வாட்ஸப் சர்க்கார்!


வாரணாசிக்கு நான் போயிருந்த சில நாட்களுக்கு முன்புதான் மனோஜ் சின்ஹா அங்கு வந்து சென்றிருந்தார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர். “முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு வழிபாடு நடத்த வேண்டும் என்று எண்ணியே வாரணாசிக்கு அவர் வந்திருந்தார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை; கடைசியில் ஆளை மாற்றிவிட்டார்கள்” என்று பேசிக்கொண்டார்கள். முன்னதாக, வாய்மொழி உத்தரவின்பேரில் புதிய முதல்வருக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எல்லாம்கூட நடந்திருக்கின்றன என்பதை உள்ளூர் பத்திரிகைகளைப் படித்தபோது தெரிந்துகொள்ள முடிந்தது. பின்னர், எப்படி, ஏன் யோகி ஆதித்யநாத் முதல்வராக்கப்பட்டார்?


உத்தர பிரதேசத்துக்கு வெளியே பலராலும் பேசப்படுகிறபடி, ஆர்எஸ்எஸ்ஸின் அடுத்தகட்டத் தயாரிப்பு அல்ல யோகி; அதாவது, யோகி இன்னொரு மோடியாக வளர்த்தெடுக்கப்பட மாட்டார்; மாறாக, மோடி அரசு தேசிய அளவில் மேற்கொள்ளத் திட்டமிடும் காரியங்களுக்கான உள்ளூர் சோதனைக் கருவியாக உத்தர பிரதேசத்தில் அவர் பயன்படுத்தப்படுவார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஆர்எஸ்எஸ்ஸின் நேரடித் தயாரிப்பு அல்ல யோகி. சொல்லப்போனால், கோரக்நாத் மடாதிபதிகளின் செல்வாக்கு அந்தப் பிராந்தியத்தில் பாஜகவின் செல்வாக்குக்கு அப்பாற்பட்டது. பாஜகவும் மடமும் பரஸ்பரம் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்ளும் விதத்திலேயே இரு தரப்பு உறவும் இருந்துவந்திருப்பதைக் கடந்த கால வரலாறு உணர்த்துகிறது. யோகியை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டியவராகவே ஆர்எஸ்எஸ் கையாண்டுவந்தது. ஐந்து முறை மக்களவை உறுப்பினரான யோகிக்கு, மோடி தன்னுடைய அமைச்சரவையில் ஏன் இடம்கொடுக்கவில்லை என்ற கேள்விக்குப் பதில் தேடினால் இத்திட்டத்தின் பின்னணி புரியும்.

2002 தொடங்கி 2014 வரை நாட்டின் பிரதான பரிசோதனைக் களமாக குஜராத்தைப் பயன்படுத்திவந்த ஆர்எஸ்எஸ், 2017 சட்டசபைத் தேர்தலில் கிடைத்த அறுதிப் பெரும்பான்மைக்குப் பிறகு, மீண்டும் உத்தர பிரதேசத்தைத் தன்னுடைய முழுமையான பரிசோதனைக் களமாக மாற்றுகிறது. நாட்டின் பெரிய மாநிலமான அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் செய்தியாக நாடு முழுவதும் சென்றடைய வேண்டும் என்று அது விரும்புகிறது (தேசிய ஊடகங்கள் தொடர்ந்து ‘யோகி புராணம்’பாடும் பின்னணி இதுதான்). தங்களுடைய இலக்குகளைத் துணிச்சலாக நிறைவேற்றும், அதேசமயத்தில், லஞ்ச - ஊழல் போன்ற அதிகாரக் குழிகளில் நேரடியாகச் சிக்காத ஒரு ஆள் அதற்குத் தேவை. அன்றாடம் செய்திகளை உருவாக்க வல்ல, அதேசமயம் துறவறக் கோலம் பூண்டிருக்கும் யோகி இந்த இடத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்ற கணக்கின் அடிப்படையிலேயே அவர் முதல்வராக்கப்பட்டிருக்கிறார்.

இயல்பிலேயே மூர்க்கமானவர் என்று பெயர் வாங்கியிருக்கும் யோகி, முன்னின்று எடுக்கும் எந்த நடவடிக்கையும் யோகியின் தனிப்பட்ட இயல்பின் ஊடாகவே பொதுவெளியில் பெருமளவில் அணுகப்படும் அல்லது சித்தரிக்கப்படும். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், யோகியின் செயல்பாடுகளுக்கான விலையை பாஜக கொடுக்காது. அதேசமயம், பலன்களை அது அறுவடை செய்யும். இந்த அறுவடையில் கிடைக்கும் உபரி பலன்களில் ஒன்றாக இதையும் சொல்லலாம், யோகியின் மூர்க்கமான பிம்பத்தை அடிக்கடி தேசம் முழுக்கக் காட்டுவதன் மூலம், இதுவரை மோடிக்கு இருக்கும் தீவிரமான பிம்பத்தை மென்மையானதாகப் பொதுவெளியில் மாற்றுவது. இது ஏற்கெனவே நடக்கத் தொடங்கிவிட்டது!

இனி, யோகி எத்தனை அடிகள் வரை எடுத்துவைப்பதை உத்தர பிரதேச மக்கள் அனுமதிக்கிறார்களோ அதே அளவுக்கான அடிகளைத் தேசத்தின் ஏனைய பகுதிகளுக்கும் மோடி அரசு நீட்டிக்கும். ஒருவேளை யோகிக்கு எங்கேனும் பலத்த பதிலடி விழுந்தால், பல்லி தன்னுடைய வாலைத் துண்டித்துக்கொண்டு புது வாலை உருவாக்கிக்கொள்வதுபோல, பாஜக இன்னொரு ஆளை உருவாக்கிக்கொள்ளும். மோடியின் கடந்த கால வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஒரு விஷயம் புரியும்: மோடி ஒருபோதும் இன்னொரு மோடி உருவாவதை விரும்ப மாட்டார்! கட்சிக்கு வெளியிலும் சரி; உள்ளேயும் சரி! அப்படி யாரேனும் உருவாக்கப்பட்டால், அவர்களும் மோடியின் பிம்பத்தைப் பிரதிபலிப்பவர்களாக, தாங்கிப்பிடிப்பவர்களாகவே இருப்பார்கள். தேர்தல் சமயத்தில் மோடி உருவாக்கித் தரும் முகமூடிகள்போல, முப்பரிமாண திரைவடிவம்போல!

இப்போதெல்லாம் சமூகத்தில் மேலே இருப்பவர்களைக் காட்டிலும் கீழே இருப்பவர்கள் இந்த விஷயங்களில் கூடுதல் புரிதலோடு இருப்பதுபோலத் தெரிகிறது. வாரணாசியில் என்னை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சுற்றிய ராம் சர்வ சாதாரணமாகக் கேட்டார், “யோகி என்ன, சின்ஹா என்ன, முதல்வராக யார் இருந்தால் என்ன? நாட்டில் நடப்பது இப்போது வாட்ஸப் சர்க்கார்தானே! டெல்லி சொல்வதை இவர்கள் செய்ய வேண்டும், அவ்வளவுதானே!”

உத்தர பிரதேசத்தில் மட்டும் அல்ல; மோடி பிரதமரான பின் பாஜக ஆட்சிக்கு வந்த எல்லா மாநிலங்களிலும் பிரபலமாகிவரும் ஒரு சொல்லாடல், ‘வாட்ஸப் சர்க்கார்’. முக்கியக் கொள்கை முடிவுகள் எல்லாம் பிரதமர் அலுவலகத்திலிருந்தே தீர்மானிக்கப்படும் - உள்ளூர் விவகாரங்களை மட்டும் முதல்வரும், அமைச்சர்களும் தீர்மானித்துக்கொள்ளலாம் என்கிற வகையிலேயே மோடியின் பாஜக மாநில முதல்வர்களைக் கையாள்கிறது என்ற குரல்கள் மாநிலங்களில் ஒலிக்கின்றன. மாநில அரசு நிர்வாகம் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சற்றே பெரிய உள்ளாட்சி நிர்வாகமாக மாற்றுவதற்கான ஒத்திகை இது.

ஆர்எஸ்எஸ்ஸின் உச்ச அதிகாரத்தைத் தாண்டி, பாஜகவின் கட்சி அமைப்புக்குள் முன்பு வரையறுக்கப்பட்ட ஒரு ஜனநாயகம் இருந்தது. குறிப்பாக, அதன் மாநிலத் தலைவர்களுக்கு! அந்த அதிகாரத்தின் அடித்தளத்தில் நின்றுகொண்டுதான், பிரதமராக இருந்த வாஜ்பாய் சொல்லியும், குஜராத் சட்டசபைத் தேர்தலில் ஹரேன் பாண்டியாவுக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்று முதல்வராக இருந்த மோடியால் அன்றைக்கு முரண்டுபிடிக்க முடிந்தது. இன்றைக்கு பாஜகவுக்குள் அந்தக் கலாச்சாரம் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, கட்சியின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி, தேசிய அளவிலான முடிவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை முழுக்கத் தன் கைக்குள் அமித் ஷா வழி மோடி கொண்டுவந்துவிட்டார். மத்திய அமைச்சரவையிலும் பெரும்பான்மை முடிவுகளை பிரதமர் அலுவலகத்தின் வாயிலாக அவரே தீர்மானிக்கிறார். மூன்றாண்டுகளுக்கு முன்பு பதவியேற்றபோது இருந்த மகிழ்ச்சி இன்று பல அமைச்சர்களிடம் இல்லை. மாநில முதல்வர் பதவி கிடைத்தால் உள்ளூரிலாவது கொஞ்சம் அதிகாரத்தோடு இருக்கலாம் என்று நினைக்கும் நிலைக்குப் பல தலைவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்போது மாநிலங்களுக்கான முக்கிய முடிவுகளும் அமித் ஷா வழி மோடியாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

மோடி தீர்க்கமாகத் தன்னுடைய திட்டங்களைப் பத்தாண்டுகளுக்கானதாகவே வகுத்துவருகிறார். இந்த அரசு நகர்த்தும் காய்களைப் பார்க்கும்போது, ‘2014-2019’ காலகட்டத்தை அவர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான காலகட்டமாகக் கருதுவதாகத் தெரியவில்லை. மாறாக, கையிலுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்கான காலகட்டமாகவே பயன்படுத்திவருகிறார்கள். இந்த அதிகாரங்களைக் கையகப்படுத்தும் செயல்திட்டத்தில் மிக மிக முக்கியமான பகுதி மாநிலங்களின் அதிகாரம். நாடு சென்றுகொண்டிருக்கும் திசையை ‘வாட்ஸப் சர்க்கார்’ எனும் சொல்லாடல் சரியாகச் சுட்டிக்காட்டலாம். அதன் சரியான உள்ளடக்கம் ‘பாஸிஸ சர்க்கார்’ என்பதுதான்! ஒருவரே நாடு என்றாகும் திசை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறோம். ஏன் இப்போதெல்லாம் பாஜக மாட்டரசியலை அடிக்கடி கையில் எடுக்கிறது என்றால், மக்களுடைய கவனத்தைத் திசை திருப்பத்தான்; அவர்களுடைய உண்மையான குறி இப்போது மாடு அல்ல, மாநிலங்கள்!

மோடியின் காலத்தை உணர்தல்... 11

- மே 2017, ‘தி இந்து’

3 கருத்துகள்:

  1. Endha oru mukkiya mudivum kolgai alavileye edhirpukalai sandhikum bodhu oru manadhudan udanadiyaga seyalbada adhikara maiyam amaikave indhra mudhal anaivaraum virumbinar.. Adhanal kuda vajpayee arasu kavizhndhadhu.. Anal prandhiya thalaivargalin aalosanai matrum merparvayin padi athagaiya ondrinaindha adhigaram sariyana theergamana makkaal nala mudivugal edupavarayin adhu varaverkathakadhu.. Anal modi yin seyalbadu athagayanadhalla enbadhu arave unmai.. Gst Adhar pondra mukiya masodhakalai ordinary bills aga ilamal money bills aga thaakkal seidhadhu pondra Siru seyalgal kuda avargalin neenda kaala edhirparpukalai kaatukiradhu.. India enbadhu maanilangalin ondriyame andri maanilangalai ullAdakkiya nadu endre avargal ennam pola nadakirargal..

    பதிலளிநீக்கு
  2. உங்கள் எழுதுகளால் சரியான செருப்படி கொடுத்திருக்கிறீர்கள் ஆனால் அவர்களுக்கு உரைக்கமாட்டேங்குது .

    பதிலளிநீக்கு