கொல்வது தீ அல்ல!


சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகம். ஆங்கிலப் பயிலரங்கு. முதல் நாள் வகுப்பு. பாடம் என்ன தெரியுமா? திடீரென ஓர் அசம்பாவிதம் நடந்தால் அந்த இடத்தில் இருந்து எப்படிப் பாதுகாப்பாக வெளியேறுவது என்ற விளக்கம். கட்டடத்தின் முழு அமைப்பு; அவசர வழிகள் எங்கெல்லாம் இருக்கின்றன; எப்படி எல்லாம் பாதுகாப்பாக வெளியேறலாம் என்று திரையில் ஓடுகிறது. இதுதான் முதல் பாடம்.

அது ஒரு பெரிய கட்டடம். பயிலரங்குக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் பெரியவர்கள். பயிற்சியோ சில நாட்கள். ஓர் ஆபத்தையும் எதிர்கொண்டிராத குழந்தைகளை நெருக்கடி மிக்க நம்முடைய பள்ளிக்கூடங்களுக்கு நாம் எப்படி அனுப்புகிறோம் என்பதுடன் இந்தச் சூழலை ஒப்பிட்டுப்பாருங்கள். நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம்?

உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில்தான் ஓர் இடத்தில் தீ விபத்து நேரிட்டால், அந்த இடத்தில் அப்போது இருப்பவர்களில் 60% பேர் தீயால் பாதிக்கப்படுகிறார்கள். சிவகாசிக்கு வெளியே இருப்பவர்களுக்குத் தீ விபத்துகள் பெரிய விஷயமாகத் தெரியலாம். ஆனால், மாதம் நாலைந்து விபத்துகள் அங்கு நடக்கின்றன; அவற்றில் பல யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்கப்படுகின்றன. உண்மையில், சிவகாசி விபத்துகளின் மூலகாரணம் தீ அல்ல; அலட்சியம். அரசிடம் அலட்சியம் ஊழலால் உருவாகிறது; மக்களிடம் அலட்சியம் அறியாமையால் உருவாகிறது.

இந்தியாவின் 90% வெடிபொருட்கள் சிவகாசியில்  தயாரிக்கப்படுகின்றன; 80% தீப்பெட்டி உற்பத்தி சிவகாசியில்தான் நடக்கிறது; தவிர, 60% அச்சுப் பணிகள் இங்கே நடக்கின்றன. ரூ.5,000 கோடி புழங்கும் ஒரு நகரம்தான் அடிப்படைக் கட்டுமான வசதிகள் ஏதும் இன்றி, பணிப் பாதுகாப்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் நிலையில், எப்போதுமே வெடிக்கத் தயாராக இருக்கும் வெடிகுண்டாகக் காட்சி அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை, தொழிலாளர் நலத் துறை, கலால் துறை, வணிக வரித் துறை, உள்ளாட்சி அமைப்புகள்... இப்படிப் பல துறைகளின் ஆசி இருந்தால்தான் ஒரு பட்டாசு ஆலையை இயக்க முடியும். அரசுக் கணக்குபடி சிவகாசியில் உள்ள ஆலைகளின் எண்ணிக்கை 791. ஆனால், இந்தக் கணக்கை உள்ளூரில் உள்ள சின்ன குழந்தைகூட நம்பாது. சிவகாசியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் ஒவ்வொரு வீடுமே ஓர் ஆலைதான். எப்படி? லஞ்சம்... லஞ்சம்... லஞ்சம்!
   
பட்டாசுத் தயாரிப்பு விதிகளில் நிறைய கூடாதுகள் உண்டு. முக்கியமாக அபாயகரமான செந்தூரம் மருந்தைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், வெறும் காகிதத்திலும் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு மிரட்டவுமே இந்த விதிகள் பயன்படுகின்றன. விதிகள் எந்த அளவுக்கு இங்கு பின்பற்றப்படுகின்றன என்பதற்கு உதாரணம்... சமீபத்தில் விபத்து நடந்த முதலிப்பட்டி ஆலையில் மட்டும் 40 விதிமீறல்கள் நடந்ததாகக் கூறினார் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர். கடந்த ஆண்டு சாத்தூரில் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு, 5 பேர் உயிரிழந்தனர். ஆனால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் உரிமம் பெற்று உற்பத்தியைத் தொடங்கி மறுபடியும் இன்னொரு விபத்தைச் சந்தித்தது அந்த ஆலை. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 178 பட்டாசு ஆலைகள் வெடி விபத்துகள் மூலம், 240 பேர் உயிர் இழந்திருக்கின்றனர்; 171 பேர் பலத்த காயம் அடைந்திருக்கின்றனர்.

இவ்வளவு பெரிய தொழில் நகரத்தில், மிக அபாயகரமான வேலையில் இருக்கும் தொழிலா ளர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்று நினைக்கிறீர்கள்? பெரிய பட்டாசு ஆலைகளில் ஒரு நாளைக்கு ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.250-500; பெண் தொழிலாளர்களுக்கு ரூ.130-400. ஆனால், இந்தச் சம்பளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சொற்பம். பல்லாயிரக்கணக்கானோர் இங்கு கூலிகள்தான். புஸ்வாணத்துக்குள் மருந்து நிரப்பி, அடிபாகத்தில் மண் பூசும் வேலை பார்ப்பவர் களைச் சட்டி தட்டுபவர்கள் என்பார்கள். ஒரு புஸ்வாணத்தில் இப்படி மருந்து நிரப்பி, மண் பூசி அனுப்ப கூலி எவ்வளவு தெரியுமா? 10 பைசா!

சிவகாசியில் பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 2.5 லட்சம் பேரில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் குழந்தைத் தொழிலாளிகள். எல்லா விதிமீறல்களும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறைக்குத் தெரியும். லஞ்சம் அதன் கண்களைக் கட்டி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனுமதியற்ற பட்டாசு ஆலைகளில் சோதனைக்குச் சென்ற கோட்டாட்சியர் கொம்பையன் ஏராளமான கருந்திரிகளைக் கைப்பற்றினார். அதன் அபாயம்பற்றித் தெரியாமல் அழிக்க முற்பட்டபோது கருந்திரியோடு சேர்ந்து அவருடன் சோதனைக்குச் சென்ற ஏழு பேர் கருகிச் செத்தனர். இந்தியாவில் தீயைப் பற்றி நமக்கு இருக்கும் விழிப்பு உணர்வுக்குச் சின்ன உதாரணம் இது. ஒரு கோட்டாட்சியருக்கே இவ்வளவுதான் தெரியும் என்றால், படிப்பறிவு இல்லாத தொழிலாளிகளுக்கு? குழந்தைகளுக்கு?

ஓர் உயிரின் முக்கியத்துவத்தை நாம் பள்ளிக்கூடங்களில் இருந்து சொல்லிக்கொடுக்கத் தொடங்க வேண்டும்!

ஆனந்த விகடன் செப்.2012

2 கருத்துகள்:

  1. அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தை தோலுரிக்க பத்திரிக்கையாளர்கள் 'ஸ்டிங்' ஆபரேஷனை முன்னெடுக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தை தோலுரிக்க பத்திரிக்கையாளர்கள் 'ஸ்டிங்' ஆபரேஷனை முன்னெடுக்க வேண்டும்

    பதிலளிநீக்கு