தங்கமே தங்கம்!

இரண்டு உலகப் போர்கள் முடிந்திருந்தபோது, உலகத்தின் மொத்த கையிருப்பில் முக்கால்வாசிக்கும் மேலான தங்கம் அமெரிக்காவிடம் இருந்தது. நீண்ட காலம் தன்னிடம் இருந்த தங்கத்தின் மதிப்புக்கு இணையாக டாலர் மதிப்பு இருக்கும் வகையிலேயே டாலர்களை அச்சடித்தது அமெரிக்கா. உலக நாடுகள் தங்கள் சேமிப்பின் பெரும் பகுதியை டாலர்களாகச் சேமித்ததற்கும் அரை நூற்றாண்டுக்கும் மேல் டாலர் சர்வதேச நாணயமாக வளைய வந்ததற்கும் முக்கியமான பின்னணி இது.

முதன்முதலில், வியட்நாம் போரின்போது டாலரின் மதிப்பு கேள்விக்குள்ளானது. பிறகு, வளைகுடா போர், செப்டம்பர் தாக்குதல், ஈரான் & ஆப்கன் போர்கள், 2007&08 பொருளாதார மந்தநிலை என்று அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது சேதங்களை உருவாக்கிய எவ்வளவோ சம்பவங்கள் உண்டு. அப்போது எல்லாம் ஏற்படாத வீழ்ச்சி டாலருக்கு இப்போது ஏற்பட்டு இருக்கிறது. சர்வதேச கடன் மதிப்பீட்டுத் தரச் சான்று நிறுவனமான ‘ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ்’ அமெரிக்க அரசின் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதியை _ ‘ஏஏஏ’ & மிகவும் பாதுகாப்பானது _ என்கிற நிலையில் இருந்து தரம் இறக்கியதற்குப் பிந்தைய ஒரு மாதத்தில் உலக நாடுகள் தங்கள் சேமிப்பு முறையை மாற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டன.
‘‘இனி உலக நாணயம் என்ற அந்தஸ்துக்கு டாலர் தகுதியானது இல்லை. புதிய சர்வதேச நாணயத்தை உலகம் கண்டுபிடிக்க வேண்டிய தேவை வந்துவிட்டது’’ என்கிற சீனாவின் அறைகூவல் இப்போது நிஜமாகிவிட்டது. 1930-களில் ‘உலகம் முழுவதுக்கும் ஒரே நாணயம்’ என்கிற கருத்தாக்கத்தைப் பேசிய கெய்ன்ஸின் கனவுக்கு, இன்னும் தயாராகவில்லை என்றாலும் உலகம் இப்போது தங்கத்தை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. தங்கத்தின் தேவையும் முக்கியத்துவமும் அதிகரிப்பது இனி தவிர்க்கவே முடியாதது என்கிறது உலக தங்க ஆணையம். இனிவரும் காலங்களில் உலக நாடுகளின் சேமிப்பின் பெரும் பகுதி தங்கமாகவே இருக்கும். தங்கத்தின் விலை இனி பங்குச்சந்தையின் சின்ன அசைவுகளுக்குகூட பெரிய அதிர்வுகளைச் சந்திக்கவே செய்யும்.
உலகின் பெரிய தங்க இறக்குமதியாளரும் நுகர்வோருமான இந்தியா இப்போது என்ன செய்ய வேண்டும்?

இந்தியர்களைப் பொருத்த அளவில் தங்க முதலீடு என்பது மரபார்த்த முதலீடு. தன்னுடைய மொத்த உற்பத்தியின் 37 சதவிகிதத்தை சேமிப்பாக வைத்திருக்கும் இந்தியவைப் பொறுத்த அளவில் அது இயல்பான சேமிப்பு. இந்திய அரசிடமும் மக்களிடமும் சுமார் ஒரு லட்சம்  டன் தங்கம் கையிருப்பில் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மையான கையிருப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.
உலக அளவில் வாங்கப்படும் தங்கத்தில் 50 சதம் நகைகளாகவும் 40 சதம் முதலீடுக்காக தங்கக் கட்டிகளாகவும் 10 சதம் நகைத் தொழிலுக்காகவும் வாங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 90% தங்கம் நகைகளாகவே வாங்கப்படுகிறது. முதலீடு நோக்கில் தங்கத்தை வாங்க விரும்புவோரும்கூட இங்கு நகைகளாகவே வாங்குகிறார்கள். காரணம், நகை உற்பத்தியாளர்களின் லாபி. தங்க முதலீட்டை அதிகரிக்க இந்திய அரசு மூன்று முக்கியமான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகிறது.

சொக்கத் தங்கம் - ஒரு போலி மதிப்பீடுதங்கத்தில் சொக்கத் தங்கம் என்று ஒன்று கிடையவே கிடையாது. மென்மையான உலோகமான தங்கத்தில் பிற உலோகங்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் சேர்க்கும்போதுதான் உறுதியான நகைகள்  கிடைக்கின்றன. உலக அளவில் இந்தக் கலப்பு பல விதங்களில் இருக்கிறது. உதாரணமாக, ஒரு  22 காரட் நகை என்பது, அதில் 91.6 சதம் தங்கமும் 8.4 சதம் பிற உலோகங்கள் கலக்கப்பட்டு இருப்பதையும் குறிக்கிறது. இதுபோலவே 18 காரட் நகை என்பது 75 சதம் தங்கத்தையும், 14 காரட் நகை என்பது 58.5 சதம் தங்கத்தையும், 9 காரட் நகை என்பது 37.5 சதம் தங்கத்தையும் குறிக்கிறது. வெளிநாடுகளில் 9 காரட் முதல் 22 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. அவற்றுக்கு உரிய மதிப்பும் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை. 22 காரட் நகைகளே முன்னிறுத்தப்படுகின்றன. ஏன்? 22 காரட் நகைகள் எளிதில் சேதம் அடையக் கூடியவை. மீண்டும் மீண்டும் நகைகளை மாற்றும் தேவையை அவை உருவாக்கும் என்பதே இதன் பின்னணியில் உள்ள சூட்சமம்.
அரசு இந்தச் சூட்சமத்தை எளிதாக உடைக்க முடியும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஒரு நகையில் இருக்கும் தங்கத்தின் மதிப்புக்கு ஏற்பட 22 காரட் முதல் 9 காரட் வரை கடன் வழங்கும் என்று அறிவிப்பதன் மூலம். அதேபோல, நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கும் முறையைக் கவிட்டு, 24 காரட் தங்கக் கட்டிகள், நாணயங்களுக்கும் கடன் வழங்கும் முறையை வங்கிகள் கொண்டுவர வேண்டும். உதாரணமாக, 22 காரட் உள்ள ஒரு நகைக்கு 22,000 கடன் அளிக்கப்படுகிறது என்றால், 9 காரட் உள்ள நகைக்கு 9,000 கடன் அளிக்க வேண்டும்!

சேதாரம் - யாருக்கு?
இன்றைய நவீன முறை நகைத் தயாரிப்பில், கிட்டத்தட்ட ஒரு சதவிகிதத்துக்கும் கீழ் சேதாரத்தைக் கொண்டுவரும் தொழிநுட்பங்கள் வந்துவிட்டன. நகைத் தயாரிப்பில், கண்ணுக்குத் தெரியாத சின்ன தங்கத் தூள்களைக்கூட சேகரிக்கும் இயந்திரங்களை நகைத் தயாரிப்பு நிறுவனங்கள் வைத்து இருக்கின்றன. ஆனால், ஒரு நகைக்கு 9 முதல் 45 சதம் வரை நகைக் கடைகள் சேதாரம் வசூலிக்கின்றன. இது அடாவடித்தனம்.
நகைகளுக்கான சேதார மதிப்பை அரசு நிர்ணயிக்க வேண்டும்.

தங்கம்தான் - எங்கே விற்பது?
தங்க நகைகளை நியாயமான விலைக்கு வாங்கும் அமைப்புகள் இங்கு இல்லை. நீங்கள் ‘ஹால்மார்க்’ முத்திரை குத்தப்பட்ட நகைகளை வைத்து இருக்கலாம். ஆனால், அவற்றை இன்றைய மதிப்புக்கு அப்படியே விற்பது சாத்தியமே இல்லாதது. அதேபோல, ‘ஹால்மார்க்’ முத்திரை குத்தப்பட்ட நகைகளாகவே இருப்பினும் ஒரு கடையில் வாங்கப்பட்ட நகையை இன்னொரு கடையில் மாற்றும்போது, 3 முதல் 8 சதம் வரை சேதாரம் கழிக்கும் அடாவடியான போக்கு இங்கு இருக்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். வங்கிகள் தங்க நகைகளை வாங்கும் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.
இந்தியாவின் சேமிப்பிலும் தங்க முதலீட்டிலும் இந்த நடவடிக்கைகள் நிச்சயம் மகத்தான மாற்றங்களை உருவாக்கும்!
2011 ஆனந்த விகடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக