இரு வருத்தங்கள்


என்னுடைய ‘யாருடைய எலிகள் நாம்?’ புத்தகத்தைத் திரும்பப் படிக்க நேர்ந்தபோது இரு விஷயங்களில் நான் தவறிழைத்திருப்பதாகத் தோன்றியது. 

1. சில ஆண்டுகளுக்கு முன் திமுகவை விமர்சித்து நான் எழுதிய கட்டுரைக்கு ‘ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்’ என்று தலைப்பு கொடுத்தது. அதை எழுதியபோதே என்னுடைய ஆசிரியர் உள்ளிட்ட பல நண்பர்களும் இந்தத் தலைப்பு வேண்டாமே என்று கூறினர். மீறினேன். திமுக மீதான அக்கட்டுரையின் விமர்சனங்களில் இன்றளவும் முழு உறுதியோடு இருக்கிறேன் என்றாலும், எப்போதும் என்னுடைய விமர்சனங்களின் நோக்கம், விமர்சனங்களின் ஒரு அமைப்பு மேம்பட வேண்டும் என்பதேயன்றி அது நாசமாக வேண்டும் என்பதல்ல. ஆனால், இந்தக் கட்டுரையைப் பொருத்த அளவில் தலைப்பு அதைப் பிரதிபலிக்கவில்லை. அண்ணாவால் அவ்வளவு பெரிய இலக்குகளோடு தொடங்கப்பட்ட, எவ்வளவோ சமூக மாற்றங்களை நிகழ்த்திய ஒரு பேரியக்கத்தை இப்படியான ஒரு தலைப்பு கொண்டு விமர்சித்திருக்கக் கூடாது. குறைந்தபட்சம் புத்தகத்திலேனும் அதை நான் மாற்றியிருக்க வேண்டும். செய்யத் தவறிவிட்டேன். 

2. புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சி.மு. - சி.மு.’ கட்டுரை. மன்மோகன் சிங் ஆட்சியிலிருந்தபோது, துறைகள் வாரியாக அவருடைய அரசின் குறைகளை விமர்சிக்கும் கட்டுரை இது. ஐந்தாண்டுகளுக்கு முன் அவர் ஆட்சியிலிருந்தபோது அப்படி ஒரு கட்டுரைக்கான தேவை இருந்தது. ஆனால், இப்போது படிக்கும்போது, வரலாற்றிலேயே மிக மோசமான பிரதமராக அவரை எண்ணங்கொள்ள வழிவகுக்கிறது. காரணம், சிங் ஆட்சியின் ஒரு நல்ல அம்சம்கூட அதில் எழுதப்படவில்லை என்பது. அன்றாட அரசியல் சூழலை விமர்சிக்கும் ஒரு கட்டுரையில், இப்படி விமர்சனங்கள் மட்டும் குறிப்பிடப்படுவது இயல்பு என்றாலும், அந்தக் கட்டுரையைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்தபோது நான் அவருடைய ஒட்டுமொத்த பங்களிப்புகள், குறைகள், குற்றங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக மேம்படுத்தி சேர்த்திருக்க வேண்டும் அல்லது புத்தகத்தில் அந்தக் கட்டுரையையே சேர்த்திருக்கக் கூடாது. தவறிவிட்டேன்.

இந்த இரு தவறுகளுக்காகவும் வருத்தம் தெரிவிப்பதோடு, எதிர்காலத்தில் இந்த இரு தவறுகளும் சரிசெய்யப்படும் என்றும் உறுதியளிக்கிறேன். காலம் பெரிய ஆசான்.  எதிர்கொள்ளும் ஒவ்வொரு புதிய நாளும் முந்தைய நாள் வரையிலான நம்முடைய போதாமைகளையும் தவறுகளையுமே தலையில் தட்டிச் சொல்கின்றன!

பிப். 2017

11 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. மன்மோகன் சிங் பற்றிய ஒரு நல்ல கட்டுரை. http://old.thinnai.com/?p=20805014

    பதிலளிநீக்கு
  3. மகிழ்ச்சி தோழர்."பேரியக்கத்தின் அஸ்தமனம்" என்ற தலைப்பால் வருத்தமுற்ற எண்ணற்ற தோழர்களில் நானும் ஒருவன்.தொடர்ந்து வரும் உங்களின் கட்டுரைகள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு நன்மை செய்யும் நோக்கில் எழுதப்படும் மிகக் கடுமையான விமர்சனங்களை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது நன்று

    பதிலளிநீக்கு
  5. மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது நன்று

    பதிலளிநீக்கு
  6. மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சி பற்றிய மதிப்பீடு உங்களின் கட்டுரையில் ஒருபக்க சார்பாகவே இருப்பதாக மிகத் துல்லியமாக உணரச் செய்தது. அதே நேரம் வலிந்து பாசிச கட்சிகளை வரவேற்கும் முகமாக உங்களின் கட்டுரை அமைந்ததாக மனம் என்ன தூண்டியது. ஆனால் உங்களின் இந்த தன்மதிப்பீட்டு பிழை திருத்தம் மூலம் அது தடுக்கப்பட்டு மீண்டும் நாங்கள் உங்களின் கட்டுரைகளை மிக்க வாஞ்சையுடன் வாசிக்க தோதுவாக அது அமைந்துவிட்டது.மிக்க நன்றி. உங்களின் அனுபவமஐங்களை வழி நடத்தட்டும். நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  7. ஆய்வுகள் மேற்கொள்ளும்போது அனுமானங்கள் என்று முன்வைத்து மேற்கொள்வர். அதுபோல ஆய்வுகள் எழுதும்போது அக்காலகட்டத்திற்கு உரிய, ஏற்ற நிகழ்வுகள் சூழலுக்கு ஏற்றவாறு அந்த ஆய்வாளரால் சேர்க்கப்படும். பின்னர் அதே ஆய்வாளர் வேறொரு நிலையில் எழுதும்போது தன் கருத்திற்கு தானே மாற்று கருத்து சொல்ல நேரிடும். அல்லது முற்றிலும் ஒதுக்கக்கூட நேரிடும். பல ஆய்வுகளில் இவ்வாறான நிகழ்வுகளைக் கண்டுள்ளேன். தற்போதைய தங்களுடைய வருத்தங்கள்கூட அவ்வாறான ஒரு நிலையின் வெளிப்பாடாகவே கருதுகிறேன். அப்போது இருந்த சூழலில் (பின்னர் மாற்றம் வரும் என்று உணர்ந்தோ, உணராமலோ) எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தங்களின் வருத்தங்களை நியாயத்தின் வெளிப்பாடாக உணர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. //. இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.//

    நல்ல முடிவு. வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. அப்போதெல்லாம் சரியா தான் இருந்தீங்க சமஸ்.....

    இப்போ தான் அபத்த கட்டுரைகள் எழுதிட்டு இருக்கீங்க...

    எ.கா : எதிர்பாராத ஒரு வரலாற்று எழுச்சிப் போராட்டம் தீர்மானிக்கப்பட்ட முடிவோடு முடிந்தது எப்படி?

    பதிலளிநீக்கு
  10. நல்ல விஷயம் சமஸ். .. அதே போல " இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?" என்ற தலைப்பும் "வஹாபியிஸம்- இன்னொரு இந்துத்வா " என்று இருந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு