மாநிலங்கள் மீதான அறிவிக்கப்படாத போர்!

கிராஃபிக்ஸ்: ரெமோ

மோடி அரசின் மாநிலங்கள் உரிமைப் பறிப்பை இந்த அரசின் பத்தோடு ஒன்று பதினொன்று பிரச்சினையாக அணுக முடியுமா? முடியாது. கூடாது. துரதிர்ஷ்டவசமாக அப்படி அணுகும் போக்கே இந்திய அறிவுத் துறையினர் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் இன்றைக்குப் பெருமளவில் இருக்கிறது.

இந்தியாவில் மாநிலங்கள் அமைப்பு என்பது, பல்வேறு நாடுகளையும்போல நிர்வாக வசதிக்கான வெறும் பிராந்தியரீதியாலான பகுப்பு அல்ல. மாறாக, அது பல்வேறு இனங்களின் மொழி, கலாச்சாரம், வரலாற்று உரிமைகளோடு பிணைக்கப்பட்டது. மேலும், உண்மையான அதிகாரப் பரவாக்கலும் பல இன மக்களுக்கான பிரதிநிதித்துவமும் மாநில உரிமையிலிருந்தே தொடங்குகின்றன. ஆக, இன்று நடைமுறையிலிருக்கும் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் எனும் அமைப்பே சங்கப்பரிவாரங்களுக்கும் அவற்றின் ‘ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே தேசியம்’ எனும் ஒற்றைக் கலாச்சாரக் கனவுக்கும் நேர் எதிரானது. ஏனென்றால், இந்த மொழிவாரி அமைப்பு ஒருவகையில் இந்தியாவின் பல்வேறு இன மக்களையும் மொழி அடிப்படையில் ஒன்றிணைக்கிறது - மறுவகையில் மத அடிப்படையில் அவர்களைப் பிளக்கவிடாமல் தவிர்க்கிறது. ஆக, மொழிவாரி மாநிலங்கள் எனும் அமைப்பு ஒரு உறங்கும் புலி. சீண்டினால் அது எப்படிக் கிளர்ந்தெழும் என்பதற்கான சமீபத்திய உதாரணத்தையே ‘2017 ஜல்லிக்கட்டுப் போராட்டம்’ வாயிலாக டெல்லி பார்த்தது. ஆக, இந்த நாட்டை எப்படியானதாக மாற்ற வேண்டும் என்று சங்கப்பரிவாரங்கள் வைத்திருக்கும் வரைபடத்தின்படி, அழிக்கப்பட வேண்டிய அடிப்படையான கூறுகளில் ஒன்றாகிறது இன்றைய மாநிலங்கள் அமைப்பு. அதன் ஆரம்ப கட்டப் பணியே மாநிலங்கள் உரிமைப் பறிப்பு.

ஆர்எஸ்எஸ்ஸைப் பற்றிப் பேசுகையில், ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ எனும் அது வெளியே அதிகம் வெளிக்காட்டும் ஒரு முகத்தைப் பற்றிதான் அதன் எதிரிகளும் விமர்சகர்களும் அதிகம் பேசுகிறார்கள். ‘ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே சித்தாந்தம்’ எனும் கனவையும் நெடுங்காலமாகக் கொண்ட இயக்கம் அது என்பதை நாம் உணர வேண்டும். ஆர்எஸ்எஸ்ஸின் சிந்தாந்தத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான எம்.எஸ்.கோல்வல்கர், 1961-ல் தேசிய ஒருமைப்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்: “இன்றைய கூட்டாட்சி வடிவம், பிரிவினைவாத உணர்வுகளுக்கு வித்திடுவதுடன் அதற்கு ஊட்டம் அளிக்கவும் செய்கிறது. ஒரே தேசம் எனும் கருத்தாக்கத்தை அங்கீகரிக்க மறுப்பதுடன் அதைச் சிதைக்கவும் செய்கிறது. அது முற்றிலுமாக வேரறுக்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் சீரமைக்கப்பட்டு, ஒற்றை ஆட்சி நிறுவப்பட வேண்டும்.”

இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆர்எஸ்எஸ் எப்படியான மாநிலங்களைக் கட்டமைக்க விரும்புகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்: “மையப்படுத்தப்பட்டதாக அரசு இருக்க வேண்டும். மாநிலங்கள் என்பவை நிர்வாகரீதியான பிரதேசங்களாக இருக்க வேண்டும்… நமது ஒருங்கிணைந்த ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய, துண்டாடக் கூடிய, பிராந்தியம் சார்ந்த, குறுங்குழுவாத, மொழி அடிப்படையிலான அல்லது வேறு எவ்விதமான பெருமித உணர்வும் சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டு, ‘ஒரே நிலம், ஒரே தேசம், ஒரே நாடாளுமன்றம், ஒரே நிர்வாகி’ என்பது பறைசாற்றப்பட வேண்டும்.”

இந்தியாவுக்கு மையப்படுத்தப்பட்ட அரசு நிர்வாகமே தேவை; நாட்டை இதற்காக 50 நிர்வாகப் பிரிவுகளாகக்கூடப் பிரித்து நிர்வகிக்கலாம் என்பதே ஆர்எஸ்எஸ் கனவில் உள்ள மாநிலங்களுக்கான வரைபடம். கோல்வல்கரின் வார்த்தைகளிலிருந்து பார்த்தால், மோடி இன்றைக்குச் சொல்லும் ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ எனும் சொல்லாடல் பின்னாளில் இந்திய மாநிலங்களை எப்படியானதாகப் பிரிக்க வழிவகுக்கும் என்பது புரியவரும்.



அன்றைக்கு ‘பாடலிபுத்திரா விரைவு ரயில்’ பயணத்தின்போது சந்தித்த பெரியவர் இதுபற்றித்தான் பேசினார். “கர்நாடகம் எவ்வளவு நாள் இன்றைக்கு உள்ள இதே அளவுள்ள ஒருமித்த நிலமாகக் கன்னடர்களின் கீழ் இருக்கும் என்று தெரியவில்லை. கர்நாடகத்தைக் குறைந்தது மூன்று பகுதிகளாக அவர்களால் பிளக்க முடியும்” என்றார். தமிழகத்தில் அவர்கள் கை வைத்தால் எப்படியெல்லாம் பிளக்க முயற்சிப்பார்கள் என்று என் மனதில் ஓட ஆரம்பித்தது. சென்னை யூனியன் பிரதேசமாகக் கூடும்; வட தமிழகம், தென் தமிழகம், கொங்கு தமிழகம்… அதற்குப் பின் வேறு எதிரிகளே வேண்டாம். இன்றைக்கு ஆந்திரமும் தெலங்கானாவும் ஒன்றுக்கொன்று எப்படி முறுக்கிக்கொண்டு நிற்கின்றனவோ அப்படி காலத்துக்கும் அடித்துக்கொள்ள உள்ளூர் சச்சரவுகள் போதும்! அதுதான் இத்திட்டத்தின் மைய அம்சமாக இருக்கக் கூடும்!

இந்துத்துவச் சித்தாந்தப்படி, மையப்படுத்தப்பட்ட நிர்வாகமுள்ள நாட்டில் மாநிலங்கள் எப்படி சுயாட்சி நடத்த முடியும்? மோடியின் ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ என்பது மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், நாடு முழுவதையும் ஒரே மையத்திலிருந்து கட்டுப்படுத்துவதுதான். அதற்கான மிக அடிப்படையான நடவடிக்கை மாநிலங்களின் அதிகாரத்தை ஒரே கைக்குள் கொண்டுவருவது. மாநிலங்களின் அதிகாரத்தை ஒரே கைக்குள் கொண்டுவருவது என்றால், மாநிலங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் தரும் அதிகாரங்களைக் கைக்குள் கொண்டுவருவது மட்டும் அல்ல; மாநிலங்களில் முதல்வர் நாற்காலிகளில் உட்காருபவர்களையும் தம் கைக்குள் வைத்திருப்பதும் இதில் அடக்கம்; அப்போதுதான் அதிகாரப் பறிப்பு நடக்கும்போது அவர்கள் வாய் மூடி இருப்பார்கள். அதுதான் இன்று நடக்கிறது!

மூன்று விதங்களில் மாநிலங்களின் மீதான அறிவிக்கப்படாத போரை இன்று மோடி அரசு நடத்திவருகிறது. 1. மாநிலங்களின் சட்டபூர்வமான அதிகாரங்களைப் புதிய நடைமுறைகள் மூலம் படிப்படியாகப் பறித்தல். 2. என்ன விலை கொடுத்தேனும் மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கொண்டுவருதல். 3. பாஜகவுக்குள் தனிப்பட்ட செல்வாக்குள்ள மாநிலத் தலைமைகள் என்ற ஓரிடத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்!

மாநில உரிமைகள் மீதான தாக்குதலை அவற்றின் உயிர்நாடியான நிதிச் சுதந்திரத்தில் குறிவைத்து அடிப்பதன் வாயிலாகத் தொடங்கியிருக்கிறது மோடி அரசு. அறுபத்தைந்து ஆண்டு வரலாற்றைக் கொண்ட திட்டக் குழுவை ஒழித்து, ‘கூட்டாட்சித் தத்துவத்தை மேம்படுத்தப்போகிறேன்’ என்ற முழக்கத்துடன் ‘நிதி ஆயோக்’ அமைப்பைக் கொண்டுவந்தார் மோடி. திட்டக் குழுவில் மாநிலங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகள், பலன்களையும் இன்று பறித்துவிட்டது ‘நிதி ஆயோக்’. தனியார் பங்களிப்பை அதிகரித்து, மாநிலங்களின் வழி மத்திய அரசு செய்துவந்த சமூகச் செலவுகளையும் அதன் பொறுப்புகளையும் கை கழுவிக்கொள்ளவே ‘நிதி ஆயோக்’ உதவியிருக்கிறது. நிதிக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட கண்கட்டி வித்தை மாற்றங்களும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குலைப்பதாகவே அமைந்தன.

மாநிலங்களின் நிதியாதார உரிமையின் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத் தாக்குதலாகவே அமைந்துவிட்டது சுதந்திர இந்தியாவின் வரி வசூல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பெரிய மாற்றமான ‘சரக்கு சேவை வரி விதிப்பு முறை’ (ஜிஎஸ்டி). அடுத்து, கல்வித் துறையில் தொடங்கி கலாச்சாரத் துறை வரையிலான அத்துமீறல்கள். ‘ஒரே நாடு, ஒரே தேர்வு’ என்று மாநிலக் கல்வித் திட்டப்படி படிக்கும் மாணவர்களுக்கு மத்தியக் கல்வித் திட்டப்படி நுழைவுத் தேர்வுகளில் தொடங்கி, ‘ஒரே நாடு, ஒரே உணவுக் கலாச்சாரம்’ நிலை நோக்கி இட்டுச்செல்லும் மாட்டுக்கறி உணவுக்கான சட்ட நெருக்கடி தொட்டு, மக்களவைத் தேர்தலுடன் மட்டுமே இனி சட்டசபைத் தேர்தல்களை நடத்தத் திட்டமிடும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ யோசனை வரை எல்லாத் துறைகளிலும் மாநிலங்களின் உரிமைகளைத் தன் கையில் கொண்டுவரும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது மோடி அரசு.

மக்களவைப் பெரும்பான்மையோடு, மாநிலங்களவைப் பெரும்பான்மையும், கூடவே மாநிலங்களின் ஆட்சியும் கையில் வந்தடையும் சூழலில் சட்டபூர்வமான எல்லா மாற்றங்களையும் மேற்கொள்ளும் சமிக்ஞைகளுடனேயே இந்த அரசின் பயணத் திசை இருக்கிறது.

நாடாளுமன்றத்தின் வாயிலாகவே அரசியலமைப்புச் சட்டத்தைத் தம் விருப்பப்படி வளைக்கும் நோக்கிலேயே மாநிலங்களில் ஆட்சி அமைப்பதில் இதுநாள் வரை இல்லாத தீவிரத்தைக் காட்டிவருகிறது பாஜக என்று கூற முடியும். காங்கிரஸை ஒழிக்க ராகுல் காந்தி மீதான கண்ணியப் படுகொலைத் தாக்குதல்கள்; மாநிலக் கட்சிகளை ஒழிக்க உட்கட்சிப் பிளவுகள் - வருமானவரித் துறை, புலனாய்வு அமைப்புச் சோதனைகள்; உச்சகட்டமாக மாற்றுக் கட்சிக்காரர்களைப் பேரம் பேசி தம் கட்சிக்காரர்களாக வாரிச் சுருட்டுதல் என்று எந்த நிலைக்கும் அது தயாராகவே இருக்கிறது. அசாமிலும், மணிப்பூரிலும் காங்கிரஸாரைத் தேர்தல் சமயத்தில் பாஜகவுக்குக் கொண்டுவந்ததில் தொடங்கி அருணாசல பிரதேசத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸாரைப் பூண்டோடு ஒரே நாளில் அப்படியே பாஜகவினராகக் கட்சி மாறச் செய்து ஆட்சி அமைத்தது வரை பாஜக மேற்கொண்டுவரும் ஜனநாயக இழிவுகள் அத்தனையும் எதற்காக? ஒடிஸாவின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தள மக்களவை கொறடா சத்பதி சொல்வதுபோல, “இன்றைக்கு நாட்டிலுள்ள ஒவ்வொரு கட்சியையும் பல கூறுகளாகப் பிளந்து பலவீனப்படுத்திவிட்டு, எதிரே தன்னுடைய கட்சியைப் பலப்படுத்தி ஒரு கட்சி ஆட்சிமுறை நோக்கி இந்தியாவைச் செலுத்துகிறது பாஜக!”

மோடி தலையெடுத்த பின், பாஜக ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் அது தேர்ந்தெடுத்த முதல்வர்களின் பட்டியலைக் கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியைத் தாண்டி எந்த வகையிலும் தனித்துச் செல்வாக்கு பெற்றுவிட முடியாத ஆட்களையே அது திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கிறது. இந்திய அரசியலில் சாதியின் பலம் என்ன என்பதை அதை நுட்பமாகக் கையாண்டு பழகிய பாஜக துல்லியமாகவே உணர்ந்திருக்கிறது. அதனால்தான் சாதி பலம் சார்ந்துகூட முதல்வர்கள் தனித்து செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என்று அது நினைக்கிறது. ஜாட்டுகள் அதிகம் வசிக்கும் ஹரியாணாவில் ஜாட் அல்லாத ஒரு முதல்வர், படேல்கள் அதிகம் வசிக்கும் குஜராத்தில் படேல் அல்லாத ஒரு முதல்வர், மராத்தாக்கள் அதிகம் வசிக்கும் மகாராஷ்டிரத்தில் மராத்தா அல்லாத ஒரு முதல்வர், யாதவ்கள் அதிகம் வசிக்கும் உத்தர பிரதேசத்தில் யாதவ் அல்லாத ஒரு முதல்வர் எனும் வியூகத்தை அது கையாளும் பின்னணி என்ன? தனிப்பட்ட செல்வாக்கு இல்லாமல், சிறுபான்மைச் சாதியிலிருந்து வரும் ஒருவர் இந்திய அரசியலில் பிழைத்திருக்க மேலிட விசுவாசம் அன்றி வேறு வழியே கிடையாது எனும் தந்திரம்தானே! அப்படியான தலைவர்களையே பாஜக இன்று வளர்த்தெடுக்கிறது!

மோடி, அமித் ஷாவுக்கு அடுத்த நிலையில், இன்று அவர்களிடம் பேசத்தக்க, தனித்த செல்வாக்குள்ள ஒரு மாநில முதல்வர் பாஜகவில் மிச்சம் இருக்கிறார் என்றால், அவர் மத்திய பிரதேசத்தின் மூன்று முறை முதல்வரான சிவராஜ் சௌகான் மட்டும்தான். பிரதமர் வேட்பாளராக மோடிக்கு மாற்றாகக் கட்சியில் அத்வானியால் முன்னிறுத்தப்பட்டவர். ஆனால், சௌகான் போன்றவர்களும் மாநிலங்களிலிருந்து மிக விரைவில் மத்திய அரசு நோக்கி மோடியால் இழுக்கப்படுவார்கள் என்கிறார்கள். மேலும் உள்ளூர் அளவில் அவர்களுக்கு எதிரான புதிய கோஷ்டிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

நேருவின் ஆட்சிக் காலத்தில் தன்னுடைய மாநிலத்துக்கு மருந்துத் தேவை ஏற்பட்டபோது, பிரான்ஸ் அரசாங்கத்தோடு நேரடியாக இறக்குமதி ஒப்பந்தம் போட்டார் வங்க முதல்வர் பி.சி.ராய். இப்படி வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் போடும் ஒரு உரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்குக் கிடையாது என்றாலும், மாநிலத்தின் தேவை கருதி அவர் எடுத்த துணிச்சலான இம்முடிவை வேறு வழியின்றி அங்கீகரிக்கவே செய்தது நேரு அரசு. நேருவின் அதிகாரம் கொடி கட்டிப் பறந்த காலத்திலும், ஆட்சியிலும் கட்சியிலும் மாநிலத் தலைவர்களுக்கு எப்படியான இடம் இந்நாட்டில் இருந்தது என்பதற்கான உதாரணங்களில் ஒன்று இது. இன்று இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தைக்கூட பிரதமர் அலுவலகம் இறுதிசெய்யும் நிலையை நோக்கி இருப்பதாக பாஜகவுக்குள்ளேயே பேச்சுகள் அடிபடுகின்றன. ஜிஎஸ்டி விவகாரத்தில் உடனடியாகப் பாதிப்புக்குள்ளாகும் நான்கு மாநிலங்களில் - தமிழகம், கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம் - இரண்டு மாநிலங்கள் பாஜக ஆள்பவை. இன்னும் சொல்லப்போனால், குஜராத், மகாராஷ்டிரம் இரண்டுக்கும் இழப்புகள் அதிகம். ஆனால், அதுகுறித்து மென்மையான மொழியில் பேசுவதற்குக்கூட கட்சிக்குள் இடம் இல்லை என்கிறார்கள்.

ஆக, கட்சிக்குள்ளும் வெளியிலுமாக இன்றைக்கு மாநிலம் எனும் அமைப்பைக் குறிவைத்து பாஜக நடத்திக்கொண்டிருக்கும் போரானது மிகத் தெளிவாக நாட்டை ‘ஒரே நாடு - ஒரே கட்சி - ஒரே தலைவர்’ எனும் நிலை நோக்கி இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது. வெளியே இன்னும் பரவலாகக் கண்ணுக்குத் தெரியாத வகையில், இன்னும் அதன் முழு உக்கிரம் புரியாத வகையில் பாஜக நடத்திக்கொண்டிருக்கும் இந்தப் போர் மீது எதிர்க்கட்சிகளின் கவனம் எந்த வகையிலும் குவிந்திடாத வண்ணம் அது வாண வேடிக்கைகளைப் போல பல்வேறு திசைத் திருப்பல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்தத் திசைத்திருப்பல்களின் மைய வாகனமாக இப்போது அது கையிலெடுத்திருப்பது மாடு!

(உணர்வோம்…)

மோடியின் காலத்தை உணர்தல்...12

மே, 2017, ‘தி இந்து’

2 கருத்துகள்:

  1. உ.பி.யில் பெற்ற மாபெரும் வெற்றியின் முக்கிய காரணத்தை புரியாமல் ஆர்.எஸ்.எஸ் சந்தர்ப்பத்தை விரைவாக பயன்படுத்த பார்க்கிறது.பலவீனமான மாநில தலைவர்களை உருவாக்குவது, பலம் வாய்ந்த தலைவர்களை பலமிழக்க செய்ய மைய அரசியலுக்குள் இழுப்பது போன்றவை எல்லாம் காங்கிரஸ் பயன் படுத்தி தோல்வி கண்ட இராஜ தந்திர நடவடிக்கைகள்.
    நுகர்வு கலாச்சாரத்தில் மக்கள் மூழ்கடிக்கப் படுவதால் அவரகள் தங்கள் மொழிகளுக்கும்,தனித் தன்மைகளுககும் தற்போதைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.இதை பயன் படுத்தி இந்துத்துவா சித்தாந்த வாதிகள் இயக்கயியலுக்கும் இயற்கைக்கும் எதிரான தங்கள் இலட்சியமான ஒரே மதம் ஒரே மொழி ஒரே நாடு ஒரே கலாச்சாரத்தை நிறுவ முயற்சிக்கிறார்கள்.அதற்ந்தகாக பெரிய குழுக்களை பிளந்து சிறிய குழுக்களாக்கி மோத விடுகிறார்றாகள்.இது எல்லா ஆட்சியாளர்களின் தந்திரமான நடைமுறைகள் தான். இத்தந்திரங்கள் குறுகிய காலத்திற்கே பயனளிப்பவை என்பதே வரலாறு. எனவே இவர்களின் ஒற்றை மத மொழி கலாச்சார கனவுகள் ஒருபோதும் வெற்றி பெறாது.
    இவர்களின் வேகமான செயல்பாடுகள் பிரிந்துக் கிடக்கும் பன்முகத் தன்மைகள் கொண்டவர்களை வேகமாக ஒன்றிணைத்து வெற்றி பெறவைக்கும்.

    உன்னதமான கூட்டுக் குடும்பங்களின் இன்றைய நிலை என்ன?. தனித்தனிக் குடும்ப வாழ்க்கை முறை வேகமாக வளர்ச்சி அடைவதேன். இயக்கயியலின் அடிப்படையிலான உள் முரண்பாடுகளின் வளர்ச்சியே.
    தற்போது பாபர் மசூதி வழக்கு திடீரென புத்துயிர் பெற்று வழக்கு உடனடியாக மறு விசாரணைக்கு வந்ததேன்?.

    அவர்கள் நினைத்தால் ஜனாதிபதி தேர்தல் வரையிலாவது தள்ளிப் போட்டிருக்க முடியாதா?.
    அத்னாவானி ஜனாதிபதி வேட்பாளர் போட்டிக்கு வந்து விடக் கூடாது ஜனாதிபதியாகி விடக்கூடாது என்பது தானே உண்மையான நோக்கம். இது பாஜகவில் வளர்ந்துள்ள உள்முரண்பாடுகளின் வெளிப்பாடுதானே.அதனால்தானே அத்வானியை அடி மாடாக்கும் முயற்சி நடக்கிறது. இதில் யார் வெற்றிப் பெறவார்? என்பதைப் பொறுத்துதான் அடுத்த கட்டம் தீர்மானமாகும்.

    உள் முரண்பாடுகளால், ஒன்று இரண்டாவதும், அதன்பின் வேற்றுமைக்குள்ளே தனித்தனியாக ஒரே அமைப்புக்குள்ளே இயங்குவதோ அல்லது தனியமைப்பாக இயங்குவதா என்பதை அப்போதைய அக புற முரண்பாடுகளே முடிவு செய்யும் இதுவே இயற்கையின் இயக்கயியல்.

    எனவே தமிழ்நாடும் பிற மாநிலங்களும் இரண்டாகப் பிரியுமா மூன்றாகப் பிரியுமா என்று இப்போதே கவலைப் பட வேண்டாம்.

    கூட்டுக் குடும்பம் தனிக்குடும்பம் சம்பந்தமான விதி எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தும். எனவே காந்தியின் கிராமராஜ்யம், கம்யூனிஸ்ட்களின் கம்யூன்கள் (பஞ்சாயத்துக்கள்) அளவுக்கு சுயாட்சி கொண்ட அமைப்புகள் உருவாகியே தீரும். அதற்கு வெகு காலமாகும். அவற்றை விரைவாக கொண்டு வருவதற்கே நாம் கருத்துகளால் மோதுகிறோம், மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கட்டுரை நடுநிலையற்ற ஒரு பிரசாரமாகவே உள்ளது.

    1. ஜி.எஸ்.டி மசோதா காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு கொண்டுவந்தது, இன்றும் அதற்கு காங்கிரஸ் சொந்தம் கொண்டடுகிறது என்பதை மறந்து (மறைத்து?) மீண்டும் மீண்டும் உங்கள் கட்டுரைகளில் அதை மோடி அரசை குறை கூற பயன்படுத்தி வருகிறிர்கள்.

    2. கோல்வால்கர் கருத்து கூறிய காலத்தில் தி.மு.க. பிரிவினைவாதம் பேசிக்கொண்டிருந்தது என்பதை மறைப்பது ஏன்?.

    3. முதல்வர்கள் நியமனத்தில் பாஜக வை குறை கூறும் நீங்கள் காங்கிரஸ் எப்படி முதல்வர்களை நியமித்தது என்று விளக்காதது ஏன்? இன்று எந்த முதல்வரும் பிரதமரிடம் அறை வாங்கவில்லையே. ஒரு எம்.பி. தன் கட்சி பிரதமரை ‘நான்ஸென்ஸ்’ என்று கூறி அமைச்சரவை முடிவை திரும்பப் பெறச் செய்யவில்லையே.

    4. காங்கிரஸ் தோழமைக் கட்சி திமுக முதல் எதிர் கட்சிகள் வரை வழிக்குக் கொண்டுவர சி.பி.ஐ முதலியவற்றை பயன்படுத்தியதில்லை என்று சான்றிதழ் அளிக்கத் தாங்கள் தயாரா?

    5. மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எந்த புள்ளிவிவரமும் அளிக்காமல் பொத்தாம்பொதுவாக கருத்து கூறி இருக்கிறீர்கள்.

    6. பாஜக வலதுசாரி, தேசியவாத, பெரும்பான்மைவாத கொள்கையை முன்னெடுப்பதாகவே வைத்துக்கொள்வோம். தனது கொள்கையை ஜனநாயக முறையில்தானே செய்துவருகிறது? எந்தக் கொள்கைக்காகவும் அல்லாமல் தன் பதவியை காப்பாற்றிக் கொள்ளூம் ஓரே நோக்கத்தில் ‘எமர்ஜென்சி’ யை கொண்டுவந்தது யார்? அதிலிருந்தே நாடு மீண்டு வரவில்லையா என்ன?

    பதிலளிநீக்கு