ரத்தப் பிளவினூடே ஒரு புரட்சி: அரசியல் பழகு


பாகிஸ்தானின் ஜனநாயகக் குரல்களில் ஒன்று ஃபரானாஸ் இஸ்பஹானி. எழுத்தாளர். சமீபத்தில் இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒப்பிட்டிருந்தார். “அடுத்தடுத்த நாட்களில் சுதந்திரம் அடைந்த நாடுகள். இந்தியாவில் ஜனநாயகபூர்வமான முதல் தேர்தல் 1952-ல் நடந்தது. பாகிஸ்தானில் 1970-ல் நடந்தது. 2008 முதல் 2012 வரை ஆண்ட அரசே பாகிஸ்தானில் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்த முதல் அரசு. இந்தியா இதற்குள் 9 முழுமையான அரசுகளைப் பார்த்துவிட்டது. சிறுபான்மையினருக்கு பாகிஸ்தான் உகந்த நாடு அல்ல என்பது முதல் பிரதமர் லியாகத் அலிகானின் ‘புதிய நாட்டின் லட்சியங்கள்’ உரையிலேயே தெரிந்தது. பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருக்கும் என்று அவர் அறிவித்தார். எங்கள் அரசியல் சட்டத்திலும் ‘இது மதச்சார்பற்ற நாடு’ எனும் வாசகம் இல்லை. 1947-ல் பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதவரின் எண்ணிக்கை 23%. இப்போது அது 4%. மக்களிடையேயான பாரபட்சத்தை அரசே அதிகாரபூர்வமாகச் செய்கிறது.”

நண்பர் மு.ராமநாதன் சீனப் புத்தாண்டு தினத்தையொட்டி ஒரு கட்டுரைக்கான குறிப்பை அனுப்பியிருந்தார். சீன அரசின் ‘ஹுக்கு முறை’யை அப்போதுதான் முழுமையாக அறிந்தேன். “சீனர்களின் மிக முக்கியமான பண்டிகை சீனப் புத்தாண்டு. நகரங்களில் பணியாற்றும் சுமார் 25 கோடித் தொழிலாளர்கள் தொலைதூரங்களில் உள்ள கிராமங்களை அடைவார்கள். இந்தப் பண்டிகைக் காலமே ஒரு வருஷத்தில் அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழும் ஒரே சந்தர்ப்பம்” என்று எழுதியிருந்தார் ராமநாதன். “ஏன் நகரங்களுக்கு அவர்கள் குடும்பத்தோடு குடி மாற முடியாதா?” என்று கேட்டேன். அதற்கு அவர் எழுதிய பதில் இது: “முடியாது. சீனாவில் ‘ஹுக்கு’ என்று சொல்வார்கள். நம்மூரில் ரேஷன் அட்டைபோல; உள்நாட்டுக் கடவுச்சீட்டு என்றும் இதைச் சொல்வார்கள். முக்கியமான ஆவணம் இது. கிராமத்து ஹுக்குவை நகரத்து ஹுக்குவாக மாற்றுவது சுலபம் இல்லை. நகரத்து ஹுக்கு இல்லை என்றால், கல்வி, மருத்துவம், வீட்டு வசதி, ஓய்வூதியம் என அரசு வழங்கும் சலுகைகள் எதையும் நகரத்தில் பெற முடியாது. ஆகவே, கிராமங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் கட்டியிருக்கும் கூடங்களிலேயே இருப்பார்கள். அவர்களது மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள் கிராமங்களில் வசிப்பார்கள். இன்றைய சீனக் குழந்தைகளில் நான்கில் ஒன்று, இப்படி அப்பாவைப் பிரிந்து வளர்பவை.”


மியான்மரில் யு டின் யாவ் அரசு பதவியேற்றிருக்கிறது. அங்கு 1962-ல் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதற்குப் பிறகு அமைந்திருக்கும் ஓரளவுக்கு ஜனநாயகத்தன்மையுள்ள முதல் அரசு இது. நாடாளுமன்றத்தின் கால் பகுதி உறுப்பினர்கள், உள்துறை, பாதுகாப்பு, எல்லைப்புற விவகாரங்கள் ஆகிய மூன்று அமைச்சரவைகள், இரு துணை அதிபர் பதவிகளில் ஒன்று ராணுவத்தின் கையில் இருக்கிறது. ராணுவத்தின் பார்வையில்தான் ஆட்சி நடக்கும்.

இலங்கையில் ஜனநாயக அரசு இருக்கிறது. தமிழர்களின் உரிமைகளையும் சிங்களர்களின் உரிமைகளையும் சமமாகக் கருத முடியுமா? இன்னும் நேபாளம், வங்கதேசம் என்று நீட்டிக்கொண்டே போகலாம். இந்தியாவின் மக்களாட்சியை இழிவாகப் பேசுவதும் இங்குள்ள ஜனநாயகத்தைப் போலி ஜனநாயகம் என்று ஏசுவதும் அதீதப் போக்காளர்கள் பலர் செய்வது. அவர்களைப் போலவே, அரசியல் அறியாமையில் மூழ்கியிருக்கும் பலரும் கேட்பது, “தேர்தல் எல்லாம் சும்மா.. யாருக்கு ஓட்டு போட்டு என்ன மாறப்போவுது?” ஒரு நாட்டில் சுதந்திரம் உயிரோடு இருப்பதற்கான சுவாச வாயு ஜனநாயகம். இயல்பாக அது கிடைக்கும்போது அதன் அருமை நமக்குப் புரிவதில்லை. இல்லாத இடத்திலேயே அதன் உன்னதம் புரியும்.

பத்மநாபபுரம் அரண்மனை சென்றபோது, பெரியவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா அன்றைய திருவிதாங்கூர் ஆட்சியின் தீண்டாமைக் கொடுமைகளை விவரித்துக்கொண்டு வந்தார். புலையர், ஈழவர், நாடார் என்று கிட்டத்தட்ட 18 சமூகங்களை அடிநிலையில் வைத்திருந்திருக்கிறது திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி. சாதியப் படிநிலைக்கேற்ப தீண்டாமையிலும் தூரம் உண்டு. உதாரணத்துக்கு, ஒரு ஈழவர் பாதையில், நாயர் நடந்து வருவதைப் பார்க்க நேர்ந்தால், 12 அடி தூரமும் பிராமணர் நடந்து வருவதைப் பார்த்தால் 36 அடி தூரமும் விலகி நிற்க வேண்டும். இதுவே ஒரு புலையர் பாதையில் நாயரைப் பார்க்க நேர்ந்தால், 60 அடி தூரமும் பிராமணரைப் பார்க்க நேர்ந்தால், 96 அடி தூரமும் விலகி நிற்க வேண்டும். நோக்குத் தீட்டெல்லாம் இருந்திருக்கிறது. பார்த்தாலே தீட்டு; குளித்தால்தான் போகுமாம். பெண்கள் மீது சாதியம் விதித்த கொடுமைகளின் உச்சம், மார்புக்கு மேலாடை போட விதிக்கப்பட்ட தடை. ரவிக்கை அணிந்தார்கள் என்பதற்காக முலைகள் வெட்டி வீசிக் கொல்லப்பட்ட பெண்களின் கதையை அவர் சொன்னார்.

பேஷ்வாக்களின் ஆட்சியில், புணேவின் தெருக்களில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் நடக்க நேர்ந்தால், அவர்கள் தம் கழுத்தில் ஒரு கலயத்தையும் இடுப்பின் பின்புறம் கயிற்றில் ஒரு துடைப்பத்தையும் தொங்கவிட்டுச் செல்லக் கூடிய நிலை இருந்திருக்கிறது. நடக்கும்போது எச்சில் வந்தால், கலயத்தில் துப்பிக்கொள்ள வேண்டும்; அவர்களுடைய நடைச் சுவடுகளைத் துடைப்பம் அழித்துக்கொண்டே செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தீட்டு பட்டுவிடுமாம்! அம்பேத்கர் எழுத்துகளில் இதுகுறித்த பதிவுகள் உண்டு.

இப்படியெல்லாம் இருந்த நாட்டில் எல்லோரும் சமம் என்று ஒரு அரசியலமைப்புச் சட்டமும் அது உறுதிகொடுத்த மக்களாட்சியை நிலைநாட்ட அனைவருக்குமான ஓட்டுரிமையும் வந்தது சாதாரணமான நிகழ்வு அல்ல. புரட்சி. யுகப்புரட்சி! அதுவும் எப்பேற்பட்ட கலவரச் சூழலில் இந்தப் புரட்சி நடந்தது? தேசம் துண்டாடப்பட்டு, குறைந்தபட்சம் 5 லட்சம் பேர் கொல்லப்பட்டு நாடெங்கும் ரத்தம் வழிந்தபோது. பிளவுபட்ட ஒரு பகுதி முழுக்க இஸ்லாமியமயமாக்கலை நோக்கித் தீவிரமாக நகர்ந்தபோது, மற்றொரு பகுதியை இந்துமயமாக்கும் குரல்கள் கொந்தளிப்போடு கூச்சலிட்டன. காலங்காலமாக சாதிய அடிப்படையில் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த கூட்டம் மனுநீதியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சட்டத்தைக் கொண்டுவரத் துடித்தது. எல்லாவற்றையும் மீறி இந்நாடு சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட, சமத்துவத்தை உயிராகக் கொண்ட உலகின் மிகப் பெரியதான அரசியல் சட்டத்தைக் கொண்டுவந்தது.

உலகின் மிகச் சிறந்த அரசியல் சட்டங்களில் ஒன்று நம்முடையது. எனினும், ஏன் நாம் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொள்கிறோம்? அம்பேத்கர் வார்த்தைகளில் இதற்கான பதில் இருக்கிறது: “ஒரு அரசியல் சட்டம் எவ்வளவுதான் மேம்பட்டதாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்தச் சட்டமும் மோசமானதாகிவிடும்.. அரசியலமைப்பு ஒழுக்கம் என்பது இயல்பாக ஏற்படும் உணர்வல்ல. அது பயிற்றுவிக்கப்பட வேண்டும்!”

(பழகுவோம்…)


மே, 2016, ‘தி இந்து’


4 கருத்துகள்:

  1. #ஒரு நாட்டில் சுதந்திரம் உயிரோடு இருப்பதற்கான சுவாச வாயு ஜனநாயகம். இயல்பாக அது கிடைக்கும்போது அதன் அருமை நமக்குப் புரிவதில்லை. இல்லாத இடத்திலேயே அதன் உன்னதம் புரியும்.#

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இந்த நிலை மாற மக்கள் தங்கள் வார்டு/பஞ்சாயத்து அளவிலான ஜனநாயகத்தில் ஈடுபட வேண்டும் இந்த சிறுவர்கள் போல!
    https://www.youtube.com/watch?v=JTUOCR__FK4
    அடிப்படையில் மக்கள் இன்னும் குடியரசு முறையை புரிந்து கொள்ள வில்லை.
    தாங்கள் கட்டிய வரிப் பணத்தை தங்கள் வார்டு அளவில் பஞ்சாயத்து அளவில் எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்று கவனிப்பது இல்லை. அரசியல் வாதிகள் அந்த பணத்தை அபகரித்துக் கொண்டு பெரும் பணக்காரர்கள் ஆகிறார்கள் நாம் நடுத்தெருவில் இறக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. சட்டத்தைக் குறைகூறுவது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாததே. அதனைப் புரிந்துகொள்ளும் நிலையிலும், கடைபிடிக்கும் நிலையிலும் செய்யும் தவறுகளே பல குழப்பங்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

    பதிலளிநீக்கு