சுப. உதயகுமார் |
போராட்டம் தொடங்கி, இன்றைக்கு எத்தனை நாட்கள் ஆகின்றன என்று சரியாக நினைவிருக்கிறதா?
962 நாட்கள்.
இந்த 962 நாட்கள் போராட்டத்திலிருந்து என்ன கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்?
ஒரு அறவழிப் போராட்டத்துக்கான தீர்வு ஒரே நாளில் கிடைத்துவிடாது; அதேசமயம், மக்கள் வசம் உள்ள ஒரு போராட்டத்தை எந்தச் சூழலிலும் முறியடிக்க முடியாது. மக்களுடம் இயங்குவதே மிகப் பெரிய கல்வி.
போராட்டத்தைப் பற்றி இப்போது உங்கள் மதிப்பீடு என்ன அதாவது, வெற்றியா தோல்வியா?
இந்த நாட்டின் விளிம்புநிலை மக்கள் - குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் - மையத்தில் இருந்து சர்வதேச அணு சக்தி லாபிக்கு எதிராக நடத்தும் போராட்டம் இது. இலக்கை நாங்கள் அடையாதது தோல்வியாக இருக்கலாம்; ஆனால், இப்படியொரு போராட்டமே பெரிய வெற்றிதான் இல்லையா?
நவீன வளர்ச்சியற்ற உலகம் அழகாகனது இருக்கலாம். பரிசுத்தமானதாகக்கூட இருக்கலாம். ஆனால், நடைமுறையில் அது எந்த அளவுக்கு சாத்தியமானதாக இருக்கிறது?
அறிவியலும் தொழில்நுட்பமும் வேண்டாம் என்று சொல்ல நாங்கள் ஒன்றும் கற்கால மனிதர்கள் இல்லை. எங்கள் பிள்ளைகளும் நாளை பொறியாளர்கள் ஆக வேண்டும். அழிவுக்கான அறிவியலை எதிர்த்துதான் நாங்கள் போராடுகிறோம். எவ்வளவோ மாற்று எரிசக்தி வழிகள் இருக்கும்போது, ஏன் அழிவுசக்தியான அணு சக்தி என்றே கேட்கிறோம்.
உங்கள் ஊரைச் சுற்றியே ஆயிரக்கணக்கான காற்றாலைகள் இயங்குகின்றன. ஆனால், அவற்றால் இவ்வளவு பெரிய ஒரு நாட்டின் மின் தேவையில் எந்த அளவுக்குப் பூர்த்திசெய்ய முடியும் என்று நம்புகிறீர்கள்?
இன்றைக்கு அணு சக்தி மீது காட்டப்படும் அதே தீவிரம், சூரிய மின் சக்தி, காற்று மின் சக்தி மீது காட்டப்படுமேயானால், நிச்சயம் நம்மால் நம் தேவையை எதிர்கொள்ள முடியும் என்றே நம்புகிறேன். உண்மையில், எரிசக்தி நோக்கோடு அணு உலைகள் அணுகப்படவில்லை. இதில் சர்வதேச வியாபார நோக்கங்களும் தரகு லாபங்களுமே முக்கியக் காரணிகளாகச் செயல்படுகின்றன.
உங்களையே அமெரிக்கத் தரகராகத்தான் அரசு பார்க்கிறது... இப்போது தேர்தலில் நிற்பதிலும்கூட வெளிநாட்டு ஆர்வங்கள் இருப்பதாகப் பார்க்கிறது... தேச துரோகி என்று அழைக்கிறது...
இது வெட்கக்கேடானது. எனக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது என்று சொன்ன அரசு அதை நிரூபிக்க ஒரு துண்டுச் சீட்டைக்கூட இதுவரை ஆதாரமாகக் காட்டவில்லை. இந்த நாடு எவ்வளவும் மோசம் பாருங்கள்... மக்களுக்காக அறப்போராட்டம் நடத்தும் நாங்கள் தேச துரோகிகள்; நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேட்டவர்களும் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் ஈடுபட்டவர்களும் இனக் கலவரங்களில் ஈடுபட்டவர்களும் தேசாபிமானிகள்!
சரி, போராட்டக் களத்துக்கும் தேர்தல் களத்துக்குமான வித்தியாசம் எப்படியிருக்கிறது?
இரண்டுக்கும் இடையில் நாங்கள் வித்தியாசம் எதையும் பார்க்கவில்லை. போராட்டக் களத்தின் ஒரு வடிவம்தான் இந்தத் தேர்தல் களமும்.
முன்பு நீங்கள் திரும்பத் திரும்பச் சொன்னீர்கள், “போராட்டத்தில் அரசியலைக் கலக்க மாட்டோம்” என்று. ஆனால், இன்று நீங்களே அரசியல்வாதியாகி நிற்கிறீர்கள்?
நாங்கள் மறுக்கவில்லை. எங்கள் போராட்டத்தில் அரசியலைக் கலக்க மாட்டோம் என்பதில் உறுதியாகவே இருந்தோம். ஆனால், இந்த நாட்டின் எளிய மக்கள் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து அற வழியில் ஒரு போராட்டத்தைத் தொடர்கிறோம். அதற்குக் கிடைத்த மரியாதை என்ன என்று நீங்கள் யோசிக்க வேண்டும். நாட்டின் மீது போர் தொடுத்த குற்ற வழக்கு, தேசத் துரோகக் குற்ற வழக்கு உள்பட 349 வழக்குகளை 2.27 லட்சம் பேர் சுமந்தோம். நாங்கள் எல்லாவற்றையும் இழந்தோம். எம் மக்களின் தொழில், வருமானம், பிள்ளைகளின் கல்வி யாவும் பாதித்தன. அரசாங்கம் ஊருக்குள்ளேயே யாரையும் நுழையவிடாமல் விரட்டியது. இங்கே ஓடின பஸ்களை நிறுத்தியது. படாத கஷ்டங்கள் இல்லை. ஆனாலும் கண்ட பலன் என்ன? இதோ அணு உலை இயங்குகிறது. கடைசியில், அரசியல் அதிகாரம்தானே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது?
ஆனால், அரசியல் சார்பற்று உங்களுக்குப் பின் திரண்ட ஆயிரக் கணக்கான மக்களையும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசியலை நோக்கித் தள்ளியிருக்கிறீர்கள்...
ஒரு திருத்தம். இந்த முடிவு நாங்கள் சில பேர் யோசித்து மக்கள் மேல் சுமத்திய முடிவு அல்ல. போராட்டக் களத்தில் இருக்கும் மக்கள் ஒவ்வொருவருடனும் கலந்து பேசி எடுத்த முடிவு. ‘நமக்கு அதிகாரம் வேண்டும். அது வெறும் ஒரேயொரு எம்.பி. சீட்டாக இருப்பதைக் காட்டிலும் ஒரு இயக்கத்தின் பலமாக இருப்பதுதான் நம் கோரிக்கைக்குப் பலம் சேர்க்கும்’ என்கிற மக்கள் முடிவையே நாங்கள் சுமந்திருக்கிறோம்.
ஆனால், உங்கள் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து நீங்கள் வெளியே வருவதற்கான உத்தியாகவே இந்தத் தேர்தலைக் கையாள்வதாக உங்கள் எதிர்த் தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்...
சரி, அப்படியும் வைத்துக்கொள்வோமே... அதில் என்ன தவறு? இதில் எந்த அநியாயமும் பாவமும் இல்லையே?
ஏன் ஆம் ஆத்மி கட்சியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
எங்களுக்கு அதுதான் சரியான தேர்வாக இருந்தது. காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., அ.தி.மு.க. எல்லோரும் இந்தப் பிரச்சினையில் தங்களுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை எவ்வளவோ தருணங்களில் காட்டிவிட்டார்கள். இந்தச் சூழலில்தான் அர்விந்த் கேஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் அழைப்பை நாங்கள் பரிசீலித்தோம்.
அது எந்தச் சித்தாந்த அடிப்படையும் இல்லாத கட்சி இல்லையா?
எந்தக் கட்சி இன்றைக்குச் சித்தாந்தப்படி இயங்குகிறது? தெரியாமல்தான் கேட்கிறேன், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் என்ன சித்தாந்தத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன? தி.மு.க-வின் கொள்கை ‘அண்ணா வழியில் அயராது உழைப்பது’ என்றார் கருணாநிதி. அ.தி.மு.க- வின் கொள்கை ‘அண்ணாயிஸம்’ என்றார் எம்.ஜி.ஆர். உண்மையில், அண்ணாயிஸம்தான் என்ன? முன்பு சோ சொன்ன மாதிரி ‘அண்ணனுக்கெல்லாம் தம்பி, தம்பிகளுக்கெல்லாம் அண்ணா - அதுதான் அண்ணாயிஸம்’ என்கிற கதையைத்தானே இன்னமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்?
மக்களுக்கு எது தேவையோ அதைப் பெற்றுத் தருவதற்காகப் போராட ஒரு நல்ல வழியைக் கையாள்வதுதான் ஒரு மக்கள் இயக்கத்தின் சிறந்த சித்தாந்தமாக இருக்க முடியும். அதை எங்கள் கட்சி புரிந்துகொண்டிருக்கிறது.
இனமும் மதமும் சாதியும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியத் தேர்தலில் சுற்றுச்சூழல் அரசியல் எடுபடும் என்று நம்புகிறீர்களா?
மக்கள் எல்லாவற்றையும்விட வாழ்வதற்குப் பாதுகாப்பான சூழலையே முக்கியமாகக் கருதுவார்கள் என்று நம்புகிறோம்.
தேர்தலில் நீங்கள் ஜெயித்தால் என்ன செய்வீர்கள்?
மக்களில் ஒருவனாக மக்கள் நலனுக்காகச் செயல்படுவேன். முக்கியமாக ஒருபோதும் பெருநிறுவனங்களின் தரகனாகச் செயல்பட மாட்டேன்.
தேர்தலுக்கு முன்போ, பின்போ கைதுசெய்யப்பட்டால்?
இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது எனக்கு மிகப் பெரிய மதிப்பும் பிடிமானமும் இருக்கிறது. ஒருபோதும் எதற்காகவும் நான் அஞ்சவில்லை.
ஒருவகையில் இது காலத்தை எதிர்க்கும் போராட்டம் - முடிவற்ற போராட்டம், இல்லையா?
நிச்சயம் என் காலத்துக்குள் இந்தப் போராட்டம் முடிந்துவிடும் என்றோ, தீர்வு கிடைத்துவிடும் என்றோ நான் நம்பவில்லை. ஆனால், எதிர்காலத் தலைமுறை அணு ஆபத்து அற்ற நாடாக இந்தியாவை உருமாற்றும்!
ஏப். 2014, ‘தி இந்து’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக