இப்போதுகூட இல்லையென்றால், கம்யூனிஸ்ட்டுகள் எப்போது இணையப்போகிறார்கள்?


இந்திய கம்யூனிஸ்ட்டுகள் இன்று முட்டுச்சந்தில் நிற்கிறார்கள் என்று குறிப்பிடலாமா? ஆம், சரியாகக் குறிப்பிட வேண்டும் என்றால், அப்படித்தான் குறிப்பிட வேண்டும். இந்த நிலை முட்டுச்சந்துதான். இனி முன்னகர வேண்டும் என்றால், எதிரில் உள்ள சுவரை உடைத்துத்தான் முன்னேற வேண்டும். வேறு வழியில்லை. உடைக்க வேண்டும் என்றால், இந்தப் பலம் போதாது. கம்யூனிஸ்ட்டுகள் முதலில் ஒன்றிணைய வேண்டும். வேறு வழியில்லை!

ஓராண்டுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரியைச் சந்தித்தபோது கேட்டேன். “இந்தியாவில் இடதுசாரிகள் எழுச்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு முக்கியமானது. இதை நீங்களும் உணர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. போராட்டக் களங்களிலும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்திருக்கிறீர்கள். அப்படியே கட்சிகளை இணைத்து ஒன்றிணைந்த பெரும் சக்தியாக எழுந்து நிற்பதில் என்ன சிக்கல்?”



யெச்சூரி சொன்னார், “ஆரம்பத்தில் ஒரே கட்சியாகத்தானே இருந்தோம்! முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட்டுகள் பிரிந்து வந்தோம். அதிலிருந்து மாவோயிஸ்ட் லெனினிஸ்ட் போனார்கள். அப்புறம் இப்படிப் பல குழுக்கள். ஏன் இத்தனை பிரிவினைகள்? தத்துவார்த்த வேறுபாடுகள். எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு ஒரே நாளில் எல்லோரும் சேர்வது சாத்தியம் அல்ல. ஆனால், பொது எதிரி நம் கண் முன்னே விஸ்வரூபம் எடுக்கிறான். நாடு நாளுக்கு நாள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. போர்க்களத்தில் எங்களுக்குள்ளான வேறுபாடுகளை விவாதித்து, நாங்கள் ஒன்றுசேர்வதற்கான அவகாசத்துக்கு இடம் இல்லை. விவாதிப்பதற்கான நேரத்தைவிடவும் எதிர்கொள்வதற்கான சவால்கள் பல மடங்கு அதிகரித்துநிற்கின்றன. ஆகையால், இணைப்பைப் பற்றி அப்புறம் பேசுவோம், முதலில் ஒன்றுபட்டு போரை எதிர்கொள்வோம் என்று ஓடுகிறோம். இணைப்பு தொடர்பாக நீண்ட காலமாக விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது… இணைப்புக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. தலைவர்கள் அளவில் கை குலுக்கி உடன்பாடு போடுவது ஒரு வழி. தொண்டர்கள் அளவில் போராட்டங்கள் வழி கைகோத்து இணைவது இரண்டாவது வழி. இடதுசாரிகள் இயல்புக்கேற்ப கீழிருந்தே இணைப்பைக் கொண்டுவர நாங்கள் நினைக்கிறோம். விளைவாகத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, ஃபார்வர்ட் பிளாக், ஐக்கிய மையம் என்று ஆறு இடதுசாரி அமைப்புகள் இன்று ஒரே மேடையில் ஒன்றுபட்டு நிற்கிறோம்!”

ஒரு பேட்டி என்கிற அளவில் எனக்கு இது நல்ல பதில். தனிப்பட்ட வகையில் மிகுந்த ஏமாற்றமாகவே இருந்தது. அவர் சொன்னதுபோல, பொது எதிரி கண் முன்னே விஸ்வரூபம் மட்டும் எடுக்கவில்லை; எல்லோரையும் கபளீகரமும் செய்ய முயலும்போது, கத்தி உங்கள் கழுத்தைக் குறிபார்க்கும் தருணத்தில்கூட உங்களால் ஒன்றிணைய முடியாதென்றால், எப்போது இணையப்போகிறீர்கள் என்று நினைத்துக்கொண்டே வந்தேன்.

ஒரு செய்தியாளனாக நாடு முழுக்கச் சுற்றுகிறேன். கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு தொடர்பில் தலைவர்கள்தான் மாறுபட்ட பதில்களைத் தருவார்களே தவிர, என் அனுபவத்தில் இணைப்புக்கு இசைவில்லா தொண்டர்களைச் சந்தித்தது கிடையாது. யெச்சூரிக்கு முன்பு பொதுச்செயலராக இருந்த பிரகாஷ் காரத்திடமும் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறேன். “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரை நூற்றாண்டுக்கு முன் பிரிந்ததற்கான நியாயமும் சூழல்களும் இன்னும் நீடிக்கின்றனவா? ஏன் இந்தியாவில் உள்ள எல்லா கம்யூனிஸ்ட் அமைப்புகளும் ஒன்றுசேரக் கூடாது?” கேரளத்தில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனைச் சந்தித்தபோதும் கேட்டிருக்கிறேன். திரிபுராவில் முதல்வர் மாணிக் சர்காரைச் சந்தித்தபோதும் கேட்டிருக்கிறேன். சமாளிப்புதான் பதில்! அதேசமயம், எல்லா அமைப்புகளுக்கும் தாய் அமைப்பான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களிடம் பேசும்போது அவர்கள் மனதார அப்படியொரு நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைவதில் தத்துவார்த்த பிரச்சினைகளையெல்லாம் தாண்டி இடைப்பட்ட காலகட்டத்தில் அவை நிறுவனமயமாகி விட்டதையும் அங்கு நிலவும் தனிநபர் ஈகோ மோதல்களையும் காரணமாகச் சொல்பவர்கள் உண்டு. அவற்றைக் காட்டிலும் முக்கியமான ஒரு பிரச்சினையை நான் உணர்கிறேன் - தூய்மைவாதம்.

பொதுவாக வலதுசாரி இயக்கங்களைக் காட்டிலும் இடதுசாரி இயக்கங்களே கூடுதல் தாராள மனதுடனும் கூடுதல் நெகிழ்வுத்தன்மையுடனும் இயங்க வேண்டும். ஒருவர் பத்து புள்ளிகளில் முரண்பட்டு, ஒரு புள்ளியில் மட்டும் உடன்பட்டாலும் அவரை அரவணைக்கும் மனதுடன் செயல்பட வேண்டும். ஏனென்றால், வலதுசாரிகளைப் பொருத்த அளவில் அவர்கள் வெறியூட்டும் உத்தியைக் கையில் எடுத்தாலே கூட்டத்தைச் சேர்த்துவிட முடியும். மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வூட்டி, அரசியல்மயப்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை. மாறாக, மக்கள் எந்த அளவுக்கு அரசியலுணர்வற்றவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு வசதி. பிளவு அரசியல் எளிது. இணைப்பு அரசியலோ பெரும் சவால். ஆயிரக்கணக்கான இனக் குழுக்களாகப் பிரிந்து வாழும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், இந்த அத்தனை தரப்புகளையும் ஒன்றிணைக்க அசாத்தியமான பொறுமையும் சகிப்புத்தன்மையும் இடதுசாரிகளிடம் வேண்டும். ஆனால், இங்கே நிலைமை என்ன?

சமத்துவத்துக்காக உழைக்கும் கம்யூனிஸ்ட்டுகளிடமும் முரண்பாடாக ஏதோ ஒரு வகையில் ஒரு நோய்போலவே தூய்மைவாதமும், அது கூடவே கூட்டிக்கொண்டுவரும் மேட்டிமைவாதமும் அவர்கள் உளவியலில் ஆக்கிரமித்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரைக் காட்டிலும் தாங்கள் தூய்மையானவர்கள் - மேம்பட்டவர்கள் என்பது மார்க்சிஸ்ட்டுகளின் எண்ணம். அவர்களைக் காட்டிலும் தாங்கள் தூய்மையானவர்கள் - மேம்பட்டவர்கள் என்பது லெனினிஸ்ட்டுகளின் எண்ணம். எல்லோரைக் காட்டிலும் தாங்கள் தூய்மையானவர்கள் - மேம்பட்டவர்கள் என்பது மாவோயிஸ்ட்டுகளின் எண்ணம். எழுதப்படாத ஒரு தீர்க்கமான படிநிலை அங்கே சமூக உளவியலில் கட்டமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அது எந்தப் புள்ளியிலிருந்து தொடங்குகிறது என்பது கம்யூனிஸ்ட்டுகளால் உணர முடியாதது அல்ல. அதை உடைக்காமல் கம்யூனிஸ்ட்டுகளின் எழுச்சி சாத்தியமானது அல்ல.

திருநெல்வேலி மாவட்டம், கீழக்கலங்கலில் சண்முகவேல் என்று ஒரு பெரியவர் இருக்கிறார். சிவப்புச் சட்டைக்காரர். 78 வயதிலும் ஊர் ஊராக சைக்கிளில் ஒரு நாளைக்கு 90 கி.மீ. வரை சுற்றி புத்தகங்களை விற்றுவருபவர். புத்தகத் தாத்தா என்றோ சிவப்புச் சட்டைத் தாத்தா என்றோதான் ஊர் மக்கள் அழைப்பார்கள். அந்தப் பக்கம் போகும்போது அவரைப் பார்ப்பது வழக்கம். கட்சியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னார், “ஐயா, ஊருக்கு நூறு பேர் இருக்கோம். ஒரே நோக்கம். ஒரே சிவப்புத் துண்டு. காலமெல்லாம் மக்களுக்காகப் போராட்டம், போராட்டம்னு ஒரே மாதிரிதான் ஓடி, ஒரே மாதிரிதான் உடைஞ்சு கெடக்கோம். ஆனா, ரெண்டா, மூணா பிரிஞ்சு கெடக்கோம். இந்த நூறு பேரையே ஒரே கட்சியா கட்ட முடியலைன்னா நூத்தியிருபது கோடி பேருக்கான கட்சியை எப்படிக் கட்டப்போறாங்க?”

நாடு பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் தக்க வைத்துக்கொள்ள சரியான முறையில் அணிதிரள வேண்டும் என்றால், இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் இணைப்பு மிக மிக முக்கியமானது. முதலாவதாக, பல்வேறு பிரிவுகளாகச் சோர்ந்து கிடக்கும் கட்சியினருக்கு அது புது உற்சாகத்தைக் கொடுக்கும். இரண்டாவதாக, நாடு முழுக்க உள்ள தொழிலாளர் - ஊழியர் அமைப்புகளை ஒருங்கிணைக்கவும் அரசியல்மயப்படுத்தவும் உத்வேகம் அளிக்கும். மூன்றாவதாக, பொதுவெளியில் எண்ணிக்கைப் பலம் ஒரு வெளிப்படையான மாற்றத்தை வெளிக்காட்டும்; கூட்டணிக் கட்சிகளிடம் வலுவாகப் பேரம் பேச முடியும்; வாக்காளர்களிடம் புதிய நம்பிக்கைகளை விதைக்கவும் இது உதவும்.

இவற்றையெல்லாம் தாண்டி, இதற்கு முன் இல்லாத வகையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நலன்களைத் தாண்டிய தேவைகளையும் இந்த இணைப்பு உள்ளடக்கியதாகிறது. கடந்த காலங்களில் மதவாதத்தை எதிர்கொள்ள எதிரே வலுவான நிலையில் காங்கிரஸ் இருந்தது. காங்கிரஸ் வலுவற்றிருந்த தருணங்களில் மாநிலக் கட்சிகள் வலுவான நிலையில் நின்றன. இன்றைய சூழலிலோ காங்கிரஸ் மட்டும் அல்லாமல் மாநிலக் கட்சிகளும் இக்கட்டான நிலையில் நிற்கின்றன. அமைப்புரீதியிலான பின்னடைவோடு, சித்தாந்த - வியூகரீதியிலான வறட்சியிலும் அவை சிக்கியிருக்கின்றன. மிரட்டும் நிலையிலிருக்கும் ஒரு தேசியவாத அரசை எதிர்கொள்ள இந்த நேரத்தில் தாராளவாத கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் முதலில் கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் பலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு வெளிப்படையான மாற்றத்துக்கு அவர்கள் தயாராக வேண்டும்.

நூற்றியிருபது கோடி மக்களுக்கான இயக்கமாக கம்யூனிஸ்ட் கட்சி மாற வேண்டும் என்றால், இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் மனம் பல வகைகளில் மேலும் தாராளமானதாக மாற வேண்டும். இறுக்கமும் கறாரும் அல்ல; நெகிழ்வும் தளர்வும் அரவணைப்புமே எல்லோருக்குமான இயக்கமாக வளர்த்தெடுக்கும் எனும் நிலை நோக்கி நகர வேண்டும். அதற்கான முதல்படியாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வேண்டும்!

(மோடியின் காலத்தை உணர்தல்... 9)

மே 2017, ‘தி இந்து’

6 கருத்துகள்:

  1. வணக்கம்

    கட்டுரையின் வீரியம் ,அதே சமயம் வெற்று மைதானத்தில் பல அணிகளாக உள்ள இடதுசாரியின் தேவையை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறீர்கள்

    கருத்து முரண்களை ஏற்பதைப் போல தத்துவரீதியான மோதல்களை அலசும் காலம் அவசியம் தான்...

    பதிலளிநீக்கு
  2. துண்டுக்குள் நடக்கும் பேரத்தில் மூன்று விரல்களை பித்தவருக்கு ஆதரவாய் இரண்டு விரல்களை பிடித்தவரை எதிர்க்கும் தலைமையை பெற்றிருக்கும் ஒரு கூட்டத்தால் ஒரு போதும் செங்கொடியை உயர்த்திப் பிடிக்க முடியாது

    பதிலளிநீக்கு
  3. கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பை மற்றிய சிந்தனை, சமூகத்தின் மேல் மட்ட நிலமைகளை மட்டும் புரிந்துக் கொண்டு சமஸ் போன்றோரிடம் வெளிப்படும் நல்ல எண்ணம் இது. மேல்மட்ட நிலைகளை கூட சரியாக புரிந்துக் கொள்ளாத மார்க்சீயர்களிடம் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.எல்லா கம்யூனிஸ்ட்களும் ஒன்றாக இணைய முடியாது. இணைந்தாலும் எந்த பயனும் இருக்காது.இயல்பாக விரைவில் புதிய குழுக்கள் தோன்றும்.
    பிரிவு ஏற்பட்டதே இது புரட்சிகர காலகட்டமா? சமாதான காலகட்டமா? என்பதை மார்க்சீயத்தின் அடிப்படையில் இவர்களால் புரிந்துக் கொள்ள முடியாமைதான்.சித்தாந்த ரீதியில் இல்லாவிட்டாலும் நிஜ நிலைமைகளின் அடிப்படையில் புரிந்துக் கொண்டவர்கள் இந்திய கம்யூனிஸ்ட்கள் தான்.பரட்சியை தற்காலிகமாச கைவிட்டு விட்டு
    இந்திய கம்யூனிஸ்ட்களின் தேசிய ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒரு கட்சியும், பரட்சியை கைவிட (வார்த்தைகளில்) கைவிட விரும்பாதவர்கள் மக்கள் ஜனநாயகத்தை முன் வைத்து ஒரு கட்சியாகவும் ஒன்று பட வாய்புள்ளது.அதற்கும் தலைவர்களின் ஈகோ இடம் தராது.
    எதிர்காலத்தில் புதிய சக்திகள் தோன்றி வளர்ந்து வெற்றி பெறுவர்.அவர்கள் மார்க்சீயத்தின் பெயரைச் சொல்லாமல் வேறு பெயர்களை சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  4. கம்யூனிஸ்டுகள் நிச்சயமாக தங்களின் கருத்து மோதல்களைப் புறம் தள்ளி ஒன்றிணைய முயல வேண்டும். அதற்கான தங்கத் தருணம் இதுதான். பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற வலதுசாரிகளைத் தோற்கடிக்க அது ஒன்று தான் சிறந்த வழி.

    பதிலளிநீக்கு
  5. கம்யூனிஸ்டுகள் இணைவது காலத்தின் கட்டாயம் சமஸ் விருப்பம் விரைவில்...!

    பதிலளிநீக்கு
  6. மாணிக் சர்க்காரின் தேர்தல் தோல்விக்கு பிறகு மறுவாசிப்பு செய்தேன் கத்திக்கு பலிகளின் எண்ணிக்கை தொடங்கியதாகவே தோன்றுகிறது இனியும் தாமதித்தால் விளைவு கடுமையாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை இணைவோம் இதயம் பூக்க..

    பதிலளிநீக்கு