தார்மிகம் எனும் அறம் - அரசியல் பழகு!


பெரும்பாலான மாணவர்கள் “இன்றைய அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்” என்று குற்றம்சாட்டுகின்றனர். முக்கியமான பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையையும் சாடுகின்றனர். மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களில் இப்படியான பேச்சுகள் வந்தபோதெல்லாம் அரங்கம் அதிர்ந்தது.

நான் அவர்களிடம் இரு கேள்விகளை முன்வைத்தேன்.


“தங்கைகளே, இன்றைய தலைவர்கள் எல்லோரையுமே சுயநலவாதிகள், செயல்படாதவர்கள் என்று நீங்கள் பொதுமைப்படுத்துகிறீர்கள். நானும் உங்கள் கட்சியில் சேர்ந்துவிடுகிறேன். இப்போது நம் கருத்துப்படி, மாற்றம் வேண்டும் என்றால், இவர்கள் களத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இளைஞர்கள் அந்த இடத்தைக் கைப்பற்ற வேண்டும். சரி, நாம் சுயநலவாதிகள் என்று குறிப்பிடுபவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 12 மணி நேரம் வரை உழைக்கிறார்கள், நூறு வயதை நெருங்கும் சூழலிலும் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படியென்றால், மாற்று அரசியல் பேசும் பொதுநலவாதிகள் இளைஞர்கள் நாம் எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும்? உண்மையில் எவ்வளவு நேரத்தைப் பொது வேலைக்குக் கொடுக்கிறோம்?”
 

“தம்பிகளே, நாம் இன்றைய அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையைப் பற்றி பெரிதாகப் பேசுகிறோம். கடந்த மூன்று வருடங்களில் மூன்று இளைஞர்களின் மரணம் தமிழகத்தை அதிரவைத்தது. இளவரசன், கோகுல்ராஜ்,  சங்கர் மூவரும் செய்த ஒரே குற்றம் காதலித்தது. நிகழ்தகவு மாற்றி அமைந்தால், அந்த மூவரில் ஒருவர் நீங்களாக இருந்திருக்கலாம் அல்லது அந்த மூவரால் காதலிக்கப்பட்ட பெண்கள் உங்கள் தோழியராக இருந்திருக்கலாம். நாளை இதே சாதி உங்கள் கழுத்திலும் உங்கள் தோழியர் கழுத்திலும் அரிவாளை வைக்கலாம். ஒரு சக மாணவராக, இதற்கு எதிராக நீங்கள் வெளிப்படுத்திய எதிர்வினை என்ன? சாலை மறியலில் போய் உட்கார வேண்டாம்; குறைந்தபட்சம் ஒரு கருப்புப் பட்டையை அணிந்துகொண்டு அன்றைக்குக் கல்லூரிக்குச் செல்லும் அளவுக்குக்கூடவா நம் கல்வி நிறுவனங்களில் ஜனநாயகம் இல்லை?”
 

அரங்கம் நிசப்தமானது.
 

ஒரு சமூகம் கீழே எந்த அளவுக்குத் தார்மிகத் துடிப்போடு ஜனநாயகச் செயல்பாடுகளில் பங்கெடுக்கிறதோ, அந்த அளவுக்கே மேலே அதன் பிரதிநிதிகளிடத்தில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளைப் பார்க்க முடியும். ஒரு சமூகத்தை ஆளும் வர்க்கமானது அந்தச் சமூகத்தின் கடைந்தெடுத்த பிழிவு. மேலே திரளும் வெண்ணெய் ஊளை நாற்றமெடுக்கிறது என்றால், கீழே பாலும் ஊளை அடிக்கிறது என்றே பொருள்.


இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் மது விற்பனை தாராளமாக நடக்கிறது என்றாலும், தமிழ்நாட்டு அவலம் வேறெங்கும் கிடையாது. அரசாங்கமே மது விற்பதும் ஆட்சி நிர்வாகத்தில் தொடர்புடையவர்களே மது ஆலைகளை நடத்துவதும் அரசு அதிகாரிகளே இலக்கு நிர்ணயித்து மது விற்பனையை ஒரு சாதனையாகப் பிரகடனப்படுத்திக்கொள்வதும் இங்குதான். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் மது விற்பனை வந்த பிறகான இந்த 13 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கிராமப்புறப் பொருளாதாரம் பெரும் சீரழிவைச் சந்தித்தது. மாநிலத்தின் உடலுழைப்புத் தொழிலாளர் வளத்தை மது உறிஞ்சிக் குடித்தது. மருத்துவமனைகளுக்குக் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட கூட்டம்போல கல்லீரலால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் வந்து சென்றார்கள். அரசின் பிரதான வருமானங்களில் ஒன்றாக மட்டும் அல்லாமல், அரசியலைப் பின்னின்று இயக்குபவர்களின் கொள்ளையாதாரமாகவும் மது விற்பனை மாறியது.
 

மாநிலத்தின் மிகப் பெரிய கட்சிகளைச் சேர்ந்தவர்களில் தொடங்கி பல கரங்கள் இந்த அசிங்கத்தில் கோத்து நிற்கும்போது, இந்தத் தேர்தலில் கட்சி வேறுபாடின்றி எல்லோருமே மதுவிலக்கைப் பேசும் சூழல் எப்படி உருவானது? அசைக்க முடியாததாகக் கருதப்பட்ட ஒரு அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழக எதிர்க்கட்சிகளை வீதிக்கு இழுத்துவந்தது எது?
 

ஒரு தனிமனிதரின் தார்மிக உணர்வு. மதுவுக்கு எதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களின் மைய உந்துசக்தியாக இருந்த சசிபெருமாளின் போராட்டம். சேலம் பக்கத்திலுள்ள இடங்கணச்சாலை இமேட்டுக்காடு எனும் சின்ன கிராமத்தைச் சேர்ந்தவர் அவர். ஏழ்மையான குடும்பம். பதின்ம வயதில் காமராஜர் நடத்திய மது ஒழிப்புப் போராட்டம் ஈர்க்க, அப்போதே போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்.
 

சின்ன வயதிலிருந்தே பொதுக் காரியங்களுக்காக மனுவோடு அலுவலகம் அலுவலகமாக ஏறி இறங்குவது, அரசியல்வாதிகளிடம் முறையிடுவது என்று ஏதாவது செய்துகொண்டிருந்தவர் 2003-ல் தமிழக அரசு மது விற்பனையைக் கையில் எடுத்தது முதலாக மதுவுக்கு எதிரான போராட்டத்தைக் கையில் எடுத்தார். ஒருகட்டத்தில் ‘மதுவை ஒழிப்போம். குடும்பங்களைக் காப்போம், தயவுசெய்து மது அருந்தாதீர்' என்று எழுதப்பட்ட அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, மதுக் கடைக்குப் போவோர் வருவோர் கால்களில் எல்லாம் விழுந்து மன்றாடும் போராட்டத்தைத் தொடங்கினார். 2013-ல் பலரும் அரசுக்கு எதிராகப் பேசத் தயங்கிய காலகட்டத்தில், தனி ஒரு மனிதராக சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார்ந்தார். சிறையில் அடைத்தார்கள். அதிகார வர்க்கம் எவ்வளவோ நெருக்கியது. சிறையிலும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. 34 நாட்கள் நீடித்த போராட்டம் அது. மதுவுக்கு எதிரான போராட்டத்துக்காக சாகவும் தயாராக இருந்த சசிபெருமாள் கடைசியில் அது நிமித்தமான வேறு ஒரு போராட்டத்திலேயே செத்தும்போனார். “நீங்கள் எவ்வளவு பெரிய எதிரிகளோடு மோதுகிறீர்கள், தெரியுமா?” என்று ஒருமுறை கேட்டபோது சொன்னார், “நல்லாத் தெரியும். நான் ரொம்ப சின்னவன். ஆனா, என் பின்னாடி தர்மம் இருக்கு. அதுக்கு ஒரு நாள் அவங்க பணிஞ்சுதான் ஆகணும்!”
 

தமிழ்நாடு கண்ட செயலூக்கம் மிக்க கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் வி.பி.சிந்தன். ஒரு துடிப்பான இளைஞரை சிந்தனிடம் அறிமுகப்படுத்திவைத்தார் டபிள்யூ.ஆர்.வரதராஜன். அரசியல் தொடர்பாக ஆவேசமாகப் பேசிய அந்த இளைஞரை, “நீ ஏன் அரசியலுக்கு வரக் கூடாது? ஏன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையக் கூடாது?” என்று கேட்டார் சிந்தன். இப்படி சிந்தன் கேட்ட அதே வேகத்தில் இளைஞரிடமிருந்து பதில் வந்தது. “எனக்கு மலையாளிகளையும் பிடிக்காது. பிராமணர்களையும் பிடிக்காது. இன்றைய அரசியலும் உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.” அது எம்ஜிஆர் ஆண்ட காலம். சிந்தனும் ஒரு மலையாளி. அவரிடம் அந்த இளைஞரை அழைத்துச் சென்ற வரதராஜன் ஒரு பிராமணர். சிந்தன் அந்த இளைஞரிடம் சொன்னார், “நீ நம்புவது உண்மை அல்ல. ஒரு பேச்சுக்கு உண்மை என்று வைத்துக்கொள்வோம். எங்களையெல்லாம் வெளியேற்றவாவது நீ உள்ளே வர வேண்டும் இல்லையா?”
 

வரலாற்றுத் தருணம் என்பது இதுவே. உண்மை நம் முகத்துக்கு நேரே வந்து நிற்கும் தருணம். அறம், “இதற்குத் தார்மிகரீதியாக நீ என்ன செய்யப்போகிறாய்?” என்று கேள்வி கேட்கும் ஒரு தருணம். அப்படி ஒரு தருணத்தில் நாம் என்ன செய்கிறோம்; அந்த உண்மைக்கு எப்படி முகங்கொடுக்கிறோம் என்பதே எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது!

(அரசியல் பழகுவோம்..3)

மே 2016, ‘தி இந்து’

8 கருத்துகள்:

  1. சிறுவர்கள் இங்கே வார்டு அளவிலான அரசாங்கத்தை அறிந்து கொண்டு தங்கள் சாலையை அரசை செப்பனிடச் செய்து இருக்கிறார்கள்.
    மற்ற இளைஞர்களும் செய்யலாமே?

    கோவையின் ஒரு பள்ளிக் குழந்தைகள் சென்ற வருடம் இந்த அடிப்படையில் தங்கள் வார்டு அளவிலான அரசாங்கத்தை பணி செய்விக்கிறார்கள் .
    மாணவர்கள் மேற்கொண்ட திட்டப் பணியின் விளைவு, VKK மேனன் சாலை சீர் செய்யப் பட்டது.
    https://www.youtube.com/watch?v=JTUOCR__FK4
    https://www.scribd.com/doc/298234340/Bala-Janagraha-Coimbatore
    இதை தமிழ் நாடெங்கும் மக்கள் பாதை எடுத்துச் செல்ல வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அக்கினிக்குஞ்சு!

    தொடரட்டும்.........

    பதிலளிநீக்கு
  3. மேலோட்டமாக படிப்பதற்கு சிறப்பாக தோன்றினாலும், நடுநிலை இல்லாமல் உள்நோக்கம் வைத்து எழுதப்பட்ட கட்டுரையாகத்தான் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.... இளைஞர்கள் முழு நேர அரசியலுக்கு வரவேண்டும் என்று நேரடியாக கூறுங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு முழு நேர அரசியல், பகுதி நேர அரசியல் என்று எதுவும் இல்லை. நம்மை சுற்றி நடக்கும் எதுவும் அரசியலே. நம் அனைவருக்கும் அரசியல் அறிவு அவசியம் என்பதே சமஸ் எழுத்தின் நோக்கம்.

      நீக்கு
  4. மிக அருமையான பதிவு. பல ஆழமான கேள்விகளை மனதுள் எழுப்பிகிறது. மாற்றத்தை விரும்புவர்கள் முதலில் தன்னிடம் இருந்து மாற்றத்தை தொடங்க வேண்டும். கேள்விகளும் விமர்சனங்களும் மட்டும் முடிவுகளாகது விடைகளும் நம்மிடம் தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான பதிவு. பல ஆழமான கேள்விகளை மனதுள் எழுப்பிகிறது. மாற்றத்தை விரும்புவர்கள் முதலில் தன்னிடம் இருந்து மாற்றத்தை தொடங்க வேண்டும். கேள்விகளும் விமர்சனங்களும் மட்டும் முடிவுகளாகது விடைகளும் நம்மிடம் தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. Wat about DSP vishnu priya...awesome article samas. We are habitually trained like that. Ellame aanavak kozhaikal illai, ellamae aavankozhaikal than. Even though we had strong evidence in this connection Govt is keeping mum.

    பதிலளிநீக்கு
  7. Wat about DSP vishnu priya...awesome article samas. We are habitually trained like that. Ellame aanavak kozhaikal illai, ellamae aavankozhaikal than. Even though we had strong evidence in this connection Govt is keeping mum.

    பதிலளிநீக்கு