ஏன் மாட்டைக் கையில் எடுக்கிறார்கள்?


மாட்டைப் புரிந்துகொள்ள முற்படுவதன் மூலமாக ஒரு நாட்டின் அரசியலையோ, அந்நாட்டை ஆள்கின்ற அரசையோ புரிந்துகொள்ள முற்படுவது என்பது வேடிக்கையான ஒரு அரசியல் ஆய்வுதான். நாட்டின் 50% மக்கள் இன்னமும் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில், அதுவும் 29.9 கோடி மாடுகள் வளர்க்கப்படும் ஒரு நாட்டில் மாடு வளர்ப்பைப் பாதிப்படையச் செய்யும் செயல்திட்டங்களை ஒரு அரசாங்கமோ, அரசியல் கட்சியோ பகிரங்கமாக முன்னெடுக்க முடியுமா?

முடியவே முடியாது என்றே நான் நினைக்கிறேன்!



இந்திய விவசாயிகளுக்கு, நேரடி வேளாண்மையைத் தாண்டி இன்றுள்ள பெரிய ஆதாரம் கால்நடை வளர்ப்பு. 1947-ல் நம் நாட்டின் கால்நடைகளின் எண்ணிக்கை 29.29 கோடி. இன்றைக்கு 51.2 கோடி. இவற்றில் மாடுகளின் எண்ணிக்கை மட்டும் 29.96 கோடி. சுதந்திரத்துக்குப் பிந்தைய 70 ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மாடுகளின் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறார்கள் நம்முடைய விவசாயிகள். நேர் எதிராக இந்த 70 ஆண்டுகளில் கால்நடை வளர்ப்புக்கான இயற்கையான சூழல், பாதிக்கும் மேல் அழிக்கப்பட்டிருக்கிறது. பல கிராமங்களில் கால்நடைகளுக்கு என்று இன்று மேய்ச்சல் நிலம்கூட கிடையாது. ஆனாலும், பால் உற்பத்தியைக் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் இரண்டு மடங்குக்கு மேல் நம் விவசாயிகள் உயர்த்தியிருக்கிறார்கள்.

இந்தியாவில் பாரம்பரியமாக மாடு வளர்ப்புத் தொழில் பிரதானமாக மூன்று துறைகளையே பெரிதும் நம்பியிருந்தது. இதில் பால், தோலுக்கு அடுத்த நிலையில் வருமானம் சார்ந்து சொற்ப இடத்திலேயே மாட்டிறைச்சி இருந்துவந்தது. அதாவது, ஒரு பாரம்பரிய இந்திய விவசாயி ஆடு வளர்ப்பதுபோல இறைச்சித் தொழிலை நம்பி மாடு வளர்ப்பதில்லை. ஆனால், இந்த நிலைமை பிற்பாடு வெகுவாக மாறியது. குறிப்பாக, உலகமயமாக்கலுக்குப் பிந்தைய இன்றைய காலகட்டத்தில் இறைச்சித் தொழிலானது மாடு வளர்ப்பின் பிரித்துப் பார்க்க முடியாத ஒரு அங்கமாகிவருகிறது. இன்றைக்கு இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி சந்தையின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.30,000 கோடி. மேலும், இறைச்சித் தேவைக்காக மாட்டை அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டால் பெரும்பாலான இந்திய விவசாயிகள் மாடு வளர்ப்பையே விட்டுவிடும் அல்லது இன்றைக்கு விற்பதுபோல மூன்று மடங்கு விலைக்குப் பால் விலையை உயர்த்தி விற்கும் நிலை ஏற்படும்.

உத்தர பிரதேசத்தில் இருந்த நாட்களில் நண்பர்கள் சொன்னார்கள், “மாட்டிறைச்சி விஷயத்தில் பேசுவதைத் தாண்டி உண்மையாகவே கை வைத்தால் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப அதுவே போதுமானது; பாஜகவால் மட்டும் அல்ல; எந்த அரசியல் கட்சியாலும் இந்தியாவில் ஒருநாளும் மாடு மீது கை வைக்கவே முடியாது. சொல்லப்போனால், இந்தத் தேர்தலில் உத்தர பிரதேச மக்களுக்கு பாஜக கொடுத்திருக்கும் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று, ‘குஜராத்தைப் போல உத்தர பிரதேசத்திலும் பால் உற்பத்தியை அதிகரித்து, வெண்மைப் புரட்சியை உண்டாக்குவோம்’ என்பது. குஜராத் ’வெண்மைப் புரட்சி’ சாஸ்திரி காலத்தில் காங்கிரஸ் உருவாக்கியது என்பது இன்றைய தலைமுறை உத்தர பிரதேச விவசாயிகளுக்குத் தெரியாது என்றாலும், ‘வெண்மைப் புரட்சி’க்கு மாடு வளர்ப்புத் தொழிலை அரசாங்கம் எவ்வளவு தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த விஷயத்தில் அரசாங்கம் ஏதாவது கோளாறு செய்தால் அரசாங்கத்தையே அவர்கள் தூக்கியடிப்பார்கள்!”

உண்மைதான். நாட்டிலேயே அதிகமான மாடுகள் உள்ள மாநிலம் உத்தர பிரதேசம். ஆனால், மாட்டிறைச்சித் தொழில் வளர்ந்த அளவுக்குப் பால் உற்பத்தி அங்கு வளரவில்லை. கடந்த 15 வருஷங்களை எடுத்துக்கொண்டால், மாட்டிறைச்சி உற்பத்தி 253% வளர்ந்திருக்கிறது. ஆனால், பால் உற்பத்தி 25% மட்டுமே வளர்ந்திருக்கிறது. நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டாலும், அதனால் விவசாயிகளுக்கு லாபம் அதிகம் இல்லை. ஏனென்றால், நாட்டுப் பசுக்களே இங்கு அதிகம். உதாரணமாக, 15 நாட்டுப் பசுக்களுக்கு ஒரு பசுதான் சீமைப்பசு. நாட்டுப் பசுவோடு ஒப்பிட்டால் ஒரு சீமைப்பசு குறைந்தது மூன்று மடங்கு பால் தரும்.

பஞ்சாப், ஹரியாணா, குஜராத்தில் எல்லாம் ஒரு நாட்டுப் பசுவுக்கு 8 சீமைப்பசுக்கள் என்கிற விகிதத்தில் மாடுகள் இருக்கின்றன. அதனால், அங்கெல்லாம் பால் உற்பத்தியும் அதிகம்; விவசாயிகளுக்கான லாபமும் அதிகம். குஜராத்தை எடுத்துக்கொண்டால், அங்கு கொள்முதலாகும் பாலில் மூன்றில் ஒரு பங்கு பால் பொருட்கள் தயாரிப்புக்காகச் செல்கின்றன. இங்கு அந்த வசதி இல்லை. இதையெல்லாம் பேசித்தான் இந்த முறை பாஜக அங்கு ஓட்டு வாங்கியிருக்கிறது. மாட்டிறைச்சி அரசியலை அதிகம் பேசினால், விவசாயிகள் வெறுத்துவிடுவார்கள். ஏனென்றால், இன்றைக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதியைக் காட்டிலும் அதிகம் பணம் தரும் தொழில் இது. தவிர, பசுப் பாதுகாப்பு என்று பகட்டுவது காலப்போக்கில் பசுக்களின் இனத்தையே இல்லாமலாக்கிவிடக் கூடியது. ஏனென்றால், ஒரு பசு அதிகபட்சம் 10-15 வருஷம் வரைக்கும் பால் கொடுக்கலாம். ஆனால், 20 வருஷங்கள் வரைக்கும் உயிரோடு இருக்கக் கூடியது. கறவையை நிறுத்திய பின், பயன் தராத ஒரு விலங்குக்கு யார் தினமும் தீனியிட்டு வருஷக்கணக்கில் வளர்ப்பார்கள்?

இன்றைக்கு ஒரு விவசாயி மாடு வளர்க்கிறார் என்றால், குறைந்தது 10 வருஷம் அது பால் கொடுக்கும், இடையில் அது கன்று போடும் அந்தக் கன்று பசுவாக இருந்தால் வளர்ப்புக்கு, காளையாக இருந்தால் இறைச்சிக்கு அப்புறம் கடைசியாக தாய் மாடும் அடிமாட்டுக்கு என்ற கணக்கிலேயே வளர்க்கிறார்கள். இப்படியெல்லாம் இல்லாமல், ஒரு மாட்டுக்கு அன்றாடம் ரூ.100-ரூ.200 செலவிட்டு ஒரு லிட்டர் பாலை ரூ.30 கொள்முதல் விலைக்கு விற்று ஒரு விவசாயி காலம் தள்ள முடியாது. ஆக, மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களே மறைமுகமாக மாடுகள், மாடு வளர்ப்பு, குறைவான பால் விலைக்கு உதவுகிறார்கள் என்பதே இன்றைய யதார்த்தம்.

2016-ல் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகின் முதலிடம் நோக்கி நகர்ந்தது இந்தியா. மாட்டிறைச்சி ஏற்றுமதிச் சந்தையில் இன்று கிட்டத்தட்ட உலகின் ஐந்தில் ஒரு பங்கு தேவையை இந்திய விவசாயிகள் நிறைவேற்றுகின்றனர்; தவிர உள்நாட்டிலும் இறைச்சித் தேவையைக் கணிசமான அளவில் பூர்த்திசெய்கின்றனர். பாஜக அரசின் சமீபத்திய நடவடிக்கைகளுக்குப் பிறகு மாடுகளை வாங்கவே வியாபாரிகள் அஞ்சுகிறார்கள். குறிப்பாக, இறைச்சிக்காக மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்குச் சமீபத்தில் விதிக்கப்பட்டிருக்கும் தடைச் சூழல் நீடித்தால், மாட்டிறைச்சி வியாபாரத்துக்கே மாடுகளை அனுப்ப முடியாத நிலை உருவாகிவிடும். விளைவாக மாடு வளர்ப்புத் தொழிலே சீர்குலைந்து போகும். அப்படியென்றால், இப்படி ஒரு நடவடிக்கையை எப்படி பாஜக அரசு எடுக்கிறது? இதன் பின்னுள்ள அரசியல் கணக்குகள் என்னவாக இருக்கும்?

நிறையக் காரணங்கள் பேசப்படுகின்றன. மாட்டிறைச்சித் தொழிலில் கணிசமான எண்ணிக்கையில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதில் தொடங்கி, சிறு குறு விவசாயிகள் ஆதிக்கத்தில் இருக்கும் இந்திய மாடு வளர்ப்புத் தொழிலைப் பெருநிறுவனங்களின் களமாக்குவது வரை! இருக்கலாம். இவை எல்லாவற்றையும் தாண்டி இரு முக்கியமான அரசியல் நோக்கங்கள் பாஜகவுக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். 1. கவனத் திசைத் திருப்பல், 2. எதிர் அணித்திரட்டல்!

நிச்சயமாக இந்த மாட்டரசியலை நிரந்தரமாகவோ, தீவிரமாகவோ பாஜக தொடராது. அதன் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும், இரண்டு பட அட்டைகள் அதன் கையில் எப்போதும் இருக்கின்றன; இந்திய ஆன்மாவோடு சிக்கலான வகையில் பிணைக்கப்பட்ட இரு படங்கள்; ஒன்று ராமரின் படம், மற்றொன்று பசுவின் படம்! இரண்டையும் மாற்றி மாற்றிக் காட்டியே காலத்தை அது ஓட்டிவந்திருக்கிறது. ராமர் படத்தை வெகுநாளாக ஓட்டிவிட்டபடியால், பசு படத்தை இப்போது அது கையில் எடுத்திருக்கிறது. இந்தப் படத்தைக் காட்டினால் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் எதிர்க்கட்சிகள் இதை நோக்கித் திருப்பிவிடுவார்கள் என்று அது கணக்கிடுகிறது. அப்படித்தான் நடக்கிறது. பாஜக கணக்கிடுவதுபோலவே அது வைக்கும் பொறிகளில் எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் சிக்கிக்கொள்வதுதான் இன்றைய இந்திய அரசியலின் பெரும் துயரம். ஆம், மோடியாலும் பாஜகவாலும் தங்களுடைய இலக்குகளை மட்டும் அல்ல; எதிரிகளின் இலக்குகளையும் இன்று தீர்மானிக்க முடிகிறது!

(உணர்வோம்…)

(மோடியின் காலத்தை உணர்தல்...13)

ஜூன் 2017, ‘தி இந்து’

6 கருத்துகள்:

  1. நல்ல கட்டுரை சார்.
    மாட்டிறைச்சி தொழில் இல்லையெனில் மாடு வளர்ப்பு தொழிலும் இல்லை என்கிற எதார்த்தத்தை உணர்த்துகிறது உங்கள் கட்டுரை .
    ராமன் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான அணிதிரட்டலுக்கு உதவியது.ஆனால் மாட்டின் படம் பெரும்பாலான மாடுவளர்ப்பு தொழிலில் இருக்கும் இந்துக்களையே பாதிக்கும் என்பதால் இந்தப்படம் பாஜகவுக்கு வெற்றியைத்தராது என்றே தோன்றுகிறது .
    பாஜக விரைவில் மக்களிடம் ஒரு பாடத்தை கற்கத்தான் போகிறது .
    அந்தபாடம் அதன் அஸ்தனத்தையும் துவங்கி வைக்கப்போகிறது

    பதிலளிநீக்கு
  2. மிகவும் சரியான கண்ணோட்டம். ஒரு விவசாயியாக இதே கருத்தை நான் இணையங்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறேன். ஆனால் உண்மையில் விவசாயிகளுக்கு இந்த உண்மை உரைத்ததாக தெரியவில்லை. அய்யாகண்ணுவோ prபாண்டியனோ இதை உணர்ந்ததாக தெரியவில்லை.
    ஆனால் ஒன்று விவசாயிக்கு ஏற்படும் பாதிப்பு நாட்டையும் மாட்டையும் கடுமையாக பாதிக்கும்

    பதிலளிநீக்கு
  3. மாட்டரசியல் தற்காலிகமாகவே இருக்கும். விரைவில் இது மாறும்.

    பதிலளிநீக்கு
  4. ஒரே ஒரு கிலோ மாட்டிறைச்சியை உருவாக்க 15415 லிட்டர் (மறை ) நீர் தேவைப்படுகிறது ஒரு கிலோ ஆட்டுக்கறி உருவாக்கவே 10,412 லிட்டர் நீர் தேவைப்படுகிறது இதே நீரில் எத்தனை ஏக்கர் சிறுதானியங்கள் விளைவிக்கலாம் எனத்தெரியுமா? நாடே நீர் பற்றாக்குறைப் பகுதிகள் அதிகமுள்ள நாடு எனும்போது இத்தனை நீரை பயன்படுத்தி கறிக்காக மாடுங்களை வளர்ப்பது எந்த வகை புத்திசாலிப் பொருளாதாரம்? பால்சுரப்பு நின்றுவிட்டாலும் அதே பசுவினால் இறக்கும்வரை கிடைக்கும் சாணமும் சிறுநீரும் இயற்கை விவசாயத்துக்கு அத்தியாவசியம் என்பது நாமறிந்தத்தானே? பேண்தகைமை வளர்ச்சி ( sustainable development ) தான உண்மை வளர்ச்சி மாட்டிறைச்சி வளர்ச்சி தற்காலிகமானது இயற்கைக்கும் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கும் எதிரானது அதனால்தான் வளர்ந்த நாடுகள் தாமே மாடு அதிகமாகி வளர்க்காமல் நம்மை மாட்டிறைச்சிக்கு சார்ந்துள்ளன நாம் அழிந்தாலும் அவர்கள் வாழவேண்டும் என நினைக்கிறார்கள் அவர்களிடம் கையூட்டு வாங்கும் நமது ஆட்களும் இங்கு மாட்டிறைச்சி அரசியல் செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  5. "இறைச்சித் தேவைக்காக மாட்டை அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டால் பெரும்பாலான இந்திய விவசாயிகள் மாடு வளர்ப்பையே விட்டு விடுவார்கள் "??. மாடு என்பது, பால்,சாணம் மட்டுமன்றி விவசாயம் ஏன் போக்கு வரத்துக்கும் உதவுகிறது. சரி.

    ஒப்பீடு அளவில் நாய் என்பது பாதுகாப்பு என்ற ஒரு சிறு அம்சம் தவிர வேறு எந்த விதத்திலும் பொருளாதார ரீதியாக பயனளிக்காத ஒரு வளர்ப்பு மிருகம். நீங்கள் சொல்லுகிற லாஜிக் படி நாய் வளர்ப்பது என்பதை ஏற்கனவே எல்லோரும் நிறுத்தி இருக்க வேண்டுமே?

    பதிலளிநீக்கு
  6. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    பதிலளிநீக்கு