சேது: அபாயத்தின் மறுபக்கம்

     ந்தியர்களாகிய நமக்கு எப்போதுமே உண்மையைவிடவும் கனவுகள், கற்பனைகள், புனைவுகள் மீதே நம்பிக்கை அதிகம். தமிழர்களின் நூற்றாண்டு கால கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்படும் சேது சமுத்திரத் திட்டமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உலகெங்கும் சூழலியல் மாற்றங்கள்குறித்த    ச்சமும் விழிப்புணர்வும் விசுவரூபம் எடுத்துவரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.
      சூழலியல் மாறுபாடுகளிலேயே மிக அபாயகரமானதும் மர்மமானதும் கடல் சூழல்தான். கடல் சார்ந்த மனித குலத்தின் புரிதல்கள் மிகச் சாதாரணமானவை. அதிலும், மூன்றாம் உலக நாடுகளில் கடல் சூழலியல் சார்ந்த பிரச்னைகள் பொருட்படுத்தப்படுவதே இல்லை. இந்தியாவைப் பொறுத்த ளவில் இதற்குச் சரியான உதாரணம் சேது சமுத்திரத் திட்டம். ஆழம் குறைந்த இந்திய - இலங்கை கடல் பகுதியில் கால்வாய் அமைப்பதன் மூலம் இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்தை கால்வாய் வழியே மேற்கொள்வதற்கான திட்டம் இது.
      இத்திட்டத்துக்கு 1860-ல் அடித்தளமிட்டவர் கமாண்டர் டெய்லர். தொடர்ந்து டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்ட்சன், ஜான்கோட், பிரிஸ்டோ என்று பலரால் இத்திட்டத்துக்கான சாத்தியம்குறித்து சாதகமான அறிக்கைகள் தாக்கல்செய்யப்பட்டபோதும் ஆங்கிலேயே அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த தயக்கம் காட்டியது. அதற்குப் பின்னர், சுதந்திர இந்தியாவிலும் ஏ. ராமசாமி முதலியார், சி.வி. வெங்கடேசுவரன், நாகேந்திர சிங், எச்.ஆர். லட்சுமி நாராயணன் என்று இத்திட்டம்குறித்து ஆராய்ந்த எல்லோருமே இத்திட்டத்துக்குச் சாதகமான அறிக்கைகளையே அளித்தனர்.
ஆனால், இவர்கள் அனைவரின் அறிக்கைகளிலும் உள்ள முக்கியமான ஒற்றுமை... சூழலியல் பிரக்ஞை இல்லாதது.
     பொதுவாக, இத்தகைய திட்டங்களைச் செயலாக்கும் முன் தீவிரமான பலகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொறுத்த அளவில் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடலியல் விஞ்ஞானிகள், மீனவர்களின் யோசனைகள் ஏற்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், நம் விஞ்ஞானிகளின் வாய்கள் அரசால் இறுகக் கட்டப்பட்டுள்ளன. மீனவர்கள் வேறு வகையில் வாய் டைக்கப்பட்டுள்ளனர். சூழலியல் சார்ந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரே ஆய்வு 'நீரி' (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) மேற்கொண்ட விரைவுச் சூழல் தாக்கம்குறித்த ஆய்வு மட்டுமே. அதுவும் முழுமையானது அன்று; கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 
  கடல் வெறும் நீர்ப்பரப்பன்று; அது ஓர் உலகம். கடல் என்று குறிப்பிடப்படுவது அதனுள் இருக்கும் ஆயிரமாயிரம் உயிரினங்களையும் அற்புதங்களையும் அபாயங்களையும் உள்ளடக்கியதுதான். கடல் உயிரினங்கள் பாதுகாப்புகுறித்து பேசப்படும்போதெல்லாம் பெரும்பாலானோர் அதை ஏதோ ஜீவகாருண்ய நோக்கத்தோடு பேசுவதுபோல கருதுகிறார்கள். அப்படியல்ல. கடலில் இருக்கும் ஒவ்வோர் அங்கமும் உயிரிப் பல்வகைமைச் சங்கிலியாகத் தொடர்கிறது. அதில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும்  சிதைவும் பின்விளைவுகளை ஏற்படுத்தியே தீரும்.    சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் மன்னார் வளைகுடா பகுதி ஆசியாவின் உச்சபட்ச பராமரிப்பு கோரும் கடற்கரை உயிரியக்கப் பகுதிகளில் ஒன்று. 5,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருந்த இப்பகுதியில், ஏற்கெனவே, கடல் சூழல் மாசால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்ள் அழிந்துவிட்டன. தற்போதுள்ளதாகக் கருதப்படும் 4,000 உயிரினங்களில் 1,500 வகைகள் அருகிவரும் வகைகளாகக் கண்டறியப்பட்டவை. மேலும், இப்பகுதிக்கு கிடைத்துள்ள பெருங்கொடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய பவளப்பாறைகள், படிமங்கள். பவளப்பாறை இனங்களில் உலகிலுள்ள 82 சத வகையினங்கள் இங்கு காணப்படுகின்றன.
       இத்திட்டத்தால் கடலின் நீரியங்குதிசை, நீரோட்டத்தின் ஒழுங்கு, அலைகளோட்டம், சூரிய ஒளி ஊடுருவல் மாறுபடும். இதன் தொடர்ச்சியாக உயிரினங்களின் வாழ்வியல்பு, உறைவிடம், இடப்பெயர்வு பாதிக்கப்படும்.
ஒருபுறம் இப்படிச்  சூழலியல் முக்கியத்துவம் மிக்க இப்பகுதி மறுபுறம் பேராபத்தானதும்கூட. வானிலையாளர்களால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும் இப்பகுதி, இயற்கைச் சீற்றங்களுக்கு அதிகம் இலக்காகும் அபாயமிக்க பகுதி. இங்கு ஏற்படும் எந்த மாற்றமும் தென்னிந்தியக் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இத்தகைய ஒரு பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் போன்ற அசுரத்தனமான திட்டத்தை மேற்கொள்வதற்கும் தொடர்ச்சியாக நூற்றுக் கணக்கான அணுகுண்டுகளை வெடித்துப் பார்ப்பதற்கும் அதிக வேறுபாடில்லை.
    ஒருபுறம், அடிப்படையிலேயே நகர்வுத்தன்மை வாய்ந்த கடலில் கால்வாயின் நிரந்தரத்தன்மைகுறித்து தொழில்நுட்ப ரீதியிலான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மறுபுறம், இத்திட்டத்துக்கான செலவு, பராமரிப்பு, சுங்க வரி ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக அமையுமா என்பதுகுறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இன்னொருபுறம் லட்சக் கணக்கான மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.    இந்நிலையில், சூழலியலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமிக்க இத்திட்டத்தைச் செயலாக்கத் துடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் அறிவியல்பூர்வமானன - நேர்மையான பதில் அரசிடம் இல்லை. இத்திட்டம்குறித்து கேள்வி எழுப்புவோர் எவரையும் மிக எளிதாக தமிழினத் துரோகியாக கட்டமைத்துவிடுகிறது அரசு. ஆனால், யார் துரோகி என்பதை கடலும் காலமும் கண்டிப்பாக ஒரு நாள் அடையாளம் காட்டிவிடும்.
2006, 'தினமணி'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக