இந்தியா உடையும் - அருந்ததி ராய்

                                   
samas with roy
அருந்ததி ராயுடன் சமஸ்
 

                                            அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி உங்களுக்கு வேண்டும். பொதுவாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைபற்றிப் பேசுவதைத் தவிர்க்கும் அருந்ததி அன்றைக்கு எந்தக் கேள்வியையும் ஒதுக்காமல் பதில் அளித்தார்.

                               ‘‘இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?’’
‘‘எனக்கு ஒரு வயதானபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்துகொண்டு, கணவனைப் பிரிந்த ஒரு பெண் ஊர் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை. எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நானும் என் அம்மாவும் இருந்தோம். அப்படிப்பட்ட ஓர் இடத்தில் இருந்துதான் உறவுகளும் சமூகமும் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.’’

                               ‘‘உங்கள் வாழ்க்கையை வடிவமைத்ததில் உங்கள் அம்மாவுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள்...’’
‘‘நான் பார்த்த உன்னதமான பெண்களில் ஒருவர் என் அம்மா. ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்த, சிந்திக்கத் தெரிந்த பெண் என்று அவரைச் சொல்லலாம். ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியூர் போய் இருந்தபோது, வந்த இடத்தில் தன்னிடம் கல்யாணம் செய்துகொள்வோமா என்று கேட்ட மனிதனைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கியவர் அவர். பெரிய காதல் எல்லாம் இல்லை. வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம். ஆனால், அந்தக் குடிகாரக் கணவன் தன்னுடைய பிழைப்புக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்று முடிவெடுத்தபோது உதறிவிட்டு வந்துவிட்டார்.  அப்பாவைவிட்டு பிரிந்து வந்த பிறகு, ஊட்டியில் சின்ன இடத்தில் நாங்கள் இருந்தோம். சாப்பாட்டுக்கே வழி இல்லை. அப்புறம் கேரளத்துக்குப் போனோம். வாழ்க்கையில் பெரிய போராட்டங்களை அம்மா நடத்தினார். வாழ்க்கையின் சங்கடங்களை அந்த வயதிலேயே நேரடியாகப் பார்த்ததால், ‘உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள்... நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்கிற பாடம் கிடைத்துவிட்டது. முழுமையான சுதந்திரத்தின் பரவசம், பயங்கரம் இரண்டையும் அந்தச் சூழல்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தது.’’


                               ‘‘உங்கள் அப்பாவைப் பற்றிச் சொல்லுங்கள்...’’
‘‘இருபது இருபத்திரண்டு வயதில்தான் நான் அவரைப் பார்த்தேன். அதுவரை அப்படி ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பே எனக்குக் கிடையாது. அவர் ஒரு குடிநோயாளி. அவருக்கு ஆல்கஹால்தான் எல்லாம்.’’

                               ‘‘இப்போது நீங்கள் தனியாகத்தான் இருக்கிறீர்கள் அல்லவா?’’
‘‘ஆமாம். இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன். நான் செயல்படும் முறைக்கு அளவற்ற சுதந்திரம் தேவை. அது திருமண வாழ்க்கையில் கிடைக்காது என்பதை என்னுடைய மண வாழ்க்கைகளின் மூலமும் தெரிந்துகொண்டேன். நான் நேசித்தவர்களை இன்னமும் நான் நேசிக்கிறேன். ஆனால், ஒரு சுதந்திரப் பெண்ணால் இன்னொருவர் விதிமுறைக்குக் கீழ் வாழ  முடியாது. சமயத்தில் பத்து நாள் சாப்பிடாமல், தூங்காமல் எழுதுவேன். குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டு இது எல்லாம் சரிப்படாது.’’

                               ‘‘உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?’’
‘‘எனக்கு குழந்தைகள்  கிடையாது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பியதும் இல்லை.’’

                               ‘‘இந்திய ஆண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘இந்திய ஆண், இந்திய பெண் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. என்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற ஆண்கள் நிறையப் பேர் அழகானவர்கள். அற்புதமானவர்கள். ஆனால், சமூகத்தில் அடக்குமுறை இருப்பது தெரிகிறது. என்னைப் பொருத்தவரை நான் அடுக்குமுறைக்கு உட்படக் கூடிய ஆள் இல்லை. ‘நீ திருமணம் செய்துகொள்ளாதே’ என்று அறிவுரை சொன்ன ஓர் அசாதாரணமான தாய் எனக்கு இருந்தார். பலருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடையாது. கணவனே கதி என்றுதான் வாழச் சொல்கிறார்கள். பெண்களுக்குப் பெற்றோர்கள் துணையாக இருக்க வேண்டும்.’’

                               ‘‘இந்தியாவில் சுதந்திரமாக வாழ விரும்பும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலும் நிம்மதி அற்ற சூழலிலேயே இருக்கிறதே... காரணம் என்ன?’’
‘‘இங்கே ஒரு பெண்ணுக்கு நிம்மதியான வாழ்க்கை என்று எது சொல்லப்படுகிறது? கணவன், அவனுக்கு அடங்கிய ஒரு வாழ்க்கை, குழந்தைகள்... என் வாழ்க்கையில் திருமணமாகி நிம்மதியாக இருக்கும் ஒரு பெண்ணைக்கூட நான் சந்தித்தது இல்லை. அதனால்தான் மாட்டக்கூடிய சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் எதிர்த்திசையில் நான் ஒடிவிடுகிறேன்.’’

                               ‘‘படித்தது கட்டடக் கலை. அப்புறம் சினிமா... இப்போது எழுத்து, களப்போராட்டம்... ஏன் இவ்வளவு மாற்றங்கள்?’’
‘‘என்னுடைய இயல்பே மாறிக்கொண்டே இருப்பதுதான்.’’

                               ‘‘ ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ வெளியாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. 2007-ல் அடுத்த நாவல் எழுதப்போவதாக அறிவித்தீர்கள். ஆனால், இன்னமும் எழுதவில்லை...’’
‘‘எங்கே நம் அரசியல்வாதிகள் அதற்கு இடம் கொடுக்கிறார்கள் (சிரிக்கிறார்).’’

                               ‘‘உங்களுக்குள் இருக்கும் அரசியல்வாதிதான் உங்களுக்குள் இருக்கும் படைப்பாளியைச் செயல்படாமல் முடக்கிவைத்து இருக்கிறார் என்றால், ஏற்றுக்கொள்வீர்களா?’’
‘‘எனக்குள் இருப்பது அரசியல்தான். அரசியல்வாதி அல்ல.’’

                               ‘‘இந்தியாவின் இன்றைய பிரச்னைகளுக்கு மக்களிடம் உள்ள சுயநலமும் சொரணையற்றத்தனமும் காரணம் என்று கூறலாமா?’’
‘‘அடிப்படையில் இங்கு பிரச்னைக்குக் காரணம் என்னவென்றால், சாதிய அமைப்பு. இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானமே சாதியில் சிக்குண்டுக் கிடக்கிறது. அந்தச் சாதிதான் ஜனநாயகம், அரசியல், ஆட்சி இயந்திரம் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், சாதி அமைப்பு நிலப்பிரபுத்துவ முறையில் இருந்து கார்பரேட் முறைக்கு மாறி இருக்கிறது.’’

                               ‘‘இன்னமும் மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கிறீர்களா?’’
‘‘நான் மாவோயிஸ்ட் கிடையாது. ஆனால், காடுகளில் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக அங்குள்ள பூர்வக்குடிகளின் நிலங்களைப் பறிப்பது, அடக்குமுறையால் அவர்களை ஒடுக்குவது போன்ற பிரச்னைகளில் மாவோயிஸ்ட்டுகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன். நீங்கள் நம் உள்ள வாய்ப்புகளைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் அரசு என்று குறிப்பிடும் அமைப்பு பன்னாட்டுப் பெருநிறுவனங்களிடம் தேசத்தின் சொத்துகளைக் கூறுபோட்டு விற்கத் துடிக்கிறது . நாம் பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுபவர்களோ அதைக் காக்கப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் யாருடைய நியாயத்தை நான் பேச வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?’’

                               ‘‘அப்படி என்றால், மாவோயிஸ்ட்டுகளின் வழிதான் மாற்று என்று நம்புகிறீர்களா?’’
‘‘நான் அப்படிச் சொல்லவில்லை. மாவோயிஸ்ட்டுகளின் போராட்ட அணுகுமுறை காட்டுக்கு வெளியே எடுபடாது என்றே நான் நம்புகிறேன். ஆனால், இப்போது உள்ள சூழலில் வேறு எந்த ஒரு தீர்வும் தென்படவில்லை. காட்டுக்குள் துணை ராணுவப் படைகள் புகுந்த பின்னர் அங்குள்ள மக்கள் தனித்தீவாக மாற்றப்பட்டுள்ளனர். வெளி உலகத்துக்குத் தெரியாமலேயே அவர்கள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்கா இப்போது அதைத்தான் விரும்புகிறது. குறிப்பாக, பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு. இங்குள்ள கனிமங்களை அப்படியே அள்ளிச் செல்ல ஏதுவாக வனங்களில் நம் ராணுவம் புகுந்து சூறையாட வேண்டும் என்று விரும்புகிறது. மன்மோகன் சிங்கால் அதை முழு வேகத்தில் செய்ய முடியாததால்தான் செயல்பாடற்றவர் என்று அவர்களுடைய ஊடகங்கள் எழுதுகின்றன.’’

                               ‘‘சரி, உங்கள் பார்வையில் தீவிரவாதம் என்பது என்ன?’’
‘‘ஒரு திருவிழாவுக்காகக் கூடிய ஆதிவாசிகளை இந்த நாட்டின் துணை ராணுவப் படைகள் சுட்டுக் கொல்வது.’’

                               ‘‘இந்தியாவில் ஊழலை ஒழிக்க என்ன வழி?’’
‘‘இங்கு ஊழலை எல்லோரும் நோயாகத்தான் பார்க்கிறார்கள். அது ஒரு நோயின் அறிகுறிதான். உண்மையில் நோய் எதுவென்றால், சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு. இந்தியாவில் இன்றைக்கு பணமோ, அதிகாரமோ இல்லாத சாமானியன் நீதியைக் கோரி ஒரு துறையைக்கூட அணுக முடியாது. இந்த மாதிரி ஒரு கட்டமைப்பை வைத்துக்கொண்டு, எவ்வளவு சட்டங்கள், எத்தனை போலீஸாரைக் கொண்டுவந்தாலும் ஊழலை ஒழிக்கவே முடியாது. இதைப் புரிந்துகொள்ளாமல்தான் அண்ணா ஹஜாரே இயக்கம் கோஷம் போட்டது.’’

                               "ஆனால், அண்ணா ஹஜாரேவுக்கு மிகப் பெரிய கூட்டம் கூடியது அல்லவா?"
"இந்த நாட்டில் அது சகஜமானதுதான். மக்கள் கூடுகிறார்கள் சரி, எதற்காகக் கூடுகிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும் இல்லையா? பாபர் மசூதியை இடிக்க இந்துத்துவ அமைப்புகள் கூப்பிட்டபோதும்கூட மக்கள் அலை அலையாகக் கூடினார்கள்.  என்னைப் பொறுத்த அளவில், தனியார்மயத்தைப் பற்றிப் பேசாமல், நாம் ஊழலைப் பற்றிப் பேச முடியாது. நாடு சந்தித்த பெரிய ஊழலான அலைக்கற்றை முறைகேட்டின் பின்னணியில் பெருநிறுவனங்கள் இருந்ததை நாம் மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட பெருநிறுவனங்களின் ஆதரவோடு நடக்கும் அண்ணா ஹஜாரே பாணி போராட்டங்களால் ஊழல் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்தால் அது எவ்வளவு பெரிய அறியாமை?"

                               ‘‘காஷ்மீர் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறீர்கள். ஒருபக்கம் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் சீனா... காஷ்மீர் தனி நாடாவது ராஜதந்திரரீதியாக சரிதானா?’’
‘‘உங்கள் தலைக்கு மேல் ஏழு லட்சம் ராணுவ வீரர்கள் நின்றுகொண்டிருக்கும்போது நீங்கள் எப்படிச் சிந்திக்க முடியும்? யோசித்துப்பாருங்கள். காஷ்மீரிகளின் பிரதிநிதியாக நான் பேசவில்லை. சுதந்திரம் என்ற அவர்களுடைய முழக்கத்துக்குப் பின் பல அர்த்தங்கள் இருக்கின்றன... முக்கியமாக அவர்களுடைய வாழ்க்கை, அதைத் தீர்மானிக்கும் அவர்களுடைய உரிமை. அந்த உரிமையைத்தான் நான் ஆதரிக்கிறேன்.’’

                               "இந்திய அரசின் அணுசக்தி கொள்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்... குறிப்பாக, புகுஷிமாவுக்குப் பிந்தைய சுழலில்?"
"ஃபுகுஷிமா சம்பவம் நடந்த காலகட்டத்தில் நான் ஜப்பானில்தான் இருந்தேன்.  அந்த வகையில்,  நமக்கு எல்லாம் தெரிந்தது உண்மையின் ஒரு பகுதி மட்டும்தான் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதாவது அரசு மறைத்தது போகக் கசிந்த உண்மை. அந்த உண்மையையே நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை. எனில், முழு உண்மையை? இந்திய அரசாங்கம் தன்னால், பிளாஸ்டிக் கழிவுகளை ஒழுங்காகக் கையாள முடிகிறதா என்று முதலில் யோசிக்க வேண்டும். அணுக்கழிவுபற்றி எல்லாம் அப்புறம் நாம் பேசலாம்."

                               ‘‘இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந்தால், ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?’’
‘‘ஆமாம் இன்றைய சூழல் தொடர்ந்தால், நிச்சயம் இந்தியா உடையும். இந்தியா என்கிற  வார்த்தையை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதே எனக்குத் தெரியவில்லை. தொன்மை மிக்க நாடு என்றா? உண்மையில் 1947-ல்தான் இந்தியா என்ற நாடு உருவானது. அதுவும் பிரிவினையில் இருந்து. அப்படிப் பிரிவினையால் உருவான ஒரு நாடு காலனி ஆதிக்கச் சக்திபோலத்தான் செயல்படுகிறது. மக்கள் போராட்டத்தை அடக்க ராணுவத்தை அனுப்புவது ஆகட்டும்; மற்ற நாடுகளையும் பிரிவினையை உருவாக்குது ஆகட்டும். தேசியம் என்பது தவறு அல்ல. ஆனால், அதில் நியாயம் இருக்க வேண்டும். வரைபடத்தில் என்னுடைய நாடு பெரியதாகவோ, சின்னதாகவோ இருக்கிறது என்பது என்னைப் பாதிக்காது. ஆனால், நான் சார்ந்திருக்கும் நாட்டின் பெயரால் நடத்தப்படும் வன்முறையும் ஒடுக்குமுறையும் என்னை வெகுவாகப் பாதிக்கும்."

                               ‘‘இந்தியாவில், இந்தியாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் ஒன்றுமே இல்லையா?’’
‘‘இந்தியாவில் எனக்கு ஆயிரக் கணக்கான விஷயங்கள் பிடிக்கும். நீங்கள் அதையும் தேசபக்தியையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. தேசபக்தி என்பது இங்கு ஒரு வெற்றுப் பெருமிதமாக இருக்கிறது. ஒருபுறம் தேசபக்தி கோஷங்கள்... இன்னொருபுறம் நாட்டின் சுற்றுச்சூழலை, மொழியை, கலாசாரத்தை, வரலாற்றை, எல்லாவற்றையும் அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.’’

                               ‘‘இதுவரையிலான இந்திய பிரதமர்களிலேயே சிறந்தவர் என்று நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?’’
‘‘ப்ச்... ம்ஹூம்... அப்படி யாரும் இல்லை. ஆனால், மன்மோகன் சிங் மோசமானவர். இந்தியாவை விற்றவர்.’’

                               ‘‘மோடி - ராகுல். பிரதமர் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’’
‘‘எவ்வளவு மோசமான நாடு இது... (சிரிக்கிறார்)... இருவருமே பெரும் சீரழிவையே கொண்டுவருவார்கள். மோடி இன்னமும் பேரழிவைக் கொண்டுவருவார்.’’

                               ‘‘உங்கள் பார்வையில் இந்தியாவில் இன்றைக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய அரசியல் தலைவர் அல்லது இயக்கம் எது?’’
‘‘இந்த மாதிரி அரசியல் சூழலில் இப்படி ஒரு கேள்விக்கு அர்த்தமே இல்லை. ம்ஹூம்...’’

                               ‘‘சரி... இந்தியாவை எப்படித்தான் சீரமைப்பது?’’
‘‘அப்படியான திட்டங்கள் ஏதும் என்னிடம் இல்லை. நான் அவ்வளவு பெரிய ஆளும் இல்லை.’’

                               ‘‘உங்களுக்கு காந்தியத்தின் மீது நம்பிக்கை உண்டா?’’
‘‘இந்தியாவின் முதல் சுற்றுச்சூழலியலாளர் என்பதைத் தாண்டி காந்தி மீது எந்த ஈர்ப்பும் கிடையாது. ஸ்திரத்தன்மை அற்ற ஓர் அரசியல் அவருடையது. இந்தியாவின் முதல் என்.ஜி.ஓ. அவர். சாதியத்தையும் மதத்தையும் அரசியலுக்குள் கொண்டுவந்தது கொஞ்சமும் எனக்குப் பிடிக்காதது.’’

                               ‘‘எல்லோரையுமே நிராகரிக்கிறீர்கள்... நீங்கள் அவநம்பிக்கைவாதியா?’’
‘‘மக்களுக்காகப் பேசும் நான் எப்படி அவர்களிடம் அவநம்பிக்கையை விதைப்பேன்? எதிர்ப்பைக் காட்டுவதில் மற்ற மக்களிடம் இருந்து மிக வேறுபட்ட, தீவிரமான அணுகுமுறையை இந்திய மக்கள் கையாள்கிறார்கள். இன்றைக்கு ஜார்கண்டிலும், சட்டீஸ்கரிலும் அரசை எதிர்த்து நிற்கும் மக்களின் போராட்டம் அசாதாரணமானது. ராகுல் காந்திகளும் மோடிகளுமே மக்களாகப் பார்க்கப்படும் நாட்டில் அவர்கள் மக்கள் என்றே அங்கீகரிக்கப்படாதவர்கள். நான் அவர்களுக்காகப் பேசுகிறேன். அவர்கள் இடத்தில் இருந்து இந்த நாட்டைப் பார்க்கிறேன். அது உங்களுக்கு அவநம்பிக்கையாகத் தெரிந்தால், இந்த நாடு அவர்களிடத்தில் அவநம்பிக்கையை விதைத்து இருக்கிறது என்றே அர்த்தம்!’’

ஆனந்த விகடன் 2012

31 கருத்துகள்:

  1. நான் படித்த மிகச் சிறந்த பேட்டிகளில் ஒன்று இது. வாழ்த்துக்கள் சமஸ்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கருத்துக்கள். வளங்களை வெளிநாட்டுக்கு விற்பதை எதிர்க்கும் மாவோயிஸ்ட் பற்றி துணிச்சலான கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஒரு பத்திரிகையாளனாக துணிச்சலான இந்த பேட்டியை வரவேற்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. இந்திய அரசியலைப்பற்றி அரசியல்வாதிகளைப்பற்றி குறிப்பிட்ட அளவுக்கு தெரிந்துவைத்திருக்கின்ற அருந்ததிராய் அவர்கள் சரி... இந்தியாவை எப்படித்தான் சீரமைப்பது? என்கிற கேள்வியில் தன்னுடைய பலவீனத்தை காட்டிவிடுகிறார்.

    பதிலளிநீக்கு
  4. ஐம்பதுக்கும் மேற்பட்ட இணையதளங்களை இயக்கிவரும்படைப்பாளி வையவன் ! வையவன் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதற்காகப் பெருமைகொள்ளலாம்.. வையவனுடன் அறிமுகப் படுத்திக் கொண்டால் அகிலம் அறியலாம்!ள From Share it with your Tamil friends ]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐம்பதுக்கும் மேற்பட்ட இணையதளங்களை இயக்கிவரும்படைப்பாளி வையவன் ! வையவன் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதற்காகப் பெருமைகொள்ளலாம்.. (என்ன இது? யாருய்யா நீங்க.... பயங்கரமா இருக்கீங்க...........................................

      நீக்கு
  5. she says kashmir people cant define thier life under seven lakh army men.than how they wipe out 3.5 lakh hindhus from thier homeland.even now are they ready to welcome that people?

    பதிலளிநீக்கு
  6. எல்லோருக்கும் நினைப்பதையெல்லாம் செய்யும் சுதந்திரம் கொடுக்குமளவு சுயகட்டுபாடு உடைய அவதாரபுருஷர்களா நம் மக்கள்

    பதிலளிநீக்கு
  7. வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் சாதாரண இந்தியக் குடிமகனின் பிரதிபலிப்பாகவே இந்தப் பேட்டியை படிக்கவும் , உணரவும் முடிகிறது...வாழ்த்துகள் சமஸ் !

    பதிலளிநீக்கு
  8. அவரது பாணி பதில்கள்
    தாமதாக படிக்க நேர்ந்தது

    பதிலளிநீக்கு
  9. இது எந்த பத்திரிகையில் வெளிவந்தது?

    பதிலளிநீக்கு
  10. Meendum meendum indiya oru naadu illai endrum athu 1947 kku piragu than indiya endru anathu endra poiyai evlo naal solvargall,,imayam vendran, endrum, kashmir saivism endrum evlavo ore kalachara sandrugal irukka , ithaye thirumba thirumba sollvathu ull nokkathoduthane...

    பதிலளிநீக்கு
  11. வெறுப்பில் பிறந்து வறுமையில் வாடிய
    பின்புலம், அதீத அறிவும், சுதந்திரமும்
    கட்டுபடுத்த இயலாத தன்மையும்
    சில சட்டவரைமுறைகளையும் கூட
    வன்முறை என பார்க்க வைக்கிறது.
    அரசும் சட்ட வரைமுறை என் சொல்லியே
    வன்முறையை அழைக்கிறது என்பதும்
    கவனிக்கபட வேண்டிய செயல்.
    உலகமயமாக்கல் மாம் முதாதையரின்
    நடுகல்லையும் பிடிங்கி சென்றுவிடும்
    என்பது உரக்க சொல்ல வேண்டிய உண்மை.
    அவரிடம் உண்மை இருக்கிறது, கொதிநிலையில்

    பதிலளிநீக்கு
  12. சக்தி மிகுந்த மனிதர்களிடமும் பேச்சில் உள்ள ஆற்றல் மட்டுமே. தனிப்பட்ட மனிதரின் சுயசிந்தனைகளே எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது...

    பதிலளிநீக்கு
  13. நாட்கள் கடந்தாலும் அவர் சொல்வதுதான் உண்மை
    ...

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொரு சாமானியனும் கொண்டுள்ள கருத்தே இது. `இப்படியே என் நாடு ஒரு சார்பாய் சென்று கொண்டிருந்தால் எனக்கே அது அந்நியப்பட்டுவிடுமோ என்ற பயமும் சாமான்ய இந்தியனுக்கு இருப்பது போலவே அருந்ததிக்கும் இருக்கிறது. ஆனால் இப்பொழுது நம்மக்கு தேவை வேற்று புலம்பல் அல்ல. இந்த அரசியல் ஜனநாயக முறையை செம்மை படுத்துவது முடியவில்லை என்றால் இந்த முறையை நீக்கி வேறு ஒரு மேம்பட்ட முறையை மக்களுக்கு உணர்த்துவது. ஆனால் நமது நாட்டில் இப்பொழுது இருக்கும் அறிவு ஜீவிகள் இருக்கும் முறையை மாற்ற துடிக்கிறார்களே அன்றி மாற்று அமைப்பை அடையாளம் காட்ட நினைக்கவே இல்லை. கேட்டால் அதுவாக மக்களிடம் இருந்து வர வேண்டும் என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  15. ஒளிவு மறைவு இல்லாத வார்தைகள் உண்மையில் மிக அருமை...

    பதிலளிநீக்கு
  16. ஒளிவு மறைவு இல்லாத வார்தைகள் உண்மையில் மிக அருமை...

    பதிலளிநீக்கு
  17. Madam Rai there is no clarity in your thoughts. You are a negative person. You spoil India and the
    younger generation. Please show the right path to the younger generation. do not confuse the people.

    பதிலளிநீக்கு
  18. குழம்பிய மனநிலை, பாவம், இவர் தான் மெக்காலே கல்வியால் சிதைக்கப்பட்ட பரதப்பண்பாட்டு வேர்களை அறியாத நகர் சார்ந்த போலி அறிவுஜீவி வர்கத்தின் உச்சநிலை. புக்கர் விருதும் மிடுக்கான ஆங்கிலமும் இல்லாவிட்டால் இவரை யாரவது சட்டை செய்வார்களா ? மேலைநாட்டு ஆதிக்கசக்திகளுக்கு பாரதத்தை குறைசொல்லி ஓரங்கட்ட ஒரு ஆள் வேண்டும், நம்மாட்களுக்கு மேலைநாட்டு விருதுகளால் அங்கீகரிக்கப்பட்ட அறிவுஜீவி தேவைபடுகிறார் இங்குள்ளவர்களை குறை சொல்லுவதற்கு. இவ்விராண்டு தேவைகளும் உண்டாக்கிய NGO வர்கத்தின் பிரதம பிரதிநிதி இவர். சாதியே அனைத்து கேடுகளுக்கும் காரணம் என்றால், இருநூறு வருடங்களுக்கு முன் பாரதத்தை தவிர உலகில் சாதி இல்லாத அனைத்து சமூகங்களும் மனித மேம்பாட்டுக் கணக்குகளில் மேம்பட்டு இருந்தனவா ?

    பதிலளிநீக்கு
  19. நீங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல மன சாட்சியுடன் பேசியது போலதான் இருக்கிறது .

    பதிலளிநீக்கு