பாவப் பரிகாரம்

       தான் கனவு காணும் இந்தியா குறித்து காந்தி ஒரு முறை இப்படிச் சொன்னார்: "நாட்டின் கடைகோடி ஏழை இந்நாட்டை தன்னுடைய நாடு என்று கருத வேண்டும்; அப்படிபட்ட தேசமாக இந்தியா திகழ வேண்டும்.''
     இந்திய அரசியல்வாதிகளுக்கும் காந்தியின் கனவுக்கும் சம்பந்தம் ஏதுமில்லை. ஆனாலும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் 45.58 கோடி பேர் வாழும் ஒரு தேசத்தில் ஏழைகளைத் தவிர்த்த அரசியல் சாத்தியமானதில்லை என்பதாலேயே இந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  இவற்றுக்காக ஆண்டுக்கு ரூ. 1.2 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. என்ன பயன்? அரசியல்வாதிகள் அசைந்துகொடுத்தாலும் அதிகார வர்க்கத்தின் சிகப்பு நாடாக்களில் சிக்கிக் கழுத்தறுபடுகின்றன அரசுத் திட்டங்கள்.
     நாட்டின் மூத்தகுடிமக்களுக்கு முன்னுரிமை, சலுகைகளை அளிப்பது உலகெங்கும் உள்ள ஒரு நடைமுறை. மக்கள் நல அரசுகளுக்கு அது ஒரு கடப்பாடும்கூட. இந்தியாவில் மூத்தகுடிமக்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவையும்கூட படித்த -  ஓரளவுக்கேனும் வசதியுடையவர்கள் அடையக்கூடியவையாகவே இருக்கின்றன.
       இந்நிலையில், வறுமை ஒழிப்புத் திட்டங்களில் ஒன்றாக வசதியற்ற மூத்தகுடிமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம். சொத்துகள் ஏதுமற்ற, வருமானத்துக்கு வழியில்லாத 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ரூ. 400 ஓய்வூதியம் பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது.
    மாதம் ரூ. 400-ஐ மட்டுமே வருமானமாகக் கொண்டு இந்தக் காலத்தில் ஒருவர் - அதுவும் ஒரு முதியவர் வாழ்க்கையைக் கடத்திவிட முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விதான். ஆனாலும், நம்முடைய அரசு இந்நாட்டு ஏழைகளுக்கென்று ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கி வைத்திருக்கிறது. ரேஷன் கடைகளில் ரூ. 1 அல்லது ரூ. 2 விலையில் ஒரு கிலோ அரிசி, மலிவு விலை மண்ணெண்ணெய், மளிகைப் பொருள்கள், பண்டிகையையொட்டியோ, அரசியல் தலைவர்கள் பிறந்த நாளையொட்டியோ ஆண்டுக்கொரு முறை வழங்கப்படும் இலவச வேஷ்டி - சேலை, நோய்வாய்ப்பட்டால் அரசு மருத்துவமனை என்று அந்த வாழ்க்கை முறை விதிக்கப்பட்டவர்களுக்கு இன்றைக்கும் ரூ. 400 மதிக்கத் தக்க ஒரு தொகையாகவே இருக்கிறது.
       தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்திலுள்ள ஒரு நல்ல விஷயம், ஓர் ஊரில் அல்லது ஒரு மாவட்டத்தில் அதிகபட்சம் இத்தனைப் பேரைத்தான் இத்திட்டத்தில் சேர்க்கலாம் என்ற வரையறை ஏதும் கிடையாது. ஆகையால், வருமானத்துக்கு வாய்ப்பற்ற 65 வயதைக் கடந்த இந்நாட்டு மூத்தகுடிமக்கள் அனைவருக்குமே இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கலாம்.
       ஆனால், இத்திட்டத்தில் சேர அதிகார வர்க்கம் உருவாக்கியுள்ள நடைமுறை தன்மானமுள்ள எவரையும் தலைகுனியவைக்கக் கூடியதாகும்.
ஒரு முதியவர் இத்திட்டத்தில் சேர விரும்பினால், அதற்கு விண்ணப்பத்தில் இந்த உறுதிகளை அளிக்க நிர்ப்ந்திக்கப்படுகிறார்கள்: "ஐயா, எனக்கு 65 வயதாகிவிட்டது. நான் ஓர் அனாதை. எனக்கு சொத்துகள் ஏதுமில்லை. எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது. நான் பிச்சை எடுக்கவில்லை. இன்னார் வீட்டுத் திண்ணையில் தங்கி அருகிலிருப்போர் தரும் உணவை உண்டு வாழ்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவித்தொகை அளியுங்கள்.''
அதாவது, "நான் தெருவில் அமர்ந்து பிச்சை எடுக்கவில்லை. ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பிச்சையாக தரப்படும் உணவை உண்டு வாழ்கிறேன்'' என்று சொல்லாமமல் சொல்லச் சொல்கிறார்கள் அதிகாரிகள். தொடர்ந்து, விண்ணப்பிப்பவரின் இந்த வாக்கியங்களையே வருவாய்த் துறை அலுவலர்கள் சான்றாகத் தருவார்கள். அதன் பின்னரே உதவித்தொகை.
     முரண்பாடுகள் மிக்க, மிக அபத்தமான ஒரு நடைமுறை இது. ஓர் அரசாங்கம் தன்னிடம் உதவி கேட்டு வரும் தன்னுடைய மூத்தகுடிமக்களை இதற்கு மேல் இழிவுபடுத்த முடியுமா என்று தெரியவில்லை.
உண்மையில் இத்திட்டத்தில் சேருவதற்கு அரசு வகுத்திருக்கும் விதிகளின்படி இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு வேலையே இல்லை. ஆனால், பயனாளி வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையைப் பயன்படுத்தி இத்தகைய அவலத்தை அரங்கேற்றிவருகிறார்கள் அதிகாரிகள்.
       இந்தியாவைப் பொறுத்த அளவில் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பான்மையினர் விவசாயக் கூலித் தொழிலாளிகள்தான். நம் நாட்டில் பிச்சை எடுப்பவர்களில் பெரும்பான்மையினரும் இவர்களே. நாட்டுக்கே உணவிட்டவர்கள் ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டது நாட்டை வழிநடத்துபவர்கள் செய்யும் தவறுகளால் ஏற்பட்ட விளைவு. இந்தத் தவறுகளில் அதிகார வர்க்கத்துக்கும் பெரும் பங்குண்டு. அதிகாரிகள் இத்தகைய மோசமான நடைமுறைகளைக் கைவிட வேண்டும், தாங்கள் பணிக்காலத்தில் குடிமக்களுக்கு செய்த பாவங்களுக்கான பரிகாரமாகவேணும்!
2009, தினமணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக