தமிழிசையிடமே பேச முடியாவிட்டால் மோடியுடன் எப்படி பேசப்போகிறோம்?


கன்னியாகுமரி போயிருந்தேன். பெரியவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா ஒரு உரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நாட்டின் பன்மைத்துவம் செதில் செதிலாகப் பெயர்க்கப்படுவது, வெறுப்பரசியலின் செல்வாக்கு, சகிப்பின்மை தொடர்பில் பேச்சு போனபோது, “மோடி நம் பிரதமர் எனும் உண்மையை அங்கீகரிக்க வேண்டும்; அவருடன் பேசுவதற்கான உரையாடல் புள்ளியை எதிர்க்கட்சிகள் முதலில் கண்டறிய வேண்டும்” என்று சொன்னேன்.

“முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகளிடம் பேசுவதையே முற்றிலுமாகத் தவிர்க்கும் ஒரு பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம். எந்தப் பிரச்சினை குறித்தும் நாடாளுமன்றத்திலோ, பிரதமர் அலுவலகத்திலோ எதிர்க்கட்சிகளோடு சந்தித்துப் பேசும், விவாதிக்கும் ஆர்வம் மோடிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. என்ன விவகாரம் என்றாலும், அவர் நேரே பொதுமக்கள் மேடையை நோக்கிச் சென்றுவிடுகிறார்.

கேட்பதற்கான காதுகள் அவரிடத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பிரதமர் என்பவர் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; இதை மறுதலித்து, ‘தன் ஆட்சி, தன் போக்கு’ என்று செல்லும் ஒருவரை அதே பாதையில் தொடர அனுமதிப்பது மறைமுகமாக எதிர்க்கட்சிகளும் அதே பாதையில் செல்வதற்கு ஒப்பானதுதான். நுட்பமாகக் கவனித்தால் தெரியும், மோடி பிரதமரான பின் அவருடனான உரையாடல் என்று மட்டும் இல்லாமல், ஆளுங்கட்சியினருடனான உரையாடல் என்பதே நாடு முழுக்க எல்லா மட்டங்களிலும் குறைந்துவருகிறது. இந்தக் கலாச்சாரம் நாட்டுக்கு நல்லதல்ல!”

கூட்டத்தில் இது சிறு சலசலப்பை உண்டாக்கியது.



கூட்டம் முடிந்த பின் கொடிக்கால் ஷேக் அப்துல்லா நீண்ட நேரம் இதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்தார். “முக்கியமான அவதானிப்பு இது. எனக்குப் பழைய நினைவுகள் வருகின்றன. அரசியலில் எவ்வளவோ சந்தர்ப்பங்களில் அவையிலும் மக்கள் மேடைகளிலும் பேசி சாதிக்க முடியாதவற்றைத் தனிப்பட்ட உறவும் உரையாடலும் சாதித்திருக்கின்றன. திராவிடக் கட்சிகளுடனான அன்றைய முஸ்லிம் லீக் உறவை இன்று பேசுபவர்கள் பலர், தேர்தலில் முஸ்லிம் லீக் வாங்கிய தொகுதிகளை எண்ணிக்கை அளவில் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். ஆனால், லத்தீப்புக்கு எம்ஜிஆர், கருணாநிதி இருவரிடத்திலும் தனிப்பட்ட வகையில் எப்படிப்பட்ட உறவு இருந்தது என்பது இன்றைக்குப் பலருக்குத் தெரியாது. ஒரு வன்முறைச் சூழல், முஸ்லிம்களுக்கு ஒரு ஆபத்து என்றால், நள்ளிரவில்கூட அழைத்துப் பேசும் உறவை அவர் வைத்திருந்தார். தோழமை, எதிர்க்கட்சியினரிடம் மட்டும் அல்ல; சாதி, சமய அமைப்புகளில் இடம்பெற்றிருந்தவர்களிடம்கூட மன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அப்படியான உறவை அவர் பராமரித்தார். ஒரு பிரச்சினை என்று வரும்போது எதிர்த் தரப்புடன் பேசுவதற்கு என்று ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம். லத்தீப் மட்டும் அல்ல; பல தலைவர்கள் அப்படி இருந்தார்கள். உள்ளூர் அளவிலும்கூட அப்படியான உறவு இருக்கும். மண்டைக்காடு கலவரத்தை நேரடியாகப் பார்த்தவன் நான். எதிரெதிர் தரப்புகளில் தனிப்பட்ட உறவைக் கொஞ்சமேனும் பராமரித்தவர்களின் வழியாகத்தான் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது. அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒதுக்குகிறார்கள் என்று நாம் விட்டுவிட முடியாது. காந்தி அப்படி நினைத்திருந்தால் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்திய ஒரு அரசாங்கத்தின் ஆட்சியாளர்களிடம் பேசி இருக்க முடியுமா? மனுஷர் அவர்களை ஜனநாயகத்தை நோக்கிப் பிடித்து இழுத்துவந்தார் இல்லையா? நாடு நம்முடையது. சமூக நலனுக்காகவேனும் நாம் உரையாடித்தானே ஆக வேண்டும்?”

கவிஞர் சுகுமாரனின் அறுபதாண்டு விழாவுக்குச் சென்றிருந்தபோது, நீண்ட நாட்களுக்குப் பின் வரலாற்றறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதியுடன் உரையாடக் கொஞ்ச நேரம் கிடைத்தது. பெரியாரின் வரலாற்றை இப்போது ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார் சலபதி. தீவிர கடவுள் மறுப்பாளரான பெரியாருக்கும், சைவ சமயப் பாதுகாவலராக இருந்த குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே இருந்த நெருக்கமான நட்பைப் பற்றி சமீபத்தில் கட்டுரை எழுதியிருந்தார் சலபதி. அதுகுறித்துப் பேச்சு போனது.

பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்துக்கு எதிர்ப் பிரச்சாரம் செய்வதற்காகவே, ‘அருள்நெறி திருக்கூட்டம்’ என்று ஓர் அமைப்பை உருவாக்கி, கூட்டங்களை நடத்திவந்திருக்கிறார் அடிகளார். பெரியார் 1955-ல் மலேசியா செல்லும்போது, அங்கும் பெரியாருக்கு எதிர்வினையாற்ற முடிவெடுக்கிறார் அடிகளார். இந்து மடாதிபதிகள் கடல் கடந்து செல்லக் கூடாது எனும் மரபையும்கூட இதற்காக உடைக்கிறார். மலேசியாவில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், “சைவ சமயத்தில் சாதிக்கு இடமில்லை” என்று அடிகளார் பேசிய கருத்துகள் பெரியாரை வந்தடையும்போது, தன் மீதான அடிகளாரின் எதிர்ப்பையும் மீறி பெரியாருக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. நாடு திரும்பிய பின், அடிகளாரைச் சென்று சந்திக்கிறார் பெரியார். அடிகளார் அப்போது இரண்டாவது மாடியில் இருக்கிறார். பெரியார் வருவதை அறிந்ததும் மாடியிலிருந்து கீழே இறங்கி வர முற்படுகிறார். பெரியாரோ, “சன்னிதானத்துக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது; அதைக் குலைக்கக் கூடாது; நானே மேலே வருகிறேன்” என்று சொல்லி மாடிப்படி ஏறிச் செல்கிறார். இரண்டு பேர் அமரும் வகையிலான இருக்கையில் தன்னோடு அமர பெரியாரை அடிகளார் அழைக்கும்போது, “சன்னிதானத்தோடு சமமாக அமருவது மரபு அல்ல” என்று கூறி மறுக்கிறார் பெரியார். இருவரும் பேசுகிறார்கள். சாதியும் மதமும் மக்களை எப்படியெல்லாம் துண்டாடி, சமத்துவத்துக்கு எதிராக வதைக்கின்றன என்பதைச் சொல்லி, “இதைத் தவிர எனக்கும் கடவுளுக்கும் மதத்துக்கும் வேறு என்ன தகராறு? நான் கடவுளைக் கண்ணால் பார்த்ததுகூட இல்லையே! பிறகு அவருடன் எனக்கென்ன பிரச்சினை?” என்கிறார் பெரியார்.

கடவுள் நம்பிக்கை என்ற மிக அடிப்படையான புள்ளியில் மாறுபடும் அந்த இருவரும் சாதி ஒழிப்பு, தமிழ் - தமிழர் நலன் எனும் புள்ளிகளில் இணைகிறார்கள். அதன் பின்னர், காலம் முழுமையும் இருவரும் சாதிக்கு எதிரான போரில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். பெரியார் வரலாற்றை எழுதுவதற்காக அவர் எழுதிய, அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல்களையெல்லாம் படிக்கையில், எப்படியான மாறுபட்ட கருத்தாளர்களுடன் எல்லாம் பெரியார் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்பது பிரமிப்பூட்டுகிறது என்று சொன்னார் சலபதி.

மார்க்ஸிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை பெரியாரும் அடிகளாரும் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். அந்தக் கூட்டங்களில் அடிகளாருக்குச் சிறு சங்கடமோ மரியாதைக் குறைவோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்வார் பெரியார் என்று தன்னுடைய அனுபவங்களைப் பல சமயங்களில் சொல்லியிருக்கிறார். அப்போதெல்லாம் ஒரு விஷயத்தை அவர் தவறாமல் சுட்டிக்காட்டுவார்: “பெரியாரைக் காட்டிலும் 50 வயது இளையவர் அடிகளார்!”

காலமெல்லாம் பிராமணியத்தைக் கடுமையாக எதிர்த்த பெரியார், பிராமணியத்தின் பிரதிநிதியாகவே ராஜாஜியைப் பார்த்தார். அதே ராஜாஜியைப் பற்றித்தான் “எனக்கும் ஆச்சாரியாருக்கும் இடையே உள்ள நட்பு கணவன் மனைவிக்கு இடையே உள்ளது போன்றது. உற்சாகம் காரணமாக, தனிப்பட்ட முறையில் சமுதாயத் தொண்டில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த என்னை முழுக்க முழுக்கச் சமுதாயத் தொண்டனாக ஆக்கிய பெருமை ஆச்சாரியாருக்கு உரியதாகும்” என்றும் எழுதியிருக்கிறார். ராஜாஜி மீது அவர் ஆரம்ப நாளில் கொண்ட ‘காதல்’ இறுதிக் காலம் வரை நீடித்தது. மணியம்மையைத் திருமணம் செய்துகொள்ளும் முடிவு தொடர்பில் ராஜாஜியிடமே அவர் கலந்தாலோசித்தார். திருமணம் செய்துகொள்ள பெரியாருக்குத் தவறான வழிகாட்டி, திராவிட இயக்கத்தைக் குழியில் தள்ளிவிட்டார் ராஜாஜி என்று அந்நாட்களில் குற்றஞ்சாட்டியவர்கள் உண்டு. எல்லா வசைகளையும் வாங்கிக்கொண்டாரே தவிர, பெரியாருக்குத் தான் சொன்ன ஆலோசனை என்னவென்பதை ராஜாஜி சொல்லவில்லை. “திருமணம் வேண்டாம். அது இயக்கத்தையும் உங்கள் மதிப்பையும் குலைத்துவிடும்” என்பதே ராஜாஜி கொடுத்த ஆலோசனை என்பது பின்னாளில் தெரியவந்தது. தன் மனைவி மறைந்தபோது சிந்திய கண்ணீரைக் காட்டிலும் ராஜாஜி மறைந்தபோது பெரியார் சிந்திய கண்ணீர் அதிகம். தனிப்பட்ட உறவில் மட்டும் அல்ல; அரசியல் உறவிலும்கூட ஒன்றுபடக் கூடிய புள்ளிகளிலெல்லாம் கூடுமானவரை ஒன்றுசேர்ந்து செயல்பட்டிருக்கிறார் பெரியார்.
1939-ல் ராஜாஜி வழி இந்தி திணிக்கப்பட்டபோது பெரியார் எதிர்த்தார். 1956-ல் நேரு வழி இந்தி திணிக்கப்பட்டபோது எதிர்ப்பில் ராஜாஜியும் பெரியாரும் கரம்கோத்து நின்றிருந்தார்கள்.

ராஜாஜியின் அரசியல் வீழ்ச்சிக்குப் பெரியாரும் ஒரு முக்கியமான காரணம். ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்துக்குப் பெரியார் ஆற்றிய எதிர்வினையே காமராஜரை அரியணையை நோக்கி நகர்த்தியது. எந்த காங்கிரஸ் ஒழிய வேண்டும் என்று பேசிவந்தாரோ அதே காங்கிரஸுக்கு, காமராஜருக்காக ஊர் ஊராக ஓட்டுக் கேட்டு பேசினார் பெரியார்.

காங்கிரஸாரைக் காட்டிலும் தீவிரமாக உழைத்தார்கள் திராவிடக் கழகத்தினர். “காமராஜர் ஆட்சியில் தமிழகம் கண்ட முன்னேற்றம் மூவேந்தர் ஆட்சியிலும் நிகழாதது” என்றார் பெரியார். தேசிய அரசியலை நோக்கி நகர காமராஜர் முடிவெடுத்தபோது, “இது அரசியல் தற்கொலை முடிவாக அமையும்” என்று மறுகினார்.

பெரியார் மட்டும் அல்ல; சமூக நீதிக்காக, சமூக நல்லிணக்கத்துக்காகக் கடந்த காலங்களில் உழைத்த முன்னோடிகள் பலரும் வெவ்வேறு புள்ளிகளில் எதிர்த் தரப்பினருடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர் அல்லது தனிப்பட்ட உறவைப் பராமரித்திருக்கின்றனர். அம்பேத்கருக்கு ஜின்னாவுடனும் உறவிருந்தது; சாவர்க்கருடனும் உறவிருந்தது. உரையாடலுக்கான வெளியை எல்லா இடங்களிலுமே உருவாக்கிவைத்திருந்தார் அம்பேத்கர்.

ரஷ்ய மக்கள் போரில் அவதியுறுவதைக் காணச் சகிக்காமல், ஜெர்மனியுடன் சமாதானம் பேச ட்ராட்ஸ்கியை அனுப்புகிறார் லெனின். பேச்சுவார்த்தைக்குச் செல்லும்போது ட்ராட்ஸ்கியிடம் அவர் சொல்கிறார், “அவர்கள் கவுன் அணிந்து வரச் சொன்னால், கவுன் அணிந்து செல்லவும் தயங்காதே. நமக்கு முக்கியம் அமைதி.”

கட்சிக்காகத் தன் முதல்வர் பதவியைக்கூடத் தூக்கி வீசும் நிலையிலிருந்த காமராஜர் போன்ற ஒரு காங்கிரஸ்காரரின் ஆட்சியைக் கிட்டத்தட்ட திராவிட இயக்க ஆட்சிபோல அவர் நடத்துவதற்கேற்ற உறவைப் பராமரித்த பெரியாரின் அணுகுமுறை ஆக்கபூர்வமானதா? மோடியை அவர் போக்குக்குச் செல்ல அனுமதிக்கும் இன்றைய எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை ஆக்கபூர்வமானதா? இது மோடி சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டும் அல்ல; ஈகோ எல்லாத் தரப்பிலும் இருக்கிறது; மோடியின் அகங்காரம் அதை நியாயப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.

தமிழகச் சூழலையே எடுத்துக்கொள்வோம். அடிகளார் - பெரியார் போன்று இருவர் அப்படி ஒரு உறவில் இன்று இருந்தால் இன்றைய தமிழ்ச் சமூகம் அதை எப்படி எதிர்கொள்ளும்? வலதுசாரிகள் அடிகளாரைத் தேச விரோதி ஆக்கிவிடுவார்கள்; இடதுசாரிகள் பெரியாரை சங்கப்பரிவாரக் கைக்கூலி ஆக்கிவிடுவார்கள்! அப்படித்தானே?

டெல்லியில் மோடியுடன் பேசுவது இருக்கட்டும்; தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுடன் பேசுவதற்கான ஒரு வெளியை இன்றைக்கு இங்கே எதிர்க்கட்சிகள் வைத்திருக்கின்றனவா? குமரி அனந்தன் போன்ற ஒரு தேசிய இயக்கத் தலைவரின் மகள், சாதாரண சமூகப் பின்னணியிலிருந்து வளர்ந்து வந்திருக்கும் ஒரு மருத்துவர் - அவரிடமே பேச முடியாதென்றால், அமித் ஷாவுடன் எப்படிப் பேச முடியும்? மோடியுடன் எப்படிப் பேச முடியும்?

சும்மா பொழுதுபோகாமல் இருந்த ஒருநாளில் ஃபேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலை அலசிக்கொண்டிருந்தபோது இது புலப்பட்டது. நண்பர்களின் பின்னணியைப் பார்த்தபோது அவர்களில் 90%-க்கும் மேற்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸார், திராவிட இயக்கப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். இது அதிர்ச்சியைத் தந்தது. அதிர்ச்சிக்கான காரணம் நண்பர்களின் பின்னணி அல்ல; நான் யாருடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன் என்ற பின்னணி தொடர்பிலானது. ஒரே மாதிரியான எண்ணங்களைக் கொண்டவர்கள் மத்தியில் மட்டும் பேசிக்கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? உண்மையாகவே சமூக மாற்றம் வேண்டும் என்றால், நாம் எதிர்த் தரப்புடனும், நம்முடன் அதிகம் கருத்து முரண்பாடுகள் உள்ளவர்களுடனும் அல்லவா அதிகம் பேச வேண்டும்! நமக்கேற்ற குரல்களுடன் பேசிக்கொண்டிருப்பது ஒருவகையில் நமக்கு நாமே பேசிக்கொண்டிருப்பதல்லவா?

எதிர்த் தரப்புடன் உரையாடுவதற்கான தேவையே இல்லை என்று நம்புவது பாஸிஸம். பாஸிஸத்தின் மிகப் பெரிய அபாயம், போராட்டத்தின்போதே அது தன் எதிரிகளையும்கூடப் பீடிக்கவல்ல தொற்றுநோய் என்பதுதான். அது தன் எதிரிகளின் உரையாடலை மட்டும் அல்ல; அவர்களுடைய பேச்சின் மொழியை, போக்குகளை, பாணிகளை, முழக்கங்களையும்கூட மாற்றிவிட வல்லது. மோடியை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டே மோடியை எதிர்ப்பவர்களும் மோடிகள் ஆகிவிடக் கூடாது!


(மோடியின் காலத்தை உணர்தல்...10)

மே, 2017, ‘தி இந்து’

8 கருத்துகள்:

  1. இதுவரையிலான தங்கள் கருத்துக்களுக்கும் இந்தக் கருத்துக்கும் அடிப்படையில் வேறுபாடு தெரிகிறது. எதிரெதிர் அரசியல் வாதிகளிடம் நாகரீகமான நட்பை யாரும் குறைகூற மாட்டார்கள்.
    ஆனால் பல்வேறு ராஜதந்திரம் மூலம் தனி மெஜாரிட்டியோடு பதவிக்கு வந்திருக்கும் மோடி எதிர் கட்சியினரின் கருத்துகளுக்கு காது கொடுக்க மாட்டார். அதற்கான அவசியமும் இல்லை. எதிர்கட்சிகள் அவருடைய தழறான நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து போராடி மக்கள் நலம் காக்க கடமைப் பட்டவர்களேயன்றி மோடியிடம் நட்பு பாராட்டி சாதிக்க வேண்டியவர்களல்ல.ஊழல்களில் மாட்டியள்ள அரசியல் வாதிகளுக்கு உங்கள் அறிவுரை பயன்படும்.குறிப்பாக சிதம்பரம் போன்றவர்களுக்கு இது நன்கு பயன்படும்.ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க பா.ஜ.க வுக்கும் பயன் படும்.
    மோடியை இப்போதைக்கு வீழ்த்தவே முடியாது,வீழக்கூடாது என்ற தங்களின் அகமனதின் பிரதிபலிப்பே இக்கருத்துக்கள்.காலமும் மக்கள் மனமும் எப்படி விரைவாக மாறும் என்பதை விரைவில் பார்ப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. இதுவரையிலான தங்கள் கருத்துக்களுக்கும் இந்தக் கருத்துக்கும் அடிப்படையில் வேறுபாடு தெரிகிறது. எதிரெதிர் அரசியல் வாதிகளிடம் நாகரீகமான நட்பை யாரும் குறைகூற மாட்டார்கள்.
    ஆனால் பல்வேறு ராஜதந்திரம் மூலம் தனி மெஜாரிட்டியோடு பதவிக்கு வந்திருக்கும் மோடி எதிர் கட்சியினரின் கருத்துகளுக்கு காது கொடுக்க மாட்டார். அதற்கான அவசியமும் இல்லை. எதிர்கட்சிகள் அவருடைய தழறான நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து போராடி மக்கள் நலம் காக்க கடமைப் பட்டவர்களேயன்றி மோடியிடம் நட்பு பாராட்டி சாதிக்க வேண்டியவர்களல்ல.ஊழல்களில் மாட்டியள்ள அரசியல் வாதிகளுக்கு உங்கள் அறிவுரை பயன்படும்.குறிப்பாக சிதம்பரம் போன்றவர்களுக்கு இது நன்கு பயன்படும்.ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க பா.ஜ.க வுக்கும் பயன் படும்.
    மோடியை இப்போதைக்கு வீழ்த்தவே முடியாது,வீழக்கூடாது என்ற தங்களின் அகமனதின் பிரதிபலிப்பே இக்கருத்துக்கள்.காலமும் மக்கள் மனமும் எப்படி விரைவாக மாறும் என்பதை விரைவில் பார்ப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. எதிர்த் தரப்புடன் உரையாடுவதற்கான தேவையே இல்லை என்று நம்புவது பாஸிஸம். பாஸிஸத்தின் மிகப் பெரிய அபாயம், போராட்டத்தின்போதே அது தன் எதிரிகளையும்கூடப் பீடிக்கவல்ல தொற்றுநோய் என்பதுதான். அது தன் எதிரிகளின் உரையாடலை மட்டும் அல்ல; அவர்களுடைய பேச்சின் மொழியை, போக்குகளை, பாணிகளை, முழக்கங்களையும்கூட மாற்றிவிட வல்லது //



    தேர்ந்தெடுத்த வார்த்தைகள்
    சக எதிர்தரப்புடன் பழகுவது சிறந்த ஒரு வழிமுறை...

    ஒரு புள்ளி அவசியம் தான்...அதே புள்ளி அனைத்தையும் ஆதரிக்காமல் தவறுகளைச் சுட்டிக்காக்கிற,அந்த தவறை ஏற்கிற வகையில் விரைவில் அமையட்டும்

    பதிலளிநீக்கு
  4. மோடி யாக அவ்வளவு எளிதில் யாரும் ஆகி விட முடியாது . குறிப்பாக சுயநலம் நிரம்பி வழியும் தமிழ்நாட்டில் ...

    பதிலளிநீக்கு
  5. எனக்கு அரசியல் அறிவு குறைவு . உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படிக்கின்றேன் . அனைத்து கட்டுரைகளும் அருமை . இந்த கட்டுரை நல்ல பரிமாணத்தில் அழகாக விவரிக்க பட்டுள்ளது. இதை முழுவதுமாக ஆதரிக்கறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியலுக்கு புதிதாக வரும்போது அப்படி தான் இருக்கும்...ஒன்று அல்ல இரண்டு தலைமுறை கலைஞர் கருணாநிதி ஏமாற்ற முடிந்தது எழுத்தால் தான்..ஆனால் சிந்தித்தால் தெரியும் இவர்களின் பொய்க்கூற்றுகள்....கருணாநிதியை பார்த்து அரசியலுக்கு வந்து பின்னர் தனிகட்சி ஏன் தொடங்கினார்கள்... திருமா,வைகோ மட்டும் அல்ல 1000+ கட்சிகள்...கருணாநிதி- கெட்டவர் என்று ஒதுங்கி இருக்கிறார்களா? இல்லை நாம் சம்பாதிக்க வேண்டும் என்ற சுயநலம் காரணமா? கேள்வி நீங்க கேட்டு பதில் அடுத்தவர் சொல்ல கூடாது நீங்க தான் யோசிக்கனும்..

      நீக்கு
    2. அரசியலுக்கு புதிதாக வரும்போது அப்படி தான் இருக்கும்...ஒன்று அல்ல இரண்டு தலைமுறை கலைஞர் கருணாநிதி ஏமாற்ற முடிந்தது எழுத்தால் தான்..ஆனால் சிந்தித்தால் தெரியும் இவர்களின் பொய்க்கூற்றுகள்....கருணாநிதியை பார்த்து அரசியலுக்கு வந்து பின்னர் தனிகட்சி ஏன் தொடங்கினார்கள்... திருமா,வைகோ மட்டும் அல்ல 1000+ கட்சிகள்...கருணாநிதி- கெட்டவர் என்று ஒதுங்கி இருக்கிறார்களா? இல்லை நாம் சம்பாதிக்க வேண்டும் என்ற சுயநலம் காரணமா? கேள்வி நீங்க கேட்டு பதில் அடுத்தவர் சொல்ல கூடாது நீங்க தான் யோசிக்கனும்..

      நீக்கு
  6. அரசியலின் உச்சபட்ச அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு எதிர்க் கட்சியினரை எதிரிகளாகவே பாவித்து அவர்களைத் துண்டாடுவதற்கான சிந்தனையிலேயே இருப்பவருடன் எப்படி சுமுகமான உரையாடல் சாத்தியம்? அவருடைய கட்சிக்காரர்களாலேயே அணுக முடியாதவராக எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்து வித்திருக்கும் சர்வாதிகாரியாகவே தான் செயல் படுகிறார் மோடி அவர்கள். எந்த சட்டத்தையாவது பார்லிமெண்ட்டில் எதிர்க்கட்சிகளுடன் விவாதித்து கொண்டு வருகிறாரா? நோட்டிபிகேஷன் என்கிற குறுக்கு வழியிலேயே கொண்டு வருகிறார். அவருடன் பேசுவது சாத்தியம் என்று தோன்றவில்லை. பேச முனைபவர்களை அவமானப் படுத்தி அனுப்பி விடுவார். போராட்டக்காரர்களை சந்திக்க மறுக்கிரார். தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை சந்திக்க மறுக்கிறார். தனக்கு எதிர்க்கருத்து உள்ளவர்களைச் சந்திக்கவே மறுக்கிற மோடியுடன் எப்படி உரையாட முடியும். உரையாடுவதற்கு அவர் மற்றவர்களைச் சந்திக்க முன்வர வேண்டும் தானே? உங்களுடையது பேராசை சமஸ். இந்த தேசத்திற்கு பாழாய்ப்போன காங்கிரஸை விட்டால் வேறு கதி மோடசமே இல்லை என்பதை மோடியும் நிரூபித்து அரசியலிலிருந்து விலகிப் போவார். அதுவரை அவரைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் நண்பரே!

    பதிலளிநீக்கு