மன்னியுங்கள், வெட்கித் தலைகுனிகிறோம்!

                                  
           பல்லாயிரக் கணக்கான பிச்சைக்காரர்கள். ஆம். பிச்சைக்காரர்கள்தான். கொஞ்சம் பைத்தியம் வேறு. கூடவே பெண்கள். அவர்களும் அப்படிதான். கூடவே குழந்தைகள். அவர்களும் அப்படிதான். எல்லாம் நடைப்பிணங்களாய்க் கையேந்தி நின்றுகொண்டிருக்கிறார்கள்; ஒரு வேளை கஞ்சிக்கு, ஒரு வாளி தண்ணீருக்கு. சின்னச்சின்ன கூடாரங்களில் அஞ்சி ஒடுங்கிக்கிடக்கிறார்கள்; வெட்டவெளியில், பொட்டல் காட்டில்; சூழ்ந்திருக்கும் ராணுவத்தினரின் கொடிய சந்தேக நடவடிக்கைகளுக்கும் கூரிய வேலிக்கும் நடுவே.

           இன்னும் சில காத தூரத்தில் இன்னும் பல்லாயிரக் கணக்கான பிச்சைக்காரர்கள். ஆம். பிச்சைக்காரர்கள்தான். கொஞ்சம் பைத்தியம் வேறு. கூடவே பெண்கள். அவர்களும் அப்படிதான். கூடவே குழந்தைகள். அவர்களும் அப்படிதான். எல்லாம் நடைப்பிணங்களாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்; மிச்சமிருக்கும் உயிரை மட்டுமாவது காப்பாற்றிக்கொள்ள எங்கேனும் இடமிருக்குமா என்று தேடி; வெட்டவெளியில், பொட்டல் காட்டில்; ஓயாது பாயும் குண்டுகளுக்கும் சூழ்ந்திருக்கும் ஆயுததாரிகளுக்கும் நடுவே.

           இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா 'நலன்புரி நிலையங்க'ளிலிருக்கும் தமிழர்களின் நிலைக்கும் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருக்கும் முள்ளிவாய்க்கால் 'பாதுகாப்பு வளைய'த்திலிருக்கும் தமிழர்களின் நிலைக்கும் உள்ள வேறுபாடு இவ்வளவுதான். இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட ஒதுங்குமிடம் ஏதுமின்றி வவுனியாவும் முள்ளிவாய்க்காலும் மனிதர்களால் நிரம்பி வழிகின்றன. ஆனால், குண்டுகள் சத்தமும் மனிதக் கூக்குரலும் கண நேர ஓய்வின்றி ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.  உலகின் அத்தனைக் கண்களும் பார்த்திருக்க இப்படியோர் அவலம் மாதக் கணக்காய் தொடர்வதைவிடவும் சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் ஒரு கேவலமில்லை. இதன் பின்னணியில் உள்ள நாடுகள், அரசியல்வாதிகள், அரசியல் சூட்சமங்கள், தேர்தல் கால நாடகங்கள் எல்லாவற்றையும் நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம். எனினும், இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. நவீன அரசியல் அகராதியில் மனிதநேயம், மனித உரிமைகள் போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் நேரடியான அர்த்தம் ஏதும் கிடையாது. எல்லாமே ஆதாயம் சார்ந்த விஷயங்கள்தான். ஆகையால், அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க ஏதுமில்லை. ஆனால், சமகாலத்தின் வரலாற்றுத் துயரமான இந்த மனிதப் பேரவலத்தை ஊடகங்கள் குறிப்பாக - இந்தியாவின் தேசிய ஊடகங்கள் கையாளும் விதம் மிகுந்த அதிர்ச்சியையும் வெட்கத்தையும் ஏற்படுத்துகின்றது. நாம் நமக்கென்று ஏதேனும் தார்மிகக் கொள்கைகளைக் கொண்டிருக்கின்றோமா என்ற கேள்வியை  ஏற்படுத்துகின்றது.


           ஒரு கொலை நடந்துகொண்டிருக்கிறது. இறந்துகொண்டிருப்பது யார், அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன, கொலைக்கான பின்னணி என்ன என்கிற தர்க்க நியாயங்களெல்லாம் கிடக்கட்டும். ஓர் உயிர் அழிந்துகொண்டிருக்கிறது; அதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்கிற குறைந்தபட்ச பிரக்ஞையைக்கூடவா நாம் இழந்துவிட்டோம்?

           இலங்கை விவகாரத்தைப் பொறுத்த அளவில் ஊடகங்களின்  செயல்பாடு எப்போதுமே விமர்சனத்துக்குரியதாகவே இருந்துவந்திருக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் தேசிய ஊடகங்கள் இலங்கை அரசின் ஊதுகுழலாகவே இருந்துவந்திருக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை இந்திய ஆங்கில பத்திரிகைகளும் 24 மணி நேரச் செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களும் இலங்கைப் போரை கொஞ்சமும்  பொருட்படுத்தவில்லை. அரசியல்வாதிகளைப் போலவே தேர்தலையொட்டி இப்போது இலங்கையைக் கையிலெடுத்திருக்கின்றன. இப்போதும்கூட இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் 'பூஜ்ஜிய சத குடிமக்கள் உயிரிழப்பற்றப் போர்' சித்தாந்தத்தை அப்படியே உள்வாங்கிக்கொண்டு, இந்த விவகாரத்தை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தொடர்பான ஒரு செய்தியாகவே அணுகுகின்றன. மிகக் குரூரமான ஓர் அணுகுமுறை இது.

           ஈழப் போராட்டம் என்பது ஒரு வரலாறு. இப்போது அது அதன் முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்திருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த வரலாற்றையும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் மனிதப் பேரவலத்தையும் புறந்தள்ளிவிட்டு ஒரு தனிப்பட்ட மனிதர் சார்ந்த பிரச்னையாக ஈழப் போரைச் சித்தரிப்பது மிகக் கேவலமானது. இதன் பின்னணி அறியாமையாக இருந்தால் அதைப் பிழையாகக் கருதி மன்னிக்கலாம். ஆனால், பணம், பொருள், அதிகாரம், அரசியல் என்று இந்தச் செய்திகளின் பின்னணியில் மிக மோசமான ஆதாய அரசியல் இருக்கிறது. இலங்கையில் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக முதல்வர் மு. கருணாநிதி மேற்கொண்ட உண்ணாவிரதம் மற்றும் அதையொட்டி நடந்த நிகழ்வுகள் தொடர்பாக வெளியான செய்திகள் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். இலங்கையில் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே "போர்நிறுத்தம் இல்லை: இது தவறான பிரசாரம்'' என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. அன்றைய தினமே பத்துக்கும் மேற்பட்ட கடும் தாக்குதல்களை இலங்கை ராணுவம் நடத்தியது. ஆனாலும், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக பல ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக செய்தி வெளியிட்டன. எத்தனை கேவலம் இது?

           ஒரு பெரும் அநீதி நிகழ்ந்துகொண்டிருக்கிறது; நமக்கு மிக அருகில். ஆனால், உலகத்துக்குப் பொய் சாட்சியைப் பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கிறோம் நாம். இறைந்து கிடக்கும் பிணங்களின் நடுவே ஆதாயத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம் நாம். ஓர் ஜீவாதார பிரச்னையில்கூட நேர்மையாக செயல்பட முடியவில்லை நம்மால். ஆனாலும், எல்லோரையும் விமர்சிக்கும் அதிகாரம் பெற்றவர்களாக நம்மை நாம் கருதிக்கொள்கிறோம். நம்முடைய தொழில் தர்மம் எங்கே போனது? நாம் கடைப்பிடிக்க வேண்டிய உயர்ந்த மாண்புகளும் தார்மிகக் கடமைகளும் எங்கே வீழ்ந்தன? பிடிப்பான நம்பிக்கைகள் மளமளவென சரியும் தருணத்தில் வெட்கித் தலைகுனிவதைத் தவிர வேறு வழியில்லை; எவருக்கும்!


2009 தினமணி

1 கருத்து:

  1. நீண்ட நாட்களாக அரித்துக்கொண்டிருந்த கேள்வி இது... இத்தனை லட்சம் மக்கள் அழிந்துகொண்டிருந்த போது இந்திய ஊடகங்கள் குறிப்பாக தமிழக ஊடகங்கள் உறங்கிக்கொண்டுதானிருந்தன. முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான உயிரகள் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கூட நாம் ’மானாட மயிலாட’ தான் பார்த்துக்கொண்டிருந்தோம். எத்தனை பத்திரிகைகள் இதை தீவிரமாக மக்கள்முன் வைத்தன ? முள்ளிவாய்க்கால் என்கிற பேரைகூட கேள்விப்பட்டிராத இளைஞர்கள்தான் இருந்தனர் சமீபகாலம் வரை. பேரழிவுகள் நடந்தபோது உண்மையிலேயே நாம் சுரனையற்றவர்களாகத்தானிருந்தோமா? அல்லது இந்திய ஊடகங்களும் தமிழக ஊடகங்களும் திட்டமிட்டு நம்மை சுரணையற்றவர்களாக வைத்திருந்தார்களா? இதோ இன்று நடக்கும் போராட்டங்களும் கொந்தளிப்புகளும் அன்றல்லவா எழுந்திருக்க வேண்டும் ? இந்த விஷயத்தில் தமிழக அரசியல்வாதிகளை விடுங்கள் தமிழக ஊடகங்களின் துரோகம்தான் மிகக் கேவலமானது.

    பதிலளிநீக்கு