சாகும் வரை போராடு!
ந்தியாவில் எவ்வளவோ வாழ்க்கை முறைகள் இருக்கின்றன. ஆனாலும், ஜந்தர் மந்தரின் வாழ்க்கை முறையை எந்தக் கலாச்சாரத்தோடும் ஒப்பிட முடியாது. போராட்டத்தையே வாழ்க்கையாக வரித்துக்கொண்டவர்களின் வாழ்க்கை முறை இது. ஒருகாலத்தில் ஜெய்ப்பூர் மகாராஜா இரண்டாவது ஜெய் சிங் கட்டிய கால நிர்ணய ஆய்வுக்கான கட்டிடங்களுக்காக டெல்லியில் பேர்போன இடம் ஜந்தர் மந்தர். இப்போதோ, இந்திய மக்களுக்குப் போராட்டத்தில் இருக்கும் நம்பிக்கைக்கான அடையாளம். டெல்லியில் ஆண்டு முழுவதும் ஆயிரக் கணக்கில் போராட்டங்கள் நடக்கும் களம் இது. போராட வேண்டும் என்றால், ஜந்தர் மந்தர் வாருங்கள்என்று டெல்லி காவல் துறையே அழைக்கும் இடம்.

வரலாறு இங்கே எழுதப்படுகிறது
எல்லா அரசாங்கங்களும் போராட்டங்களை வெறுக்கவே செய்கின்றன. நகரின் மையத்தில் போராட்டங்கள் நடந்தால், மக்கள் கவனத்தை அவை ஈர்க்கும் என்பதால், நகரின் மையத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை மக்கள் பார்வைக்கு அப்பால் துரத்தும் உத்தியையே கையாள்கின்றன. டெல்லி அரசு நாடெங்கிலிருந்தும் வரும் போராட்டக்காரர்களை அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக மையத்திலிருந்து விரட்டி, இறுதியில் அவர்கள் அடைக்கலமான இடம்தான் ஜந்தர் மந்தர்.
பொதுவாக, மாநில அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்டு, தங்கள் கோரிக்கைகளோடு மத்திய அரசாங்கத்தை அணுக வரும் ஜந்தர் மந்தர் போராட்டக்காரர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, பெரும் கூட்டத்துடன் திரளும் தற்காலிகப் போராட்டக்காரர்கள். இவர்கள் எல்லா ஊர்களையும்போல பொதுவான கோரிக்கைகளுடன் ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை நீடிக்கும் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள். இரண்டு, ஆண்டுக் கணக்கில் இங்கேயே அமர்ந்திருக்கும் நீண்ட காலப் போராட்டக்காரர்கள். தங்கள் கோரிக்கைகளுக்காகவும் போராட்டங்களுக்காகவுமே உயிரைவிடவும் தயாராக இருப்பவர்கள். நிறைய பேர், முதல் வகை போராட்டக்காரர்களாக வந்து இரண்டாம் வகை போராட்டக்காரர்களாக மாறியவர்கள்.


போராட்ட வாழ்க்கை
நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஒரு வாழ்க்கை ஜந்தர் மந்தர் போராட்ட வாழ்க்கை. ஜந்தர் மந்தர் சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் நடைபாதைதான் இவர்களுடைய போராட்டக் களம். சுவரோரமாகக் கொஞ்சம் கனமான துணிகளைக் கொண்டு ஒரு சின்ன கூடாரம். அதுதான் இவர்களுக்கு வீடு. டெல்லி மாநகராட்சி நிர்வாகம் சாலையோரத்தில் அமைத்திருக்கும் கட்டணக் கழிப்பிடங்களையும் குளியலறைகளையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். காசு இருந்தால், சாலை யோரக் கடைகளில் 20 ரூபாய்க்குக் கிடைக்கும் ஆறு பூரிகளும் சப்ஜியும்; இல்லாவிட்டால், கோயில்களிலும் மடாலயங்களிலும் கிடைக்கும் பிரசாதமும் அன்னதானமும். எப்படியும் இது ஒரு வேளைக்குத்தான். ஏனைய வேளைகளில் தங்கள் போராட்டத்தின் நியாயங்களையே மென்று விழுங்கிப் பசியை விரட்டுகிறார்கள்.

கூடாரத்துக்கு வெளியே அவர்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் தொங்குகின்றன. வாரத்தில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மந்திரிகளையோ உயர் அதிகாரிகளையோ சந்தித்து மனு கொடுத்து முறையிடுகிறார்கள். மீண்டும் தங்கள் கூடாரம் திரும்பி, கோரிக்கைப் பதாகைகளோடு அந்த வழியே செல்லும் மக்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். யாரேனும் தங்கள் குரலைக் கேட்க மாட்டார்களா... காத்துக்கிடக்கிறார்கள் நாள் கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில்...

ஐ.பி.எஸ். கொடும்பாவி
டெல்லி வெயில் அன்றைக்கு நூற்று நான்கு டிகிரியைத் தாண்டி வாட்டிக்கொண்டிருந்தது. சாலையில் சலனமே இல்லாமல் ஒரு பிணம்போல ஜோடிக்கப்பட்ட கொடும்பாவியோடு உட்கார்ந்திருக்கிறார் ஜகஜீத் கௌர். பஞ்சாப்பைச் சேர்ந்தவர். கடன் பிரச்சினையில் புகார் கொடுப்பதற்காகக் காவல் நிலையம் சென்ற இவரை காவல் துறை அதிகாரி நௌனிஹல் சிங் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாகக் கூறுகிறார். முதல் தகவல் அறிக்கைகூட இன்னும் அவர் மீது பதியப்படவில்லை என்கிறார். சிங்கின் ஐ.பி.எஸ். செல்வாக்குக்கு முன் ஜகஜீத்தின் முறையீடு எடுபடவில்லை. இங்கே வந்து உட்கார்ந்துவிட்டார் ஜகஜீத். அவர் முன் இருக்கும் கொடும்பாவி மீது சிங்கின் படம் ஒட்டப்பட்டிருக்கிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றிப் பேசும்போது அவர் கண்களில் தாரையாக நீர் ஓடுகிறது. என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது. அவனோ மேலும் மேலும் பதவி உயர்வோடு மேலும் பலரை நாசமாக்கிக்கொண்டே முன்னேறுகிறான்என்பவர் நீதியின் முன் ஒருநாள் சிங் பதில் சொல்லியே ஆக வேண்டும்என்கிறார் கண்களில் வழியும் நீரைத் துடைத்துக்கொண்டு.

வில்லன் மோடி
குஜராத்தைச் சேர்ந்த பன்சிலால் மஹாபால் ஒரு ஓட்டுநர். அவர் கையில் வைத்திருக்கும் ஆவணங்களில் முதல்வர் மோடி கையால் பரிசு பெறும் படமும் ஒன்று. குஜராத் போக்குவரத்துக் கழகத்தில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்த உதவியதற்காகப் பைத்தியக்காரன் பட்டம் கட்டப்பட்டு, பணியை விட்டு நீக்கப்பட்டதாகச் சொல்கிறார். நீதி கிடைக்காமல் இங்கிருந்து ஊர் திரும்பப்போவதில்லை என்கிறார்.

எங்கே என் மகன்?
மலையாளத்தில் எழுதப்பட்ட பதாகைகளுடனான கூடாரத்தில் தன் இளைய மகனுடன் போராட்டத்தில் அமர்ந்திருக்கும் விமலா, தன் கோரிக்கைபற்றிச் சொல்லத் தொடங்கும் முன்னரே உடைந்து கதறுகிறார். அவருடைய மூத்த மகன் அரசியல் படுகொலை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்.
இன்னும் சாதிக் கொடுமையால் ஊரை விட்டு விரட்டப்பட்ட வர்கள், லஞ்சம் கொடுக்காததால் வேலைவாய்ப்பு, பணி உயர்வு வாய்ப்பு நிராகரிக்கப்பட்டவர்கள் என்று உட்கார்ந்திருப்பவர்களில் தனிப்பட்ட கோரிக்கையோடு வந்திருப்பவர்கள் மட்டும் அல்ல; பொதுவான கோரிக்கைகளுடனும் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டுக் காத்திருக்கின்றனர்.

பழங்குடிகளின் துயரம்
பெரும்பாலான கூடாரங்கள் சத்தீஸ்கர் அல்லது ஜார்க்கண்ட் அல்லது மணிப்பூரின் எட்ட முடியாத ஊர்களைச் சேர்ந்தவர்களுடையவை. தங்களுடைய பாரம்பரிய வனத்திலிருந்து துரத்தப்பட்டதற்கு எதிராக, புதிதாக அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும் பெருநிறுவனங்களுக்கு எதிராக, காட்டில் நடக்கும் கொள்ளைக்கு எதிராக என மிகப் பெரிய எதிரிகளை எதிர்த்து இங்கே கூடாரமிட்டுக் காத்திருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோருக்குமே ஆண்டுக் கணக்கான போராட்ட வரலாறு இருக்கிறது. அநேகமாக எல்லோர் கைகளிலும் முதல்வருக்கும் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் எழுதிய கடிதங்கள் நூற்றுக்கும் மேல் இருக்கின்றன. கோலியரி ஆசிரியர் முன்னணி அமைப்பாளர் பி.கே.சிங் இவர்களில் மூத்தவர். 16 ஆண்டு காலமாக இவர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அன்றைய தினம் இவரைச் சந்திக்க முடியவில்லை. அதேபோல, கிட்டத்தட்ட ஒன்பது வருடப் போராட்ட முடிவில் ஒரு கொடுங்குளிர் நாளில் இறந்துபோன ரௌனகி ராம் பாஸிகரை இன்னமும் மரியாதையோடு நினைவுகூர்கிறார்கள்.

எது அடித்தளம்?
எந்த நம்பிக்கை இவர்களுக்கெல்லாம் ஆதாரம்? இப்படி ஆண்டுக் கணக்கில் உட்கார்ந்திருக்கும்போது குடும்பத்தின் நிலை என்னவாகும்? கேட்டால், கண்களில் விரக்தி தெரியச் சிரிக்கிறார்கள். குடும்பத்தினர் ஆரம்பத்தில் ஆதரிப்பார்கள். ஒருகட்டத்தில் கைகழுவிவிடுவார்கள். அப்புறம் பிள்ளைகளுக்குத் திருமணம் என்றால், சொல்லி அனுப்புவார்கள். அவர்களைப் பொறுத்த அளவில் நாங்கள் பைத்தியங்கள். ஆனால், கண்ணுக்கு எதிரே ஒரு அநீதி நடக்கிறது. பணமும் பதவியும் நீதியைக் கொல்கின்றன. எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? நம் வாழ்வை நாசமாக்குபவர்களை எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்? அதற்காகத்தான் கிளம்பி வந்தோம். எல்லாவற்றையும் இந்தப் போராட்டத்துக்காகத்தான் விட்டுவிட்டு நிற்கிறோம். எங்களால் இங்கிருந்து சும்மா திரும்ப முடியாது. போராட்டம் ஜெயிக்கிறதோ, தோற்கிறதோ... தப்பு செய்தவர்களுக்கு எதிர்க் கேள்வி கேட்க ஆளிருக்கிறோம் என்ற பயம் இருக்கும் இல்லையா?” என்று சொல்பவர்கள் அவர்களுக்குள் இடைமறித்துக்கொண்டு நிச்சயம் எங்கள் போராட்டங்களெல்லாம் ஜெயிக்கும் சார்...என்கிறார்கள். அப்புறம் ஏதேதோ பேசுபவர்கள் கொஞ்சம் இடைவெளிவிட்டு, “எங்கள் போராட்டங்களெல்லாம் ஜெயிக்கும் இல்லையா சார்?” என்கிறார்கள். அப்படிக் கேட்கும் போது அவர்கள் கண்களை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. சத்தியம் பிடரியைப் பிடித்து உலுக்குவது மாதிரி இருக்கிறது. ஜெயிக்கும்என்று சொல்லி, கை குலுக்கிவிட்டுக் கிளம்புகிறேன்.
நியாயமான போராட்டங்கள் நிச்சயம் ஜெயிக்க வேண்டும் இல்லையா?
ஏப்ரல், 2014, ‘தி இந்து’

1 கருத்து:

  1. ஆம் நியாயமான் போராட்டங்கள் நிச்சயம் ஜெயிக்கும்!!!

    நித்தம் நித்தம் எங்கும் நிகழும் அரத்தமில்லா யுத்தங்கள் வெறும் மண்டையோடுகளையும் மயான பூமிகளையும்தான் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றன!!!

    பதிலளிநீக்கு