நான் இந்துவாக வாழ்வதாலேயே மதவாதி ஆகிவிடுவேனா?


ஈசோபநிஷத்தின் முதல் சூத்திரம் காந்திக்குப் பிடித்தமானது.
“ஈசாவாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்தேன த்யக்தேன புஞ்சீதா மாக்ருத: கஸ்யஸ்வித் தனம்!”
இதற்கான பொருள், “பிரபஞ்சம் எங்கும் காணப்படும் யாவற்றிலும் ஆண்டவன் ஊடுருவி நிற்கிறான். அனைத்தையும் துறந்துவிடு. அதன் பின் அவற்றை அளவோடு துய்த்து மகிழ். பிறர் பொருளுக்கு ஆசைப்படலாகாது!”

ஆன்மரீதியில் பொதுவுடைமைத் தத்துவத்தின் மைய நோக்கத்தோடு எவ்வளவு நெருக்கமாகப் பொருந்தக்கூடிய இரு வரிகள்! ஆனால், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? அரசியல்ரீதியில் ஒரு தாராளனாக, மதச்சார்பற்றவனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், ஓர் இந்துவாக இந்த உபநிஷத்தை மறந்துவிட வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா? ஏனென்றால், இங்குள்ள தாராளர்களின் இன்றைய அளவுகோல்படி நான் ஒரு தாராளனாக, நவீனத்துவனாக, மதச்சார்பின்மையாளனாக இருக்க வேண்டும் என்றால், மதத்தை நான் நிராகரிக்க வேண்டும்!

எத்தனையோ சமயங்களில் பலர் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்கள், “மதச்சார்பின்மை பேசும் நீங்கள் நெற்றியில் விபூதிப் பட்டை போட்டிருப்பது அந்நியமாகக் காட்டுகிறது தோழர்.” நான் சிரித்துக்கொண்டே சொல்வேன், “இந்த நாட்டின் கோடிக்கணக்கான சாமானிய மக்களையே நான் பிரதிபலிக்கிறேன். மத அடையாளத்தைச் சூடியிருப்பதாலேயே அவர்கள் அத்தனை பேரையும் மதவாதிகளாக்கிவிட முடியுமா!”


இந்திய தாராளர்களின் சமூக உளவியல் சிக்கல்கள் மதச்சார்பின்மையை வறட்டுத்தனமாகப் புரிந்துகொள்ள முற்படும் அவர்களுடைய காலனியக் கல்விப் பார்வையிலிருந்து தொடங்குகிறது. மதம் என்பது இங்கு நிறுவனம் அல்ல. கலாச்சாரத்தின் வழி அது பிணைக்கப்பட்டிருக்கிறது; வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது; இன்னும் ஆழ்ந்த மத நம்பிக்கையுடைய கோடிக்கணக்கான மக்களுக்கு அது கடவுளுடன் அவர்களைக் கொண்டுபோய் சேர்க்கும் வாகனமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது.

என்னைக் கேட்டால், எல்லோரிடத்திலும் தன்னைக் காணும் தன்மையை ஒருவர் எங்கிருந்து பெறுகிறார் என்பதல்ல, அவர் நடைமுறையில் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதே முக்கியம் என்று சொல்வேன். தன்னில் பிறரைக் காணும் கல்வியை ஒருவர் கீதையிலிருந்து பெறலாம்; குர்ஆனிலிருந்து பெறலாம்; பைபிளிலிருந்து பெறலாம்; திருக்குறள், திருமந்திரம், சத்திய சோதனை, மூலதனம், சாதியை ஒழிக்கும் வழி, பெண் ஏன் அடிமையானாள்... எந்த நூலிலிருந்தும் பெறலாம். வாழ்வின் அனுபவங்களிலிருந்து பெறலாம். தன்னிலிருந்தும் பெறலாம். ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளும் படிந்திருக்கும் கருணையை வெளிக்கொணர ஏதோ ஒன்று மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது. அதை எதுவும் தரலாம். எல்லாமும் சேர்ந்தும் தராமலும் போகலாம். தரிசனமே முக்கியம்.

மருத்துவமனையில் கிடந்த ஒரு நாளில்தான், பக்கத்துப் படுக்கையிலிருந்த சக நோயாளரிடமிருந்து, ‘புதிய ஏற்பாடு’ வாங்கி வாசித்தேன். நூலை விரித்ததும், இயேசுவின் மலைப் பிரசங்க அத்தியாயம் ஈர்த்தது (மத்தேயு 5).

இயேசு சொல்கிறார், “நான் உங்களுக்குச் சொல்கிறேன்… ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் கொடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ… நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் பிரார்த்தியுங்கள்…  உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரை மாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்களல்லவா?”

வெறுப்பை ஒருநாளும் வெறுப்பால் வெல்ல முடியாது என்று முழுமையாக உணர்ந்த அந்த இரவில் இறைமையின் உன்னதத்தை உணர்ந்தேன்.

 மனிதர்களை ரத்தமும் சதையுமாகப் பார்க்கும் கருணைப் பார்வை அரசியலுக்கு வேண்டும். மனித குல வரலாற்றிலேயே மகத்தான விஞ்ஞானி என்று போற்றப்படும் நியூட்டன், தன் வாழ்நாளில் சிறு பகுதியையே நவீன அறிவியலுக்காகச் செலவிட்டார். அவருடைய உழைப்பின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தது மதம், மறைஞானம், ரசவாதம்! யாரை எப்படிப் பகுத்துப் பார்ப்பது? தாராளர்களிடம் உள்ள முக்கியமான சிக்கல்... நிறைய சிந்திக்கிறார்கள்; நிறைய பேசுகிறார்கள்; நிறைய விவாதிக்கிறார்கள்; குறைவாகவே உணர்கிறார்கள்.

இந்த மண் ஆன்ம வயப்பட்டது. இந்த மக்கள் எளிதில் நெகிழக்கூடியவர்கள். இந்த மண்ணுக்கென்று ஒரு இயல்பு இருக்கிறது. இந்த மக்களிடம் பணியாற்ற வேண்டும் என்றால், இந்த மக்களின் மொழியை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.

மத நிராகரிப்பை மதச்சார்பின்மைக்கான அடிப்படை என்று கருதுவது ஐரோப்பியப் பார்வை. நவீன ஐரோப்பா மத நிராகரிப்பை மதச்சார்பின்மையாகக் கருதியதற்கான, ஏற்றுக்கொண்டதற்கான நியாயம் அதன் வரலாற்றில் இருக்கிறது. மதம் அங்கே நிறுவனமயமானது. ஆட்சியை நேரடியாக அப்போது கிறிஸ்தவ மதகுருமார்கள் கட்டுப்படுத்தினார்கள். அரசின் முடிவுகளையும் மக்களுடைய வாழ்க்கையையும் நேரடியாக அவர்களால் தீர்மானிக்க முடிந்தது. மத நிராகரிப்பே மதச்சார்பின்மை எனும் நிலை நோக்கி ஐரோப்பா நகர்வதற்கான நியாயம் அங்கிருந்தது.

இந்தியச் சூழல் முற்றிலும் மாறுபட்டது. மிகக் கொடுமையான சாதியத்தையும் கொடிய பழக்கவழக்கங்களையும் கொண்டிருந் தாலும், தனிநபர்களையோ, ஆட்சியையோ நேரடியாக நிறுவனமயமாகக் கட்டுப்படுத்தும் மதமாக இந்து மதம் இல்லை. கடவுள் மறுப்பு உட்பட காலம் முழுக்க எல்லாப் போக்குகளையும் அது உள்வாங்கிக் கொண்டிருந்திருக்கிறது. காலம் முழுக்க அது மாறிவந்திருக்கிறது.   ரங்கம் கோயிலுக்கு நேர் எதிரே இன்று பெரியார் இருப்பதும், கோயிலுக்குள் பல நூற்றாண்டுகளாக ராமானுஜர் இருப்பதும் காலங்காலமாக இந்த மண்ணில் தொடரும் நெகிழ்வுத்தன்மையின் மரபுத் தொடர்ச்சியை மறைமுகமாகப் புரிந்துகொள்ள உதவும் இரு குறியீடுகள்.

நவீன இந்தியாவின் சமூகநீதி முன்னோடிகளான காந்தி, பெரியார், அம்பேத்கர் மூன்று சிந்தனையாளர்களுமே மதம் எனும் அமைப்பை முற்றிலும் நிராகரிக்கவில்லை. மதங்களை ஒழிப்பதே லட்சியம் என்று செயல்பட்ட பெரியார்கூட,  மதத்துக்குக்குள்ளேயே இருந்தால்தான் அதற்கெதிராகக் கேள்வி கேட்க முடியும் என்றே கருதினார்.

மதம் எனும் அமைப்பை முற்றிலும் நிராகரித்து, இந்து மதத்தின் மீதான விமர்சனங்களை முன்வைத்தவர்களை அல்ல;  ‘நான் இந்து’ என்று உரிமையோடு அடையாளப்படுத்திக்கொண்டு சீர்திருத்தங்களுக்கு முயன்ற காந்தியையே இந்துத்துவ வெறியர்கள் தொடர்ந்து குறிவைத்தார்கள். ஏன்? மக்களிடம் யாருடைய குரல் செல்வாக்கு செலுத்தும் என்பது அவர்களுக்குத் தெரியும்! மக்களுக்கு வெளியே அவர் இல்லை, மக்களில் ஒருவராக அவர் இருந்தார். அதுதான் எதிரிகளுக்குப் பெரிய சவாலாக இருந்தது!

ஒரு இந்துவாக நான் எந்தக் கோயிலை நம்புகிறேனோ அந்தக் கோயிலுக்கு எதிரிலேயே நின்று அதற்கெதிராகச் சத்தமாக என்னால் பேச முடியும். என்னை யாரும் மதவிலக்கம் செய்துவிட முடியாது. என்னுடைய வாழ்க்கையில் முற்றிலுமாக எல்லா மதச் சம்பிரதாயங்களையும் புறக்கணித்துவிட்டும் எனக்குத் தேவைப்படும் இடத்தில் மட்டும் மதத்திலிருந்து ஒரு பகுதியை நான் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்தத் தனிநபரும் அதில் தலையிட முடியாது. இந்தச் சுதந்திரம் இந்து மதத்தின், இந்த மண்ணின் தனித்துவம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

காசி சென்றிருந்தபோது என் மகன் ஒரு சிவன் படத்தை வாங்கினான். சிலும்பியில் கஞ்சா புகைக்கும் சிவன். சிக்ஸ்பேக்கில் இருந்த அந்தச் சிவனின் புஜத்தில் நவீனமான ஒரு சிங்க டாட்டூவும் வரையப்பட்டிருந்தது. இந்தப் படைப்புச் சுதந்திரம் எனக்குப் பிடித்திருக்கிறது. கடவுள் மனிதர்களைப் படைத்தாரா என்று தெரியாது; கடவுள்களை மனிதர்கள் தங்கள் விருப்பப்படி படைக்கும் இந்தச் சுதந்திரம் முக்கியமானது. இந்தியாவில் உருவான மதங்களில் மட்டும் அல்ல; வெளியிலிருந்து இங்கு பரவித் தழைத்த இஸ்லாம், கிறிஸ்தவத்திலும்கூட ஆரம்ப நாட்களில் தொடங்கி இன்று வரை இப்படியான தாராளம் வெவ்வேறு வகைகளில் குடிகொண்டிருக்கிறது; இன்றைக்கு அதுதான் ஒவ்வொரு மதத்துக்குள்ளும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.

இந்துத்துவத்தை, சங்கப் பரிவாரங்களை நான் ஏன் கடுமையாக எதிர்க்கிறேன் என்றால், அவை இந்து மரபை, இந்த மண்ணின் தன்மையை, இந்தப் பன்மைத்துவத்தை நிராகரிக்கின்றன. இந்துப் பாரம்பரியம் என்று கூறிக்கொண்டே ஐரோப்பிய நிறுவனமய கிறிஸ்தவ மாதிரியை இங்கு திணிக்க அவை முயற்சிக்கின்றன. பாஜகவை வெளியிலிருந்து இன்று ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துவதற்கும் அன்று ஐரோப்பாவில் அரசர்களை வெளியிலிருந்து மதகுருமார்கள் கட்டுப்படுத்தியதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? எனக்கு ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகக்  கட்டமைப்புக்கும், கிறிஸ்தவ தேவாலய நிர்வாகக் கட்டமைப்புக்கும் பெரிய வேறுபாடுகள் தெரிவதில்லை.

ஆக, இங்கே யார் ‘இந்து... இந்து’ என்று நாள் முழுவதும் கூவிக்கொண்டிருக்கிறார்களோ அந்த இந்துத்துவர்கள் அடிப்படையில் இந்துக்களாக இல்லை; மாறாக பழைய ஐரோப்பிய பாணி மூளையுடன் இந்து மதத்தை அணுகுகிறார்கள். ஒரு தலைமையின் கீழ், ஒரு கலாச்சாரத்தின் கீழ் இந்த மதத்தைக் கொண்டுவந்துவிடத் துடிக்கிறார்கள். இந்து மதத்துக்கு வெளியே உள்ள ஏனைய மதங்களின் அமைப்புகளும் தம்மளவில் மறைமுகமாக இதே இந்துத்துவப் பாதையிலேயே செல்கின்றன. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றே தீவிர முஸ்லிம் அமைப்புகள் இன்று முன்னிறுத்திவரும் சவுதி பாணி வஹாபிய கலாச்சாரம். ஆக, மதவாதம் எல்லா இடங்களிலும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது. மதவாதத்தை எதிர்க்கும் தாராளர்களும் அதே பழைய ஐரோப்பிய பாணி மூளையுடனேயே மதச்சார்பின்மையை அணுகுகிறார்கள். ஆக, எவருமே இந்த மக்களின் இயல்பிலுள்ள மதப் பன்மைத்துவக் கலாச்சாரத்தை அங்கீகரிக்கும் நிலையிலோ, வளர்த்தெடுக்கும் நிலையிலோ இல்லை.  விளைவாக மக்கள் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். விளைவாக, மதச்சார்பின்மை பிரச்சாரம் மறைமுகமாக மதரீதியிலான அணித்திரட்டலுக்கான செயல்பாடாகிறது.

பதினைந்து ஆண்டுகள் இருக்கும்... அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்தார் சங்கரய்யா. “மதவெறியை நாம் எதிர்ப்போம். மதத்தை எதிர்ப்பது நம் வேலையல்ல. இந்தச் செய்தியை மக்களிடத்தில் இனி கொண்டுசெல்வோம்” என்று கூறினார். கடும் விமர்சனங்கள். எதிர்ப்பு. களப் போராளியான சங்கரய்யா தனிப்பட்ட வாழ்வில் ஒரு காந்தியரும்கூட.

இந்துக்கள் மட்டுமல்ல; இந்நாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் எவரும் மத நிராகரிப்பை மதச்சார்பின்மையாகக் கருதவில்லை. மக்கள் மத்தியில் பணியாற்றி, மக்களைப் புரிந்துகொள்ள முற்படுபவர்கள் இங்கு இப்படியான முடிவை வந்தடைவது இயல்பு. திமுகவைத் தொடங்கி பெருந்திரளான மக்கள் மத்தியில் புழங்க ஆரம்பித்த பின் அண்ணாவும் இதையே சொன்னார், “நாங்கள் மதச்சார்பற்றவர்கள்; அதேசமயத்தில் மதத்துக்கு எதிரிகள் அல்ல. ஒரு ஐந்து வருஷம், பத்து வருஷம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்து உத்தரவிடுவதன் மூலம் ஆத்திகத்தை மாற்றி நாத்திகத்தை ஏற்படுத்திவிட முடியும் அல்லது நாத்திகத்தை மாற்றி ஆத்திகத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற மனப்பிராந்தி எங்களுக்கு இல்லை. மக்களுடைய மத நம்பிக்கையில் எந்த வகையிலும் குறுக்கிட முடியவில்லை; குறுக்கிட விரும்பவுமில்லை!”

சங்கரய்யா சொன்ன வழி கம்யூனிஸ்ட்டுகளைத் தாண்டியும் மதச்சார்பின்மை தொடர்பில் இதே குழப்பத்தில் இருக்கும் தாராளர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டல். ஆனால், உள்ளூர் அறிவு, அதுவும் பெரிய கல்விப் பின்புலம் இல்லாத மனிதரின் அறிவு என்றைக்கு இங்கே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது? தூக்கியெறியப்பட்டது. நகைமுரண் என்னவென்றால், பின்னாளில் சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட்டுகள் கொண்டாடிய நேபாள பிரதமர் பிரசண்டா, வெனிசுலா அதிபர் சாவேஸ் இருவருமே உள்ளூர்த்தன்மையைச் சுவீகரித்துக்கொண்டவர்கள், வெளிப்படையாக மதச்சின்னங்களோடு வெளியே வந்தவர்கள். பிரசண்டா நெற்றி நிறைய அப்பிய குங்குமமும் சாவேஸ் வசம் எப்போதுமிருந்த சிலுவையும் எதன் குறியீடுகள்?

அபாயகரமான ‘பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் வியாதி’யில் இன்று இந்திய தாராளர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். போலி முற்போக்குத்தனம்! காவி அணிந்து கூட்டத்துக்கு வரும் ஒருவரை மேலே கீழே பார்ப்பதற்கும் மாட்டுக்கறி சாப்பிடும் ஒருவரைப் பார்த்து முகம் சுளிப்பதற்கும் அடிப்படை மனோபாவத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது? இந்தியாவின் நவீனச் சிற்பிகளைப் பொறுத்த அளவில் மதச்சார்பின்மை என்பது மத நடுநிலைமை. எல்லோரையும் அவரவர் அடையாளங்களுடனும் ஆரத்தழுவிக்கொள்வது. அதேசமயம், மதவெறி நடவடிக்கைகளில் எந்தத் தரப்பு ஈடுபட்டாலும் ஒரே மாதிரி கடுமையாக எதிர்வினையாற்றுவது. இந்த இரு இடங்களிலுமே பெரும்பாலான தாராளர்களுக்குச் சிக்கல் இருக்கிறது.

அடிப்படையில் சாதியச் சமூகமான இந்தியச் சமூகம் அரிதாகவே மதமாகச் சிந்திக்கிறது - முக்கியமாக அதன் உணர்வுகள்  தூண்டிவிடப்படும்போதும் சீண்டிவிடப்படும்போதும்! ஆக, தூண்டுபவர்கள், சீண்டுபவர்கள் இரு தரப்பினருமே மறைமுகமாக ஒரே விளைவுக்காகவே உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பேய்ப் பாய்ச்சலில் வளர்ந்துகொண்டிருக்கும் மதவாத அரசியலைத் தூக்கியடிக்க மதம், மதச்சார்பின்மை தொடர்பில் முதலில் தம் பார்வையையும் அணுகுமுறையையும் தாராளர்கள் முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். மதத்தில் ஆரோக்கியமான விவாதங்களை, மாற்றங்களை, சீர்திருத்தங்களை உருவாக்க  பரிபூரண மதச் சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும். குறிப்பாக, உலகமயமாக்கலுக்குப் பிந்தைய சூழலில் தனிப்பட்ட மனித வாழ்வில் ஏற்பட்டிருக்கும் புதிய நெருக்கடிகளின்  பின்னணியில் மதம் அடைந்திருக்கும் புதிய பரிமாணத்துக்கு முகங்கொடுக்க வேண்டும். மதம், மதச்சார்பின்மை சம்பந்தமான பார்வைகளில் மட்டும் அல்ல; இன்று தாராளர்கள் உச்சரிக்கும் பல வார்த்தைகளிலும்கூட மாற்றம் தேவைப்படுகிறது. ஏனென்றால், அந்த வார்த்தைகள் எதிரிகளைத் தாக்கவில்லை; மாறாக புதிய எதிரிகளையே உருவாக்குகின்றன!

மே, ‘தி இந்து’ 2017
(மோடியின் காலத்தை உணர்தல்... 5)

4 கருத்துகள்:

 1. As long as we club religion with life, things are going to be tough both to us and others.

  Dr.K.Alex

  பதிலளிநீக்கு
 2. உங்கள் நெற்றியில் உள்ள திருநீரை இந்துத்துவா பயங்கரவாத அடையாளத்துடன் வைத்து ஆராய்கிறார்கள் தாராளர்கள்...

  பதிலளிநீக்கு
 3. "இந்து மதத்துக்கு வெளியே உள்ள ஏனைய மதங்களின் அமைப்புகளும் தம்மளவில் மறைமுகமாக இதே இந்துத்துவப் பாதையிலேயே செல்கின்றன. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றே தீவிர முஸ்லிம் அமைப்புகள் இன்று முன்னிறுத்திவரும் சவுதி பாணி வஹாபிய கலாச்சாரம். ". The words in this gives the meaning that soudhi vahabiyan fundamentalists are following Hindu fundamentalists. What about these fundamentalists in Muslim majority countries. I think both have their own agenda. Please correct if it's a mistake in wordings. If you want to keep it the same way then I would assume it reflects the influences around you.

  பதிலளிநீக்கு
 4. இந்து மதத்தை பற்றி வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்ட் கள் சைனா வில் இஸ்லாமிற்கு எதிரான அடக்குமுறை பற்றி ஏன் வாய் திறப்பதில்லை ? இந்து மத கடவுள்களை அவமானமாக பேசும் பகுத்தறிவு வாதிகள் மற்ற மதத்தை கண்டு கொள்வதில்லையே ஏன் ? கோத்ரா பற்றி பேசிய ஊடகங்கள் காஷ்மீர் இந்துக்கள் கொலைகள் பற்றி விவாதிப்பதில்லையே ஏன்? . இதற்கான விடைகளையும் உங்கள் கட்டுரை யில் எதிர்பார்க்கிறேன் ...

  பதிலளிநீக்கு