சூதாடிகளின் தேசம்

வரலாறு காணாத என்ற சொல்லாடல் ஊடகங்களுக்கு மிகவும் பிடித்தமான சொல்லாடல்களில் ஒன்று. ஆனால், வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வரலாறு காணாத பணவீக்கம் என்னும் இப்போதைய செய்திகள் வழக்கமான வரலாறு காணாத ரகங்கள் அல்ல. இந்த விலைவாசி உயர்வும் பணவீக்கமும் அத்தனைச் சீக்கிரம் குறையப்போவதாகத் தெரியவில்லை.
     உலகெங்கும் ஏற்கெனவே 85 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்கள். மிகக் குறுகிய காலகட்டத்தில் இந்த எண்ணிக்கையில் மேலும் 10 கோடி பேரைச் சேர்த்திருக்கிறது இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னை. இதுவரை 37 நாடுகளில் உணவுக் கலவரம் வெடித்திருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் 20 -க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு வேளை உணவுகூட கேள்விக்குறியாகி இருக்கிறது. நம்மையும் இப்பிரச்னை விடப்போவதில்லை. "தற்போதைய உணவு உற்பத்தியில் மேலும் 50 சதவீதம் அதிகரித்தால் மட்டுமே 2030 -ல் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும். ஆனால், இன்றைய சூழல் நீடித்தால், வேளாண் உற்பத்தி படிப்படியாக 2020-க்குள் பாதியாகக் குறைந்துவிடும்'' என்கிறார் சூழலியலாளர் ஆர்.கே. பச்சௌரி. இப்படியே போனால் அந்தக் காலகட்டத்தில் நம் நாட்டின் எரிபொருள் தேவை மேலும் 40 சதவீதம் அதிகரித்திருக்கும். இந்தப் பின்னணியில், உலகின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட இரண்டாவது நாடும் உலகின் ஐந்தாவது பெரிய எரிபொருள் நுகர்வோருமான இந்தியாவை இந்தப் பிரச்னை நிலைகுலைய வைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள ஆராய்ச்சிகள் தேவையில்லை.
      ஜூனில் நடைபெற்ற ரோம் உணவு மற்றும் வேளாண் கழகத்தின் மாநாடு, அவோமாரி ஆசிய - அமெரிக்க நாடுகளின் சந்திப்பு, ஜெட்டா பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் சந்திப்பு ஆகியவற்றின் முடிவில் ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. கச்சா எண்ணெயின் விலை இனி எந்தக் காலத்திலும் குறையப் போவதில்லை; அடுத்த பத்தாண்டுகளுக்குள் இப்போதுள்ள விலையைக் காட்டிலும் மேலும் இரண்டு, மூன்று மடங்கு கூடுதலாக விற்றாலும் வியப்பதற்கு ஏதுமில்லை.
      இந்தியா தவிர்த்து ஏறத்தாழ உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே இப்பிரச்னையை அதற்குரிய முக்கியத்துவத்துடனேயே அணுகிவருகின்றன. எப்போதும் மூன்றாம் உலக நாடுகளைப் பணயம் வைத்தே பிழைப்பு நடத்திவந்த அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்கூட தம் பாதையை மாற்றிக்கொள்ள தொடங்கியுள்ளன.  "ஒரு வாரத்தை ஒரு மாதமாக்குவோம்; ஒரு மாதத்தை ஓர் ஆண்டாக்குவோம்; வாழ்க்கையை நீட்டிப்போம்'' என்பதே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இப்போது பரவலாக ஒலிக்கும் புதிய கோஷம். "ஒரு பக்கம் உற்பத்தியை அதிகரித்தாலும், சிக்கனத்தால் மட்டுமே எரிபொருள் பிரச்னையையும் உணவுப் பிரச்னையையும் எதிர்கொள்ள முடியும்'' என்று அமெரிக்க அரசு பிரசாரம் மேற்கொண்டுவருகிறது. ஐரோப்பிய நாடுகளும் வேளாண் பொருள் உற்பத்திக்கான புதிய வாய்ப்புகளைத் தேடத் தொடங்கியுள்ளன. சிக்கன நடவடிக்கைகள் நாடாளும் சபைகள் முதல் அடித்தட்டு மக்கள் வரை வலியுறுத்தப்படுகின்றன. சற்றே தாமதமாக விழித்துக்கொண்ட சீனா, நிகழாண்டில் வேளாண் துறை வளர்ச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்துவருகிறது. அத்துடன், சுற்றுச்சூழலைப் பேணும் நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளது (கடந்த மாத நடவடிக்கை - பாலிதீன் பைகள் பயன்படுத்த கட்டுப்பாடு). பாகிஸ்தான் பெட்ரோலியப் பொருட்களுக்கு பொது விநியோகத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உலகம் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்துவிட்டது. இவை அனைத்தையும்விட இந்தியா மேற்கொள்ள வேண்டிய பணிகள் அதிகம். ஆனால், இந்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? அரசியல் ஸ்திரத்தன்மையின்மையை வலிய உருவாக்கிக்கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் என்ன செய்துகொண்டிருக்கிறன? குதிரைப் பேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? பந்தயம் கட்டிக்கொண்டிருக்கிறோம்! 
2008 தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக