ஆம்... பிரதமரே பணம் மரத்தில் காய்க்கவில்லை!

              
                 செலவுகளைக் குறைக்க ஓர் அதிரடி வழியாக, மரணத்தை யோசியுங்கள். - அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் உடி ஆலன் கிண்டலாகச் சொன்னது இது. இந்திய அரசோ அதை மறைமுகமாகச் சொல்கிறது.

                                     பிரதமர் மன்மோகன் சிங், டீசல் விலையை உயர்த்தி, மானிய விலை கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆறாகக் குறைத்து, இரண்டாம் பொருளாதாரச் சீர்திருத்த அறிவிப்பை வெளியிட்ட முதல் 24 மணி நேரத்துக்குள் அந்த முதல் தற்கொலை பதிவானது. காசியாபாத்தைச் சேர்ந்த தொழிலாளி டோமர். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அறிவிப்பை மறுநாள் அரசு வெளியிட்ட அடுத்த 24 மணி நேரத்துக்குள் இரண்டாவது தற்கொலை பதிவானது. மொரதாபாத்தைச் சேர்ந்த ரேணு ஷர்மா. ஒரு மணி நேரத்துக்கு 15 தற்கொலைகள் பதிவாகும் ஒரு நாட்டில், இந்த மரணங்கள் அரசுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சுதந்திர இந்தியாவில், 'விலைவாசி உயர்வைச் சமாளிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்ற எழுத்துபூர்வமான பதிவுகளோடு நடந்த தற்கொலைகள் இவை. கொலைக் குற்றவாளியாகத்தான் நிற்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. ஆனால், துளியும் குற்ற உணர்வு இல்லை; மேலும் பலரைக் கொல்லும் திட்டத்தோடும் வெறியோடும் நிற்கிறது.
     
                              பொருளாதாரச் சீர்திருத்த அறிக்கையை வெளியிடும்போது, ''கச்சா எண்ணெயின் தேவை அதிகரிக்கும் சூழலில், சர்வதேச அளவில் எண்ணெயின் விலை அதிகரிக்கும் சூழலில், இந்தியாவில் தேவை பெருகுகிறது. இறக்குமதி விலை அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தாததால், எண்ணெய் நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கின்றன. அதைச் சரிக்கட்ட அரசு அளிக்கும் எண்ணெய் மானியம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு ரூ.1.40 லட்சம் கோடியை எண்ணெய் மானியத்துக்காக ஒதுக்கினோம். இந்த ஆண்டு ரூ.1.60 லட்சம் கோடியாக அது அதிகரிக்கும். இப்போதும் டீசல் விலையை உயர்த்தாவிடில், அது இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயரும். டீசல் விற்பனையால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க, லிட்டருக்கு 17 ரூபாய் விலை ஏற்றி இருக்க வேண்டும்; 5 ரூபாய்தான் ஏற்றி இருக்கிறோம். இறக்குமதி விலையைவிட ஒரு லிட்டர் மண்ணெண்ணெயை ரூ.13.86 குறைவாகக் கொடுக்கிறோம். சமையல் எரிவாயு சிலிண்டரை ரூ.347 குறைவாகக் கொடுக்கிறோம். இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? பணம் மரத்திலா காய்க்கிறது?'' என்று கேட்டார் மன்மோகன் சிங்.
     
                              உண்மைதான்... பணம் மரத்தில் காய்க்கவில்லை. அதுவும், சரிபாதி மக்கள்தொகை பஞ்சத்தில் அடிபட்ட ஒரு நாட்டில் கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையைவிடப் பெரும் தொகையை எண்ணெய் மானியத்துக்காக ஓர் அரசு செலவிடுவது பெரிய குற்றம். ஆனால், பெருநிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.4.87 லட்சம் கோடியை இதே அரசாங்கம்தான் மானியமாகப் படி அளக்கிறது. எண்ணெய் மானியத்தைப் போல் கிட்டத்தட்ட மூன்று மடங்கு.

  
                              கச்சா எண்ணெய் அரசு நிர்வாகத்துக்குப் பெரிய சவால் என்று அரசு சொல்கிறது. உண்மைதான். ஆனால், தன்னுடைய கச்சா எண்ணெய்த் தேவையில் 80 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா இருக்கும் சூழலில், எண்ணெய்த் தேவையைக் கட்டுப்படுத்த கடந்த எட்டு ஆண்டுகளில் இந்த அரசு என்ன முயற்சி எடுத்தது? டீசல் தேவையை அதிகரிப்பதைப் பெரும் சவால் என்று சொல்லும் இதே அரசு, உயர்ந்துகொண்டே போகும் கார் விற்பனையைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கு ரேஷன் முறை இருக்கும் நாட்டில், கார்களை ஓட்டும் கனவான்கள் பயன்படுத்தும் டீசலுக்கு ரேஷன் முறை ஏன் இருக்கக் கூடாது? டீசல் தேவையை அதிகரிக்கும் புதிய காரணிகளில் ஒன்றான செல்போன்கோபுரங் கள் இயக்கத்துக்கான டீசலையும் ஏன் மானிய விலையில் தர வேண்டும்? உள்நாட்டில் உற்பத்திஆகும் கச்சா எண்ணெயை - வரிகள் இல்லாமல் மலிவு விலையில் - ரயில்கள், லாரிகள், பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கொடுக்கலாமே... என்ன தயக்கம்?
      
                              உலகிலேயே எவர் வேண்டுமானாலும் விலைவாசியைத் தீர்மானிக்கலாம் என்ற சூழல் இந்தியாவில்தான் நிலவுகிறது. ஒன்றரை கிலோ நெல்லை அரைத்தால், ஒரு கிலோ அரிசி. ஒரு கிலோ சன்ன ரக நெல் அதிகபட்சம் ரூ.12-க்குக் கொள்முதல் ஆகிறது. அரவை, போக்குவரத்து,வியாபாரிகள் லாபம்... எல்லாவற்றுக்கும் ஏழு ரூபாய் சேர்த்தாலும் ரூ.25-க்குச் சன்ன ரக அரிசி கிடைக்க வேண்டும். அரிசிக் கடையிலோ ரூ.45-க்குச் சன்ன ரக அரிசி விற்கிறது. பொள்ளாச்சியில், விவசாயிகளிடம் 4 ரூபாய்க்குக் கொள்முதலாகும் ஒரு கிலோ தக்காளி... சென்னை, கோயம்பேடு சந்தையில் ரூ.10-க்கும், தி.நகர் 'சரவணா செல்வரத்தினம்’ அங்காடியில் ரூ.11.50-க்கும், சைதாப்பேட்டை 'காரணீஸ்வரர்’ அங்காடியில் ரூ.16-க்கும், தி.நகர்  'கோவை பழமுதிர் நிலைய’த்தில் ரூ.20-க்கும் விற்கிறது. கந்தசாமி மளிகைக் கடையில் ரூ. 120-க்கு விற்கும் புளி, 'நீல்கிரீஸ்’ அங்காடியில் ரூ160-க்கும் 'ரிலையன்ஸ் ஃப்ரெஷ்’ அங்காடியில் ரூ.164-க்கும் விற்கப்படுகிறது. திருச்சி, உறையூர் பழ வண்டிக்காரரிடம் ரூ.100-க்குக் கிடைக்கும் அதே ஆப்பிளை, ரூ.150-க்கு விற்கிறார் கிராப்பட்டி சாலையோரக் கடைக்காரர். மதுரையில் - ஒரே மாதிரியான கட்டமைப்பைக்கொண்ட உணவகங்கள் 'பெல்’, 'மீனாட்சி பவன்’, 'ஏ டு பி’. ஆனால், ஒரே சுவையுள்ள காபியின் விலை முறையே ரூ.12, ரூ.15, ரூ.20. ஒரு எலுமிச்சம் பழம் மூன்று ரூபாய். சென்னை 'சரவணபவன்’ உணவகத்தில் ஒரு எலுமிச்சை ஜூஸ் ரூ.30. குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் டெல்லியில் ரூ.19; மும்பையில் ரூ.12; பெங்களூரில் ரூ.20; சென்னையில் ரூ.30. இந்தியாவில் பெட்ரோல் ஆட்டோக்களும் உண்டு; டீசல் ஆட்டோக்களும் உண்டு. ஆனால், பெட்ரோல் விலை ஏறும்போதும் சரி, டீசல் விலை ஏறும்போதும் சரி... இரண்டு வகை ஆட்டோக்காரர்களுமே கட்டணத்தை உயர்த்திக்கொள்கிறார்கள். வீட்டு வாடகையைப் பொறுத்த அளவில் உரிமையாளர்கள் வைத்ததே சட்டம். அரசாங்கம் என்று ஒன்று இருக்கிறதா இங்கே?
      
                              சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், இந்திய விவசாயிகளுக்கு விளைபொருட்களின் விலைக்கு நல்ல நிலை கிடைக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள் மத்திய அமைச்சர்கள். சுதந்திரம் அடைந்து 65 ஆண்டு காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் உருவாக்கித் தர முடியாத நியாயமான விலை நிர்ணயச் சூழலை, கேவலம் லாப வெறிகொண்ட அந்நிய நாட்டுப் பெருநிறுவனங்களா உருவாக்கிவிடும்?
   
                              உண்மையில் இந்தியாவில் உயிர் பிழைப்பதற்காக என்னென்னவோ கலைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் இந்தியர்கள். ஆனால்,   இத்தனை காலமாக தெரியாத ஓர் எளிய பேருண்மையை இப்போதுதான் மன்மோகன் சிங் மூலம் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். ஆமாம்... பணம் மரத்தில் காய்க்கவில்லை! 

ஆனந்த விகடன் செப். 2012

1 கருத்து:

  1. சமஸ் ,என்ன செய்வது ? இந்த நாட்டில் நாம் பிறந்தது தவறா அல்லது சரியான தலைவர்கள் நம்மிடம் உருவாகாமல் போனதோ ?சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளில் ஒரு visionary leader ந நாட்டில் வராதது நம் துர்பாக்கியம் !!!

    பதிலளிநீக்கு