இரு ஆச்சரிய மனிதர்கள்!


நீர்ப் பயணத்தில் சந்தித்த இரு ஆச்சரிய மனிதர்கள் இவர்கள். ஒருவர் தன்னுடைய இளவயதில் வெடி விபத்தில் - பார்வையை அல்ல; இரு கண்களையுமே - இழந்தவர். ஆனால், அவருடைய நம்பிக்கை அகக்கண்ணாக மாறி அவரை இயக்குகிறது. நம்மைப் போல நடக்கிறார், பஸ் ஏறுகிறார், கடல் தொழிலுக்குச் செல்கிறார், மீன் பிடிக்கிறார். இன்னொருவர் ஆக்ரோஷ அலைகளும் வாரிச் சுருட்டும் சுழல்களும் மிக்க குமரிக் கடலில் சிக்கிய 18 உயிர்களைத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியவர். யார் உதவிக்கு அழைத்தாலும் உடனே கடலில் குதிப்பவர். அவருடைய தர்மம் அவரை வழிநடத்துகிறது.

தன்னம்பிக்கை நாயகன்!

“ஏல...”

“ஏல...”

“யாழி...”

“யாழி...”

“கோவேல்...”

“வாங்க...”

“வலிய...”

“பணிய...”

“ஏல...”

“ஏல...”

- கடற்கரையை நெருங்கும்போதே அழைக்கிறது அம்பா பாடல். கடலையே கயிறு கட்டி இழுப்பதுபோல, கரை வலை இழுத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆண்களும் பெண்களும். மீன்பிடி முறைகளிலேயே கொஞ்சம் வித்தியாசமான முறை கரை வலை முறை. கரையிலிருந்து சில மைல் தூரத்தில், கடலில் வலையை அரை வட்ட வடிவில் விரித்துவிட்டு, கரையிலிருந்து அதைக் கயிறு கட்டி இழுக்கும் மீன்பிடி முறை இது. விசேஷம் என்னவென்றால், ஆண்களோடு பெண்களும் பங்கேற்கும் மீன்பிடி முறை. பெரும் பகுதியான உழைப்பு கரையிலிருந்தே கொடுக்கப்பட்டாலும், கடலிலும் சிலர் நின்று ஒழுங்குபடுத்துவார்கள். கயிற்றை இழுக்கும்போது கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். இத்தகைய தருணங்களில் அவர்கள் பாடும் அம்பா பாடலைக் கேட்கத்தான் கோதண்டராமர்கோவில் சென்றிருந்தேன். ராமேஸ்வரத்துக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதி இது. முத்துமுனியன் முனிய சாமியை அங்குதான் சந்தித்தேன். பாரம்பரியமான பாடலினூடே, அன்றைய தினம் ராமேஸ்வரம் பகுதி கடலோடிகளை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்ற செய்தியையும் கலந்தடித்துப் பாடியவாறே வலையை இழுத்துக்கொண்டிருந்தார். மிகுந்த உற்சாகத்தோடு பாடிக்கொண்டே வலை இழுத்தபோதுதான் அவரிடம் அந்த வேறுபாட்டை உணர்ந்தேன்: அவருக்குக் கண்களே இல்லை!

“எனக்குச் சொந்தூரு தனுஷ்கோடி. பெரும்புயலு அடிச்சுச்சுப் பாருங்க, அதுலயே நான் தப்பினவன். சின்ன வயசுல நல்ல பழக்கம் ஏதுமில்ல. காலியாதான் திரிஞ்சன். மொரட்டு சுபாவம். கைக்துடுக்கு வாய்த்துடுக்கு. பேச்சு நீண்டா சாத்திருவேன். ஒரே அடி. இப்பமே அறுவத்தியஞ்சி நெருங்குது, நல்லாத்தானே இருக்கன்? அப்ப இன்னும் நல்லா வாட்டஞ்சாட்டமா இருப்பன்.

உத்த ஒரே தொணயா எங்கய்யா இருந்தவரைக்கும் கஸ்ட நஸ்டம் தெரியல. ஒரு நா கடலுக்கு எங்கய்யாகூடப் போயிருந்தன். வலய இழுக்குறப்போ, மீனுங்ககூடவே ஒரு சொறி வலயில ஏறிடுச்சு. வலய இழுத்த வேகத்துல அவரு நெஞ்சுல பட்டுடுச்சு. ‘ஏ... யப்பா... சொறிடா... தொட்டுராதடா’ன்னார். அவ்ளோதான். நெஞ்சை அரிச்சிக்கிட்டு ரத்தம் கொப்புளிச்சிச்சி. போய்ட்டார். அப்பவும் திருந்தல. வாரிக் கொடுக்குற கடல்ல வெடிய போட்டு மீன் புடிச்சேன்.

கடலம்மா எவ்வளவு பொறுப்பா? ஒருநா வெடிய போடும்போது, கையிலேயே வெடிச்சிடுச்சு. அப்பிடியே ஒரு கையும் போயி, மண்டை ரெண்டா செதறிட்டு. கண்ணெல்லாம் காலி. படகுல போட்டு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கிட்டு ஓடுறாங்க. ‘ஏ... யய்யா... புயல்லயே பொழச்சவன் நானு, என்னய காப்பாத்தி மட்டும் உட்ருங்க, நாஞ் சாவ மாட்டன். பொழச்சிக்குவன்’னு அனத்திக்கிட்டே இருந்தவன் அப்படியே மயங்கிட்டன். ஆஸ்பத்திரில ஒரு வாரஞ் செண்டு நெனப்பு வந்தப்போ, கண்ணு இல்ல. உசுரப் பொழைக்கவெச்சதே பெரிசுன்னுட்டாங்க.

நெலகொலஞ்சி ஊர் திரும்பினப்போதாம் தெரிஞ்சிது, எம் மேல ஊருக்கு இருந்தது பயம் இல்ல, அருவருப்புன்னு. ச்சீ... என்னடா வாழ்க்க நாம வாழ்ந்ததுன்னு போயிட்டு. ஒரு பய சீந்தல. கடக்கரயில நெதம் வந்து ஒக்காந்திருக்குறதைப் பாத்துட்டு, ஒரு கூட்டம் ஒரு நா எரக்கப்பட்டு கொஞ்சம் மீனும் சோறும் தந்துச்சு. ‘அய்யா... எனக்கு சோறு வேணாம், நா பிச்ச எதிர்பாக்கல, வேல கொடு, என்னால செய்ய முடிஞ்சதுக்குக் கூலி கொடு’ன்னு கேட்டேன். அவங்களுக்கு மலப்பு. கடத் தொழிலுக்கு ஒடம்புதான் உசுரு. கடலோடுறவனுக்கு ஒடம்பு முழுக்க கண்ணா இருக்கணும். எனக்குக் கண்ணே இல்ல. நா வுடுறதா இல்ல. சேத்துக்கிட்டாங்க.

ஒடம்பு அத்துக்கெடந்தப்போ, கிராமத்துல ஒரு ஆத்தாதான் எரக்கப்பட்டு உதவுனா. ஒழைச்சத அந்த ஆத்தாகிட்ட கொண்டுபோய் கொடுத்தன். ஒரு நா அந்த மவராசி செத்துட்டா. அந்த ஆத்தாளுக்கு ஒரு மவ. ஏ... ஆயா நா ஒன்னக் கடசி காலம் வரைக்கும் என் ராணி மாரி வெச்சு பாத்துக்குவேன். என்னய கட்டிக்குறீயான்னேன். சரின்னுச்சு. கட்டிக்கிட்டேன். மூணு புள்ளைங்க. என்னய நம்பி வேல கொடுத்தவங்களுக்கும் வாழ்க்க கொடுத்தவளுக்கும் நம்பிக்க கெடாம விசுவாசத்தக் காப்பாத்துறன்.

அதிகாலயிலயோ நடுராத்திரியிலயோ தொழிலுக்குக் கூப்பிட்டா ஒடனே ஓடியாந்திருவேன். கவனமா தொழில் பண்ணுவேன். கடுசா உழைப்பென். கண்ணில்லேன்னு நா நெனக்கிறதே இல்ல. மனசு முழுக்க நம்பிக்க கெடக்கு. வாரிக் கொடுக்க கடலம்மா இருக்கா. நாம இயற்கய துன்புறுத்தலன்னா, அதவிட நமக்குத் தொண கெடயாது. என்ன நா சொல்றது?”

கேள்விக்குப் பதில் எதிர்பார்க்காமல் ஓடுகிறார். அம்பா பாடல் தொடர்கிறது...

“ஏல...”

“ஏல...”



 
தர்மத்தின் தலைவன் !

“யாரு, எங்க ஊரு எம்ஜிஆரையா தேடிக்கிட்டுருக்கீங்க?” - இயேசுபுத்திரனைக் கன்னியாகுமரி நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறது.

கடல் நடுவே இருக்கும் பாறைகள் வெளியிலிருந்து கடற்கரைக்குச் செல்பவர்களுக்குக் கிளர்ச்சியூட்டக் கூடியவை. அழகானவை. கடற்பாறைகளின் முழு அடியையும் ஆபத்தையும் கடலோடிகள் மட்டுமே அறி வார்கள். கரைக்கடலில் பாறைகள் நிறைந்த பகுதியைத் தாண்டிச் செல்வதை ஆழி தாண்டுதல் என்று சொல்வார்கள் அவர்கள். மிகச் சவாலான பகுதி அது.

இந்தியப் பெருநிலத்தின் எல்லையான குமரிக் கடலில் இப்படி நிறைய ஆபத்தான பாறைகள் உண்டு. “அதோ தெரியிதே அது பேரே மரணப் பாறன்னுதாம் சொல்லுவம். அதுக்கிட்ட அலயில விழுந்தம் விறுவிறுன்னு இழுத்து, பாறயிடுக்குல கொண்டுபோயி சொருக்குன்னு சொருகியிரும். அதோ தெரியிதே கொஞ்சம் சின்னதா, அந்தப் பாறகிட்ட ஆப்புட்டாலும் அப்பிடித்தாம். மேல பாக்க ரெண்டு ஆளு ஒசரம் தெரியிதுல்ல, உள்ள போய்ப் பாத்தீங்கன்னா அசந்துருவீங்க. அவ்ளோ உசரம். மத்ததெல்லாமும் லேசுபட்டதுன்னு நெனைக்க வேணா. கடத் தொழிலுக்குப் போறவங்களே அசந்தா சிக்கிக்குற எடம் இது. கடலப் பத்தி ஒண்ணுந் தெரியாத சுற்றுலா பிராயணிங்க சிக்கிக்கிட்டா என்னாவும்? இதுவரைக்கும் பல நூறு பொணம் வுழுந்துருக்கு, பாருங்க இங்கெ...” - உள்ளூர்க்காரர்கள் இப்படி ஒவ்வொரு பாறைக்கும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள்.

குமரிக் கடலில் கடலலையின் அடியில் படகு தவறிக் கவிழ்ந்தாலும் சரி, பாறையில் ஏறி ஆட்கள் யாரும் விழுந்தாலும் சரி, உடனே அழைப்பு செல்லும் இடம் இயேசுபுத்திரன் வீடு.

“சின்ன வயசுலேந்தே எம்ஜிஆர்னா ஒரு பிரியம். அதுவும் கடலோடியா, படகோட்டியா நடிச்சாரு பாருங்க சார், அவரு மேல உசுராயிட்டு. அப்போ மனுசன்னா, என்னா சார்?

(பாடிக்காட்டுகிறார்)

‘உழைத்து வாழ வேண்டும்... பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...’

‘இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...’

இதாம் நம்ம லட்சியம். சும்மா பேசுனா, லட்சியமாயிடுமா? ஒதவின்னு வந்தா ஒதவணும் சார், ஒதவணும். எங்கிட்ட யாரு ஒதவின்னு கேட்டு வந்தாலும் ஒதவிருவன். அப்படி ஒரு நா, கடக்கரயில நின்னுக்கிட்டிருக்கன். திடீர்னு கடல்ல தவறி வுழுந்துட்டாங்கன்னு கூட்டம் ஓடுது. நான் யோசிக்குறன். என் தலைவன் படத்துல இந்நேரத்துக்கு என்னா செய்வான்னு. ‘டேய் இயேசுபுத்திரா, நீ யோசிக்காதரா... நீ மனுசன்னா ஒதவணும்... ஓடு.. குதி’ன்னு நெஞ்சுலேந்து ஒரு கொரல். அவ்ளோதாம். குதிச்சுட்டன். அப்போலேந்து இது பழக்கமாயிடுச்சு சார். இங்கெ பாருங்க, கையில தலைவன்...” என்று கையில் பச்சை குத்தப்பட்டிருக்கும் எம்ஜிஆரைக் காட்டுகிறார்.

“கடலப் பாக்க வந்து, பாறயில ஏறிக் கடல்ல வுழுந்து, சுழல்ல மாட்டிக்கிறவங்க மட்டுமில்ல சார், எங்காளுங்களே பலரு கடல்ல கட்டுமரத்துல, வள்ளத்துல போம்போது மாசா அடிச்சித் தூக்கிக் கவுத்துரும். ஓடுவன். தேடித் தூக்கியாருவன். நெறய பேரு பொணமாவே போயிருவாங்க சார், அதயும் தூக்கிட்டு வந்து போடுவன். நல்ல ஆழத்துல படகுல என்ஜின் கடச்செடி கொடிங்கள்ல சிக்கிரும். ஓடுவன். கடலுக்குள்ள குதிச்சு, ஆழம் போயி, சிக்கியிருக்க செடி கொடிங்களை அறுத்துடுவன். சமயத்துல, வள்ளம் ஒருபக்கமா கவுந்துரும். கீழ போயி சங்கிலியைக் கோத்துட்டு, தூக்க ஒத்தாச பண்ணுவம்...”

“கடல் பயமாக இருக்காதா?”

“நம்ம கடலம்மா புள்ளைங்க சார். அதாம் ஒரே நம்பிக்க. நம்ம நமக்காவ குதிக்கல. நாலு பேர் உசுருக்காகக் குதிக்கிறம். கடலம்மா பாத்துக்குவான்னு ஒரு நம்பிக்க.

எல்லாமே சாவுக்குத் துணிஞ்சு எறங்குற வேலதான் சார். பயங்கர ஆழம். சொழலு வேற இழுக்கும். வரிப்புலியன் சுறா, மொரட்டுத் திருக்கைங்க கெடக்கும். கடப்பாம்புங்க கெடக்கும். கண்ணுல சிக்கினம், சிக்குன வேகத்துல மேல போய்ச் சேர வேண்டியதான். அதெல்லாம் வுடுங்க. மூச்ச அடக்குறது இருக்கே, அத சரியா கணக்குப் பண்ணாம வுட்டோம்னாலும் அவ்ளோதான். மாரடச்சு, கண்ணு தெரிச்சுப் போய்சேர வேண்டியதுதாம். எங்கண்ணனே ஒருத்தரு அப்பிடிப் போய்சேந்துருக்கார்.

ஒவ்வொருவாட்டியும் இப்பிடிப் போயி கடல்ல குதிச்சு முங்கி வெளிய வரும்போது எதாவது ஒடம்புல அடியோடுதான் வருவன். வூட்டுல திட்டுவாங்க. இனிமே இந்த வேல பாக்கக் கூடாது, நமக்கும் வயசாயிட்டுன்னெல்லாம் எனக்குள்ளயே சொல்லிக்குவேன். ஆனா, யாரோ ஒருத்தர் ஒதவின்னு கேட்டு வரும்போது எல்லாமே மறந்துரும். என் தலைவனா இருந்தா, என்னா செய்வான்னு நெனச்சுக் குதிச்சுருவன். இதுவரைக்கும் பதினெட்டு உசுரக் காப்பாத்திருக்கன் சார். இருபத்தியஞ்சி பொணத்தத் தூக்கிப்போட்டுருக்கன். போலீஸே நம்மளத் தேடித்தான் வருவாங்க. எதயும் காசு பணத்துக்காவ செய்யிறதுல்ல.

ஆக்ராலேந்து அசோக் ராணான்னு போலீஸ் அதிகாரி. எஸ்பியா இருந்தவரு. அவரு பையன் இங்கெ வந்தப்போ தவறி வுழுந்துட்டான். உசுரக் கொடுத்துக் காப்பாத்தினேன். என்ன வேணும் கேளுன்னு புடியா நிக்கிறாரு மனுஷன். ஒண்ணும் வேணாம் சார்னு சொல்லி அனுப்பிட்டன். கொஞ்ச நாள் கழிச்சு ஆள் வுட்டு ஆக்ரா அழைச்சுக்கிட்டு வரச் சொன்னார். வீட்டுக்குப் போய்ப் பாத்தா என் படத்த சாமி படத்தோட வெச்சிருக்காங்க. இந்த அன்பு போதும் சார்னு சொல்லிட்டு வந்துட்டன். அன்பைவிட மேல என்னா சார் இருக்கு இந்த ஒலகத்துல? நான் சொல்றது சரிதான?”

நெகிழவைக்கிறார் இயேசுபுத்திரன்.

ஆகஸ்ட், 2014, ‘தி இந்து’

3 கருத்துகள்: