மோடிக்கு தேசியவாதக் களம் அமைத்துக் கொடுத்தது யார்?


கொல்கத்தா சென்றிருந்த சமயத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ‘ஞான சங்க’ மாநாடு அங்கு நடந்திருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அவர்களில் 51 பேர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பங்கேற்ற நிகழ்வு இது. இந்தியாவின் கல்வி, கலாச்சாரத் துறையை, முக்கியமாக வரலாற்றை மாற்றியமைப்பது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். ‘’இதுவரை வேட்டைக்காரர்கள் பார்வையிலிருந்து கூறுவதாக இந்திய வரலாறு இருந்தது; இனி அது சிங்கம் சொல்லும் வரலாறாக மாற்றப்படும்’’ என்று பேட்டி அளித்திருந்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத். இனி யாரெல்லாம் தேசத்தின் நாயகர்களாகவும் வில்லன்களாகவும் மாற்றப்படுவார்கள் என்றும் இந்தியாவின் தேசியவாதம் எப்படிப்பட்டதாக வடிவமைக்கப்படும் என்றும் மனதில் ஓட ஆரம்பித்தபோது எதிர்காலம் அச்சமூட்டுவதாக மாறத் தொடங்கியது.

தேசியவாதத்தை ஒரு கூர் ஈட்டியாக சர்வாதிகாரிகள் பயன்படுத்துவது உலகெங்கிலும் இயல்பு. இங்கே சங்கப் பரிவாரமும் மோடியும் அதைக் கையில் எடுத்திருப்பதில் ஆச்சரியமில்லை. வளர்ச்சியையும் மதத்தையும் ஒரு பிரகடனம்போலப் பயன்படுத்தினாலும் மோடி தன் கூர் ஈட்டியாக தேசியவாதத்தையே பயன்படுத்துகிறார். தன்னை நோக்கி வரும் எல்லாப் பெரிய விமர்சனங்களையும் அவர் தேசியவாதத்தின் மூலமே எதிர்கொள்கிறார். வரலாற்று நடவடிக்கையான பணமதிப்பு நீக்கம் மக்களைக் கடுமையான வதைக்குள் தள்ளியது. இரண்டு மாதங்களுக்கும் மேல் அன்றாடம் ரூ.2,000 தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எடுப்பதற்காக வங்கி ஏடிஎம்களின் முன் கால் கடுக்க நின்றார்கள் மக்கள். இந்நடவடிக்கையின் மூலம் அரசு சாதித்தது என்னவென்று இன்று வரை நாட்டுக்குத் தெரியாது. ஆனால், தன்னுடைய நடவடிக்கை நாட்டுக்கு நல்லது என்று மக்களை மோடியால் நம்ப வைக்க முடிகிறது.

ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தும், ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ கனவைக் கொண்ட மோடி அரசு தன்னுடைய செயல்திட்டத்துக்கு முன்னோட்டம்போல, ‘ஒரே நாடு.. ஒரே வரி’, ‘ஒரே நாடு.. ஒரே சந்தை’, ‘ஒரே நாடு.. ஒரே தேர்வு’, ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ என்று இந்த அரசு அடுத்தடுத்து அடியெடுத்துவைக்கும் செயல்திட்டங்கள் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் எவரையும் நடுங்கவைக்கின்றன. ஏனென்றால், கூட்டாட்சித் தத்துவப்படி அமைக்கப்பட்ட இந்த நாடு அடிப்படையிலேயே அதன் பல்வேறு வண்ணங்கள், அடையாளங்களாலேயே தனித்துவம் பெறுகிறது. ஆனால், பொதுத் தளத்திலோ பெரிய தாக்கங்களை இவை ஏற்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகள் கவலையோடு பேசினாலும்கூட சமூகம் அப்படியே கடக்கிறது. எதிர்க்கட்சிகள் இன்னும் கொஞ்சம் அழுத்திப் பேசினால், விமர்சிப்பவர்களை ‘தேச விரோதிகள்’ ஆக்கிவிடுகிறார்கள். ஆனால், இன்று மோடி ஆடுவதற்கேற்ப இந்தியாவின் தேசியவாதக் களத்தை அமைத்துக் கொடுத்ததற்காக, காங்கிரஸும் இடதுசாரிகளுமே முக்கியமான பொறுப்பேற்க வேண்டும் என்று கருதுகிறேன்.


தேசியவாதம் எனும் கருத்தாக்கம் இந்தியாவுக்குப் புதிது. இந்தியாவைப் பொறுத்தவரையில் - அதன் இன்றைய வடிவில் அது ஒரு தேசமாக இருந்ததே இல்லை. இங்குள்ள மக்கள் ஒரே இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ எந்த வகையிலும் ஒரு வகைமைக்குள் கொண்டுவரப்பட முடியாதவர்கள். இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பல அடையாளங்கள் இருக்கின்றன. ஒருவர் இங்கே பிராந்தியம், தான் சார்ந்திருக்கும் மாநிலம் சார்ந்து ஒரு தருணத்தில் அடையாளப்படுத்தப்படுகிறார். மதம் சார்ந்து ஒரு தருணத்தில் அடையாளப்படுத்தப்படுகிறார். மொழி சார்ந்து ஒரு தருணத்தில் அடையாளப்படுத்தப்படுகிறார். இன்னும் இனம் சார்ந்து, சாதி சார்ந்து என்று பல வகைமைகளில் மக்கள் இப்படி தனித்தனி அடையாளத்தையும் ஒருமித்த உணர்வையும் வெவ்வேறு தருணங்களில் அடைகிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் பொதுவான ஒரு தருணத்தில் அடையாளமற்ற மனநிலையில் இருக்க, இங்கிருக்கும் பன்மைத்துவச் சூழலும், அவர்களுக்கான சம உரிமையுமே காரணமாக இருக்கின்றன.

ஆக, சம உரிமை அளிக்கும் ஒன்றியமாகவே இந்தியா எனும் தேசம் உருப்பெருகிறது. அதன் மீதே இன்றைய தேசியமும் தேசியவாதமும் கட்டமைக்கப்பட்டிருகின்றன. ஆனால், சுதந்திரத்துக்குப் பின், ஆழ ஊன்றி வளர்க்கப்பட்ட நம்முடைய தேசியமானது, அதன் உள்ளடக்கத்தில் எந்தத் தன்மையை மேலோங்கிப் பெற்றிருக்கிறது? கூட்டாட்சித் தத்துவப்படி அமைக்கப்பட்ட பல இனங்களின் ஒன்றியம் இந்த நாடு என்ற உணர்வையா நடைமுறையிலிருக்கும் நம்முடைய தேசியமும் தேசியவாதமும் இன்று பிரதிபலிக்கின்றன? கிடையவே கிடையாது!

பிரிட்டிஷாரால் கொண்டுவரப்பட்ட, மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை முன்னிறுத்தும் எந்த அரசியலமைப்புச் சட்டத்தை முன்னதாக எதிர்த்தார்களோ, அதே அரசியலமைப்புச் சட்டத் தன்மையைப் பெருமளவில் உள்வாங்கிக்கொண்டதாக இந்நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் முடிவுக்கு காங்கிரஸார் வந்தபோதே இந்நாட்டின் உண்மையான பன்மைத்துவம் பல்வேறு இனங்களின், மாநிலங்களின் உரிமைகள் - பின்னுக்குப் போய்விட்டது. நேருவில் தொடங்கி அம்பேத்கர் வரை எல்லோருமே மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தையே விரும்பினர். ஒரே ஒரு மனிதர், அதை ஏமாற்றத்துடன் பார்த்தார். அபாயத்தைச் சுட்டிக்காட்டினார். “காங்கிரஸாரிடமும்கூட சுதந்திரம் குறித்த உட்பொருளில் ஒருமித்த கருத்து இல்லை… அதிகாரப்பரவலாக்கலில் எத்தனைப் பேர் உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை. இதற்கு மாறாக, இந்தியாவை முதல் தரமான ராணுவ சக்தியாகவும் வலிமையான மைய அரசாகவும் அதை ஒட்டியதாகவே மொத்த அமைப்பையும் உருவாக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார் காந்தி.

இந்தியாவில் மாநிலங்களின் சுயாட்சி என்பது வெறுமனே பிராந்திய அடிப்படையிலான பிரநிதித்துவம் மட்டும் அல்ல. மாறாக, பல்வேறு இனங்களின் மொழி, கலாச்சாரம், வரலாற்று உரிமைகளோடு தொடர்புடையது அது. மேலும், உண்மையான அதிகாரப் பரவாக்கலும் பலதரப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவ உரிமையும் அங்கிருந்தே தொடங்குகின்றன. சுதந்திரத்துக்குப் பிந்தைய கடந்த 70 ஆண்டுகளில் 49 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், ஏற்கெனவே அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருந்த அதிகாரங்களையும் மாநிலங்களிடமிருந்து படிப்படியாகப் பறித்து, மேலும் மேலும் அதிகாரத்தை மையத்தில் குவிப்பதிலேயே குறியாக இருந்தது; பாஜக தன் பங்குக்குப் பறித்தது, பறித்துக்கொண்டிருக்கிறது. ஆக, இந்நாட்டின் ஆன்மாவான ‘இது பல இனங்களின் ஒன்றியம்’ எனும் உண்மை நம்முடைய தேசியத்தில் திரையிடப்பட்டது.

இந்தியா அடிப்படையில் ஒரு தேசமா, பல இனங்களின் ஒன்றியமா; இந்த இரண்டில் எதைப் பிரதானமாக மக்கள் மனதில் நிலைநிறுத்துவதாக நம்முடைய தேசியம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனும் நுட்பமான ஒரு விஷயத்தில் அடங்கிவிடுகிறது இன்றைய தேசியத்தின் அரசியல். இன்று எத்தனை மாணவர்களுக்கு இங்குள்ள பல்வேறு இனங்களின் வரலாறு, அவற்றின் மொழி- கலாச்சாரச் செழுமைகள், உரிமைகள் தெரியும்? பெரும்பான்மைக் காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸுக்கும் நாடு முழுவதும் கல்வி, ஆய்வு, கலாச்சாரத் துறையில் செல்வாக்கு செலுத்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இதில் பங்கிருக்கிறதா இல்லையா?

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எதிர்மறையாக நடந்துகொள்ள அதன் அதிகார வேட்கையும், கட்சிக்குள் மேலோங்கியிருந்த இந்தி தேசியவாதிகளும் முக்கியமான காரணம் என்றால், கம்யூனிஸ்ட்டுகளிடமோ எப்போதுமே இதுகுறித்து ஒரு தயக்கம் இருந்துவருகிறது. மாநிலங்களின் உரிமைகள் தொடர்பாக வெளியே உரக்கப் பேசுபவர்கள் அதுவே இனங்களின் உரிமைக் குரல்களாக மாறும்போது, மௌனமாகிவிடுவதை ஒரு வரலாறாகவே அவர்கள் வைத்திருக்கிறார்கள். சோவியத் ஒன்றியத்தின் பார்வையோடு இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் பார்வையை இந்த இடத்தில் ஒப்பிடலாம். தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தொடங்கி, ஜல்லிக்கட்டுப் போராட்டம் வரையில் தொடரும் தயக்கத்துக்கு ஒரு வரலாற்று நீட்சி இருக்கிறது அல்லவா?

இந்த மனநிலையே நம் கல்வித் துறையிலும் எதிரொலித்தது.

இன்று நாம் எதிர்கொள்ளும் மேலோட்டமான, ஆழமான அரசியலுணர்வற்ற இளைய தலைமுறையின் உருவாக்கத்தில் இதற்கும் ஒரு பங்கிருக்கிறது. நாம் வளர்த்தெடுக்கும் தேசியம் ஒரு சர்வாதிகாரியின் கைகளில் போனால் என்னவாகும் என்ற பிரக்ஞையோடு இந்த விஷயம் அணுகப்பட்டதாகவே தெரியவில்லை. ஆக, யார் பன்மைத்துவத்தை உள்ளடக்கமாகக் கொண்டதாக இந்த தேசியம் உருவாகக் காரணமாக இருந்திருக்க வேண்டுமோ, அவர்கள் அந்த இடத்தில் தவறிவிட்டார்கள். விளைவாக, இன்றைய தேசியவாதமும் அரசியலற்றதன்மையோடு வெற்று முழக்கமாகவே எஞ்சி நிற்கிறது. அரசியலற்றதன்மை இயல்பாக வலதுசாரித்தன்மையோடு சேர்ந்துகொள்கிறது.

தேசியவாதம் ஆபத்தானது என்றால், உள்ளீடற்ற தேசியவாதம் அதைக் காட்டிலும் ஆபத்தானது. ஒரு சாமானிய இளைஞரிடத்தில் தேசியத்தின் பெயரால் முன்வைக்கப்படும் ஒற்றைக் கலாச்சாரத்தை எதிர்த்து யாரேனும் கேள்வி எழுப்பினால், அந்த இளைஞர் ஏன் தொந்தரவுக்குள்ளாகிறார் அல்லது இன்றைய மோடி அரசாங்கத்தின் ‘தேச பக்த’ படையின் ஒரு அங்கமாகி, தேச விரோத முத்திரை குத்தும் ஆளாக மாறுகிறார் என்றால், அதற்கான காரணம் அரசியலற்றதன்மையைக் கொண்ட இன்றைய தேசியத்தின் ஒற்றைத்தன்மை உருவாக்கத்தில் இருக்கிறது! இன்றைக்கு யாரெல்லாம் ஒற்றைத்தன்மையை எதிர்க்கும் இடத்தில் நிற்கிறார்களோ அவர்கள் எல்லாம் முதலில் தேசியம் தொடர்பிலான தங்கள் பார்வையை முதலில் பன்மைத்துவமிக்கதாக உருமாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், உள்ளீடற்ற பன்மைத்துவ வாளால், தேசியவாதக் கூர் ஈட்டியை எதிர்கொள்ள முடியாது!

மே, 2017, ‘தி இந்து’

10 கருத்துகள்:

 1. அருமையான கருத்து சார் எதிர்கட்சி வரிசை பலவீனமாக இருப்பதும் மோடி வகையறா செய்யும் அரசியலும் எப்பொழுதும் ஜனநாயகத்தை புதைகுழிக்கே இட்டுச்செல்லும்

  பதிலளிநீக்கு
 2. இந்தியா ஒரு தேசமல்ல. பலதேசங்களின் தேசமாகும்.ஐரோப்பா போன்று முழுகண்டமாகும்.இந்தியாவில் பல்வேறு இனங்கள் மொழிகள் கலாச்சாரங்கழ் மதங்கள் இப்படி வேற்றுமையில் ஒற்றுமையுள்ளஇந்தியாவை ஒற்றை கலாச்சார கருத்தாக்கத்துக்குள் கொதண்டுவரத்துடிக்கும் பிஜேபியின் மறைமுக அஜண்டாவைமுறியடிக்க மாணவர் இளைஞர்கள்ஒன்றுபடவேண்டும்.இந்தியாவின் தொன்மையை இளைய தலைமுறை புரிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. இந்தியா ஒரு தேசமல்ல. பலதேசங்களின் தேசமாகும்.ஐரோப்பா போன்று முழுகண்டமாகும்.இந்தியாவில் பல்வேறு இனங்கள் மொழிகள் கலாச்சாரங்கழ் மதங்கள் இப்படி வேற்றுமையில் ஒற்றுமையுள்ளஇந்தியாவை ஒற்றை கலாச்சார கருத்தாக்கத்துக்குள் கொதண்டுவரத்துடிக்கும் பிஜேபியின் மறைமுக அஜண்டாவைமுறியடிக்க மாணவர் இளைஞர்கள்ஒன்றுபடவேண்டும்.இந்தியாவின் தொன்மையை இளைய தலைமுறை புரிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. இந்தியா ஒரு தேசமல்ல. பலதேசங்களின் தேசமாகும்.ஐரோப்பா போன்று முழுகண்டமாகும்.இந்தியாவில் பல்வேறு இனங்கள் மொழிகள் கலாச்சாரங்கழ் மதங்கள் இப்படி வேற்றுமையில் ஒற்றுமையுள்ளஇந்தியாவை ஒற்றை கலாச்சார கருத்தாக்கத்துக்குள் கொதண்டுவரத்துடிக்கும் பிஜேபியின் மறைமுக அஜண்டாவைமுறியடிக்க மாணவர் இளைஞர்கள்ஒன்றுபடவேண்டும்.இந்தியாவின் தொன்மையை இளைய தலைமுறை புரிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 5. மோடி எதையும் தேசீயத்தின் பெயரால் முன்னெடுக்கிறார் என்பது வெளிப்படை.

  இந்த தேசீயத்திற்க்கு ராஜபாட்டை போட்டுக் கொடுத்தது காங்கிரசும்..கம்யூனிஸ்ட்டுகளும் என்கிறார் சமஸ்.

  இது எந்த அளவுக்கு உண்மை...?

  கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் இன தேசீயம்..மொழி தேசீயம்..நாட்டு தேசீயம் .. பேசியவர்கள் அல்ல. அவர்கள் வர்க்க தேசீயம் பேசியவர்கள்.

  இன்னும் சொல்லப் போனால்...அவர்கள் உலகத்தையே ஒரு தேசமாகப் பார்த்தவர்கள்.

  எனவே அவர்களை இன்று மோடியின் தேசீயத்திற்க்கு வழி சமைத்துக் கொடுத்தவர்கள் எந்த அடிப்படையில் சமஸ் சொல்கிறார் ..?என்று தெரியவர்கள்.

  சமஸ் குறிப்பிடும் இன்றைய மோடி பிராண்ட் தேசீயத்தை வளர்த்தெடுத்ததில் காங்கிரசுக்கு ஒரு சிறிய அளவிலான பங்கு மட்டுமே உண்டு.

  வெள்ளையர் ஆட்சியில் இந்தியாஒரு தேசம் என்பதை கட்டியமைக்க காங்கிரஸ் முன்னெடுத்த தேசீயமும்...இன்றைய மோடியின் வெறியேற்றப்பட்ட இந்துத்வ.தேசீயமும் ஒன்றாகுமா...?

  மோடியின் இன்றைய இந்துத்வதேசீயத்திற்க்கு அந்தக் காலத்திலேயே கொடிவழி உறவாக இருந்தவர் சவார்க்கார்.

  விடி சவார்க்கர்....டாக்டர் மூஞ்சே...சியாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்கள் எதை அன்றைக்கு தேசீயம் என்று வரையறுத்தார்களோ...அதுவேஇன்றைய மோடியின் தேசீயம்.

  இதன் மூலம் காங்கிரஸ் பேசிய அந்தக்கால நாட்டு நலன் கருதிய தேசீயமும்...இன்றைக்கு மோடி பேசி வரும் தேசீயமும் ஒன்றேதான் என்று தவறான வரலாற்றைக் கட்டியமைக்க சமஸ் துணை போகிறாரா...?

  இன்றைக்கு நாடு முழுக்க ஒரே வரி (ஜி எஸ் டி ) ஒரே தேர்வு முறை...(நீட் ) ஒரே தேர்தல்...என்று இந்த நாட்டை ஒற்றை ஏகாதபத்திய வல்லரசாக கட்டமைத்து வரும் மோடிபாணி அரசியலை...எல்லோரும் ஒரு வித பயத்துடன் அவதானித்து வருகின்றனர் .

  ஏன்...மோடியின் கட்சியிலே கூட..அவருக்கு எதிரான இன்னொரு ஆளுமை இல்லை.

  இது மிகவும் கவலைக்குரியது.

  நன்றி : முகம்மது ஷூஐபு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கம்யூனிஸ்ட்களுக்கு பங்கில்லை என்று சொல்வது தவறு. கம்யூனிஸ்ட்கள் சர்வதேசம் பேசுவது நம் நாட்டில் மட்டும் தான், இதே கம்யூனிஸ்ட்கள் ரஷ்யா அல்லது சீனாவிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள், அந்த இரு நாடுகளின் நலன் அடிப்படையில் தான் நம் நாட்டிலும் அரசியல் செய்கிறார்கள். அமெரிக்கா என்ன செய்தாலும் அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்துவார்கள் ஆனால் அதே கம்யூனிஸ்ட்கள் சீனா எந்த அராஜகம் செய்தாலும் வாய் மூடி மௌனமாக இருப்பார்கள் உதாரணம் சீனா அடாவடியாக இந்தியா பகுதிகளை தன்னுடையது என்று அவர்கள் நாட்டு வரைபடத்தில் வெளியிட்டார்கள் அதை எதிர்த்து கம்யூனிஸ்ட்கள் ஒரு வார்த்தை கூட இன்று வரையில் பேசியது இல்லை. இதே இந்திய கம்யூனிஸ்ட்கள் இந்திய அமெரிக்கா ஒப்பந்தத்தை எதிர்த்து மிக வெளிப்படையாக இந்திய அமெரிக்கா ஒப்பந்தம் சீனா நலனுக்கு எதிரானது அதனால் சீனா கோபம் கொள்ளும் என்று எல்லாம் பிரச்சாரம் செய்தார்கள். கம்யூனிஸ்ட்களுக்கு இந்திய நலனை விட சீனா ரஷ்யா நலன் தான் முக்கியம். அப்படி பட்டவர்களை எப்படி சாதாரண இந்திய மக்கள் நம்புவார்கள் ? அதனால் இந்திய நலன் பேசும் பிஜேபியை சாதாரண இந்திய மக்கள் ஆதரிக்கிறார்கள்.

   நீக்கு
 6. என்னை பொறுத்தவரையில் பிஜேபியை விட மிக ஆபத்தானவர்கள் இந்திய கம்யூனிஸ்ட்கள் அவர்களை தான் மக்கள் அனைவரும் எதிர்த்து புறக்கணிக்க வேண்டும், கம்யூனிசம் பேசி நாட்டை பலவீனமான நிலைக்கு கொண்டு செல்ல பார்க்கிறார்கள். காஷ்மீர் பிரச்னை மாவோயிஸ்ட் பிரச்சனை நக்சல் பிரச்சனை என்று நாட்டில் நடக்கும் பெரும்பாலான வன்முறை செயல்களுக்கு மூல காரணம் இந்த கம்யூனிசம் பேசுபவர்களாக தான் இருக்கிறார்கள். காஷ்மீரில் நடப்பது இஸ்லாமிய மத தீவிரவாதமாக இருந்தாலும் அதை வெளிப்படையாக நம் கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கிறார்கள் அவர்களை பொறுத்தவரையில் இஸ்லாமிய தீவிரவாதம் அமெரிக்காவை எதிர்க்கிறது கம்யூனிஸ்ட்களும் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள், அதனால் எதிரியின் எதிரி நண்பன் என்ற அடிப்படையில் இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தை கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கிறார்கள் (கவனிக்கவும் சீனாவும் இந்தியாவிற்கு எதிரான இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிக்கிறது, அந்த தீவிரவாதிகளை ஐநா சபையில் காப்பாற்றுகிறது)

  கம்யூனிஸ்ட்களை ஆதரிக்கும் சமஸ் போன்றவர்கள் இதை பற்றி எல்லாம் பேச மாட்டார்கள்....

  கம்யூனிஸ்ட்களை தேசவிரோதிகள் என்று சொல்வது எந்த வகையில் தவறாக இருக்கும் என்று சமஸ் சொல்வாரா ?

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. ஜி. எஸ். டி., நீட் தேர்வு இரண்டுமே முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் அல்லவா? நீட் தேர்வு இந்திய மருத்துவ கழகத்தால் 2012 இல் அறிவிக்கப்பட்டது. (https://en.wikipedia.org/wiki/National_Eligibility_and_Entrance_Test). இந்தியை தேசிய மொழியாக சுதந்திரத்திற்கு முன்பிருந்தே முன்னிருத்தியது காங்கிரஸ், காந்தி இல்லையா? இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் யார் ஆண்டபோது எழுந்தன? காங்கிரஸ் செய்தால் தேசிய ஒருமைப்பாடு. பா ஜ க செய்தால் நாட்டை ஒற்றைமயமாக்குதலா? இடதுசாரிகள், கழகங்கள் எழுதிய வரலாறுகள் நடுநிலைமை கொண்டவைதானா? யார் ஆண்டாலும் வலிமையான எதிர் கட்சிகள் வேண்டும். அதற்காக அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல பாஜக செய்யும் அனைத்திலும் குறை காண்பது வருந்தத்தக்கது.

  பதிலளிநீக்கு
 9. அதிகாரம் மையபடுவது சரியல்ல என்பதற்கு காந்தி கூறிய விளக்கத்தை சமஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதே போல் ஏன்அதிகாரம் மையப்படவேண்டும் என்பதற்கு அம்பேத்கர் அளித்த விளக்கத்தை குறிப்பிடவில்லை. அம்பேத்கர் அளித்த விளக்கத்தையும் குறிப்பிட்டு, பின்னர் அது ஏன் தனக்கு ஏற்புடையதாக இல்லை என்று சமஸ் விளக்கமளித்திருந்தால் நடுநிலையான கட்டுரை என ஏற்கலாம். தற்பொழுது இது தனக்கு வேண்டியதை மட்டும் வெளியிட்டு, விரும்பாததை மறைத்து எழுதிய ஒருதலைபட்சமான கட்டுரையாக உள்ளது

  பதிலளிநீக்கு