வேலைக்காக வாழ்க்கையா? வாழ்க்கைக்காக வேலையா?

இந்தியர்கள் கவனிக்க வேண்டிய ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஹிலாரி கிளிண்டன். ‘பி.பி.சி’-க்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அடுத்த ஆண்டோடு அவர் அரசியலில் இருந்து விலகப்போவதாக சொல்லி இருக்கிறார். 
ஹிலாரிக்கு இப்போது 63 வயது ஆகிறது. அரசியலில் இருந்து விலகும் அளவுக்கு அவருக்கு இப்போது எந்த நெருக்கடியும் இல்லை. ஒரு வெளியுறவுத் துறை அமைச்சராக அவருடைய பணியை அமெரிக்கர்கள் திருப்திகரமாகப் பார்க்கிறார்கள். அதிபர் ஒபாமா தந்த ஏமாற்றம், அதிருப்தி ஆகியவற்றின் பின்னணியில் ஹிலாரி ஜனநாயகக் கட்சியினராலும் ஆறுதலாகவே பார்க்கப்படுகிறார். ஹிலாரி தொடர்ந்து அரசியலில் நீடிக்கும் பட்சத்தில், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அதிபர் நாற்காலியில் அவர் அமர்வதற்கான வாய்ப்புகள் இன்னுமும் முற்றுபெற்றுவிடவில்லை  தொடர்கின்றன. அமெரிக்க அதிபராவது ஹிலாரியின் வாழ்நாள் கனவு. கிளின்டன் அதிபராக ஹிலாரியும் ஹிலாரி அதிபராக கிளிண்டனும் பரஸ்பரம் உழைக்க வேண்டும் என்று கிளின்டன் - ஹிலாரி தம்பதி யேல் பல்கலைக்கழகத்தில் படித்த நாட்களில் எடுத்துக்கொண்ட உறுதிமொழி. ஆனாலும், ஓய்வு முடிவை அறிவித்து இருக்கிறார் ஹிலாரி. ஏன்?

‘‘வாழ்க்கை என்பது வேலைக்கானது மட்டும் அல்ல; வேலை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. அவ்வளவுதான், இனி நான் என் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வாழ்க்கையைச் செலவிடுவேன்.’’ - இது ஹிலாரி தன் அறிவிப்புக்குச் சொல்லி இருக்கும் காரணம்.
அமெரிக்க வாழ்க்கை முறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு இருக்கும் இந்தியச் சமூகம் கவனிக்க வேண்டிய விஷயம் இது. ஹிலாரியிடம் மட்டும் இல்லை. கிளின்டனிடமும் ஜார்ஜ் புஷ்ஷிடமும் அவருடைய தந்தை மூத்த புஷ்ஷிடமும்கூட நீங்கள் இந்தப் பக்குவத்தைப் பார்க்க முடியும். உலகின் மிக வல்லமை மிக்க  பதவியில் உட்கார்ந்து இருந்திருந்தாலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதும் ஓய்வுக்குப் பின் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதும் அமெரிக்கச் சமூகத்தில் மிக இயல்பாக நடக்கிறது. இங்கு?
இந்தியாவில் பணி ஓய்வு என்பது கிட்டத்தட்ட பணியாற்றும் நிறுவனம் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும்போது நடப்பது. அதுவும் நம்முடைய அரசியல்வாதிகளைப் பொறுத்த அளவில் கட்சிகள் சொந்த நிறுவனங்கள் என்பதால், அவர்களுடைய அகராதியில் ஓய்வு என்ற வார்த்தைக்கு இடமே இல்லை!
இந்தியாவில் அதிகாரம் தரும் போதையானது வேலையையும் பதவியையுமே வாழ்க்கையாக மாற்றிவிடுகிறது. அதிலிருந்து வெளியே வர இந்தியர்களால் முடியவில்லை.
வேலைக்காக வாழ்க்கையா? வாழ்க்கைக்காக வேலையா?
இந்தியச் சமூகத்துக்கு  இன்றைக்கு இருக்கும் தலைபோகும் வேலைக்கு நடுவே இந்தக் கேள்வியைப் பற்றி எல்லாம் யோசிக்க நேரமே இல்லை!
ஆனந்த விகடன் 2011  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக