ஆட்டம் காணும் அடித்தளம்

         தமிழக தொடக்கக் கல்வியில் ஒரு பிரளயமே நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், அரசோ முக்கியமான ஒரு பிரச்னையை மிக அலட்சியமாகக் கையாண்டுக்கொண்டிருக்கிறது. நிகழாண்டில் மாநிலத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை 20 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. மாறாக, தனியார் பள்ளிகளிலோ சேர்க்கை நிரம்பி வழிகிறது என்று அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டிவருகின்றன. அரசுப் பள்ளிகளில் புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் செயல்வழிக்கற்றல் முறையே இதற்குக் காரணம் என்று கூறும் ஆசிரியர் சங்கங்கள் சமச்சீர் கல்விமுறையை அமலாக்கும் வரை இத்திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
     சுதந்திர தின வைர விழா கொண்டாடும் வரை ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'மெக்காலே கல்விமுறை'யைதான் நாம் பின்பற்றிவந்தோம். 'கணக்குப்பிள்ளைகளை உருவாக்கும் கல்விமுறை' என்று கல்வியாளர்களால் கிண்டலடிக்கப்படும் இந்த முறைக்கு நாம் விடை கொடுக்க வேண்டியதும் மாற்று கல்விமுறைக்கு நாம் மாற வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
    ஆனால், பல தலைமுறைகளாக பின்பற்றிய ஒரு கல்விமுறையிலிருந்து இன்னொரு கல்விமுறைக்கு நாம் மாறும்போது அதுபற்றிய ஆழ்ந்த சிந்தனை, தொலைநோக்குப் பார்வை, அடிப்படைக் கட்டமைப்புகள் ஆகியவை நமக்குத் தேவை. அரசின் நடவடிக்கைகளிலோ ஆர்வம் தெரிகிறதே தவிர நடைமுறைத் தெளிவு துளியும் இல்லை.
     அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விமுறை, ஆசிரியரின் உச்சபட்ச ஆர்வத்தையும் உற்சாகமான அணுகுமுறையையும் கோரும் திட்டமாகும். குழந்தைகளின் சுயஅறிவுத் தேடலைப் பிரதானமாகக் கொண்ட இந்த முறையின் கீழ் குழந்தைகளுக்கு இணையாக அவர்களுடன் சேர்ந்து செயலாற்றி அவர்களை வழிநடத்தும் பக்குவம் ஆசிரியர்களுக்குத் தேவை. அதாவது, குழந்தைகளுடன் ஆடிப்பாடி, விளையாடி, கதை சொல்லி பாடம் கற்றுக் கொடுத்து - அவர்களுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக அவர்களிடமிருந்தே பதிலைப் பெறும் முறை.
    நம்முடைய அரசுப் பள்ளிகளின் சூழலின் பின்னணியில் இந்த முறையைக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். பழைய கல்விமுறையில் படித்து, அதே கல்விமுறையில் ஆசிரியர்  பயிற்சியையும் முடித்து, பணிக்கு வந்த அதே பழைய ஆசிரியர்களை வைத்து இத்திட்டத்தைச் செயல்படுத்துவது எப்படி சாத்தியமாகும்?  இவர்களில் எத்தனை பேர் ஆடிப்பாடி பாடம் நடத்தும் உடல் மற்றும் மனத்தகுதி உடையவர்கள்?  சரி. இவர்களுக்கு முறையான - தரமான பயிற்சிகளாவது வழங்கப்பட்டனவா? பெயரளவில் நடக்கும் பயிற்சிகளை நடத்தும் கருத்தாளர்களாவது புதிய முறையில் அனுபவப்பட்டவர்களா?  இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆசிரியர்கள் சொல்லும் பதில் "இல்லை''.
    ஆனால், நம்புங்கள். இவர்களை வைத்துதான் புதிய முறையை வெற்றிகரமாக செயல்படுத்தப்போவதாக அரசு சொல்கிறது. இதைவிட இன்னும் மோசமான அம்சம் என்னவென்றால், பாதிக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகள். அதாவது, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இரண்டே ஆசிரியர்கள். நிர்வாகப் பணிக்கான நாட்களையும் ஆசிரியர்களின் விடுப்பு நாட்களையும் கழித்தால் பெரும்பாலான நாட்களில் இப்பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகிவிடும். இது தவிர, காலிப் பணியிடங்கள் காரணமாக பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இப்படிபட்ட சூழலில் உள்ள பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க எந்தப் பெற்றோருக்கு மனம் வரும்?
         ஒருபுறம் புத்தகங்கள், வீட்டுப்பாடங்கள், தேர்வு, மதிப்பெண் என்ற பழைய முறையிலேயே ஊறிப்போன பெற்றோர்கள்; மறுபுறம் 220 வேலைநாட்கள், கை நிறைய ஊதியம், அளவில்லாத சலுகைகள், கூடுதல் வட்டி வருமானம் என்று எதிர்பார்ப்புகளுக்குப் பழக்கமாகிவிட்ட ஆசிரியர்கள். இவர்களுக்கு இடையேதான் நம்முடைய குழந்தைகளின் கல்வி இருக்கிறது என்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், இவர்களுக்கு இடையேதான் ஒரு புதிய கல்விமுறையை ஆக்கபூர்மாக - வெற்றிகரமாக எப்படிச் செயல்படுத்துவது என்று அரசு யோசிக்க வேண்டும். கடந்த ஆண்டு, "அனைத்துப் பள்ளிகளும் ஒரே மாதிரியான கல்விமுறையைப் பின்பற்றச்செய்யும் வகையில் அடுத்த ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்விமுறை அமலாக்கப்படும்'' என்று அரசு அறிவித்தது. ஆனால், இப்போது அதுபற்றி கல்வித் துறை வட்டாரங்களில் விசாரித்தால், "அது அரசுக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்'' என்கிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுகள் எல்லாம் ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல. கல்வித் துறையில் நடக்கும் சிறு தவறும் ஒரு தலைமுறையையே பாதிக்கும் என்பது நாம் சொல்லிதான் அரசுக்குப் புரிய வேண்டும் என்பதில்லை. ஆனால், அத்தகைய நிர்ப்பந்தங்களை அடிக்கடி ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது இந்த அரசு!
2008 தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக