துருவாங்க.”
“அரசியல்வாதிகளுக்கு நன்கொடை என்ன அவ்வளவு பெரிய பிரச்சினையா?”
உறங்காப்புலி சொன்ன கணக்கு மலைக்க வைக்கக் கூடியது. “ரொம்ப யோக்கியமான ஆளு ஒருத்தன் தேர்தல்ல போட்டி போட்டு, நேர்மையா தேர்தல் செலவு செஞ்சாலே குறைஞ்சது ஒரு கோடி ரூவா அழிக்கணும் தம்பி. ஒரு தொகுதிக்கு 250 பூத்து. ஒரு பூத்துக்குக் குறைஞ்சது 10 பேராவது ஒரு மாசம் வேலை பாத்தாத்தாம் அவென் நிக்குறதே மக்களுக்குத் தெரியும். இந்த 2,500 பேருக்கும் மூணு வேளை சோறு, டீக்காபி, பொட்டணமாவது வாங்கிக் குடுக்கணுமில்லா? இவங்க பூராப் பக்கமும் சுத்துறதுக்கு வண்டி வாடகை கொடுக்கணுமில்லா? சின்னதா நோட்டீஸ், சுவர் விளம்பரமாச்சும் செய்யணுமில்லா? இதுக்கே கோடி ஆயிருமே! இது நீங்க கனவு கண்டுக்கிட்டுருக்குற பரிசுத்தமான வேட்பாளரோட கணக்கு.
தம்பி, பூராம் கட்சியிலேயும் வட்டம், கிளை, நகரம், ஒன்றியம்னு ஆயிரத்தெட்டு பொறுப்புல நாளெல்லாம் பொது வேலையில திரியுதாம்மே, இவங்களுக்கெல்லாம் எந்த அரசாங்கம் சம்பளம் கொடுக்குது? இவய்ங்க இப்பம்தானே நாலு காசு பார்க்க முடியும்? நெலவரம் என்னா தெரியுமா? தொகுதிக்கு அஞ்சு கோடிலேர்ந்து பத்து கோடி வரைக்கும் ஓடுது. ஓட்டுக்குக் கொடுக்குற காசு இதுல சேத்தி இல்லை.
ஜெயிச்ச பெறவு வர்ற கணக்கைச் சொல்லட்டுமா? தொகுதிக்குக் கொறைச்சலா 250 கிராமங்க வரும். நம்மூர்ல தெருவுக்கு ஒரு கோயில். அட, ஊருக்கு ஒரு கோயில்னே வைங்க. அஞ்சி வருஷத்துக்குள்ள பாதி கோயில் கும்பாபிஷேகம் வந்துரும். கோயிலுக்குக் கொறைச்சலா பத்தாயிரம். அடுத்து, அத்தனை கிராமத்துலேயும் வருஷா வருஷம் கோயில் கொடை வரும். பொங்கல் கலை விழா, கபடிப் போட்டி, கிரிக்கெட் போட்டின்னு ஊருக்கு மூணு குரூப்பு பயல்வ வருவானுவ. ஆளுக்கு அஞ்சாயிரம். ஊருல சடங்கு, கல்யாணம், காதுகுத்து, கருமாதி எல்லாத்துக்கும் பத்திரிகை வெப்பாங்க. வெறுங்கைய வீசிட்டுப் போவ முடியுமா? இல்ல நூறு ரூவா மொய் எழுதிட்டு வந்துற முடியுமா? ஆளுக்குக் கொறைச்சலா ஆயிரம்.. மொத்தமா, அஞ்சு வருஷத்துக்கு என்னாச்சு? குறைச்சலா அஞ்சு கோடி. இதெல்லாம் ஊழல்ல பங்கில்லையா? அடுத்து, இன்னொரு கணக்குப் போடுங்க. ஒரு எம்எல்ஏ சைக்கிள்லயா சுத்த முடியும்? நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கே நாலு பேரோடு கார்ல வந்தாத்தானே மதிக்கோம்! காருக்கும் கூட வர்ற நாலு பேருக்கும் யாரு ‘பெட்ரோல்’ போடுறது?”
ஒரு இடைவெளி விட்டு உறங்காப்புலி திரும்ப ஆரம்பித்தார். “தம்பி, நான் ஊழலை நியாயப்படுத்தலை. ஒருத்தன் ஊழல் பண்றான்னா, அவனைச் சுத்தி இருக்குற சூழல் எப்படி இருக்குன்னும் நாம பாக்க வேண்டாமா? வாத்யாரு உத்யோகத்துல இருக்குறவன், கூசாமக் கேட்குறான், ‘என்னய்யா.. இன்னும் ஒருத்தனும் காசைக் கண்ணுல காட்ட மாட்டேங்கான்’னு. வெளங்குமா இந்த ஊரு? தம்பி, மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க, நம்ம சேக்காளிக எத்தனை பேரு இன்னைக்கும் வீட்டுல அரசாங்கம் கொடுத்த டிவியையும் மிக்ஸியையும் ஃபேனையும் ஓட்டிக்கிட்ருக்கான்? ஏழைங்களுக்குக் கொடுக்குறதை இப்படிப் போட்டி போட்டு வரிசையில நின்னு வாங்கக் கூச வேணாம்? இதுல கொடுமை என்னான்னா, ‘இந்த அரசியல்வாதிங்க எல்லாருமே ஊழல்பா’ன்னு இவன்தான் முத ஆளா அடிச்சு விடுவான்.”
எனக்கு உறங்காப்புலி பேசப் பேச, ஜெயகாந்தன் அந்த நாட்களில் பேசியது நினைவுக்கு வந்தது. “முட்டாள்களுக்கு மூடன்தான் அரசனாக இருக்க முடியும்” என்று சொன்னார் ஜெயகாந்தன். இதன் பொருட்டு மக்கள் எல்லோருமே மூடர்கள், ஊழல்வாதிகள் என்று சொல்ல இல்லை. ஜனநாயகம் என்பது அடிப்படையில், பெரும்பான்மை தீர்மானிக்கக் கூடியது. ‘நான் ஒருவன் யோக்கியமாக இருக்கிறேனே’ என்று நியாயம் பேச ஏதுமில்லை. நம்மைச் சுற்றியுள்ள பெரும்பான்மை மக்களின் தரம், அவர்களுடைய ரசனை, அவர்களுடைய மதிப்பீடுகள் எப்படி இருக்கின்றனவோ அவையே தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். நாம் மட்டும் மாறிப் பயனில்லை; சுற்றியிருப்பவர்களையும் மாற்ற வேண்டும்.
இந்திய அரசியலில் ஏன் சாதி கோலோச்சுகிறது என்று கேட்டால், நம் வீடுகளிலிருந்து சாதியைத் துரத்த முடியவில்லை என்பதே பதில். வெளியே ஊழல், அநீதிகளுக்கு எதிராகப் பொங்குகிற நாம்தான், நம் சுற்றத்தில் அப்படி ஊழல் அநீதிகளுக்கு எதிராகவும் பொதுக்காரியங்களுக்கு ஓடுபவராகவும் இருப்பவர்களுக்கு, ‘பிழைக்கத் தெரியாதவர்’ பட்டம் சூட்டுகிறோம். நம்மளவில் சின்னதாக ஒரு பொதுப் பிரச்சினையில்கூட முகம் காட்டாமல், காசு சேர்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் நாம்தான், மறுபுறம் காசு ஆசையே இல்லாமல், எல்லாவற்றுக்கும் ஓடிவரும் பிரதிநிதிகள் நமக்கு வேண்டும் என்கிறோம். யோசித்தால், ‘பிழைக்கத் தெரியாதவர்’ எனும் ஒரு சொல்லின் பின்னணியில் இந்தச் சமூகத்தின் எத்தனை நுட்பமான கயமைகள் ஒளிந்திருக்கின்றன?
நம்முடைய சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நாம் நேர்மையாகவே பயன்படுத்தும் ஒரு சமூகம் என்றால், ஏன் அரசு ஆஸ்பத்திரிகளும் பள்ளிக்கூடங்களும் இங்கே இவ்வளவு சீரழிந்திருக்கின்றன? நம்முடைய தொழிலில் நாம் நேர்மையானவர்கள் என்றால், ‘மீட்டருக்கு ஆட்டோ வருமா?’ என்று கேட்டால், ஏன் ஆட்டோக்காரர்கள் இங்கே முறைக்கிறார்கள்? நம்முடைய செயல்பாடுகளில் தர்மம் இருக்கிறது என்றால், வாத்தியார்கள் ஏன் வட்டிக்கடைக்காரர்களாக மாறி நிற்கிறார்கள்? ஏன் நாம் புகை, தூசுக் காற்றைச் சுவாசிக்கிறோம், பூச்சிக்கொல்லி உணவைச் சாப்பிடுகிறோம். நஞ்சான தண்ணீரைக் குடிக்கிறோம்? இவை எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. சுந்தர ராமசாமி சொல்வார், “சீரழிந்த மதிப்பீடுகள் ஒன்றையொன்று ஆரத் தழுவிக்கொள்ளும்” என்று. இன்றைய நம்முடைய அரசியல் சீரழிவு உண்மையில் நம்முடைய ஒட்டுமொத்தச் சமூகச் சீரழிவையும் அல்லவா குறிக்கிறது? அரசியலில் மட்டும் எப்படி உன்னதம் நமக்கு வாய்க்கும்?
எப்படியும் உன்னதத்தை நோக்கியே நாம் நகர வேண்டும். அதற்கான பாதை தூய்மைவாதம் அல்ல; தூய்மைவாதத்தின் பெயரால் எல்லாவற்றையும் நிராகரிப்பது அல்ல. இவர்களோடுதான் நாம் வாழ வேண்டும். சாக்கடையைச் சுத்தம்செய்ய நினைப்பவருக்குத்தான் எல்லோரையும்விடக் கூடுதலாக சகிப்புத்தன்மை வேண்டியிருக்கிறது. சக மனிதர்களுடன் நேசத்துடன் பணியாற்ற கி.ராஜநாராயணனின் இந்த வார்த்தைகளை வேதமாகவே கொள்ளலாம், “மனுஷன் இருக்குற இடமெல்லாம் மனுஷ நாத்தமும் இருக்கும்!”
(பழகுவோம்..)
மே, 2016, ‘தி இந்து’
அருமையான கட்டுரை சமஸ்.
பதிலளிநீக்கு"கோயில் கும்பாபிஷேகம், காது குத்து கல்யாணத்துக்கு மொய் செய்யாட்டி போகுது.பள்ளிக்கூடத்திற்கு கட்டிடம்/பிற வசதிகள், ஊருக்கு தண்ணி,சாக்கடை, நூலக வசதி செஞ்சு குடுங்க" னு கேட்கற பழக்கம் வளர்ந்தா பரவாயில்லை.
தொகுதி மேம்பாட்டு நிதிக்கு கணக்கு கேட்கவாச்சும் பழகணும்.
ஆனால், வேறொருவரைக் குறை சொல்ல முடியாத படி
ஒவ்வொருவரின் கரங்களிலும்
குற்றத்தின் ரேகை படிந்திருப்பதுதான்
இன்றைய தேதிக்கு நம் சமூகத்தின்
ஆகப்பெரும் அவலமாய் திகழ்கிறது!.
ஆள்பவர்களின்
சாதனையும் பலமும் அதுவே!
கோவையின் ஒரு பள்ளிக் குழந்தைகள் சென்ற வருடம் இந்த அடிப்படையில் தங்கள் வார்டு அளவிலான அரசாங்கத்தை பணி செய்விக்கிறார்கள் .
நீக்குமாணவர்கள் மேற்கொண்ட திட்டப் பணியின் விளைவு, VKK மேனன் சாலை சீர் செய்யப் பட்டது.
https://www.youtube.com/watch?v=JTUOCR__FK4
https://www.scribd.com/doc/298234340/Bala-Janagraha-Coimbatore
இதை தமிழ் நாடெங்கும் மக்கள் பாதை எடுத்துச் செல்ல வேண்டுகிறேன்.
Truth has been brought out .We are sailing on the same boat but let us not mingle with them.Let us not forget our idealogy.
பதிலளிநீக்குWe have to remove chip by chip to get a STATUE.