இந்தியா என்ன சொல்கிறது?- வட கிழக்கு


வானிலிருந்து பார்க்கும்போது தன் அழகால் வாரிச்சுருட்டுகிறது குவாஹாத்தி. சுற்றிலும் மலைகளும் குன்றுகளும். பிரம்மாண்டமான பிரம்மபுத்திரா நதிக் கரையில் விரிந்திருக்கிறது. குழந்தைகள் வரையும் இயற்கைக் காட்சி ஓவியம்போல இருக்கும் நகரம், கால் பதித்து உள்ளே நுழைய நுழைய… ஒரு அழுமூஞ்சிக் குழந்தை ஆகிறது. ஒரு அழகான குழந்தையை மூக்குச்சளி வழிய அழுதுகொண்டேயிருக்கும்போது பார்க்க எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.

கிழக்கு இந்தியாவின் நுழைவாயில்


குவாஹாத்திக்கு நீண்ட வரலாறு உண்டு. நரகாசுரன், சூரன் பகதத்தனின் புராணக் காலத்திலேயே அதன் கதை தொடங்கிவிடுகிறது. இப்போதும் அது அசாமின் தலைநகரம் மட்டும் அல்ல; அதுதான் வட கிழக்கு இந்தியாவின் நுழைவாயில். அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், அருணாசலப் பிரதேசம் ஆகிய ஏழு சகோதரிகள் மாநிலங்களுக்கும் அதுதான் கல்வி - வணிக மையம். குவாஹாத்தியின் ஓராண்டு உற்பத்தி மதிப்பு ரூ. 6,000 கோடி ரூபாய் என்கிறார்கள். சர்வதேச அளவில் கொழும்புக்கு அடுத்த நிலையில் குவாஹாத்தி தேயிலை ஏல மையம் இருக்கிறது. குவாஹாத்தியில் உள்ள இந்திய அறிவியல் கழகமும் பல்கலைக்கழகமும் காட்டன் கல்லூரியும்தான் இன்றைக்கும் இந்த ஏழு மாநில மாணவர்களின் கனவுக் களங்கள். இங்குள்ள மருத்துவக் கல்லூரியே ஏழு மாநில எளிய மக்களின் கடைசி மருத்துவ நம்பிக்கை.

இவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தாலும் ஒரு மழை பெய்தால், நகரம் தண்ணீரோடு போக்குவரத்து நெரிசலில் மிதக்கிறது. நகரைப் பிரிக்கும் ரயில் பாதையில் ஊருக்குள் ஒரு ரயில் நுழைந்தால் 100 இடங்களில் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. ஊருக்குள் வீதிக்கு வீதி சாக்கடைகள் வாய்க்கால்கள்போல ஓடுகின்றன. குவாஹாத்தியின் பிரதான சாலைகளில்கூட விளக்குகள் எரிவதில்லை. “உங்களுக்குத் தெரியுமா? ஒருகாலத்தில் கீழை உலகின் ஒளி நகரம் என்று அழைக்கப்பட்ட இடம் இது. நீங்கள் பார்ப்பது குவாஹாத்தியின் அவலம் அல்ல; வட கிழக்கு இந்தியாவின் அவலம்” என்கிறார் பேராசிரியர் தெபர்ஷி தாஸ்.

எங்கே பிரதிநிதித்துவம்?


வட கிழக்கு இந்தியாவின் மக்கள்தொகை 3.9 கோடிதான். இவர்களில் 68% பேர் வசிக்கும் அசாமிலேயே ஒரு சதுர கிலோ மீட்டரில் 340 பேர்தான் வாழ்கிறார்கள். அருணாசலப் பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 13. எனில், வட கிழக்கு எப்படி வெறிச்சோடிக் கிடக்கும் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. நாட்டின் மக்களவையில் வட கிழக்கின் பங்களிப்பு 25 இடங்கள். அதாவது, 4.6%. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் வட கிழக்கின் பங்கான 3.1%-ஐவிடவும் இது அதிகம் என்றாலும், உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு மாநிலம் 80 மக்களவைத் தொகுதிகளுடன் இருக்கும்போது, இந்த ஏழு மாநிலங்களின் ஒட்டுமொத்த கூட்டுத்தொகையே 25 என்றால், நம் அரசியல் கட்சிகள் பொருட்படுத்துமா? வட கிழக்குப் புறக்கணிப்பு அரசியலின் அடிப்படை இங்கிருந்தே தொடங்கிவிடுகிறது.

ஒருவனின் கதை அல்ல


பான் பஜாரில் டீ விற்றுப் பிழைக்கிறார் மேகாலயாவைச் சேர்ந்த லிங்டோ, “நன்றாகத்தான் படித்தேன். ஆனாலும், கல்லூரிகள் குறைவு என்பதால், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அம்மா வேறு திடீரென்று கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார்கள். ‘இங்கே பார்க்க வசதியில்லை. சென்னைக்குக் கொண்டுபோ’ என்று ஒரு தனியார் மருத்துவமனையில் சொன்னார்கள். அங்கே கூட்டிப்போனால் இரண்டே வாரங்களில் இரண்டு லட்சம் செலவு வைத்தார்கள். இருந்த வீட்டையும் விற்றோம். அப்புறம் 20 லட்ச ரூபாய் செலவாகும் என்றார்கள். ஊருக்கே அம்மாவை அழைத்துவந்துவிட்டேன். அம்மா செத்துவிட்டார். நான் ஊரைவிட்டு இங்கே சாயா விற்க வந்துவிட்டேன்” என்கிறார். சாதாரண நாய்க் கடிக்காகவும் காசநோய்க்காகவும்கூடத் தங்கள் மாநிலங்களைவிட்டு கொல்கத்தாவுக்கோ, சென்னைக்கோ ரயில் ஏறிய குடும்பங்கள் ஏராளம். அதேபோல, உயர் கல்விக்கும் பெரும்பாலும் வெளிமாநிலங்களுக்கே அனுப்பிவைக்கிறார்கள். மிகப் பலவீனமான கல்வி, மருத்துவக் கட்டமைப்பு, இருக்கும் வீடு, நிலங்களையும் கல்விக்கோ, மருத்துவத்துக்கோ விற்றுவிட்டுக் கூலியாகி நிற்கிறார்கள். “ஏதாவது ஒரு வேலை வேண்டும்” - இது லிங்டோவின் பிரச்சினை மட்டும் அல்ல, இன்றைய வட கிழக்கின் தலையாய பிரச்சினை. இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. அதுதான் வட கிழக்கின் இன்றைய அரசியலைத் தீர்மானிக்கிறது. நாளைய எதிர்காலத்தையும் அதுவே தீர்மானிக்கும் - அடையாளச் சிக்கல்.

நான் யார்?

“பெரும்பான்மை இந்தியர்களுக்கு எங்கள் மாநிலங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பதே தெரிவதில்லை. எங்களைப் பார்த்தால் மங்கோலியர்களா, சீனர்களா என்றுதான் கேட்கிறார்கள். நாங்கள் பேசுவதே அவர்களுக்கு இழிவாகத் தெரிகிறது. தவிர, இங்கே என்ன நடந்தாலும் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நெல்லி கலவரத்தில் 3,000 பேர் கொல்லப்பட்டபோதும், கோக்ரஜார் கலவரத்தில் லட்சம் பேர் அகதிகளானபோதும் யார் கவலைப்பட்டார்கள்?” என்று கேட்கிறார் வீரேந்தர். “ஒரு கிழவர் ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்தபோது துடித்த இந்தியா, 10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஐரோம் ஷர்மிளாவுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறது?” என்கிறார் வட கிழக்கின் உரிமைகளைப் பாடும் இம்பால் டாக்கீஸ் குழுவைச் சேர்ந்த சின்கங்பம்.

சிக்கலின் ஆணிவேர்


பெரும்பாலான வட கிழக்கின் பகுதிகள் மலைகளால் சூழப்பட்டவை. கணிசமான மக்கள் பழங்குடிகள். அசாமில் 19.3% என்றால், மிசோரமில் 94.5% பழங்குடி மக்கள். இவர்களில் ஏறத்தாழ 160-க்கும் மேற்பட்ட தொல் பழங்குடி இனங்களும் 400-க்கும் மேற்பட்ட குழுச் சமூகங்களும் இருக்கின்றன. இந்தக் குழுக்களால் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கையே 200-ஐத் தாண்டும். இப்படி மொழியில் தொடங்கி உணவு வரை ஏராளமான கலாச்சார வேறுபாடுகள் இவர்களுக்குள் உண்டு. ஏற்கெனவே, உரசல்கள் இருந்த நிலையில், இப்போது அவர்கள் வெளியே செல்லும்போதும் வெளியாட்கள் இங்கே நுழைவதாலும் ஏற்படும் மாற்றங்களே அடையாளச் சிக்கலின் ஆதாரச் சுருதி.

உதாரணமாக, அசாமில் போடோக்களின் அரசியலை முன்வைக்கும் போர்கோயுரி, “வட கிழக்கின் பெரும்பான்மைப் பகுதிகள் கிறிஸ்தவ சபைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்துவிட்டன. தவிர, அசாமில் சட்ட விரோதமாகக் குடியேறிய முஸ்லிம்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட, இப்போது அவர்கள் வலுவான சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள். அசாமில் ஐந்தில் ஒருவர் வங்கதேசி. இப்போது தொழிலில் அசைக்க முடியாதவர்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். எங்களுக்கென்று என்ன இருக்கிறது” என்று கேட்கிறார் .

இந்தக் கதைக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. “ஆங்கிலேயர் காலத்தில் வங்கத்துடன் சேர்ந்திருந்த பகுதிகள்தான் இவையெல்லாம். எங்கள் குடும்பம் கொல்கத்தாவில் இருந்தது. பிரிவினையின்போது நாங்கள் டாக்காவுக்கு மாறினோம். அங்கு சூழல் சரியில்லாத நிலையில், இங்கே குவாஹாத்தி வந்தோம். எத்தனையோ அசாமிகளுக்குக் கொல்கத்தாவில் வேலை கொடுத்தவர்கள் எங்கள் முன்னோர்கள். இன்றைக்கு நாங்கள் அவர்கள் ஊருக்கு வரும்போது அந்நியர்களாகிவிட்டோம். எந்தச் சூழலிலும் தாக்கப்படுவோம் என்கிற நிலையில்தான் வாழ்கிறோம்” என்கிறார் ரிக்‌ஷா தொழிலாளியான இஸ்மாயில்.

வட கிழக்கில் இன அரசியலின் பலம் சாதாரணமானதல்ல. அசாம் மாநிலத்திலிருந்து நாகாலாந்தும் மேகாலயாவும் அருணாசலப் பிரதேசமும் பிரிய அதுவே முக்கியக் காரணம். இது தவிர, இப்போது இந்திமயமாதலும் அவர்களைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது. கொஞ்சம் சோறு, பருப்பு, ரொம்ப மசாலா சேர்க்காமல், கடுகு எண்ணெய் தடவி, ஒரு குச்சியில் செருகி வாட்டப்பட்ட மீன். இது ஒரு வேளை உணவாக எனக்குக் கிடைத்தது. “ஒருகாலத்தில் இப்படியான விதவிதமான வட கிழக்கு உணவு வகைகள்தான் எங்கும் கிடைக்கும். இன்றைக்கு எங்கும் ரொட்டி, சப்ஜிதான்” என்று அலுத்துக்கொண்டார் ஒரு அசாமிய நண்பர்.

“சாதாரணமான வாழ்க்கை முறை எங்களுடையது. 20 மரப் பலகைகளோ, மூன்று தகரங்களோ போதும், நாங்கள் வீடு கட்டிக்கொள்ள. பணக்காரர்கள் என்றால், இன்னும் அழகாக மர வீடு கட்டுவார்கள். இப்போது பாருங்கள், எங்கு பார்த்தாலும் டெல்லிக்காரர்களைப் போலவே கான்கிரீட் கட்டிடங்கள்தான். பாலிவுட் சினிமாதான். இங்கிருந்து வெளியேறிய இளைய தலைமுறை எங்கள் மொழியை மறந்துவிடுகிறார்கள். எதிர்காலம் பயமாக இருக்கிறது” என்கிற குரல்களைப் பரவலாகக் கேட்க முடிகிறது. எல்லோருமே தேசிய இனப் போராட்டங்களை நடத்தியவர்கள் என்றாலும், மணிப்பூரில் மட்டுமே இன்னும் சுதந்திர கோஷங்கள் வலுவாக ஒலிக்கின்றன.

அரசியலில் பிராந்தியக் கட்சிகளைத் தாண்டி, காங்கிரஸே பரவலான செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் படாடோப உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள். அமைச்சர்கள் வீதிகளில் வந்தால், ராஜ சவாரியைப் பார்ப்பதுபோல இருக்கிறது பந்தோபஸ்து. வட கிழக்கின் மோசமான சூழலுக்கு காங்கிரஸுக்கு முக்கியப் பங்கு உண்டு. எந்த அரசியல் கட்சியையும் நம்ப முடியவில்லை என்கிறார்கள். நிறைய ஏமாற்றங்கள், துயரங்கள், வலிகள்...

இவை எல்லாவற்றையும் மீறியும் ஆக்கபூர்வமான தீர்வுகளை இந்தியப் பொதுச் சமூகத்திடமிருந்து வட கிழக்கு எதிர்பார்க்கிறது. வட கிழக்கின் சுவர்களை அலங்கரிக்கும் மேரி கோம் அதன் அடையாளச் சின்னமாகப் புன்னகைக்கிறார்!

ஏப். 2014, ‘தி இந்து’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக