கோயில்களில் என்ன நடக்கிறது?


திரிபுரா சென்றிருந்தபோது, அகர்தலாவிலுள்ள ‘சதுர்தசா தேவதா - 14 தேவதைகள் - கோயிலுக்குச் சென்றிருந்தேன். மன்னர் கிருஷ்ண மாணிக்க தேவ வர்மா காலத்தில் கட்டப்பட்ட கோயிலான இது, திரிபுராவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று. நண்பர் வீ.பா.கணேசனுடன் உள்ளூர் நண்பர் அதுல் பானிக் உடன் வந்திருந்தார்.

நாங்கள் சென்றிருந்த நாள் அந்த நேரம் ஆச்சரியமாகக் கூட்டம் குறைவு என்று சொல்லிக்கொண்டே கோயிலினுள் அழைத்துச் சென்றார் பானிக். எனக்கு அதைக் காட்டிலும் பெரிய ஆச்சரியம் வேறொன்று அங்கு காத்திருந்தது. கடவுளின் சந்நிதிக்கு முன்னே உட்கார்ந்து சாவகாசமாக சிகரெட் குடித்துக்கொண்டிருந்தார் புரோகிதர். எங்களைப் பார்த்ததும் “இன்னும் நாலு இழுப்புதான்; முடித்துவிட்டு வந்துவிடலாமா?’’ என்று பானிக்கிடம் கேட்டார்.  “ஒன்றும் அவசரம் இல்லை, நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்றார் பானிக். அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, புரோகிதர் சிகரெட்டைப் புகையவிட்டபடியே பூஜைக்கு வந்தார். பூஜையை முடித்தார். பிரசாதம் கொடுத்தார். நானும் கணேசனும் எங்கிருந்து வருகிறோம் என்று விசாரித்துவிட்டு, கை குலுக்கினார். நான் அவரிடம் சிகரெட்டைக் காட்டிச் சொன்னேன், “இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” அவர் விசேஷமாக எதையும் விளக்க முற்படவில்லை, “இதிலென்ன ஆச்சரியம்! கடவுள் வேறு, நாம் வேறா?” - இப்படிச் சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு அடுத்த வேலையைப் பார்க்கப் புறப்பட்டார்.




பின்னர், பானிக் என்னிடம் சொன்னார், “இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, நாம் எதையெல்லாம் சாப்பிடுகிறோமோ, அதையெல்லாம் கடவுளுக்குப் படைக்கிறோம். அதேபோல கடவுளுக்குப் படைப்பதையெல்லாம் சாப்பிடவும் செய்கிறோம். அவருக்கு சிகரெட் பிடிக்கிறது, அதையே படைத்தாலும்கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை!”

எனக்கு அஸாம் பயணத்தின்போது, காமாக்யா கோயிலுக்குச் சென்று வந்த ஞாபகம் வந்தது. குவாஹாட்டியின் நீலாஞ்சல் மலைக்குன்றுகள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் காமாக்யா கோயில் மிக முக்கியமான தாந்த்ரீக வழிபாட்டு மையம். மந்திர, தந்திர நிலம். அந்தி சாயும் வேளையில் அங்கு சென்றிருந்தேன். நாளெல்லாம் பலி கொடுக்கப்படும் தளம் என்பதால், தரை நெடுகிலும் ரத்தம். கவுச்சி வாடை காற்றை நிறைத்திருந்தது. கோயில் படிக்கட்டுகளில் மிரட்டும் தாடியோடு உட்கார்ந்திருந்தவர்களில் ஏராளமான தாந்த்ரீகர்களும் அடக்கம் என்பதை காரோட்டி வந்த ராஜ் சொன்னார். யாரேனும் ஒரு தாந்த்ரீகரைச் சந்தித்துவிடுவது என்று பிரயத்தனப்பட்டு, கடைசியாக ஒரு சாமியைச் சந்தித்தோம்.

அஸாமில் தாந்த்ரீகத்தின் செல்வாக்கைத் தெரிந்துகொண்ட அந்தத் தருணம், இன்னொரு பெரிய புரிதலையும் தந்தது. கச்சார் மன்னர்களும் தாய்வழிச் சமூகமான காரோ பழங்குடிகளும் இந்தக் கோயிலை எவ்வாறு கையாண்டார்கள், எல்லாவற்றையும் குறியீடாகப் பார்க்கும் நுட்பமான தாந்த்ரீக மரபு புத்தத் துறவிகள் வழி எப்படி நாடெங்கிலும் அங்கிருந்து பரவியது, பல நூற்றாண்டு ஆதிகுடிகள் பாரம்பரியம் இன்று நவீன காலத்தில் எப்படி மாறிவந்திருக்கிறது என்று அவர் முழுமையாகச் சொல்லி முடித்தபோது, கடைசியாக ஒரு வாசகத்தைச் சொன்னார்: “பன்றி கோயிலாக இருந்தது, ஆட்டு கோயிலாக இருக்கிறது!”

எனக்கு இது புரியவில்லை. பின்னர் சொல்கிறேன் என்பதுபோல சைகை செய்த ராஜ், கோயிலிலிருந்து விடுதிக்குத் திரும்புகையில் விவரித்தார். “சாமி என்ன சொன்னார் என்றால், ‘முன்பு பழங்குடிகள் பன்றிகளைப் பலியிடும் கோயிலாக இது இருந்தது, இன்று எல்லோரும் ஆடுகளைப் பலியிடும் கோயிலாக மாறிவிட்டது’ என்று சொன்னார். இதில் ஒரு குறியீடு உண்டு. ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான கோயில் இது. காமாக்யா அன்றிருந்த அதே இடத்தில் இன்றும் இருக்கிறாள். நம்முடைய முன்னோர் வழிபட்ட அதே இடத்தில் நாமும் நின்று வழிபடுகிறோம். ஆனால், இன்றைய கோயிலின் கலாச்சாரம் ஆயிரம் வருஷ கலாச்சாரம் அல்ல. இது பொதுமயமாக்கப்பட்ட கலாச்சாரம். ஆனால், நாம் நமக்குத் தென்படும் கலாச்சாரமே உண்மையெனக் கருதி, அதைப் பாதுகாப்பதாகக் கருதிக்கொண்டு, உண்மையான கலாச்சாரத்தை அழிக்க முற்படுகிறோம்!’’

நீலாஞ்சல் மலையடிவாரத்தில் கார் இறங்கியபோது சாமி சொன்ன குறியீட்டின் இன்னொரு அர்த்தமும் எனக்குப் புரிபடலாயிற்று. காமாக்யா கோயிலுக்குச் சொல்லப்பட்ட நீதி இப்போது இந்து மதத்துக்கு என்றாயிற்று!

இந்துத்துவம் இன்று நடத்திக்கொண்டிருக்கும் முக்கியமான போர் இஸ்லாமுக்கோ, கிறிஸ்தவத்துக்கோ எதிரானது அல்ல; மாறாக அது இந்து மதத்தின் மீதானது. பன்றி கீழானதும் அல்ல. ஆடு மேலானதும் அல்ல. இரண்டுமே தெய்வீகமானவை. இரண்டையுமே பலியிடலாம். இரண்டையுமே சாப்பிடலாம். நாடு முழுக்க ராமனுக்கும் தர்மனுக்கும் கோயில் உள்ள இதே நாட்டில்தான் ராவணனுக்கும் துரியோதனுக்கும் கோயில்கள் இருக்கின்றன. கதாநாயகனுக்கும் கோயில், வில்லனுக்கும் கோயில் – கதாநாயகனையும் வழிபடலாம், வில்லனையும் வழிபடலாம். மத்திய பிரதேசத்தில் ராவண்கிராம் என்று ஒரு ஊரே உண்டு. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தப் பன்மைத்துவ மரபு நீடிக்கும்? தெரியாது!

நாடு முழுக்க இன்று கோயில்களில் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் கலாச்சார மாற்றங்கள் இன்னும் பொதுத்தளத்தில் உரிய கவனத்தைப் பெறவில்லை. கும்பகோணம் கோயில்களின் நகரம். நகரிலும் நகரைச் சுற்றிலும் கோயில்கள் உறைந்து கிடக்கும் ஊர் அது. பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்களே பல சீந்துவாரின்றிக் கிடக்க, புதிய கோயில்களுக்கு அங்கு எந்தத் தேவையும் இல்லை. வடக்கத்தி பாணி கோயில் கட்டுமானங்கள் அடுத்தடுத்து இப்போது அங்கு புதிது புதிதாக முளைக்கின்றன. தமிழகம் மட்டும் அல்ல; நாடெங்கிலும் வெவ்வேறு ஊர்களுக்குச் செல்ல நேரும்போது அங்கெல்லாமும் இப்படிப் பார்க்கிறேன். எல்லாம் கச்சிதமாக கார்ப்பரேட் தன்மையுடன் நடக்கும் இந்தப் புதிய கோயில்களில் முன்னெடுக்கப்படும் கலாச்சாரச் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏனைய கோயில்களுக்கும் பரவுகின்றன. முந்தைய கலாச்சாரம் - நாட்டார் வழக்காறு, பன்மைத்துவம் - அழிகிறது. பார்க்கப் பொலிவானதாகவும் தூய்மையானதாகவும் மேலோட்டத்தில் சமத்துவத்தைப் பேணுவதாகவும் தெரியும் புதிய கலாச்சாரம் - அதன் உள்ளடக்கத்தில் ஒற்றைத் தன்மையுடன் - ஏனைய கோயில்களுக்கும் பரவுகிறது.

பல ஆண்டுகளாக நான் அறிந்த சிவன் கோயிலுக்கு நெடுநாளைக்குப் பின் சமீபத்தில் சென்றபோது ஒரு அம்மா சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார், “ஒரு பாரதப் பெண்ணுக்கான பண்பாட்டு லட்சணங்கள் என்னவென்றால்...”

இந்த வார்த்தைகள் யாருடையவை?

கோயில்கள் மட்டும் அல்ல; மசூதிகளின் அடையாளங்களும் வேகமாக மாறுகின்றன. இந்த மண்ணோடு இணக்கமான பழைய பாணி பள்ளிவாசல்களுக்கு மாற்றாகத் தூய்மைவாதத்தைப் பேணும் புதிய பள்ளிவாசல்கள் பிரத்யேகமாகவே உருவாக்கப்படுகின்றன. சவுதி பாணி வஹாபிய கலாச்சாரம். தஞ்சாவூரில் ‘தவ்ஹீது பள்ளிவாசல் செல்லும் வழி’ என்று ஆரம்பத்தில் பெயர்ப் பதாகை வைக்கப்பட்ட இடத்தில், அடுத்த சில நாட்களிலேயே ‘தவ்ஹீது மார்கஸ் செல்லும் வழி’ என்று அது மாற்றப்பட்டதை எழுத்தாளரும் நண்பருமான கீரனூர் ஜாஹீர் ராஜா கூப்பிட்டுச் சொன்னார்.

ஒருகாலத்தில் நாச்சியார், நைனார், முத்துக்கனி, செல்லம்மாள், ராசாத்தி என்றெல்லாம் பெயரிட்டு அழைத்த தமிழ் முஸ்லிம் சமூகத்தை அங்குள்ள அடிப்படைவாதிகள் இன்றைக்குப் பள்ளிவாசல் என்றுகூடத் தமிழில் எழுதத் தயங்கும் அளவுக்கு உருமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் ஒப்பீட்டளவில் புராட்டஸ்டண்டு களைக் காட்டிலும் நெகிழ்வுத்தன்மை மிக்கவர் களான கத்தோலிக்கர்களின் முந்தைய கலாச்சாரத்தின் மீது அடி விழுந்து கொண்டிருக்கிறது. புராட்டஸ்டண்டுகளை நெகிழ்வுத்தன்மை மிக்கவர்கள் என்று சொல்லும் அளவுக்குத் தீவிரப் போக்கை நோக்கி கிறிஸ்தவர்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்  பெந்தகொஸ்தேக்கள்.

எல்லோருமே அடிப்படையில் ஏதோ ஒருவகையில் தூய்மைவாதத்தை நோக்கி மக்களை வேகவேகமாகத் தள்ளிக்கொண் டிருக்கிறார்கள். தூய்மைவாதம் எங்கே இட்டுச் செல்லும்? ஒற்றைக் கலாச்சாரத்துக்கு இட்டுச் செல்லும். ஒற்றைக் கலாச்சாரம் எங்கே இட்டுச் செல்லும்? பன்மைத்துவத்தின் மீதான வெறுப்புக்கு இட்டுச் செல்லும். வெறுப்பு எங்கே இட்டுச் செல்லும்? வெறுப்பைக் கக்குபவர்களையே தங்கள் பிரதிநிதிகளாக்க இட்டுச் செல்லும். தாராளர்கள் வழிபாட்டிடங்களுக்கு வெளியே நின்று மதச்சார்பின்மை அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்; அரசியல் அறுவடைக்கான கலாச்சாரச் சாகுபடியோ உள்ளே தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது!

மே, ‘தி இந்து’, 2017

(மோடியின் காலத்தை உணர்தல்... 6)



4 கருத்துகள்:

  1. தூய்மை வாதம்...ஒற்றைக்கலாச்சாரம்...பன்மைத்துவம்....தாராளர்கள்...கலாச்சார சாகுபடி....இந்திரா பார்த்தசாரதிதான் தன் கட்டுரையின் இறுதியில் இப்படி ஏதாவது எழுதுவார்..(ஆனால் நடுப்பக்கம் வாசிக்கும் என்
    போன்ற சாமானியனுக்கும் அது புரியும்..!)

    பதிலளிநீக்கு
  2. இதை படித்தவுடன் நினைவில் வருவது இது தான்
    கோபியின் அருகே உள்ள ஒரு பச்சமலை பாலமுருகன் கோவில் என்பதை சுப்ரமணிய சுவாமி கோவில் என்று மாற்றி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. வெறுப்பு எங்கே இட்டுச்செல்லும் என்பதற்கான பதில் அருமை.

    பதிலளிநீக்கு
  4. தூய்மை வாதம் என்பதன் பொருள் ?

    பதிலளிநீக்கு