இருண்ட காலம்

         கடந்த சில நாட்களாகவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரபூர்வ மின்வெட்டுடன் முன்னறிவிப்பற்ற மின்வெட்டையும் செயல்படுத்திவருகிறது மின் வாரியம். பெரும்பாலும் நள்ளிரவிலும் அதிகாலையிலும் மேற்கொள்ளப்படும் இந்த மின்வெட்டால், மின் பயன்பாடற்ற கடந்த நூற்றாண்டு வாழ்க்கையை நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் மக்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் எப்போது மின்சார விநியோகம் இருக்கும் எப்போது நிறுத்தப்படும் என்பது யாருக்குமே புரியாத ஒன்றாக மாறிவிட்டது.
      இந்நிலையில், விழ ஒன்றில் பங்கேற்ற மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, "அரசு உத்தரவுக்கு மாறாக, கூடுதல் நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று பேசியிருக்கிறார். ஆனால், அமைச்சர் இப்படி பேசிய அடுத்த 24 மணி நேரத்துக்குள் "எந்த நேரமும் மின் தடை ஏற்படலாம்; மின் தடை ஏற்படும் நேரத்தைக் கணிக்க முடியாது'' என்று அறிவித்திருக்கிறது மின் வாரியம்.
     ஏதோ அரசுக்குத் தெரியாமல் அலுவலர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையைபோல மின்தடையைச் சித்தரிக்கும் அமைச்சரின் பேச்சும் அதைத் தொடர்ந்து அவருடைய பேச்சுக்குத் தலைகீழாக வந்திருக்கும் மின் வாரியத்தின் இந்த அறிவிப்பும் கேலிக்குரியவை.
    தமிழகத்தில் சுமார் 2.95 கோடி மின் இணைப்புகள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் 6 லட்சம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதற்கேற்ப மின் தேவையும் ஆண்டுதோறும் 500 மெகாவாட் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மாநிலத்தின் மின் தேவை 2005 - 06 -ல் 8,301 மெகா வாட்டாக இருந்தது. 2008 - 09-ல் நம் தேவை 9,576 மெகா வாட்டாக அதிகரித்திருக்கும் நிலையில், உற்பத்தி அதிகரிக்கப்படாததுடன் குறைந்தும் இருப்பதால் 1,000 மெகா வாட் பற்றாக்குறை நீடித்துவருகிறது.
    தென்னிந்தியாவிலேயே அதிகளவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலகட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தடையற்ற மின் விநியோகம் என்ற உறுதிமொழியுடன் தொழில் நிறுவனங்களை வரவேற்கும் அரசு, அவற்றுக்கான மின் தேவையைக் கணிக்காததும் உற்பத்திக்குத் திட்டமிடாததும் யாருடைய தவறு?
     பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய அரசிடம் நாள்தோறும் 300 மெகாவாட் கேட்டிருப்பதாகவும் முதல்கட்டமாக 100 மெகாவாட் தர உறுதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது அரசு. 1,000 மெகாவாட் தேவைப்படும் இடத்தில் 100 மெகாவாட் எந்த மூலைக்கு?
   மின்வெட்டு ஓர் அரசியல் பிரச்னையாக உருவெடுத்ததும் செய்யூர், மரக்காணம் அல்லது கடலூரில் இரு 'அல்ட்ரா மெகா மின் திட்டங்க'ளைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் முதல்வர். 'ஜெயங்கொண்டம் மின் திட்ட'மே 15 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்துக்கொண்டிருக்கும்போது இந்தப் புதிய திட்டங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எந்தக் காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்?
    கடந்த இரு ஆண்டுகளில் மின் உற்பத்திக்கென எந்த உருப்படியான திட்டத்தையும் மின் துறை மேற்கொள்ளவில்லை. அனல், புனல் மின் திட்டங்கள் தவிர்த்த மாற்று எரிசக்தி திட்டங்கள்பற்றி நம் மின் துறைக்குப் எந்தப் பிரக்ஞையும் இல்லை; தொலைநோக்குப் பார்வையில்லை. நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மின் வாரியத்தை லாபத்தில் இயங்கச் செய்யும் நடவடிக்கைகள் இல்லை. நேற்று வந்த தனியார் நிறுவனங்கள் அதிநவீன சாதனங்களுடன் மின் உற்பத்தியில் முன்னேறிக்கொண்டிருக்க நம்முடைய மின் வாரியமோ அரதப் பழசான சாதனங்களுடனும் நடைமுறைகளோடும் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இவையெல்லாமே மின் துறை அடைந்திருக்கும் தோல்வியின் அப்பட்டமான வெளிப்பாடுகள். ஆனால், அதற்கான தண்டனையையோ மக்கள் மீது சுமத்திக்கொண்டிருக்கிறது அரசு.
   ஏதோ இன்றோடு முடியப்போவதில்லை இந்தப் பற்றாக்குறை. அடுத்த ஆண்டில் இப்பற்றாக்குறை 1,280 மெகா வாட்டாகவும் அதற்கடுத்த ஆண்டில் 1,860 மெகா வாட்டாகவும் அதிகரிக்கும் என்று மின் வாரியத்தினரே தெரிவிக்கின்றனர். இப்போதே நிலைமை இப்படியென்றால் அப்போது எப்படியிருக்கும்? நினைத்தாலே ஒரே இருட்டாக இருக்கிறது.
   இந்தக் கொடுமையெல்லாம் போர்வைகளுக்கோ கொசுக்களுக்கோ புரிகிறதா என்ன? போர்த்தினால் வியர்க்கிறது; விலக்கினால் கடிக்கிறது!
 2008 தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக